ராம்சே-ஹண்ட் நோய்த்தாக்கம்

ராம்சே-ஹண்ட் நோய்த்தாக்கம் அல்லது ஹெர்ப்பஸ் ஜோஸ்ட்டர் காதுநோய் என்ற நோய்த்தாக்கத்தில் காதுவலி, கண்ணறை அக்கி நுண்கொப்புளங்களுடன் முக முடக்கு வாதமும் காணப்படும். முக முடக்கு வாதத்துக்கான இரண்டாவது பொதுவான காரணம் இந்நோயே. சின்னம்மை தொற்றுக்குப் பின் கணுநரம்புமுடிச்சில் உள்ளுறைந்து இருக்கும் வேரிசெல்லா ஜோஸ்ட்டர் வைரசு மறுவினையாக்கம் புரிவதால் இது நிகழ்கிறது. கடுமையான காதுவலியும் ஒருபக்க முகமுடக்கு வாதமும் இதனால் ஏற்படும். முதலில் இல்லாவிட்டாலும் கண்ணறைக் கொப்புளம்  மூன்றில் இருந்து ஐந்து நாட்களுக்குள் ஏற்படும். நுண்கொப்புளங்கள் பின்காது தோல், காதுமடல், உட்புறமடல், காதுப்பாதை மற்றும் செவிப்பறைப் படலத்தில் உண்டாகும். அரிதாக இது கழுத்து, தோள் அல்லது வாய்வழியையும் பாதிக்கும். முக நரம்புகளோடு இது பிற மண்டை நரம்புகளையும் பாதிக்கலாம்.

முதன்முதலில் 1907-ஆம் ஆண்டு ராம்சே-ஹண்ட், காது வலியோடு, தோல் மற்றும் சளிச்சவ்வுக் கொப்புளங்கள் கொண்ட ஒரு நோயாளியிடம் ஹெர்ப்பஸ் ஜோஸ்ட்டர் காதுநோயைக் கண்டறிந்தார். இது கணுநரம்புமுடிச்சில் வேரிசெல்லா ஜோஸ்ட்டர் வைரசு (மனித அக்கி வைரசு வகை 3) தொற்றால் ஏற்பட்டதை அறிந்தார். இந்த நோய்த்தாக்கம் கணுநரம்பு நோய் அல்லது இடை நரம்பு நோய் என்றும் அழைக்கப்படும்.

முகமுடக்குவாதத்தோடு ஒப்பிடுகையில் இதன் அறிகுறிகள் அதிகக் கடுமையானவையாகும். மேலும் நோய்முன்கணிப்பும் மோசமானதாக இருக்கும். முழு முகமுடக்கு வாதத்துக்கான ஆபத்தும் அதிகமாகும்.  செவித்தலைவாயில் மற்றும் செவி செயலிழப்பு நோய்முன்கணிப்பும் மோசமே. நீரிழிவு, இரத்தமிகை அழுத்தம் மற்றும் வயது முதிர்ச்சி கொண்டவர்களுக்கும் முன்கணிப்பு மோசமாகவே இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் மற்றும் நரம்பு பலவீனம் உள்ளவர்களுக்கு இருபுற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பதிவுகள் உள்ளன.

V, VI, VIII, IX, மற்றும் X நரம்புநோய்களும் இந்நோயுடன் தொடர்புடையவையே.

குறிப்புகள்

Gross G, Doerr HW. Herpes Zoster- Recent Aspects of Diagnosis and Control. S Karger AG, P.O. Box, CH 4009 Basel (Switzerland) 2006. P 47- 57.

Brackmann Derald E, Shelton Clough, Arriaga Moisés A. Otologic Surgery Third Edition. Saunders, an imprint of Elsevier Inc. 2010. P 338- 346.

Dickson Gretchen, Kellerman Rick. Primary Care: Clinics in Office Practice Volume 41, Number 1- Primary Care ENT. Elsevier Inc. 2014. P 137- 138.

Roos Karen L. Emergency Neurology. Springer Science+Business Media, LLC 2012. P 133- 142.

Adams James G, Barton Erik D, Collings Jamie, DeBlieux Peter M C, Gisondi Michael A, Nadel Eric S. Emergency Medicine Clinical Essentials Second Edition. Saunders, an imprint of Elsevier Inc. 2013. P 824- 827.

Denniston Alastair K O, Murray Philip I. Oxford Handbook of Ophthalmology Third Edition. Oxford University Press 2014. P 707.

Tandon Praksh Narain, Ramamurthi Ravi. Ramamurthi and Tandon’s Textbook of Neurosurgery Third Edition Vol 1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2012. P 831- 832.

Washington Tabitha A, Brown Khalilah M, Fanciullo Gilbert J. Pain. Oxford University Press 2012. P 69- 73.

https://emedicine.medscape.com/article/1166804-overview

http://www.jaypeejournals.com/eJournals/ShowText.aspx?ID=3041&Type=FREE&TYP=TOP&IN=&IID=235&isPDF=YES

 

 

வயது முதிர்ந்தவர்கள் அல்லது நோய்த்தடுப்புத்திறன் பலவீனமானவர்கள் இந்த நோயால் பொதுவாகப் பாதிக்கப்படுவர். ஆனால் மன அழுத்தம் கொண்ட இளைஞர்களையும் இந்நோய் பாதிக்கலாம்.

அறிகுறிகளில் அடங்குவன:

 • நுண்கொப்புளங்கள் ஏற்படும் முன் அடுத்தடுத்து ஆழ் காதில் கடும் வலி
 • காதுபாதிப்பு
 • தலைச்சுற்று
 • முக நரம்பு வாதம்
 • மூன்றில் இரு பங்கு முன்பகுதி நாக்கில் உணர்திறன் இழப்பு
 • விழிநடுக்கம்

 

 

கணு நரம்பு முடிச்சில் தேங்கி இருக்கும் வேரிசெல்லா ஜோஸ்ட்டர் வைரசு மறுவினையாற்றுவதால் ராம்சே-ஹண்ட் நோய்த்தாக்கம் ஏற்படுகிறது.

வேரிசெல்லா ஜோஸ்ட்டர் வைரசால் ஏற்படும் முதன்மைத் தொற்று குழந்தைகளுக்கு ஏற்படும் சின்னம்மைத் தொற்றாகும். இந்த வேரிசெல்லா ஜோஸ்ட்டர் வைரசு மண்டை நரம்பு மற்றும் பின் வேர் நரம்புமுடிச்சில் செயலற்று இருக்கும். மன அழுத்தங்களின் போது இவை மறுவினையாற்றுவதால் கடும் வலியும் நுண்கொப்புளங்களும் கொண்ட அக்கி ஜோஸ்ட்டர் தொற்று ஏற்படுகிறது.

ராம்சே-ஹண்ட் தொற்றில், நோயாளிக்கு கடும்வலியும் சளிச்சவ்வு மற்றும் தோல் புண்களும் உண்டாகின்றன. முக நரம்பின் கணு நரம்புமுடிச்சில் தொற்று ஏற்படுவதால் இது நிகழ்கிறது.

 

 

கடும்வலி, நுண் கொப்புளங்கள் மற்றும் முகமுடக்கு வாதம் ஆகிய மருத்துவ நிகழ்வுகளைக் கொண்டு ராம்சே-ஹண்ட் நோய்த்தாக்கம் கண்டறியப்படுகிறது.

நுண்கொப்புளங்கள் ஏற்படுவதற்கு ஒரு அல்லது இரு வாரங்களுக்கு முன்னர் களைப்பு ஏற்படும். பின்னர் காதுமடலின் உட்புறம் அல்லது புற கேட்பு பாதையில் கொப்புளங்கள் உருவாகி புண்ணாகும்.

நேர்வுக்கு நேர்வு மருத்துவ ரீதியான வெளிப்பாடு மாறும். காதைச் சுற்றி வலி, கொப்புளம், மண்டை நரம்பு பாதிக்கும் செயலிழப்பு போன்றவை காணப்படும்.

திசுவியல்:

வேரிசெல்லா ஜோஸ்ட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட மண்டை நரம்பு முடிச்சில் வீக்கமும் அழற்சியும் இருக்கும். அழற்சி பொதுவாக நிண உயிரணுக்கள் சார்ந்ததாக இருக்கும். சில நரம்பு முடிச்சுகள் வீக்கத்தையும் பிற சிதைவுற்றும் காணப்படும்.

ஆய்வுகள்:

 • காந்த ஒத்திசைவு பிம்பம் (எம் ஆர் ஐ): முக நரம்பின் பெரும்பகுதி அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. அடிக்கடி, நடுச்செவிப்பறை மற்றும் உட்காதுச்சுருள்குழாய் நரம்பு, சுருள்புழை, அக கேள்விக் குழாய் வெளிப்படலம் ஆகியவையும் அதிகரிப்பைக் காட்டலாம்.
 • மூளைத்தண்டு கேட்டல் தூண்டும் எதிர்வினை: சில அலைகளின் உள்ளுறைவையும் பிறவற்றில் இடைச்சிகர உள்ளுறைவையும் காட்டுகிறது.
 • உமிழ்நீர்: உமிழ்நீரில் வேரிசெல்லா ஜோஸ்ட்டர் வைரசின் அளவு, முகநரம்பு மற்றும் வாய்த்தொண்டை மேற்திசுவில் மறுவினையாக்கத்தைப் புரிந்து கொள்ள உதவுகிறது.
 • மூளைத்தண்டுவடத் திரவம்: இந்த வைரசைக் கண்டறிய சிஎஸ்எஃபின் நிகழ்நேர பாலிமரேஸ் தொடர் எதிர்வினைச் (பிசிஆர்) சோதனை செய்யலாம்.

தொடர் பிம்ப சோதனைத் தேவை இல்லை. மின்-கண்டறிதல் ஆய்வுகளும் கூட நம்பத்தக்கவையல்ல.

வேறுபடுத்திக் கண்டறிதல்

முதலில் வேறுபடுத்திக் காணவேண்டியது முகநரம்பு நோய் மற்றும் பக்கவாதம் ஆகும். பக்கவாதம் இல்லை என உறுதியான உடன் பெல்ஸ் வாதம் மாற்றும் முக முடக்கு வாதத்தின் இரண்டாம் கட்ட காரணங்களில் இருந்து வேறுபடுத்திக் காண வேண்டும். முக நரம்பு நோய்களில் 70% பெல்ஸ் வாதத்தால் ஏற்படுகின்றன. ராம்சே-ஹண்ட் நோய்த்தாக்கம் இரண்டாம் பெரிய காரணம் ஆகும். பெல்ஸ் வாதத்தில் இருந்து வேறுபடுத்திக் காண புறக்காதுப்பாதை, வாய் மற்றும் நாக்கில் கொப்புளங்கள் உள்ளனவா என காண வேண்டும்.

வேறுபடுத்திக் காண வேண்டிய பிற கோளாறுகள்:

 • லைம் நோய்
 • குயிலன் பரே நோய்த்தாக்கம்
 • மூளைக்காய்ச்சல்
 • எச் ஐ வி தொற்று

 

மேலாண்மையில் அடங்குவன:

மருத்துவ சிகிச்சை

ஊக்கி மற்றும் எதிர்வைரல் மருந்து சேர்க்கை: இதன் மூலம் சீர்பெறும் விகிதம் அதிகரிக்கும். நோய் ஏற்பட்டு மூன்று நாட்களில் இதன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்ட நோயாளிகளில் 75% முழுமையாகக் குணமடைந்ததாக ஓர் ஆய்வு கூறுகிறது. ஆனால் ஏழு நாள் கழித்து சிகிச்சை பெற்றவர்களில் 30 சதவீதமே குணம் அடைந்தனர். வலியும் படிப்படியாக முக அசைவும் சீரடைந்தன. நரம்புத் தளர்வு பரவலாக இருப்பதால் அறுவை மூலம் அழுத்தம்நீக்கல் இந்நோய்க்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

நோய்முன்கணிப்பு

நோய் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் சிகிச்சை அளித்தால் முழுக்குணம் அடையும். தோல் அறிகுறிகள் இல்லாமல் இருந்தால், வலி, கேள்திறன் இழப்பு, தலைசுற்றல் மற்றும் முகமுடக்குவாதம் இருந்தால் ராம்சே-நோய்த்தாக்கம் இருக்கலாம்.

 

 

 • PUBLISHED DATE : Mar 05, 2019
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 05, 2019

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.