கண்ணீர்ப்பையழற்சி

கண்ணீர்ப்பையைப் பாதிக்கும் அழற்சி கண்ணீர்ப்பையழற்சி ஆகும்.

கண்ணீர்க் கழிவு மண்டலம் கண்ணில் இருந்து கண்ணீரை நாசிக் குழிக்கு வடிக்கிறது. கண்ணீர் வடிகால் மண்டலத்தில் ஏற்படும் அடைப்பால் கண்ணீர் தேங்கி கண்ணீர்ப்பை அழற்சி உண்டாகும்.

கண்ணீர் வடிகால் மண்டலத்தில் காணப்படுபவை:

கண்ணீர்ப்புள்ளி: ஒவ்வொரு இமையின் உட்புற ஓரத்தின் அருகிலும் அமைந்துள்ள கண்ணீர்ப்புள்ளி செங்குத்து விழிநுண்கால்வாயை இணைக்கிறது.

செங்குத்து விழிநுண்கால்வாய்:  2 மி.மீ நீளமுள்ள இது கிடைக்கோட்டு விழிநுண்கால்வாயோடு தொடர்கிறது.

கிடைக்கோட்டு விழிநுண்கால்வாய்: இது 8 மி.மீ. நீளம் கொண்டது. மேல் கீழ் இமைகளின் விழ்நுண்கால்வாய்கள் இணைந்து 90 % நேர்வுகளில் பொது விழிநுண்கால்வாயை உருவாக்குகின்றன. பொது விழிநுண்கால்வாய் கண்ணீர்ப்பையின் பக்க சுவரில் திறக்கும் இடத்திற்கு மேலாக ஒரு சிறு சளிச்சவ்வு இதழ் தொங்கும் (ரோசன்முல்லர் அடைப்பிதழ்).

கண்ணீர்ப்பை: கண்ணீர்ப்பை ஏறக்குறைய 10 மி.மீ. நீளம் உள்ளது. இது கண்ணின் உட்புறக் கண்மூலை அருகில் (மேல் கீழ் இமைகள் உட்புறமாகச் சந்திக்கும் பகுதி) கண்ணீர்ப் பள்ளத்தில் அமைந்துள்ளது. நாசிக்கண்ணீர் நாளமாக அது தொடரும்.

நாசிக்கண்ணீர் நாளம்: இது ஏறக்குறைய 12 மி.மீ. நீளம் கொண்டது. கண்ணீர்பையை நாசிக்குழாயுடன் இணைக்கிறது (இது கீழ் மூக்குத்துவாரத்தில் திறக்கிறது). இந்த நாளத்தின் வாய் ஹேஸ்நர் அடைப்பிதழ் என்னும் ஒரு சளிச்சவ்வு மடிப்பால் பகுதி அளவு மூடப்பட்டுள்ளது.

 

ஒவ்வொரு இமைப்பின் போதும் கண்ணீர்ச் சுரப்பி சுருங்கி விரியும்போது (விழிக்குழி வட்டத்தசையால் கட்டுப்படுத்தப் படுகிறது) கண்ணீர், கண்ணில் இருந்து மூக்கிற்கு செல்லுகிறது.

கண்ணில் இருந்து அதிக அளவு நீர் பெருகுதலுக்குப் பின் வருபவை காரணங்களாக இருக்கலாம்:

-    கண்ணீர் வடிதல்: விழிவெண்படலம் அல்லது விழியிணைப்படலத்தில் ஏற்படும் உறுத்தலால் கண்ணீர் அனிச்சையாக அதிகமாக உற்பத்தியாவதால் கண்ணீர் வடிகிறது.

-    மிகைக்கண்ணீர் அடைப்பு: கண்ணீர் வடிகால் இயந்திரகதியில் அடைபடுவதால் ஏற்படுகிறது.

-    கண்ணீர் இறைப்பு செயலிழப்பு: கீழ் இமை இயக்கம் இழப்பதாலும் விழிக்குழி வட்ட தசை பலவீனத்தாலும் உண்டாவது.

கண்ணீர்ப்பை அழற்சி பிறவியாகவோ அல்லது பெறப்பட்டதாகவோ இருக்கலாம்:

நாசிக்கண்ணீர்க் குழாய்க் கால்வாய் உருவாகாமல் இருப்பதே பிறவி கண்ணீர்ப்பை அழற்சியின் காரணம்.

பெறப்பட்ட கண்ணீர்ப்பை அழற்சி பொதுவாகக் கடுமையானதாக அல்லது நீடித்ததாக இருக்கும்.

கடும் கண்ணீர்ப்பை அழற்சியில் கண்மூலையில் கடுமையான சிவப்பு மற்றும் வலி உண்டாகும்.

நீடித்த கண்ணீர்ப்பை அழற்சியின் போது கண்ணீர்ப்பையில் நீடித்த அழற்சி அல்லது தொற்று ஏற்பட்டு  கண்ணில் இருந்து நீர் வடியும்.

குறிப்புகள்:

http://emedicine.medscape.com/article/1210688-overview

http://eyewiki.aao.org/Dacryocystitis

http://eyewiki.aao.org/Dacryocystorhinostomy

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/7091274

Kanski,Jack J. Clinical Ophthalmology, A Systematic Approach .Third Edition.UK. Butterworth Heinemann, 1994.

நோயாளிக்குக் காணப்படுவன:

பிறவி கண்ணீர்ப்பையழற்சி: நாசிக்கணீர் நாளத்தின் கீழ் முனையில் பிறவியில் இருந்தே வடிகால் இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும் பிறந்து ஒரு வாரத்திலேயே அது தானாகவே வடிகாலை ஏற்படுத்திக் கொள்ளும். வடிகால் அமையாத காலகட்டத்தில் குழந்தைக்குப் பின் வரும் அறிகுறிகள் காணப்படும்:

-    கண்ணில் நீர் வடிதல்

-    அடைப்பால், மிகைச்சேர்க்கைத் தொற்று ஏற்பட்டு சளிச்சீழ் வெளிப்படும்

வடிகால் ஏற்படாமையோடு பிறப்புக்கு முன்னான தொற்றும் பிறவி கண்ணீர்ப்பை அழற்சியை உண்டாக்கும்.

 

கடும்கண்ணீர்ப்பை அழற்சி: பின் வரும் அம்சங்களில் ஒன்று அல்லது கூடுதலானவற்றோடு தொடர்புடையாதாக இருக்கலாம்:

-    கண்ணீர்ப்பைக்கு மேற்பகுதியில் திடீரென வலி, செம்மை மற்றும் வீக்கம்.

-    கண்ணீர் வடிதல்

-    கண்ணீர்ப்பைக்கு மேல் கசியும் புண்

-    விழியிணைப்படலச் செம்மை

-    இமை வீக்கம்

காய்ச்சல் மற்றும் படுத்துக் கிடப்பது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

 

நீடித்த கண்ணீர்ப்பை அழற்சி: இதனோடு தொடர்புடையவை:

-    கண்ணில் நீர் வடிதல்

-    தொற்று இருந்தால் சளிச்சீழ் கண்ணில் இருந்து வடிதல்.

-    விழியிணைப்படலச் சிவப்பு

-    கண்ணீர்ப்பை பகுதியில் வீக்கம்.

கண்ணீர்ப்பை அழற்சியை உண்டாக்கும் கிருமிகள்:

குழந்தைகளில்:

-    ஸ்டெபிலோகாக்கஸ் ஆரியஸ்

-    β – ஹீமோலிட்டிக் ஸ்ட்ரெப்டோகாக்கஸ்

-    நிமோகாக்கஸ்

-    ஹீமோபிலஸ் இன்புளுயன்சே

பெரியவர்களில்:

-    ஸ்டெபிலோகாக்கஸ் எப்பிடெர்மிடிஸ்

-    ஸ்டெபிலோகாக்கஸ் ஆரியஸ்

-    நிமோகாக்கஸ்

-    சூடோமோனாஸ் ஏருகிநோசா

-    ஃபியூசோபேக்டீரியம்

பொதுவாக நாசிகண்ணீர் நாளத்தில் உண்டாகும் அடைப்பால் கண்ணீர் தேங்கி கண்ணீர்ப்பை அழற்சி ஏற்படுகிறது.

கண்ணீர் வடிகால் மண்டலத்தை கண்ணீர்க்கல் தடுக்கலாம். கண்ணீர்க்கல் பூஞ்சை தொற்றோடு தொடர்புடையது.

மூக்கு நோய்களான நாசியழற்சி,  நாசி இடைச்சுவர் விலகல்,  நாசி விழுது அல்லது கீழ் மூக்குத் தடுப்பெலும்பில் மிகைத் தசை வளர்ச்சி போன்றவை மூக்கின் நாசிகண்ணீர் நாளத்தின் துவாரத்தை அடைத்து கண்ணீரைத் தேங்கச் செய்கின்றன.

நடு முகக் கோளாறுகளையும் காரணிகளாகக் கருதலாம்.

மறைந்திருக்கும் புற்றும் கண்ணீர்ப்பை அழற்சி போல் காணப்படலாம்.

மருத்துவ மனைச் சோதனைகள் மூலம் நோய் கண்டறியப்படுகிறது:

பிறவி கண்ணீர்ப்பை அழற்சி: குழந்தைகளுக்குக் காணப்படுபவை:

-    கண்ணீர் ஒழுக்கு.

-    அடைப்பால் மேற்படிவு தொற்று ஏற்பட்டு கண்ணில் சீழ் ஒழுகுதல்.

-    கண்ணீர்ப்பை பகுதியைப் பிதுக்கும் போது கண்ணீர் முனையில் இருந்து கசிவுகள் எதுக்களித்தல்.

-    பிறவி கண்ணீர்ப்பை சீதப்பை. ஹேஸ்நர் அடைப்பிதழில் துளை இன்மையால் சளி கண்ணீர்ப்பையில் திரள்தல். இது கண்முனையின் உட்புறம் நீல நிறக் கட்டி போன்ற வீக்கமாகத் தோன்றும். இதை மூளை இறக்கத்தில் இருந்து வேறுபடுத்திக் காண வேண்டும். அது உள் கண்மூலைப் பகுதியின் மேல், துடிக்கும் வீக்கமாகக் காணப்படும்.

கண்களில் நீர் வடிதல் கொண்ட பிறந்த குழந்தை விழியிணைப்படல அழற்சி, நாளத் துளையின்மை, பிறவி பசும்படலம் போன்ற நிலைகளில் இருந்து கண்ணீர்ப்பை அழற்சியை வேறுபடுத்திக் காண வேண்டும்.

மருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும்.

பிறவி கண்ணீர்ப்பை அழற்சி:

-    கண்ணீர்ப்பைக்கு மேல் வெளிப்புறமாக நீவுதல்: பொது விழிநுண் கால்வாயை விரலால் அடைத்துக் கொண்டு கண்ணீர்ப்பைக்குள் நீர்நிலை அழுத்தத்தை அதிகரிக்கும் வண்ணம் மேலிருந்து கீழாகத் தடவப்படுகிறது. இதனால் நாசிகண்ணீர் நாளத்தில் இருக்கும் சவ்வு அடைப்புகள் விடுபடலாம்.

-    மேலடுக்குத் தொற்றுக்களுக்கு மேற்பூச்சு அல்லது முறையான நுண்கொல்லிகள்.

-    சோதித்தலும் மருந்து செலுத்துதலும்: நாசி கண்ணீர் நாளம் தானாகவே திறக்கா விட்டால் அதன் கீழ் முனையில் இருக்கும் சவ்வடைப்பை அகற்ற சோதனை நடத்தப்படும். சோதனைக்குப் பின் ‘சிரிஞ்சிங்’ சிகிச்சை அளிக்கப்பட்டு பின் நுண்ணுயிர்க் கொல்லி சொட்டு பரிந்துரைக்கப்படும். முன்னேற்றம் இல்லாதபோது சோதனை திரும்பவும் மேற்கொள்ளப்படும்.

-    கண்ணீர்ப்பைத்துளையிடல்  (DCR): இது ஓர் அறுவை சிகிச்சை.கண்ணீர்ப்பையின் உட்சுவரில் ஒரு பாதை அமைக்கப்பட்டு நாசிக்குழியுடன் சேர்க்கப்படுகிறது. சோதனை தோல்வி அடைந்த நேர்வுகளில் இது நடத்தப்படுகிறது.

கடும் கண்ணீர்ப்பை அழற்சி:

-    முறையான அகல்வினை நுண்கொல்லிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

-    நோயைத் தீர்க்க வெதுவெதுப்பான ஒத்தடங்கள் உதவலாம்.

-    தோலைக் கீறும் அறுவை: தோலை ஊடுறுவி கண்ணீர்ப்பயைக் கீறி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் ஓட்டை அரிதாக உருவாகலாம்.

-    கண்ணீர்ப்பைத்துளையிடல்  (DCR): கடும் தொற்று கட்டுப்படுத்தப் பட்டவுடன் நிரந்தர அடைப்பை அகற்ற இது தேவைப்படலாம்.

நீடித்த கண்ணீர்ப்பை அழற்சி:

-    கண்ணீர்ப்பைத்துளையிடல்  (DCR): நிலைத்த மிகைக்கண்ணீர் அல்லது சீதப்பை இருக்கும் நோயாளிக்கு அடைப்பை அகற்ற இம்முறை பின்பற்றப்படுகிறது.

-    அகநோக்கு கண்ணீர்ப்பைத்துளையிடல்: இது மூக்கின் வழியாக செய்யப்படும் அக சிகிச்சை. லேசரோடும், லேசர் இன்றியும் செய்யப்படும்.

கண்ணீர்ப்பை அழற்சியால் பின்வரும் சிக்கல்கள் உருவாகலாம்:

-    கண்ணீர்ப்பைக் கட்டி

-    ஓட்டை ஏற்படுதல்

-    கண்கோள இணைப்புத்திசு அழற்சி

-    உட்புழை இரத்த உறைவு

-    மூளைக்காய்ச்சல்

  • PUBLISHED DATE : Jan 25, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Jan 25, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.