தட்டம்மை ஒரு தீவிரமான தொற்று நோயாகும். இது பெரும்பாலும் சிறுவர்களையே பாதிக்கிறது. இளம் சிறுவரின் இறப்புக்கும் ஊனத்துக்குமான முக்கியக் காரணிகளில் இது ஒன்றாகும். ஆபத்தான இந்த நோயைப் பற்றியும் அதை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்பதைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்த தட்டம்மைத் தடுப்பூசி தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தட்டம்மைக்கு மருந்து கிடையாது. ஆனால் அதைத் தடுக்க ஒரு பாதுகாப்பான, மலிவான தடுப்பூசி உள்ளது. தடுப்பூசி இட்டுக்கொள்ளாத குழந்தைகளுக்குத் தட்டம்மை நோய் வரவும் மரணம் உட்பட சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
2017-ல் உலகக் குழந்தைகளில் 85 சதவிகிதம் பேர் பொதுவான சுகாதார சோதனையின் மூலம் தங்களது முதலாவது பிறந்த நாளில் ஒரு வேளை தட்டம்மைத் தடுப்பூசி இட்டுக்கொண்டனர். மேலும், 67% சிறுவர்கள் இரண்டாம் வேளை தடுப்பூசியைப் பெற்றனர். தடுப்பூசியின் பயனாக 2000-2017-ல் தட்டம்மை மூலம் ஏற்படும் 80% மரணம் உலகளவில் தடுக்கப்பட்டது. அதாவது 21.1 மில்லியன் உயிர்கள் இந்தக் காலகட்டத்தில் காப்பாற்றப்பட்டன. ஆகவே பொதுசுகாதாரத்தில் தட்டம்மைத் தடுப்பூசி மதிப்பு மிக்கதாக மாறியது.
வைரசு தொற்று ஏற்பட்டு 10-12 நாட்களில் உண்டாகும் கடுமையான காய்ச்சலே முதல் அறிகுறி. இதனோடு இருமல், குளிர், கண் சிவப்பு மற்றும் கொப்புளங்கள் காணப்படும். இருமல், தும்மல், மூக்கு அல்லது தொண்டை சுரப்புகள் மூலம் இந்நோய் பரவும்.
பார்வையிழப்பு, மூளையழற்சி, கடும் வயிற்றுப்போக்கு, நிமோனியா போன்ற நோய்களோடு தட்டம்மையால் ஏற்படும் மரணம் தொடர்புடையதாக உள்ளது. மோசமான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து ஏ குறைபாடு மற்றும் எச் ஐ வி/எய்ட்ஸ் ஆகியவற்றின் காரணமாக தட்டம்மையின் கடுமை கூடுகிறது.
உலக சுகாதார நிறுவனம் அனைத்து குழந்தைகளுக்கும் 2 வேளை தட்டம்மைத் தடுப்பூசியைப் பரிந்துரைக்கிறது. இதைத் தனியாகவோ. தட்டம்மை ரூபெல்லா அல்லது தட்டம்மை-அம்மைக்கட்டு-ரூபெல்லா தடுப்பு மருந்துகளுடன் இணைத்தோ அளிக்கலாம். இந்தியாவில் உலகளாவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இது அளிக்கப்படுகிறது. முதல் வேளை 9-12 மாதங்களிலும் இரண்டாம் வேளை 16-24 மாதங்களிலும் அளிக்கப்படும்.
தட்டம்மை பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்:
குறிப்புகள்:
www.who.int/news-room/fact-sheets/detail/measles
www.nhp.gov.in/universal-immunisation-programme_pg