கண்சவ்வு மிகைமடிப்பு

தேவையற்ற, வீக்கமற்ற கண்சவ்வு இருப்பதை கண்சவ்வு மிகைமடிப்பு என வரையறுக்கலாம். இது அறிகுறி இன்றி காணப்படும். அல்லது நிலையற்ற கண்ணீர் படலம் அல்லது கண்ணிர் பாய்வுக்கு இயந்திர ரீதியாக இடையூறு ஏற்படும்போது அறிகுறிகளோடு காணப்படும். பொதுவாக வயதானவர்களுக்கு இருக்கும். பெரும்பாலும் தென்படுவதில்லை. வயதாவதால் கண்ணின் இயல்பான மாறுபாடு என்று வகையறுக்கப்படுகிறது. இருப்பினும், இது நோயாளியின் முதல் பத்தாண்டு வாழ்க்கையிலே காணப்பட்டு வயது  ஆக ஆக அதிக அளவிலும் கடுமையாகவும் இருப்பதுண்டு. இது ஒரு இருபக்க நிலை. குமிழ் கண்சவ்வு கீழ் இமை விளிம்புக்கு மேலாக உயர்ந்து காணப்படும். பெரும்பாலும் கீழ்நெற்றிப் பகுதியில் இருக்கும். இருந்தாலும், மேற்பகுதியோடு, மூக்கு, நடு இமைப்பகுதி அல்லது இவைகளின் ஏதாவது ஒரு இணைவோடோ இது குமிழ் கண்சவ்வைப் பாதிக்கும். தொய்வான தேவையற்ற ஒரு திசு இருப்பது கீழ் கண்ணீர்ப் பிறைமட்டத்துக்கு இடையூறு செய்கிறது. இந்தக் கண்சவ்வுத் தொங்கல் கீழ் கண்ணீர் முனை வழியாகக் கண்ணீர் பாய்வதற்கு இடையூறு செய்கிறது. இதனால் கண்ணில் நீர் வழியும். இது மேல் குமிழ் பகுதியைப் பாதித்து தொய்வான கண்சவ்வை உண்டாக்கும். ஆனால் இது அரிதே.

கண்சவ்வு மிகைமடிப்பு பற்றிய விளக்கங்களை 1908 ஆகிய முற்காலத்திலேயே எல்ஸ்நிக் சுட்டுவதைப் பார்க்கிறோம். 1921-ல் பிரான்ஸ்விக்கும் 1922-ல் ஊலன்பெர்க்கும் இந்நிலையை விவரித்துள்ளனர். 1942-ல் டபிள்யூ.எல். ஹியூக்ஸ் “கன்ஜங்டிவோகலாசிஸ்” என்ற சொல்லை உருவாக்கினார் (Hughes WL. Conjunctivochalasis. Am J Ophthalmol 1942; 25: 48-51). அவர்கள் வலி, சார் கண்சவ்வு இரத்தக்கசிவு மற்றும் வெளித்தெரியும் வெண்படலநோய் ஆகிய இன்னும் கடுமையான கண்டுபிடிப்புகளை வருணித்துள்ளனர். உலர்கண் மற்றும் மிகைக்கண்ணீர் போன்ற மிதமான அறிகுறிகளைப் பிற்கால படைப்புகள் விவரிக்கின்றன.

கண்ணீரையும் விழி உறுத்தலையும் உருவாக்கும் பிற நிலைகளைக், காரணமானவைகள் அல்லது உருவாக்குபவைகள் இல்லை என்பதைக் கண்டறிந்து விலக்க வேண்டும். ஒத்த அறிகுறிகள் பின்வருவனவற்றில் காணப்படும்:

 • தனித்த உலர்கண் நோய்த்தாக்கம்.
 • உலர்கண் நோய்த்தாக்கத்தோடு கண்சவ்வு மிகைமடிப்பு.
 • இமை நோய்கள் உ-ம். இமையழற்சி.
 • ஒவ்வாமைக் கண் நோய்கள்.
 • தன்தடுப்பு தைராயிடு கண் நோய்.
 • விழிவில்லை அணிதல்.

குறிப்புகள்:

http://eyewiki.aao.org/Conjunctivochalasis

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4155901   

http://bjo.bmj.com/content/88/3/388.full

http://webeye.ophth.uiowa.edu/eyeforum/cases/162-conjunctivochalasis.htm

http://www.ophthalmologymanagement.com/articleviewer.aspx?articleID=108876

Yanoff Myron, Sassani Joseph W. Ocular Pathology. Seventh Edition. Elsevier Saunders. 2015. P. 216.

Kanski Jack J, Bowling Brad. Clinical Ophthalmology- A Systematic Approach. Seventh Edition. Elsevier Saunders. 2011.

Bowling Brad, Kanski's Clinical Ophthalmology-  A Systematic Approach. Eighth Edition. Elsevier, 2016. P.165.

Holland Edward J, Mannis Mark J, Lee W Barry. Ocular Surface Disease - Cornea, Conjunctiva and Tear Film. Elsevier Saunders. 2013. P. 161-165.

Basak Samar K.  Atlas of Clinical Ophthalmology. Second Edition.  Jaypee  Brothers Medical Publishers (P) Ltd, 2013, New Delhi, P.77.

Höh H, Schirra F, Kienecker C, et al. Lid-parallel conjunctival folds are a sure diagnostic sign of dry eye. Ophthalmologe 1995; 92: 802-808.

Meller D, Tseng SCG. Conjunctivochalasis: literature review and possible pathophysiology. Surv Ophthalmol 1998;43: 225-232.

Li DQ, Meller D, Liu Y, Tseng SC. Overexpression of MMP-1 and MMP-3 by cultured conjunctivochalasis fibroblasts. Invest Ophthalmol Vis Sci. 2000; 41: 404- 410.

Zhang X, Li Q, Zou H, et al. Assessing the severity of conjunctivochalasis in a senile population: a community-based epidemiology study in Shanghai, china. BMC Pub Health 2011; 11:198.

Francis IC, Chan DG, Kim P, et al. Case- controlled clinical and histopathological study of conjunctivochalasis. Br J Ophthalmol 2005; 89:302-305.

Watanabe A, Yokoi N, Kinoshita S, et al. Clinicopathologic study of conjunctivochalasis. Cornea 2004; 23:294-298.

Yokoi N, Komuro A, Nishii M, et al. Clinical impact of conjunctivochalasis on the ocular surface. Cornea [Clinical Trial] 2005; 24(Suppl.8):S24-3.

Hughes WL. Conjunctivochalasis. Am J Ophthalmol 1942; 25: 48- 51.

Elschnig A. Beitrag zur Aethiologie und Therapie der cronischen Konjunctivitis. Dtsch Med Wochenschr 1908; 26: 1133-1155. German.

Braunschweig P. Ueber faltenbildung der conjunctiva bulbi. Klin Monatsbl Augenheilkd 1921; 66: 123-124. German.

Wollenberg A. Pseudopterygium mit Faltenbildung der Conjunctiva bulbi. Klin Monatsbl Augenheilkd 1922; 68: 221-224. German.

கண்சவ்வு மிகைமடிப்பு அறிகுறிகள்.

அறிகுறிகள் குறிப்பிடத்தக்க அளவில் இருப்பதில்லை; மெல்ல வளர்ச்சியுறும்.

கண்சவ்வு மிகைமடிப்பின் கண் அறிகுறிகள்:

 • உறுத்தல்
 • அயல்பொருள் உணர்வு
 • அசௌகரியம்
 • எரிச்சல்
 • கண்ணீர் அல்லது நீர் வழிதல்.
 • கசிவு
 • மங்கல் பார்வை
 • உலர்தல்
 • சார்கண்சவ்வு குருதிக்கசிவு
 • கண் சோர்வு
 • கண்விழிக்கும் போது கண்விறைப்பு

கீழ் நோக்கிய பார்வையிலும் எண்ணிம அழுத்தத்திலும் கண்சவ்வு மிகைமடிப்பின் அறிகுறிகள் அதிகரிக்கும்.

கண்சவ்வு மிகைமடிப்பிற்கான உண்மை நோயியல் இதுவரை அறியப்படவில்லை. கண்சவ்வின் தோலடி, மீள்திறனுள்ள அல்லது தாங்கு திசுக்களில் முதுமை மாற்றங்களே காரணம் என கூறப்படுகிறது. கண் கசக்குதல், கண்சவ்வில் இயந்திர ரீதியான எரிச்சல் அல்லது காயம், இயல்பற்ற இமை நிலை ஆகியவை இதை ஏற்படுத்துகின்றன.

மருத்துவ மற்றும் திசுநோயியல் ஆய்வின் அடைப்படையில் கண்சவ்வு மிகைமடிப்பு குறிப்பிட்ட பகுதிக் காயம், புற ஊதாக் கதிர் மற்றும் தாமதமான கண்ணீர் வடிதல் ஆகிய பல காரணிகளைத் தூண்டிகளாக கொண்டுள்ளன என்று பிரான்சிஸ் மற்றும் பிறர் கூறினர் (Francis IC, Chan DG, Kim P, et al. Case- controlled clinical and histopathological study of conjunctivochalasis. Br J Ophthalmol 2005; 89:302-305).

அழற்சியற்ற சார்கண் சவ்வின் நிணநாள நோய்க்கூறியல் விரிவை நுண்காட்டியில் வதனபேயும் பிறரும் எடுத்துக் காட்டினர். கூறாக்கப்பட்ட மீள்திறன் நார்களும் அடர்த்தியற்ற தசைநார்ப் புரத நார்களுடன் குறிப்பிட்ட நார் வடிவ இழப்பும் காணப்பட்டது.  கீழிமைக்கும் கண்சவ்வுக்கும் இடையில் இருக்கும் பொறியாற்றலால் நிணநீர் பாய்வு படிப்படியாக  சேதமுற்று நிணநாள விரிவும் மருத்துவ ரீதியான கண்சவ்வு மடிப்பும் ஏற்படுவதாக அவர்கள் கூறினர் (Watanabe A, Yokoi N, Kinoshita S, et al. Clinicopathologic study of conjunctivochalasis. Cornea 2004; 23:294-298).

நோய்த்தடுப்புச் சாயம் ஏற்றி கண்சவ்வு மடிப்பு நோயாளிகளின் கண்சவ்வு மாதிரிகளை  அறியப்பட்ட இயல்பான மற்றும் அழற்சியுற்ற கண் பரப்பு நோய் மாதிரிகளோடு ஒப்பிட்டு கண்சவ்வு மிகைமடிப்பிற்கு அழற்சி காரணம் இல்லை என்று யோகோயும் பிறரும் காட்டினர் [Clinical Trial] 2005;24(Suppl.8):S24-31).

தற்போதைய ஆய்வுகள் பொறிசார் அணுகுமுறையை கண்சவ்வு மிகைமடிப்பிற்குக் காரணம் காட்டுகின்றன. கண்சவ்வு மச்சை உலோகப்புரதநொதி (MMPs) மற்றும் உலோகப்புரதநொதியின் திசு தடுப்பான்களின் (TIMPs) இயல்பான சமநிலையில் ஏற்படும் மாற்றத்தை பொறிசார் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. உலோகப்புரதநொதிகள் மிகைசெல் மச்சையை மாற்றி அல்லது தரமிழக்கச் செய்து கண்சவ்வு மிகைமடிப்பு நோய்க்கூற்றுக்கு வழிவகுக்கக் கூடும். திசுவளர்ச்சி சோதனையில் கண்சவ்வு மிகைமடிப்பு நாரியல்செல்லில் உலோகப்புரதநொதி-1 (MMP-1) மற்றும் உலோகப்புரதநொதி-3 (MMP-3) மிகையாகக் காணப்படுகின்றன. ஆனால் திசு தடுப்பான்களின் (TIMPs) நொதி அளவில் மாற்றமில்லை (Li DQ, Meller D, Liu Y, Tseng SC. Over-expression of MMP-1 and MMP-3 by cultured conjunctivochalasis fibroblasts. Invest Ophthalmol Vis Sci. 2000; 41: 404- 410). பொதுவாக இணைப்புத் திசு தரம் இறக்கம்  மற்றும் மாற்றியமைப்பில் பங்குபெறும் உலோகப்புரதநொதிகளுக்கும் அவற்றின் தடுப்பான்களுக்கும் இடையில் ஏற்படும் சமநிலை மாற்றம், கண்சவ்வு மிகைமடிப்பில் நோக்கப்படும் மருத்துவ ரீதியாக தேவையற்ற கண்சவ்வை நோக்கி வழிநடத்துகிறது.

கண் பரப்பு நோய்களுள் குறைவாகவும் தவறாகவும் கண்டறியப்பட்டுள்ள பரவலான ஒன்று கண்சவ்வு மிகை மடிப்பு ஆகும். குறிப்பற்ற அறிகுறிகளும் இடையிடையே காணப்படும் கண்சவ்வு வீக்கமும் தவறான கண்டுபிடிப்புக்கு வழிகோலுகிறது. நோய் முன்னேறும் விதத்தில் இருக்கும் கூடுதல்குறைவால், நோயை உறுதிப்படுத்த பல மருத்துவ சோதனைகள் தேவைப்படும். கண்சவ்வு மிகைமடிப்பை மருத்துவ ரீதியாகவே முக்கியமாகக் கண்டறிய முடியும்.

மேல், மூக்கு அல்லது நடு கீழ் இமை விளிம்புப் பகுதியில் கண்சவ்வு மடிப்பு பிளவு விளக்கு உயிர்நுண்காட்டியில் காணப்படுகிறது (கண் மருத்துவரால்).  கீழ் இமை விளிம்பில் தேவையற்ற கண்சவ்வு இருப்பது கண்சவ்வு மிகை மடிப்பு எனக் கருதப்படுகிறது. கண்சவ்வு மடிப்பால் கண்ணீர் பாய்வதில் தடையும் கீழ் கண்ணீர் முலையின் வழியாக மிகையாகப் பாய்வதும் உண்டாகி கண்ணீர் வடிதல் ஏற்படும்.

பிளவு விளக்குப் பரிசோதனையில் காணப்படும் அறிகுறிகள்:

 • தேவையற்ற கண் சவ்வு இருத்தல்
 • கண்ணீர் பிறைவளைவு மாற்றம்
 • ஸ்கிர்மர் சோதனையில் கண் உலர்வு
 • கண்ணீர்ப் படல உடைவு நேரம் குறைதல்
 • ஒளிர் சோடியம்/ரோஸ் பெங்கால் சாயக் கறை வெளிப்படா மண்டலத்தில் கண்சவ்வு கறை இருப்பதைக் காட்டும்.
 • மூக்கு கண்சவ்வு மிகைமடிப்பில் கீழ் கண்ணீர் முனை அடைப்பு ஏற்படுவதால், இயல்பான திறந்த கண்ணீர் பாதை இருந்த போதிலும்  கண்ணீர் வடிதல்.
 • கண்ணீர் பிறைமட்டம் அழிக்கப்படுவதால் நீர்கலந்த கண்ணீர் அதிகமாக விழுந்து சளி-தோலடி சந்திப்பு முன் நகர்தல்.
 • நீர்கலந்த கண்ணீர் அதிகமாக விழுவதால் பகுதிசார் இமைவிளிம்பு அழற்சி.

கண்சவ்வு மிகைமடிப்பை கண்டறிவதற்கு முன்னர் பொதுவான கண் பரப்பு நோய்களைக் கண்டறிய வேண்டும். அவையாவன:

 • உலர் கண்
 • முன் இமையழற்சி
 • மெய்போமியன் சுரப்பி நோய்
 • ஒவ்வாமை கண் நோய்கள்

பெரும்பாலும் கண்சவ்வு மிகைமடிப்பு ஒரு குறிப்பிடத்தக்க மருத்துவத் தனி நோயாகக் கருதப்படவில்லை. அல்லது கண்சவ்வு பற்றிய கண்டறிதல்கள் குறிப்பிடத்தக்கதாக அங்கீகரிக்கப்படுவதில்லை.

தேவையற்ற கண்சவ்வால் கண்ணீர்மூலை அடைபட்டு கண்ணிர் வடிதலே முதன் முதலில் நோயாளிகளுக்கு கண்டறியப்படுகிறது.

தர அமைப்பு:

ஹோவும் பிறரும் இமையிணை கண்சவ்வு மடிப்புகளின் எண்ணிக்கையை நோக்கினர் (LIPCOF) (Höh H, Schirra F, Kienecker C, et al. Lid-parallel conjunctival folds are a sure diagnostic sign of dry eye. Ophthalmologe 1995; 92: 802-808). இமையிணை கண்சவ்வு மடிப்புகளின் எண்ணிக்கை கண்சவ்வழற்சி கண்டறிதலுக்கு அதிகக் கணிப்பு மதிப்பை கொண்டுள்ளது என்று அறிந்தனர்.

தற்போது மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தர அமைப்பு 1988-ல் மெல்லர் மற்றும் செங் முன்மொழிந்தது ஆகும். அவர்கள் ஹோவும் அவரது கூட்டாளிகளும் அளித்த அளவீட்டைத் தழுவிக்கொண்டனர். அதனோடு கண்சவ்வு மிகைமடிப்பின் விரிவு, கீழ்நோக்கும்போது ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எண்ணிம அழுத்தம் மற்றும் இருக்கும் கண்ணீர்முனை இடையூறு ஆகியவற்றை இணைத்துக் கொண்டனர் (Meller D, Tseng SCG. Conjunctivochalasis: literature review and possible pathophysiology. Surv Ophthalmol 1998; 43: 225-232).

அதன்படி, இருக்கும் மடிப்புகளின் எண்ணிக்கையையும் கண்ணீர் பிறைமட்டத்தின் உயரத்தோடு அவற்றிற்குரிய தொடர்பையும் அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் கடுமையின் தரம் வருமாறாகும்:

 • தரம் 1: நிலையான மடிப்பு இல்லை.
 • தரம் 2: தனி, சிறிய மடிப்பு.
 • தரம் 3: இரண்டுக்கும் மேற்பட்ட மடிப்புகள். கண்ணீர் பிறைமட்டத்தை விட உயரம் இல்லை.
 • தரம் 4: பல மடிப்புகள். கண்ணீர் பிறை மட்டத்தை விட உயரமாக.

மெல்லர் மற்றும் செங்கின் அணுகுமுறையில் முன்னேற்றம் செய்து 2011-ல் ஷேங்க் மற்றும் பிறர் ஒரு புதிய தர அமைப்பை முன்மொழிந்தனர். இதில் மூன்று அறிகுறிகளும் (கண்ணீர் வடிதல், உலர்வை உணர்தல், அயல்பொருள் உணர்வு), நிலையற்றக் கண்ணீர் படலம் உடைவு நேரமும் (BUT) சேர்க்கப்பட்டன (Zhang X, Li Q, Zou H, et al. Assessing the severity of conjunctivochalasis in a senile population: a community-based epidemiology study in Shanghai, china. BMC Pub Health 2011; 11:198). இந்த மாற்றமைப்புகள், அறிகுறிகள் அற்றவர்களையும், இயல்பான முதியோரையும், அறியப்பட்ட மிக அதிக அளவில் கண்சவ்வு மடிப்பு உள்ள நோயாளிகளிடம் இருந்து வேறுபடுத்திவிடும். இதனுடைய ஏற்புடைமைக்கு மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

திசுநோயியல்:

நீடித்த நுண்மணி அற்ற அழற்சியே மிக முக்கியமான திசுநோயியல் கண்டுபிடிப்பு ஆகும் (Yanoff Myron, Sassani Joseph W. Ocular Pathology. Seventh Edition. Elsevier Saunders. 2015. P. 216.).

குறிப்பாக நுண் நிணநாள நோய்க்கூறியல் விரிவு காணப்படும்.

கண்சவ்வு மிகைமடிப்பைக் கீழ்வருவனவற்றில் இருந்து வேறுபடுத்திக் காணவேண்டும்:

 • உலர் கண் நோய்த்தாக்கம்

உலர் கண் நோயில், அறிகுறிகள் மாலையில் அதிகமாகும், மேல் நோக்கிப் பார்க்கும் போது கூடும், இமை இடை வெளிப்படும் மண்டலத்தில் ஒளிர் சோடியம்/ரோஸ் பெங்கால் சாயம் ஏறும், அதிகரிக்கும் இமைத்தலும் கண்ணீர்முனை அடைப்பும் அறிகுறிகளை மேம்படுத்தும்.

கண்சவ்வு மிகைமடிப்பில், உலர் கண் போன்று அல்லாமல், அறிகுறிகள் நாள் முழுவதும் ஒரே மாதிரியாகவே இருக்கும், கீழ் பார்வை அதிகரிக்கச் செய்யும், ஒளிர் சோடியம்/ரோஸ் பெங்கால் சாயம் வெளிப்படாத மண்டலத்தில் ஏறும், அதிகரிக்கும் இமைத்தலும் கண்ணீர்முனை அடைப்பும் அறிகுறிகளை மோசமாக்கும்.

 • ஜோக்ரன் நோய்த்தாக்கம்.
 • மெய்போமியன் சுரப்பிச் செயலிழப்பு.
 • கண்சவ்வுத் தொற்று.
 • கண்சவ்வழற்சி.
 • கண்சவ்வு வீக்கம்
 • கண்ணிமை உட்பிறழல்.

நோய்மேலாண்மை மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே செய்யப்பட வேண்டும்.

அறிகுறியற்ற கண்சவ்வு மிகைமடிப்பிற்கு மருத்துவம் தேவை இல்லை.

தொடர்புள்ள கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும். அவையாவன:

 • உலர் கண்
 • முன் இமை அழற்சி
 • மெய்போமியன் சுரப்பி நோய்
 • ஒவ்வாமை கண் நோய்கள்

அறிகுறி உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ முறை:

மருத்துவ சிகிச்சை:

 • மேற்பூச்சு செயற்கைக் கண்ணீர் மசகுகள்: மசகளித்தல் தற்காலிக நிவாரணம் அளிக்கும்.
 • மேற்பூச்சு ஊக்க மருந்துகள்: சிறிது நிவாரணம் அளிக்கலாம். இலேசான நோய்களுக்குப் பயன்படுத்தலாம்.
 • எதிர்ஹிஸ்ட்டமின்கள்: ஒவ்வாமை கண்சவ்வழற்சிக் கூறும் இருந்தால் பயன்படுத்தலாம்.

அறுவை சிகிச்சை:

பொதுவான சிகிச்சைகள் பலனின்றி, வேறு கண் நோய்கள் இல்லை என்று அறிந்த பின் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

தேவையற்ற கண்சவ்வு மடிப்புகளை அகற்றவே அறுவை முறைகளின் நோக்கமாகும்.

 • கண்சவ்வு அகற்றல்: தேவையற்ற திசுவை அகற்றுவதே கண்சவ்வு மிகை மடிப்பிற்கான மிகவும் பொதுவான அறுவை முறையாகும். கண்சவ்வின் தளர்ச்சி விகிதத்தைப் பொறுத்து கண்சவ்வு மறுவெட்டல் திருத்தியமைக்கப்படுகிறது. இசைப்பதற்கு தையல் அல்லது ஃபைப்ரின் பசை பயன்படுத்தப் படுகிறது. முழுக் குமிழ் கண்சவ்வும் பாதிக்கப்பட்டு இருந்தால் 360 கோண மறுவெட்டல் தேவைப்படும்.
 • வெளிப்படலத்தோடு கண்சவ்வை இணைத்தல்: தேவையற்ற கண்சவ்வை அகற்றியபின் இது செய்யப்படும்.
 • கருப்பைப் படல மாற்று சிகிச்சை: ஒன்றில் தையல் மூலம் அல்லது ஃபைப்ரின் பசை மூலம் இது நடை பெறுகிறது. கண்சவ்வு மிகைப்படலம் ஒரு தேவையற்ற கண்சவ்வினால் ஏற்படுவதால் கருப்பைப் படலம் போன்ற ஒரு கூடுதல் திசு தேவயற்றது எனப் பலர் எண்ணுகின்றனர்.
 • மேலோட்ட வெப்பத்தீய்ப்பு: கீழ்ப்புற கண்சவ்வை மேலோட்டமான வெப்பத்தீய்ப்பால் அகற்றும் குறைந்த பட்ச ஊடுறுவும் சிகிச்சையால் கண்சவ்வு தளர்வு மேம்பட்டு கண்சவ்வு மிகைமடிப்பு நோயில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.  தேவையற்ற கண்சவ்வில் தீய்ப்பு ஏற்படுத்தும் போது அது சுருங்கி கண்ணீர் பாய்தல் திரும்பவும் சரிசெய்யப்படும்.

வளைவு சுருக்கம், வடுவுறும் கண்ணிமை உள்நோக்கல், கூடுதல் கண் நகர்வு சுருக்கம் போன்ற சிக்கல்களைத் தவிர்க்க விரிவான கண்சவ்வு மறுவெட்டல்களைத் தவிர்க்க வேண்டும்.

நோய்முன்னறிதல்: ஒவ்வொரு நோயாளிகளிலும் அறிகுறித் தொகுதிகளுக்கு ஏற்ப சரியான சிகிச்சையைத் தழுவிக்கொள்ளும் போது நோய் முன்னறிதல் பொதுவாக நன்மை பயக்கும். 

 • PUBLISHED DATE : May 13, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : May 13, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.