சீரற்ற உருவத் தோற்றம்

இரு விழிகளும் பார்வைப் புறணிக்கு அளிக்கும் பிம்பத்தின் வடிவம் மற்றும்/அல்லது அளவு வெவ்வேறாக இருப்பதே சீரற்ற உருவத் தோற்றம் என வரையறுக்கப்படுகிறது. இரு பிம்பங்களை மூளையால் இணைக்க முடிவதில்லை.  இதனால் ஒரு கூடுதல் ஆவிபிம்பம் அல்லது இரட்டைபார்வை ஏற்படுகிறது. அதிக அளவில் ஒத்தப் பார்வை இன்மை இருந்து அதைத் தொடுவில்லை  இல்லாமல் கண்னாடியில் சீரமைக்கும் போது சீரற்ற உருவத் தோற்றம் பெரும்பாலும் உருவாகிறது. மருத்துவ வரலாறு அல்லது மருத்துவ சோதனை மூலம் சீரற்ற உருவத் தோற்றத்தைக் கண்டறிவது கடினம்.  விகிதம் அதிகமாக இருக்கும் போது சீரற்ற உருவத்தோற்ற நோய் பிம்பங்கள் இணைவதை முன்கூட்டியே தடுக்கிறது. இதற்கு மேல் ஒரு நோயாளி இரு கண்களுக்கும் இடையில் இருக்கும் பிம்பத்தின் அளவு மற்றும் வடிவ வேறுபாட்டைத் தானாகவே அளித்தல் அரிதாகும். பிம்ப வடிவத்தின் வேறுபாடு 4 சதவிகிதத்துக்கு மேல் இருந்தால் சீரற்ற உருவத்தோற்றம் குறிப்பிடத் தக்கதாகும்.  ஆனால் 2 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் போது பல நோயாளிகளுக்கு வெளிசார் புலனுணர்வில் மாறுபாடு  மற்றும்/அல்லது அசௌகரியமான இரட்டைபார்வை அனுபவம் உண்டாகலாம்.

இரு விழியிலும் பார்க்கப்படும் பிம்பத்தின் உருவ அளவு வேறுபாட்டைக் குறிக்க 1938-ல் லான்காஸ்ட்டர் சீரற்ற உருவத் தோற்றம் என்றச் சொல்லை அறிமுகப்படுத்தினார். அனிசெய்கோனியா (சீரற்ற உருவத்தோற்றம்) என்ற இந்தச் சொல் அனிசோ (சீரற்ற) மற்றும் எய்கோன் (உருவத்தோற்றம்) என்ற இரு கிரேக்கச் சொற்களால் உருவானது.

எட்டப்பார்வைத்தெளிவு என்ற நிலையில் விழியில் விலகல் பிழை இருக்காது. தொலைவுப் பார்வைக்கு சீரமைப்பும் தேவைப்படாது. வெண்படலத் திறன், வில்லைத் திறன் மற்றும் விழிகோளத்தின் அச்சுநீளம் ஆகிய மாறிகளால் பெரும்பாலும் கண்ணின் விலகல் திறன் தீர்மானிக்கப்படுகிறது. எட்டப்பார்வைத்தெளிவில் கண்ணின் இந்த மூன்று விலகல் திறன் கூறுகளும் இணைந்து  கண்ணின் இயல்பான விலகலை உருவாக்குகின்றன. எட்டப்பார்வைத் தெளிவான கண்ணில், பார்வை அச்சுக்கு இணையான ஒளிக் கதிர்கள் விழித்திரையில் குவிகின்றன. எட்டப்பார்வைத் தெளிவின் தொலைதூரப் புள்ளி (அனுசரிப்பு அற்ற நிலையில் விழித்திரை இணைவுப் புள்ளி) ஒரு முடிவிலி ஆகும். அது 6 மீட்டர்கள்.  வெண்படலமும் விழிவில்லையும் ஒளிக்கதிர்களைப் போதுமான அளவில் குவிக்காத போது விலகல் பிழை ஏற்படுகிறது.

கண்ணின் ஒளியுணர் அடுக்கில் ஒளி மோசமாகக் குவிந்து மங்கலான பார்வை ஏற்படுவதை விலகல் பிழை என்ற சொல் விளக்குகிறது. இது ஒரு பொதுவான கண் பிரச்சினை.  இதில் கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, சிதறல்பார்வை, முதுமைசார் பார்வைக்குறைவு ஆகியவை உள்ளடங்கும்.

ஒளியியல் சீரற்ற உருவத்தோற்றம், சீர்செய்யப்படாத அச்சு ஒத்தப்பார்வையின்மை அல்லது சீர்செய்யப்பட்ட விலகல் ஒத்தப்பார்வையின்மையின் விளைவாக ஏற்படும் விழித்திரை பிம்பங்களின் அளக்கபட்ட அளவு வேறுபாட்டை இது குறிக்கிறது. சீர்செய்யப்படாத அச்சு ஒத்தப்பார்வையின்மை அல்லது சீர்செய்யப்பட்ட விலகல் ஒத்தப்பார்வையின்மையில் பிம்பங்களில் அளவு வேறுபாடு இருந்தால் அது மிகக் குறைவாகவே இருக்கும்.  இரு கண்களிலும் பிம்ப அளவு ஒரே அளவாக இருக்கும் நோயாளிகளுக்கு சீரற்ற உருவத்தோற்றம் ஏற்படும். இது ஒளியியல் காரணத்தால் இருப்பதில்லை. இது நரம்பியல் சீரற்ற உருவத் தோற்றம் எனப்படும்.

சீரற்ற உருவத்தோற்றம் குணப்படுத்தக்கூடிய கண் உபாதையால் உருவாகிறது. குறைவானவர்கள் ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் பாதிப்படைகின்றனர்.

பெரும்பாலும் கண் அறுவையைத் தொடர்ந்து இது ஏற்படுகிறது. விழிவில்லையின்மை  (கண்புரை அறுவை செய்யப்பட்டது) அல்லது விலகல் பிழை அறுவை போன்றவற்றின் காரணமாக  குறிப்பிடத்தக்க அளவு விலகல் பிழை உள்ள கண்ணில் அறுவைக்குப் பின் விலகல் பிழை குறைகிறது. ஆனால் மறுகண் தெளிவான பார்வை பெற ஒரு வலுவான சீர்செய்யும் வில்லை தேவைப்படுகிறது. இதுபோல, இருகண்ணிலும் கண்புரை அறுவை செய்யப்பட்டு பின் தவறான திறன் கொண்ட  உட்கண்வில்லை (போலிவிழிவில்லை) ஒரு கண்னில் பயன்படுத்தப்பட்டலும் சீரற்ற உருவத்தோற்றம் ஏற்படும்.

குறிப்புகள்

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Aliό Jorge L, Pandey Suresh K, Agarwal Amar. Textbook of Ophthalmology Vol 1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2002. P 184- 185.

Khurana AK. Theory and Practice of Optics and Refraction Second Edition. Reed Elsevier India Private Limited 2008. P 86- 88.

Khurana AK. Comprehensive Ophthalmology Sixth Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2015. P 18- 19.

Coats David K, Olitsky Scott E. Strabismus surgery and its complications. Springer- Verlag Berlin Heidelberg 2007. P 293.

Howard Ian P, Rogers Brian J. Binocular Vision and Stereopsis- Oxford Psychology Series No. 29. Oxford University Press 1995. P 62- 68.

Lens AI, Nemeth Sheila Coyne, Ledford Janice K. Ocular Anatomy and Physiology Second Edition. SLACK Incorporated 2008. P 163.

Levin Leonard A, Nilsson Siv FE, Hoeve James Ver, WuSamuel M, Alm Albert, Kaufman Paul A. Adler’s Physiology of the eye Eleventh Edition. Saunders Elsevier 2011. P 690- 693.

http://eyewiki.aao.org/Aniseikonia

http://jamanetwork.com/journals/jamaophthalmology/article-abstract/613956

Lancaster Walter B. Aniseikonia. Arch Ophthalmol 1938; 20(6): 907- 912.

De Wit GC. Evaluation of a new direct-comparison anisikonia test. Binocul Vis Strabismus Q 2003; 18: 87- 94; discussion 94.

Corliss DA, Rutstein RP, Than TP, Hopkins KB, Edwards C. Aniseikonia testing in an adult population using a new computerised test, ‘the Aniseikonia Inspector’. Binocul Vis Strabismus Q 2005; 20: 205- 215; discussion 216.

Bagshaw J. Vertical deviations of anisometropia. Transactions of first international orthoptic congress. Kimpton: London 1968: 277- 286.

தனிப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்ப இநோயின் சகிப்புத்தன்மை உள்ளது. பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்தாலும் சில நோயாளிகளால் சகித்துக் கொள்ள இயலும். ஆனால் சிறு பாதிப்பே சிலருக்கு பெரும் அறிகுறிகளை உருவாக்கும். நடுவச்சு பாதிப்பு, குறிப்பாக சாய்ந்திருந்தால், சகிப்புத்தன்மை குறைவுபடும்.

இரு கண்களுக்கும் இடையில் உருப்பெருக்க வேறுபாடு அல்லது நடுவச்சு பாதிப்பு அளவுக்கு அதிகமாக இருந்தால் அது அறிகுறிகளை உருவாக்கலாம்.

 • தலைவலி
 • கண் சோர்வு
 • கண் உபாதை அல்லது களைப்பு
 • மங்கல் பார்வை
 • வாசிப்பு சிரமம்
 • ஒளிக்கூச்சம்
 • இருவிழிப்பார்வையில் சிரமம்
 • சிறுவயதிலேயே பார்வைத் தெளிவின்மை
 • இரட்டைப்பார்வை
 • ஆழ்பார்வையில் சிரமம்
 • மயக்கம்

 

சீரற்ற உருவத்தோற்றம் இயற்கையாகவோ அல்லது விலகல் பிழை சீரமைபாலோ ஏற்படலாம். இரு கண்களுக்கும் இடையில் 7%  இருக்கும் சீரற்ற உருவத் தோற்ற பாதிப்பில் அறிகுறிகள் இருப்பதில்லை. இது 3 டயோப்டர் (டி) ஒத்தப்பார்வையின்மைக்கு நிகரானது. விலகல் பிழையின் அளவீட்டு அலகு டயோப்டர் (டி) ஆகும்.  இது மீட்டர் அளவில் குவிய தூரத்தின் தலைகீழ் விகிதம் ஆகும்.

காரணங்களில் அடங்குவன:

I.ஒளியியல்

 • உள்ளார்ந்தது: இது கண்ணின் விலகல் மண்டலத்தின் குறைபாட்டால் ஏற்படுவது ஆகும். பொதுவாக இது ஒத்தப்பார்வையின்மையோடு தொடர்புடையது.
 • பெறப்பட்டது: இது சீர்செய்யும் வில்லைகளால் தீர்மானிக்கப்படுகிறது. அணியப்படும் வில்லை, அதன் திறன், நிலை, தடிமன் மற்றும் வடிவத்தைப் பொறுத்து இது அமையும்.

II. உடற்கூறு அல்லது விழித்திரை சார்ந்தவை:

 • விழித்திரை கூறுகளின் இடப்பெயர்வு: ஒரு கண்ணில் இவை முடிச்சுப் புள்ளியை நோக்கி இடப்பெயர்வு அடையும்.
 • நரம்புப்புறத்திசு கூறுகள் பிரிதல்: விழித்திரையின் நரம்புப் புறத்திசு கூறுகள் பிரிவதால் சீரற்ற உருவத்தோற்றம் நிகழலாம்.
 • விழித்திரை இழுபடல்
 • விழித்திரை வீக்கம்

விழித்திரையில் விழும் ஒளியைப் பாதித்து விழித்திரைக் கூறுகள் பார்க்கப்பட்ட பிம்பத்தைப் பெரிதாக அல்லது சிறிதாகத் தோன்றச் செய்யும். மாறுபடும் எண்ணிக்கையில் ஒளி ஏற்பிகள் தூண்டப்படுவதால் இது நிகழ்கிறது. விழித்திரைக் கண்ணீர், விடுபடல், தசை ஓட்டை, நரம்புணரடுக்குப் பிளவு, மேல்விழித்திரை படலம் அல்லது தசை வீக்கம் ஆகியவை விழித்திரை சீரற்ற உருவத் தோற்றத்திற்கான காரணங்களில் அடங்கும்.

III.மையம் அல்லது புறணி சார்ந்தது

 • பெருமூளைப் புறணியின் சமனற்ற ஒரேநேரப் புலனுணர்வு: விழித்திரையில் பிம்பங்கள் ஒரே அளவாக உருவான போதிலும் பெருமூளை அவற்றை சம்மற்றதாகவும் ஒரேநேரத்திலும் உணர்வதால் சீரற்ற உருவத் தோற்றம் ஏற்படுகிறது.

 

பார்வைக் கோளாறு கொண்ட நோயாளிகளுக்கு மருத்துவ அறிகுறிகளைக் கொண்டும் விழித்திரை சோதனை மேற்கொண்டும் நோய்கண்டறியப்படுகிறது.

மருத்துவ ரீதியான சீரற்ற உருவத்தோற்றம், அறிகுறிகளை நீக்கத் தேவையான சீரமைப்பு தேவைப்படும் சீரற்ற உருவத்தோற்றத்தின் அளவு என வரையறுக்கப்படுகிறது. இரு கண்களுக்கும் இடையில் இருக்கும் பிம்ப அளவின் வேறுபாடு 0.75% -ஐ நெருங்கும்போது இது ஏற்படுகிறது. சாய்ந்த நடுவச்சு சீரற்ற உருவத்தோற்றம் இரு கண்களிலும் இணைந்தபிம்பங்களின் குத்துக்கோடுகளின் சுழல் விலகலை உருவாக்குகிறது. இது நடுவரை விலகல் என அழைக்கப்படும். இது 0.3˚ யை அணுகும்போது மருத்துவ முக்கியத்துவத்தை அடைகிறது.

சீரற்ற உருவத்தோற்றத்தின் மருத்துவ வகைகள்

சீரற்ற உருவத்தோற்றம் ஒன்றில் சமமானதாக அல்லது சமமற்றதாக இருக்கும்.

சம சீரற்ற உருவத்தோற்றம்

ஒன்றில் அனைத்துப் பரிமாணங்களிலும் அல்லது ஒரு நடுவரையில் பிம்பம் ஒன்றைவிட மற்றது பெரிதாக இருக்கும். நடுவரையில் காணப்படும் இந்த வேறுபாடு சரிந்ததாக இருக்கும்.

 • முழு சீரற்ற உருவத்தோற்றம்: ஒரு நடுவரையில் மட்டும் ஒரு பிம்பம் மற்றதை விட சமமற்றதாக இருக்கும் அல்லது சிறியதாக இருக்கும். இரு நடுவரையிலும் பிம்பத்தை சமமாக  உருப்பெருக்க வேண்டும் அல்லது உருக்குறைக்க வேண்டும்.
 • நடுவரைசார் அல்லது உருளை சீரற்ற உருவத்தோற்றம்: ஒரு நடுவரையில் மட்டும் ஒரு விழியின் பிம்ப அளவு ஒரு கண்ணில் மட்டும் சம அளவில் பெரிதாக அல்லது சிறியதாக இருக்கும். பாதிக்கப்பட்ட நடுவரை செங்குத்தாக, இணையாக அல்லது சாய்வாக இருக்கும்.
 • கூட்டு சீரற்ற உருவத்தோற்றம்: முழு மற்றும் நடுவரை வேறுபாடுகளின் கூட்டாக இருக்கும்.

சமமற்ற சீரற்ற உருவத்தோற்றம்:

பிம்பம் ஒருசில விகிதம் திரிபடைந்து இருக்கும்.

 • படிக வகை: ஒரு திசையில் பிம்ப வேறுபாடு அதிகரித்துக் கொண்டு செல்லும்.
 • குண்டூசிமெத்தை வகை: விழிவில்லை இன்மையில் மிகை சீரமைப்பில் காணப்படுவது போல் பார்வை அச்சில் இருந்து அனைத்துத் திசைகளிலும் அதிகரித்துக் கொண்டு செல்லும்.
 • பீப்பாய் வகை: அதிக கழித்தல் வில்லை சீரமைப்பில் காணப்படுவது போல் பிம்பத் திரிபு இரு திசைகளிலும் குறைந்து கொண்டு செல்லும்.
 • சாய்வு வகை: பிம்ப அளவு ஒரே போல் இருக்கும். ஆனால் வடிவத்தில் சாய்வான திரிபு ஏற்படும்.

சீரற்ற உருவத்தோற்றத்துக்கன சோதனைகள்:

சீரற்ற உருவத்தோற்றத்தைக் கண்டறிந்து அளக்க உருத்தோற்ற அளவுமானி பயன்படுத்தப்படுகிறது. இதில் இரு வகை உண்டு. நேர்மானி மற்றும் இடமானி.

 • நேரடி ஒப்பீட்டு தோற்ற அளவுமானி: இதன் மூலம் ஒவ்வொரு கண்னின் தனிப்பட்ட சுதந்திரமான களத் தூண்டலை ஒரே நேரத்தில் முப்பரிமாணத்தில் பெறலாம். இத் தூண்டல் இரு ஒத்த வடிவத்தில் அருகருகே தோன்றலாம் அல்லது ஒருமைய வெளிப்பாடாக இருக்கலாம். ஒரே அளவில் தோன்றும் இரு பிம்பங்களின் அளவு வேறுபாட்டைக் கொண்டு சீரற்ற உருவத்தோற்றத்தின் பரிமாணத்தைக் கண்டறிய முடியும்.
 • இட தோற்ற அளவுமானி: முப்பரிமாணக் காட்சியில் சீரற்ற உருவத்தோற்றத்தால் தூண்டப்பட்ட திரிபுகளின் உளவியற்பியல் கண்டறிதல்  இதன்மூலம் செய்யப்படுகிறது.  முப்பரிமாண பார்வைக்கே இந்த முறையைக் கையாள முடியும்.

மருத்துவ ரீதியாக சீரற்ற உருவத்தோற்றத்தை ஆராய எளிய அச்சிட்ட நேரடி ஒப்பீட்டு சோதனையும் கணனி சோதனையும் பயன்படுத்தப் படுகிறது.

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

மருத்துவ சிகிச்சை

சீரற்ற உருவத்தோற்றமும்  பார்வைத் தெளிவின்மையுமே கண்சீரமைப்புக்கு வழிவகுக்கும் காரணிகள் ஆகும். இரு விழிகளிலும்  விலகல் பிழை வேறுபாடே சீரற்ற உருவத்தோற்றத்திற்கான பொதுவான காரணம். சீர்செய்வதற்கான வழிகாட்டுதல்கள்:

 • பார்வைத் தெளிவின்மை இருந்தால் ஒத்தப்பார்வை இன்மையை முற்றிலுமாக சீர்படுத்த வேண்டும்.
 • ஒரு வயதில் ஒத்தப்பார்வை இன்மை 3 டி அல்லது அதிகம் இருந்தால் சரிசெய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது 60% நோயாளிகளுக்கு சீரற்ற உருவத்தோற்றத்தை ஏற்படுத்தும்.
 • தொடர் கவனிப்புக்குப் பின்னும் 1.50 டி – 3 டி வரை இருந்து குறையாத ஒத்தப் பார்வை இன்மையை சீர்படுத்த வேண்டும்.
 • இரட்டைப் பார்வை முழு சீரமைப்பை முதிர் குழந்தைகளும் வயதுவந்தவர்களும் ஏற்க இயலாது. ஒத்திசைவு கொண்ட பார்வைக் கூர்மை இருந்தாலும் அதிகப் பார்வைக் குறைபாடு கொண்ட கண்ணுக்கு குறைந்தபட்ச பார்வை சீரமைப்பு தேவைப்படும்.
 • பெரிய அளவில் விலகல் வேறுபாடு இருந்தால் தொடுவில்லை தேவைப்படும். கீழ்வரும் நிலையில் அவை பரிந்துரைக்கப்படுகின்றன:

-         சீரற்ற உருவத் தோற்றம் இருந்தால். தொடுவில்லைகள் பிம்பத்தின் அளவு வேற்றுமையைக் குறைக்கும். சாதகமான நேர்வுகளில் இருவிழிப்பார்வை ஒற்றைப் பார்வையை திரும்பவும் பெற இயலும்.

-         4 டி அல்லது அதிக விலகல் வேறுபாடு உள்ள குழந்தைகளில் ஒத்தப்பார்வையின்மையால் ஏற்படும் பார்வைத் தெளிவின்மை இருந்தால் பார்வைக் கூர்மையில் மேம்பாடு இருக்காது.

-         கண்ணாடியோடு ஒப்பிடும்போது சோதனைத் தொடு வில்லைகள் சிறந்த இருவிழிப் பார்வைக்கு உதவுகிறது.

 • குறிப்பிடத்தக்க அளவில் ஒத்தப் பார்வை இன்மை கிட்டப் பார்வையுள்ள நோயாளிகளுக்கு, வசதியான இருவிழிப் பார்வையைப் பேணத், தலை, அதிகக் கிட்டப்பார்வை உள்ள  கண் நோக்கி சரிந்த நிலையில் இருக்கும் முதன்மை நிலையில் தாழச்சு நிலை காணப்படும் ( ‘பளு கண்’ நிகழ்வு).

மருத்துவ சிகிச்சையில் அடங்குவன

 • கண்ணாடிகள்: இரு கண்களிலும் மிக அதிக வேறுபாடு 4 டி வரை சரிசெய்யும் கண்ணாடியால் சாத்தியப்படும். 4 டி – யை விட அதிகம் இருந்தால் இரட்டைப் பார்வை உண்டாகும். சிறந்த பார்வை சீரமைப்பு தேவைப்படும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தொடுவில்லைகள் சிறந்தவை. பெரியவர்களுக்கு கண்ணுக்கு தொந்தரவு இல்லாத வகையில் சிறந்த சீரமைப்பைப் பரிந்துரைக்கலாம்.
 • தொடுவில்லைகள்: அதிகமாக ஒத்தப்பார்வையின்மை இருந்தால் தொடுவில்லைகளே சிறந்தவை. சிறு குழந்தைகளுக்கு மிகவும் பயனுடைது இது. ஏனெனில் அதிக ஒத்தப்பார்வையின்மை இருந்தால் குறைப்பார்வை கண்களில் பார்வைத் தெளிவின்மை ஏற்படலாம்.

அறுவை சிகிச்சை

இது சிறந்த சிகிச்சை முறை.

இதில் அடங்குவன:

 • உட்கண் வில்லை பொருத்துதல்: விழிவில்லை இன்மைக்கு உட்கண் வில்லை பொருத்தலாம்.
 • விலகல் வெண்படல அறுவை: ஒரு கண் கிட்டப்பார்வை, பார்வைச்சிதறல் மற்றும் எட்டப்பார்வைக்கு இம்முறையைப் பின்பற்றலாம். ஒளிவிலகல் அறுவை, ஒளிவிலகல் வெண்படல அறுவை மற்றும் லாசிக் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
 • படிக விழிவில்லை அகற்றல்: ஒருவிழி அதி கிட்டப்பார்வைக்கு படிக விழிவில்லை அகற்றப்படலாம்.
 • போலி ..எல்: படிக விழிவில்லை அகற்றப்படாமலேயே  உட்கண் வில்லை பொருத்தப்படல்.
 • விழிவில்லை அகற்றலும் உட்கண்வில்லை பொருத்தலும்: இதில் மடிக்கக்கூடிய அல்லது முதுகில்சுமக்கும் உட்கண்வில்லை பயன்படுத்தப்படுகிறது. முதுகில்சுமக்கும் உட்கண்வில்லையில் ஒன்றின்மேல் ஒன்றாக இரு உட்கண்வில்லைகள் கண்ணில் பொருத்தப்படும். அளவு +40 டி இருந்து அந்த திறன் கொண்ட வில்லை கிடைக்காவிட்டால் இவ்வாறு செய்யப்படும்.

சீரற்ற உருவத்தோற்றத்திற்கான காரணம் விழித்திரை சார்ந்ததாக இருந்தால் காரணத்துக்கு ஏற்ற சிகிச்சை அளிக்க வேண்டும்.

 

 • PUBLISHED DATE : Jan 16, 2017
 • PUBLISHED BY : DEEPAK CHANDRA
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Jan 16, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.