ஒத்தப்பார்வையின்மை

இரு கண்களிலும் சமமற்ற ஒளிவிலகல் காணப்படும் நிலையே ஒத்தப்பார்வையின்மை எனப்படும். கோள ஒளிவிலகல் பிழை (கிட்ட அல்லது எட்டப் பார்வை) பெரும்பாலானோர்க்கு இரு கண்களிலும் பொதுவாக ஒரே அளவாகவே இருக்கும். இரு கண்களுக்கும் இடையில் விலகல் வேறுபாடு 1.0 டயாப்டர்கள் (டி) அல்லது அதிகம் இருந்தால் ஒத்தப்பார்வையின்மை உள்ளதாகக் கருதப்படும். விலகல் பிழையின் அளவீட்டு அலகு டயாப்டர் (டி) ஆகும். இது மீட்டர் அளவில் குவிய தூரத்தின் தலைகீழ் விகிதம் என வரையறுக்கப்படுகிறது. பெரும்பாலும் அறிகுறிகள் இன்றி காணப்படுவதால் இதுவே மிக மெதுவாக உருவாகும் விலகல் கோளாறு ஆகும். ஒரு கண் கிட்டப்பார்வையுடனும் மறு கண் தூரப்பார்வையுடனும் இருந்தால் எதிர்விழிவிலகல் என்ற சொல் பயன்படுத்தப்படும்.

அனிசோமெட்ரோப்பியா (ஒத்தப்பார்வையின்மை) என்ற சொல் அனிசோஸ் (சமமற்ற), மெட்ரொன் (அளவு) மற்றும் ஆப்ஸ் (பார்வை) என்ற சொற்களில் இருந்து உருவானது ஆகும்.

எட்டப்பார்வைத் தெளிவு: கண்ணில் விலகல் பிழை இல்லாத நிலை. எட்டப்பார்வைக்கு எந்த சீரமைப்பும் தேவையற்ற நிலை. வெண்படலத் திறன், விழிவில்லைத் திறன், விழிக்கோளத்தின் அச்சு நீளம் ஆகிய மாறிகளைப் பொறுத்து பெரும்பாலும் விழியின் விலகல் திறன் தீர்மானிக்கப்படுகிறது. எட்டப்பார்வைத் தெளிவு நிலையில் விலகல் திறனின் இந்த மூன்று கூறுகளும் இணைந்து கண்ணின் இயல்பான விலகலை உருவாக்குகின்றன. பார்வை அச்சுக்கு இணையான ஒளிக் கதிர்கள் விழித்திரையில் குவிகின்றன. எட்டப்பார்வைத் தெளிவுநிலையின் தூரப் புள்ளி (இணங்கா நிலையில் விழித்திரையுடன் இணைந்திருக்கும் புள்ளி) பார்வை முடிவிலி ஆகும், அதாவது 6 மீட்டர்கள். வெண்படலமும் விழிவில்லையும் ஒளிக் கதிர்களைப் போதுமான அளவுக்கு குவிக்க இயலாத போது விலகல் பிழை ஏற்படுகிறது.

கண்ணின் ஒளி உணர் அடுக்கில் ஒளி சரியாகக் குவிக்கப்படாத போது விலகல் பிழை ஏற்பட்டு பார்வை மங்கும். இது ஒரு பொதுவான கண் பிரச்சினையே. இதில் கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, சிதறல்பார்வை, வெள்ளெழுத்து ஆகியவை அடங்கும்.

விலகல் கிட்டப்பார்வை அல்லது எட்டப்பார்வையால் ஏற்படும் ஒத்தப்பார்வையின்மை, விலகல் ஒத்தப்பார்வையின்மை எனப்படும்; அச்சு விலகல் பிழையால் ஏற்படுவது அச்சுசார் ஒத்தப்பார்வையின்மை எனப்படும். ஒரு மைய அச்சின் வழியாக  உண்டாகும் விலகல் பிழை வேறுபாட்டின் காரணமாக உருவாகும் விலகல் பிழை, மைய அச்சு ஒத்தப்பார்வையின்மை என அழைக்கப்படும்.

கிட்டப்பார்வை ஒத்தப்பார்வையின்மையில்  பார்வைக் கூர்மை இரு கண்ணிலும் இயல்பை விடக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். மிகையாக கிட்டப்பார்வை இருந்தால் அதற்கு ஏற்பப் பார்வைக் கூர்மை மோசமாக இருக்கும். இருப்பினும், கிட்டப்பார்வை குறைவாக இருக்கும் கண்ணில் (-0.25 அல்லது 0.50 டி) பார்வைக் கூர்மை தேவையான அளவுக்கு சிறப்பாக இருக்கும். இதனால், கிட்டப்பார்வை அதிகமாக உள்ள கண்ணின் பார்வைக் கூர்மை மிக மோசமாக இருந்தாலும், நோயாளிக்குப் பிரச்சினை இருப்பதே தெரியாது. 

எட்டப்பார்வை ஒத்தப்பார்வையின்மையில், நோயாளிக்குப் போதுமான அனுசரிப்புத் தன்மை இருக்கும் வரையில் இரு கண்களிலும் பார்வைக் கூர்மை ஒப்பீட்டளவில் சிறப்பாக இருக்கும்.

கிட்டப்பார்வை, எட்டப்பார்வை   ஒத்தப்பார்வையின்மைகளிலும் எதிர்விழிவிலகலிலும் கண்களைப்பு ஏற்படுவதில்லை. எனவே வழக்கமான கண்பரிசோதனையின் போதே நோய் கண்டறியப்படும். இருப்பினும், ஒரே நேரத்தில் குவிவதில் சிரமம் இருப்பதால் எட்டப்பார்வை ஒத்தப்பார்வையின்மை நோயாளிகளில் சிலருக்கு கண்களைப்பு உண்டாகலாம்.

இரு கண்களுக்கும் சமமான அனுசரிப்புத் தன்மை உண்டு. இதனால் ஒத்தப்பார்வையின்மையைச் சரிசெய்யாவிட்டால் இரு விழித்திரைகளிலும் ஒருபோதும் பிம்பம் கூர்மையாகக் குவிக்கப் படுவதில்லை. உதாரணமாக, ஒரு கண்ணில் 0.25 டி கிட்டப்பார்வையும், மறுகண்ணில் 3 டி கிட்டப்பார்வையும் கொண்ட ஒருவருக்கு  ஒரு கண்ணில் 4 மீட்டர் தொலைவில் இருக்கும்  பொருளும் மறுகண்ணில் 33 செ.மீ. தொலைவில் இருக்கும் பொருளும் கூர்மையாகக் குவிக்கப்படும். இதனால் அவர் குறைந்த கிட்டப்பார்வை உள்ள கண்ணை தூரத்தில் பார்க்கவும் அதிகக் கிட்டப்பார்வை உள்ள கண்ணை அருகில் பார்க்கவும் பயன்படுத்துவார்.  இருகண் பார்வை மோசமாக இருந்தாலும் இத்தகைய நபருக்கு பிற்காலத்தில் இருகுவிய வில்லை தேவைப்படுவதில்லை.

மாறாக, ஒரு கண்ணில் 0.25 டி எட்டப்பார்வையும், மறுகண்ணில் 3 டி எட்டப்பார்வையும் கொண்ட ஒருவருக்கு சிரமம் கூடுதலாக இருக்கும்.  0.25 டி அனுசரிப்பு மட்டுமே தேவைப்படும் தொலைவுப் பார்வைக்கு குறைந்த எட்டப்பார்வை உள்ள கண் பயன்படுத்தப்படும். இருப்பினும், அதிக எட்டப்பார்வை கொண்ட கண்ணுக்கு தூரத்தில் பார்க்க 3 டி அனுசரிப்பும் 40 செ.மீ தொலைவு வாசிப்புக்கு 5.50 டி அனுசரிப்பும் தேவைப்படும்.  இதனால், குறைந்த எட்டப்பார்வைக் கண்ணுக்கு ஒருபோதும் கூர்மையாகக் குவிந்த பிம்பம் கிடைப்பதில்லை.  இதனால் விரைவிலேயே காரணமற்ற சீர்செய்ய இயலாத பார்வைக் கூர்மை உருவாகும்.

குறிப்புகள்:

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Aliό Jorge L, Pandey Suresh K, Agarwal Amar. Textbook of Ophthalmology Vol 1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2002. P 182- 183.

Khurana AK. Theory and Practice of Optics and Refraction Second Edition. Reed Elsevier India Private Limited 2008. P 83- 86.

Khurana AK. Comprehensive Ophthalmology Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2015. P 18- 19.

Grosvenor Theodore. Primary Care Optometry Fifth Edition. Butterworth Heinemann Elsevier 2007. P 20.

Rosenfield Mark, Logan Nicola, Edwards Keith. Optometry- Science, Techniques and Clinical Management Second edition. Butterworth Heinemann Elsevier 2009. P 362- 363.

Duckman Robert H. Visual Development, Diagnosis, and Treatment of the Pediatric Patient. Lippincott Williams & Wilkins, a Wolters Kluwer business 2006. P 357- 364.

Douthwaite WA. Contact Lens Optics and Lens Design. Elsevier Butterworth Heinemann 2006. P 22- 23.

Garg Ashok, Aliό Jorge L, Campos-Campos Laura Elena, Prost Ewa Oleszczynska, Pajic Bojan, Arteaga Arturo Perez, Dhull CS, Trivedi Rupal H. Surgical Techniques in Ophthalmology- Pediatric Ophthalmic Surgery. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2011. P 148- 154.

Daw Nigel W. Visual Development Third Edition. Springer 2014. P 100.

Ansons Alec M, Davis Helen. Diagnosis and Management of Ocular Motility Disorders Fourth Edition. Wiley Blackwell 2014.

Coats David K, Olitsky Scott E. Strabismus surgery and its complications. Springer- Verlag Berlin Heidelberg 2007. P 293.

Lens AI, Nemeth Sheila Coyne, Ledford Janice K. Ocular Anatomy and Physiology Second Edition. SLACK Incorporated 2008. P 163.

Howard Ian P, Rogers Brian J. Binocular Vision and Stereopsis- Oxford Psychology Series No. 29. Oxford University Press 1995. P 62- 68.

http://onlinelibrary.wiley.com/doi/10.1111/cxo.12171/pdf

http://www.ijo.in/article.asp?issn=0301-4738;year=2007;volume=55;issue=3;spage=241;epage=242;aulast=Bhatta

https://www.ncbi.nlm.nih.gov/pubmed/8976694

Bagshaw J. Vertical deviations of anisometropia. Transactions of first international orthoptic congress. Kimpton: London 1968: 277- 286.

Abrahamsson M, Sjӧstrand J. Natural history of infantile anisometropia. Br J Ophthalmol 1996 Oct; 80 (10): 860- 863.

Weakley Jr D R. The association between nonstrabismic anisometropia, amblyopia, and subnormal binocularity. Ophthalmology 2001; 108: 163- 171.

இரு கண்களுக்கும் இடையில் இருக்கும் சீர் செய்யப்படாத சமனற்ற விலகல் பிழையால் ஒத்தப்பார்வையின்மை  உண்டாகிறது.

 • அனுசரிக்கும் சோர்வு
 • மாறிமாறிவரும்  பார்வை
 • ஒரு கண்ணில் பிம்பம் மங்குதல்
 • மாறுபடும் விழித்திரை பிம்பங்கள் உருவாக்கும் அசாதரண இருவிழிப்பார்வை ஊடாட்டம்
 • இரட்டைப் பார்வை
 • ஒரு கண்ணால் பிம்பத்தைப் பார்க்க இயலாமை
 • மாறுகண்

ஒத்தப்பார்வையின்மை பிறவியானதாகவும் பெறப்பட்டதாகவும் இருக்கலாம்.

 

·         பிறவி மற்றும் உருவாகும் ஒத்தப்பார்வையின்மை: கண் கோளத்தின் மாறுபட்ட வளர்ச்சியால் இது உருவாகிறது. இது பிறவித் தோற்றம் கொண்டது.

·         பெறப்பட்ட ஒத்தப்பார்வையின்மை: இது கீழ் வருவனவற்றால் ஏற்படும்

-         கண்புரை அறுவைக்குப் பின்னான ஒருகண் விழிவில்லையின்மை

-         போலிவில்லை வைக்கப்பட்ட நோயாளிகளில் தவறான உட்கண் வில்லைத் திறன்

-         கண் காயம்

-         கவனக்குறைவாக செய்யப்பட்ட விலகல் பிழை அறுவை

-         ஒரு கண்ணில் வெண்படல நோய்

நோய்கண்டறிதல், பார்வைக் கூர்மைக் குறைபாடு கொண்ட நோயாளிகளில் விழித்திரைமானி சோதனை செய்வதைப் பொறுத்தது.

ஒத்தப்பார்வையின்மையின் மருத்துவ வகைகள்:

ஒத்தப்பார்வையின்மை முழுமையானதாகவோ சார்புடையதாகவோ இருக்கலாம்

I.முழுமையான ஒத்தப்பார்வையின்மை: இரு கண்களிலும் விலகல் திறன் சமமாக இருப்பதில்லை.

இதை மேலும் வகைப்படுத்தலாம்:

 • எளிய ஒத்தப்பார்வையின்மை: ஒரு கண் இயல்பாகவும் மறுகண் எட்டப்பார்வை அல்லது கிட்டப்பார்வை கொண்டதாகவும் இருக்கும்.
 • கூட்டு ஒத்தப்பார்வையின்மை: இரு கண்களிலும் எட்ட அல்லது கிட்டப்பார்வை இருக்கும்.
 • கலப்பு ஒத்தப்பார்வையின்மை: ஒரு கண்ணில் எட்டப்பார்வையும் மறு கண்ணில் கிட்டப்பார்வையும் இருக்கும்.
 • எளிய சிதறல் ஒத்தப்பார்வையின்மை: ஒரு கண் எட்டப்பார்வைத் தெளிவாகவும் மறுகண் சிதறல்பார்வை கொண்டதாகவும் (ஒன்றில் எட்டப்பார்வை அல்லது கிட்டப்பார்வை) இருக்கும்.
 • கூட்டு சிதறல் ஒத்தப்பார்வையின்மை: இரு கண்களும் சமனற்ற பாகைகளுடன் சிதறல்பார்வை கொண்டவைகளாக இருக்கும்.

II.சார்பு  ஒத்தப்பார்வையின்மை: இரு கண்களிலும் மொத்த விலகல் ஏறத்தாழ சமமாக இருந்தாலும் இரண்டிலும் இருக்கும் கூற்றுறுப்புகள் ஒப்பிடும்போது பெரும் வித்தியாசத்தைக் காட்டும்.  இதனால் இரு கண்களின் மொத்த விலகல் சமமாக இருக்கும் போது அச்சு நீளம் மாறுபடும். இதனால் வெவ்வேறு அளவிலான விழித்திரை பிம்பங்கள் உருவாகும்.

ஒத்தப்பார்வையின்மையின் பார்வைத் தன்மை: பல்வேறு பார்வை சாத்தியக் கூறுகள் உள்ளன.

 • இருவிழி ஒற்றைப் பார்வை: குறைந்த விகித ஒத்தப் பார்வையின்மையில் இருவிழிப்பார்வை சாத்தியமே. இரண்டு கண்களுக்கும் இடையில் 5டி யை விட அதிக வித்தியாசம் இருந்தால் இருவிழிப்பார்வை இழப்பு ஏற்படும். அனுசரிப்பு இருகண்களுக்கும் இடையில் சமமாக பகிரப்பட்டிருப்பதாலும் அது பிரியாமல்
 • இருப்பதாலும் ஒரு கண்னின் பிம்பம் எப்போதும் மங்கலாகத் தெரியும். அது கண் சோர்வின் அறிகுறிகளை உண்டாக்கும்.
 • பார்வைத் தெளிவின்மை: பார்வைக் கூர்மை சரியில்லாமல் இருந்தாலும், தூரப்பார்வை அதிகமாக இருந்தாலும் அக் கண் பார்வையில் இருந்து விலக்கப்படுவதால் பார்வைத் தெளிவின்மை ஏற்படுகிறது. இந்நோயாளிகளுக்கு பதிக்கப்படாத கண் மூலம் ஒற்றைக்கண் பார்வையே காணப்படும்.
 • விழிமாறும் பார்வை: கண்களில் பார்வைக் கூர்மை இருக்கும் ஒத்தப் பார்வை இன்மையால் நோயாளி எட்டப் பார்வை கொண்ட கண்ணால் தொலைவிலும் கிட்டப் பார்வை கொண்ட கண்ணால் அருகிலும் பார்ப்பார், இவர்களுக்கு இடயூறு எதுவும் இருப்பதில்லை. எனவே மருத்துவ உதவியை நாடுவதில்லை.
 • மாறுகண்: பார்வைக் குறைபாடு கொண்ட கண் ஒருங்கிணைவதால் குழந்தைக்கு தொடர் ஒருங்கு மாறுகண் ஏற்படலாம்.

இருகண் பார்வைக்கான சோதனை:

FRIEND சோதனை அல்லது வொர்த் நாற்புள்ளி சோதனை மூலம் இருகண் பார்வை மதிப்பிடப்படுகிறது.

I. FRIEND சோதனை: இச் சோதனையில் ஒன்றுவிட்டு ஒரு எழுத்து பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். F, I , N எழுத்துக்கள் பச்சையாகவும்  R, E, D எழுத்துக்கள் சிவப்பாகவும் இருக்கும். இது ஸ்நெல் தூரப் பார்வை அட்டவணையில் காணப்படும். நோயாளி, அட்டவணையில் இருந்து 6 மீட்டர் தொலைவில், வலது கண்ணில் சிவப்புக் கண்ணாடியும் இடது கண்ணில் பச்சைக் கண்ணாடியும் கொண்ட இரட்டைப் பார்வைக் கண்ணாடி அணிந்து அமர்ந்திருப்பார். பின்னர் ஸ்நெல் அட்டவணையில் உள்ள எழுத்துக்களைப் படிப்பார்:

 • FRIEND என்று அனைத்து எழுத்துக்களையும் வாசிக்கும் நோயாளி: இருவிழி ஒற்றைப் பார்வை நோயாளி அனைத்து எழுத்துக்களையும் FRIEND என ஒரே நேரத்தில் படிப்பார்.
 • ஒன்றில் பச்சை FIN எழுத்துக்கள் அல்லது சிவப்பு  RED எழுத்துக்களைப் படிக்கும் நோயாளி: ஒருகண் பார்வையுள்ள நோயாளி ஒன்றில் பச்சை அல்லது சிவப்பு எழுத்துக்களையே படிக்கிறார். அதாவது, தொடர்ந்து ஒன்றில் FIN (இடது கண்ணால்) அல்லது RED (வலது கண்ணால்)  என்று வாசிக்கிறார்.
 • சிலசமயம் FIN மற்றும் RED என வாசிக்கும் நோயாளி: மாறுவிழிப் பார்வை கொண்ட நோயாளி சில சமயம் FIN என்றும் சில சமயம் RED என்றும் வாசிக்கிறார்.

II .வொர்த் நாற்புள்ளி சோதனை: நோயாளி வலது கண்ணில் சிவப்புக் கண்ணாடியும் இடது கண்ணில் பச்சைக் கண்ணாடியும் கொண்ட இரட்டைப் பார்வைக் கண்ணாடி அணிந்து அமர்ந்திருப்பார். 4 ஒளிப் புள்ளிகள் கொண்ட ஸ்நெல் தொலைவுப் பார்வை அட்டவணையைப் பார்ப்பார். ஒரு சிவப்புப் புள்ளி, இரு பச்சை மற்றும் ஒரு வெள்ளைப் புள்ளி:

 • அனைத்து ஒளியையும் பார்க்கும் நோயாளி: வெளிப்படையான மாறுகண் இல்லாத போது அனைத்து ஒளிப்புள்ளிகளையும் பார்க்கும் நோயாளிக்கு இயல்பான இருவிழி ஒற்றைப் பார்வை உள்ளது. அசாதரணமான விழித்திரை அனுசரிப்புடைய வெளிப்படையான மாறுகண் உள்ள நோயாளி நான்கு ஒளிப்புள்ளிகளையும் பார்க்க இயலும்.
 • இரு சிவப்புப் புள்ளிகளை மட்டும் காணும் நோயாளி: இடது கண்ணில் ஒளி மறைக்கப்பட்டதை இது காட்டுகிறது.
 • மூன்று பச்சைப் புள்ளிகளை மட்டும் காணும் நோயாளி: வலது கண்ணில் ஒளி மறைக்கப்பட்டதை இது காட்டுகிறது.
 • மூன்று பச்சைப் புள்ளிகளையும் இரு சிவப்புப் புள்ளிகளையும் மாறிமாறி பார்க்கும் நோயாளி: மாறி மாறிப் பார்வை மறைக்கப்படுவதை இது காட்டுகிறது.
 • மூன்று பச்சைப் புள்ளிகளையும் இரு சிவப்புப் புள்ளிகளையும் பார்க்கும் நோயாளி (ஐந்து ஒளிப்புள்ளிகள்): இரட்டைப்பார்வை இருப்பதை இது காட்டுகிறது.

மருத்துவ மேற்பார்வையின் கீழ்தான் நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

மருத்துவ சிகிச்சை

ஒத்தப்பார்வையின்மையின் பார்வை சீராக்கலுக்கு சீரற்ற உருவத்தோற்றத்தையும் பார்வைத்தெளிவின்மையையும் சரிசெய்தல் உதவுகிறது. சீராக்கலுக்கான வழிகாட்டுதல்கள் வருமாறு:

 • பார்வைத் தெளிவின்மை இருந்தால் ஒத்தப்பார்வை இன்மையை முற்றிலுமாக சீர்படுத்த வேண்டும்.
 • ஒரு வயதில் ஒத்தப்பார்வை இன்மை 3 டி அல்லது அதிகம் இருந்தால் சரிசெய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது 60% நோயாளிகளுக்கு சீரற்ற உருவத்தோற்றத்தை ஏற்படுத்தும்.
 • தொடர் கவனிப்புக்குப் பின்னும் 1.50 டி – 3 டி வரை இருந்து குறையாத ஒத்தப் பார்வை இன்மையை சீர்படுத்த வேண்டும்.
 • இரட்டைப் பார்வை முழு சீரமைப்பை முதிர் குழந்தைகளும் வயதுவந்தவர்களும் ஏற்க இயலாது. ஒத்திசைவு கொண்ட பார்வைக் கூர்மை இருந்தாலும் அதிகப் பார்வைக் குறைபாடு கொண்ட கண்ணுக்கு குறைந்தபட்ச பார்வை சீரமைப்பு தேவைப்படும்.
 • பெரிய அளவில் விலகல் வேறுபாடு இருந்தால் தொடுவில்லை தேவைப்படும். கீழ்வரும் நிலையில் அவை பரிந்துரைக்கப்படுகின்றன:

-         சீரற்ற உருவத் தோற்றம் இருந்தால். தொடுவில்லைகள் பிம்பத்தின் அளவு வேற்றுமையைக் குறைக்கும். சாதகமான நேர்வுகளில் இருவிழிப்பார்வை ஒற்றைப் பார்வையை திரும்பவும் பெற இயலும்.

-         4 டி அல்லது அதிக விலகல் வேறுபாடு உள்ள குழந்தைகளில் ஒத்தப்பார்வையின்மையால் ஏற்படும் பார்வைத் தெளிவின்மை இருந்தால் பார்வைக் கூர்மையில் மேம்பாடு இருக்காது.

-         கண்ணாடியோடு ஒப்பிடும்போது சோதனைத் தொடு வில்லைகள் சிறந்த இருவிழிப் பார்வைக்கு உதவுகிறது.

 • குறிப்பிடத்தக்க அளவில் ஒத்தப் பார்வை இன்மை கிட்டப் பார்வையுள்ள நோயாளிகளுக்கு, வசதியான இருவிழிப் பார்வையைப் பேணத், தலையானது அதிகக் கிட்டப்பார்வை உள்ள  கண் நோக்கி சரிந்த நிலையில் இருக்கும் முதன்மை நிலையில், தாழச்சு நிலை காணப்படும் ( ‘பளு கண்’ நிகழ்வு).

மருத்துவ சிகிச்சையில் அடங்குவன

 • கண்ணாடிகள்: இரு கண்களிலும் மிக அதிக வேறுபாடு 4 டி வரை சரிசெய்யும் கண்ணாடியால் சாத்தியப்படும். 4 டி – யை விட அதிகம் இருந்தால் இரட்டைப் பார்வை உண்டாகும். சிறந்த பார்வை சீரமைப்பு தேவைப்படும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொடுவில்லைகள் சிறந்தவை. பெரியவர்களுக்கு கண்ணுக்கு தொந்தரவு இல்லாத வகையில் சிறந்த சீரமைப்பைப் பரிந்துரைக்கலாம்.
 • தொடுவில்லைகள்: அதிகமாக ஒத்தப்பார்வையின்மை இருந்தால் தொடுவில்லைகளே சிறந்தவை. சிறு குழந்தைகளுக்கு மிகவும் பயனுடைது இது. ஏனெனில் அதிக ஒத்தப்பார்வையின்மை இருந்தால் குறைப்பார்வை கண்களில் பார்வைத் தெளிவின்மை ஏற்படலாம்.  

அறுவை சிகிச்சை

இது சிறந்த சிகிச்சை முறை.

இதில் அடங்குவன:

 • உட்கண் வில்லை பொருத்துதல்: விழிவில்லை இன்மைக்கு உட்கண் வில்லை பொருத்தலாம்.
 • விலகல் வெண்படல அறுவை: ஒரு கண் கிட்டப்பார்வை, பார்வைச்சிதறல் மற்றும் எட்டப்பார்வைக்கு இம்முறையைப் பின்பற்றலாம். ஒளிவிலகல் அறுவை, ஒளிவிலகல் வெண்படல அறுவை மற்றும் லாசிக் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
 • படிக விழிவில்லை அகற்றல்: ஒருவிழி அதி கிட்டப்பார்வைக்கு படிக விழிவில்லை அகற்றப்படலாம்.
 • போலி ..எல்: படிக விழிவில்லை அகற்றப்படாமலேயே  உட்கண் வில்லை பொருத்தப்படல்.
 • விழிவில்லை அகற்றலும் உட்கண்வில்லை பொருத்தலும்: இதில் மடிக்கக்கூடிய அல்லது முதுகில்சுமக்கும் உட்கண்வில்லை பயன்படுத்தப்படுகிறது. முதுகில்சுமக்கும் உட்கண்வில்லையில் ஒன்றின்மேல் ஒன்றாக இரு உட்கண்வில்லைகள் கண்ணில் பொருத்தப்படும். அளவு +40 டி இருந்து அந்தத் திறன் கொண்ட வில்லை கிடைக்காவிட்டால் இவ்வாறு செய்யப்படும்.

 

 

 • PUBLISHED DATE : Jan 12, 2017
 • PUBLISHED BY : DEEPAK CHANDRA
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Jan 12, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.