போதைப்பழக்கம்

மது மற்றும் போதைப் பொருளை உள்ளடக்கிய உளத்தூண்டல் பொருட்களின் ஆபத்தான பயன்பாடே போதைப்பழக்கம் என்று குறிப்பிடப்படுகிறது. உளத்தூண்டல் பொருட்களைப் பயன்படுத்துவதால் பயன்படுத்துவோருக்கு மட்டும் அல்லாமல் குடும்பத்தினருக்கும் சமுதாயத்திற்கும் குறிப்பிடத்தக்க ஆரோக்கியம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் உருவாகின்றன. போதைப்பொருளில் மது, ஓப்பியம், கொக்கைன், ஆம்பேட்டாமைன், மாயத்தோற்றத் தூண்டிகள் மற்றும் கடைகளில் வாங்கும் பரிந்துரையற்ற மருந்துகளும் அடங்கும் (உட்கொள்ளும்போது அல்லது உடல்மண்டலத்துக்குள் செலுத்தும்போது மன செயல்பாடுகளைப் பாதிப்பவையே உளத்தூண்டல் மருந்துகள் ஆகும்).

குடும்பங்கள், சமுதாயங்கள் மற்றும் நாடுகளின் சுகாதாரம், சமூகம் மற்றும் பொருளியல் அம்சங்களுக்கு உளத்தூண்டல் பொருட்கள் அதிக அளவிலான ஆபத்தை விளைவிக்கின்றன. உலக அளவில் போதைப்பொருளால் ஏற்படும் கோளாறுகளை விட மதுவால் ஏற்படும் கோளாறுகள் அதிகம். மது மற்றும் போதைப்பொருள் ஆகிய இரண்டும் பெண்களை விட ஆண்களிடமே அதிக பயன்பாட்டில் உள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி (2002), உலக நோய்ப்பளுவில் 8.9% உளத்தூண்டல் பொருட்களால் ஏற்படுகின்றன. இதில் புகையிலையால் 4.1%, மதுவால் 4% மற்றும் போதைப்பொருளால் 0.8%. உலக அளவில் மது அருந்துவோர் 200 கோடியும், புகைப்போர் 130 கோடியும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் 1.85 கோடிப் பேரும் உள்ளனர். இந்த மூன்று உளத்தூண்டல் பொருட்களும் வயதுக் குழுவினருக்கு ஏற்ப வெவ்வேறு நோய்ப்பளுவை உருவாக்குபவன. போதைப் பொருளால் மரணம் விரைவில் நிகழ்கிறது. மதுவாலும் 60 வயதுக்குள் (65%) மரணம் ஏற்படலாம். 70% புகையிலையால் ஏற்படும் மரணம் 60 க்கு மேல் நிகழ்கிறது.

உலக சுகாதார நிறுவனப் பகுதியின் வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருள் பயன்பாடு வேறுபடுகிறது. ஐரோப்பாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் புகையிலைப் பயன்பாடு அதிகம். ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் மேற்கு பசிபிக்கில் மதுவே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

உலக மக்கள் தொகையில் 15-64 வயதுக்கு உட்பட்டோரில் 1.55-2.50 கோடி மக்கள் அதாவது 3.5%-6.7% பேர் பிற உளத்தூண்டல் மருந்துகளான கஞ்சா, ஆம்பேட்டாமைன், கொக்கைன், ஓப்பியம் மற்றும் பரிந்துரைக்கப்படாத மருந்துகளைப் பயன்படுத்தியுள்ளனர் (உ.சு.நி. 2008). கஞ்சாதான் பெரும்பாலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பொருள் (1.29-1.90 கோடி மக்கள்). அதற்கு அடுத்து ஆம்பிடாமைன், அதன் பின் கொக்கைன் மற்றும் ஓப்பியம்.

போதைப்பொருளை ஊசி மூலம் செலுத்துவோருக்கு (மருந்தாக அல்லாமல் உளத்தூண்டியாக) எச்.ஐ.வி., கல்லீரல் அழற்சி பி மற்றும் சி ஏற்படும் ஆபத்துள்ளது.  1.3 கோடி பேர் ஊசி மூலம் போதிப்பொருள் எடுப்போர்.  இவர்களில் 17 லட்சம் பேர் எச்.ஐ.வி.யோடு வாழ்கின்றனர்.  எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களில் 10% பேர் ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றுவோர். ஊசி மூலம் போதைப்பொருள் ஏற்றுவோரில் 67% பேருக்கு கல்லீரல் அழற்சி சி உள்ளது.

இந்தியாவில் ஊசி மூலம் போதை ஏற்றுபவர்கள் ஓப்பியத்தைப் பொதுவாகப் பயன்படுத்துகின்றனர். இதில் ஹெராயின் மற்றும் மருந்துகளான பியூப்ரேநார்பைன், பெண்டாசாக்கின் மற்றும் டெக்ஸ்ட்ரோ-புராபாக்சிபீன் அடங்கும். வட கிழக்குப் பகுதியில் ஹெராயினையும் டெக்ஸ்ட்ரோ-புராபாக்சிபீனையும் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற மாநகர்களில் பியூப்ரேநார்பைன் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் சத்திஸ்கரில் ஊசி வழி பெண்டாசாக்கின் பயன்படுத்தப்படுகிறது. பஞ்சாப், அரியானாவில்  பியூப்ரேநார்பைன் ஊசிமூலம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஊசி மூலம் போதை ஏற்றுவோர்களில் 7.2 பேருக்கு எச்.ஐ.வி. இருப்பதாக எச்.ஐ.வி. காப்புக் கண்காணிப்பு அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும் சில மாநிலங்களில் இதை விட அதிகம் உள்ளது. பஞ்சாபில் 21%, தில்லியில் 18 % மற்றும் மணிப்பூரிலும் மிசோரத்திலும் ஏறக்குறைய 12 %.

உளத்தூண்டல் மருந்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்தும்போது விபத்துகள் அதிகரிக்கின்றன.

தகுந்த பொது சுகாதார நடவடிக்கைகளைத் தனி நபரும், குடும்பங்களும் சமுதாயங்களும் பயன்படுத்துவதில் அதிக விழிப்புணர்வை கொண்டிருந்தால் புகையிலை, மது, மற்றும் சட்ட விரோதப் பொருட்களோடு தொடர்புடைய சுகாதாரம் மற்றும் சமூகப் பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

குறிப்புகள்:

www.who.int/topics/substance_abuse/en/

www.who.int/substance_abuse/activities/msbatlasexecsum.pdf?ua=1

www.who.int/substance_abuse/facts/en/

www.who.int/substance_abuse/facts/psychoactives/en/

www.drugabuse.gov/publications/drugfacts/understanding-drug-use-addiction

www.who.int/substance_abuse/activities/en/

www.who.int/substance_abuse/ungass-leaflet.pdf?ua=1

www.who.int/substance_abuse/facts/global_burden/en/

www.who.int/substance_abuse/publications/en/Neuroscience.pdf

naco.gov.in/sites/default/files/Opiod%20Substitution%20Therapy%20Guideline.pdf

www.who.int/hiv/topics/idu/en/

http://link.springer.com/chapter/10.1007%2F978-3-7643-9923-8_10#page-2

கடும் போதை, தொடர் பயன்பாடு அல்லது இல்லாமல் இருக்கமுடியாது எனும் நிலை மற்றும் போதைப்பொருளைப் பயன்படுத்தும் முறை ஆகியவற்றால் போதைப்பொருள் பயன்பாட்டுப் பிரச்சினைகள் உருவாகும். இந்த அனைத்து வகையிலும் ஒருவருக்குப் பிரச்சைனைகள் எழலாம்.

ஒரே தடவையாக போதை மருந்தை உட்கொள்ளும் போது கடும் போதை உருவாகும். பொருளின் வகை, அளவு மற்றும் ஒரு தனிநபரின் தாங்கும் திறம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்துப் போதை அமையும். பின்வரும் பிரச்சினைகள் இருக்கலாம்:

 • தள்ளாட்டம், வாந்தி, காய்ச்சல் மற்றும் குழப்பம்
 • அளவு மிகைப்பும் மயக்கமும்
 • விபத்து மற்றும் காயம் ஏற்படும் அபாயம்
 • முரட்டுத்தனமான, எதிர்பாராத நடத்தையும் வன்முறையும்
 • திட்டமிடாத மற்றும் பாதுகாப்பற்ற பால்வினை நடவடிக்கைகள்

மது அதிகமாகக் குடிப்பது குடிபோதை எனப்படும். முகம் சிவத்தல், குழறல், தள்ளாட்டம், களி, மிகைச்செயல், அதிகப் பேச்சு, முறையற்ற நடத்தை, தாமதமான பதில்வினை, தடுமாற்றம், இயைபு இன்மை, உணர்விழத்தல் ஆகியவை இதனோடு தொடர்புடையது.

தொடர் பயன்பாடு: உளத்தூண்டிகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது பல்வேறு உடலியல், மனவியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் உருவாகலாம்:

 • குறிப்பான உடலியல் மற்றும் மனவியல் பிரச்சினைகள்
 • முதலில் ஏற்பட்டது போல் இல்லாமல் போதைக்காக அதிக அதிகமாக போதைப்பொருளை உட்கொள்ள வேண்டிய நிலை
 • மனக்கலக்கம், மனச்சோர்வு, மனநிலை ஊசலாட்டம், எரிச்சல்
 • குற்றம் புரிதல்
 • உறவுகள் பாதிப்பு
 • அறிவுநிலைப் பிரச்சினைகள் (ஞாபகம், கவனம்)
 • வழக்கமான பணியில், படிப்பில் சிரமம்

இல்லாமல் இருக்கமுடியாத நிலை: அடிக்கடி அதிக அளவில் உட்கொள்ள வேண்டிய நிலை. பிரச்சினைகள் முன்னை விட கடுமையாக இருக்கும்.

 • அதிகமாகப் பயன்படுத்தும் வேட்கை
 • மனக்கலக்கம், எரிச்சல், இரைப்பைக்குடல் கோளாறு, தூக்கப் பிரச்சினைகள்
 • அன்றாடகச் செயல்பாட்டில் பாதிப்பு
 • எவ்வளவு எடுத்தாலும் போதை ஏறாமை
 • குற்றவியல் நடவடிக்கைகள்
 • உறவுகள் பாதிப்பு
 • பிரச்சினைகள் இருந்தாலும் நிறுத்த இயலாமை
 • ஒதுங்குதல் மற்றும் பிடிவாதம்
 • தீங்கு விளைவிப்பதை உணர்ந்தும் தொடர் பயன்பாடு.

ஊசிமூலம் போதை: ஆபத்துகள்:

 • போதை இன்றி இருக்க இயலாமை
 • மிகை அளவுப் பயன்பாடு
 • மன நோய்
 • நரம்புத் தளர்ச்சி
 • தொற்று
 • வீக்கம், புண்கள்
 • மண்டலம் சார் எச்.ஐ.வி. கல்லீரல் அழற்சி-சி

வெவ்வேறு பொருட்களால் உருவாகும் குறிப்பிட்ட சுகாதார மற்றும் பிற பிரச்சினைகள்:

புகையிலைப் பொருட்கள்: புகைத்தல்/சவைத்தல்

 • இது பல நீடித்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கான ஆபத்தான  காரணியும், மிகை இரத்த அழுத்தம், நீரிழிவு, ஆஸ்துமா, நீடித்த நுரையீரல் அடைப்பு நோய் போன்ற பல்வேறு நோய்களின் கடுமையை அதிகரிப்பதுமாய் இருக்கிறது.
 • மறைமுகமாக இதை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு சுவாசத் தொற்று, ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
 • புகைக்கும் கர்ப்பிணிகளுக்கு கருக்கலைவு, முன்சூல்வலிப்பு மற்றும் குறைந்த பிறப்பெடைக் குழந்தை போன்ற ஆபத்துகள் உள்ளன.
 • நுரையீரல், சிறுநீர்ப்பை, மார்பு, வாய், தொண்டை மற்றும் உணவுக்குழல் புற்று நோய்கள் ஏற்படும் அபாயம் புகையிலை பயன்பாட்டில் உள்ளது.

மது அருந்துதல்: மதுப்பழக்கத்தால் ஏற்படும் நோய்கள் பல. பல உடல்நலக் கோளாறுகளையும் ஆபத்தான நடத்தைகளையும் உருவாக்கும். மனநலக் கோளாறுகள், விபத்துக் காயங்கள், கல்லீரல் நோய்கள், பாதுகாப்பற்ற பால்வினை போன்றவை இதில் அடங்கும்.

 • மதுவை அளவுகடந்து அருந்துவதால் அகால நோய்களும், ஊனங்களும், மரணமும் பலவகையான சமூகப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
 • கர்ப்பிணி  மது அருந்துவதால் பிறப்புக் குறை, கல்வி மற்றும் நடத்தைக் கோளாறு மற்றும் மூளை வளர்ச்சி குன்றல் போன்றவை குழந்தைக்கு ஏற்படக்கூடும்.
 • கல்லீரல் மற்றும் கணைய நோய்கள்
 • வாய், தொண்டை, மார்பு புற்று

கஞ்சா: கஞ்சாவை மட்டும் பயன்படுத்துவதால் மரணம் அரிதாகவே ஏற்படும். ஆனால் பிற போதைபொருட்களோடு சேர்த்து உள்ளெடுக்கும் போது அளவு மிகுந்து மரணம் ஏற்படலாம். இதனால் பல எதிர்மறை சுகாதார விளைவுகள் உருவாகக் கூடும்.

கொக்கைன்: இது ஒரு தூண்டி. பல நச்சு ஆபத்துகளும் திடீர் மரணமும் ஏற்படலாம். இது இதயக்குழல் மண்டலத்தைப் பாதிக்கும்.

ஆம்பிட்டாமைன் வகைத் தூண்டிகள்: பல உடல் மற்றும் மன நலப் பிரச்சினைகளுக்கு வழிகோலும்.

உறிஞ்சிகள்: இது மூச்சு வழி உறிஞ்சக் கூடிய கரைசல் அனைத்தையும் குறிக்கிறது.  பெட்ரோல், கரைசல்கள், பசைகள், தெளிப்பிகள், பென்சீன் மற்றும் பசைகள், அரக்குகள், தொலியின் அடங்கிய பூச்சு இளக்கிகள் ஆகியவைப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஒரு கொள்கலனில் இருந்து முகரப்படுகின்றன அல்லது ஒரு நெகிழிப் பையில் இருந்து மூச்சு வழி உறிஞ்சப்படுகின்றன. குமட்டல், வாந்தி, தலைவலி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகியவை இதன் குறுகிய கால பாதிப்புகள். அதிக அளவினால் குழறல், திசையிழப்பு, குழப்பம், மாயத்தோற்றம், பலவீனம், நடுக்கம், தலைவலி போன்றவை ஏற்படும். இறுதியில் இதயச் செயலிழப்பால் ஆழ்மயக்கமும் மரணமும் உண்டாகும்.

அமைதிப்படுத்திகள் மற்றும் தூக்க மருந்துகள்: இம்மருந்துகளைப் பயன்படுத்திப் பழகிய பின் அவற்றை விடுவது என்பது துயர் தருவதாகும்.  கடும் மனக்கலக்கம், பயம், தூக்கமின்மை, மனச்சோர்வு, தலைவலி, வியர்வை, காய்ச்சல், குமட்டல், வாந்தி மற்றும் வலிப்பு ஆகியவை இப்பழக்கத்தை விடும்போது உண்டாகும் அறிகுறிகள்.

மாயத்தோற்ற மருந்துகள்: இவை ஐம்புலன்களில் ஒன்றை பாதித்து மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது.

ஓப்பியம்: தெருவில் கிடைக்கும் அல்லது பரிந்துரைக்கப்படாத ஓப்பியம் மருந்தைப் பயன்படுத்தும் போது பல பிரச்சினைகள் உருவாகும். இவற்றை ஊசி அல்லது புகை மூலமாக எடுக்கும் போது மேலும் பிரச்சினைகள் ஏற்படும்.

குறிப்பு:

apps.who.int/iris/bitstream/10665/44320/1/9789241599382_eng.pdf?ua=1

 

ஆபத்துக் காரணிகள்

குழந்தையைப் பிற்காலத்தில் போதைப்பொருள் பழக்கத்திற்கும் பிற பிரச்சினைகளுக்குள்ளும் தூண்டும் சில ஆபத்துக் காரணிகள் வாழ்க்கையின் வெவ்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் அமைந்தே இருக்கின்றன. பல ஆபத்துக் காரணிகள் ஒன்று திரளும் போக்கைக் கொண்டவை. பல்வேறு ஆபத்துக்காரணிகள்:

பிறப்புக்கு முன்னான காலம்:

கர்ப்பக் காலத்தில் புகைப்பிடித்தலும் மது அருந்துதலும் கருவின் உடலியல், அறிவு வளர்ச்சிகளைப் பாதிக்கும்.

சிசு மற்றும் குழந்தைப்  பருவம்:

குழந்தையின் முதல் ஆண்டில் பாதுகாப்பான பிணைப்பு கிடைக்கவில்லை என்றால் குழந்தை மூர்க்கமாக அல்லது ஒதுங்கி இருக்கும். பிறரோடு பழகுவதில் சிரமம் இருக்கும். கட்டுப்படுத்த முடியாத மூர்க்கம், மோசமான சமூகத் திறனுக்கும் முன்பள்ளிக் கட்டத்தில் பிரச்சினைகளுக்கும் வழிகோலும்.

வகுப்புக் கட்டமைப்புக் குறைபாடு: பள்ளிச் சூழல் கூடுதல் சமூக மற்றும் நடத்தைப் பிரச்சினைகளுக்கு வழிகோலும். இதனால் குழந்தைகள் கல்வி நிலையில் தோல்வி அடையக் கூடும். அதே வேளையில் அவர்களுக்கு அதிக அளவில் போதைப்பொருள் கிடைப்பதற்கும், போதைப்பொருள் எடுப்போருடன் பழகுவதற்கும் போதை உள்ளடங்கிய சமூக நடவடிக்கைகளில் ஈடுபடவும் அதிக அளவில் வாய்ப்புகள் கிடைக்கும். இந்தச் சவால்கள் அவர்களை மது, புகையிலை போன்ற  பிற பொருள்களை நாடவும் தூண்டலாம்.

பெற்றோர் தவறாக நடத்தல் மற்றும் புறக்கணிப்பு:

போதைப் பொருள் பழக்கத்திற்கு இது பொதுவான காரணமாக உள்ளது. இளம் அல்லது முன்னிளம் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் கவனத்தைக் கவர விரும்புகின்றனர். அல்லது அவர்களின் தவறான கையாளலில் இருந்து தப்பிக்கப் போதையை நாடுகின்றனர். பல நாள் போதை மருந்தைப் பயன்படுத்துவதால் போதைப் பழக்கம் ஏற்படுகிறது.

பெற்றோரின் போதைப் பழக்கம்:

பெற்றோரின் போதைப் பழக்க்ம் நேரடியாகவும் மறைமுகமாகவும் குடும்பச் சூழலைப் பாதித்து பெற்றோர் தம் கடமையில் இருந்து விலகச் செய்கிறது. இதகையக் குடும்பங்களில் குழந்தைகளை முறையற்று நடத்துவதும் புறக்கணிப்பும் காணப்படும்.

பெற்றோர் புகைத்தல்: இதனால் குழந்தைகள் மறைமுகப் புகைத்தலுக்கு ஆளாகின்றன்ர். ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு குழந்தைகளும் வளர்ந்த பின் புகைப் பழக்கத்துக்கு ஆளாகும் அபாயமும் ஏற்படுகிறது.

போதைப்பழக்கம் உள்ள ஒத்தவயதினர்: இது ஓர் பெரும் ஆபத்தாக இருக்கும்.

மன நோயும் போதைப் பழக்கத்தை உண்டாக்கலாம்.

மரபியல் காரணிகளும் போதைப் பழக்கத்திற்கு ஆளாக்கலாம்.

இன்பத்திற்காகவும் விரும்பும் விளைவிற்காகவும் பலர் போதைப்பொருளைப் பயன்படுத்துகின்றனர். உடலியல் மற்றும் உளவியல் வலிகளைத் தடுக்கவும் சிலர் பயன்படுத்துகின்றனர். சிலர் தங்கள் சாதனையை அதிகரிக்கவும், விழித்திருக்கவும், எடை குறைக்கவும் போதைப்பொருளைப் பயன்படுத்துகின்றனர்.

போதைப்பொருள் பயன்படுத்தும் முறைகள்:

·         தோலுக்கடியில், நரம்பில் அல்லது தசையில் ஊசிமூலம் செலுத்துதல்

·         புகைத்தல் அல்லது வாய், மூக்கு மூலம் உள்ளிழுத்தல் அல்லது தலையில் பை வைப்பதன் மூலம்

·         சளிச் சவ்வு மூலம்

·         சவைத்தல், விழுங்குதல் அல்லது வாயிலிட்டுக் கரைத்தல்

·         தோலில் தேய்த்தல்

குறிப்புகள்:

www.drugabuse.gov/publications/principles-substance-abuse-prevention-early-childhood/chapter-2

www.drugabuse.gov/publications/preventing-drug-abuse-among-children-adolescents/chapter-1

apps.who.int/iris/bitstream/10665/44320/1/9789241599382_eng.pdf?ua=1

www.emedicinehealth.com/substance_abuse/page3_em.htm

www.unodc.org/pdf/globalinitiative/initiative_activities_workbook.pdf

www.drugabuse.gov/publications/drugs-brains-behavior-science-addiction/drug-abuse-addiction

உலக அளவில் உளவூக்கிகளின் பயன்பாட்டால் பொது சுகாதாரப் பளு அதிகரித்து வருவதைக் கண்ட உலக சுகாதார நிறுவனம், மது, புகை மற்றும் போதைப்பொருள் பாதிப்புப் பரிசோதனையை உருவாக்கியுள்ளது (ASSIST).

 • அசிஸ்ட் பரிசோதனை 5-10 நிமிடங்களில் முடியும். ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு சேவைகளில் சாதாரண ஆலோசனைகளில் இதனை சேர்த்துக் கொள்ளலாம்.
 • புகையிலைப் பொருட்கள், மது, கஞ்சா, கொக்கைன், ஆம்பீட்டாமைன், மயக்கமருந்துகள், தூக்கமருந்துகள், மாயத்தோற்றம் உருவாக்கிகள், உறிஞ்சிகள், ஓப்பியம் போன்ற போதை மருந்துகள் இந்தப் பரிசோதனையில் உள்ளடங்கும்.
 • கடந்த மூன்று மாதங்களாகப் போதை மருந்து பயன்பாடு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து அசிஸ்ட் தகவல் பெறுகிறது.
 • கடும் போதை, தொடர் பயன்பாடு, ஆபத்தான பயன்பாடு, ஊசி மூலம் செலுத்துதல் ஆகிய விவரங்களை  இது இனம் காணுகிறது.
 • ஒவ்வொரு பொருளுக்குமான ஆபத்து மதிப்பீட்டை அசிஸ்ட் தீர்மானிக்கிறது.
 • இவ்வாறு தீர்மானிக்கப்படும் மதிப்பெண் குறைவு, மிதம், அதிக என வகைப்படுத்தப்பட்டுச் சிகிச்சை வரையறுக்கப்படும். சிகிச்சை இல்லை, குறுகிய சிகிச்சை, சிறப்பு மதிப்பீட்டிற்காக நிபுணர்க்குப் பரிந்துரை மற்றும் சிகிச்சை என தீர்மானிக்கப்படும்.

மொத்தத்தில் அசிஸ்டில் அடங்கும் கேள்விகள்:

 • கேள்வி 1 (கே 1): பரிசோதனைக்கு உட்பட்டுள்ள நபரின் வாழ்க்கை காலத்தில் பயன்படுத்தப்படுள்ள போதைப்பொருட்கள் எவை?
 • (கே 2): கடந்த மூன்று மாதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருளின் பயன்பாட்டுக் கால அளவு. இதன் மூலம் உடல்நிலை பற்றிய குறிப்பு கிடைக்கிறது.
 • (கே 3) கடந்த மூன்று மாதங்களில் பயன்படுத்த வேண்டும் என்ற வேட்கை மற்றும் அதன் கால அளவு பற்றி கேட்கிறது.
 • (கே4) கடந்த மூன்று மாதங்களில் போதைப் பொருள் தொடர்பான ஆரோக்கிய, சமூக, சட்டபூர்வ மற்றும் நிதிப்பிரச்சினைகளின் கால அளவு பற்றிக் கேட்கிறது.
 • (கே5) கடந்த மூன்று மாதங்களில் போதைப் பொருள் பயன்பாடு பொறுப்புகளைப் பாதித்தக் கால அளவு.
 • (கே6) ஒவ்வொரு பொருளையும் பயன் படுத்துவது குறித்து யாராவது கவலை தெரிவித்தார்களா மற்றும் அண்மை நிகழ்வு எப்போது?
 • (கே7) பாதிக்கப்பட்ட நபர் எப்போதாவது போதைப்பொருள் எடுப்பைக் குறைக்க அல்லது நிறுத்த முயன்றாரா? அண்மையில் அவ்வாறு எப்போது முயன்றார்?
 • (கே8) பாதிக்கப்பட்ட பர் எப்போதாவது ஊசி மூலம் மருந்து ஏற்றினாரா, அண்மையில் எப்போது நடந்தது?

பரிசோதனையின் நோக்கம் சுகாதாரப் பிரச்சினைகளையும் ஆபத்துக் காரணிகளையும் ஆரம்பக் கட்டத்தில் கண்டறிவது ஆகும். இது ஒரு வகையில் ஒரு தடுப்பு முறையும் ஆகும்.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/10665/44320/1/9789241599382_eng.pdf?ua=1

 

ஒரு தனிநபரின் வாழ்க்கையில் பல்வேறு அம்சங்களைப் பாதிப்பதால் போதைப்பழக்க மேலாண்மை பல்வேறு கூறுகளை உள்ளடக்கியுள்ளது. போதைப்பழக்கத்துக்கான சிகிச்சை ஒருவர் அப்பழக்கத்தை விட்டொழிக்க உதவி, போதைப்பொருள் அற்ற ஒரு வாழ்க்கை முறையைப் பேணவும், குடும்பம், பணி மற்றும் சமூகத்தில் பலனளிக்கும் செயல்பாட்டுக்கு வழிவகுக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டை விட்டொழிக்கவும் பாதிப்பில் இருந்து மீளவும் நீண்டகால பராமரிப்புத் தேவைப்படுகிறது.

பலன் அளிக்கும் சிகிச்சைக்கான கொள்கைகள்:

 • போதைப்பழக்கம் சிகிச்சை அளிக்கக் கூடியது.
 • போதைப்பொருளின் வகை மற்றும் நோயாளியின் இயல்பு ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை வேறுபடும்.
 • சிகிச்சை உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.
 • தனிப்பட்ட போதைப் பொருளுக்கு ஏற்றவகையிலும், தொடர்புள்ள மருத்துவ, உளவியல், சமூக, பணிசார் மற்றும் சட்ட பிரச்சினைகளுக்கு ஏற்பவும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
 • தனிநபர், குடும்ப அல்லது குழு ஆலோசனைகளை உள்ளடக்கிய நடத்தையியல் சிகிச்சையே பொதுவாகப் போதைப் பழக்கத்துக்கு அளிக்கப்படுகிறது.
 • மருந்தளித்தலே சிகிச்சையின் முக்கியக் கூறு ஆகும் (மது, நிகோட்டின், ஹெராயின் அல்லது பிற ஓப்பியப்பொருள்களுக்கு). இதனுடன் ஆலோசனை மற்றும் நடத்தையியல் சிகிச்சை இணைந்து அளிக்கப்படும்.
 • நோயாளிகளின் மாறும் தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சையும் சேவையும் தொடர்ந்து மதிப்பிடப்பட்டு தேவைப்படும் வகையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
 • சிகிச்சையின் தகுந்த கால அளவு நோயாளியின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளின் அளவைப் பொறுத்து அமையும். பொதுவாகப் போதைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கு நீண்ட நாள் பிடிக்கும்.  இதற்குப் பலமுறை சிகிச்சை பெற வேண்டும்.
 •  போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், மருத்துவ மற்றும் உளவியல் நோய் கொண்டவர்கள், பாலியல் தொழிலாளர்கள், சமுக அளவில் விளிம்புநிலைப்படுத்தப்பட்ட மக்கள், கைதிகள் போன்ற துணைக் குழுவினருக்குக் குறிப்பான சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
 • குறிப்பிட்ட மக்கள், அவர்களின் குடும்பங்கள், சமுதாய உறுப்பினர்கள் மற்றும் அவ்வப்பகுதி அமைப்புகள், ஒருவரின் போதைப்பழக்க சிகிச்சையை திட்டமிடல், நடைமுறைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பில் பங்குபெற வேண்டும்.
 • போதைப்பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் அதிகம் நடைபெறுவதால் சிகிச்சை மற்றும் குற்றவியல் துறைகளோடு இணைந்து செய்யப்பட வேண்டும்

குறிப்புகள்:

www.drugabuse.gov/publications/principles-drug-addiction-treatment-research-based-guide-third-edition/preface

apps.who.int/iris/bitstream/10665/44320/1/9789241599382_eng.pdf?ua=1

www.unodc.org/documents/drug-treatment/UNODC-WHO-Principles-of-Drug-Dependence-Treatment-March08.pdf

 

போதைப்பொருளின் வகை மற்றும் பயன்படுத்தப்பட்டக் காலத்தைப் பொறுத்துப் பாதிப்பு காணப்படும். போதைப் பொருள் பயன்பாட்டுக்குப் பின் பிரச்சினையின் கடுமையில் பின்வரும் காரணிகளின் தாக்குறவு இருக்கும்.

வயது:  இளைஞர்களிடமும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோரிடமும் இதன் பாதிப்பு அதிகம்.

ஊட்டச்சத்து நிலை மற்றும் வாழும் முறை: உணவின் மோசமான தரம் மற்றும் தேவைக்குக் குறைந்த அளவு, சுகாதாரமற்ற வாழ்வு, மற்றும் சுகாதாரப் பராமரிப்பு சரிவர கிடைக்காத நிலை ஆகியவை போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்பட்டப் பிரச்சினைகளை அதிகரிக்கின்றன.

போதைப்பழக்கத்துக்கு முந்திய சுகாதார நிலை: போதைப்பழக்கத்துக்கு முன்னால் உடல்நிலை நல்ல நிலையில் இருந்தவர்களுக்கும் அப்படி இல்லாதவர்களை விட பாதிப்பு குறைவாக  இருக்கும்.

மரபியல் காரணிகள்: குடும்பத்தில் குறிப்பிட்ட மருத்துவ மற்றும் உளவியல் பிரச்சினைகள் ஒருவரை அதே பிரச்சினைக்கு ஆளாகும் நிலையை அதிகமாக உருவாக்குகிறது.

போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் மருத்துவ மற்றும் உளவியல் சிக்கல்கள்:

அ) போதையால் ஏற்படும் பிரச்சினைகள்

 • காயம் அல்லது பிற உடலியல் பாதிப்புகள்: போதைப்பொருளால் ஏற்படும் மனநிலை பாதிப்பு வன்முறைக்கு வழிகோலும்.
 • போதையோடு வாகனம் ஓட்டுதல் அல்லது இயந்திரங்களை இயக்குதல் விபத்துக்களையும் காயத்தையும் ஏற்படுத்தலாம்.
 • மோசமான கணிப்பு மற்றும் ஒத்திசைவு உடலியல் காயத்தையும் மரணத்தையும் உருவாக்கும்.
 • கண்ணோட்டக் கோளாறுகள் விபத்துக்களை உருவாக்கும்.
 • கடும் போதை எதிர்வினை
 • ஆழ்மயக்கம் மற்றும் போதை மிகைப்பு மரணம்

ஆ) போதை விடுபடல் பிரச்சினைகள்: போதைப் பழக்கத்தை விடும்போது பல்வேறு அளவிலான உடலியல் அறிகுறிகள் தோன்றும்.

இ) போதையால் ஏற்படும் உளவியல் கோளாறுகள்: கஞ்சா போன்ற போதைப் பொருட்களால் உளவியல் கோளாறுகள் ஏற்படும்.

ஈ) போதையால் ஏற்படும் மண்டலம்சார் கோளாறுகள்:

தோல்சார்ந்த சிக்கல்கள்:

 • ஊசி மூலம் போதைப்பொருளைச் செலுத்த ஒரே நரம்பையே பயன்படுத்தும்போது ஊசிப்பாதைகள் என்ற கறுப்புக் கோடுகள் உண்டாகின்றன.
 • ஊசித்துளையில் வடு
 • தொற்றுள்ள ஊசியால் தொற்று ஏற்படுதல்
 • தோல் அரிப்பு தோல் அழற்சி

இதயக்குழல் சிக்கல்கள்:

 • இதயத் தொற்று
 • இரத்த ஓட்டம் அடைப்பு: ஒரே இடத்தில் ஊசி இடுவதால் இரத்த உறைவு அல்லது காற்றுக் குமிழ் உருவாகி இரத்த ஓட்டம் தடைபடலாம்.
 • கீழறை நார்ப்படுதல்: குருதிக்கசிவுக்கும் திடீர் மரணத்திற்கும் வழிகோலும்.

கல்லீரல் சிக்கல்கள்

 • கல்லீரல் அழற்சி: கல்லீரலழற்சி பி, சி மற்றும் டி ஆகியவை இரத்தத் தொற்றுக்கள். இவை ஊசி பகிர்தல் மூலம் பரவும்.
 • மது கல்லீரல் அழற்சி
 • கல்லீரல் கொழுப்பு
 • மது கல்லீரல் நாரழற்சி
 • கல்லீரல் காயம்

இனப்பெருக்க மண்டல சிக்கல்கள்:

 • போதைப் பழக்கம் உள்ளவர்களிடையில் பால்வினை நோய்கள் அதிகம்.
 • போதைப் பால்வினை நாட்டத்தைக் குறைத்து ஆண்மையிழப்பை உருவாக்கும்.
 • போதைப்பொருள் பயன்படுத்தும் பெண்களுக்குக் கருமுட்டை உற்பத்திக் குறைவும் அசாதாரண மாதவிலக்குச் சுழற்சியும் காணப்படும்.
 • கர்ப்பக் காலத்தில் மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் குழந்தைகள் பிறப்பெடை குறைந்தும் உடல் மற்றும் அறிவு வளர்ச்சியில் பிரச்சினைகளோடும் பிறப்பர்.

நரம்புத்தசை சிக்கல்கள்

 • மூளைக்குழல் விபத்துகள்
 • முதுமைமறதி
 • நரம்பழற்சி
 • நுண்ணுயிரி மூளையழற்சி

குருதியாக்கச் சிக்கல்கள்

 • குருதியில் தட்டணுக்குறைபாடு குருதிக்கசிவுக் கோளாறுகளை ஏற்படுத்தும்.
 • எலும்பு மச்சை அழுந்துதல்: சிவப்பு மற்றும் வெள்ளை அணு எண்ணிக்கைக் குறையலாம்.
 • மது அருந்துவோரிடை ஊட்டச்சத்துக் குறைபாடு இரத்தச் சோகையை உருவாக்கலாம்.

நாளமிலாச்சுரப்பி மண்டலக் கோளாறுகள்

 • கஞ்சா, ஓப்பியம் மற்றும் மது உடலில் ஆண்மையியக்குநீர் அளவைக் குறைக்கும்.
 • மது அருந்துவோர்க்கு நீரிழிவு நோய் உருவாகும்

சிறுநீரகச் செயல்திறன் கோளாறுகள்:

 • சிறுநீரக அணுச் சிதைவால் சிறுநீரக நோய் உருவாகும்.

இரைப்பைக்குடல் கோளாறுகள்

 • மோசமான உணவு முறை மற்றும் போதைப் பழக்கத்தால் வயிற்றுறை அழற்சி மற்றும் குடல்புண் உருவாகும்.
 • கணைய அழற்சி
 • மது அருந்துவோரிடை இரைப்பைக் குடல் பாதைப் புற்று காணப்படும்.

புற்று:

மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் புற்று ஆபத்து அதிகம்.

குறிப்புகள்:

www.unodc.org/pdf/india/publications/DAIIM_Manual_

www.who.int/substance_abuse/facts/alcohol/en/

 

 

உலக சுகாதார நிறுவனம் போதைப்பொருள் பயன்பாட்டுத் தடுப்பை முதன்மைத் தடுப்பாகப் பரிந்துரைத்துள்ளது. ஆரம்பக்கட்ட சிகிச்சை, பராமரிப்பு, மறுவாழ்க்கை மற்றும் சமூக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் இதில் அடங்கும். போதைப்பொருள் பயன்பாட்டின் சமூக விளைவுகளைக் குறைக்கக் கவனம் செலுத்தப்படுகிறது.

 • போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுத்தல் மற்றும் ஆபத்தைக் குறைத்தல் பின்வரும் கோளாறுகளில் சிறந்த விளைவுகளைக் கொண்டுவர முக்கிய அணுகுமுறை ஆகும்:
 • போதைப்பொருள் தூண்டிய மனநலக் கோளாறுகளைத் தடுத்தல்
 • காயம் மற்றும் வன்முறைகளைக் குறைக்க (போக்குவரத்து மற்றும் குடும்பத்தில் நிகழும் காயங்கள், குழந்தைகளை முறைதவறி நடத்துதல், பாலின, பால்வினை மற்றும் பிற வன்முறைகள்).
 • எச்.ஐ.வி., வைரல் கல்லீரல் அழற்சி, காசநோய், பால்வினை மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான நோய்கள் (பால்வினைத் தொற்று, திட்டமிடாத கர்ப்பம் மற்றும் சிக்கலான கர்ப்பம்) போன்ற தொற்றுநோய்களைத் தடுத்தல்.
 • பரவா நோய்களைத் தடுத்தல் (புற்று, இதயக்குழல் நோய்கள் மற்றும் கல்லீரல் நோய்கள்)

போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க:

 1. பலன் அளிக்கும் முதன்மைத் தடுப்பு நடவடிக்கைகள் (குழந்தைகள், இளைஞர்கள்):
 • போதைப்பொருளின் ஆபத்தை பற்றித் துல்லியமான தகவல்களைத் தெரிவித்தல்
 • ஆதரவளிக்கும் பெற்றோர் மற்றும் ஆரோக்கியமான சமூகச் சூழலைக் கட்டுதல்.
 • ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்துகொள்ளத் திறன் மற்றும் வாய்ப்புகளை அளித்தல்.
 • கல்வி மற்றும் பணிப் பயிற்சிக்கான சம அணுக்கம்.

குழந்தைகளைப் போதைப் பயன்பாடு மற்றும் பிற ஆபத்தான நடவடிக்கைகளில் இருந்து காக்க குடும்பமே வலிமையான அமைப்பு. சிறந்த முறையில் தொடர்புகளைப் பேணி ஆரோக்கியமான சூழலைக் குழந்தைகளுக்கு வழங்கும் குடும்பம் அவர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கின்றன.

 போதைப் பழக்கத்துக்கு வழிகோலும் சூழல்களை எதிர்கொள்ளும் திறனையும் அறிவையும் மாணவர்களுக்குப் புகட்டுவதில் பள்ளிகள் சிறந்த பங்காற்ற முடியும். பள்ளிக்கு வெளியில் இருப்பவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே தெருக்களில் நடைபெறும் முயற்சிகளும் உதவி செய்யும்.

பணியிடங்கள்: போதைப் பொருள் பழக்கத்தைத் தடுப்பதிலும் அப்பழக்கம் இருப்பவர்களுக்கு அதை விலக்க உதவுவதிலும் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

 1. கடுமையான போதைப் பழக்கம் உள்ளவர்களை இனம் கண்டு நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
 2. போதையோடு வாகனம் ஓட்டுதலால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கொள்கை உருவாக்குவோர் இது பற்றிய சட்டங்களை அமுல் படுத்தி இதைத் தடுக்கலாம். இத்தகைய ஓட்டுநர்களுக்கு ஆலோசனையும் வழங்க வேண்டும். போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டுநர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும்.
 3. மக்கள் ஊடகம்: போதைப்பொருள் பயன்பாட்டைக் குறைப்பதில் ஊடகங்கள் பெரும்பணி ஆற்ற முடியும். போதையால் விளையும் ஆப்த்துகளைப் பற்றிய விழிப்புணர்வை ஊடகங்கள் ஏற்படுத்தலாம்.

போதைப்பொருள் பயன்பாடு தடுப்போடு தொடர்புடையத் தேசியத் திட்டங்கள்:

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் சமூகநீதி மற்றும் அதிகாரப்படுத்தல் அமைச்சகங்கள் போதைப்பொருள் பயன்பாட்டுக் குறைப்பு மற்றும் போதை அகற்றல் திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு மாவட்ட மருத்துவ மனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் உளவியல் பிரிவுகளின் துணையோடு போதை அகற்றல் மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல்கள் நிறுவனம் “தேசியப் போதைப்பழக்கம் சிகிச்சை மையமாக” செயல்படுகிறது.

மின் – சுகாதார வலைத்தள அடிப்படையிலான திட்டங்கள்: தில்லி எய்ம்ஸ்ஸால் செயல்படுத்தப்படும் மது மின் –உதவி

(alcoholwebindia.in/intervention) மற்றும் சுகாதார அமைச்சகத்தின் எம்-நிறுத்தத் திட்டம் (nhp.gov.in/quit-tobacco),

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம்: ஊசி சிரிஞ் திட்டம், ஓப்பியம் பதிலீடு திட்டம் போன்ற பலதிட்டங்களை சுகாதார அமைச்சகம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

சமூகநீதி அமைச்சகம், மது மற்றும் போதைப்பொருள் பழக்கத் தடுப்புக்கான மத்தியத் துறை உதவித் திட்டத்தை உருவாக்கியுள்ளது.

வருவாய்த் துறை, போதைப் பொருட்கள் மற்றும் உளவியல் பொருட்கள் சட்டம் 1985 மற்றும் போதை மற்றும் உளவியல் பொருட்கள் தடுப்புச் சட்டம் 1988 ஆகியவற்றை அமுல்படுத்தும் அமைப்பாக விளங்குகிறது.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு, உள்துறை அமைச்சகம்

என்.டி.பி.எஸ் சட்டத்தை அமுல்படுத்தும் அமைப்பு.

இளைஞர்களுக்குப் போதைப்பொருள் தடுத்தலுக்கான குறிப்புகள்

 • வேண்டாம் என்று சொல்ல அஞ்ச வேண்டாம்
 • உங்கள் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு எதிர்மறையான சகவயதினர் அழுத்தத்தைத் தவிர்க்கவும்
 • பெற்றோர் அல்லது பிற பெரியோருடன் தொடர்பு கொள்ளவும்.
 • போதைப்பொருள் மது பற்றிய அறிவைப் பெறவும்

குறிப்புகள்:

apps.who.int/gb/ebwha/pdf_files/WHA69/A69_12-en.pdf?ua=1

www.who.int/substance_abuse/activities/global_initiative/en/

www.unodc.org/docs/youthnet/Brochures/Families_First_Brochure.pdf

www.unodc.org/pdf/youthnet/handbook_school_english.pdf

www.unodc.org/unodc/en/prevention/workplaceprevention.html

apps.who.int/iris/bitstream/10665/249533/1/WHO-MSD-NVI-2016.01-eng.pdf?ua=1

mohfw.nic.in/index1.php?lang=1&level=0&linkid=229&lid=1353

www.dtc-scheme.in/pdf/scheme-document.pdf

naco.gov.in/sites/default/files/Opiod%20Substitution%20Therapy%20Guideline.pdf

socialjustice.nic.in/writereaddata/UploadFile/sch-drug-1115635790509608217343.pdf

dor.gov.in/sites/upload_files/revenue/files/NationalPolicyonNDPS.pdf

www.unodc.org/documents/drug-prevention-and-treatment/UNODC_2016_

www.ncadd.org/about-addiction/underage-issues/ten-tips-for-prevention-for-youth

 

 

 

 • PUBLISHED DATE : Jan 31, 2019
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Jan 31, 2019

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.