கயசனூர்க் காட்டு நோய் (KFD)

கயசனூர்க் காட்டு நோய் (கே.எஃப்.டி) உண்ணியால் பரவும் நோய் ஆகும். இது ஒரு வைரல் குருதிப்போக்குக் காய்ச்சல். கருநாடக மாநிலத்தில் இது ஒரு கொள்ளை நோய் (தொடர்ந்து காணப்படுகிறது). பகுதி மக்களால் குரங்குக் காய்ச்சல் என அழைக்கப்படுகிறது. கே.எஃப்.டி வைரஸ் ஃபிளேவிவைரஸ் பேரினத்தையும் ஃபிளேவிவைரிடே குடும்பத்தையும் சார்ந்தது ஆகும்.

கருநாடக மாநிலத்தின் சிமோகா மாவட்டத்தின் கயசனூர்க் காட்டில் குரங்குகளுக்கு (கருப்புமுக நீண்டவால் குரங்கு மற்றும் செம்முக குல்லாய்க் குரங்கு) ஒருவித நோய் ஏற்பட்டுப் பின் அருகிலுள்ள பகுதிகளில் (சிமோகா மாவட்டத்தின் சாகர் வட்டம்) மனிதர்களுக்கும் காய்ச்சல் நோய் பரவி சில மரணங்களும் நிகழ்ந்தபோது கயசனூர்க் காட்டு நோய் வைரஸ் முதன்முதலில் 1957-ல் இனங்காணப்பட்டது.

முதலில் கருநாடக மாநிலத்தின் சிமோகா மாவட்டத்தில் உள்ள மூன்று வட்டங்களில் (சாகர், சிக்காரிப்பூர் மற்றும் சோரப்) மட்டுமே இந்நோய் இருந்தது. பின் வந்த ஆண்டுகளில், இந்நோய் கருநாடகத்தின் உத்தரக் கன்னடம், உடுப்பி, மங்களூர் (தச்சின கன்னடம்) மற்றும் சிக்மகளூர் மாவட்டங்களுக்குப் பரவியது.

2013-ல் கருநாடகத்தின் பந்திப்பூர் புலிகள் சரணால வனப்பகுதியில் கே. எஃப். டி. யின் ஒரு நோயெழுச்சி ஏற்பட்டது. 2014-ல் சிமோகா மாவட்டம் தீர்த்த அள்ளி வட்டத்தில் நோயெழுச்சி ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கோவாவின் சத்தாரி வட்டத்தின் பாலி கிராமத்திலும், வட கிழக்கு கோவாவின் வால்போய் சமூக சுகாதார மையத்தின் கீழ் இருக்கும் மூன்று கிராமங்களிலும் (மௌக்சி, சார்மே மற்றும் கோபார்டெம்) 2015-ல் நோயெழுச்சி ஏற்பட்டது.

இந்தியாவின் பலபகுதிகளிலும் (குஜராத்தின் சௌராஷ்ட்டிரத்தின் பகுதிகள், மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவின் மேற்கு வனப்பகுதி, அந்தமான் தீவுகள்) ஊனீர் ஆய்வுகளில் கயசனூர்க் காட்டு நோய் வைரசுகள் கண்டறியப்பட்டன.

காடுகள் அழிக்கப்பட்டுப் புதிய நிலங்களில் வேளாண்மையும் கால்நடை மேய்ச்சலும் நடைபெறுவதால் உண்டாகும் சூழலுயிரியல் மாற்றங்களே கயசனூர்க் காட்டு நோய் வைரசுகள் புதிய இடங்களுக்குப் பரவுவதற்கும் புதிய நேர்வுகள் ஏற்படுவதற்கும் காரணம் என அறிய முடிகிறது,

கயசனூர்க் காட்டு நோய் வைரசோடு தொடர்புடைய வைரசுகள் சீனாவிலும் அரேபியாவிலும் இனங்காணப்பட்டுள்ளன.

குறிப்புகள்:

www.searo.who.int/publications

www.icmr.nic.in/pinstitute/niv/

www.idsp.nic.in/idsp/IDSP/

www.ncbi.nlm.nih.gov/pmc/

www.ncbi.nlm.nih.gov/pmc/

 • உண்ணி கடித்து அல்லது நோய்வைரசுகள் புகுந்த பின் க.கா.நோ. வைரசின் நோயரும்பும் காலம் 2-7 நாட்கள் ஆகும்.
 • அறிகுறிகள் திடீரென உண்டாகும். குளிர், முன் தலைவலி, கடும் தசை வலியைத் தொடர்ந்து காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து 5-12 நாட்கள் அல்லது அதற்கு மேலும் நீடிக்கும்.
 • பிடரி, இடுப்பு, கெண்டைக்கால் ஆகிய இடங்களில் தசைவலி இருக்கும். நோய்வாய்ப்பட்டு மூன்றாவது அல்லது நான்காவது நாள் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற இரைப்பைக்குடல் அறிகுறிகள் காணப்படும். நோயாளி ஒளிக்கூச்சத்தை உணரக் கூடும்.
 • பெரும்பாலான நோயாளிகளுக்குக் குருதிக்கசிவு இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு, மூக்கு, பல், வாந்தி, மலம் (பச்சை இரத்தம்), இருமல் (குருதி வெளிப்படுதல்), சளி ஆகியவற்றில் குருதிக்கசிவு இருக்கும்.
 • கழுத்து நிணநீர்ச்சுரப்பி வீக்கம் மற்றும் மென் அண்ணத்தில் பருக்களோடு கூடிய கொப்புளங்கள் காணப்படும்.
 • ஒரு அல்லது இரு வார அறிகுறிகளுக்குப் பின் பெரும்பாலானோர் தாமாகவே குணமாகிவிடுவர். சில நோயாளிகளுக்கு நோய் இரு கட்டமாகக் காணப்படும். ஓரிரு வாரக் காய்ச்சலுக்குப் பின் மூன்றாவது வாரத்தில் இரண்டாம் கட்டம் துவங்கும். காய்ச்சல் திரும்பவும் வருவதுடன் நரம்பியல் அறிகுறிகளான தலைவலி, கழுத்து விறைப்பு, மன உளைச்சல், கடுமையான நடுக்கம், தலைக்கிறக்கம் மற்றும் அசாதாரண அனிச்சை இயக்கங்கள் ஏற்படும்.
 • நேர்வுகளில் மரண விகிதம் 2-10%.

குறிப்புகள்:

  www.searo.who.int/publications/journals/

ஃபிளேவிவைரஸ் தொகுதியைச் சார்ந்த கயசனூர்க் காட்டு நோய் வைரசால் இந்நோய் ஏற்படுகிறது. இது பிற உண்ணியால் பரவும் ஃபிளேவிவைரசுகளுடன் விளைவியத் தொடர்புடையது, இரசியன் இளவேனில்-வேனில் வைரஸ் தொகுதிகளை ஒத்துள்ளது.

.கா.நோ. வைரஸ் பரவும் விதம்:

வைரஸ் தொற்றுள்ள முதிர்ச்சி அடையாத உண்ணி கடிக்கும் போது இது மனிதர்களுக்குப் பரவுகிறது. மனிதரில் இருந்து மனிதருக்குப் பரவுவதாகத் தெரியவில்லை.

இயற்கை ஓம்புயிர்களும் புகலிடங்களும்: எலிகள், அணில்கள் போன்ற சிறு பாலூட்டிகளே இந்த வைரசின் புகலிடங்கள் ஆகும். குரங்குகளே இந்த வைரசுகளின் பெருக்கும் ஓம்புயிர்கள். வைரசுகளைப் பரப்பும் அதே நேரத்தில் அவை க.கா.நோ. வைரஸ் தொற்றால் மடிகின்றன. கால்நடைகள் இரத்த உணவளித்து உண்ணித் தொகையைப் பராமரிக்கின்றன. ஆனால் வைரஸ் பராமரிப்பில் அவற்றிற்குப் பங்கில்லை. மனிதர் முடிவான ஓம்புயிரி; வைரசைப் பரப்புவதில் பங்கேதும் இல்லை.

நோய்பரப்பிகள்: ஹீமாஃபைசாலிஸ் என்றப் பேரினத்தைச் சார்ந்த தோட்டுண்ணிகளே நோயைப் பரப்புகின்றன. ஹீமாஃபைசாலிசிசின் ஸ்பைனிகெரா சிற்றினமே முக்கிய நோய்பரப்பி. இது கருநாடக மாநிலத்தில் காணப்படுகிறது. காடுகளின் வழியாகச் செல்லும் மனிதர்கள் தொற்றுள்ள முதிர்ச்சி அடையாத உண்ணிகளால் கடிபடும்போது தொற்றைப் பெறுகின்றனர். முதிர்ச்சி அடைந்த உண்ணிகள் பெரிய கால்நடைகளின் இரத்தத்தைக் குடிக்கின்றன. இப் பெரிய கால்நடைகள் பெருகுவதற்கு ஏற்ற ஓம்புயிர்களே எனினும் இரத்தத்தில் குறைவான வைரஸ் எண்ணிக்கையைக் கொண்டிருப்பதால் பரப்புவதற்கு ஏற்றவை அல்ல. உண்ணிகள் ஒரு வளர்ச்சிக் கட்டத்தில் இருந்து இன்னொரு கட்டத்திற்கு வைரசுகளைக் கடத்தி வைரசுகளுக்குப் புகலிடமாகத் திகழுகின்றன.

தோட்டுண்ணிகளின் வாழ்க்கை வட்டம்- தோட்டுண்ணிக்கு நான்கு வாழ்க்கைக் கட்டங்கள் உண்டு. முட்டை, முட்டைப்புழு, இளம்புழு, முதிர் உண்ணி. பெண் உண்ணி முட்டைகளை நிலத்தில் இடும். தாவரங்களின் அடியில் முட்டை புழுக்களாகப் பொரிக்கும். முட்டைப்புழுக்கள் சிறு பாலூட்டிகள் மற்றும் குரங்களின் இரத்தத்தைக் குடித்துப் பின் கீழ் விழுந்து இளம்புழுக்களாக மாறும். இளம் புழுக்கள் சிறு பாலூட்டிகள், பறவைகள் (எதிர்பாராத விதமாக மனிதர்கள்) ஆகியவற்றின் இரத்தத்தைக் குடித்து நிலத்தில் விழுந்து முதிர் உண்ணிகளாக மாறும். இவை பெரிய விலங்குகளான கால்நடைகள், குரங்குகள் போன்றவற்றின் இரத்தம் குடிக்கும். இவ்வாறு, முட்டைப்புழு, இளம்புழு மற்றும் முதிர் உண்ணிகள் என மூன்று நிலைகளில் வெவ்வேறு ஓம்புயிர்களில் உணவுண்ணுபவைகள் மூன்று ஓம்புயிர் உண்ணிகள் என அழைக்கப்படும்.

ஆபத்துக்காரணிகள்:

 • வேலை மற்றும் பொழுதுபோக்கிற்காக கிராமப்புறம் அல்லது வீட்டைவிட்டு வெளியே செல்லுபவர்கள் (உ-ம். வேட்டைக்காரர்கள், மேய்ப்பர்கள், வன ஊழியர்கள், விவசாயிகள்) தொற்றுள்ள உண்ணியால் கடிபடும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
 • கருநாடகத்தில், நவம்பரில் இருந்து ஜூன் வரையுள்ள வறண்ட காலத்தில் அதிக நேர்வுகள் அறிவிக்கப் படுகின்றன. இக்காலகட்டத்தில் இளம்புழுக்கள் இப்பகுதியில் அதிக சுறுசுறுப்பாக இயங்குகின்றன.
 • குறிப்புகள்:

www.searo.who.int/publications/

extension.entm.purdue.edu/public

நச்சுக்காய்ச்சல், குடற்காய்ச்சல், டெங்கு, மலேரியா, மஞ்சள்காமாலை, கணைச்சூட்டுக் காய்ச்சல் வகைகள் போன்றவற்றில் இருந்து இந்நோயை வேறுபடுத்திப்பார்க்க வேண்டும். இரத்த மாதிரிகளில் பின்வரும் சோதனைகளைச் செய்ய வேண்டும்:

 • முழு இரத்தக் கணக்கீடு, மொத்த வெள்ளணு கணக்கீடு, வகையீட்டு வெள்ளணு கணக்கீடு, இரத்தப்புரத அளவு மற்றும் தட்டணு கணக்கீடு;
 • கல்லீரல் செயல்பாட்டுச் சோதனைகள் (AST, ALT, ஊனீர் பிலிரூபின், அல்கலைன் பாஸ்பேட்);
 • ஊனீர் மின்னயனிகள், இரத்த யூரியா, ஊனீர் கிரியாட்டினின்;
 • மலேரியா நூண்ணுயிரிக்கு சாயச் சோதனை அல்லது மலேரியா துரிதக் கண்டறிதல் சோதனை;
 • ஒரே அறிகுறிகள் கொண்ட பிற நோய்கள் இல்லை என்பதை முடிவுசெய்யும் சோதனைகள்.

க.கா.நோ.வைரஸ் கண்டறிதல்-

 • மனிதர்களின் இரத்தம்/ஊனீர், தொற்றுள்ள குரங்குகளின் இரத்தம் மற்றும் உள்ளுறுப்புகள் அல்லது உண்ணிகளின் திசுக்கள் ஆகியவற்றில் இருந்து நிகழ்நேர RT-PCR செய்யமுடியும். காய்ச்சல் நோய் ஏற்பட்டதில் இருந்து பத்து நாட்கள் வரை மனித மாதிரிகளில் RT-PCR செய்ய முடியும்.
 • நோயாளிகளின் இரத்தத்தில் இருந்தும் (கடும் கட்டத்தில், அறிகுறிகள் கண்ட 2-5 நாட்கள்), நேர்மறை உண்ணித் தொகுதி, அல்லது குரங்கின் இரத்தம் அல்லது உள்ளுறுப்புகளில் இருந்து விலங்குகளுக்குள் செலுத்தியோ அல்லது திசுவளர்ச்சி மூலமாகவோ வைரசைப் பிரித்தெடுக்க முடியும்.
 • நோயின் கடும் கட்டத்தில் (4-ஆம் நாளில் இருந்து) KFD எதிர்-IgM எதிர்பொருட்களை எலிசா பயன்படுத்திக் கண்டறியலாம்.
 • KFD எதிர்-IgM எதிர்பொருட்களைப் (எலிசா) பயன்படுத்தி மக்கள்திரளில் ஊனீர்-கண்காணிப்பு நடத்தி, பிற பகுதிகளில் KFDV பாதிப்பைப் புரிந்து கொள்ளலாம்.

குறிப்புகள்:

 www.searo.who.int/publications/

க.கா.நோய்க்கெனக் குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை.

நீர்ச்சத்தைப் பராமரித்தல், இரத்தக் கசிவையும் நரம்பியல் சிக்கல்களையும் தடுத்துக் கட்டுப்படுத்துதல் ஆகிய ஆதரவு சிகிச்சையே இந்நோய் மேலாண்மையில் அடங்கும்.

குறிப்புகள்-

www.searo.who.int/publications/journals/

குருதிக்கசிவு: இடைவிட்டு மூக்கில் இரத்தம், இரத்த வாந்தி, கருமலம் மற்றும் மலத்தில் வெளிப்படையான இரத்தம் ஆகியவை இதில் அடங்கும்.

நரம்பியல் சிக்கல்கள்: மூளையுறை மற்றும் சூழ்திசு அழற்சியால் ஏற்படலாம்.  தலைவலி, கழுத்து விறைப்பு, மன உளைச்சல், கடும் நடுக்கம், தலைக்கிறக்கம் மற்றும் இயல்பற்ற அனிச்சைச் செயல்கள் அறிகுறிகளில் அடங்கும்.

குறிப்புகள்:

www.searo.who.int/publications/journals/

தடுப்பூசி, தனிநபர் காப்பு மற்றும் நோயெழுச்சி உள்ள இடங்களில் உண்ணிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை தடுப்பு முறையில் அடங்கும்.

 • செத்த வைரசுகள் கொண்ட ஒரு தடுப்பு மருந்து இந்தியாவில் குறிப்பாக நோய் தாக்கும் பகுதிகளில் பயன்படுத்தப் படுகின்றது.
 • நோய்த் தொற்றுள்ள இடங்களுக்குச் செல்லும்போது பூச்சி விரட்டிகளுடனும், காப்புடைகளுடனும் (பேண்டுக்குள் செருகிய நீண்ட கையுள்ள வெளிர்நிறச் சட்டை, காலுறைக்குள் செருகிய நீண்ட பேண்டுகள், கம்பூட்டுகள்) செல்ல வேண்டும். ஒவ்வொரு நாளின் கடைசியிலும் உடலில் உண்ணிகள் உள்ளனவா என்று பார்த்து அகற்ற வேண்டும். நேயெழுச்சி உள்ள இடங்களில் மக்களுக்கும் பயணிகளுக்கும் சுகாதாரக் கல்வி மூலம் தரையில் உட்காருவதையும் படுப்பதையும் தடுக்க வேண்டும்.
 • ஒரு செத்த குரங்கைச் சுற்றி 50 மீட்டர் அளவுக்கு கிருமிநாசினையைத் தெளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்புகள்:

www.searo.who.int/publications/

 • PUBLISHED DATE : Apr 13, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Apr 13, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.