திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்கம்

திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்கம் (RCES), ஒரு வெண்படல மேற்திசு இணைவுக் கோளாறு. பெரும்பாலும் வலிதரும் மற்றும் பயமுறுத்தும் ஒரு நோய். சிலசமயம் வெண்படல செயல்திறனை அற்றுப் போகச் செய்யும் நிலையும் ஏற்படும். வெண்படல மேற்திசு உயிரணுக்கள் அரிப்புக்கு உள்ளாகின்றன. இதனால் வெண்படலப் பரப்பு தரிசாக மாறுகிறது. இப்பகுதியில் மீண்டும் திசுக்கள் உருவாகின்றன. இச் செயலாக்கம் திரும்பவும் ஏற்படுகிறது. மேற்திசு உயிரணுக்கள் மீண்டும் உதிர்கின்றன. பல நோயாளிகளில் அரிப்பு இயல்பாகவே தொடர்கதை போல் காணப்படுகிறது.

1872-இல் ஹேன்சென் இதன் அறிகுறிகளை விளக்கினார். இதை அவர் “இடைவிட்ட நரம்புசார் குழல் வெண்படல அழற்சி” எனக் குறிப்பிட்டார். 1900-ஆம் ஆண்டு வான் ஸ்ஸிலி இதன் முக்கிய அம்சங்களை விவரித்தார். 1945-இல் பால் சாண்ட்லர் இந்த நோய்த்தாக்கத்தை பரு மற்றும் நுண் வடிவங்களாக வகைப்படுத்தினார். பருவடிவம் பொதுவாகக் காயத்துடன் தொடர்புடையது. ஆனால் பின்னர் இவை இரண்டும் ஒரே நேரத்தில் உண்டாகும் என்றும் இவைகளுக்கி இடையில் பெரும் வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றும் உறுதிசெய்யப்பட்டது.

RCES எந்த வயதிலும் ஏற்படும். ஆண் பெண் இருபாலாரையும் பாதிக்கும். பெரும்பாலான நோயாளிகள் பின்னணியில் காயம் இருந்ததைக் குறிப்பிடுவர். பின்னணியில் காயம் அல்லது அறுவை இல்லாத போது ஓர் அடிப்படை காரணி குறித்த சந்தேகம் எழ வேண்டும். பொதுவாக இது ஒரு பக்கமானது. வழக்கமாகப் பாவையின் கீழ் உள்ள வெண்படலத்தின் மையமே பாதிக்கப்படும். அடிப்படைக் காரணம் வெண்படலச் செயலிழப்பாக இருந்தால் அறிகுறிகள் இரு பக்கமானதாக இருக்கும். தளர்வான பிடிமானம் உள்ள மேற்திசுவில் பரவல் வேறுபடும். அறிகுறிகளை மேலாண்மை செய்வது சிக்கலானதாகவும் இருக்கும். நகம், தாவரப்பொருள், கூர்மையான வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் அல்லது ஒரு காகிதத் துண்டின் ஓரத்தால் காயம் ஏற்படலாம். இதனுடன் தொடர்புடைய இன்னொரு கோளாறு சல்ஸ்மன் கணுச்சிதைவு ஆகும். எந்த ஒரு முன் காரணியும் இல்லாமலும் தானாகவே இந்த நோய்த்தாக்கம் அரிதாக உருவாவதுண்டு.

பெரும்பாலான வெண்படல அரிப்பு இரவில் அல்லது விடிகாலையில் ஏற்படும். ஓர் இழுப்பு உணர்வைத் தொடர்ந்து கடும் வலி உருவாகும். அதிக அளவிலான அயல்பொருள் உணர்வு, நீரொழுகல், ஒளிக்கூச்சம், பார்வை இடையூறுகள், பெரும்பாலும் இமை வீக்கம், ஆகியவை காணப்படும். சில நோயாளிகளுக்கு சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் இலேசான அறிகுறிகள் இருந்துவரும். ஒருசிலருக்கு செயலிழப்பு, தொடர் அரிப்புடன் வலி மற்றும் பிற அறிகுறிகள் ஒரு நாளில் பல மணி நேரம் அல்லது சில வேளை ஏற்படும்.

சில நோயாளிகளில் மேற்திசு கோளாறுகள் ஒரு நாளும் முழுவதுமாகக் குணம் அடைவதில்லை. ஒவ்வொரு இமைப்பிற்கும் தளர்வான மேற்திசு தகடுகள் கண் பரப்பில் வழுகிச்செல்லும். இந்த நோயாளிகளுக்குத் தொடர் வலி இருக்கும். இவர்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளாவார்கள். திரும்பவரும் அரிப்பின் கணிக்க மடியாத இயல்பால் நோயாளியின் மனக்கவலை அதிகரிக்கும். நோயாளிக்குத் திடீரென வலி ஏற்படும். இயல்பான நடவடிக்கைகளில் பல மணி நேரம் ஈடுபட முடியாது.

அரிப்புகளுக்கு இடையில், சிறு அயல்பொருள் உணர்வு அல்லது பாதிக்கப்பட்ட கண்ணில் ஓர் இலேசான நோயுணர்வு  இருக்குமே தவிர நோயாளிகளுக்கு எந்த அறிகுறிகளும் காணப்படுவதில்லை. உலர்ந்த, குளிர்ந்த அல்லது காற்றுள்ள சூழல்களில் நோயுணர்வு கவனிக்கும்படியாக இருக்கும்.

கடுமையான அரிப்பு உள்ள நோயாளிகளுக்கு மனச்சோர்வு மற்றும்  மனக்கலக்கத்துக்கான அறிகுறிகள் இருப்பது அரிதல்ல. பெரும்பாலான அரிப்புகள் தூக்கத்தில் அல்லது விழிக்கும்போது ஏற்படுவதால்  பலர் தூங்குவதற்கே அஞ்சுவார்கள். எனவே இவர்களுக்கு பல்வேறு விகிதங்களில் தூக்கமின்மை இருக்கும். இயல்பான தூக்க முறைகளுக்கு இடையூறு ஏற்படுவதால் மனவழுத்தம் அதிகரிக்கும். அறிகுறிகளால் பாதிப்பு அடைவார்கள். மனவழுத்தத்தின் காரணமாக விழிக்கும்போது நோயாளிகள் துரிதமாகக் கண்ணைத் திறப்பதால் வேகமான கண் அசைவு தூண்டப்பட்டு, இயல்பான இமைப்பு மற்றும் கண்ணீர் உற்பத்திக்கு இடையூறு ஏற்பட்டு அரிப்பு அதிகமாக உருவாகிறது.

குறிப்புகள்:

 Yanoff Myron, Sassani Joseph W. Ocular Pathology. Seventh Edition. Elsevier Saunders. 2015. P 237- 238.

Tabery Helena M. Recurrent Erosion Syndrome and Epithelial Edema. In Vivo Morphology in the Human Cornea. Springer International Publishing Switzerland. 2015. P 3- 106.

Copeland Jr Robert A, Afshari Natalie A. Copeland and Afshari’s Principles and Practice of CORNEA Vol.1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2013. P 497- 508.

Foster C Stephen, Azar Dimitri T, Dohlman Claes H. Smolin and Thoft’s The CORNEA- Scientific Foundations & Clinical Practice. Lippincot Williams & Wilkins. Fourth Edition. 2005. P 657- 661.

Benitez-del-Castillo, Lemp Michael A. Ocular Surface Disorders. J P Medical Publishers. UK. 2013. P 168- 170.

Brightbill Frederick S, Mcdonnell Peter J, Mcghee Charles NJ, Farjo Ayad A, Serdarevic Olivia. Corneal Surgery- Theory, Technique and Tissue. Fourth Edition. Mosby Elsevier. 2009. P 151- 159.

Holland Edward J, Mannis Mark J. Ocular Surface Disease- Medical and Surgical Management. Springer-Verlag New York. 2002. P 59- 62.

http://emedicine.medscape.com/article/1195183-overview

http://www.aao.org/eyenet/article/treatment-of-recurrent-corneal-erosions

http://www.nature.com/eye/journal/v20/n6/full/6702005a.html

http://retina2020.com/wp-content/uploads/2014/10/3-Shah-Corneal-Erosion-Syndrome.pdf

Holland Edward J, Mannis Mark J, Lee W Barry. Ocular Surface Disease - Cornea, Conjunctiva and Tear Film. Elsevier Saunders. 2013. P 195-203.

Nema HV, Nema Nitin. Textbook of Ophthalmology. Jaypee- Highlights Medical Publishers (P) Ltd. 2012. P 157.

Bowling Brad, Kanski'sClinical Ophthalmology- A Systematic Approach. Eighth Edition. Elsevier, 2016. P 211.

Das S, Seitz B. Recurrent corneal erosion syndrome [Review]. Surv Ophthalmol 53(1): 3, 2008.

Hansen E. Om den intermittirende keratitis vesiculosa neuralgica of traumatisk oprindelse. Hospitals-Tidende 1872; 15: 201- 203.

Von Szily. Ueber disjunction des Hornhautepithels. Arch F Ophthalmol 1900; 51: 486.

Chandler PA. Recurrent erosion of the cornea. Am J Ophthalmol 1945; 28: 355- 363.

 

 

திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்க நோயாளிகளுக்குக் கீழ்க்காணும் அறிகுறிகள் ஏற்படும்:

 • இலேசானதில் இருந்து கடும் வலி
 • அசௌகரியம்
 • நீரொழுகல்
 • செம்மை
 • ஒளிக்கூச்சம்
 • அயல் பொருள் உணர்வு
 • பார்வை அச்சு பாதிக்கப்பட்டால் இலேசான மங்கல் பார்வை
 • ஒற்றைக்கண் இரட்டைப்பார்வை
 • சிதறல் பார்வை
 • மேற்திசுக் கொப்புளம்
 • இமைவீக்கம்

 

 

திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்கத்துடன் காயம் அல்லது முன்வெண்படலச் செயலிழப்பு தொடர்புடையதாக இருக்கும்.

நகம், தூரிகை, காகித நுனி, அல்லது ஒரு மரக்கிளை விளைவித்த காயம் காரணம் ஆகலாம். இது பொதுவாக ஒரு சிறு காயமாக இருக்கும். நகக் காயம் அரிப்பு நோய்த்தாக்கத்துக்கு ஓர் ஆபத்துக் காரணி. பழைய மருத்துவக் குறிப்புகள் இந்நோயை நக வெண்படல நோய் எனக் குறிக்கின்றன. கண்ணாடி, பாறை அல்லது உலோகங்களை விட நகம், காகிதம், அல்லது மரக் கிளைகள் திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்கத்தை உருவாக்கும் சாத்தியக்கூறு கொண்டவை. திசு வலையில் ஆழமாக ஏற்படும் காயம் திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்கத்தை உண்டாக்குவது அரிது.

அடிப்படல கூட்டுக் கோளாறுகள் உள்ளார்ந்தவையா அல்லது பெறப்பட்டவையா என்பதைப் பொறுத்து திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்கம் முதன்மையானது அல்லது இரண்டாம் நிலைப்பட்டது என இருவகைப்படும். வெண்படல செயலிழப்பைத் தவிர அனைத்து அம்சங்களும் இரண்டாம்நிலைப்பட்ட நோய்த்தாக்கத்தில் இருக்கும். திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்க வகைகள் (தாஸ் மற்றும் பிறர், 2008):

முதன்மை வகை (உள்ளார்ந்தது):

 • மேற்திசு அடிப்படல செயலிழப்பு
 • கோகன் நுண்கட்டி செயலிழப்பு (திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்க வகையை உருவாக்கும் மிகப்பொதுவான செயலிழப்பு)
 • பௌமன் படலத்தைப் பாதிக்கும் செயலிழப்பு
 • ரெயிஸ்-பக்லர் செயலிழப்பு
 • தியல்-பெஹ்ங்கே செயலிழப்பு
 • திசுவலை செயலிழப்பு
 • பின்னல் செயலிழப்பு
 • தசைச்செயலிழப்பு

II இரண்டாம்நிலைப்பட்டது (பெற்றப்பட்டது)

 • சிதைவு
 • வரி வடிவ வெண்படல நோய்
 • சல்ஸ்மன் கணுச் சிதைவு
 • காயம்
 • மேற்திசு காய சிராய்ப்புகள்
 • வேதியல் மற்றும் வெப்பக் காயங்கள்
 • இமை நோயியல்
 • கண்ணிமைத் துருத்தல்
 • இமையுட்பிறட்சி
 • வட்டிமை நோய்த்தாக்கம்
 • இமைமூட இயலாமை
 • மெய்போமியன் சுரப்பி செயலிழப்பு
 • இமையழற்சி
 • தொடர் கண் தொற்று
 • நுண்ணுயிரி வெண்படல அழற்சி
 • வைரல் வெண்படல அழற்சி
 • விலகல் அறுவையைத் தொடர்ந்து
 • லாசிக்
 • ஒளிவிலகல் வெண்படல அறுவை
 • மண்டலம் சார் காரணங்கள்
 • நீரிழிவு நோய்
 • நுண்தோல் தன்தடுப்பு நோய்

நோயுடற்கூற்றியல்

திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்க நோயுடற்கூற்றியல் சரிவரப் புரிந்துகொள்ளப்படவில்லை. இணைப்புக் கூட்டமைப்புகளைப் பொறுத்து பொதுவான வெண்படல மேற்திசு ஒட்டு அமையும். இதில் அடி மேற்திசு உயிரணுக்கள், அடிப்படலம், பௌவ்மன் படலம் மற்றும் வெண்படலத் திசுவலை ஆகியவை அடங்கும்.

நுண்மின்காட்டியியல் ஆய்வு மற்றும் நோயெதிர்த்திசுவேதியல் சாயமேற்றல், இந்தக் கூறுகளில், அரையுயிரணுப்பிணைப்பி, அடித்தகடு, அடர்தகடு, தெண்தகடு, நங்கூரநுண்நார், லேமினின், நார்நெக்டின் மற்றும் வகை  IV,  VII  கோலஜன் அடங்கி இருப்பதைக் காட்டுகின்றன. மேற்திசு ஒட்டலில் ஏற்படும் கோளாறுகள் திரும்பத்திரும்ப அரிப்பில் முடிகின்றன. இது முந்தியக் காய அரிப்புகள் மற்றும் வெண்படலச் செயலிழப்போடு தொடர்புடையனவாக இருக்கலாம்.

காயத்தைத் தொடர்ந்து அடுத்துள்ள மேற்திசு அடியடுக்குகளில் இருந்து வழுகி வரும் மேற்திசு உயிரணுக்களால்  வெண்படல மேற்திசு குறைபாடுகள் நிறைவுசெய்யப்படுகின்றன. ஏற்கெனவே இருக்கும் அடிப்படலம் அல்லது திறந்த திசுவலை கோலஜன்னில் இருந்து உயிரணுக்கள் வழுகி வருகின்றன. அடிப்படலம் காயத்துக்குப் பின்னும் சிதையாமல் இருந்தால் ஒரு வாரத்துக்குள் மேற்திசு உயிரணு அடுக்கு உறுதியாக இணைந்துகொள்ளும். அவ்வாறு இல்லை என்றால் அரிப்பு பல ஆண்டுகள் தொடர்ந்து நிகழும்.

 

 

திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்கத்தால் வலி, நீரொழுகல், கண்சிவப்பு மற்றும் ஒளிக்கூச்சம் உருவாகும். இவை குறைவானதில் இருந்து கடுமையானது வரை வேறுபடும். சிலருக்கு இவை தினமும் காணப்படும். வேறு சிலருக்கு ஒரு வாரத்துக்குப் பின் அல்லது ஒரு மாதத்துக்குப் பின் அல்லது ஒரு நீண்ட காலகட்டத்துக்குப் பின் தொடர்ந்து வரும். அறிகுறிகள் இருப்பதில்லை. இரவில் அல்லது விழிக்கும்போது வலி கடுமையாக இருக்கும். நோயாளிக்கு இது தெரியும் ஆதலால் கண்களை மெதுவாகத் திறப்பார்கள். சிலர் வலியால் நள்ளிரவில் எழுந்து விடுவதாகக் கூறுவர். கடுமையான கட்டத்தில் வெண்படலத்தின் கீழ் அரைப்பகுதியில் அரிப்பு காணப்படும். இப்பகுதி தொடர்ந்து கண்ணீர்ப்படலத்தோடும் கீழ் இமையோடும்  தொடர்போடு இருக்கும். மேலும் இதற்கு  ஆவியாகும் உலர் கண் பாதிப்பு ஆபத்து அதிகமாக உள்ளது.

ஏற்கெனவே ஏற்பட்ட சிறு காயம், விழிக்கும் போது வலி, ஒரு கரடுமுரடான ஒழுங்கற்ற ஆறிவரும் மேற்திசு ஆகியவை திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்கக் கண்டறிதலுக்கு உதவுகின்றன.

மருத்துவக் குறிகள்:

மேற்திசு முன்னரே ஆறிவிடுவதால் கவனமான பிளவு விளக்குப் பரிசோதனை தேவை. பாதிப்புகளுக்கு இடைப்பட்ட  மருத்துவ ரீதியான குறிகள் பிளவு விளக்கு ஆய்வில் இயல்பாக இருக்கலாம்.  அறிகுறிகள் அற்ற இடைவெளியில் முந்திய அரிப்பு பாதிப்பு இடங்களில் மேற்திசு அல்லது மேற்திசு சார் இடங்களில் வீக்கம் ஒருவேளை காணப்படலாம். இவை மிக நுட்பமானவையாக இருப்பதால் பிளவு விளக்கின் சுழல் ஒளிர்தலில் மட்டுமே அறிந்து கொள்ளவியலும்.

பிளவு விளக்கில் காணப்படும் மருத்துவக் குறிகள்.

 • அடிப்படல செயலிழப்புக் குறிகள்
 • முந்திய அரிப்புப் பகுதிகள்
 • மேற்திசு நுண் கட்டித் திரள்கள்
 • இiமை மூலம் வெண்படலத்தில் மெல்லிய அழுத்தம் கொடுக்கும் போது தளர்வாக ஒட்டி இருக்கும் மேற்திசு சுருக்கம்

பல நேர்வுகளில் குறிகள் இருப்பதில்லை. ஆகவே பாதிப்பு ஏற்பட்டவுடன் மேற்திசு ஆறுவதற்குள் நோயாளிகளை வருமாறு கூறுவர். இதன் மூலம் புண் இருக்கும் சரியான இடம் அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

கடும் பாதிப்பால் மேற்திசுவில் காணப்படும் அம்சங்கள்:

 • தளர்வான மற்றும் உயர்ந்த மேற்திசு
 • மேற்திசு நுண்கட்டி
 • வெண்படல மேற்திசு குறைபாடுகள்
 • திசுவலை ஊடுறுவிகள்
 • மெய்போமியன் சுரப்பி செயலிழப்பு
 • கண்ணீர்ப்படல உடைவு நேரம் குறைதல்
 • வெண்படல மேற்திசு அரிப்பின் நுட்பமான மாற்றங்களை பிளவு விளக்கு சுழல் ஒளிர்தல் காட்டும்.
 • ஒளிர் சாயம் எதிர்மறையாக காணப்படும்

இணை மையக்கோட்டின் கீழ் உள்ள நடுக்கோடே இறுதியாக மேற்திசு மீளமைவு அடையும்.

வெளிப்படையான குறிகள் பிளவு விளக்கில் கிடைக்காதபோது மேற்திசு ஒட்டு பாதிப்பை பின்வருமாறு அறியலாம்:

மேற்திசு பிணைப்பை அறிய சோதனை: மேற்திசு பிணைப்பை உலர் செல்லுலோஸ் பஞ்சால் அறியலாம். மேற்திசு அரிப்பு என சந்தேகம் கொள்ளும் இடங்களில் இது மென்மையாகத் தேய்க்கப்படுகிறது. மேற்திசு நகர்ந்தால் போதுமான பிணைப்பு இல்லை என சந்தேகப்படலாம். பகுதி மரப்பில் பஞ்சின் நுனியால் தொடும்போது மேற்திசு மடியும் அல்லது உடையும்.

வெண்படல மேற்பரப்பு வரைவியல் (கணினி வெண்படலப் படவரைவியல் பயன்படுத்தி):

திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்கக் கண்ணின் வெண்படல மேற்பரப்பு வரைவியல் பெரும்பாலும் தட்டையான பகுதியின் குவியப் பகுதிகளை வெளிப்படுத்துகிறது. மேற்திசு கோளாறுகளைக் காட்டாமல் வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டும் நோயாளிகளுக்கு இது முக்கியமானது. வெண்படல மேற்பரப்பு வரைவியல் ஒரு ஒழுங்கற்ற கண்பரப்பைக் காட்டலாம். இது பார்வை மங்கல் அல்லது ஒற்றைக்கண் இரட்டைப்பார்வையின் காரணத்தை விளக்குகிறது.

திசுவாய்வியல்:

 • அசாதாரண மேற்திசு அடித்தள உயிரணு அடுக்கு.
 • புலனாகும் மேற்திசு அடித்தள உயிரணு வீக்கம்
 • அசாதாரண மேற்திசு அடிப்படலம்
 • அடித்தளப் படலத்தில் இருந்து உயிரணு பிரிதல்
 • அசாதாரண அரையுயிரணுப்பிணைப்பி அல்லது இல்லாமல் இருத்தல்
 • நங்கூரநுண்நார் இழப்பு
 • இரட்டையுட்கரு உயிரணு மற்றும் பன்னுட்கரு உயிரணுக்கள் வெண்படல மேற்திசுவில் காணப்படுதல்.
 • மேற்திசுவின் அனைத்து அடுக்களிலும் சாயச்சார்பற்ற செல்களின் ஊடுறுவல்

ஒருகுவிய நுண்காட்டியியல்:  முன்வெண்படல செயலிழப்போடு தொடர்புடைய திரும்பவரும் வெண்படல அரிப்பு  நோய்த்தாக்கத்தில், மேற்திசு அடித்தளம், அடிப்படலம், பௌவ்மன் படலம், முன்திசுவலை  மற்றும் வெண்படல நரம்புமுடிச்சுகளில் அமைப்பு மாற்றங்கள் உள்ளதைக் காட்டுகிறது.

மின்நுண்காட்டியியல்: அரையுயிரணுப்பிணைப்பி இல்லாமல் இருப்பதை மின்நுண்காட்டியியல் காட்டுகிறது.  சில நேர்வுகளில்  முழு அடிப்படல தடிமனும் இருப்பதில்லை. அடிப்படல மெலிவும் பிளவும் கூட காணப்படலாம். அடிப்படலத்தின் அசாதாரண உற்பத்திக்கும் இணைப்புக்கும் மேற்திசு உயிரணுக்கள் காரணமாக இருக்கலாம்.  அடித்தள மேற்திசு உயிரணுக்களில் அசாதாரண வடிவத்தோடு அதிக எண்ணிக்கையில் இழைமணிகள் இடை உயிரணு நுண்குமிழ்கள் போல் இருத்தல் அசாதரண வளர்சிதை மாற்ற செயல்பாடுகள் இருப்பதைக் குறிக்கின்றன.

வேறுபடுத்திக் கண்டறிதல்

கீழ்க்காணுபவற்றில் அடிக்கடிவெண்படல மேற்திசு உடைதலைக் காணலாம்:

 • வெளித்தோன்றும் வெண்படல நோய்
 • நரம்பூட்ட வெண்படல நோயுடன் வலியற்ற வெண்படல அரிப்பு
 • சிற்றக்கித் திசுவலை வெண்படலநோய் திரும்பத்திரும்ப வருதல்
 • கரடுமுரடான கடின இமைத்தகடு
 • இமைத்தகட்டின் அடியில் அயல்பொருள்
 • தன்னால் ஏற்பட்ட வெண்படலக் காயம் (அரிது)

 

 

மேலாண்மை மருத்துவக் கண்காணிப்பின் கீழ் செய்யப்பட வேண்டும்.

உறுதியான மற்றும் போதுமான சிகிச்சை இதுவரை இல்லை. வலிநிவாரணத்துக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறதே தவிர குணப்படுத்தும் சிகிச்சை இல்லை. துன்பம் அளிப்பதாக இருந்தாலும் இந்நோயால் பார்வைத் திறனுக்கு எந்த ஆபத்தும் இல்லை.

மேலாண்மை இலக்குகள்:

 • முதன்மை மேலாண்மை இலக்குகள்: கடுமையான பாதிப்பின் போது வலி நிவாரணமும் மேற்திசு விரைவாக உருவாவதை ஊக்குவிப்பதுமே முதன்மையான இலக்குகள்.
 • நீடித்த மேலாண்மை இலக்குகள்: உருவான மேற்திசுவை நிலைப்படுத்துதலும் தொடர் அரிப்புகளைத் தடுத்தலுமே நீடித்த மேலாண்மை இலக்குகள் ஆகும்.

இந்த இலக்குகளை எளிதில் அடைந்துவிட முடியாது. நீடித்த எதிர்ப்புள்ள நேர்வுகள் நோயாளிக்கும் மருத்துவருக்கும் துயரத்தை அளிப்பதாகும். முதலின் காப்பு நடவடிக்கைகள் பின்னர் ஊடுறுவல் சிகிச்சை என்ற படிமுறை சிகிச்சையைக் கையாள வேண்டும். பிசிர்த்தசைவாத சிகிச்சை போன்ற துணைசிகிச்சைகள் மூலம் அறிகுறிகளுக்குக் கூடுதல் நிவாரணம் கிடைக்கும்.

மசகுக் களிம்புகள், மென்கட்டு தொடுவில்லைகள் போன்ற பாதுகாப்பு சிகிச்சைகள் உருவாக்கப்பட்டுள்ளன. முன் திசுவலை துளை மற்றும் ஒளிசிகிச்சை விலகல் வெண்படல அறுவை போன்ற அறுவை சிகிச்சைகளும் கையாளப்படுகின்றன. புது அடித்தள படல-மேற்திசு இடைமுகத்தை உருவாக்குவது இதன் நோக்கம் ஆகும்.

ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற சிகிச்சை முறையை உருவாக்குதல் இந்நோயை வெற்றிகரமாகக்  கட்டுப்படுத்த இன்றியமையாதது ஆகும்.

மருத்துவ சிகிச்சை:

 • விழிக்கும் போது மெதுவான கண் அசைவு மற்றும் படிப்படியாக இமைகளைத் திறத்தல்
 • ஒட்டிடல் மற்றும் நுண்ணுயிர்க்கொல்லி மேல் களிம்பு: கடும் நோயில் பயன்படுத்தலாம்.
 • செயற்கைக் கண்ணீர்: நோய்த்தடுப்புக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.  இவை சொட்டு மருந்தாகவும் களிம்பாகவும் கிடைக்கும். இதை படுக்கும் போது பயன்படுத்துவதால் உராய்வு தடுக்கப்படுகிறது. இமை அசைவின் போது அவை மேற்திசுவைக் கிழிக்காமல் பாதுகாக்கும் (இதுவே இந்நோய் திரும்பவரக் காரணமாகும்).
 • சவ்வூடுமிகைப்பரவல் மருந்து: திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்கத்தில் சவ்வூடுமிகைப்பரவல் மருந்துகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணீர்த் திரவம் ஆவியாதல் குறைவதால் தூக்கத்தின் போது ஒப்பீட்டளவில் கண்ணீர்ப்படலத்தில் மிகையழுத்தம் காணப்படும். இரவில் கண்ணீர் சவ்வூடுபரவல் தன்மை குறைவதால் கண்ணீர்ப்படலத்தில் இருந்து நீர் வெண்படலத்துக்கு இடம்பெயர்கிறது. இதன் விளைவாக வெண்படல மேற்திசு வீக்கமும் மேற்திசு இணைப்புத்திறன் குறைதலும் நிகழ்கின்றன. மிகையழுத்த (5%) சோடியம் குளோரைடை சொட்டாக அல்லது களிம்பாகப் பயன்படுத்தலாம். கண்ணீர் சவ்வூடுபரவல்திறனை அதிகரித்து இது மேற்திசு இணைதிறனை ஊக்குவிக்கிறது. இதனால் மேற்திசு வீக்கமும் வற்றுகிறது. இறுதி பாதிப்புக்குப் பின் இம்மருந்துகளை சில மாதங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

பெரும்பான்மையான நேர்வுகள் இலேசானவை. காப்பு சிகிச்சைகள் பலன் அளிக்கும். இவை வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் மேற்திசு வளர்ச்சியை ஊக்குவித்துத் திரும்ப வருவதைத் தடுக்கும்.

விழிக்கும்போது கண்களை மெதுவாக அசைக்க வேண்டும். இமைத்தகட்டு கண்சவ்வும் வெண்படல மேற்திசுவும் படிப்படியாகப் பிரிய வழிவகுக்க வேண்டும். இது  கிழிக்கும் விசையைத் தடுத்து அரிப்பைத் தடுக்கும்.

பிற மருத்துவ சிகிச்சைகள்:

 • சவ்வூடுபரவல் கூழ்மக் கரைசல்கள்
 • தற்காலிக மென்கட்டு தொடுவில்லைகள்: இவை வெண்படல மேற்திசுவை மேல் இமைத்தகட்டு கண்சவ்வினால் ஏற்படும் உராய்வில் இருந்து தடுக்கின்றன. இதனால் மேற்திசு நகர்ச்சியும் அடிப்படல மறு உருவாக்கமும் ஊக்குவிக்கப்படுகின்றன. இது ஒரு சில வாரங்களில் இருந்து பல மாதங்கள் வரை அணியப்படும்.  இரு வாரங்களுக்கு ஒரு முறை மாற்றவேண்டும். இது வெண்படல மேற்திசு மற்றும் அடிப்படலங்களுக்கு இடையில் நிலையான இணைவுக் கூட்டு அமைவுகளை உருவாக்க உதவலாம்.

இந்தத் தொடுவில்லைகளை தீவிர மருத்துவ மேற்பார்வையின் கீழேயே பயன்படுத்த வேண்டும். ஏனெனில், நீண்ட நாள் பயன்படுத்தும் போது நுண்ணுயிரி வெண்படல அழற்சி மற்றும் புதுக்குழல் அரும்புதல் ஏற்படக் கூடும். இருப்பினும் நவீன சிலிக்கோன் ஹைடிரோ-ஜெல் வில்லைகள் நீடித்த பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானவையாக இருக்கின்றன.

தொடர் அரிப்பை தொடுவில்லைகள் தடுப்பதில்லை. ஆனால் அரிப்பில் இமைக் கூறு கோளாறுகள் பங்குவகித்தால் தொடுவில்லைகள் பயன்தரலாம்.

 • தற்சார் ஊனீர்: திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய்த்தாக்கத்திற்கு தற்சார் ஊனீர் பலனளித்தது. மீண்டும் வருவது தடுக்கப்பட்டது. உயிர்ச்சத்து ஏ, மேற்தோல் வளர்ச்சிக் காரணி (EGF),  மாற்றும் வளர்ச்சிக் காரணி பீட்டா மற்றும் நார்க்கட்டுப்புரதம் (FN) ஆகியவை இதில் அடங்கியுள்ளன. நார்க்கட்டுப்புரதம், மேற்திசு உயிரணு நகர்ச்சியை ஊக்குவித்து இணைப்புச் செயலாக்கத்தில் பங்கேற்கிறது. ஊனீரில் இருக்கும் கொழுமியம் மெய்போமியன் சுரப்பிகள் சுரக்கும் கொழுமியங்களுக்கு பதிலியாக செயலாற்ற முடியும். தற்சார்பு ஊனீர் பாதுகாப்பானது. எதிர்விளைவுகள் அறிவிக்கப்படவில்லை.
 • தொப்புள்கொடி ஊனீர்: இதில் வளர்ச்சிக் காரணிகளின் அடர்த்தி அதிகம். அறிகுறிகளையும் உலர்கண் மற்றும் ஸ்ஜோக்ரன் நோய்தாக்கத்தில் வெண்படல மேற்திசு நோயையும் குறைப்பதில் சிறந்தது. செயற்கைக் கண்ணீர் மற்றும் தொப்புள்கொடி ஊனீர் கொண்டு சோதித்ததில் நோய் திரும்ப வருவதைத் தடுப்பதில் தொப்புள்கொடி ஊனீர் பலன் அளிப்பதாகக் காணப்படுகிறது. தொப்புள் கொடி நரம்பில் இருந்து ஒரு முறை எடுக்கும் ஊனீரின் அளவு அதிகம் ஆகும். எனவே ஒரு மாதிரியைக் கொண்டு பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். குருதிவழி பரவும் நோய்கள், சேமிப்பு தேவைகள், ஒவ்வாமை ஆபத்து மற்றும் நுண்ணுயிரிகளால் அசுத்தமாதல் ஆகிய பிரச்சினைகள் இதில் உள்ளன.
 • வளர்ச்சியூக்கக் காரணிகள்: நீடித்த நீரிழிவு, நரம்புசார் வெண்படலநோய் போன்ற கோளாறுகள் கொண்ட  அரிப்புள்ள சில நோயாளிகளுக்கு இது பலன் அளிப்பதாக உள்ளது.
 • இமை நோய் சிகிச்சை: மெய்போமியன் சுரப்பி நோய் (MGD) மற்றும் நீடித்த இமையழற்சி போன்ற சில நோய்களோடு திரும்பவரும் வெண்படல அரிப்பு நோய் தொடர்புடையதாக உள்ளது. மெய்போமியன் சுரப்பி நோயாளிகளின் கண்ணீர்ப்படலத்தில் நுண்ணுயிரி லிப்பேசுகள், கொழுப்பு அமிலங்கள், இடைலூக்கின்கள் மற்றும் மேட்ரிக்ஸ் மெட்டலோபுரோட்டினேசசுகளின் அளவு அதிகரிப்பு வெண்படல மேற்திசு குணமடைவதில் இடையூறு விளைவிக்கிறது. ஆகவே மெய்போமியன் சுரப்பி நோய்க்கு முதலில் சிகிச்சை அளிக்க வேண்டும். இமைகளின் சுத்தம் பேணுவதோடு வாய்வழி டெட்ராசைக்ளின் அளிக்க வேண்டும். குறைந்த அளவு டெட்ராசைக்ளினை சில மாதங்கள் வரை தொடர்ந்து அளிக்க வேண்டும்.
 • போட்டுலினம் நச்சால் தூண்டப்படும் இமைத்தொய்வு: எளிய முறைகளுக்குக் கட்டுப்படாத நோயை இம்முறை மூலம் கட்டுப்படுத்தலாம்.
 • வாய்வழி மேட்ரிக்ஸ் மெட்டல்லோபுரோட்டினேஸ்  (MMP) தடுப்பிகள்: எம்எம்பி நொதிகள் (எம்எம்பி-2 மற்றும் எம்எம்பி-9) வெண்படலத்தாலும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை புண் ஆறும் செயலாக்கத்தில் பங்கு வகிக்கின்றன. பல கண் பரப்பு கோளாறுகளில் அழற்சி செயல்பாடுகளுக்கு காரணமாக உள்ளன. திரும்பவரும் வெண்படல நோய்தாக்கத்தில் எம்எம்பி தடுப்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
 • அறுவை சிகிச்சை:

மருந்து சிகிச்சை பலன் அளிக்காத போது அறுவை சிகிச்சை தேவைப்படும்.

அறுவைக்கான குறிப்பு:

 • மருந்து சிகிச்சை பலன் அளிக்காதபோது
 • தொடர்ந்து வலி
 • தொடர் மேற்திசு குறைபாட்டால் தொற்றும் வெண்பட நோய்

அறுவை சிகிச்சையைத் தீர்மானிப்பவை:

 • அரிப்பின் கடுமை
 • செயலிழப்பு அல்லது பிற நோய்கள்
 • நோயியல் மற்றும் அரிப்பிடம்
 • நோயாளியின் விருப்பம்

பௌவமன் படல இரத்தின முனை மெருகூட்டல், முன் திசுவலை மற்றும் வெட்டு லேசர் ஒளிசிகிச்சை வெண்படல அறுவை போன்ற முறைகள் பயன்படுத்தப்படும்.

 • தொய்வான மேற்திசுவை குறைத்தல்
 • பெரும் மேலோட்டமான மேற்திசு வெண்படல அறுவை

அறுவைக்கு உகந்த நோயாளி:

 • வெண்படலத்தின் பல பகுதிகளில் தானாக ஏற்படும் பன் அரிப்பு
 • காய வரலாறு இன்மை
 • கடுமையான அடித்தள செயலிழப்பின் விளைவாக பார்வை குறைதல்
 • பெரும் பகுதியில் தளர் பிடிமான ஒழுங்கற்ற மேற்திசு
 • ஊசி பயன்படுத்தி திசுவலை துளையிடல்
 • Nd:YAG லேசர் பயன்படுத்தி முன் திசுவலை துளையிடல்
 • Nd:YAG லேசர் வெண்படல அறுவை
 • மைக்ரோடயாதெர்மி
 • வெட்டு லேசர் ஒளிசிகிச்சை வெண்படல அறுவை

நோய்முன்கணிப்பு

 • பொதுவாக தகுந்த பராமரிப்பு இருந்தால் நோய்முன்கணிப்பு சிறப்பாக அமையும்.
 • காப்பு சிகிச்சை பெரும்பாலான நோயாளிகளுக்குப் பலன் தருகிறது

 

ஏற்படக்கூடிய சிக்கல்கள்:

 • வெண்படலத் தெளிவின்மை
 • வெண்படல வடு
 • தொற்று வெண்படல அழற்சி
 • பார்வை குறைதல்

 

 

தடுப்புமுறைகளாவன:

 • உலர்ந்த எரிச்சலூட்டும் சூழலைத் தவிர்த்தல்
 • இரவு விழித்திருப்பதைத் தவிர்த்தல்
 • விழிக்கும்போது மெதுவான கண்ணசைவு
 • இரவில் மசகுக் களிம்பைப் பயன்படுத்துதல்
 • தூங்கும் அறையின் ஈரப்பதம் மற்றும் காற்றுத்தரத்தைப் பேணுதல்
 • தொற்று ஏற்படாமல் தவிர்த்தல்
 • காயம் ஏற்படாமல் இருக்கக் காப்புக் கண்ணாடிகளைப் பயன்படுத்துதல்

 

 • PUBLISHED DATE : Mar 26, 2019
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 26, 2019

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.