Syphilis.png

மேகநோய்

டிரிபோனெமா பலிடம் பாக்டீரியா (Treponema pallidum) என்னும் சுருள் உயிரியால், பாலியல் உறவுகள் மூலம் பரவுவதே மேகநோய். முத்தமிடுதல் மற்றும் நெருங்கிய உறவுகளால் இந்நோய் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுகிறது. இந்நோய் இருப்பதை ஒருவர் பொதுவாக அறிவதில்லை. அறியாமலே அவர் உடலுறவு மூலம் மற்றவருக்கு நோயைப் பரப்புகிறார்.

மேகநோயைப் பரப்பும் பாலியல் நடத்தைகள், பிற பால்வினை நோய்களான மேகவெட்டை, எச்.ஐ.வி. போன்றவற்றையும் பரப்பக்கூடும்.

நோயின் கட்டங்கள்

மேகநோயின் அறிகுறிகள் கீழ்க்காணும் மூன்று கட்டங்களாக வளர்ச்சி அடைகின்றன.

  • கட்டம் 1 (முதல் நிலை மேகநோய்) – பிறப்புறுப்பிலோ அல்லது வாயைச்சுற்றியோ, வலியற்ற, ஆனால் கடுமையாகப் பரவும் ஒரு புண்ணாக மேக நோயின் அறிகுறி ஆரம்பிக்கிறது. உடலுறவு போன்ற நெருங்கிய தொடர்பு கொள்ளும் போது இப்புண் இன்னொருவர் மேல் பட்டு நோய் பரவுகிறது. இரண்டில் இருந்து மூன்று வாரங்கள் வரை இருக்கும் இப் புண், பின் மறையும்.
  • கட்டம் 2 (இரண்டாம் நிலை மேக நோய்) – இரண்டாம் கட்ட அறிகுறிகள், தோல் படை மற்றும் தொண்டை வலி. இவ்வறிகுறிகள் சில வாரங்களில் மறைந்து போகும். இதற்குப் பின் ஒரு மறைமுக நிலை, அறிகுறிகள் எதுவும் இன்றி உருவாகிப் பல ஆண்டுகள் நீடிக்கும். அதன் பின் மிகவும் ஆபத்தான மூன்றாம் கட்டத்தை நோக்கி நோய் வளரும்.
  • கட்டம் 3 (மூன்றாம் நிலை மேகநோய்) – மேக நோய்க்கு சிகிச்சை எதுவும் மேற்கொள்ளாத மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு மூன்றாம் கட்ட மேக நோய் உண்டாகிறது. இக்கட்டத்தில் உடலுக்குக் கடுமையான பாதிப்புகள் நேரிடும்.

குறிப்புகள்:
http://www.nhs.uk/Conditions/Syphilis/Pages/Introduction.aspx 
http://www.nlm.nih.gov/medlineplus/syphilis.html 
http://www.niaid.nih.gov/topics/syphilis/Pages/default.aspx 
http://www.cdc.gov/std/syphilis/default.htm 
http://www.who.int/reproductivehealth/topics/rtis/syphilis/en/
 

மேகநோயின் அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்று போலவே இருக்கும். அறிகுறிகளும் இலேசாக இருப்பதால் அறிந்து கொள்வதும் கடினம்.

அறிகுறிகள் மூன்று கட்டங்களாக உருவாகின்றன;

  • முதல் நிலை மேகநோய்
  • இரண்டாம் நிலை மேக நோய்
  • மூன்றாம் நிலை மேக நோய்

முதல்நிலை மேகநோய் (Primary syphilis)

தொற்று ஏற்பட்டு 10 நாட்களில் இருந்து மூன்று மாதத்துக்குள் மேகநோயின் அறிகுறிகள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம்.
வலியற்ற ஒரு சிறு புண்ணே பொதுவான அறிகுறி. தொற்று பரவிய இடத்தில் இது தோன்றும்: குறிப்பாக, ஆண்/பெண் குறிகள், ஆசனவாய், குதவாய், நாக்கு அல்லது உதடுகள். பெரும்பாலனவர்களுக்கு ஒரு புண்ணே ஏற்படும்; ஆனால் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புண்களும் தோன்றும்.
வலியில்லாத காரணத்தால் இதை அலட்சியப்படுத்த நேரிடும். எனவே தொற்று ஏற்பட்டது புலப்படாமலேயே நோய் பரவும்.
இரண்டில் இருந்து ஆறு வாரங்களுக்குள் புண் மறைந்து விடும். இதற்கு மருத்துவம் செய்யவில்லை என்றால் மேகநோய் இரண்டாம் கட்டத்துக்கு வளர்ச்சி அடையும்.


இரண்டாம்நிலை மேகநோய் (Secondary syphilis)

புண் மறைந்து சில வாரங்களுக்கு உள்ளாகவே இரண்டாம் நிலை மேகநோயின் அறிகுறிகள் ஆரம்பிக்கும். பொதுவான அறிகுறிகள்:

  • அரிப்பற்ற தோல் படை உடலில் எங்காவது தோன்றும்; குறிப்பாக உள்ளங்கை/உள்ளங்கால்
  • சோர்வு
  • தலைவலி
  • நிணநீர்ச்சுரப்பி வீக்கம்

அரிதான அறிகுறிகளில் அடங்குவன:

  • காய்ச்சல்
  • எடை இழப்பு
  • திட்டுத் திட்டாக முடி இழப்பு
  • மூட்டு வலி

இவ்வறிகுறிகள் சிலவாரங்களில் மறையும்; அல்லது சில மாதங்கள் இடைவெளிகளில் தோன்றி மறையும்.


உள்ளுறை கட்டம் (Latent phase)

பின் நோய் உள்ளுறை கட்டத்தை அடையும். தொற்று பரவி இருந்தாலும் இக்கட்டத்தில் அறிகுறிகள் தென்படுவதில்லை. உள்ளுறை கட்டத்தின் முதல் ஆண்டிலும் மேகநோய் உடலுறவு மற்றும் நெருங்கிய தொடர்புகள் மூலம் பரவக் கூடும். ஆனால் இரண்டொரு ஆண்டுகள் கழித்து தொற்று உள்ளுக்குள் இருந்தாலும் ஒருவரில் இருந்து இன்னொருவருக்குப் பரவாது.
உள்ளுறை கட்டம், முதன் முதலில் தொற்று ஏற்பட்டு பல ஆண்டுகள் (பல  பத்தாண்டுகள் கூட) தொடரக் கூடும்.
சிகிச்சை அளிக்கா விட்டால் மூன்றாம் கட்டமான ஆபத்தான  இறுதிநிலையை நோய் எட்டும்.

மூன்றாம் கட்ட மேகநோய் (Tertiary syphilis)

முதல்முதல் தொற்று ஏற்பட்டுப் பல ஆண்டுகள் அல்லது பல பத்தாண்டுகள் கழித்துக் கூட மூன்றாம் கட்ட மேக நோயின் அறிகுறிகள் தோன்றலாம். மேகநோய்க்காக சிகிச்சை மேற்கொள்ளாதவர்களில் மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு இந்நிலையில் ஆபத்தான அறிகுறிகள் தோன்றும்.

உடலின் எப்பகுதியில் தொற்று பரவுகிறது என்பதைப் பொருத்து மூன்றாம் கட்ட மேகநோயின் அறிகுறிகள் இருக்கும். உதாரணமாக அது, மூளை, நரம்புகள், கண்கள், இதயம், எலும்புகள், தோல் அல்லது இரத்தக்குழாய்களைப் பாதிக்கலாம். கீழ்வரும் அறிகுறிகளை உருவாக்கும் சாத்தியம் உண்டு:

  • பக்கவாதம்
  • முதுமை மறதி
  • ஒருங்கிணைப்பு இழப்பு
  • உணர்ச்சியின்மை
  • முடக்குவாதம்
  • பார்வையிழப்பு
  • காதுகேளாமை
  • இதய நோய்கள்
  • தோல் படைகள்

இந்தக் கட்டத்தில் மேகநோய் உயிருக்கு கூட ஆபத்து விளைவிக்கலாம்.

குறிப்பு:
http://www.nhs.uk/Conditions/Syphilis/Pages/Symptomspg.aspx

டிரிபோனிமா பலிடம் என்ற பாக்டீரியாவால் மேகநோய் ஏற்படுகிறது.

உடலுறவு அல்லது வாய் மூலம் பாலுறவு அல்லது பாலுறவுக் கருவிகள் பரிமாற்றம் போன்றவற்றால் தொற்றுள்ள புண்ணோடு நெருங்கிய தொடர்பு ஏற்படும்போது பக்டீரியா உடலுக்குள் புகும்.

குறிப்பு:
http://www.niaid.nih.gov/topics/syphilis/understanding/Pages/cause.aspx 
 

உடல் பரிசோதனை

மருத்துவர் பிறப்புறுப்புகளைச் சோதனை செய்வார். ஆண்களுக்கு, ஆண்குறி, அதன் நுனித்தோல் மற்றும் துவாரமும் பெண்களின் யோனியின் உட்பகுதியும் சோதிக்கப்படும். இருபாலாரின் ஆசன வாயும் சோதனைக்குட்படுத்தப்படும்.

இரத்தச் சோதனைகள்:

மேகநோய்த் தொற்று உண்டானால் உடல் பாக்டீரியாவுக்கு எதிர் பொருளை உருவாக்கும்.
இந்த எதிர்பொருட்கள் இருப்பதை எளிய இரத்தச் சோதனை மூலம் அறிந்து மேகநோய் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறியலாம்.

  • எதிர்பொருள் இருந்தால், ஒன்றில், ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்பட்டதுண்டு என அறியலாம் (ஏனெனில், ஏற்கெனவே மேக நோய் ஏற்பட்டு சிகிச்சையினால் நலமடைந்திருந்தாலும் எதிர்பொருட்கள் உடலின் உள் பல ஆண்டுகள் இருக்கும்).
  • எதிர்பொருட்கள் இல்லாமல் இருந்தாலும் மேக நோய் இல்லை எனக் கூறிவிட முடியாது. ஏனெனில் தொற்று ஏற்பட்டு மூன்று மாதங்கள் வரை எதிர்பொருட்களைக் கண்டறிய முடியாது. மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் சோதனை செய்ய அறிவுரை கூறலாம்.

கர்ப்பிணிப் பெண்கள் யாவரும் மேகநோய் கண்டறியும் சோதனை செய்ய வேண்டும். ஏனெனில், இந்நோய், பிறக்காத மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். கர்ப்பம் ஏற்பட்டு 11-20 வாரங்களில் பொதுவாக இரத்தப் பரிசோதனை நடத்தப்படுகிறது. சோதனை நேர்மறையாக இருந்தால் தாய் சேய் இருவருக்கும் சிகிச்சை அளிக்கத் தொடங்க வேண்டும்.

பால்வினை நோய் ஆய்வகச் சோதனை (VDRL):

VDRL ஒரு மேகநோய் ஆய்வுச் சோதனை ஆகும். இதன் மூலம் எதிர்பொருகளை அளந்தறியலாம். மேக நோயை உண்டாக்கும் டிரிபோனெமா பலிடியம் பாக்டீரியா உடலுக்குள் புகுந்தவுடன் இந்த எதிர்பொருளை உடல் உருவாக்குகிறது.

பஞ்சுறைக்குச்சி சோதனை

புண்ணில் இருந்து ஒரு பஞ்சுறைக் குச்சியால் மாதிரி பாய்மம் (fluid) எடுக்கப்பட்டு நுண்ணோக்கியின் உதவியால் ஆய்வுசெய்யப்படும்.

குறிப்பு:
http://www.nhs.uk/Conditions/Syphilis/Pages/Diagnosispg.aspx

தசைவழி செலுத்தும் நுண்ணுயிர்க்கொல்லியான பென்சிலினே மேகநோய்க்கு சிறந்த மருந்து. பென்சிலினுக்கு ஒவ்வாமை இருந்தால், மருத்துவர், வாய்வழி உட்கொள்ளும் இன்னொரு நுண்ணுயிர்க் கொல்லியைப் பரிந்துரை செய்வார்.

நோய் முற்றிய நிலையில் அதிக அளவில் நுண்ணுயிர்க்கொல்லிகளை உட்கொள்ள வேண்டி இருக்கும்.

மேகநோய் பரவாமல் தடுக்கும் வழிமுறைகளே தடுப்புமுறை ஆகும். தனிநபர்கள் தங்கள் நலத்தைத் தாங்களே காத்துக்கொள்ளும் நடைமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும்.

1)   பிறப்புறுப்பு காப்புறைகள் தொற்று ஏற்படுவதைக் குறைக்கிறது.

2)   இளம் வயதினர் மத்தியில் பாலியல் கல்வியை ஊக்குவித்தல்

3)   ஆபத்து ஏற்படும் மக்கள் திரள்களிடம் பாலியல் ஆரோக்கிய விழிப்புணர்வை உண்டாக்குதல் (பாலியல் தொழிலாளிகள் மற்றும் அவர்களோடு உடலுறவு கொள்பவர்கள், நரம்புவழிப் போதை மருந்து எடுப்பவர்கள், கனரக வாகன ஓட்டிகள், இடம்பெயரும் தொழிலாளிகள், அகதிகள் மற்றும் சிறைக்கைதிகளே ஆபத்துள்ள மக்கள் திரள்கள்).

குறிப்பு:
http://www.nhs.uk/Conditions/Syphilis/Pages/Prevention.aspx

  • PUBLISHED DATE : May 19, 2015
  • PUBLISHED BY : NHP CC DC
  • CREATED / VALIDATED BY : NHP Admin
  • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.