உலக எலும்புப்புரை தினம் (World Osteoporosis Day)
உலக எலும்புப்புரை தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது. எலும்புப்புரை நோயைத் தடுத்தல், கண்டறிதல், சிகிச்சையளித்தல் ஆகியவற்றிற்காக இந்நாள் அர்ப்பணிக்கப் படுகிறது. இந்த ஆண்டின் கருத்து வசகம்: “உங்கள் எலும்புகளை நேசிக்கவும்: உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்” என்பதாகும். தங்கள் எலும்புகளையும் தசைகளையும் பாதுகாக்க மக்களையும், தங்கள் சமுதாய மக்களின் எலும்பு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சுகாதார அதிகாரிகளையும் மருத்துவர்களையும் ஊக்கப்படுத்த இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
எலும்புத் திசுக்கள் சிதைடைவது எலும்புப்புரை நோயின் இயல்பு. எலும்புகள் உடையும்தன்மையும் பலவீனமும் அடையும். இது முதுகெலும்பு, இடுப்பெலும்பு, மணிக்கட்டு ஆகிய எலும்புகள் முறிவடையும் நிலை ஏற்படுகிறது. 50 வயதுக்கு மேல் ஆண்களை விட பெண்களுக்கு எலும்புப்புரை நோய் உண்டாகும் ஆபத்து அதிகம்.
உங்களுக்கு ஆபத்து உள்ளதா?
எலும்புப்புரை நோய் ஏற்பட பல காரணிகள் இருக்கின்றன:
· பால் – மாதவிடாய் நின்றுபோன பெண்களுக்கு இது பரவலாக இருக்கிறது
· வயது – 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நோய் உண்டாகும் ஆபத்துள்ளது
· குடும்ப வரலாறு – பெற்றோருக்கோ, உடன்பிறந்தவர்களுக்கோ நோய் இருந்தால் இந்நோய் ஏற்படும் ஆபத்துள்ளது.
· உணவுக் காரணிகள் – குறைந்த அளவு உணவு மற்றும் சுண்ணாம்புச்சத்து
· மருந்துகள் – ஊக்க மருந்துகள் போன்றவற்றை நீண்ட நாள் உட்கொள்ளுவது.
· வாழ்க்கைமுறைக் காரணிகள் – உடல் உழைப்பின்மை, புகைப்பழக்கம், அதிக அளவு குடி
உங்களுக்கு எலும்புப்புரை இருப்பதை எப்படி அறிவது?
எலும்புப்புரை நோய் இருந்தால் கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்படும்:
· முதுகுவலி
· நாட்பட உயரம் குறைதல்
· வளைந்த தோற்றம்
· இடுப்பு அல்லது முதுகுத்தண்டு உடைதல்
உங்கள் எலும்பை ஆரோக்கியமாக வைக்கக் குறிப்புகள்:
· சுண்ணாம்புச் சத்து, உயிர்ச்சத்து டி நிறைந்த பால், தயிர், கீரை போன்ற சமநிலை உணவும் சூரிய ஒளியும்.
· எலும்பு இழப்பைத் தடுக்கத் தொடர் உடற்பயிற்சி
· புகை, மதுவைத் தவிர்க்கவும்
· யோகா, தியானம் போன்ற அழுத்தம் நீக்கும் செயல்பாடுகள்
· எடை, சுண்ணாம்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்து டி அளவுகளைக் கட்டுக்குள் வைத்தல்
அடிக்கடி கேட்கும் கேள்விகள்
எலும்புப்புரை என்றால் என்ன?
எலும்புத் திசுக்கள் சிதைவடைவதே எலும்புரை நோயின் இயல்பாகும். இதனால் எலும்புகள் பலவீனமாகி உடையுந்தன்மை உண்டாகிறது. முதுகுத்தண்டும் இடுப்பும் உடையக்கூடிய ஆபத்து எழுகிறது.
எலும்புப்புரை ஏன் “மௌன நோய்” என அழைக்கப்படுகிறது?
எலும்புப்புரை நோயால் வலி, முதுகுத்தண்டு, இடுப்பு உடைதல் ஆகிய சிக்கல்கள் ஏற்படும் வரை நோயாளி தனக்கு நோய் இருப்பதை அறிவதில்லை.
ஆண்களை விடப் பெண்களுக்கு ஏன் ஆபத்து அதிகம்?
மாதவிடாய் நின்ற பின் உண்டாகும் இயக்குநீர் மாற்றங்களால் பெண்களுக்கு எலும்பு இழப்பு வேக மாக ஏற்படுகிறது. ஆகவே, பெண்களுக்கு ஆபத்து அதிகம்.
எலும்புகளுக்கு எத்தகைய உணவு நல்லது?
சுண்ணாம்பும், உயிர்ச்சத்து டி-யும் நிறைந்த பால், தயிர், கீரைகளும், சூரிய ஒளியும் எலும்புகளுக்கு நன்மை தரும்.
எலும்புப்புரை நோய்க்குக் காரணமான வாழ்க்கை முறைக் காரணிகள் யாவை?
உடற்பயிற்சி அற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கையும், புகையும் மதுவும்.
எலும்புப்புரையைத் தடுக்க எவ்விதமான உடற்பயிற்சி நல்லது?
நடை, ஓட்டம், கயிறுதுள்ளல், படியேறல் ஆகிய எடை தாங்கும் உடற்பயிற்சிகள் எலும்பிழப்பைத் தடுத்து எலும்புகளைப் பலப்படுத்தும்.
நான் எலும்புப்புரையால் துன்புற்றால் எத்தகைய உடற்பயிற்சி ஏற்றது?
முதியோருக்கு இந்நோய் அதிகமாக இருப்பதால், வேகநடை எலும்புப்புரை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
எலும்புரை நோயால் பாதிக்கப்பட்டால் எனக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள் யாவை?
மாதவிடாய்க்குப் பின்னும் முதிய பெண்களுக்கும் பொதுவாக முதுகுத் தண்டு உடையும் வாய்ப்புள்ளது. இதனால் தொடர் வலியும், உயரம் குறைதலும், முதுகு வளைதலும் நாளாகும் போது ஏற்படலாம். இதனால் உண்டாகும் உடல் வடிவ மாறுபாட்டால் மூச்சுவிடுவதிலும், உண்ணுவதிலும், செரிமானத்திலும் சிக்கல்கள் ஏற்படும்.
எலும்புப்புரை ஆபத்தை எவ்விதம் தவிர்ப்பது?
· சுண்ணாம்புச் சத்து, உயிர்ச்சத்து டி நிறைந்த பால், தயிர், கீரை போன்ற சமநிலை உணவை உட்கொள்ளவும்.
· எலும்பு இழப்பைத் தடுக்கத் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும்.
· எலும்புகளை வலுவாக்கப் புகைப்பதைத் தவிர்க்கவும்.
· அதிக மதுவைத் தவிர்த்தால் எலும்புப்புரையைத் தடுக்கலாம்.
· யோகா, தியானம் போன்ற மன அழுத்தம் நீக்கும் செயல்பாடுகளில் ஈடுபடவும்.
· எடை, சுண்ணாம்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்து டி அளவுகளை கட்டுக்குள் வைக்கவும்.
குறிப்புகள்:
www.cdc.gov(link is external)
nihseniorhealth.gov(link is external)
www.dolcera.com(link is external)
www.mayoclinic.org(link is external)
www.webmd.com