Acquired-Immunodeficiency-Syndrome.png

எய்ட்ஸ்

எயிட்ஸ் நோய்  “ஹ்யூமன் இம்யுனோ டிஃபிசியன்சி வைரஸ்” ( எச்.ஐ.வி-மனித நோய்த்தடுப்புக் குறைபாட்டு நுண்ணுயுரி) என்ற நுண்ணுயிரியினால் ஏற்படுகிறது. உடலில் உள்ள நோய்த்தடுப்பு உயிரணுக்களை எச்.ஐ.வி. கொன்று விடுகிறது.

இரு வகையான எச்.ஐ.வி. நுண்ணுயிரிகள் உண்டு. அவையாவன, வகை 1 மற்றும் வகை 2. வகை 1, இந்தியாவில் பரவலாகக் காணப்படுகிறது.

நோயால் தாக்கப்பட்ட ஒருவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும்போது பொதுவாக எயிட்ஸ் நோய் ஏற்படுகிறது. மேலும் நோயுள்ளவர்களுக்கு பயன்படுத்திய ஊசியை மீண்டும் பயன்படுத்துவதாலும் நோய்க் கிருமியுள்ள இரத்தத்தைச் செலுத்துவதாலும் இந்நோய் உண்டாகலாம்.

இதன் முதல் அறிகுறி சளிகாய்ச்சலாகவோ (இன்ஃபுளுயன்சா) அல்லது சுரப்பிகளின் வீக்கமாகவோ இருக்கலாம். ஆனால் சில சமயங்களில் அறிகுறி எதுவும் தென்படாமலும் போகலாம். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பின்னர் கூட அறிகுறிகள் தோன்றலாம். பொதுவாக இரத்தச் சோதனை மூலம் இந்நோய் உறுதிசெய்யப்படுகிறது. இந்நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாது. ஆனால் இந்நோயைக் கட்டுப்படுத்தவும், எதிர்த்துப் போராடவும் பல மருந்துகள் உள்ளன.

குறிப்புகள்:

www.naco.gov.in
www.aids.org
www.cdc.gov
www.nlm.nih.gov
www.nhs.uk
www.who.int
www.unicef.org

எய்ட்சின் மூன்று முக்கிய கட்டங்கள் உண்டு.

குறுகியகால அறிகுறிகள், மருத்துவ செயலற்ற நிலை, கடுமையான அறிகுறிகள்.

குறுகிய கால அறிகுறிகள்: எச்.ஐ.வி. தாக்கியப் பெரும்பாலான நோயாளிகளுக்கு வைரஸ் உடலில் புகுந்து ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குள் சளி காய்ச்சல் போன்றதொரு நோய் ஏற்படும். இந்நோயை முதன்மை அல்லது குறுகிய கால எச்.ஐ.வி. தொற்று என்பர். இது ஒரு சில வாரங்கள் வரை நீடிக்கும். இதனால் தோன்றக் கூடிய அறிகுறிகளில் அடங்குவன:

 • தலைவலி
 • காய்ச்சல்
 • தொண்டைவலி
 • தசை வலி
 • அரிப்பு
 • வாய் அல்லது பிறப்புறுப்புப் புண்
 • நிணநீர்ச் சுரப்பிகளில் வீக்கம (குறிப்பாகக் கழுத்தில்)
 • மூட்டுவலி
 • வயிற்றுப்போக்கு
 • இரவில் வியர்வை

மருத்துவச் செயலற்ற நிலை

தொடர்ந்து நிணநீர் சுரப்பிகளில் வீக்கம் காணப்படும். இது தவிர வேறு நோய்க்குறிகளோ அறிகுறிகளோ இருக்காது. எனினும் உடல் வைரசினால தாக்கப்படும்.

கடுமையான அறிகுறிகள்

 • தலைவலி
 • மங்கலான தெளிவற்றப் பார்வை
 • இறுமலும் மூச்சுமுட்டுதலும்
 • உங்கள் வாயிலோ நாக்கிலோ நிரந்தர வெண்புள்ளி அல்லது அசாதாரன வெடிப்பு
 • இரவில் தண்ணீராய் வியர்வை
 • பல வாரங்களுக்கு நடுக்கும் காய்ச்சல் 100F (38C) மேல்
 • நீடிக்கும் வயிற்றுப்போக்கு
 • தொடர்ந்து விவரிக்க இயலாத களைப்பு
 • எடை குறைதல்
 • தோல் அரிப்பு

குறிப்புகள்:
www.nlm.nih.gov
www.nhs.uk

எச்.ஐ.வி/எய்ட்சால் ஒருவர் பல வழிகளில் பீடிக்கப்படுகிறார்:

 • இரத்தம் செலுத்துதல்: சில நேரங்களில் இரத்தம் செலுத்தும்போது வைரஸ் கடத்தப்படலாம்.
 • தொற்றுள்ள ஊசிகளைப் பயன்படுத்துதல்: தொற்றுள்ள இரத்தம் பட்ட ஊசிகள், சிரிஞ்சிகள் வழியாகவும் எச்.ஐ.வி. கடத்தப்படலாம்.
 • பாலியல் தொடர்பு: பெரும்பாலும் நோயுள்ள ஒருவரோடு பாலியல் தொடர்பு கொள்ளும்போதே எச்.ஐ.வி. பரவுகிறது.
 • தாயிடம் இருந்து குழந்தைக்கு: நோயுள்ள ஒரு கர்ப்பிணிப் பெண் இரத்த ஓட்டத்தின் மூலம் கருவுக்கு நோயைக் கொடுக்கலாம் அல்லது நோயுள்ள ஓர் பாலூட்டும் தாய்  தன் குழந்தைக்கு நோயைக் கடத்தலாம்.

குறிப்புகள்: www.nlm.nih.gov

எச்சில், ஊனீர் அல்லது சிறுநீரில் வைரஸ் இருப்பதைக் கண்டறிய எச்.ஐ.வி. சோதனை நடத்தப்படுகிறது. எச் சூழ்நிலையிலும் மனித உரிமை அணுகுமுறையின் அடிப்படையிலும் அறக்கொள்கைகளுக்கு மதிப்பளித்துமே எச்.ஐ.வி சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எச்.ஐ.வி. சோதனை குறித்த ஐக்கிய நாடுகள் எய்ட்ஸ்/உலக சுகாதார அமைப்பின் கொள்கை அறிக்கை கூறுகிறது. இக் கொள்கைகளின் படி ஒருவருக்குச் செய்யப்படும் எச்.ஐ.வி சோதனை பின்வருமாறு இருக்க வேண்டும்:

இரகசியம் காத்தல்: தனிமனிதருக்கும், கணவன்மனைவிக்கும், குடும்பத்துக்கும் நம்பிக்கை உணர்வை அளிப்பதற்காக அவர்கள் தங்களுக்கு  எச்.ஐ.வி. இருக்கிறதா இல்லையா என்பதைத் தங்களுக்கு வசதியான அல்லது தங்கள் வீட்டிலேயே அந்தரங்கமாகத் தெரிந்து கொள்ள வசதியாக, சோதனை அதன் முடிவு ஆகிய முழு முறைமையும் இரகசியமாக வைக்கப்படுகிறது.  வீடு சார்ந்த எச்.ஐ.வி. சோதனையும் ஆலோசனையும் துரித எச்.ஐ.வி. சோதனையைப் பரிந்துரைக்கிறது.  அதுவே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதன் முடிவுகள் 15-30 நிமிடங்களிலேயே சோதிக்கப்படுபவருக்குக் கிடைத்து விடுகிறது.

 • மருத்துவ ஆலோசனைகளுடன் (நேர்மறை முடிவு கிடைத்தவருக்கு)
 • சோதனைக்கு உட்படுபவருக்கு விளக்கி அவர் சம்மதம் பெற்று நடத்தப்படுகிறது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் கண்டறிதல்: நோய் எந்தக் கட்டத்தில் இருக்கிறது என்பதைக் கண்டறிய பலவகையான சோதனைகள் மருத்துவருக்குத் துணை புரிகின்றன. அவைகளுள் அடங்குவன:

இடைவெளிக் காலம் (window period)  : எச்.ஐ.வி. தொற்றுவதற்கும் உடலில் எச்.ஐ.வி எதிர்ப்பு நோயெதிர்பொருள் தோன்றுவதற்கும் இடைப்பட்ட காலத்தைக் கணக்கிட முடியும். இது இடைவெளிக்காலம் என்று அழைக்கப்படுகிறது. இடைவெளிக் காலத்தில் நோயெதிர்பொருள் சோதனை பொய்யான எதிர்மறையைக் (எச்.ஐ.வி. இருந்தும் நோயெதிர்பொருளைக் காட்டாமை) கொடுக்க முடியும். எச்.ஐ.வி. தொற்றியதில் இருந்து எச்.ஐ.வி. ஊனீர் மாற்றுகைக்காக (HIV sero conversion) அளவிடக் கூடிய அளவிற்கு நோயெதிர்பொருள் உருவாக மூன்று வாரங்களில் இருந்து ஆறு வாரங்கள் வரை இடைவெளிக் காலம் தேவைப்படுகிறது.

CD4 எண்ணிக்கை (CD4 Count): CD4 உயிரணுக்கள் ஒரு வகை இரத்த வெள்ளணுக்கள் ஆகும். இவற்றை எச்.ஐ.வி. குறிபார்த்து அழிக்கின்றன. ஆரோக்கியமான ஒருவருக்கு CD4 எண்ணிக்கை 500-ல் இருந்து 1000-ற்கும் மேல் வரை வேறுபடும். ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாதபோதும் எச்.ஐ.வி. தொற்று எய்ட்ஸ் ஆக வளரும்போது அவரது CD4 எண்ணிக்கை 200-ஐ விடக் குறைகிறது.

துரித அல்லது படுக்கையருகு சோதனை (Rapid or point-of-care tests(POCT)): துரித சோதனை என்பது  பொதுச் சோதனையின் போது பயன்படுத்தப்படும் ஒரு நோயெதிர்பொருள் மதிப்பீடு ஆகும் (Immunoassay). 20 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் இது விரைவாக முடிவை அளிக்கிறது. துரித சோதனை இரத்தம் அல்லது வாய் நீர்மங்களில் எச்,ஐ,விக்கு நோயெதிர்பொருளைத் தேடுகிறது. இடைவெளி காலத்தில் ( தொற்றேறிய பின்னர் ஆனால் நோயெதிர்பொருளை சோதனை மூலம் கண்டறிய முடியாத காலகட்டம்) ஒரு நோயெதிர்பொருள் மதிப்பீடு (ஆய்வகச் சோதனை அல்லது துரித சோதனை) செய்யப்பட்டால் அச்சோதனை நோயெதிர்பொருளை கண்டுபிடிக்க முடியாமல் போகலாம். மேலும் தவறான  எதிர்மறை முடிவைக் கொடுக்கலாம். நேர்மறை முடிவைக் கொடுக்கும் அனைத்து நோயெதிர்பொருள் மதிப்பீடுகளுக்கும் முடிவை உறுதி செய்வதற்காக மேலும் தொடர் சோதனைகள் தேவைப் படுகின்றன.

எலிசா- (ELISA-enzyme-linked immunosorbent assay): எலிசா என்பது எச்.ஐ.வி. தொற்றைக் கண்டறிய செய்யப்படும் தொடர்ச்சியான இரத்தப் பரிசோதனைகள் ஆகும். இரத்தம் உறிஞ்சுவதற்காக ஊசி ஒன்றை உடலில் செலுத்தி எலிசா சோதனை செய்யப்படுகிறது. எலிசா பொதுப் பரிசோதனையின் போது கிடைக்கும் நேர்மறை முடிவினால் மட்டுமே ஒருவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாகப் பொருளாகாது. லைம் நோய் (lyme), மேகநோய்(syphilis), தோலழற்சி நோய் (lupus) போன்ற நோய்கள் இருக்கும் போது தவறான நேர்மறை முடிவை இச்சோதனை கொடுக்கலாம்.

ஆர்.என்.ஏ. சோதனை வைரசை நேரடியாகவே கண்டறிகிறது [எச்.ஐ.வி.யின் நோயெதிர் பொருட்களுக்குப் (antibodies) பதிலாக]. எனவே, நோயெதிர் பொருள் உருவாகுமுன்னரே, தொற்று ஏறி ஏறத்தாழ 10 நாட்களில் அது இரத்த ஓட்டத்தில் தென்படும்போதே எச்.ஐ.வியை இதனால் கண்டறிய முடிகிறது. நோயெதிர்பொருள் சோதனையை விட செலவு அதிகம் பிடிப்பதால் பொதுச் சோதனையின் போது இது பொதுவாகப் பயன்படுத்தப் படுவதில்லை. ஆனால் பின்னர் உங்கள் மருத்துவர் நோயெதிர்பொருள் சோதனை நேர்மறையாக இருந்தால் தொடர்சோதனையாகவோ அல்லது மருத்துவ நோய்நாடலில் ஒரு பகுதியாகவோ இச்சோதனையை மேற்கொள்ளச் சொல்லலாம்.

மேற்கத்தியப் புரதக்கண்டறிதல் முறை (Western Blot): ஒரு நேர்மறையான எலிசா சோதனையைத் தொடர்ந்து எச்.ஐ.வி. தொற்றை உறுதிசெய்ய இச்சோதனை நடத்தப்படுகிறது.

சுகாதாரத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்வதற்காகத் தேசிய சுகாதார இணையதளம் குறிப்பான தகவல்களைத் தருகிறது. எந்த ஒரு நோயைக் கண்டறிவதற்கும் மருத்துவம் பெறுவதற்கும் நீங்கள் உங்கள் மருத்துவரையே நாடவேண்டும்.

குறிப்புகள்: www.cdc.gov

தற்போது எய்ட்ஸைக் குணப்படுத்த மருத்துவம் இல்லை. இருப்பினும், ஒரு நோயாளியின் இரத்தத்தில் இருக்கும் CD 4 எண்ணிக்கையைப் பொறுத்து நோயின் சில குறிப்பிட்ட கட்டடங்களில் கொடுக்கப்படும் சில மருந்துகள்  எச்.ஐ.வி.  நேர்மறையாக இருக்கும் ஒருவரின் ஆயுளை நீட்டிக்கலாம்.

 • தலைகீழ் மரபணு மாற்றத் தடுப்பான்கள் (Reverse transcriptase (RT) inhibitors):  எச்.ஐ.வி. யின் வாழ்க்கை வட்டத்தின் ஒரு முக்கிய கட்டத்தில் இது குறுக்கிட்டு வைரஸ் தன்னை நகல் எடுக்காவண்ணம் தடுக்கிறது.
 • புரதநொதிப்புத் தடுப்பான்கள் (Protease inhibitors): தொற்றுக் கிருமித் துகள்களை உருவாக்க எச்.ஐ.வி. பயன்படுத்தும் புரதத்தைத் தடுக்கிறது.
 • இணைவுத்தடுப்பான்கள் (Fusion inhibitors): உடல் உயிரணுக்களுக்குள் வைரஸ் நுழைவதை இது தடுக்கிறது.
 • ஒருங்கிணைப்பாக்கத் தடுப்பான்கள் (Integrase inhibitors): தன்னை நகலெடுக்க எச்.ஐ.வி.க்குத் தேவைப்படும் ஒரு நொதியை இது தடுக்கிறது.
 • பல்மருந்துச் சேர்க்கைகள் (Multidrug combinations): இதில் இரண்டு அல்லது மேற்பட்ட மருந்துகள் ஒன்றாகச் சேர்க்கப்படுகின்றன. இம்மருந்துகள் எச்.ஐ.வி. உள்ளவர்களுக்கு உதவி செய்கின்றன. ஆனால் அவை முழுமையானவை அல்ல. அவை எச்.ஐ.வி/எய்ட்சைக் குணப்படுத்துவதில்லை. எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் உடலில் இன்னும் நோய்க்கிருமிகள் உள்ளன. மருந்துகளை எடுத்துக் கொண்டு இருக்கும் போதே அவர்களால் பாதுகாப்பற்ற உடலுறவாலும், உபயோகித்த ஊசியின் மூலமும் எச்.ஐ.வி.யைப் இன்னும் கூடப் பிறருக்குப் பரப்ப முடியும்.

சுகாதாரத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்வதற்காகத் தேசிய சுகாதார இணையதளம் குறிப்பான தகவல்களைத் தருகிறது. எந்த ஒரு நோயைக் கண்டறிவதற்கும் மருத்துவம் பெறுவதற்கும் நீங்கள் உங்கள் மருத்துவரையே நாடவேண்டும்.

குறிப்புகள்:
www.nlm.nih.gov
www.nlm.nih.gov

எய்ட்சை தவிர்ப்பது ABC போல எளிதானது:

A= Abstain (தவிர்க்கவும்
B= Be faithful (நம்பிக்கையோடு இருக்கவும்)
C= Condomise (ஆணுறை அணியவும்)

எச்.ஐ.வி. தடுப்பு என்பது எச்.ஐ.வி./எய்ட்ஸ் பரவாமல் தடுக்கும் வழிமுறைகளைக் குறிக்கிறது. ஒவ்வொரு தனி நபரும் தனது ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள எச்.ஐ.வி. தடுப்பு வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.

 1. மக்கள் மத்தியில் விழிப்புணர்வைப் பரப்புதல்.
 2. ஆணுறைகளைப் பயன்படுத்தி உடலுறவு கொள்ளுதல் எச்.ஐ.வி./எய்ட்ஸ் அபாயத்தைக் குறைக்கிறது.
 3. மக்கள் மத்தியில், குறிப்பாக அதிக ஆபத்தில் இருக்கும் மக்கள் மத்தியில், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதிக ஆபத்தில் இருக்கும் மக்கள் என்போர், பாலியல் தொழிலாளிகள், அவர்தம் இணைகள், நரம்புவழி போதைபொருள் எடுப்போர், சரக்குந்து ஓட்டுநர், புலம்பெயரும் தொழிலாளர்கள், அகதிகள், கைதிகள் போன்றோராகும்.
 4. பாதுகாப்பான மருந்தூசிகள் : பயன்படுத்தியபின் களையும் சிரிஞ்சிகள் எச்.ஐ.வி. தொற்றைத் தவிர்க்க உதவுகிறது..
 5. ஆணுறுப்பின் நுனித்தோல் அகற்றல் : அறுவை மருத்துவத்தின் மூலம்.
 6. பாதுகாப்பான இரத்த மாற்றம் : அதிகாரபூர்வமான அங்கீகாரம் பெற்ற இரத்த வங்கிகள் மூலம்.
 7. எச்.ஐ.வி. நேர்மறை கர்ப்பிணிகளுக்கு பெற்றோரிடம் இருந்து குழந்தைகளுக்குத் தொற்று பரவாமல் எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஆலோசனை வழங்குதல் (PPTCT)

குறிப்புகள்: www.nlm.nih.gov

 • PUBLISHED DATE : May 18, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 03, 2015
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.