சல்ஸ்மேன் கணுவெழுச்சிச் சிதைவு

சல்ஸ்மேன் கணுவெழுச்சிச் சிதைவு  ஓர் அழற்சி அற்ற சிதைவுச் செயலாக்கம் ஆகும். மேல் வெண்படலத் திசுவலையில் வெண்சாம்பல் அல்லது வெளிர்நீல மேலெழும் மேற்திசு சார் கணுக்கள் இந்நோயின் இயல்பு ஆகும். இவை பொதுவாக இருகண் சார்ந்தன. நடுவிளிம்பில் எழும் இவை மெதுவாக அதிகரித்து வரும். பொதுவாக படலச்சந்திப்பிற்கு முன் தெளிவான பகுதி இருக்கும். பார்வை அச்சை மறைத்து இது நடுப்பகுதியில் உருவானால் மங்கல் பார்வை ஏற்படும்.  ஆண்களை விடப் பெண்களுக்கே இது பெரும்பாலும் ஏற்படுகிறது. இந்தக் கணுக்கள் மேற்திசுவை உயர்த்துகிறது. விளிம்புப் புண்களில் புதுக்குழல் உருவாகும்.  போலி இமைமுனைத்திசு வளர்ச்சி போல் தோன்றலாம்.

1925-ல் சல்ஸ்மேன் இதை ஒரு தேய்வு என வருணித்தார் (அசாதாரணப்  பொருட்கள் வெண்படலத்தில் படியும் மரபுக் கோளாறு). ஆனால் இது ஒரு சிதைவு மாற்றம். வெண்படலத்தில் ஏதோ ஓர் அழற்சிக்குப் பல ஆண்டுகளுக்குப் பின் பொதுவாக இது நிகழும். அவர் இதை வெண்படலக் கண்சவ்வழற்சியுடன் சம்பந்தப்படுத்தி விவரித்தார். ஆனால் காலஞ் செல்லச் செல்ல  இதனுடன் இணைந்து காணப்படும் பல கோளாறுகள் கண்டறியப்பட்டன.  இந்நாள்வரை இதன் நோய்த்தோற்றவியல் அறியப்படவில்லை.  ஆனால் இது கண் பரப்பு அழற்சியோடு அல்லது நீடித்த காயத்தோடு சம்பந்தப்பட்டது எனக் கருதப்படுகிறது. புண் படிப்படியாகவே தோன்றுகிறது. அதிலும் வெண்படல அழற்சி ஏற்பட்டு பல ஆண்டுகளுக்குப்பின்னரே உருவாகும். இதற்கு முன் ஏற்படும் கண் நோய் பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஏற்படும்.  ஆயினும் பல நேர்வுகளில் முன் ஏற்பட்ட வெண்படல நோய் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இவை நோய்க்காரணம் அறியாதவை எனக்  கருதப்படுகின்றன.

பொதுவாக ஒன்றில் இருந்து ஒன்பது வரை மையம் சார் புண்கள் இருக்கும். இவை பெரும்பாலும் வெண்படல வடுக்களைச் சுற்றி அல்லது பழைய வெண்படல வடுக்களின் சந்திப்பில் தெளிவான வெண்படல்த்தில் காணப்படும்.  ஓவ்வொரு கணுவும் இன்னொரு கணுவில் இருந்து தெளிவான வெண்படலத்தால் பிரிக்கப்பட்டிருக்கும்.  ஒவ்வொரு கணுவும் இரும்பு வரிகளால் வெளிக்கோடு இடப்பட்டிருக்கும்.  அடியில் இருக்கும் திசுவலையில் இரத்தக்குழல்கள் காணப்படும்; ஆனால் கணுக்களில் இரத்தக் குழல் இருப்பதில்லை.

குறிப்புகள்:

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Alio Jorge L, Pandey Suresh K and Agarwal Amar. Textbook of Ophthalmology Volume 1. First Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd.. 2002. New Delhi. P. 1082.

Agarwal Amar. Handbook of Ophthalmology. Slack Incorporated. 2006. P 247- 248.

Nema H V, Nema Nitin. Textbook of Ophthalmology. Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2012. P 167.

Khurana AK. Comprehensive Ophthalmology. Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2015. P 29.

Tasman William, Jaeger Edward A. The Wills Eye Hospital – Atlas of Clinical Ophthalmology. Second Edition. Lippincott Williams & Wilkins. 2001. P 57.

Yanoff Myron, Sassani Joseph W. Ocular Pathology. Sixth Edition. Mosby Elsevier. 2009. P 282.

Yanoff Myron, Duker Jay S. Ophthalmology. Third Edition. Mosby Elsevier. 2009. P 321- 322.

Roy Frederick Hampton. Master Techniques in Ophthalmic Surgery. Second Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2015. P 160- 161.

Chern Kenneth C, Saidel Michael A. Ophthalmology Review Manual. Second Edition. Lippincott Williams & Wilkins, a Wolters Kluwer business. 2012.

Brightbill Frederick S, Mcdonnell Peter J, Mcghee Charles NJ, Farjo Ayad A, Serdarevic Olivia. Corneal Surgery- Theory, Technique and Tissue. Fourth Edition. Mosby Elsevier. 2009. P 167- 168.

Rapuano Christopher J. Color Atlas & Synopsis of Clinical Ophthalmology Wills Eye Institute Cornea. Second Edition. Lippincott Williams& Wilkins, a Wolters Kluver business. 2012.

Kaiser Peter K, Friedman Neil J, Pineda Roberto. The Massachusetts Eye and Ear Infirmary- Illustrated Manual of Ophthalmology. Fourth Edition. Elsevier Saunders. 2014. P 206- 207.

Heegaard Steffen, Grossniklaus Hans. Eye Pathology- An Illustrated Guide. Springer-Verlag Berlin Heidelberg. 2015. P 120- 121.

Naumann GOH, Apple DJ. Pathology of the eye. Springer-Verlag. 1986. P 330- 331.

Boyd Samuel, Gutierrez Angela Maria, McCulley James P. Atlas and Text of Corneal Pathology and Surgery. Jaypee – Highlights MedicalPublishers Inc. 2011. Panama. P 255- 256.

Lee WR. Ophthalmic Histopathology. Second Edition. Springer- Verlag London. 2002. P 426.

Foster C Stephen, Azar Dimitri T, Dohlman Claes H. Smolin and Thoft’s The Cornea- Scientific Foundations & Clinical Practice. Fourth Edition. Lippincott Williams & Wilkins. 2005. P 878.

Babizhayev Mark A, Cheng-Li David Wan, Jacobi Anne Kasus, Žorić Lepša, Alió Jorge L. Studies on the Cornea and Lens. Humana Press. Springer Science+ Business Media. New York. 2015. P 28- 30.

Basak Samar K. Jaypee Gold Standard Mini Atlas Series:Diseases of the cornea. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2011. P 179. 

http://eyewiki.aao.org/Salzmann_Nodular_Degeneration

http://www.ijo.in/article.asp?issn=0301-4738;year=2006;volume=54;issue=3;spage=201;epage=202;aulast=Sinha

http://www.nichigan.or.jp/jjo-oj/pdf/04704/047040401.pdf

Basak Samar K. Atlas of Clinical Ophthalmology. Second Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2013. P 119. 

Kanski Jack J, Bowling Brad. Synopsis of Clinical Ophthalmology. Third Edition. Elsevier Saunders. 2013. P 121.

Salzmann M. Ueber eine Abart der Knotchenformigen Hornhautdystrohie. Z Augenheilkd. 1925; 57: 92-99. German.

 

 

சல்ஸ்மேன் கணுவெழுச்சிச் சிதைவு  நோயாளிகள் பலருக்கு அறிகுறிகள் எதுவும் இருப்பதில்லை.

அறிகுறிகள் காணப்படும் நோயாளிகள் கூறுவன:

 • கண் அசௌகரியம்
 • உறுத்தல்
 • அயல்பொருள் உணர்வு
 • உலர்தல்
 • வலி, திரும்பத் திரும்ப அரிப்பு ஏற்பட்டால்
 • ஒளிக்கூச்சம்
 • பார்வைக் கூர்மை குறைதல்

 

பெரும்பாலான நேர்வுகளில் நோயியல் உறுதியற்றதாகவே உள்ளது. இருப்பினும் இது பல்வேறு நிகழ்வுகளால் தூண்டப் படலாம் என கருதப்படுகிறது. இதனால், தனிநபர்களின் உடலியல்  முன்னமைவுக்கு ஏற்ப குறிப்பிட்டுச் சொல்ல முடியாத திசு எதிர்வினை ஏற்பட்டு இக்கோளாறு உண்டாகலாம். இது நடுத்தர வயது பெண்களுக்கு அடிக்கடி நிகழ்கிறது. 60% நிகழ்வுகளில் இரு கண்களையும் பாதிக்கிறது.

கண் பரப்புக் கோளாறுகள்:

 • மெய்போமியன் சுரப்பிச் செயலிழப்பு
 • நுண்குமிழ் வெண்படல அழற்சி
 • உலர் கண் நோய்
 • செங்கண் வெண்படல அழற்சி
 • இளவேனில் வெண்படல கண்சவ்வழற்சி
 • ஒவ்வாமை வெண்படல கண்சவ்வழற்சி
 • கண்நோய்
 • இடைத்திசு வெண்படல அழற்சி
 • பாதிப்பால் விளையும் வெண்படல நோய்
 • தைகெசன் மேலோட்டமான புள்ளி வெண்படல அழற்சி
 • தொடர் வெண்படல அரிப்பு
 • தட்டம்மை போன்ற வைரல் நோய்கள்
 • ஒண்சிவப்புக் காய்ச்சல்
 • நீடித்த இமையழற்சி
 • இமைமயிர் உட்சுருளல்
 • வெண்படல விளிம்புக் குழலரும்பல்

நீடித்தக் காயங்கள்

 • நீண்ட தொடுவில்லை பயன்பாடு
 • வெண்படல அறுவையைத் தொடர்ந்து தாக்கக்கதிர் பாதிப்பு, தொடர் அரிப்பு மற்றும் வேதியல் அல்லது வெப்பக் காயங்கள்
 • முன் ஏற்பட்டக் கண் காயம்

அண்மையில், குரோன் நோயாளிகளில் சல்ஸ்மேன் கணுவெழுச்சி சிதைவு பதிவாகி உள்ளது. மண்டல நோய்களுக்கும் இந்நோய்க்கும் தொடர்பு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

மரபுக் காரணங்களும் கூறப்படுகின்றன.

நோயுடலியல்

போமேன் படலம் நொதிகளால் அழிக்கப்படும்போது திசுவலையில் இருந்து வெண்படலத் திசுவலை செல்கள் இடம்பெயர்ந்து பெருகி கணுப் பகுதிகளில் புறசெல் அடிப்பொருளாக இரண்டாம்நிலை படிதாலாக மாறுகிறது என ஒரு கருதுகோள் கூறுகிறது.

திசுநோயியல் ஆய்வுகள்: திசு ஆய்வுகள் வெண்படல கணுக்கள் மேற்திசுவில் அமைந்திருப்பதைக் காட்டுகின்றன.  ஆனால் முன் திசுவலையில் மூன்றில் ஒருபங்கு நீண்டிருக்கலாம். மேலும் அவை பளிங்குரு சிதைவோடு கூடிய அடர்த்தியான இணைப்புத் திசுக்களால் உருவாக்கப்படுள்ளன. வெண்படல மேற்திசு ஒழுங்கற்ற தடிமன் கொண்டது. வெண்படல கணுக்களின் மேல் அதிக அளவு மெலிதல் கொண்டுள்ளது. போவ்மேன் படலம் இடைவெளியைக் காட்டுகிறது. அது மேலும் வளர வாய்ப்பில்லை. மேலும் அடிக்கடி நார்த்திசுவால் மாற்றப்படுகிறது.  மேற்திசு சார் நார்த்திசு அடிக்கடி திசுவியலில் கண்டறியப்படுகிறது. மேற்திசு செல்களின் கீழ் செயலூட்டப்பட்ட நார்க்கட்டிகள் காணப் படுகின்றன. சல்ஸ்மேன் கணுவெழுச்சிச் சிதைவு நோயாளிகளில் அண்மையில் அடிப்பொருள் மெட்டலோபுரோட்டினேஸ்-2  (MMP-2)- வின் வெளிப்பாடு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இதுவே அடித்தளப் படலத்தின் தூண்டலுக்கும் போவ்மேன் படல இடையூறுக்கும் காரணமாக இருக்கக் கூடும்.

நோய்த்தடுப்புத் திசுவேதியல் ஆய்வு: அடி மேற்திசு செல்களின் புரத வெளிப்பாடு அதி வளர்சிதைமாற்றச் செயல்பாட்டை உணர்த்துகிறது. கணுக்களில் காணப்படும் மேற்திசு சார் கோலஜென் உருவக்கத்தில் மேற்திசு செல்கள் பங்கு கொண்டதை இந்தக் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது.  வெண்படல மேற்திசு நோய்க்கும் கணுவெழுச்சி சிதைவு வளர்ச்சிக்கும் இடையில் உள்ள மருத்துவ ரீதியான தொடர்போடு இது ஒத்துப்போகிறது.

நோய் தன்தடுப்பு நோயியல்: கணுவெழுச்சி சிதைவின் நோய்த் தோற்றவியலுக்கு இதுவும் கூறப்படுகிறது

மருத்துவரீதியாகவே நோய்கண்டறியப்படுகிறது.

பொதுவாக நோயாளிகளுக்கு வலியில்லாமல் படிப்படியாகப் பக்க மற்றும் தொலைவுப் பார்வை இழப்பு ஏற்படும். வெண்படல கணுக்கள், வெண்படலப் பரப்பு ஒழுங்கின்மை மற்றும் தொடர்புடைய விலகல் பிழைகள் யாவும் ஒன்றிணைந்து பார்வைக் கோளாறுக்கு இட்டுச் செல்லும். பார்வைக் கோளாறு அதிகரித்துச் செல்லும். கணுக்களால் ஏற்படும் சிதறல் பார்வையே இதற்குக் காரணம். முற்றிய கட்டத்தில் கடுமையான வெண்படல ஒழுங்கீனங்கள் அதிக அளவிலான முறையற்ற சிதறல் பார்வையோடு கடும் பார்வை இழப்பையும் ஏற்படுத்தும். கணுக்கள் நடு வெண்படலத்தில் இருந்தால் நோயாளிகள் பார்வை குறைவதாகக் கூறுவர்.

நீடித்தக் கண் பரப்பு நோய் இருந்ததற்கான வரலாறு இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். கண்பரப்பில் அயல் பொருள் உறுத்தல் இருப்பதையும் நோயாளிகள் கூறலாம். உயர்ந்த கணுக்கள் அசௌகரியத்தையும் மேற்திசு அரிப்பையும் ஏற்படுத்தலாம்.

மருத்துவ அம்சங்கள்:

ஒரு கண் மருத்துவர் பிளவு விளக்கு மூலம் சோதிக்கும் போது தனித்துவமான மருத்துவ அம்சங்கள் புலனாகும்.

 • சல்ஸ்மேன் கணுக்கள்: சல்ஸ்மேன் கணு தனியாகவும் இருக்கலாம் அல்லது பல கணுக்களும் உருவாகலாம். இவை வெண்மையில் இருந்து சாம்பல் அல்லது வெளிர் நீல நிறமாக இருக்கலாம். வெண்படலப் பரப்பில் உயர்ந்து காணப்படும். வெண்படலத்தின் நடு விளிம்பில் அமைந்திருக்கும். ஒவ்வொரு கணுவும் 0.5-2 மி.மீட்டர் இருக்கும். இரத்தக் குழல் இருக்காது. சில நேர்வுகளில், அறிகுறிகள் காட்டாத நோயாளிகளில், வழக்கமான பரிசோதனையின் போது ஒன்று அல்லது கூடுதல் கால்பகுதியில் ஒன்றோ பலவோ கணுக்கள் காணப்படும். மேலும் சில வேளைகளில், கணுக்கள் மையப் பகுதியை ஊடுறுவலாம். பல கணுக்கள் இருக்கும்போது, அவை ஒரு குறிப்பிட்ட வட்ட அமைப்பில் அமைந்திருக்கும். வளர்ச்சி அடைந்த கட்டத்தில் அவை ஒன்றோடு ஒன்று ஒன்றிப் போயிருக்கும். கணுக்களுக்கு இடையில் தெளிவான வெண்படலம் அமைந்திருப்பது இதன் தனித்துவமான அம்சம் ஆகும்.
 • இரும்பு நிறமி படிதல் கோடுகள்: புண்களின் அடிப்பகுதியைச் சுற்றி புறத்திசுவில் இரும்பு நிறமிப் படிவு வரிகளைக் காணலாம். மேலும், இந்த சிதைவு மாற்றங்களில் கூடுதல் அதிகரிப்பு இருப்பதில்லை.
 • தொடர் வெண்படல அரிப்புகள்: தொடர் வெண்படல அரிப்புகள் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.

பொதுவான இடவியல்:

வெண்படல இடவியல் வெண்படல வடிவத்தில் வெண்படல கணுக்கள் உருவாக்கும் ஒழுங்கின்மையைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், பரப்பு மாற்றங்கள் கணுக்களின் எண்னிக்கை மற்றும் அமைவிடம் பொறுத்து அமைகிறது.

முன் பகுதி-ஒளியியல் ஒத்திசைவு வெட்டுவரைவு  (AS-OCT):

முன் பகுதி-ஒளியியல் ஒத்திசைவு வெட்டுவரைவு, கணுக்களின் பரிமாணம் மற்றும் ஆழத்தை மதிப்பீடு செய்ய உதவுகிறது. இதன் மூலம் திசுவலைக்குள் இதன் ஊடுறுவலை அறிந்து அறுவை சிகிச்சைக்கான  அணுகுமுறையை முடிவு செய்ய இயலும்.

உள்ளுயிரி பொதுக்குவிய நுண்காட்டியியல்:

உள்ளுயிரி பொதுக்குவிய நுண்காட்டியியல், நடு வெண்படலத்தில் இயல்பான மேற்திசுவைக் காட்டுகிறது. அரிதாக அடிசார் நரம்பு நார்கள் காணப்படுகின்றன. இவற்றில் கிளைகள் இல்லாத கரணத்தால் தடிமன் அதிகரித்து காணப்படுகிறது. வெண்படல திசுவலையில் உள்ள நரம்பு நார்களும் அசாதாரணமாக உள்ளன. இவற்றின் கிளைகளும் அதிகத் தடிமனுடனும் அதி பிரதிபலிப்பு பிரிவுகளுடன் வளைந்தும் காணப்படுகின்றன. இந்தத் திசுவலை நரம்புகள், ஊடுறுவும் வெண்படல அமைப்பு அறுவைக்குப் பின் அரும்பும் மறுபடி உருவாகும் நரம்புகளை ஒத்து இருக்கின்றன. ஆழத்தில் இருக்கும் திசுவலை மற்றும் அகத்திசு மாற்றம் அடைந்திருப்பதாகத் தோன்றவில்லை. கணுக்களின் விளிம்புப் பகுதி அடி மேற்திசு செல்களை வெளிக்காட்டுகின்றன. இவை அசாதாரனமாக நீட்சியுற்றுக் காணப்படுகின்றன. பொதுக்குவிய நுண்காட்டி சோதனை, முன் திசுவலையில் அதிக அளவு பிரதிபலிப்பைக் காட்டுகிறது.  மேலும் கணுக்களுக்கு இணையாக குறிப்பிடத் தக்க திசுவலைச் சிதறலும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் நார்ப்பொருள் ஆதலாகும். செயலூக்கப் பெற்ற வெண்படல செல்கள் கணுக்களின் விளிம்புப் பகுதியிலும் நடுப் பகுதியின் சார் மேற்திசு வலையிலும் இருப்பதை அதி பிரதிபலிப்பு அமைப்புகள் காட்டுகின்றன.

திசுநோயியல்:

 • ஹீமேட்டோக்சிலின் மற்றும் ஈயோசின் (H&E) சாயம்: ஹீமேட்டோக்சிலின் மற்றும் ஈயோசின் (H&E) சாயம், போவ்மேன் படலம் இன்மையை அல்லது உடைந்த படலத்தையும், கணுவின் மேல் பொதிந்திருக்கும் மேற்திசு மெல்லியதாக இருப்பதையும், சார் மேற்திசு கோலஜென் நாரிழைகள் ஒழுங்கு குலைந்திருப்பதையும் காட்டுகிறது.
 • ஒளி நுண்காட்டியியல்: துண்டு துண்டான மற்றும் சிலவேளைகளில் மறைந்துபோன போவ்மேன் படலத்துக்கு முன் பளிங்குருவான ஒழுங்கற்று அமையும் அடர்த்தியான கோலெஜென் நார்ப்பொருள் படிவைக் காட்டுகிறது. கணுக்களுக்கு மேல் உள்ள திசுக்கள் ஒரு வலுக்குறைந்த மேபுறத் திசுவை வெளிக்காட்டுகிறது. சீரற்று விநியோகிக்கப்பட்ட உட்கருப் பிளவு, செயலிழந்த வெண்படலச் செல்களையும் ஒழுங்குகுலைந்த  கோலெஜென் கட்டுகளையும் வெண்படல திசுவலை கொண்டுள்ளது.
 • வடிவ அளவியல் பகுப்பாய்வு: வடிவ அளவியல் பகுப்பாய்வு, கணுவுக்கு மேல் மெலிந்த வெண்படல மேற்திசுவைக் காட்டுகிறது.

பார்வைக் கோளாறை ஏற்படுத்தும் ஒரே போலான கோளாறுகளில் இருந்து சல்ஸ்மேன் கணுவெழுச்சி சிதைவை வேறுபடுத்திக் காண முடியும். அவையாவன:

 • கோளவெழுச்சிச் சிதைவு
 • வெண்படல வடுவுறல்
 • வெண்படலச் சிதறல்பார்வை
 • வெண்படல அரிப்பு

 

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

பல முதிய நோயாளிகளுக்கு, விளிம்பு சல்ஸ்மேன் கணுக்கள் அறிகுறிகள் அற்று இருக்கும். இதற்கு சிகிச்சை தேவை இல்லை.

சல்ஸ்மேன் கணுவெழுச்சி சிதைவு தானாகவே சரியாவதில்லை. மருத்துவ அம்சங்களைப் பொறுத்து மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை அளிக்க வேண்டும். அறுவை சிகிச்சையால் பார்வைக் கூர்மை மேம்படும்.

அடிப்படையான நோயியல் அதற்கேற்ப மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

பொதுவான நடவடிக்கைகள்:

 • கண்ணிமை சுத்தம்
 • வெதுவெதுப்பு ஒத்தடம்

மருத்துவ சிகிச்சை:

மருத்துவ சிகிச்சை பெரும்பாலான நோயாளிகளுக்கு வெற்றிகரமாக அமைகிறது. அவற்றில் அடங்குவன:

 • செயற்கைக் கண்ணீர் மேல்மருந்து
 • ஊக்கமருந்தற்ற எதிர்-அழற்சி மருந்து
 • வெளி கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள்

அறுவை சிகிச்சை:

அறுவை சிகிச்சைக்கான தேவை:

 • அயல் பொருள் உறுத்தல் அல்லது கண்ணீர்ப் படல நிலை இன்மையால் நோயாளி அசௌகரியமாக உணர்தல்
 • ஒழுங்கற்றப் பார்வைச் சிதறலால் குறைந்த பார்வைக் கூர்மை
 • தொடர் வெண்படல அரிப்பு
 • விளிம்புக் கணுக்களால் தொடுவில்லை சகிப்பின்மை

அறுவை முறைகள்:

 • மேல் வெண்படல அறுவை: மேலோட்டமான கணுக்களுக்கு பிறை வடிவ கத்தியால் கையால் செய்யப்படும் அறுவையே போதுமானது. அடியில் சீரான மென் பரப்பு அமையும். முன் திசுவலையைப் பாதிக்கும் ஆழமான உள் வளர்ச்சி இருந்தாலோ அல்லது கணுவை அகற்றிய பின் திசுவலை ஒளிபுகாமை இருந்தாலோ அல்லது மேற்பரப்பை வழுவழுப்பாக்கவோ வெட்டும் லேசர் ஒளிசிகிச்சை வெண்படல அறுவை பொதுவாக செய்யப்படும். ஆழமான உள்வளர்ச்சி இருக்கும் நேர்வுகளில் முன் மடல் வெண்படல அறுவை தேவைப்படும்.
 • வெட்டும் லேசர் ஒளிசிகிச்சை வெண்படல அறுவை (PTK) : வெட்டும் லேசர் ஒளிசிகிச்சை வெண்படல அறுவை (PTK), சீரான, சம தளத்தை அமைக்கவும், பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தும் ஒளிபுகாமையை அகற்றவும், தூண்டப்படும் ஒளிவிலகல் மாற்றத்தைக் குறைக்கவும் திறன் கொண்டது. இந்த அறுவைக்குப் பின் நல்ல பலன் கிடைக்கிறது. ஆனால் கணுக்கள் திரும்பவும் எழக் கூடும். மேல் மருந்தான மைட்டோமைசின் – சி (புற்று நோய் சிகிச்சைக்குப் பயன்படும் வேதியற் சிகிச்சை மருந்து) பயன் படுத்தியும் பயன் படுத்தாமலும் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது.
 • மடல் வெண்படல அமைப்பறுவை: ஆழ் முன் மடல் வெண்படல அமைப்பறுவை (DALK), சல்ஸ்மேன் கணுக்கள் நடு திசுவலையைத் தாண்டி நீண்டிருந்தால் செய்யப்படும். இந்த முறை மிக அரிதாகவே  தேவைப்படும். ஒட்டுக்குள் மீண்டும் கணு வளர வாய்ப்புண்டு.
 • ஊடுறுவும் வெண்படல அமைப்பறுவை: முழுத் தடிமன் ஊடுறுவும் வெண்படல அமைப்பறுவைப் பொதுவாகத் தேவைப்படுவதில்லை. பல ஆண்டுகளுக்குப் பின் புண்கள் திரும்பவும் தோன்றியதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

திரும்பத் தோன்றும் புண்கள் முதலில் தோன்றிய புண்களைப் போல் மருத்துவ ரீதியாக இருப்பதில்லை. ஆனால் அவற்றைத் திசுவியல் அடிப்படையில் வேறுபடுத்த முடியாது.

அறுவை மூலம் சல்ஸ்மேன் கணுக்கள் அகற்றப்பட்ட பின்னும் பல்வேறு அளவு விகிதங்களிலும் கால இடைவெளிகளிலும் திரும்பத் தோன்றலாம்.

நோய்முன்கணிப்பு:

நோய்மன்கணிப்பு, சிறப்பில் இருந்து மிகச்சிறப்பு வரை இருக்கும். பார்வை பாதிப்பு மடல் வெண்படல அமைப்பறுவை மூலம் சீர் செய்யப்படும். அறுவை மூலம் அகற்றினாலும் இந்நிலை திரும்ப ஏற்படும்.

 

சல்ஸ்மேன் கணுவெழுச்சி சிதைவின் சிக்கல்கள் வருமாறு:

 • கண் பரப்பில் உறுத்தல்: தனித்துவமான இந்த மேற்திசு சார் கணுக்கள் கண் பரப்பில் உறுத்தல் ஏற்படுத்தும். இதனால் இரண்டாம் நிலை தொடர் வெண்படல எழுச்சிகளும், ஒளிக்கூச்சமும், இமையழற்சியும் நீரொழுகலும் உண்டாகும்.
 • எட்டப் பார்வை மாற்றம்: சல்ஸ்மேன் கணுக்கள் வெண்படலத்தில் ஒப்பீட்டளவில் ஆழ் நடு-விளிம்பு வெண்படலத்தையும் தட்டையான நடு வெண் படலத்தையும் ஏற்படுத்துவதால் தூரப் பார்வை மாற்றங்கள் உண்டாகின்றன.
 • சிதறல் பார்வை: வெண்படலத்தின் பல கால்பகுதிகளை நோய் பாதித்தால் கணுக்கள் பெரும் அளவில் பார்வைச் சிதறலை நோயாளிகளுக்கு உண்டாக்கும்.
 • விளிம்பு வெண்படல குருதிக்குழல் தோன்றல்: விளிம்பு வெண்படலத்தில் குருதிக்குழல் தோன்றலாம். இருப்பினும் இந்தச் சிக்கல் சல்ஸ்மேன் கணுவெழுச்சியை முதலில் ஏற்படுத்திய நோய்க்கூறினால்  நிகழக் கூடும்.

 

 • PUBLISHED DATE : Mar 12, 2018
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 12, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.