இரத்த மிகையழுத்தம்

இரத்த மிகையழுத்த நிலையில் இரத்தக் குழாய்களில் உயர் அழுத்தம் தொடர்ந்து இருக்கும். இதயத்தில் இருந்து குழாய்கள் மூலம் இரத்தம் உடலின் எல்லா பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப் படுகிறது. ஒவ்வொரு தடவையும் இதயம் துடிக்கும் போது அது இரத்தத்தைக் குழாய்களுக்குள் செலுத்துகிறது. இதயத்தால் இரத்தம் செலுத்தப்படும் போது இரத்தக் குழாய்களின் (தமனிகள்) சுவர்களில் அழுத்தம் உருவாகிறது. இரத்தக் குழாய்களில் அழுத்தம் கூடக்கூட இரத்தத்தை இரத்தக் குழாய்களில் இறைக்க இதயம் கடுமையாக உழைக்க வேண்டும். இதைக் கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் மிகையழுத்தம் மாரடைப்பையும், இதய விரிவையும் முடிவில் இதய செயலிழப்பையும் உருவாக்கும். இரத்தக் குழாய்களில் நெளிவும் பலவீனமான பகுதிகளும் ஏற்பட்டு உறைவும் வெடிப்பும் உண்டாகும். இரத்தக் குழாய் அழுத்தத்தால் மூளைக்குள் இரத்தம் கசியலாம். இதனால் பக்கவாதம் ஏற்படக் கூடும். இரத்த மிகை அழுத்தம் சிறுநீரகச் செயலிழப்பு, பார்வை இழப்பு, இரத்தக் குழாய் சிதைவு மற்றும் அறிவுத்திறன் கோளாறு ஆகியவற்றிற்கு வழிகோலும்.

இரத்த அழுத்தம் மி.மீ மெர்க்குரியில் அளக்கப்படுகிறது (மி.மீ.மெ). பொதுவாக ஒன்றிற்கு மேல் ஒன்றாக எழுதப்படும் இரு எண்களில் இது பதிவு செய்யப்படுகிறது. மேல் எண் இதய சுருக்கழுத்தம் – இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் இருக்கும் அதிகபட்ச அழுத்தம். கீழ் எண் இதய விரிவழுத்தம் – இதய தசைகள் தளர்வடையும் போது இரத்தக் குழாய்களில் இருக்கும் குறைந்த பட்ச அழுத்தம். வயது வந்த இயல்பான ஒருவருக்கு இதய சுருக்க அழுத்தம் 120 மி.மீ.மெ. யாகவும் இதய விரிவழுத்தம் 80 மி.மி.மெ.யாகவும் வரையறுக்கப்படுகிறது.

இரத்த மிகையழுத்தம் என்பது இதய சுருக்கழுத்தம் 140 மி.மீ.மெ.க்கு இணை அல்லது கூடுதலாகவும் மற்றும்/அல்லது இதய விரிவழுத்தம் 90 மி.மீ.மெ.க்கு இணையாக அல்லது கூடுதலாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் வயதுவந்தவர்களில் 5-ல் ஒருவருக்கு மேற்பட்டோருக்கு  உயர் இரத்த அழுத்தம் உள்ளது – பக்கவாதம் அல்லது இதயநோய்களால் மரணம் அடைவோரில் பாதி அளவினர் இந்நிலையால் மரணம் அடைகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மிகை இரத்த அழுத்தத்தால் மரணம் அடைவோர் எண்ணிக்கை 94 இலட்சமாகும்.

அதிக வருவாய் உள்ள நாடுகளில், பரந்துபட்ட நோய்கண்டறிதலாலும் மலிவான மருந்துகள் கொண்ட சிகிச்சைகளினாலும் மிகை இரத்த அழுத்தம் கொண்டவர்களின் எண்ணிக்கையும் சராசரி இரத்த அழுத்த அளவும் மக்களிடையே மிகவும் குறைந்துள்ளன. இதனால் இதய நோய்களால் ஏற்படும் மரணமும் குறைந்துள்ளது. உதாரணமாக, அமெரிக்க உலக சுகாதார நிறுவனப் பகுதியில் மிகை இரத்த அழுத்தத்தின் விகிதம் 1980 களில் இருந்த 31%-லிருந்து 2014-ல் 18%-மாகக் குறைந்துள்ளது.

இதற்கு மாறாக குறைந்த வருவாய் நாடுகளில் உயர் இரத்த அழுத்தம் கொண்டோர் அதிகமாக உள்ளனர். உலக சுகாதார நிறுவன ஆப்பிரிக்கப் பகுதியில் பல நாடுகளில் 30% வயதுவந்தோர் மிகை இரத்த அழுத்தம் உடையவர்களாக இருக்கின்றனர். இந்த அளவு கூடிக்கொண்டே வருகிறது. இப்பகுதியின் இரத்த அளவு சராசரி விகிதம் உலக விகிதத்தை விட மிகவும் அதிகம்.

வளர்ந்து வரும் நாடுகளில் இரத்த மிகை அழுத்தமுள்ள பலருக்குத் தங்களுக்கு இருக்கும் நோயைப் பற்றித் தெரிவதில்லை. நோய் கண்டறியப்பட்ட பலருக்கும் அதற்கான மருத்துவத்தைப் பெற முடிவதில்லை. தொடர்ந்து தங்கள் நோயைக் கட்டுப்படுத்தவும் முடிவதில்லை. இதுவே இதய நோய், பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, அகால மரணம், ஊனம் போன்ற பல நோய்ப் பளுக்களுக்குக் காரணம் ஆகிறது.

இரத்த மிகை அழுத்தத்தைக் கண்டறிந்து, சிகிசையினால் கட்டுப்  படுத்துவதே  உலகம் முழுவதும் முதன்மையான சுகாதாரத் தேவையாகும்.

குறிப்புகள்:

www.who.int/topics/hypertension/en/

www.who.int/features/qa/82/en/

apps.who.int/iris/bitstream/

இரத்த மிகை அழுத்தம் உள்ள பலருக்கு அதைப்பற்றித் தெரிவதில்லை. ஆகவேதான் அது “மௌனக் கொல்லி” என அழைக்கப்படுகிறது.

சில சமயம் இரத்த மிகை அழுத்தத்தால் தலைவலி, மூச்சடைப்பு, தலைக்கிறக்கம், நெஞ்சு வலி, இதயப்படபடப்பு, மூளையில் இரத்தக் கசிவு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவற்றை அலட்சியப்படுத்தினால் ஆபத்தாக முடியக் கூடும். ஆனால் எப்போதும் இவை இரத்த மிகை அழுத்தத்தை மட்டுமே குறிப்பதாகக் கொள்ள முடியாது.

தீவிரமான வாழ்க்கை முறை மாற்றம் தேவை என்பதற்கு மிகை இரத்த அழுத்தம் ஓர் ஆபத்தான எச்சரிக்கைக் குறி.

குறிப்பு:

www.who.int/features/qa/82/en/

இரத்த மிகை அழுத்தம் முதன்மை (தனித்த) மற்றும் இரண்டாம்நிலை என பிரிக்கப்பட்டுள்ளது.

முதன்மை அல்லது தனித்த இரத்த மிகையழுத்தம் அடிப்படைக் காரணம் அறியப்படாத மிகையழுத்தம் தனித்த இரத்த மிகையழுத்தம் என அழைக்கப்படுகிறது. 90-95 % வயதுவந்தோர் இரத்த மிகையழுத்த நோய் இவ்வகையானதே. இது சில ஆபத்தான காரணிகளோடு தொடர்பு படுத்தப்படுகிறது. சில சுற்றுச்சூழல் அல்லது மரபு ரீதியான காரணங்களால் இது உருவாகலாம். உடல்பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களிலும் மரபுக் கூறுகள் உண்டு; இவையும் மிகை இரத்த அழுத்தத்துக்குக் காரணமாகலாம்.

இரண்டாம் நிலை இரத்த மிகையழுத்தம்: இரத்த அழுத்தத்திற்கான நேரடி காரணம் அறியப்பட்டால் அது இரண்டாம் நிலை இரத்த மிகை அழுத்தம் எனப்படும். 2-10 % இரத்த மிகை அழுத்தத்திற்கு கீழ் வருவன போன்ற அடிப்படை நிலை அல்லது காரணம் உண்டு:

 • சிறுநீரகப் பஞ்சுத்திசு நோய்கள் (2.5—6%)
 • இரத்தக்குழல் காரணங்கள் (2—4%)
 • நாளமில்லா சுரப்புக் காரணங்கள் (1—2%)
 • வெளிக்காரணம் (ஊக்க மருந்துகள், வாய்வழிக் கர்ப்பத்தடை மருந்துகள்)
 • உட்காரணம் (முதனிலை அண்ணக இயக்குநீர் மிகைப்பு), கஷிங் நோய்த்தாக்கம், அடர்நிறமி செல்கட்டி, பிறவி அண்ணகத்திசை மிகைப்பு)
 • மருந்துகளும் நச்சுக்களும் (மது, கொக்கைன், ஊக்கமருந்தல்லாத எதிரழற்சி மருந்துகள், நிக்கோட்டின், எஃபிடிரைன் கொண்ட தேக்கநீக்கிகள், லைக்கோரிஸ் அல்லது எஃபிடிரைன் அடங்கிய மூலிகை நிவாரணிகள்)

கர்ப்பம் தூண்டிய இரத்த மிகையழுத்தம், தூக்கத்தடை மூச்சுத்திணறல் போன்றவை பிற காரணங்களில் அடங்கும்.

இரத்த மிகையழுத்தம் உருவாக்கும் ஆபத்துக் காரணிகள்:

மாற்றியமைக்க முடியாத ஆபத்துக் காரணிகள்:

 • குடும்ப வரலாறு – குடும்பத்தில் இரத்த மிகையழுத்தம் தொடர்ந்து வரலாம்.
 • வயதாதல் – வயதாக ஆக இரத்த மிகையழுத்த ஆபத்தும் கூடுகிறது.
 • பால் – இளம் அல்லது நடுத்தர வயது ஆண்களில் இரத்த மிகையழுத்தம் பரவலாகக் காணப்படும் அதே சமயத்தில் பின் மாதவிடாய் மாற்றங்களால் அதிக அளவில் பெண்கள் தங்கள் வாழ்க்கையின் பின் கால கட்டத்தில் இரத்த மிகையழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர்.

மாற்றக்கூடிய ஆபத்துக்காரணிகள்:

 • உடல் செயல்பாடு குறைவு
 • அதிக உப்பும் கொழுப்பும் கொண்ட உணவும் பழம் மற்றும் மரக்கறி போதுமான அளவு உண்ணாமையும்.
 • மிகை எடையும் உடல் பருமனும்
 • அதிக மது
 • மனவழுத்த்த்தைச் சரியாகக் கையாளாமை, புகைத்தல், மறைமுகப் புகை மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறல்.
 • இயல்பை விட அதிகமான இரத்த அழுத்தம் எதிர்காலத்தில் இரத்த மிகையழுத்த ஆபத்தை அதிகரிக்கிறது.
 • 60 % நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த மிகையழுத்தமும் இருக்கிறது.

 

இரத்த மிகையழுத்த அளவுகள்

இயல்பு

சுருக்கழுத்தம்: 120 மி.மீ.மெ. குறைவாக

விரிவழுத்தம்: 80 மி.மீ.மெ குறைவாக

உருவாகும் ஆபத்தில்

(முன்இரத்த மிகையழுத்தம்)

சுருக்கழுத்தம்: 120-139 மி.மீ.மெ. குறைவாக

விரிவழுத்தம்: 80-89 மி.மீ.மெ குறைவாக

கூடுதல்

சுருக்கழுத்தம்: 140 மி.மீ.மெ. மேலாக

விரிவழுத்தம்: 900 மி.மீ.மெ மேலாக

 

குறிப்புகள்:

emedicine.medscape.com

www.paho.org

www.cdc.gov

Park’s Textbook of Preventive & Social Medicine, 22nd Edition, Hypertension, 345-348

வயது வந்தவர்கள் அனைவரும் தங்கள் இரத்த அழுத்த அளவை அறிந்து வைத்திருக்க வேண்டும். இதை அளக்கப் பல்வேறு வகையான பொறியமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. அவை மின், பாதரச, நீர்மமிலா பொறியமைப்புகள் ஆகும்.

 • மேனுவல் ரீடிங் வசதியையும்  கொண்ட மலிவான நம்பகமான மின்பொறிகளைப் பயன்படுத்துமாறு  உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. பகுதி தானியங்கி சாதனங்களில் மின்கலம் ஆற்றல் குறையும் போது மேனுவல் ரீடிங்கைப் பயன்படுத்தலாம்.
 • (நச்சுப் பொருளாய் இருப்பதால்) பாதரசப் பொறிகளைப் படிபடியாகக் குறைத்து மின் பொறிகளைப் பயன்படுத்துமாறு உ.சு.நி. பரிந்துரைக்கிறது.
 • நாடியழுத்தமானி போன்ற நீர்மமிலாப் பொறிகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை அளவுதிருத்தம் செய்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இத்தகையப் பொறிகளைப் பயன்படுத்தப் பயன்படுத்துவோருக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

இரத்த மிகையழுத்தத்தைக் கண்டறிய இரத்த அழுத்த அளவுகளைப் பல நாட்களுக்குப் பதிவு செய்ய வேண்டும். இரத்த அழுத்தம் ஒரு நாளில் இருமுறை அளக்கப்படுகிறது. காலையும் மாலையும் அளப்பது சிறந்தது. குறைந்த பட்சம் ஒரு நிமிட இடைவெளி விட்டு இரு அடுத்தடுத்த அளவீடு (அமரவைத்து) பதியப்படுகிறது. முதல் நாள் எடுத்த அளவீட்டை ஒதுக்கி விட்டு, மீதி அளவுகளின் சராசரியைக் கொண்டு இரத்த மிகை அழுத்தம் கண்டறியப்படுகிறது.

சிகிச்சையை ஆரம்பிக்கும் முன் வழக்கமான ஆய்வகச் சோதனைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. மின்னிதயமானி, சிறுநீர்ச் சோதனை, இரத்தச் சர்க்கரை, சிவப்பணுமானி, சீரம் பொட்டாசியம், கிரியேட்டினின் (அல்லது இணையான மதிப்பிடப்பட்ட வலைப்பின்னல் வடிகட்டல் விகிதம்  [GFR] ), கால்சியம், மற்றும் 9-12 மணி நேர உண்ணாமைக்குப் பின், அதி அடர்வு லிப்போப் புரதக் கொலஸ்ட்ரால் மற்றும் குறை அடர்த்தி லிப்போப் புரதக் கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடுகள் அடங்கிய ஒரு லிப்பிட் வரைவாய்வு.

மருத்துவமனைக்கு வெளியே எண்ணிம இரத்த அழுத்த அளவீட்டு பொறிகளைப் பயன்படுத்தலாம். நிலம்சார், உடலியல் அல்லது பொருளியல் காரணங்களினால் சுகாதார வசதிகளை அணுக முடியாத ஆனால் அளவீட்டுப் பொறிகளை வாங்க முடியும் நோயாளிகள் தங்களாகவே இரத்த மிகை அழுத்தத்தைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துதல் பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/

www.nhlbi.nih.gov/files/

வயது வந்த ஒருவர் தமது இரத்த அழுத்தத்தைச் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் அதிகமானால் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

சிலருக்கு இரத்த அழுத்த்த்தைக் கட்டுக்குள் வைக்க வாழ்க்கை முறை மாற்றமே போதுமானது ஆகும். பிறருக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளும் தேவைப்படும்.

வாழ்க்கைமுறை சார் நடவடிக்கைகள்

 • உப்புக் கட்டுப்பாடு – நாள் ஒன்றுக்கு 5 கிராமை விட குறைந்த உப்பு உட்கொள்ளல் (இயல்பான அளவு 9-12 கி./நாள்).
 • அளவோடு மது.
 • அதிகமாகக் காய்கறிகளும் பழங்களும் குறைந்த கொழுப்பு உணவும்.
 • எடையைக் குறைத்து அதைப் பராமரித்தல்.
 • முறையான உடல் பயிற்சி – இரத்த மிகையழுத்த நோயாளிகள் தினமும் 30 நிமிடம் (வாரம் 5-7 நாட்கள்) மிதமான சுறுசுறுப்பான மூச்சு இழுத்து விடும் உடல்பயிற்சிகளில் (நடை, சீரோட்டம், மிதிவண்டி அல்லது நீச்சல்) ஈடுபட வேண்டும்.
 • புகைப்பதையும், புகையிலைப் பொருள் பயன்பாட்டையும் விட்டொழிக்க வேண்டும்.

இரத்த மிகையழுத்தத்தை நிறுத்த உணவியல் அணுகுமுறை (DASH) – இத்திட்டத்திற்குச் சிறப்பு உணவு தேவை இல்லை. மாறாகத் தினசரி மற்றும் வார உணவு இலக்குகள் அளிக்கப்படுகின்றன. இத்திட்டம் பரிந்துரைப்பன:

 • காய்கறி, பழம், முழு தானியம் உட்கொள்ளுதல்
 • கொழுப்பற்ற அல்லது குறைக் கொழுப்பு பால் பொருட்கள், மீன், கோழிப் பொருட்கள், பீன்ஸ், கொட்டைகள் மற்றும் காய்கறி எண்ணெய் உட்கொள்ளுதல்.
 • கொழுப்புள்ள இறைச்சி, முழுக்கொழுப்புப் பால் பொருட்கள், தேங்காய், பாம் எண்ணெய் போன்றவற்றைத் தவிர்த்தல்.
 • இனிப்புள்ள பானங்களையும் பொருட்களையும் தவிர்த்தல்.

டேஷ் உணவுத் திட்டத்தைப் பின்பற்றும் போது முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய உணவுகள்:

 • குறைவாக நிறைவுற்ற மாறுபக்கக் கொழுப்பு
 • பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், நார், புரதம் நிறைந்தவை
 • சோடியம் குறைந்தவை

இரத்த மிகையழுத்த எதிர் மருந்துகள் – உடலில் இருந்து மிகை உப்பையும் நீரையும் அகற்றுதல், இதயத் துடிப்பைக் குறைத்தல், இரத்தக் குழல்களை விசாலப்படுத்துதல் போன்ற பல வழிகளில் இம்மருந்துகள் பணிபுரிகின்றன. இதய மிகையழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள்:

 • நீர்ப்பெருக்கிகள் (நீர் அல்லது பாய்ம மாத்திரைகள்): இவை உடலில் இருக்கும் மிகை சோடியத்தை வெளியேற்றுவதால், இரத்தத்தில் இருக்கும் நீரின் அளவு குறைக்கப்பட்டு, இரத்த அழுத்தம் குறைகிறது.
 • பீட்டா தடுப்பிகள்இதயத்தை மெதுவாகவும், குறைந்த ஆற்றலுடனும் துடிக்கச் செய்கிறது. இதன் விளைவாக இரத்தக் குழல் வழியாக இதயம் குறைந்த அளவு இரத்தத்தை இறைக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது.
 • ஆஞ்சியோடென்சின்மாற்றும் நொதி  (ACE) தடுப்பிகள்ஆஞ்சியோடென்சின்-II என்ற இயக்குநீர் இரத்தக் குழல்களைக் குறுக்குவதால் இரத்த அழுத்தம் கூடுகிறது. ஏசிஇ ஆஞ்சியோடென்சின்-I ஐ ஆஞ்சியோடென்சின்-II  வாக மாற்றுகிறது. இந்த செயல்முறையை ஏசிஇ தடுப்பிகள் தடுத்து ஆஞ்சியோடென்சின்-II  உற்பத்தியை நிறுத்தி இரத்த அழுத்ததைக் குறைக்கிறது.
 • ஆஞ்சியோடென்சின்-II  ஏற்பி தடுப்பிகள் (ARBs): ஆஞ்சியோடென்சின்-II இயக்குநீர் இரத்தக் குழல்களில் ஏற்பிகளுடன் கட்டுறுவதைத் தடுக்கிறது. ஆஞ்சியோடென்சின்-II தடுக்கப்படும்போது இரத்தக்குழல்கள் ஒடுக்கமோ சுருக்கமோ அடையா. இதனால் இரத்த அழுத்தம் குறையும்.
 • கால்சியம் சானல் தடுப்பிகள்: இதயம் மற்றும் இரத்தக்குழல் தசையில் சுண்ணாம்புச் சத்து ஏறாமல் தடுக்கும். இதனால் இரத்தக்குழல் தளர்வதால் இரத்த அழுத்தம் குறையும்.
 • ஆல்ஃபா தடுப்பிகள்: இரத்தக் குழல்களை இறுக்கும் நரம்புத் தூண்டலைக் குறைக்கும். இதனால் இரத்தம் எளிதாகப் பாய்வதால் இரத்த அழுத்தம் குறையும்.
 • ஆல்ஃபா-பீட்டா தடுப்பிகள்: இரத்தக்  குழல்களை இறுக்கும் நரம்புத் தூண்டலைத் தடுப்பதோடு இதயத் துடிப்பையும் குறைக்கும். இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது.
 • மைய வினைபாட்டு முகவர்கள்: இரத்தக் குழல்களைக் குறுக்கும் நரம்பு சமிக்ஞைகளை மூளையில் வினைபட்டு குறைக்கின்றன. இதனால் இரத்த அழுத்தம் குறைகிறது.
 • குழல்விரிப்பிகள்: இரத்தக் குழல் சுவர்த் தசைகளைத் தளர்த்துவதால் இரத்த அழுத்தம் குறைகிறது.

குறிப்புகள்:

www.nhlbi.nih.gov/files/docs/guidelines/express.pdf

www.who.int/cardiovascular_diseases/guidelines/

www.who.int/topics/hypertension/en/ ,

உங்கள் இரத்த மிகையழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்:

www.youtube.com/embed/LDWPJijPuBY

மிகை இரத்த அழுத்தம் நீண்ட காலம் தொடர்ந்தால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு சிக்கல்கள் உருவாகும். சில பொதுவான சிக்கல்களில் அடங்குவன:

 • இதயம்: இடது இதயக் கீழறைப் பெருக்கம், இதயவலி/மாரடைப்பு மற்றும் இதயச் செயலிழப்பு
 • மூளை: பக்கவாதம்/ அல்லது நிலையற்றக் குருதியோட்டக் குறைத் தாக்குதல், முதுமைமறதி
 • நீடித்த சிறுநீரக நோய்
 • மேற்புறத் தமனி நோய்கள், குழல்நெளிவு
 • விழித்திரை நோய்
 • அறிவுத்திறன் மாற்றம்

இரத்த மிகையழுத்தம் ஆரம்பக் கட்டத்தில் கண்டறியப்பட்டால், முறையே மருந்துண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைபிடித்தால் மாரடைப்பு, இதயச் செயல் இழப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு போன்ற ஆபத்துகளைக் குறைக்கலாம்.

குறிப்புகள்:

www.nhlbi.nih.gov/health/health-topics/

முதன்மைத் தடுப்பு முறைகள்:

ஒவ்வொருவரும் ஐந்து உறுதியான நடவடிக்கைகள் மூலம் இரத்த மிகையழுத்தம் உருவாவதையும் அதன் பாதகமான விளைவுகளையும் தடுக்க முடியும். இது முதன்மைத் தடுப்புமுறை என அழைக்கப்படுகிறது. இதில் அடங்குவன:

1.   ஆரோக்கியமான உணவு:

 • குழந்தைகளுக்கும் இளம்வயதினருக்கும் தகுந்த ஊட்டச்சத்துடன் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்கப்படுத்துதல்.
 • நாள் ஒன்றுக்கு 5 கிராமுக்கும் (ஒரு தேனீர்க்கரண்டிக்கும் குறைவாக) குறைவான உப்பையே பயன்படுத்துதல்.
 • ஒரு நாளைக்கு ஐந்து முறை பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்ளுதல்.
 • நிறை மற்றும் முழுக்கொழுப்பைக் குறைத்தல்.

2.   தீங்குதரும் மது பயன்பாட்டைத் தவிர்த்தல் (நாளொன்றுக்கு ஒரு தர அளவுக்கு மேல் உட்கொள்ளக் கூடாது).

3.   உடல் செயல்பாடுகள்:

 • தொடர் உடல் பயிற்சிகள் (குழந்தைகளுக்கும் இளம் வயதினர் உட்பட). குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள்-வாரத்திற்கு ஐந்து முறை.
 • இயல்பான உடல் எடையைப் பேணுதல்: ஒவ்வொரு 5 கி.கி. மிகை எடையைக் குறைப்பதன் மூலம் சுருக்கழுத்தத்தில் 2-10 புள்ளிகளைக் குறைக்கலாம்.

4.   புகையிலைப் பயன்பாட்டையும் புகையிலைப் பொருட் தாக்கத்துக்கு உட்படுதலையும் நிறுத்துதல்.

5.   மனவழுத்தத்தைத் தியானம், தகுந்த உடல் செயல்பாடு, நேர்மறையான சமூகத் தொடர்புகள் மூலம் ஆரோக்கியமாகக் கட்டுப்படுத்துதல்.

இரண்டாம் நிலைத் தடுப்பு முறை பாதிக்கப்பட்டோருக்கு இருக்கும் இரத்த மிகை யழுத்தத்தைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவதே இரண்டாம் நிலைத் தடுப்பு முறையின் இலக்காகும். இதன் மூலம் சிக்கல் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கலாம்.

 • தொடர் இரத்த அழுத்த சோதனை மூலம் ஆரம்பக் கட்ட நோய் கண்டறிதல்: இரத்த மிகையழுத்தம் தொடக்க நிலையிலேயே கண்டறியப்பட்டால் மாரடைப்பு, இதயச்செயலிழப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு ஆகியவற்றைக் குறைக்க ஏதுவாகும். சுய கவனமே மிகையழுத்தத்தைக் கண்டறியவும், மருந்துகளை முறையாக உட்கொள்ளவும், ஆரோக்கியமான நடத்தைகளுக்கும், சிறப்பான முறையில் கட்டுப்படுத்தவும், தேவைப்படும்போது மருத்துவ ஆலோசனையை நாடவும் உதவும். சுய கவனம் எல்லோருக்குமே நல்லது என்றாலும், நிலவியல், உடலியல் மற்றும் பொருளியல் காரணங்களுக்காக சுகாதாரச் சேவைகளை எளிதில் அணுக முடியாதவர்களுக்கு அது குறிப்பாகச் சிறந்தது ஆகும்.
 • மருத்துவம் இரத்த அழுத்த்த்தை 140/90 மி.மீ.மெ, அளவுக்குக் கீழே பராமரிப்பதும் மற்றும் சிறப்பாக 120/80 மி.மீ.மெ. என்ற அளவில் பேணுவதும் மருத்துவத்தின் நோக்கமாகும்.
 • நோயாளியின் இணக்கம்: (மருந்து உட்கொள்ளுதல், உணவுக் கட்டுப்பாடு, வாழ்க்கைமுறை மாற்றம் போன்றவற்றில்) நோயாளி, குடும்பம், சமுதாயத்துக்கு அளிக்கும் கல்வி மூலம் இதை மேம்படுத்தலாம்.

குறிப்புகள்:

www.who.int/features/qa/82/en/

Park’s Textbook of Preventive & Social Medicine, 22nd Edition, Hypertension, 345-348

 • PUBLISHED DATE : Jan 25, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Jan 25, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.