நீரிழிவு விழித்திரைநோய்

உடலக இன்சுலின் குறைவு அல்லது அதன் செயல்திறக் குறைபாட்டால் நீரிழிவு (சர்க்கரை) நோய் ஏற்படுகிறது. இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு மிகையாக இருப்பதே இதன் நோயியல்பு ஆகும்.

இதில் இரு பெரும் பிரிவு உண்டு:

வகை 1: இது இன்சுலின் சார் நீரிழிவு சர்க்கரை நோய் எனப்படும். இன்சுலின் குறைபாடே இதன் இயல்பு. பொதுவாக இது இளமையிலேயே தொடங்கினாலும் எந்த வயதிலும் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் நோயாளிக்குக் கீட்டோஅமிலத்துவமும் எடையிழப்பும் உண்டாகும்.

வகை 2: இது இன்சுலின் சாரா நீரிழிவு சர்க்கரை நோய் அல்லது முதிர்ச்சியில் உருவாகும் நீரிழிவு எனப்படும். பொதுவாக உடல்பருமனோடு இருக்கும் நடுத்தர/முதிர்ந்த மக்களுக்கு உண்டாகிறது. இன்சுலின் (கணையநீர்) குறை சுரப்பும், இன்சுலின் எதிர்ப்பும் ஏற்படும் வாய்ப்புள்ளது. நோயாளிக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் வாய்வழி மருந்துகள் அளிக்கப்படுகின்றன. சிறுநீரில் கீட்டோன் இருந்தாலோ நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டாலோ நோயாளிக்கு இன்சுலின் செலுத்தப்பட வேண்டும். இதனாலேயே இன்சுலின் சார் நீரிழிவு உருவாகி விட்டது என்பது அர்த்தம் அல்ல.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு விழித்திரை இரத்தக் குழாய்களில் உண்டாகும் மாற்றங்களே நீரிழிவு விழித்திரை நோய் இயல்புகள். நுண்தமனி, தந்துகி, நுண்சிரை ஆகிய இரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். இருப்பினும் பெரும் குழல்களும் பாதிக்கப்படலாம்.

முக்கிய மேல் மற்றும் கீழ் விழித்திரை தமனிக்கும் சிரைக்கும் நடுவில் அமந்துள்ளதே நடு விழித்திரை அல்லது தசைசார் பகுதியாகும். இந்த முக்கிய இரத்தக் குழல்களுக்கு அப்பால் உள்ளதே புறவிழித்திரை.

விழித்திரை நோயில், நுண்குழல் உட்கவர்வும், குருதி-விழித்திரைத் தடுப்பு உடைவதால் உருவாகும் ஊனீர்க்கூறுகளின் நுண்குழல் கசிவும் ஆகிய இரண்டு இயல்புகளும் இருக்கும். நுண்குழல் உட்கவர்வால் தமனிச்சிரை தடமாற்றம் நிகழ்ந்து தந்துகிகள் அடைபடுதலும் புதுக்குழல்கள் தோன்றுவதும் நிகழும். நுண்குழல் கசிவால் இரத்தப்போக்கும், சிதறல் அல்லது அவ்வப்பகுதியில் விழித்திரை வீக்கமும் உண்டாகும். இந்நோய் பார்வையைப் பாதிக்கும்.

நீரிழிவு விழித்திரை நோய் கீழ்க்காணும் முக்கியப் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது:

-    பின்புல நீரிழிவு விழித்திரை நோய்

-    முன் பல்கு நீரிழிவு விழித்திரை நோய்

-    பல்கு நீரிழிவு விழித்திரை நோய்

குறிப்புகள்:

http://emedicine.medscape.com/article/1225122-overview

http://emedicine.medscape.com/article/117853-overview

http://emedicine.medscape.com/article/117739-overview

http://eyewiki.org/Diabetic_Retinopathy

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/10896358

Kanski,Jack J. Clinical Ophthalmology, A Systematic Approach .Third Edition.UK. Butterworth Heinemann, 1994.

Longmore Murray; Wilkinson Ian; Torok Estee. Oxford handbook of clinical medicine. Fifth Edition.UK. Oxford University Press, 2001.

நோயின் ஆரம்பக் கட்டத்தில் நோயாளிகள் அறிகுறிகள் அற்று இருப்பார்கள்.

நோய் முற்றும்போது நோயாளிகளுக்கு கீழ்வரும் அறிகுறிகள் தென்படும்:

-    கண் மங்குதல்

-    பார்வைக்கூர்மை படிப்படியாக்க் குறைதல்

-    பார்வை ஊசலாட்டம்

-    கண்முன் பூச்சிபறத்தல்

-    பிம்பச் சிதைவு

-    ஒளி வீச்சு

-    பார்வைப்புலத்தில் கோளாறுகள்

நீரிழிவு சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அதிகமாக இன்சுலின் சார் நீரிழிவு நோயாளிகளுக்கு, நீரிழிவு விழித்திரை நோய் உண்டாகிறது.

நீரிழிவு விழித்திரை நோயை உருவாக்கும் ஆபத்துக் காரணிகள்:

-    நீரிழிவு நோய்க்காலம்: நீரிழிவு நோய் இருக்கும் கால அளவைப் பொறுத்து நீரிழிவு விழித்திரை நோய் ஏற்படும் சாத்தியக்கூறும் நோய் உண்டாகுதலும் அமையும். இதுவே மிக முக்கிய காரணி.

-    நீரிழிவைக் கட்டுப்படுத்துதல்: நீரிழிவைக் கட்டுப்படுத்தினாலும் நீரிழிவு விழித்திரை நோயைத் தடுக்க முடியாது. இது சில ஆண்டுகளுக்கு நோய் வளர்ச்சியைத் தடுக்கலாம்.

-    விழித்திரைநோயைப் பாதிக்கும்

 பிற காரணிகளில் அடங்குவன:

-    இரத்த மண்டல மிகை அழுத்தம்

-    கர்ப்பம்

-    சிறுநீரகக் கோளாறு

-    இரத்தச்சோகை

இரத்தச்சோகை சுருக்க விழித்திரை, நாள அகத்தோல் வளர்ச்சிக் காரணியைச் சுரக்கிறது.

இதனால் ஏற்படுபவை:

-    அதிக இரத்த ஊடுறுவலால் விழித்திரை வீக்கம்

-    புது இரத்த நாளம் உருவாதல்.

உணவுக்கு முன் பின் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இரத்தப்புரதத்தில் கட்டுண்ட சர்க்கரையின் (HbA1c) அளவு கடந்த மூன்று மாதமாக நிலவிய சர்க்கரைக் கட்டுப்பாட்டைக் குறிக்கும். இதனுடன், நோயாளிக்கு நீரிழிவு நோய்க்கான மண்டலம்சார் அம்சங்களும் உண்டு.

பின்புல நீரிழிவு விழித்திரை நோய் அம்சங்கள்:

-    தமனி நுண் விரிவு: பொதுவாக விழிமையத்தின் மேற்பகுதியில் தமனி நுண்விரிவு சிறு வட்ட புள்ளியாகத் தோன்றும். இதில் இரத்தச்சாயம் இருந்தால் இதை இரத்தப் பொட்டுக் கசிவில் இருந்து வேறுபடுத்திக் காண முடியாது.

-    இரத்தக் கசிவு: மேலோட்டமாக இருக்கும் இரத்தக்கசிவு தீப்பிழம்பு வடிவில் காணப்படும். விழித்திரையின் அடித்தளத்தில் உள்ளவை புள்ளி அல்லது கறை போன்ற கசிவுகள் ஆகும்.

-    கடினக் கசிவு: இவை கொழுப்புப்புரதங்களாலான கொழுமியம் நிறைந்த இரத்த விழுங்கணுக்கள். இவை கசிவுள்ள நுண்குழல் புண்களைச் சூழ்ந்து வட்ட வடிவத்தை அடைகிறது. ஒரு குறிப்பிட்ட கால அளவில் இவை உட்செறிக்கப்படலாம்.

-    விழித்திரை வீக்கம்: விழித்திரை கடினம் அடைவதே இதன் இயல்பு. விழித்திரையின் கீழ் அடுக்குகள் இதனால் மறையும். விழித்திரை வீக்கம் வளர்ச்சி அடைவதால் விழிப்புள்ளியும் புற்றுறை வடிவை அடையும். விழித்திரை வீக்கம் ‘தசை வீக்கம்’ அல்லது ’மருத்துவ ரீதியாகக் குறிப்பிடத் தக்க தசை வீக்கமாகக்’ காணப்படும்.

-    தசை வீக்கம்: தசை வீக்கம் என்பது  விழிப்புள்ளியின் நடுவில் ஒரு தகடு விட்டம் (தகடு என்பது கண் நரம்பு வெளியேறும் புள்ளி; அது 1500µm அளவுடையது) கொண்ட விழித்திரை கடினம் அல்லது கடினக் கசிவு இருப்பதைக் குறிக்கிறது.

மருத்துவ ரீதியாகக் குறிப்பிடத் தக்க வீக்கம் (CSMO): கீழ் வருவனவற்றில் ஒன்று அல்லது அதிக அம்சங்களைக் கொண்டிருப்பது இதன் இயல்பாகும்:

-    விழிப்புள்ளியின்  மையத்தில் இருந்து 500µm –ல் இருக்கும் விழித்திரை வீக்கம்

-    விழிப்புள்ளியின்  மையத்தில் இருந்து 500µm –ல் இருக்கும் கடினக் கசிவு. இது 500µm எல்லைக்கு வெளியிலேயும் இருக்கலாம்.

-    ஒரு தகடு விட்டம் அல்லது அதைவிடப் பெரிய விழித்திரை வீக்கம்: அதன் ஏதாவது ஒரு பகுதி விழிப்புள்ளி மையத்தில் இருந்து ஒரு தகடு விட்டத்தில் இருக்கும் நிலை.

முன் பல்கு நீரிழிவு விழித்திரை நோய்: இதில் விழித்திரை மாற்றங்கள் சுருக்கத்தால் ஏற்படுகின்றன. அதில் அடங்குவன:

-    இரத்தக் குழல் தென்படுதல்:  ஓரமடிப்பு, சுருக்கு அல்லது குழலப்பக் கொத்துக்கறி போன்று நுண்சிரைகள் தோன்றுதல். நுண்தமனிகள் சுருங்கும் அல்லது முற்றிலும் அழிக்கப்படும்.

-    விழித்திரை திசுஅழிவு: இது கட்டியான கறை போன்ற இரத்தக்கசிவாகக் காணப்படும்.

-    பஞ்சுக் கம்பிளிப் புள்ளிகள்: தந்துகி உட்கவர்தலால் உண்டாகும் தசைச்சுருக்கம் நரம்பு நார் அடுக்குக்கு அழிவை ஏற்படுத்தி பல இடங்களில் பஞ்சுக் கம்பிளிப் புள்ளிகள் போல் தோற்றமளிக்கும்.

-    உள் விழித்திரை நுண்குழல் முறைபிறழ்வு: இவை விழித்திரைக்குள் காணப்படும். முக்கிய விழித்திரை இரத்தக் குழாய்களைக் கடந்து செல்லாது. தட்டையான புதிய இரத்தக்குழல்கள் போலவே காணப்படும்.

பல்கு விழித்திரை நீரிழிவு நோய்: இன்சுலின் சார் நீரிழிவு நோயில் இது பொதுவாகக் காணப்படும். அதில் கானப்படும் அம்சங்கள் வருமாறு:

-    புதிய இரத்தக்குழல் தோன்றுதல்: புதிய குழல்கள் கண் நரம்பு தகட்டில்  (NVD) அல்லது முக்கிய மேற்புற நரம்புகளுக்கு இணையாகத் (NVE) தோன்றுகின்றன. விழித்திரையின் கால்பகுதிக்கு மேல் ஊடுறுவப்படாமல் இருந்தாலே கண்நரம்புத் தகட்டில் புதுக்குழல்கள் உருவாகின்றன.  பின்னர், சாத்தியக்கூறுள்ள விழிப்பின்னறை-திரை இடைவெளியில் நார்க்குழல் மேல்விழித்திரைப் படலம் உருவாகலாம்.

-    விழிப்பின்னறை விடுபடல் அல்லது பிரிவு: சாத்தியக்கூறுள்ள விழிப்பின்னறை-திரை இடைவெளியில் நார்க்குழல் மேல்விழித்திரைப் படலம் உருவாகும் போது முழு அல்லது பகுதி பின்- விழிப்பின்னறை விடுபடல் நேரலாம். நார்க்குழல் திசு பின்- விழிப்பின்னறையோடு ஒட்டிக்கொள்ளலாம். விழிப்பின்னறை விடுபடலால் நார்க்குழல் திசுவின் மேல் ஏற்படும் இழுப்பால் விழிப்பின்னறை இடைவெளியில் அல்லது விழிப்பின்னறையில் இரத்தக்கசிவு உண்டாகலாம். விழிப்பின்னறை இரத்தக்கசிவு உண்டாகும்வரை பல்கு விழித்திரை நீரிழிவு அறிகுறிகள் இன்றி இருக்கும்.

-    இரத்தக்கசிவு: சாத்தியக் கூறுள்ள விழிப்பின்னறை இடைவெளியில் முன் – விழித்திரை இரத்தக்கசிவாகவோ அல்லது விழிப்பின்னறைக் கழிமத்திலோ இரத்தக் கசிவு ஏற்படும். முன் – விழித்திரை இரத்தக் கசிவோடு ஒப்பிடும் போது உள் விழிப்பின்னறை இரத்தக் கசிவு தெளிவுற காலம் அதிகம் ஆகும். பின் – விழிப்பின்னறை விலகலுக்கு இணையாக முன் – விழித்திரை இரத்தக் கசிவு வளர்பிறை வடிவை எடுக்கும். 

பல்கு விழித்திரை நீரிழிவு நோய்ச் சிக்கல்கள்: விழித்திரை விலகல், தொடர் விழிப்பின்னறை இரத்தக்கசிவு, கருவிழியில் புதுக்குழல் தோன்றல் அல்லது ஒளியூடுறுவா படலம் விலகலடைந்த விழிப்பின்னறையின் மேல் புறத்தில் உருவாதல் ஆகிய சிக்கல்கள் ஏற்படலாம்.

நீரிழிவு விழித்திரை நோய்க்கான ஆய்வகச் சோதனைகள்:

-    ஒளிர் குழல்வரைவியல்: ஃப்ளூரசின் என்பது ஓர் ஒளிர் சாயம். ஒளிர் குழல்வரைவியல் மூலம் விழித்திரை தசைச்சுருக்கத்தின் விகிதத்தை மதிப்பிடலாம். விழித்திரை குழல் பிறழ்வுகளையும் அது தெளிவாக விரித்துரைக்கும். நுண்தமனி விரிவு, உயர் ஒளிர் புள்ளிகளாகத் தோற்றம் அளித்து, ஒளிர் குழல்வரைவியலின் இறுதிக் கட்டத்தில் சாயக் கசிவை உண்டாக்குகிறது. கறை மற்றும் புள்ளி இரத்தக் கசிவு  நுண் தமனி விரிவுக்கு முரணாக  உயர் ஒளிர்வாகத் தோன்றுகின்றன. ஊடுறுவாப் பகுதிகள் கரும் திட்டாக அல்லது ஒரேமாதிரியான உயர் ஒளிர்வு பகுதிகளாகத் தோற்றம் அளிக்கின்றன. கண் நரம்பு தகட்டில்  (NVD) அல்லது முக்கிய மேற்புற நரம்புகளுக்கு இணையாக (NVE) இரத்தக் குழல்கள் ஒளிர் குழல் வரைவியலில் சாயக்கசிவைக் காட்டுகின்றன. உள் விழித்திரை நுண் குழல் பிறழ்வுகள் சாயக் கசிவை வெளிப்படுத்துவதில்லை.

-    ஒளியியல் ஒத்திசைவு வரைவியல் OCT:  விழித்திரையின் குறுக்கு வெட்டு பிம்பத்தை இது ஒளியைக் கொண்டு உருவாக்குகிறது. விழித்திரைக் கடினத்தை அளக்க இது உதவுகிறது. சிகிச்சையின் பலனாக வீக்கத்தினால் ஏற்பட்ட தசைப்பகுதி விழித்திரை கடினம் குறைகிறதா இல்லையா என்பதைத் தீர்மானிக்க குறிப்பிட்ட கால அளவுகளில் செய்யப்படும் இச்சோதனை உதவும். விழிப்பின்னறை இறுக்கமும் மதிப்படப் படலாம்.

-     B- ஸ்கேன் மீயொலி வரைவியல்: ஊடகம் தெளிவில்லாத போது  (உ-ம். விழிப்பின்னறை இரத்தக்கசிவு) இது விழித்திரையை மதிப்பீடு செய்ய உதவுகிறது.

விழித்திரை சிரை உட்பதிதல், விழித்திரை நாளவழற்சி, அரிவாள்செல் விழித்திரைநோய், கண் தசைச்சுருக்க நோய்த்தாக்கம் ஆகிய நிலைகளில் இருந்து நீரிழிவு விழித்திரை நோயை வேறுபடுத்திக் காண வேண்டும்.

கண்டிப்பாக மருத்துவக் கன்காணிப்பின் கீழேயே சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.

நோய் வளர்ச்சியை சிறந்த கட்டுப்பாட்டுக்குள் வைப்பதும் HbA1c அளவை 6-7% விகிதத்தில் பராமரிப்பதும் நீரிழிவு சர்க்கரை நோய் மற்றும் நீரிழிவு விழித்திரை நோய்களைக் கையாளுவதில் மேற்கொள்ள வேண்டிய இலக்குகள் ஆகும்.

முறையான உடல்பயிற்சியை உள்ளடக்கிய வாழ்க்கை முறை மாற்றம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது; இதன் மூலம் நீரிழிவு விழித்திரை நோய் போன்ற சிக்கல்களையும் குறைக்கலாம்.

நீரிழிவு சர்க்கரை நோய்க்கு மருந்து சிகிச்சை: பைகுனைட்டுகள், சல்ஃபோநைலுரியேஸ், மெக்லிட்டிநைட் வழிப்பொருட்கள், தயாசோலிடிண்டையோன்கள், ஆல்பா-குளுகோசிடேஸ் தடுப்பான்கள், பெப்டிடேஸ் IV தடுப்பான்கள் அல்லது இன்சுலின் போன்ற பல வகையான மருந்துகள் உள்ளன.

நீரிழிவு விழித்திரை நோய்க்கு மருந்து சிகிச்சை:

-    விழிப்பின்னறை டிரையாம்சிநோலோன்: நீரிழிவு தசை வீக்கத்திற்கு இது பயன்படுத்தப்படலாம்.

-    விழிப்பின்னறை எதிர்-குழல் அகத்தோல் வளர்ச்சிக் காரணி (Anti-VEGF):  நீரிழிவு தசை வீக்கம், கண் நரம்பு தகட்டில்  (NVD) அல்லது முக்கிய மேற்புற நரம்புகளுக்கு இணையாக (NVE) புதுக்குழல் வளர்ச்சி ஆகியவற்றைக் குறைக்க விழிப்பின்னறை எதிர்-VEGF ஊசி துணைபுரிகிறது. பெவாசிசுமாப் (அவஸ்தின்) மற்றும் ரேனிபிசுமாப் (லுசெண்டிஸ்) ஆகியவை முறையே VEGF எதிர்பொருட்கள் மற்றும் எதிர்பொருள் துணுக்குகள் ஆகும் (எதிர்-VEGF). இவை விழிப்பின்னறை ஊசியாகப் பயன்படுத்தப் படுகின்றன. நீரிழிவு தசை வீக்கம் உடைய நோயாளிகளுக்கு விழிப்பின்னறை அஃப்ளிபர்செப்ட்டும் (அய்லியா) அளிக்கலாம்.

நீரிழிவு விழித்திரை நோய்க்கு லேசர் ஒளியுறைவு:

லேசர் ஒளியுறைவு ஓர் அறுவையற்ற தொழிற்நுட்பம். இதில் சிக்கல்கள் மிகக் குறைவான விகிதத்தில் இருக்கும். குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியும் பெறும். இலக்கு திசுக்களில், மிகு குவி லேசர் கதிர்கள் உறைவை உண்டாக்குகின்றன.

பின்புல நீரிழிவு விழித்திரை நோய்: மருத்துவ ரீதியாக குறிப்பிடத்தக்க தசைவீக்கம் உடைய (CSMO) அனைத்துக் கண்களுக்கும் லேசர் ஒளியுறைவு மருத்துவம் அளிக்கப்படுகிறது. முன் ஒளிர்வுக் குழல்வரைவியல் குறிப்பிட்ட பகுதியையும் வீக்கத்தின் அளவையும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. லேசர் ஒளியுறைவு தொழிற்நுட்பம் வருமாறு:

-    நேரடி லேசர் ஒளியுறைவு: விழிப்புள்ளி மையத்தில் இருந்து 500µm -லிருந்து 3000µm இடைவெளியில் இருக்கும் கடினக் கசிவின் நடுவில் உள்ள நுண் தமனி விரிவு மற்றும் நுண் குழல் புண்களின் மீது லேசர் கருக்கல் பிரயோகிக்கப் படுகிறது.

-    பின்னல் ஒளியுறைவு:  பின்விழியில் விழிப்புள்ளி மையத்தில் இருந்தும், பார்வைத் தட்டின் மேற்புற விளிம்பில் இருந்தும் தலா 500µm தொலைவில் அமைந்திருக்கும் கசிவு விழித்திரை கடினப் பகுதியில் பின்னல் ஒளியுறைவு பிரயோகிக்கப் படுகிறது.

முன் - பல்கு விழித்திரை நீரிழிவு நோய்: சகக் கண்ணில் பல்கு விழித்திரை நீரிழிவு நோய் உள்ள, ஒளிர் குழல்வரைவியலில் பரவலான பகுதியில் தந்துகி மேற்பரவலற்ற நிலை காட்டும், நோயாளிகளுக்கு ஒளியுறைவு செய்யப்படுகிறது.

பல்கு நீரிழிவு விழித்திரை நோய்: பார்வை இழப்புக்கு அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதிக ஆபத்து அம்சங்கள்:

-    தகட்டின் 1500µm பரப்பிற்குள் கால் பங்கு புதுக்குழல் உருவாதல்

-    குறைந்த புதுக்குழல் வளர்ச்சியுடன் இணைந்த விழிப்பின்னறை இரத்தக் கசிவு.

-    மேற்புற நரம்புகளுக்கு இணையாக தகட்டின் அரைப்பகுதி அளவுக்கு மேலாக விழிப்பின்னறை இரத்தக் கசிவுடன் புதுக்குழல் தோன்றல்.

விழியடிப் பகுதியில் இருந்து விழித்திரை விளிம்புவரை பரவலாக முழு ஒளியுறைவு அளித்தல்.

மீண்டும் ஏற்பட்டால் ஒளியுறைவு அல்லது அதிகுளிரூட்டல் சிகிச்சை அளித்தல்.

தொடர்ந்து விழிப்பின்னறை இரத்தக் கசிவு,  இழுவிசையால் விழித்திரை விடுபடல், கருவிழியில் இரத்தக்குழல் போன்ற சிக்கல்களின் போது பார்ஸ் பிளானா விழிப்பின்னறை அறுவை முறை கையாளப்படுகிறது.

  • PUBLISHED DATE : Jan 25, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Jan 25, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.