malaria.png

மலேரியா

மலேரியா மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொசுவின் மூலம் பரவும் தொற்று நோயாகும். இது  பிளாஸ்மோடியம் விவியாக்ஸ் (Plasmodium viviax -P. vivax), பிளாஸ்மோடியம் ஃபால்சிபரும் (Plasmodium falciparum-P. falciparum), பிளாஸ்மோடியம் மலேரியே  (Plasmodium malariae-P. malariae) பிளாஸ்மோடியம் ஓவேல் (Plasmodium ovale-P. ovale) ஆகிய பாரசைட்டுகளால் ஏற்படுகின்றன.

மனிதர்களுக்கு மலேரியாவைப் பரப்பும் இரு வகை ஒட்டுண்ணிகள் இந்தியாவில் பரவலாக அறியப்படுகின்றன (பிளாஸ்மோடியம் விவாக்ஸ், பிளாஸ்மோடியம் ஃபால்சிபரும்). பாரசைட்டைக் கொண்ட பெண் அனஃபெலஸ் இனக் கொசு கடிக்கும் போது, எச்சிலின் மூலமாக ப்ரொடிஸ்டா (விலங்கு-தாவர ஓரணு உயிர்) இரத்த ஓட்டத்தில் செலுத்தப்படுகிறது. இப் ப்ரொடிஸ்டா கல்லீரலை அடைந்து வளர்ந்து இனப்பெருக்கம் செய்கிறது. மலேரியா நோயின் அறிகுறிகளில் பொதுவாகக் காய்ச்சலும் தலைவலியும் இடம்பெற்று இருக்கும். கடுமையான நேர்வுகளில் இது ஆழ்மயக்கம் அல்லது மரணத்தில் முடியும்.

ஆப்பிரிக்கவின் சகாரவைச் சார்ந்த பெரும் பகுதியையும் ஆசியாவையும் உள்ளடக்கிய நிலநடுக் கோட்டைச் சுற்றியுள்ள அகன்ற பட்டையான வெப்ப மற்றும் அரைவெப்ப மண்டலப்பகுதியில் இந்நோய் பரவலாக உள்ளது. தொற்றுள்ள ஒரு கொசுவால் கடிக்கப்பட்ட 10-14 நாட்களில் (நோயரும்பும் காலம்) மனிதனுக்கு நோய் உண்டாகிறது. மலேரியாவைக் கண்டுபிடித்து மருத்துவம் செய்யவில்லையானால் ஆபத்தாக முடியும்.

குறிப்புகள்:
www.who.int
www.mrcindia.org
www.cdc.gov
www.nvbdcp.gov.in
www.youtube.com

 
தொற்றுள்ள கொசுவால் கடிக்கப்பட்டு ஏழு நாட்கள் கழித்து மலேரியாவின் அறிகுறிகள் உருவாகலாம். பொதுவான அறிகுறிகளில் அடங்குவன:

 • காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் பிற விஷக்காய்ச்சலின் அறிகுறிகள் (நான்கில் இருந்து எட்டு மணி நேர சுழற்சி வட்டத்தில் காய்ச்சல் உண்டாகும்).
 • பாரசைட்டுகள் இரத்தச் சிவப்பணுக்களைத் தாக்கி அழிக்கின்றன. இதன் விளைவாகக் களைப்பும், வலிப்பும், நினைவிழத்தலும் உண்டாகின்றன.

மலேரியாவின் அறிகுறிகளை தக்க சமயத்தில் இனங்காணவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாக முடியலாம்.

குறிப்புகள்:
www.nvbdcp.gov.in
www.nvbdcp.gov.in

மலேரியா பாரசைட்டுகள் பிளாஸ்மோடியம் வகையைச் சார்ந்தவை. மனிதருக்கு பி.ஃபால்சிபரும், பி.மலேரியே, பி.ஓவேல், பி.விவாக்ஸ் ஆகியவை மலெரியாவை உண்டாக்குகின்றன. இவ்வகைகளில், பி.ஃபால்சிபருமும் பி.விவாக்சும் பரவலாகக் காணப்படுகின்றன. பி.ஃபால்சிபரும் மிகவும் ஆபத்தானது.

மலேரியாவும் பரவலும்

பொதுவாக பிளாஸ்மோடியம் பாரசைட்டு பெண் அனஃபெலெஸ் கொசுக்களால் பரப்பப்படுகிறது. பெரும்பாலும் அவை மாலைக்கும் காலைக்கும் இடைப்பட்டக் காலத்தில் கடிப்பதால் இவை இரவில் கடிக்கும் கொசுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. மலேரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கொசு கடிக்கும் போது அதுவும் பாதிப்படைந்து பிறருக்கும் பாரசைட்டுகளைப் பரப்புகிறது. பாரசைட் இரத்த ஓட்டத்தின் வழி கல்லீரலை அடைகிறது. தொற்றுநோய் கல்லிரலில் வளர்ச்சி பெற்று திரும்பவும் இரத்த ஓட்டத்தில் கலந்து சிவப்பணுக்களைத் தாக்குகிறது. இப்பாரசைட்டுகள் வளர்ந்து சிவப்பணுக்களில் பல்கிப்பெருகுகின்றன. முறையான இடைவெளிகளில் சிவப்பணுக்கள் வெடித்து இன்னும் அதிகமான பாரசைட்டுகளை இரத்தத்தில் கலக்கின்றன. நோய் பரவிய சிவப்பணுக்கள்   48-ல் இருந்து 72 மணி நேரத்துக்கு ஒருமுறை வெடிக்கின்றன. ஒவ்வொரு முறை வெடிக்கும் போதும் நோயாளிக்கு திடீர் எழுச்சியாக காய்ச்சலும், குளிரும், வியர்வையும் உண்டாகும்.

கர்ப்பமும் மலேரியாவும்

மலேரியா ஆபத்துள்ள இடங்களுக்கு கர்ப்பிணிப் பெண்கள் செல்லக் கூடாது என்று உலக சுகாதர அமைப்பு அறிவுறுத்துகிறது. கர்ப்பிணிப் பெண்களைத் தொற்றுள்ள கொசு கடித்தால் சிக்கல்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.

குறிப்புகள்:  www.nhs.uk
                        www.who.int

கீழ்க்காணும் முறைகளில் மலேரியா கண்டறியப்படுகிறது:

நுண்ணோக்கி ஆய்வு

அனைத்து நான்கு முக்கிய வகை பாரசைட் இனங்களையும் குருதிச்சில்லை (blood film) நுண்ணோக்கி மூலம் ஆய்வுசெய்யும் போது எளிதாக இனங்காண முடிவதால் மலேரியாவைக் கண்டறிய முன்னுரிமை பெற்ற  நம்பிக்கைக்குரிய முறையாக இது திகழ்கிறது.

நோய்த்தடுப்பு நிறச்சாரல் பிரிகை சோதனை

இது மலேரியா துரிதக் கண்டறிதல் சோதனைகள் என்றும் அழைக்கப்படுகின்றன (Malaria Rapid Diagnostic tests). இதில் உடற்காப்பு ஊக்கிகள் கைப்பற்றல் மதிப்பீடு (antigen-capture assay) அல்லது “தோய்ப்புக் குச்சிகள்” (Dipsticks) உருவாக்கப்பட்டு, விநியோகிக்கப்பட்டு களப்பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. இச்சோதனைகளில் விரல் அல்லது நரம்பில் இருந்து எடுக்கப்பட்ட இரத்தம் பயன்படுத்தப் படுகிறது. மொத்த சோதனையுமே 15-20 நிமிடங்களில் முடிந்துவிடுகிறது. தோய்ப்புக் குச்சியில் நிறக்கோடுகள் இருக்கின்றனவா இல்லையா என்பதை நேரடியாகப் பார்த்து முடிவு காணப்படுவதால் களப்பரிசோதனைக்கு இவை ஏற்றவையாகும். துரித கண்டறிதல் சோதனைகளின் குறைந்த அளவு கண்டுணர்திறன் (threshold of detection), திண்சுருள் நுண்ணோக்கி ஆய்வு அளவு (thick film microscopy) ஐந்தோடு ஒப்பிடும்போது 100 பாரசைட்டுகள்/ µl இரத்தம் என்ற விகிதத்தில் (வணிக ஆய்வுக்கருவிகளில் 0.002% –– 0.1 % பாரசைட்டீமியாவாக (parasitemia) இருக்கலாம்) உள்ளது. தோய்ப்புக் குச்சி சோதனையின் ஒரு குறைபாடு என்னவெனில் தரமானது  எனினும் அளவில் துல்லியமற்றது. அதாவது, இரத்தத்தில் ஒட்டுண்ணிகள் உள்ளனவா இல்லையா என்று கண்டுபிடிக்கலாமே தவிர அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிடமுடியாது.

மூலக்கூற்று முறை

மூலக்கூற்று முறைகளும், விரைவு நிகழ்நேர மதிப்பீடுகளும் (Rapid Real-time assays)-உதாரணமாக, பாலிமரேஸ் தொடர் வினைகள்-Polymerase Chain Reaction-PCR)) சில மருத்துவ ஆய்வகங்களில் நடத்தப்படுகின்றன. பின்னது, குறிப்பிட்ட கால இட மக்கட் சூழல் சார்ந்து முறையாக நோய்வரும் பகுதிகளில் (endemic areas) பயன்படுத்தும் நம்பிக்கையோடு உருவாக்கப்படுகிறது.   PCR (பிற மூலக்கூற்று முறைகளும்) நுண்ணோக்கி ஆய்வு முறையைவிடத் துல்லியமானது.

தேசிய இணைய தளம் (NHP),  சுகாதாரத்தைப் பற்றிச் சிறந்த முறையில் புரிந்து கொள்ள குறிப்பான தகவல்களைத் தருகின்றன. எந்த ஒரு நோய்கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் நீங்கள் உங்கள் மருத்துவரையே நாட வேண்டும்.

References:   www.nhs.uk
                      www.cdc.gov

மலேரியா ஒரு ஆபத்தான நோயாகும். உடனடியாகக் கண்டுபிடித்து மருத்துவம் அளிக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாக முடியும். ஃபால்சிபரும் பாரசைட்டு ஆபத்தான அறிகுறிகளையும் அதிகமான மரணங்களையும் ஏற்படுத்துகின்றன.

இரத்தச் சோகை: மலேரியா பாரசைட்டுகள் இரத்தச் சிவப்பணுக்களை  அழித்துவிடுவதால் கடுமையான இரத்தச் சோகை நோய் ஏற்படுகிறது. இரத்தச் சோகை என்பது உடலின் தசைகளுக்கும் உறுப்புகளுக்கும் போதுமான உயிர்வளியை சிவப்பணுக்கள் கொண்டு செல்ல முடியாமையால் ஏற்படுவது. இதனால் தூக்கக்கிறக்கம், பலவீனம், மயக்கம் ஆகியவை ஏற்படுகின்றன.

பெருமூளை மலேரியா: பெருமூளை மலேரியா வடகிழக்கு மாநிலங்களில் பரவலாகக் காணப்படும் நோய் ஆகும். பொதுவாக இது மூளையைத் தாக்கி வீங்க வைக்கிறது. சில வேளைகளில் நிரந்தரமான மூளைச் சிதைவும் ஏற்படலாம். வலிப்பும் ஆழ்மயக்கமும் கூட நிகழலாம்.

பிற சிக்கல்கள்

கடுமையான மலேரியாவல் ஏற்படும் விளைவுகளில் கீழ்வருவனவும் அடங்கும்:

 • நுரையீரலில் நீர்கோர்ப்பதால் சுவாசக் கோளாறுகள்
 • கல்லீரல் செயலிழப்பும் மஞ்சள் காமாலையும் (தோலும் கண்ணும் மஞ்சளாதால்)
 • அதிர்ச்சி (இரத்த ஓட்டம் திடீரெனக் குறைதல்)
 • தன்னிச்சையாக இரத்தம் வெளியேறுதல்
 • அசாதாரணமாக இரத்தத்தில் சர்க்கரை குறைதல்
 • சிறுநீரகம் செயலிழப்பு
 • மண்ணீரல் வீங்கி வெடித்தல்
 • உடலில் நீர்ச்சத்து குறைதல்

குறிப்புகள்: www.nhs.uk

(அ) கொசு உற்பத்தியாதலைக் கட்டுப்படுத்துதல் (முட்டைப்புழு & கூட்டுப்புழு நிலை)

 • எல்லா உற்பத்தி இடங்களும் நிரப்பப்பட்டு மூடப்பட வேண்டும்
 • எப்போதும் தேக்கி வைக்கப்பட்ட நீரை மூட வேண்டும்; டயர்களிலும் பானைகளிலும் நீர் தேங்குவதைத் தவிர்க்கவும்; கூலர்களையும் நீர்த்தொட்டிகளையும் வாரம் ஒருமுறை குளோரின் போன்றவற்றால் சுத்தம் செய்யவும்.
 • உற்பத்தி இடங்களில் கால்வாய்கள் அமைக்கவும்
 • முட்டைப் புழுக்களை உண்ணும் கம்பூசியா அல்லது கப்பி போன்ற மீன்களை மீன் தொட்டிகளிலும், நீரூற்று போன்ற பிற இடங்களிலும் வளர்க்கவும்.
 • முட்டைப்புழுக்களைக் கொல்லும் வேதிப்பொருட்களான அபேட் பொன்றவற்றைக் குடிநீர் தொட்டிகளில் இடவும்

(ஆ) தனிப்பட்ட முறையில் தடுத்தல்

 • தூங்கும்போது கொசு வலையைப் பயன் படுத்தவும்
 • கொசு விரட்டும் களிம்பு, திரவம், சுருள், வில்லைகளைப் பயன்படுத்தவும்
 • பூச்சிக்கொல்லிகள் அடங்கிய அறை தெளிப்பான்களைப் பயன்படுத்தவும்
 • பகலில் ஏரோசெல் ஸ்பேஸ் ஸ்ப்ரேயை பயன்படுத்தவும்
 • உயிர்க்கொல்லிகளை உபயோகிக்கவும்
 • வீட்டில் வலைகளைப் பொருத்தவும்
 • பூச்சுக்கொல்லிகள் தடவிய படுக்கை வலைகளைப் பயன்படுத்தவும்
 • உடலின் பெரும்பகுதியை மூடும் வண்ணம் ஆடை அணியவும்
 • DEET கொண்ட தகுந்த கொசுவிரட்டிகளைப் பயன்படுத்தவும்
 • கொசுக் கடி அதிகமாக இருக்கும் மாலை இரவு நேரங்களில் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைக்கவும்.

(இ) சமுதாய அளவில் தடுத்தல்

 • பெருமளவில் பெருகும்போது மாலத்தியான் மருந்தைப் புகைபோல் தெளிக்கவும்
 • அடிகுழாய்களைச் சுற்றி சிமெண்ட் இட்டு வடிகால் அமைக்கவும்
 • அனஃபெலஸ் கொசு உற்பத்தி ஆகும் இடத்தைக் கண்டுபிடித்து அழிக்க ஒட்டு மொத்த சமுதாயத்தையும் உணர்வூட்டி ஈடுபடுத்தவும்

(ஈ) பயணத்தின் போது தடுப்புமுறை

 • பயணம் செல்லும் இடங்களில் மலேரியா அபாயம் இருக்கிறதா என்று அறிந்து கொண்டு செல்லும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்
 • மலேரியாவால் பாதிக்கப்பட்ட இடத்துக்குச் செல்லும் போது மலேரியா எதிர்ப்பு மாத்திரைகளைக் கொண்டு செல்லவும்.

(உ) பேறுகாலத்தின் போது மலேரியாவைத் தடுக்கும் முறை

 • மருந்தூட்டப்பட்ட வலைகளைப் பயன்படுத்தவும் (LLIN-Long Lasting Insecticidal Nets)
 • தனிப்பட்ட முறையில் பின்பற்றப்பட வேண்டிய மேற்கண்ட அனைத்து முறைகளையும் கடைபிடிக்கவும்

Video Gallery on How to Prevent Malaria: www.youtube.com
                                                                        www.youtube.com
                                                                        www.youtube.com
                                                                        www.youtube.com


குறிப்புகள் www.nvbdcp.gov.in
                      www.nhs.uk

மலேரியா எதிர்ப்பு மருந்துகள்  நோயைத் தடுக்கவும் குணப்படுத்தவும் உருவாக்கப்படுகின்றன. கீழ்க்காணும் மருந்துகள் பயன்படுகின்றன:

 • கொய்னைனும் அதைச் சார்ந்தவையும் (Quinine and related agents)
 • குளோரோகொய்ன் (Chloroquine)
 • அமோடியாகொய்ன் (Amodiaquine)
 • பைரிமெத்தாமைன் (Pyrimethamine)
 • புரோக்யாநில் (Proguanil)
 • சல்போனாமைட்கள் (Sulfonamides)
 • மெஃப்ளோகொய்ன் (Mefloquine)
 • அட்டோவாக்யோன் (Atovaquone)
 • பிரைமாகொய்ன் (Primaquine)
 • அர்த்தேமிசினினும் அதன் வழி உருவானவையும் (Artemisinin and derivatives)
 • ஹாலோஃபேண்ட்ரின் (Halofantrine)
 • டாக்சிசைக்ளின் (Doxycycline)
 • கிளிண்டாமைசின் (Clindamycin)

மலேரியாவுக்கான துரித கண்டறிதல் சோதனைக்குப் பின் முழு அளவிலான மருத்துவம் அளிக்கப்படுகிறது.

தேசிய இணைய தளம் (NHP),  சுகாதாரத்தைப் பற்றிச் சிறந்த முறையில் புரிந்து கொள்ள குறிப்பான தகவல்களைத் தருகின்றன. எந்த ஒரு நோய்கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் நீங்கள் உங்கள் மருத்துவரையே நாட வேண்டும்.

குறிப்புகள்  www.mrcindia.org

 • PUBLISHED DATE : May 18, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.