குறைப்பிரசவ விழித்திரைநோய்

குறைபிரசவ விழித்திரை நோய், முன்னர் விழிவில்லை திசுமிகைப்பு என அழைக்கப்பட்டது. இது ஒரு குழல்மிகைப்பு விழித்திரை நோயாகும். அதிக அளவில் உயிர்வளிக்கு உட்படுத்தப்படும் குறைப்பிரசவக் குழந்தைகளை இது பாதிக்கிறது. இந்நோய் தானாகவே குறையும். ஆனால் பார்வைக் கோளாறுகளையும் பார்வையிழப்பையும் உண்டாக்கும் திறன் கொண்டது ஆகும். விழித்திரை இரத்தக் குழல்கள் இந்நோயால் ஒழுங்கின்றி வளர்ந்து விழித்திரை வடுக்களுக்கும் விழித்திரை விடுபடலுக்கும் காரணம் ஆகிறது.

கருவளர்ச்சியின் நான்காம் மாதம் வரை விழித்திரையில் இரத்தக் குழல்கள் உருவாகுவதில்லை. அதன்பின், பார்வைத்தகட்டின் ஹையலாய்ட் குழல்களில் இருந்து இரத்த நாளங்கள் வெளிப்பட்டு ஓரங்களை நோக்கி வளர்கின்றன. கருவளர்ச்சியின் எட்டாவது மாதத்தில் அவை  மூக்கு ஓரங்களை அடைகின்றன. ஆனால் பொட்டு ஓரங்களைப் பிறந்து 1 மாதம் கழித்தே அடைகின்றன. விழித்திரையின் மேற்பகுதியில் இரத்தக் குழல்கள் அரைகுறை வளர்ச்சியை அடைந்திருப்பதால் உயிர்வளி அளிப்பதால் சேதம் அடையக் கூடும் - குறிப்பாகக் குறைப்பிரசவக் குழந்தைகளில். இயல்பாக விழித்திரையில் இரத்தக் குழல்கள் உருவாவதைக் குறைப்பிரசவம் பாதிக்கிறது. உயிர்வளி படவைத்தலால் விழித்திரை இரத்தக்குழல் அகத்தோல் வளர்ச்சிக் காரணி (VEGF) கீழ்முக முறைப்படுத்தலுக்கு உள்ளாகி இரத்தக்குழல்கள் ஒடுக்கம்/சிதைவு அடைந்து இயல்பான விழித்திரை குழல்வளர்ச்சியை தேக்கம் அடையச் செய்கிறது.

குறிப்பிடத்தக்க நிலையில் உள்ள ROP, குறிப்பாக, பிறந்த குழந்தை ஆழ்கவனப் பிரிவில் தப்பிப்பிழைக்கும் சிறிய அளவிலான குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் உடல்குறைபாட்டுடன் வாழ வழிவகுக்கிறது.

குறிப்புகள்:

http://emedicine.medscape.com/article/976220-overview

http://eyewiki.org/Retinopathy_of_Prematurity

http://reference.medscape.com/medline/abstract/17471328

Kanski,Jack J. Clinical Ophthalmology, A Systematic Approach .Third Edition.UK. Butterworth Heinemann, 1994.

விழித்திரை இரத்தக் குழல்கள் இயல்பாக வளர்ச்சி அடைவதற்கு முன் பிறக்கும் குறைப்பேற்றுக் குழந்தைகளுக்கு ROP உண்டாகிறது. பிற விழித்திரை நோய்களைப் போலவே குறைப்பிரசவ விழித்திரை நோயிலும் பகுதி சார் குருதியூட்டக் குறை ஒரு பங்கு வகிக்கிறது.

முதிர்ச்சி அடையாத விழித்திரையில் உள்ள இரத்தக் குழல்கள் அழிவதற்கு அதிக அளவிலான உயிர்வளி படுதல் காரணமாகிறது. பிறப்பில் இருந்தே உயிர்வளி மிகைப்பைக் கட்டுப்படுத்தினால் ROP வளர்ச்சி அடையாது.

ROP-க்கான ஆபத்துக் காரணிகள்:

-    கருவளர்ச்சிக் காலம் (32 வாரங்கள் அல்லது குறைவு)

-    குறைவான பிறப்பு எடை (1500 கிராம்களுக்குக் குறைவு)

-    அதிக அளவில் உயிர்வளி அளித்தல்

பிறப்புக்குப் பின் இருக்கும் நிலையை விட கருப்பையில் இருக்கும் கரு மிகை உயிர்வளி பெற்று இருக்கும். குறைப்பிரசவக் குழந்தைகளில்  விழித்திரைக் குழல்வளர்ச்சி குழல் அகத்தோல் வளர்ச்சிக் காரணியால் (VEGF) தூண்டப்படும். எனினும், வளர்ச்சி அடையாத விழித்திரையில் உயிர்வளி ஊட்டப்படும்போது இரத்தக் குழல்கள் ஒடுங்குகின்றன. மேலும் அழிவுற்று இயல்பான விழித்திரை வளர்ச்சியும் தேக்கம் அடைகிறது. இதுவே மிகை உயிர்வளி குழல் வளரா நிலை.

ஆரம்பத்தில், விழித்திரை கருவிழிப்படல அடுக்கின் அடியில் இருக்கும் தந்துகிப் படுகையில் இருந்து பரவல் முறையில் உயிர்வளியைப் பெறுகிறது. விழித்திரை தொடர்ந்து அடர்த்தியாக வளர்ந்து வரப் போதுமான இரத்தக் குழல்கள் அதற்கு இணையாக வளர்வதில்லை. ஆனால் நாட்செலச்செல, இரத்தக்குழலற்ற விழித்திரை குருதியூட்டக் குறை அடைந்து இரத்தக்குழல் அகத்தோல் வளர்ச்சிக் காரணியைத் தூண்டுகிறது. இதனால் மிகைஉயிர்வளி குழல்பெருக்க நிலை உருவாகி தமனி-சிரை தடமாற்றமும் புதுக்குழல்வளர்ச்சியும் ஏற்படுகிறது.

ஆபத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு பொருத்தமான காலத்தில் சோதனையும் தொடர்நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

 

நோய்கண்டறிதல் வளர்ச்சியின் வரலாற்றையும் மருத்துவ அம்சங்களையும் பொருத்துள்ளது.

குறைந்த பிறப்பு எடையையும், கருவளர்ச்சி காலத்தையும் கொண்ட குழந்தைகளே அதிக நோயாபத்தில் உள்ளன.

தொடர்ந்து உயிர்வளி ஊட்டம் பெறுவதும் இந்நோய் ஏற்படும் சாத்தியக் கூற்றை அதிகப்படுத்துகிறது.

பிற குறைப்பிரசவ விழித்திரைநோய் (ROP) தாக்குந்தன்மைகளாவன: பொறிநுட்ப சுவாசம், திறந்த தமனி நாளம், தொடர்புடைய நோய்க்கடுமை (சுவாச இடர் நோய்த்தாக்கம், சீழ்ப்பிடிப்பு, மூச்சுக்குழல்-நுரையீரல் பிறழ்வு)

மருத்துவ அம்சங்கள்:

முனைப்புடைய ROP:

இடம், விரிவு, நிலை மற்றும் கூடுதல் நோய்களைக் கொண்டு முனைப்புடைய குறைப்பிரசவ விழித்திரைநோய் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.

இடம்: பார்வைத்தட்டை மையமாகக் கொண்ட மூன்று மண்டலங்களை அடிப்படையாக வைத்துக் குறைப்பிரசவ விழித்திரைநோயின் இடம் தீர்மானிக்கப் படுகிறது.

-    மண்டலம் 1: பார்வைத் தகட்டில் இருந்து விழிப்புள்ளி வரையுள்ள தூரத்தின் இருமடங்கு ஆர அளவைக் கொண்ட ஒரு கற்பனை வட்டத்தை எல்லையாக உடைய வட்டப்பரப்பை இது உள்ளடக்கியது.

-    மண்டலம் 2: மண்டலம் 1-ன் விளிம்பில் இருந்து முன் விழித்திரையின் தொடுகோட்டுப் புள்ளி வரை மற்றும் நடு மேல் விழித்திரையின் அருகு வரை பரந்துள்ள ஒரு பரப்பை உள்ளடக்கியது.

-    மண்டலம் 3: மண்டலம் 2-க்கு முன் பகுதியில் இருக்கும்  எஞ்சியுள்ள மேல் பிறைப் பகுதியைக் கொண்ட பரப்பு.

கால அளவு: பாதிக்கப்பட்டுள்ள கடிகார மணி நேரத்தைக் குறிக்கிறது.

நிலைகள்: ROP-யின் கடுமையைப் பொறுத்துள்ள மருத்துவ அம்சங்களை இது குறிக்கிறது.

-    நிலை 1 (வரையறைக் கோடு): விழித்திரையின் முன்னெல்லைக்கு ஏறத்தாழ இணையாகச் செல்லும் மெல்லிய, முறுகிய, சாம்பல் வெண் கோடு உருவாவதே ROP-யின் ஆரம்ப அறிகுறி. மேற்புற விழித்திரையின் வெளிப்பகுதியில் இக்கோடு மிகத் தெளிவாகத் தெரியும். இது குருதிக்குழல் கொண்ட பின்விழித்திரையில் இருந்து குருதிக்குழல் அற்ற முதிரா புற விழித்திரையைப் பிரிக்கிறது. அசாதாரண, கிளைவிடும் குருதிக்குழல்கள் உருவாகி வரையறைக் கோடு வரை வளரும்.

-    நிலை 2 (வரப்பு உருவாதல்): வரையறைக்கோடு திசுக்களின் மேலெழும்பிய ஒரு வரப்பாக உருவாகிறது. இது சிரைகளைத் தமனியோடு இணைக்கும் தடமற்றத்தைக் குறிக்கிறது. அதற்குப் பின்னால் தனிமைப்படுத்தப்பட்ட புதுக்குழல் கற்றைகளையும் காணலாம்.

-    நிலை 3 (மிகை விழித்திரை நார்க்குழல் பெருக்கம் கொண்ட வரப்புகள்): விழித்திரையின் மேலும் விழிப்பின்னறையின் உள்ளும் நார்க்குழல் பெருக்கம் காணப்படும். வரப்பு இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும். நடுப்பகுதியின் பின் உள்ள விழித்திரை குருதிக்குழல்களில் விரிவும் முறுக்கும் ஏற்படும். விழித்திரை அல்லது பின்னறை குருதிக்கசிவு உண்டாகலாம்.

-    நிலை 4 (பகுதி விழித்திரை விடுபடல்): நார்க்குழல் திசு சுருக்கத்தால் விழித்திரை இழுப்புற்று விடுபடல் நேரும். இது தொலைவில் உள்ள விளிம்புகளில் தொடங்கி மையத்தை நோக்கிப் பரவும்.

-    நிலை 5 (விழித்திரை முழுமையாக விடுபடல்): விழித்திரை முற்றிலுமாக விடுபடும்.

 ‘கூட்டல் நோய்’ : விழிக்கோளத்தினுள் சிரை விரிதலும், தமனி முறுகலும் ஏற்படும். இத்தகைய குருதிக்குழல் மாற்றங்கள் இருந்தால் நோயின் இந்நிலையுடன் ஒரு கூட்டல் குறி சேர்க்கப்படும்.

ROP பரிசோதனை:

36 மாதங்களுக்குள் பிறந்த அல்லது 1500 கிராமுக்கு குறைவான உயிர்வளி ஊட்டல் சிகிச்சை பெற்ற அனைத்துக் குழந்தைகளூம் பரிசோதிக்கப்பட வேண்டும். பின் – கருத்துரு வயதுகளான (post-conceptual age) 32-36 வாரங்களே பரிசோதனைக்கு மிகவும் பயனுள்ள காலம். ஏனென்றால், அதற்கு முன் விழித்திரை விடுபடல் அரிதாகவே நடைபெறும். மேலும் 36 வாரங்களுக்குப் பின் ROP முதன்முறையாக அரிதாகவே தோன்றும். பின் – கருத்துரு வயதான 31 வாரங்களுக்கு முன் பரிசோதனை குறைவான மதிப்புடையதே. ஏனெனில், கண்பாவைகளை விரிவாக்க முடியாது. மேலும் விழியாடி குருதிநாளப் பெருக்கத்தின் காரணமாக விழிநீர்ம மூட்டமும் இருக்கும்.

வடுவுறும் ROP:

முனைப்புடைய ROP உள்ள சிலருக்கு வடுவுறும் ROP உருவாகும். மிகவும் அதிகரித்துப் பெருகும் நோய் மிகக் கடுமையான வடு விளைவுகளுக்கு வழிகோலும். பல்வேறு நிலைகள் ஆவன:

-    நிலை 1: இதில் கிட்டப்பார்வையும், தொடர்புடைய விழித்திரை நிறமி இடையூறுகளும் விழிப்பின்னறை மூட்டமும் இருக்கும்.

-    நிலை 2: மேல் விழிப்பின்னறை விழித்திரை நார் உருவாகலும் பின் விழித்திரை இழுபடலும் இருக்கும்.

-    நிலை 3: மிகக் கடுமையான புற நார்த்திசுவும் சுருக்கமும் அரிவாள் வடிவ விழித்திரை மடிப்பும் இருக்கும்.

-    நிலை 4: ஆடிக்குப்பின் நார்க்குழல்திசுக்களின் பகுதி வளையங்களும் பகுதி விழித்திரை விடுபடலும் காணப்படும்.

-    நிலை 5: ஆடிக்குப்பின் நார்க்குழல்திசுக்களின் முழு வளையங்களும் முழு விழித்திரை விடுபடலும் காணப்படும். முழு விழித்திரை விடுபடலால் இரண்டாம் கட்ட மூடிய கோண கண்ணழுத்த நோய் உண்டாகலாம்.

ROP-யை பின்வருவனவற்றில் இருந்து வேறுபடுத்திக் காணவேண்டும்:

-    குடும்ப கடினக்கசிவு விழிப்பின்னறை விழித்திரை நோய்: இது ஒரு மரபியல் கோளாறு. நிறை மாத குழந்தைகளுக்கு உண்டாகும்.

-    நிலைத்த கரு நாளவமைப்பு: இது ஒருபக்கமானது. இதனால் இழுவை விழித்திரை விடுபடல் ஏற்படும்.

மருத்துவ மேற்பார்வையின் கீழ் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

அகற்றல் அறுவை சிகிச்சையே முக்கியமான மருத்துவம் ஆகும். இது பின்வருவனவற்றிற்காகப் பரிந்துரைக்கப் படுகிறது:

-    மண்டலம் 1 ROP: கூட்டல் நோயுடன் கூடிய எந்த ஒரு நிலையிலும்.

-    மண்டலம் 1 ROP: கூட்டல் நோயற்ற 3-ஆம் நிலை.

-    மண்டலம் 2 ROP: கூட்டல் நோயுடன் நிலை 2 அல்லது 3.

குருதிநாளமற்ற முதிரா விழித்திரை அகற்றல்:

-    குளிர்மருத்துவம்: தொடக்கநிலை நோயின் பாதக விளைவுகளைக் குளிர்மருத்துவம் குறைக்கிறது. கூடுதல் விழித்திரை புதுக்குழல் உருவாதலின் ஐந்து அடுத்தடுத்த கடிகார மணிநேரம் அல்லது அடுத்தடுத்த அல்லாத  எட்டு கடிகார மணிநேரம் என வரயறுக்கப்படுகிறது. அதாவது, ’கூடுதல்’ நோயுடன் தொடர்புடையதாக மண்டலம் 1-ல் நிலை 3 அல்லது மண்டலம் 2. இது சில நோயாளிகளில் விழித்திரை விடுபடல் நிகழ்வுகளைக் குறைக்கிறது; ஆனால் சில நோயாளிகளில் மருத்துவத்துக்குப் பின்னும் விழித்திரை விடுபடலுக்கு முன்னேறிச் செல்லுகிறது.

-    லேசர் ஒளியுறைதல்: சிக்கலான நிகழ்வுகளைக் குறைக்க விழித்திரையின் குருதிக்குழல்கள் அற்றப் பகுதியில் ஒளியுறைவு செய்ய ஆர்கான் அல்லது டயோட் லேசரைப் பயன்படுத்தலாம். சிகிச்சை அளிக்கப்பட்டாலும் சில நோயாளிகளுக்கு பின் முனை விழிப்புள்ளி மடிப்பு அல்லது விழித்திரை விடுபடலாக நோய் முன்னேறலாம்.

விழிப்பின்னறை திரை அறுவை:

குளிர்மருத்துவம் அல்லது லேசர் ஒளியுறைதல் சிகிச்சைகளால் பலன் கிடைக்காத நோயாளிகளுக்கு விழித்திரை விடுபடல் போன்ற சிக்கல்களுக்கு சிகிச்சை அளிக்க விழிப்பின்னறை திரை அறுவை தேவைப்படலாம்.

விழிவெண்படல நெருக்கல்:

இழுவை விழித்திரை விடுபடல் இருக்கும் போது பார்ஸ் பிளான விட்ரெக்டோமியுடனோ அல்லது இல்லாமலோ விழிவெண்படல நெருக்கல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பார்வையைப் பொறுத்த வரையில் நல்ல பலன் கிடைப்பதில்லை.

ஆன்டியாக்சிடெண்ட்டாக  E  உயிர்ச்சத்தின் பங்கு விவாதத்துக்கு உரியது. தேவையற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

தொடர்நடவடிக்கை:

ஆண்டு தோறும் கண் பரிசோதனை தேவை. கடுமையான நேர்வுகளுக்கு அடிக்கடி சோதனை தேவைப்படும்.

நோய்முன்கணிப்பு:

விழித்திரை விடுபடல் உருவாகிவரும் குழந்தைகளுக்கு பார்வை முன்கணித்தல் சிறப்பாக இருப்பதில்லை. மருத்துவம் பெற்றுக்கொள்ளாத நோயாளிகளில் பின்மாதவிடாய் வயதான 38-42 வாரங்களில் விழித்திரை விடுபடல் பொதுவாக நிகழ்கிறது.

ROP மருத்துவம் ஆபத்தையும் பாதகாமான விளைவுகளையும் குறைக்கிறது.

குறைப்பிரசவ விழித்திரை நோய் பின்வரும் சிக்கல்களை ஏற்படுத்தும்:

-    விழித்திரை விலகல்

-    விழித்திரை கிழிதல்

-    விழிப்புள்ளி மடிப்பு

-    கிட்டப்பார்வை

-    மாறுகண்

-    தெளிவற்ற பார்வை

-    ஒத்தப் பார்வையின்மை

-    விழிநடுக்கம்

-    கண்புரை

தடுப்பு முறைகள் வருமாறு:

குறைப்பிரசவக் குழந்தைகள் சற்று முதிர்ச்சி அடைந்து பிறந்தால் ROP ஏற்படும் வாய்ப்புகள் குறைவு.

எடை குறைவான குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு நாடி உயிர்வளிமானி மூலம் உயிர்வளி செறிவூட்டல் மதிப்பை 83-93 % அளவில் பராமரித்தால் தொடக்க ROP நிகழ்வுகள் குறையும். (http://reference.medscape.com/medline/abstract/17471328)  

  • PUBLISHED DATE : Feb 02, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Feb 02, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.