தொற்றும் கண்சவ்வழற்சி

தொற்றும் கண்சவ்வழற்சி (EKC) மிகவும் பரவும் ஒரு வைரல் கண்சவ்வழற்சி ஆகும். அதினோவைரஸ் என்னும் ஒரு தொகுதி வைரசுகளால் இது உண்டாகிறது. அதினோ வைரசின் ஊனீர் வகைகளான 8, 19, 37 ஆகியவை தொற்றும் கண்சவ்வழற்சியுடன் பெரும்பாலும் தொடர்புடையன ஆகும். அதினோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த பல ஊனீர் வகைகள் உள்ளன. அவை,  தொண்டை கண்சவ்வழற்சிக் காய்ச்சல், குறிப்பற்ற சிதறல் நுண்ணறைக் கண்சவ்வழற்சி, காம்பு கண்சவ்வழற்சி ஆகியவற்றை உண்டாக்குகின்றன. கண் தொற்றுக்களை ஏற்படுத்துவதோடு அதினோவைரஸ் (முக்கியமாகத் தொண்டை கண்சவ்வழற்சிக்குக் காரணமானவை) இரைப்பைக்குடல் பாதை மற்றும் மூச்சு மண்டலத் தொற்று நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன. உலகம் முழுவதும் காணப்படும் தொற்றும் கண்சவ்வழற்சி திடீர் நோயெழுச்சியாகப் பரவும் தன்மையும் கொண்டது.

பாதிக்கு மேற்பட்ட நேர்வுகளில் அடுத்த கண்ணிலும் அறிகுறிகள் (இலேசாக) காணப்படும்.

திடீரென உருவாகும் கடும் நுண்ணறை கண்சவ்வழற்சி, கண்களில் நீர் வடிதல், இணைப்படல வீக்கம், கண்சிவப்பு, ஒரே பக்க முன் காது நிணநீர்ச் சுரப்பி நோய்  ஆகிய மருத்துவ அம்சங்களைக் காட்டும் கடுமையான கண்சவ்வழற்சியின் பொதுவான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

கண்சவ்வழற்சி உருவாதல் தொற்றும் கண்சவ்வழற்சியை பிற கண்சவ்வழற்சி வடிவங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டும். மேலும் அது ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்டதில் இருந்து நான்காவது நாள் பொதுவாக வெளிப்படும். பரவலாகவும், நுண் மேலோட்டமான கண்சவ்வழற்சியில் இருந்து மேல்செல் குறைபாடு வரைக்கும், அதில் இருந்து சார் மேல் செல் ஊடுருவல் வரைக்கும் கண்சவ்வின் பாதிப்பு இருக்கும். பல ஆண்டுகள் நீடிக்கும் சார் மேல் செல் ஊடுருவலினால் ஒளிக்கூச்சமும் பார்வை கூர்மைக் குறைவும் ஏற்படும்.

தொற்றும் கண்சவ்வழற்சியின் கடுமையான நேர்வுகளில் படல அல்லது போலிப்படல கண்சவ்வழற்சி ஏற்படக்கூடும்இதனால் விழிப்படல வடுவும் இமை விழிக்கோள ஒட்டுதலும் உருவாகலாம்.

தொற்றும் கண்சவ்வழற்சி பொதுவாக தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளும் நோயாகும். குறிப்பிடத்தக்க எந்த ஒரு பாதிப்பும் இல்லாமலேயே 1-3 வாரங்களில் அது சுயமாகவே சரியாகும். நோய் மருத்துவ ரீதியாகக் கண்டறியப்படும். அறிகுறிகளுக்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. எதிர் வைரல் மற்றும் சைக்ளோஸ்போரின் கண்சொட்டு மருந்துகளைச் சில நோயாளிகளுக்கு அளித்து முயற்சி செய்யப்பட்ட போதிலும் உறுதியான பலன் எதுவும் இல்லை. கடுமையான படல அழற்சி இருந்தால் இலேசான ஊக்க மேற்பூச்சு மருந்துகள் பயன்படுத்தப்படலாம். மேல் செல் ஒளிபுகா நிலையை அகற்ற  எக்சைமர் லேசர் போட்டோ-தெரப்பட்டிக் கெரடெக்டோமியுடன் (PTK) குறைந்த அளவு மைட்டோமைசின் சி (MMC) பயன்படுத்தப்படலாம்.

குறிப்புகள்:

http://emedicine.medscape.com/article/1192751-overview

http://reference.medscape.com/medline/abstract/21109229

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3661494/

http://emedicine.medscape.com/article/1191370-overview

http://eyewiki.org/Epidemic_Keratoconjunctivitis

http://eyewiki.org/Conjunctivitis

http://eyetubeod.com/advancedocularcare/pdfs/aoc1112_cornea_Starr.pdf

Heidelbaugh Joel J, Primary care: Clinics in Office Practice Vol.42, Number 3, September, 2015. Elsevier, Philadelphia, Pennsylvania. 

Kanski,Jack J. Clinical Ophthalmology, A Systematic Approach .Third Edition.UK. Butterworth Heinemann, 1994. 

மருத்துவமனையில் செய்யும் கண்பரிசோனையைத் தொடர்ந்தோ, குடும்பத்துக்குள்ளோ அல்லது பணியிடத்திலோ தொற்று கண்சவ்வழற்சி அறிகுறிகள் தோன்றலாம்.

இதன் நோயரும்பு காலம் 2-14 நாட்கள்அறிகுறிகள் தோன்றி 10-14 நாட்கள் ஒருவர் தொற்றுடன் இருப்பார்.

தொற்றும் கண்சவ்வழற்சியைத் தொடர்ந்து காணப்படும் மண்டலம்சார் அம்சங்கள்:

-    காய்ச்சல்

-    தலைவலி

-    உடல் களைப்பு

-    நிணநீர்ச்சுரப்பி வீக்கம் (குறிப்பாக முன் காது)

-    மூச்சுமண்டல அறிகுறி

-    பொதுவான சோர்வு

-    தசை வலி

-    குமட்டல்

-    வாந்தி

-    வயிற்றுப்போக்கு

கண்சார்ந்த அம்சங்கள்:

அறிகுறிகள் 7-21 நாட்கள் நீடிக்கும். நோய் ஏற்பட்டு ஏழு நாட்களில் பெரும்பான்மையான நோயாளிகளுக்கு மறு கண்ணும் பாதிக்கப்படலாம். இந்தக் கண்ணில் அறிகுறிகள் இலேசாக இருக்கும்.

கடுமையான நேர்வுகளில் நோயாளிக்கு கண் அல்லது விழிக்கோளத்தைச் சுற்றி வலியும் பார்வைக் குறைவும் ஏற்படலாம்.

முக்கிய விழி அறிகுறிகள் வருமாறு:

-    கண் சிவப்பு

-    உறுத்தல்

-    அரிப்பு

-    துகள் இருக்கும் உணர்வு

-    கண்ணில் நீர்வடிதல்

-    வலி

-    விழி இணைப்படல் வீக்கம்

-    ஒளிக்கூச்சம்

-    விழி இணைப்படலத்தின் கீழ் இரத்தக் கசிவு

-    பார்வை மங்கல் அல்லது குறைதல்

-    இமை வீக்கம்

-    விழி இணைப்படலத்தில் போலிப் படலங்கள்.

தொற்றும் கண்சவ்வழற்சி அதெனோவைரசால் ஏற்படுகிறது. இந்த வைரசில் 50-க்கும் மேற்பட்ட ஊனீர் வகைகள் காணப்படுகின்றன. தொற்றும் கண்சவ்வழற்சியை உண்டாக்கும் ஏறக்குறைய 19 ஊனீர் வகைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  பொதுவான, தொடர்புடைய ஊனீர் வகைகள் 8, 19, மற்றும் 37 ஆகும். ஊனீர் வகை 2-5, 7, 9, 10,11,14,16, 21, மற்றும் 29 ஆகியவற்றாலும் சிறு அளவில் இந்நோய் ஏற்படுகிறது.

பொது மக்களிடம் இந்த வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இந்தத் தொற்றிற்கு அனைவருமே ஆளாக நேரிடலாம்.

பெரியவர்களுக்குப் பொதுவாக இத்தொற்று ஏற்பட்டாலும் அனைத்து வயதினரையுமே இது தாக்கக் கூடும்.

மருத்துவ அறிகுறிகள் ஏற்பட்டு 14 நாட்களில் கண் அல்லது தொண்டையில் இருந்து அதெனோ வைரசைப் பிரித்தெடுக்கலாம்.

பள்ளி, முகாம், மருத்துவ மனை அல்லது பணி இடங்களில் பொதுவாக திடீர் நோயெழுச்சி உண்டாகும்.

பரவக் கூடிய முறைமைகள்:

-    கண் சுரப்புகளோடு நேரடித் தொடர்பு (முக்கியமாக)

-    காற்றின் மூலம் நுண்துளி பரவுதல்

-    நீச்சல் குளம் மூலம்

-    மருத்துவ மனைகள்

கண் தொடர்பு கொள்ளும் ஒப்பனைப் பொருட்கள் போன்றவற்றைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளக் கூடாது.

பெரும்பான்மையான திடீர் நோயெழுச்சிகள் கண் மருத்துவ மனைகளில் தொற்றுக் கிருமிகள் கொண்ட கருவிகளினால் ஏற்பட்டுள்ளன.

மருத்துவ மனைகள் மூலம் தொற்று பரவக் காரணம்:

-    பொதுவான கிருமிநாசினிகளூக்கு (70 % ஐசோபுரப்பைல் ஆல்க்ககால் மற்றும் அம்மோனியா) வைரஸ் கட்டுப்படாமை.

-    அறிகுறிகள் ஆரம்பித்து 3 நாட்கள் முன்னும் 14 நாட்கள் பின்னும் வைரசுகள் உதிர்கின்றன. இந்த உணமையைக் கருத்தில் கொண்டே நோயாளி பணிக்கோ கல்வி நிலையத்துக்கோ திரும்ப வேண்டும்.

-    அதெனோ வைரஸ் ஊனீர் வகை 19  ஐந்து வாரங்கள் வரை செயல்தன்மையுடன் இருக்கும்.

வைரல் கண்சவ்வழற்சி நோயாளிகளிடம் இருந்து பிரித்தெடுக்கப்படும் முக்கிய நோய்க்காரணி அதெனோவைரசே.

மருத்துவ குணாம்சங்களைக் பொறுத்தே நோய்கண்டறிதல் அமைகிறது.

வைரல் வளர்ப்பு சோதனையும், விழிப்படல செல் ஆய்வுகளுமே தொற்றும் கண்சவ்வழற்சியை இனங்காணவும் உறுதிப்படுத்துவதற்குமான வழிமுறைகள் ஆகும்.

தொற்றும் கண்சவ்வழற்சிக்கு முன் நச்சுக்காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகள் தோன்றும்.

கண்சவ்வழற்சியோடு விழிவெண்படல அழற்சியும் இணைந்து காணப்படும்.

தொற்றும் கண்சவ்வழற்சியோடு இருபக்க முன்காது நிணநீர்ச்சுரப்பி நோயும் இருப்பது ஒரு மரபான அம்சம் ஆகும்.

வெண்படலப் பாதிப்பு இருந்தால் மட்டுமே பார்வைக் கூர்மைக் குறைவு காணப்படும்.

கண்ணில் காணப்படும் அம்சங்கள்:

நோய்கண்டறிதலுக்கு பிளவு – விளக்கு சோதனை தேவைப்படும்.

இமைகள்:

-    இமை வீக்கம்

-    இமைச் சிவப்பு

-    நுண்ணறை எதிர்வினை, குறிப்பாகக் கீழ் இமை சவ்வழற்சி (ஆரம்ப மற்றும் மிகவும் பொதுவான அறிகுறி).

-    நுண்காம்பு வீக்கம்

-    சார் இமைப்படல மற்றும் ஊசிமுனைக் குருதிப்போக்கு

-    படல அல்லது போலிப்படல கண்சவ்வழற்சி

-    கண்சவ்வழற்சி வடு

-    இணையிமை உருவாதல் (இது கண் அசைவுகளைக் கட்டுப்படுத்தும்)

விழிவெண்படலம்

பிற கண்சவ்வழற்சிகளில் இருந்து தொற்றும் கண்சவ்வழற்சியை வேறுபடுத்தும் அம்சம் விழிவெண்படலம் இதில் பாதிப்புக்கு உள்ளாவதே. இது பொதுவாக இலேசாகவும் மாறும் தன்மையுள்ளதாகவும் இருக்கும்.

விழிவெண்படல உணர்திறனில் மாற்றம் எதுவும் இருப்பதில்லை.

-    பரவல், நுண் மேல்செல் வெண்படல அழற்சி: அறிகுறிகள் தென்பட்ட பின் 3-4 நாட்கள் கழித்து இது உருவாகும். 2-3 வாரங்கள் நீடிக்கும். ஒளிர்வு மற்றும் இளஞ்சிவப்பு வங்காளச் சாயம் இதில் சாயம் ஏற்றும். வெளிப்படை வெண்படல் மேல்செல் குறைபாடு இதனால் ஏற்படலாம்.

-    குவி மேல்செல் வெண்படல அழற்சி: அறிகுறிகள் தென்பட்டு ஒரு வாரத்தில் இது உருவாகலாம். இது 1-2 வாரங்கள் நீடிக்கும். மையத்தில் புண்ணும் சாம்பல்-வெள்ளைப் புள்ளிகள் கொண்ட ஒழுங்கற்ற விளிம்பும் காணப்படும். வினைபுரியும் வைரல் நோயால் இத்தகைய மேல்செல் மாற்றங்கள் உருவாகின்றன.

-    சார் மேல்செல் ஊடுருவிகள்: அறிகுறிகள் ஏற்பட்டு 2 வாரங்கள் கழித்து இவை குவி மேல்செல் புண்களுக்கு அடியில் ஊடுருவி சில வாரங்களில் இருந்து பல ஆண்டுகள் நீடிக்கும். இவை நோய்த்தடுப்பியல் சார்ந்தவை. வடுக்கள் இன்றி தானாகவே குணமாகும். இதனோடு மாறும் மித முன் விழிகுழற்படல அழற்சியும் ஏற்படலாம்.

-    தகடுவடிவ வெண்படல அழற்சி: அரிதாக உருவாகலாம்.

விழிக்குழற்படலத் திசு:

-    முன் விழிக்குழற்படல அழற்சி: மாறும் மித முன் விழிக்குழற்படல அழற்சி அரிதாக உருவாகக் கூடும்.

ஆய்வகக் கண்டறிதல்:

தொற்றும் கண்சவ்வழற்சியைக் கண்டறிய பின்வரும் சோதனைகளைப் பயன்படுத்தலாம்.

-    பாலிமெரேஸ் தொடர் வினை மதிபீடு (PCR மதிப்பீடு)

-    ஒளிர்வு எதிர்பொருள் சோதனை

-    நிரப்பிப் பொருத்துச் சோதனை

-    கீம்சா உயிரணுவியல்: செல் அக இணைவுகளையும், நிணசெல்களையும் கண்டறிய சாயமேற்றப்பட்ட கண்படல மாதிரிகளை நுண்காட்டியினால் சோதனை செய்தல்.

-    செல் வளர்ச்சி சோதனை

-    நொதி நோய்த்தடுப்பு மதிப்பீடு

-    அதெனோபிளஸ் சோதனை: விளைவிய அடிப்படையிலான  நோய்த்தடுப்பு மதிப்பீடான இது துரித நோய்ப்பரிசோதனைக்கு ஒரு மேம்பட்ட பொறியமைவு ஆகும். இந்தப் பரிசோதனை அதெனோ வைரஸ் துகள்களைக் கண்டறிகிறது. வைரஸ் இல்லை என்று அறிந்தால் நோயாளி விரைவாகப் பணியிடம் அல்லது கல்வி இடங்களுக்கு திரும்பவும் செல்ல முடியும். அதெனோ வைரல் தொற்றை உறுதி செய்தால் நோய் தீர்க்கப் புது சிகிச்சைகளையும் ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியும்.

பாலிமெரேஸ் தொடர் வினைச் சோதனையே அதிக உணர்திறன் கொண்டது. எனவே எளிதில் நோய் கண்டறிய முடியாத நோயாளிகளுக்கே அதெனோபிளஸ் சோதனையை பயன்படுத்த வேண்டும்.

கீழ்வரும் நிலைகளில் இருந்து தொற்றும் கண்சவ்வழற்சியை வேறுபடுத்திக் காண வேண்டும்:

-    இமையரிப்பு

-    இணைவு கண்சவ்வழற்சி

-    சிற்றக்கி

-    ஒவ்வாமை கண்சவ்வழற்சி

-    கடும் குருதிக்கசிவு கண்சவ்வழற்சி

-    பாக்டீரியா கண்சவ்வழற்சி

-    வைரல் கண்சவ்வழற்சி

-    விழிவில்லை பயன்பாட்டுச் சிக்கல்

மருத்துவக் கண்காணிப்பின் கீழ்தான் சிகிச்சை அளிக்க வேண்டும்.

தொற்றும் கண்சவ்வழற்சி நோய் தானாகவே எந்தச் சிக்கலையும் ஏற்படுத்தாமல் 1-3 வாரங்களில் குணமாகிவிடும். இதற்கு எந்தப் பலன் அளிக்கும் சிகிச்சையும் இல்லை.

அறிகுறிகளின் தீவிரத்தைப் பொறுத்து நோயாளிகள் சில நாட்களில் இருந்து சில வாரங்கள் வரை கண்காணிக்கப்படுகின்றனர்.

நோயைத் தணிப்பதும் சிக்கல்களைத் தடுப்பதுமே சிகிச்சையின் நோக்கமாகும்.

தொற்றும் கண்சவ்வழற்சிக்கு ஆதரவு சிகிச்சை:

-    குளிர் ஒத்தடம்

-    செயற்கைக் கண்ணீர்: முன் வெண்படல கண்ணீர்ப் படலத்தை நிலைப்படுத்திக் கட்டிப்படுத்துவதுடன், உலர்கண் நோயின் போது கண்ணீர்ப்படல உடைபடும் நேரத்தை அதிகரிக்கிறது.

-    மேற்பூச்சு குருதிக்குழல் சுருக்கி/ஒவ்வாமைநீக்கி: இவை கடுமையான அரிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. நிறுத்தியவுடன் அறிகுறிகள் மீண்டும் ஏற்படும்.

-    ஊக்கமருந்தல்லாத எதிரழற்சி மேற்பூச்சு மருந்துகள் (NSAIDs): அழற்சியைக் குறைக்க இவை பயன்படுத்தப் படலாம்.

-    மேற்பூச்சு நுண்ணுயிர்க்கொல்லி: பாக்டீரியா தொற்றைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது.

-    சைக்ளோபிளேஜிக் மருந்துகள்: கடுமையான ஒளிக்கூச்சத்திற்குப் பயன்படுத்தப்படலாம்.

-    மித மேற்பூச்சு கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள்: கடுமையான படல கண்சவ்வழற்சி உடையவர்களுக்கும், பிந்திய சார் மேல் செல் ஒளிபுகாமையால் பார்வைக் குறைவு ஏற்பட்ட நோயாளிகளுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம். அழற்சியைக் குறைப்பதில் கோர்டிக்கோஸ்டிராய்டுகள் பயன்பட்டாலும், நோயின் இயற்கைப் போக்கில் இவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.  வெண்படல ஒளிபுகாமை மீண்டும் ஏற்படாமல் தவிர்க்க இந்த மருத்துவத்தைப் படிப்படியாக குறைத்து வர வேண்டும். மேற்பூச்சு கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் சிகிச்சை எடுத்துவரும் நோயாளிகளுக்கு கண்ணழுத்தம் மற்றும் கண்புரை உருவாகிறதா என்று கவனித்து வர வேண்டும்.

-    மேற்பூச்சு தடுப்பாற்றல் அழுத்திகள் (-ம். டாக்ரோலிமுஸ் களிம்பு): தன்தடுப்பாற்றல் அழற்சி பதில்வினைகளை இவை அழுத்தும். தொற்றும் கண்சவ்வழற்சியில் ஏற்படும் சார் மேல் செல் ஊடுருவிகளுக்கு டாக்ரோலிமுஸ் பலன் தரும் சிகிச்சையாகும்.  அது செல் தடுப்பாற்றலை அழுத்துகிறது.

-    கண் கிருமிநாசினிகள் (-ம். பொவிடோன்அயோடின்): கண் கிருமி நாசினிகள் பரந்த அளவிலானவை.  பொவிடோன் – அயோடின் பரந்த பாக்டீரியா மற்றும் வைரல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும். நோயின் கால அளவையும் இவற்றைக் கொண்டு குறைக்கலாம்.

அறுவை மருத்துவம்:

வடு கண்சவ்வழற்சி அல்லது இணையிமை நேர்வுகளில் அரிதாக அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை தேவைப்பட்டால் அது முக்கியமாகக் கீழ்வரும் வடிவங்களில் இருக்கும்:

-    எக்சைமர் லேசர் ஒளி-சிகிச்சை கருவிழியறுவை (PTK): மேல் செல் ஒளிபுகாமையை அகற்ற குறைந்த அளவு மைட்டொமைசினோடு இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது.

-    படலம் அல்லது போலிப்படலம் அகற்றல்: படலங்களை மென்மையாக அகற்றி அதனோடு மேற்பூச்சு கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் பரிந்துரைக்கலாம்.

-    ஃபோர்னிக்ஸ் மறுஅமைப்பு

-    இமையுட்பிறட்சி சீரமைப்பு

நோய்முன்னறிதல்:

பெரும்பாலான தொற்றும் கண்சவ்வழற்சி குறுகிய காலத்தில் தாக்கும் தீங்கற்ற தானே குணமடையும் நோயாகும். தொற்று பொதுவாக 2-3 வாரத்தில் நீங்கும். சார் மேல் செல் ஊடுருவல்கள் பல மாதங்களுக்கு நீடிக்கும். பார்வை அச்சு பாதிக்கப்பட்டால் பார்வைக் குறைவு ஏற்படலாம்.

நேரக்கூடிய சிக்கல்கள் வருமாறு:

-    புள்ளிக் கருவிழியழல்

-    சார் மேல்செல் ஊடுருவல்

-    மேற்பட்ட பாக்டீரியல் தொற்று

-    நீடித்த தொற்று

-    கோர்ட்டிக்கோஸ்டிராய்டால் தூண்டப்பட்ட நீடித்த மருத்துவமும் விழிப்படல ஒளிபுகாமையும்.

தொற்றும் கண்சவ்வழற்சி மிகவும் அதிகமாகப் பரவும் நோய் ஆகும். பலனளிக்கும் சிகிச்சை இல்லாததால் தடுப்பே முக்கியமானது. வைரஸ் உள்ள பரப்புகள் மற்றும் பொருட்களைத் தொடுவதன் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கண்ணைத் தொட்டு பின் பொருட்களைத் தொடுவதன் மூலமும் பரவுகிறது. கண்ணில் தொடர்பு கொள்ளும் ஒப்பனைப் பொருட்கள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. பாதிக்கப்பட்டவரிடம் இருந்து இரண்டு வாரத்துக்கு மேல் தொற்று பரவும் வாய்ப்புள்ளதால் பணி அல்லது கல்வி இடத்துக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

தடுப்பு நடவடிக்கைகளில் அடங்குவன:

-    நோயாளிகள் பிறரைத் தொடக்கூடாது; இழைத்தாள், துண்டு, தலையணை அல்லது கைக்குட்டை போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது; கண்கள் சிகப்பாக இருக்கும் வரை அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும்.

-    நோயாளியைப் பரிசோதித்தப் பின் கண் சிகிச்சை அளிப்போர் கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். மற்ற நோயாளிகளைக் கவனிக்கும் முன்னும் கைகளைக் கழுவ வேண்டும்.

-    நோய்த் தடுப்பாற்றல் இழந்த நோயாளிகளைப் பராமரித்து வரும் சுகாதாரப் பணியாளர்கள் தொற்று பரவலைத் தடுக்க பிற நோயாளிகள் தொடர்பை இரண்டு வார காலம் தவிர்க்க வேண்டும்.

-    கண் மருத்துவக் கருவிகள் தகுந்த முறையில் கழுவப்பட்டு கிருமிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

-    பிற நோயாளிகளிடம் இருந்து தனிமைப் படுத்தி சிவந்த கண் உள்ளவர்களுக்கு ஒரு சிவப்புக் கண் அறை உருவாக்கப்பட வேண்டும்.

-    இந்த நோயின் அம்சங்களைப் பற்றி நோயாளிக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எடுத்துரைக்க வேண்டும். நோய் அறிகுறி ஏற்பட்டு 4-7 தினங்கள் அதிகரிக்கும் என்றும் நோய் குணமாக 2-3 வாரங்கள் ஆகும் என்பதையும் விளக்க வேண்டும்.

  • PUBLISHED DATE : Mar 16, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Mar 16, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.