கண்ணிமை அழற்சி

இந்நோயில் கண் இமை விளிம்பு அழற்சி அடைகிறது. இது வெளிப்புற கண்ணைப் பாதிக்கும் பொதுவான ஒரு கோளாறே. இதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும் மிகை எண்ணெய்ச் சுரப்பு மற்றும் ஸ்டெஃபிலோகாக்கஸ் பாக்டீரியாக்கள் தொற்று முக்கிய பங்கு ஆற்றுகின்றன.

நீடித்தக் கண்ணிமை அழற்சி வெண்படலத்திலும் இணைபடலத்திலும் இரண்டாம் கட்ட மாற்றங்களை உருவாக்கலாம். பல நோயாளிகளுக்கு  இது தொடர்பான கண்ணீர்ப்படல நிலையாமை இருக்கலாம். இதனால விழிவில்லை அணிவதில் பிரச்சினை ஏற்பட்டு உலர்கண் சிகிச்சையைப் பாதிக்கவும் செய்யலாம்.

பார்வைக்குப் பாதகம் இல்லை என்றாலும் இது நிரந்தரமாக இமை விளிம்பைப் பாதிக்கக் கூடும்.

கண்ணிமை அழற்சியை இரண்டாகப் பிரிக்கலாம்:

முன் கண்ணிமை அழற்சி:

இமைத்தோலையும், இமை மயிர் மற்றும் மயிர்க்காம்பின் வேர்களையும் இது பாதிக்கிறது. இதன் இரண்டாகப் பிரிக்கப்படும்:

-    ஸ்டேஃபிலோகோக்கல் இமையழற்சி

-    எண்ணெய்ச்சுரப்பு இமையழற்சி

-    எண்ணெய்ச்சுரப்பு இமையழற்சி வயது வந்தோரிடையே பெரும்பாலும் காணப்படுகிறது. ஒப்பிடும்போது ஸ்டேஃபிலோகோக்கல் இமையழற்சி இளம்வயதினரை அதிகம் பதிக்கிறது. குழந்தைப்பருவத்திலேயே நோய் தொடங்கலாம்.

பின் கண்ணிமையழற்சி:

பின்கண்ணிமை அழற்சி மெய்போமியன் சுரப்பிகளையும் அதன் துவாரங்களையும் பாதிக்கிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமானது மெய்போமியன் சுரப்பி செயலிழப்பு ஆகும். இதன் மூன்று முக்கிய வகைகள்:

-    மெய்போமியன் மிகு எண்ணெய்ச்சுரப்பு

-    முதன்மை மெய்போமியன் அழற்சி

-    மெய்போமியன் அழற்சியோடு இரண்டாம் கட்ட இமையழற்சி

ஒரு நோயாளியிடம் இவை அடிக்கடி கணிசமாக ஒன்றுமாற்றி ஒன்று நிகழலாம். மிகை எண்ணெய்ச்சுரப்பு இமையழற்சி தனியாகவும், முன் ஸ்டேஃபிலோகாக்கல் இமையழற்சியோடு இணைந்தோ அல்லது பின் இமையழற்சியோடும் கூட ஏற்படலாம்.

இந்த நோய்க்கு பாக்டீரியாவும் அழற்சியும் காரணமாக இருப்பதால் இதன் நீண்ட கால மேலாண்மைக்கு தொற்றையும் அழற்சியையும் குறைக்கக் கண் சுத்தமும் மருந்துகளும் தேவைப்படும்.

இமை அழற்சியுடன் பின் வரும் நோய்களும் இணையலாம்:

மண்டலம்சார் நோய்கள்:

-    முகப்பரு

-    மிகை எண்ணெய்ச் சுரப்புத் தோல் அழற்சி

கண் நோய்கள்:

-    உலர்கண் நோய்த்தாக்கம்

-    இமை மயிர் உட்சுருளல்

-    இமைவீக்கம்

-    கண்சவ்வழற்சி

-    கரும்படல அழற்சி

குறிப்புகள்:

http://emedicine.medscape.com/article/1211763-overview

http://emedicine.medscape.com/article/2018615-overview

http://emedicine.medscape.com/article/1203895-overview

http://eyewiki.org/Blepharitis

 

Kanski,Jack J. Clinical Ophthalmology, A Systematic Approach .Third Edition.UK. Butterworth Heinemann, 1994. P 74-77.

பலவகையான இமையழற்சிகளின் அறிகுறிகள் ஒன்றுபோலவே இருக்கும். இருப்பினும் அவற்றின் கடுமைக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் நடுவில் இணையுறவு ஏறக்குறைய இருப்பதில்லை. பெரும்பான்மையான அறிகுறிகள் கண்ணீர்ப் படல அசாதாராண நிலைக்கு இரண்டாம் கட்டமானவைகள் ஆகும்.

அறிகுறிகள் பெரும்பாலும் மோசமாகவும் கூடிக்குறைவதாகவும் இருக்கும்.

மிகை எண்ணெய்ச் சுரப்பு இமையழற்சியின் அறிகுறிகள் ஸ்டேஃபிலோகோக்கல் இமையழற்சியின் அறிகுறிகள் போலவே இருந்தாலும், அவற்றை விட கடுமை குறைந்தவையாகவும், குறைந்த அளவில் கூடிக்குறைதலுடனும் காணப்படும்.  நோய் அதிகரிப்பு மிகவும் அரிதாகக் காணப்படும்.

பொதுவான அறிகுறிகள்:

-    கண்ணில் எரியும் உணர்வு

-    தூசி இருக்கும் உணர்வு

-    கண் எரிச்சல்

-    நீர் வடிதல்

-    அரிப்பு

-    இமைச்சிவப்பு

-    இமை விளிம்பிலும் இமைமயிர் இணையும் நடுக் கண்மூலையில் தோடு உருவாதலும்

-    கண்சிவப்பு

-    இலேசான ஒளிக்கூச்சம்

-    மங்கலான பார்வை அல்லது பார்வைக் குறைதல்

மண்டலம் சார் நோய்களுக்கு, நோய் அதிகரிக்கும் போக்கில் தொடர்புடைய அம்சங்கள் காணப்படலாம்:

முகப்பரு கீழ்க்காணுபவைகளோடு தொடர்புடையதாக இருக்கலாம்:

-    சிவந்து வீங்கிய மூக்கு

-    எளிதாக முகம் சிவத்தல்

-    தோலில் வீங்கிய இரத்தக்குழல்கள் வெளிப்படுதல்

-    எண்ணெய்த் தோல்

-    பருக்கள்

-    கொப்புளங்கள்

எண்ணெய் மிகைப்பு தோல் அழற்சி:

எண்ணெய் மிகைப்புத் தோல் மாற்றங்கள் தலை ஓடு, புருவம், பின் காதுப் பகுதிகள், மூக்கின் சற்றுமேல் புருவ இடைப்பகுதி, மூக்கு இதழ் மடிப்பு, மார்பெலும்பு ஆகிய பகுதிகளில் காணப்படும்.

எண்ணெய் மிகைப்பு தோல் அழற்சி காணப்படும் இடங்கள்:

எண்ணெய் வகை: செதிள் புடைப்பு களிம்பு போலவும், தோல் எண்ணெய்ப் பசையுடனும் இருக்கும்.

உலர்ந்த வகை: செதிள் புடைப்பும் தலையோட்டில் அரிப்பும், பாள வெடிப்பும் இருக்கும்.

தொற்றும் அழற்சியும் இந்நோய் உருவாகத் துணை புரிகின்றன என்றாலும் சரியான நோய்க்காரணம் சிக்கலானதும் முற்றிலும் அறியப்படாததாகவும் உள்ளது.

கடும் இமையழற்சி பொதுவாக வேதியல் மற்றும் ஒவ்வாமை மருந்து எதிர்வினையால் ஏற்படுகிறது.

நீடித்த இமையழற்சிக்குக் காரணம் புகை, பனிப்புகை, வேதிப்பொருள் ஆவி அல்லது உறுத்தல் பொருட்களாக இருக்கலாம்.

இமையழற்சியின் குறிப்பான காரணிகளில் அடங்குவன:

-    உலர் கண் நோய்த்தாக்கம்: ஸ்டேஃபிலோகாக்கல் இமையழற்சியில் உலர்கண் காணப்படும். அதுபோல உலர்கண் உள்ளவர்களுக்கு ஸ்டேஃபிலோகாக்கல் இமையழற்சி உருவாகிறது. கண்ணீர் குறைவு படுவதால் கண்ணில் உள்ள லைசோசைம் மற்றும் இம்யுனோகுளோபின் அளவுகளில் மாற்றம் ஏற்பட்டு பாக்டீரியா எதிர்ப்பும் குன்றுவதால் ஸ்டேஃபிலோகாக்கல் இமையழற்சி ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

எண்ணெய் மிகைச்சுரப்பு இமையழற்சியும், மெய்போமியன் சுரப்பிகள் கோளாறும் உடைய சில நோயாளிகளுக்கும் உலர்கண் உருவாகிறது. கண்ணீரின் மேல் லிப்பிட் அடுக்கில் உள்ள குறைபாட்டினால் கண்ணீர் அதிகமாக ஆவியாவதாலும், குறை விழிப்பரப்பு இழுவிசையாலும் இது ஏற்படலாம்.

-    முகப்பரு

-    எண்ணெய் மிகைச்சுரப்புத் தோலழற்சி

-    ஒட்டுண்ணி பிடித்தல் (-ம். டெமோடெக்ஸ் ஃபோலிகுலோரம் மற்றும் ப்திரியாசிஸ் பால்ப்பெப்ராரும்)

நீடித்த இமையழற்சி உடையவர்களுக்கு டெமொடெக்ஸ் ஒட்டுண்ணி பிடித்தால் இமை மயிரைச் சுற்றி உருளையான பொடுகுபோன்ற உறைகள் காணப்படும். அறிகுறிகள் அற்ற நோயாளிகளுக்கும் இதே அளவு டெமொடெக்ஸ் ஒட்டுண்ணி பாதிப்பு இருப்பதால் அதன் பங்கு உறுதியாக நிறுவப்படவில்லை. ஆயினும் டெமோடெக்ஸ் உண்ணிகளுக்கு எதிராக சிகிச்சை அளிக்கும் போது குணமடையாத இமையழற்சி நோயாளிகளுக்குப் பலன்கிட்டுகிறது.

-    சிற்றக்கித் தோலழற்சி

-    தட்டம்மைத் தோலழற்சி

-    பால் உண்ணி

-    ஒவ்வாமை அல்லது தொடர்புத் தோலழற்சி

ஸ்ஜோக்ரன் நோய்த்தாக்கமும் இமையழற்சி போல காணப்படும்.

இமையழற்சியின் சரியான நோயியல் தெரியவில்லை. இந்நோய்க்குப் பல காரணிகள் சந்தேகிக்கப் படுகின்றன.

ஸ்டேஃபிலோகாக்கல் இமையழற்சி:

ஸ்டேஃபிலோகாக்கஸ் ஆரியஸ் பாக்டீரியா இமையழற்சியின் அறிகுறிகளைக் காட்டும் பொறிநுட்பம் அறியப்படவில்லை. ஸ்டேஃபிலோகாக்கஸ் நச்சு நேரடி உறுத்தலை ஏற்படுத்தலாம் மற்றும்/அல்லது பாக்டீரியா எதிர்ப்பை செல்களே அதிகரிக்கலாம்.

எண்ணெய்மிகைப்பு இமையழற்சி:

ஸ்டேஃபிலோகாக்கல் இமையழற்சியை விட எண்ணெய்மிகைப்பு இமையழற்சியில் அழற்சி குறைவாக இருக்கும். ஆனால் அதிக எண்ணெய் அல்லது பசை செதிள்கள் காணப்படும். சில நோயாளிகளுக்கு மெய்போமியன் சுரப்பிச் செயலிழப்பும் இருக்கும்.

மெய்போமியன் சுரப்பிச் செயலிழப்பு (MGD)

மெய்போமியன் சுரப்பிகளின் கோளாறும் சுரப்பு மாற்றங்களும் இருக்கும். மாற்றங்களும் சுரப்புக் குறைபாடும் ஆகிய  இரண்டுமே இமையழற்சி அறிகுறிக்குக் காரணம் ஆகலாம்.

மருத்துவக் குணாம்சங்களையும் சோதனைகளையும் கொண்டு ஒரு கண் மருத்துவர் நோயைக் கண்டறியலாம்.

இமையழற்சி நோயாளிகளைச் சோதனை செய்யும்போது கீழ்வரும் தொடர்புடைய நோயறிகுறிகளும் காணப்படுகின்றன:

-    முகப்பரு: முகப்பருவுடன் இணைந்து கொப்புளம், குருதிக்கிளைக்குழல் விரிவு, மூக்குமுனைக்கட்டி அல்லது செந்தடிப்பு உண்டாகும்.

-    எண்ணெய் மிகைப்புத் தோல் அழற்சி: எண்ணெய்ப் பசையுள்ள தோலும், தலை ஓடு அல்லது புருவத்தில் இருந்து செதிள் அடர்வதும் இதன் தன்மைகள்.

-    சிற்றக்கி: செந்தடிப்பும் சிறு கொப்புளமும் காணப்படும்.

இமைச் சோதனை:

இமையைச் சோதிக்கும் போது செந்தடிப்பும், இமைமயிர் மற்றும் இமை விளிம்புகளில் மேலோடு பெயர்தலும் காணப்படும்.

பிளவு-விளக்கு சோதனை:

கீழ்க்காணும் அம்சங்களைக் காட்டும்:

இமை மாற்றங்கள்:

-    இமை மயிர் இழப்பு

-    இமை மயிர் வெளுப்பு

-    இமை மயிர் உட்சுருளல்

-    மெய்போமியன் துளைகள் அடைபடல் அல்லது முன்துருத்தல்

-    இமை விளிம்பில் புண்

-    இமை ஒழுங்கின்மை

-    குருதி கிளைக்குழல் விரிதல்

-    இமை உட்பிறட்சி

இமை இணைப்படல மாற்றங்கள்:

-    காம்பு உட்புகல்

-    இயல்பான இமைத்தகடு இரத்தக் குழல் அமைப்பு இழப்பு

-    இமைத்தகடு தடித்தல்

-    விழிப்படல வடு

-    இமைத்தகட்டில் தழும்புச் சுருக்கமும் உருக்குலைவும்

வெண்படல பாதிப்புகள்:

-    புள்ளி மேல் செல் அரிப்பு

-    விளிம்பில் புண்

-    வெண்படல விளிம்பு அழற்சி

-    புற வெண்படலத் தளர்ச்சி

-    படலம்

-    நுண்குமிழ் உருவாதல்

கண்ணீர் படலம் உடைபடும் காலம்:

இறுதி இமைத்தலுக்கும் முதல் உலர் புள்ளி தோன்றுதலுக்கும் இடைப்பட்ட நேரமாகுமிது.

கண்ணுக்குள் நிரப்பப்பட்ட ஒளிர் சாயம் நோயாளி இமைக்கும் போது கண்ணுக்குள் பரவும். இப்போது அவர் இமைப்பதை நிறுத்தி விடுவார். கோபால்ட் நீல வடிகட்டியில் கண் சோதிக்கப்படும். சற்று இடை வெளிக்குப் பின் கருப்பு புள்ளிகளோ வரிகளோ தோன்றினால் அது உலர் பகுதிகள் உருவாவதற்கான அடையாளம். ஒரே பகுதியில் உலர் பகுதி தோன்றினால் அது அப்பகுதி வெண்படலக் கோளாறு ஆகும். அதை அலட்சியப்படுத்தி விடலாம். 10 வினாடிகளுக்கு உட்பட்ட உடைபடும் காலம் கண்ணீர்ப் படல உறுதித்தன்மை இன்மையை உணர்த்தும்.

முன்னிமை அழற்சி:

முன்னிமை அழற்சியில் குறிப்பாக இமைமயிரும் தொடர்புடைய எண்ணெய்ச் சுரப்பிகளும் பாதிப்படைகின்றன. பின் வருவன போன்ற பலவகையான சிதைவுகள் இமை மயிரில் ஒட்டுகின்றன:

-    பொருக்குப்படிதல்: பொருக்குப் படிதல் எண்ணெய் மிகைப்பு நோய் ஆகும். முன்னிமை அழற்சி முன் இமையில் உண்டாகும். பிசுபிசுப்பான பொருக்குகள் இமை மயிரில் ஒட்டி இருக்கும்.

-    வளையம்: இமை மயிரின் அடிப் பகுதியில் ஒழுங்கற்ற வளையங்கள் உருவாதல். ஸ்டேப்பிலோகோக்கல் இமையழற்சியில் இது காணப்படும்.

-    உறை: மெல்லிய குழல் போன்ற அமைப்புகள் இமைமயிரின் அடிப்பகுதியில் உருவாகும் (டெமோடெக்ஸ் உண்ணி பிடிப்பில் காணப்படுவது போல).

-    புண்கள்: இமை மயிரின் அடியில் புண் உருவாதல். பைப்ரின் பொருக்கால் இவை மூடப்பட்டிருக்கும்.  இவை இமை மயிர் தண்டு வளர்ச்சியால் மேலே தூக்கப்பட்டிருக்கும்.

ஸ்டேப்பிலோகாக்கல் இமையழற்சியோடு பொதுவாக விழிவெண்படல நோய்களும் இருக்கும்.

முன்னிமை அழற்சி:

மெய்போமியன் சுரப்பிகளின் சுரப்பு வளர்சிதை மாற்றத்திலும் செயல்பாட்டிலும் முன்னிமை அழற்சி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மெய்போமியன் சுரப்பு மெழுகுபோல் ஆகி சுரப்பியின் துளைகளை அடைக்கிறது. பொருட்கள் தேங்குவதால் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைந்து அழற்சி ஏற்படுகிறது.

-    மெய்போமியன் எண்ணெய்மிகைப்பு அழற்சி: மெய்போமியன் எண்ணெய்மிகைப்பு அழற்சியால் மெய்போமியன் சுரப்பிகள் விரிவடைந்து அதிக அளவில் லிப்பிடுகளை உற்பத்தி செய்கிறது. இது இமை விளிம்பில் சிறு எண்ணெய்க் கோளங்களாக அல்லது மெழுகுப் பொருள் திரட்சிகளாக வெளிப்படுகின்றன. கண்ணீர்ப் படலம் அதிக எண்ணெய்ப் பசையுடனும் நுரையுள்ளதாகவும் இருக்கிறது. கடுமையான நேர்வுகளில் சுரப்பு நுரை போன்ற கசிவாக உட்கண் மூலையில் திரண்டு நிற்கும் (மெய்போமியன் நுரை). இதனால் காலையில் முதலில் விழித்தவுடன் எரிச்சல் உணர்வு உண்டாகும்).

-    முதன்மை மெய்போமியன் அழற்சி: மெய்போமியன் சுரப்பித் துளைகளைச் சுற்றிப் பரந்த அளவில் அழற்சி இருக்கும். இதனுடன் முகப்பரு அல்லது எண்ணெய் மிகைச்சுரப்பு தோல் அழற்சியும் காணப்படும்.

மெய்போமியன் சுரப்பித் துளையில் பிதுக்கம் காணப்படும். இதில் எண்ணெய் முகடுகள் தொப்பி போல அடைக்கும். மெய்போமியன் சுரப்பு கலங்கியும் துகள்கள் கொண்டதாகவும் இருக்கும். இமைத்தகட்டு சுரப்பிகளை உறுதியாக அழுத்தும்போது கட்டியான சுரப்புகள் இருப்பதைப் பார்க்க முடியும்.

முக்கிய மெய்போமியன் நாளங்களின் அழிவால் இரண்டாம் நிலை கட்டி விரிவும் மெய்போமியன் கட்டி உருவாதலும் நிகழும். நன்கு  வளர்ச்சியுற்ற நிலையில் பின் இமை விளிம்பில் கட்டிப்படுதல், வட்டமாதல், இரத்தக்குழல் உருவாதல் மற்றும் பள்ளமாதல் ஆகியவை நடைபெறலாம். இரண்டாம் கட்ட மாற்றங்களான காம்பு விழிப்படல அழற்சி, கீழ்ப்புள்ளி மேல்செல்நோய், கண்ணீர்ப்படல நிலைப்பின்மை ஆகியவை உருவாகலாம்.

மெய்போமிய அழற்சியுடன் இரண்டாம்கட்ட இமையழற்சி: மெய்போமிய அழற்சியுடன் இரண்டாம்கட்ட இமையழற்சி எப்போதும் எண்ணெய் மிகைப்பு தோல் அழற்சியுடன் இணைந்தே ஏற்படும். முதன்மை மெய்போமிய அழற்சிக்கு மாறாக மெய்போமியன் சுரப்பிகள் இலேசாகவும் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே பாதிக்கப்படும். சுரப்பிகளைச் சுற்றி அழற்சி காணப்படும். வெளியேற முடியாத அளவுக்கு சுரப்புகள் கட்டிப்படும். இரண்டாம் கட்ட விழிப்படல, வெண்படல மாற்றங்கள் பொதுவாக இலேசாக இருக்கும். சில நோயாளிகளுக்கு இது தொடர்பான கண்ணீர்ப் படல நிலையாமையும் இருக்கலாம்.

பொதுவான தனித்துவ அம்சங்கள் வருமாறு:

-    மெய்போமியன் சுரப்பி அடைப்பு

-    கட்டியான லிப்பிட் சுரப்பு

-    சுரப்பித் துளைகளில் அழற்சி

-    துளை அடைபடுவதால் இமைவீக்கம் அல்லது தொற்றால் இமைக்கட்டியும் உண்டாகலாம்.

-    கண்ணீர்ப்படல நிலையாமை

-    காம்பு விழிப்படல அழற்சி.

பின் இமை அழற்சியால் வெண்படல மாற்றங்கள் ஏற்படலாம்.

கண்டறியும் முறைகள்:

குறிப்பிட்ட மருத்துவ ரீதியான கண்டறியும் சோதனைகள் இல்லாவிட்டாலும் கீழ்வரும் சோதனைகள் உதவியாக இருக்கலாம்:

-    இமை விளிம்பு திசுச் வளர்ச்சி சோதனை: அடிக்கடி கடுமையான அழற்சியுடன் முன் இமையழற்சி உண்டாகும் அல்லது சிகிச்சை பலனளிக்காத நோயாளிகளுக்கு இமை விளிம்புத் திசு வளர்ச்சி சோதனைச் செய்யப்படலாம்.

-    நுண்காட்டி மதிப்பீடு: இமைமயிரை நுண்காட்டி மூலம் சோதிக்கும் போது டெமொடெக்ஸ் உண்ணிகளைக் கண்டறியலாம்.

-    திசுவளர்ச்சி சோதனை: குறிப்பிடத்தக்க அசமச்சீர் காணப்படும் அல்லது ஒரே இடத்தில் சிகிச்சையில் குணமாகாத இமைவீக்கம் ஏற்பட்டாலும் புற்று அல்ல என்பதை உறுதி செய்ய இமைத் திசு வளர்ச்சி சோதனை செய்யலாம்.

திசுவியல் கண்டுபிடிப்புகள்:

-    எண்ணெய் மிகைப்பு இமையழற்சி: இதில் தோலடி கொழுப்பு வீக்கம், மிதமான இரத்தக்குழல் சூழ் வடிநீர்செல், ஒற்றைக்கரு செல் ஊடுறுவல்கள் மேல் தோலில் காணப்படும்.

-    ஸ்டேபிலோகோக்கல் இமையழற்சி: இது ஒரு நீடித்த நுண்மணிப் புற்றற்ற அழற்சி. பொதுவாகப் பன்முனைக்கரு வெள்ளணுவுடன் தோல்தடிப்பு நோயையும் கொண்டிருக்கும்.

பிம்ப ஆய்வுகள்:

-    லிப்பிவியூ (கண்ணீர் அறிவியல்): பிறழ்ந்த கீழ் இமைத்தகட்டின் தனித்தனி மெய்போமியன் சுரப்பிகளையும் இதன் மூலம் படம்பிடிக்கலாம். மேலும் மெய்போமியன் சுரப்பியின் நிலை குறித்த பாதி – அளவுப் பகுபாய்வையும் இது உருவாக்குகிறது. இது முழுமையற்ற இமைப்பு விகிதத்தையும் லிப்பிட் அடுக்கின் தடிமனையும் அளக்கிறது.

-    கெராட்டோகிராப் 5M  (கண்சார்): இதன் மூலம் மெய்போமியன் சுரப்பியின் பிம்பங்களைப் பெறலாம்.

இமையழற்சியை பின்வரும் நிலமைகளில் இருந்து வேறுபடுத்திக் காணவேண்டும்:

-    பாக்டீரியாத் தொற்று: இம்பெட்டிகோ அல்லது எர்சிபெலெஸ் போன்றவை.

-    வைரல் தொற்று: பாப்பிலோமாவைரஸ் அல்லது வேக்சினியா.

-    ஒட்டுண்ணித் தொற்று: ப்தைரஸ் பியூபிஸ் (பெடிகுலோசிஸ் பால்பிப்ராரும்)

-    வீக்கமற்றத் தோல் நோய்: யானைச்சொறி மற்றும், செந்தோல்.

-    நோய்த்தடுப்பு நிலைகள்: ஒவ்வாமை அல்லது தொடர்பு தோலழற்சிகள்.

-    தீங்கற்ற இமைக் கட்டிகள்: வெயில் ஒவ்வாமைக் கரடு அல்லது செதிள் செல் காம்புக்கட்டி.

-    தீய இமைக் கட்டிகள்: அடிசெல் புற்று அல்லது செதிள் செல் புற்று.

-    காயம்: இயந்திர, வெப்ப, கதிர்வீச்சுக் காயங்கள்.

-    நச்சுத் தன்மைகள்: மருந்து உபயோகத்தால் ஏற்படுபவை.

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை அளிக்க வேண்டும்.

உபாதை அல்லது பார்வை அறிகுறிகள் ஏற்படும் நோயாளிகளுக்குத் தீர்வை உண்டாக்குமாறு நீடித்த கோளாறான இமையழற்சிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முன் பின் இமையற்சியின் நோயுடலியல் வெவ்வேறாக இருந்தாலும் சிகிச்சை ஒன்றாகவே உள்ளது.

பொதுவான நடவடிக்கைகள்:

-    இமைச் சுத்தம்: வெதுவெதுப்பான அழுத்தம், ஈரத் துணியால் இமை பிடித்தல் மற்றும் இமை தேய்த்தல், கண்ணீரற்ற குழந்தைகள் ஷாம்பு போன்றவை செதிள்களையும் சிதைவுகளையும் அகற்ற துணைபுரியும்.

மருத்துவ சிகிச்சை:

-    மேற்பூச்சு நுண்ணுயிர்க்கொல்லி: அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கவும், இமை விளிம்பில் இருந்து பாக்டீரியாக்களை அகற்றவும் மேற்பூச்சு நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்படுகின்றன.

-    வாய்வழி நுண்ணுயிர்க்கொல்லி: இமை விளிம்பு சுத்தத்தால் கட்டுப்படுத்த முடியாத மெய்போமியன் சுரப்பிச் செயலிழப்புள்ள நோயாளிகள்  அல்லது தொடர்புடைய முகச்சிவப்பு நோயாளிகளுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.

-    மேற்பூச்சு ஊக்கமருந்து: குறிப்பிடத்தக்க விழி அழற்சி இருக்கும் போது இவை அறிகுறிகளுக்கான நிவாரணம் அளிக்கின்றன.

-    நுண்ணுயிர்க்கொல்லிகளும் ஊக்கமருந்தும் இணைந்த மேற்பூச்சு மருந்து: பாக்டீரியா தொற்றும் அழற்சியும் சேர்ந்து இருந்தால் இது பயன்படும்.

-    மேற்பூச்சு செயற்கைக் கண்ணீர்: பெரும்பாலான இமையழற்சி நோயாளிகளுக்கு கண்ணீர்ப்படலக் கோளாறுகள் உள்ளன. இமை சுத்தம், மருந்துகளோடு மேற்பூச்சு மசகு போல் செயற்கைக் கண்ணீர் பயனபடுத்தப்படுகிறது.

-    மேற்பூச்சு சைக்ளோஸ்போரின்: கடுமையான இமையழற்சி உடையவர்களுக்கு நுண்கொல்லி மற்றும் ஊக்க மருந்து இணைப்பை விட சிறப்பாக இது நிவாரணம் அளிக்கிறது.

அறுவை மருத்துவம்

இமைமயிர் உட்சுருளல், கண்ணிமை வீக்கம், கண்ணிமை துருத்தல், இமையுட்பிறட்சி, வெண்படல நோய்கள் போன்ற சிக்கல்களுக்கே அறுவை மருத்துவம் தேவைப்படுகிறது.

நோய் முன்கணிப்பு:

இமையழற்சி நோயாளிகளுக்கு நோய் முன்கணிப்பு சிறப்பானதில் இருந்து மிகச் சிறப்பானது வரை அமைகிறது. ஒரு சிறு தொகுதி மக்களுக்கே இமையழற்சி குறிப்பிடத்தக்க நோயாக ஏற்படுகிறது. பெரும்பான்மையானவர்களுக்கு ஆரோக்கியத்தையும் செயல்பாடுகளையும் பாதிக்காத ஒரு நோய் அறிகுறியாகவே உள்ளது.

இமையழற்சி என்பது நீடித்த ஒரு நிலையாகும். ஏற்ற இறக்கங்கள் காணப்படும். நோயாளிகளுக்கு அதிக அளவில் உபாதையும் துன்பமும் உண்டாவதால் அவர்களின் அன்றாடக வாழ்க்கை மற்றும் பணி நடவடிக்கைகளில் இடையூறும் நலக்குறைவும் உண்டாகும். அறிகுறிகளைத் தொடர் நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தலாமே தவிர உடனடி நிவாரணங்கள் இல்லை. இமையழற்சியை முற்றிலுமாகக் குணப்படுத்துவது கடினம். கடுமையான இமையழற்சியால் இமை விளிம்பில் நிரந்தர மாறுதல் அரிதாக ஏற்படலாம்.

இமையழற்சியின் சிக்கல்கள் வருமாறு:

-    இமைப்படல அழற்சி

-    கெராட்டினாக்கம்

-    வெண்படல ஊடுறுவல்

-    வெண்படலப் புண்

-    இமைமயிர் உட்சுருளல்

-    இமைப் பள்ளம்

-    இமையுட்பிறட்சி

-    கண்ணிமைத் துருத்தல்

மண்டலம் சார் நோயையும் திடீர் நோய்த்தாக்கத்தையும் தடுக்க நீண்ட கால இமைச் சுத்தம் பயன் உள்ளதாக இருக்கும்.

 

  • PUBLISHED DATE : Mar 17, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Mar 17, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.