Meningitis.png

மூளைக்காய்ச்சல்

மூளையையும், தண்டுவடத்தையும் பொதிந்திருக்கும் மெல்லிய மூளையுறையின் (meninges) அழற்சியே மூளைக்காய்ச்சல் ஆகும். மூளையையும் தண்டுவடத்தையும் சுற்றியுள்ள பாய்மத்தில் (fluid) நோய்க்கிருமி தொற்றுவதால் மூளையுறையில் அழற்சி ஏற்படுகிறது. காரணத்தைப் பொறுத்து நோயின் கடுமையும் அதற்கான மருத்துவமும் வேறுபடுகிறது. ஆகவே மூளைக்காய்ச்சலுக்கான குறிப்பான காரணத்தை அறிவது முக்கியம்.

குறிப்புகள் : www.who.int
                       www.cdc.gov
                       www.nhs.uk
                       www.youtube.com

மூளைக்காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள் கடுமையான தலைவலியும் பிடரி விறைப்பும் (கழுத்து தசை விறைப்பதால் கழுத்தை முன்புறமாக வளைக்க இயலாமை) ஆகும்.

ஆரம்ப அறிகுறிகள்:

 • காய்ச்சல்
 • கடுமையான தலைவலி
 • குமட்டலும் வாந்தியும்
 • தசை, மூட்டுகள், கால் அல்லது கை போன்ற அவயங்களில் வலி
 • கை, பாதங்களில் அசாதாரண குளிர்ச்சி அல்லது நடுக்கம்
 • தோல் வெளிறுதல் அல்லது தோலில் புள்ளிவிழுதலோடு நீல உதடுகள்

பின் அறிகுறிகள்:

 • தூக்க மயக்கம்
 • மனக்குழப்பம்
 • வலிப்பு
 • அதிக ஒளியைத் தாங்க முடியாமை - இளங்குழந்தைகளுக்கு அதிகம் இருப்பதில்லை.
 • கழுத்து விறைப்பு - இதுவும் இளங்குழந்தைகளுக்கு அதிகம் இருப்பதில்லை.
 • வேகமாக மூச்சுவிடுதல்

குறிப்பு  : www.nhs.uk

மூளைக்காய்ச்சல் நுண்கிருமிகளால் உண்டாகும் தொற்றுநோய் ஆகும். பெரும்பாலான தொற்று வைரசுகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் ஆகியவற்றல் ஏற்படுகின்றன. அடுத்து அதிகமாக ஓரணு உயிரிகளால் உண்டாகின்றன.

ஐந்து முக்கிய வகை மூளைகாய்ச்சல் உண்டு. அவையாவன:

 • பாக்டீரியா மூளைக்காய்ச்சல்: இது நெய்சீரியா மெனிங்கிடிடிஸ் அல்லது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியா போன்ற பாக்டீரியாக்களால் ஏற்படுகின்றது. நெருக்கமான தொடர்பால் பரவுகிறது. இது உயிருக்கு ஆபத்து விளைவிப்பது. எனவே உடனடியாக சிகிச்சை பெறவேண்டும்.
 • வைரல் மூளைக்காய்ச்சல்: இருமல், தும்மல், சுகாதாரமின்மை ஆகியவற்றால் பரவும் வைரசால் உண்டாகிறது.
 • ஒட்டுண்ணி மூளைக்காய்ச்சல்: ஒட்டுண்ணி மூளைக்காய்ச்சலின் ஓர் அரிய வகையான முதன்மை அமீபிக் மூளையழற்சிக்காய்ச்சல் (Primary amebic meningoencephalitis (PAM) உயிருக்கு ஆபத்தான மூளைத் தொற்றை ஏற்படுத்துகிறது.
 • பூஞ்சை மூளைக்காய்ச்சல்: இது அரிதாக ஏற்படும். இது ஒரு பூஞ்சையின் மூலமாக இரத்தத்தில் இருந்து தண்டுவடத்துக்குப் பரவும். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனினும் நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனமாக உள்ள எய்ட்ஸ், நீரிழிவு, புற்று நோயாளிகளுக்கு அதிகம் வர வாய்ப்புண்டு.
 • பரவா மூளைக்காய்ச்சல்: இது ஒருவரில் இருந்து இன்னொருவருக்குப் பரவாது. ஆனால் கீழ்வருவனவற்றால் உண்டாகும்:
 1. புற்றுநோய்
 2. உட்பரவிய செம்முருடு (தோல்முடிச்சு - Systemic lupus erythematosus - lupus)
 3. சிலவகை மருந்துகள்
 4. தலைக்காயம்
 5. மூளை அறுவை

குறிப்பு : www.cdc.gov

மூளைக்காய்ச்சலைக் கண்டறியும் சோதனைகளில் அடங்குவன:

 • இரத்தப்பரிசோதனை – மூளைக்காய்ச்சலை உண்டாக்கும் பாக்டீரியா அல்லது வைரசைக் கண்டறிய
 • இடுப்புத் துளை – முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இருந்து மூளைத்தண்டுவட நீர்ம மாதிரியை எடுத்து, பாக்டீரியா அல்லது வைரஸ் இருக்கிறதா என்று சோதித்தல்.
 • கணினி வரைவு ஊடுகதிர் – மூளைச்சிதைவு போன்ற சந்தேகப்படும்படியான பிரச்சினைகள் இருந்தால்
 • மார்பு எக்ஸ்-ரே – தொற்று இருக்கிறதா என்பதை அறிய

தேசிய சுகாதார இணையதளம் ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்து கொள்ள குறிப்பான தகவல்களையே அளிக்கிறது. எந்த ஒரு நோய்கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் நீங்கள் உங்கள் மருத்துவரையே கலந்தாலோசிக்க வேண்டும்.

குறிப்பு : www.nhs.uk

வரக்கூடிய சிக்கல்களாவன:

 • முழு அல்லது பகுதி காது கேளாமை
 • நினைவாற்றல், மனவொருமைப் பிரச்சினைகள்
 • ஒத்துப்போதல், சமநிலைப் பிரச்சினைகள்
 • பகுதியாக அல்லது முழுமையாக கற்றலில் கடினம் ஏற்படுதல்
 • கால்கைவலிப்பு
 • பெருமூளை வாதம் – அசைவு மற்றும் ஒத்திசைவு ஆகியவற்றைப் பாதிக்கும் பிரச்சினைகளின் ஒரு தொகுதி
 • பேச்சுப் பிரச்சினைகள்
 • பகுதி அல்லது முழு பார்வை இழப்பு

குறிப்பு : www.nhs.uk

மருத்துவம் அளிக்காவிட்டால் மூளைக்காய்ச்சல் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் ஆகும்.

பாக்டீரியா மூளைக்காய்ச்சல்:
நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளான செபலோஸ்போரின்கள் (Cefalosporins) நல்ல பயனை அளிக்கின்றன. மேலும், குளோரோம்ஃபெனிக்கால் (Chloramphenicol) தனியாகவோ அல்லது ஆம்பிசிலினோடு இணைந்தோ அதைபோன்றே சிறந்தமுறையில் செயலாற்றுகிறது.

வைரல் மூளைக்காய்ச்சல்:
வைரசால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் பாக்டீரியா மூளைக்காய்ச்சலை விட தீங்கு குறைந்ததே. மூளைக்காய்ச்சலை உண்டாக்கும் பெரும்பாலான வைரசுகள் குறிப்பிட்ட சிகிச்சைக்கு கட்டுப்படுவதில்லை. ஆதலால் ஆதரவு மருத்துவமே தேவைப்படுகிறது.

பூஞ்சை மூளைக்காய்ச்சல்:
கிரிப்டோகாக்கல் (Cryptococcal) அல்லது காக்சிடையோய்ட்ஸ் (Coccidioides) போன்ற பூஞ்சை மூளைக்காய்ச்சல்களுக்கு, ஆம்ஃபோடெரிசின் பி (amphotericin B) மற்றும் ஃபுளுசைட்டாசைன் (flucytosine) ஆகிய பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை நீண்ட காலத்துக்கு மிகுந்த அளவில் கொடுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தேசிய சுகாதார இணையதளம் ஆரோக்கியத்தைப் பற்றி அறிந்து கொள்ள குறிப்பான தகவல்களையே அளிக்கிறது. எந்த ஒரு நோய்கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் நீங்கள் உங்கள் மருத்துவரையே கலந்தாலோசிக்க வேண்டும்.

பரவாத மூளைக்காய்ச்சல்:
பொதுவாக இவ்வகை மூளைக்காய்ச்சல்களுக்கு கோர்ட்டிசோன் மருந்துகளால் சிகைச்சை அளிக்கப்படுகிறது. சில நோயாளிகளுக்குத் தானாகவே சரியாகிவிடுவதால் மருத்துவம் தேவைப்படுவதில்லை.

குறிப்பு :  www.nhs.uk

 • PUBLISHED DATE : May 18, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.