பிறந்தகுழந்தை கண்சவ்வழற்சி

குழந்தை பிறந்து, முதல் மாதத்தில் ஏற்படும் கண்சவ்வழற்சியே பிறந்தகுழந்தை கண்சவ்வழற்சி என வரையறுக்கப் படுகிறது. பாக்டீரீயா, வைரஸ், வேதியல் போன்ற பல்வேறு காரணங்கள் இதற்குக்  கூறப்படுகின்றன. இலேசான சிக்கல்கள் உண்டாகும். குருதிமிகைப்பு ஏற்பட்டு சிறிது கசிவு உண்டாகி வடுவும் பார்வையிழப்பும் நேரக் கூடும்.

பிறந்தகுழந்தை கண்சவ்வழற்சி தொற்றுள்ளதாக அல்லது தொற்றற்றதாக இருக்கலாம்:

தொற்றுள்ள பிறந்தகுழந்தை கண்சவ்வழற்சி:

இதற்குப் பாக்டீரியா அல்லது வைரசுகளே முதன்மைக் காரணம். கிளமைதியல் கண்சவ்வழற்சி மிகவும் பரவலானது. பிறப்பு பாதையைக் கடக்கும் போது குழந்தைக்குத்  தொற்று ஏற்பட்டிருக்கலாம். சாதாரண பாக்டீரியா கண்சவ்வழற்சி, ஸ்டேபிலோகாக்கல் ஆரியஸ் போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும். சிற்றக்கி வைரஸ் வகை 2 இமைக் கண்சவ்வழற்சியை உண்டாக்கி விழிவெண்படலத்தைப் பாதித்து வெண்படல அழற்சியை ஏற்படுத்தும்.

தொற்றற்றப் பிறந்தகுழந்தை கண்சவ்வழற்சி:

தொற்றுள்ள கண்சவ்வழற்சியைத் தடுக்க சில்வர் நைட்ரேட் கரைசல் பயன்படுத்தப் படுகிறது (கிரெடே முறை). சில்வர் நைட்ரேட் கரைசல் பயன்படுத்துவதால் ஏற்படும் வேதியல் கண்சவ்வழற்சியே தொற்றற்றக் கண்சவ்வழற்சி ஆகும். தொற்றைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் நுண்ணுயிர்க் கொல்லிகளாலும் சிறுபான்மையாகக் கண்சவ்வழற்சி ஏற்படுவதுண்டு. சில்வர் நைட்ரேட் கரைசலுக்குப் பதிலாக தொற்று கண்சவ்வழற்சியைத் தடுக்க எரித்திரோமைசின் கண் களிம்பை பயன்படுத்தும் போது வேதியல் கண்சவ்வழற்சி ஏற்படுவதைப் பெரும்பாலும் தவிர்க்கலாம்.

சுகாதாரப் பராமரிப்பாளர்களும் பெற்றோர்களும் தொற்று பரவாமல் இருக்க அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். பெண்ணுறுப்பு வழியாகக் குழந்தை பிறப்பதற்கு முன்னரேயே பால்வினை நோய்களான கிளமைதியா, மேகவெட்டை மற்றும் சிற்றக்கி நோய்களைக் குணப்படுத்த வேண்டும்.

கண்சவ்வு திசுவமைப்பு, பிறந்த குழந்தை கண்சவ்வழற்சி உருவாக்கத்தைத் தூண்டுகிறது. அழற்சியினால் இரத்த நாள விரிவு, கண்ணில் இருந்து கசிவு அல்லது கண்சவ்வு வீக்கம் ஆகியவை உண்டாகும். தடுப்பாற்றல் குறைவு, இம்யுனோகுளோபுலின் – ஏ குறைவு, பிறப்பின் போது கண்ணீர்க் குறைபாடு, லைசோசைம் வினையாற்றல் குறைபாடு, கண்சவ்வில் நிணநீரிழையம் இன்மை ஆகியவற்றால் மேற்கண்ட மாற்றங்கள் கடுமையாகலாம்.

குறிப்புகள்:

http://emedicine.medscape.com/article/1192190-overview       

http://eyewiki.org/Neonatal_Conjunctivitis

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4170304/

http://www.cdc.gov/conjunctivitis/newborns.html

Basak Samar K, Atlas of Clinical Ophthalmology, 2nd ed. Jaypee Brothers Medical Publishers (P) Ltd, 2013, New Delhi, P 49

Kanski,Jack J. Clinical Ophthalmology, A Systematic Approach .Third Edition.UK. Butterworth Heinemann, 1994. P 83

பிறந்தகுழந்தை கண்சவ்வழற்சியின் வெளிப்பாடு நோய்க்கிருமியையும் அதன் நோயரும்பும் காலத்தையும் பொறுத்தது.

நோயரும்பும்காலம்:

-    வேதியல் கண்சவ்வழற்சி: பிறந்த முதல் நாளிலேயே சில்வர் நைட்ரேட் போன்ற உறுத்திகள் பட்டு இது உண்டாகிறது. 2-4 நாட்களில் தானாகவே குணமடைகிறது.

-    கிளமைதியல் கண்சவ்வழற்சி: ஐந்து முதல் பதினான்கு நாட்கள் வரை இதன் நோயரும்பு காலம் இருக்கும்.

-    கோனோகாக்கல் கண்சவ்வழற்சி: தொற்று ஏற்பட்ட பின் 2-7 நாட்களில் வெளிப்படும். சில நேர்வுகளில் காலம் தாழ்த்தியும் உண்டாகும்.

-    இதர கிளமைதியல் அல்லாத மற்றும் கோனோகாக்கல் அல்லாத கண்சவ்வழற்சிகள்: கிளமைதியல் கண்சவ்வழற்சி போலவே இவற்றின் நோயரும்பு காலமும் 5-14 நாட்கள் வரை வேறுபடும்.

-    சிற்றக்கி கண்சவ்வழற்சி: பிறப்புக்குப் பின் முதல் இரண்டு வாரங்களில் உண்டாகும் இதன் நோயரும்பும் காலம் 6-14 நாட்கள்.

கண்சவ்வழற்சிகளின் பொதுவான காரணங்களின் அறிகுறிகள்:

வேதியல் கண்சவ்வழற்சி:

-    இலேசான கண்சிவப்பு

-    இலேசான கண்வீக்கம்

கிளமைதியல் கண்சவ்வழற்சி:

-    கண்சிவப்பு

-    இமை வீக்கம்

-    சீழ்க் கசிவு

கோனோகாக்கல் கண்சவ்வழற்சி:

-    சிவந்த கண்கள்

-    இமை வீக்கம்

-    தொடர் சீழ்க் கசிவு

இதர கிளமைதியல் அல்லாத மற்றும் கோனோகாக்கல் அல்லாத கண்சவ்வழற்சிகள்:

-    சிவந்த கண்கள்

-    இமை வீக்கம்

-    தொடர் சீழ்க் கசிவு

சிற்றக்கிக் கண்சவ்வழற்சி:

-    மிதமான கண்சிவப்பு

-    இமை வீக்கம்

-    சீழற்ற அல்லது ஊனீர் அல்லது இரத்தம் கலந்தக் கசிவு.

பிறந்த குழந்தை கண்சவ்வழற்சிக்கான முக்கிய காரணங்கள்:

வேதியல் கண்சவ்வழற்சி:

கண் தொற்றைத் தடுக்க அளிக்கப்படும் சில்வர் நைட்ரேட்டால் பொதுவாகப் பிறந்த குழந்தை கண்சவ்வழற்சி உண்டாகிறது.

பாக்டீரியல் கண்சவ்வழற்சி:

பாடீரியாவால் உண்டாகும் பிறந்த குழந்தை கண்சவ்வழற்சிகள்:

-    கிளமைதியா டிராக்கோமேட்டிஸ் (ஊனீர் வகை  D-K)

-    நெய்சீரியா கொனேரியா

-    ஸ்டேப்பிலோகாக்கஸ் ஆரியஸ்

-    ஸ்டேப்பிலோகாக்கஸ் எப்பிடெர்மிடிஸ்

-    ஸ்டேப்பிலோகாக்கஸ் ஹீமோலைடிக்கஸ்

-    நியூமோகாக்கஸ்

-    சூடோமோனாஸ் ஏருகினோசா

பிறந்த குழந்தை கண்சவ்வழற்சித் தொற்றுக்கான  மிகவும் பரவலான  காரணம் கிளமைதியா டிராக்கோமேட்டிஸ் ஆகும்.

பிறந்த குழந்தை கண்சவ்வழற்சியில் மிகவும் கடுமையானது கோனோகாக்கஸ்.

சூடோமோனாஸ் அரியது ஆனாலும் வெண்படலப் புண் மற்றும் துளை ஏற்படுத்தி பார்வை இழப்பைக் கூட உண்டாக்கும்.

தொற்று உண்டாக்கும் பிற பாக்டீரியாக்கள் – கிளப்சியெல்லா, புரோட்டியஸ், செர்ரேட்டியா அல்லது எண்டெரோபேக்டர்.

வைரல் தொற்று:

-    சிற்றக்கி வைரஸ்

பிறந்த குழந்தை கண்சவ்வழற்சியின் ஆபத்துக் காரணிகள்:

-    தாயின் பிறப்பு பாதையில் இருக்கும் தொற்று.

-    குழந்தை தொற்றுக்கு உட்படுதல்

-    எச்.ஐ.வி. உள்ள தாய்

-    பிறப்பின் போது கண் காயம்

-    பிறந்த உடன் போதுமான கண் நோய்த் தடுப்புப் பாதுகாப்பின்மை

-    குறைப்பிரசவக் குழந்தைகள்

-    பிறப்புக்கு முன்னானப் பரமரிப்புக் குறைபாடு

-    மோசமான, சுகாதாரமற்றப் பேறுகால வசதி

-    பிறந்த பின் தொற்றுக்கு ஆளாதல்

மருத்துவ ரீதியான நோய் வெளிப்பாடு மற்றும் ஆய்வக கண்டறிதல்களைப் பொறுத்து நோய்கண்டறிதல் அமைகிறது.

தகுந்த மருத்துவம் அளித்துக் கடுமையான சிக்கல்களைக் குறைப்பதற்கு துரிதமான நோய்கண்டறிதல் இன்றியமையாதது.

பிறப்புக்குப் பின் குழந்தைகளில் காணப்படும் மருத்துவ ரீதியான வெளிப்பாடுகள்தான் காரணத்தைக் கண்டறிவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்ணையும் விழியைச் சுற்றியுள்ள அமைப்புகளையும் ஆழ்ந்து பரிசோதிப்பது இன்றியமையாதது. தகுந்த ஒரு கண்டறிதல் மூலம் நோயின் மண்டல ரீதியான வெளிப்படுகளையும் பார்க்க வேண்டும்.

பிறந்த குழந்தை கண்சவ்வழற்சியின் குறிப்பற்ற மருத்துவ அம்சங்களில் அடங்குவன:

-    இமை வீக்கம்

-    சிவப்பு

-    நீர் ஒழுகல்

-    சளி அல்லது சளிச்சீழ் கசிவு

-    கண்சவ்வு வீக்கம்

இருக்கக் கூடிய குறிப்பான மருத்துவ அம்சங்களும் மருத்துவ ரீதியான நோய்ப்போக்கும்:

வேதியற் கண்சவ்வழற்சி:

வேதியற் கண்சவ்வழற்சியினால் இலேசன நீர்வடிதல் ஏற்படும். இது தானாகவே 2-4 நாட்களில் சரியாகிவிடும்.

மிகவும் அடர்த்தியான வெள்ளி நைட்ரேட்டு கரைசலினால் கடுமையான பதில்வினைகளான இமை வீக்கம், கண்சவ்வு வீக்கம், கசிவுகள், கசிவுகளினால் உண்டாகும் படலம் அல்லது போலிப்படலம், கண்சவ்விற்கும் விழிவெண்படலத்துக்கும் சிதைவை உருவாக்கும் நிரந்தர வடு ஆகியவை ஏற்படலாம்.

கிளமைதியல் கண்சவ்வழற்சி:

கிளமைதியல் கண்சவ்வழற்சியினால் குறைந்த சளிக் கசிவுடன் கூடிய இலேசான குருதி மிகைப்பில் இருந்து இமைவீக்கம், கண்சவ்வு வீக்கம் மற்றும் போலிப் படலம் உருவாக்கம் வரை காணப்படலாம்.

கிளமைதியல் கண்சவ்வழற்சியில் குறிப்பாக ஒருபக்க அல்லது இருபக்க நீர் வடிதல் தொடங்கி பின்னர் அதிகமாகவும் சீழுடனும் வடியும்.

போதுமான அளவுக்கு நிணத் திசுக்கள் இல்லாததால் கண்சவ்வில் நுண்ணறை எதிர்வினை பொதுவாக ஏற்படுவதில்லை.

பார்வையிழப்பு அரிது; மிகவும் மெதுவாகவே உருவாகும். இமை வடுவாலும் வெண்படலத்தில் மரைபடலம் தோன்றுவதாலும் வெண்படல ஒளிபுகாமை ஏற்பட்டு பார்வையிழப்பு உண்டாகிறது.

நுரையீரல் அழற்சி, இடைச்செவியழற்சி அல்லது மலக்குடல் / தொண்டையில் (நுண்ணுயிரிக்)  குடியேற்றம் போன்ற புறக்கண் மண்டலம்சார் வெளிப்பாட்டுகளுடன் கிளமைதியல் கண்ணழற்சி தொடர்புடையதாக இருக்கலாம்.

கோனோகாக்கல் கண்சவ்வழற்சி:

கோனோகாக்கல் கண்சவ்வழற்சி விரைவாக உண்டாகி பிறந்த குழந்தை கண்சவ்வழற்சியை உருவாக்கும் பிற காரணங்களை விடக் கடுமையான அழற்சியை ஏற்படுத்தும். கடும் இமை வீக்கம், கண்சவ்வழற்சி மற்றும் வீக்கம் ஆகியவை இருக்கும். கண்சவ்வுப் படலம் ஒன்றும் காணப்படலாம்.

பொதுவாக, இது இருபக்கக் கடும் சீழ் கண்சவ்வழற்சிக்கு வழிகோலும்.

விழிவெண்படலமும் பாதிக்கப்படுவதே கோனோகாக்கல் கண்சவ்வழற்சியின் மிகக் கடுமையான கண்சார்ந்தச் சிக்கல் ஆகும். ஆரம்பக் கட்டத்தில், மேலோட்டமான வெண்படல அழற்சி மந்தமான வெண்படல தோற்றத்தை உருவாக்குகிறது. கோனோகாக்கல் சவ்வழற்சியால், பரந்த புறசெல் வீக்கம், ஒளிபுகாமை, வெண்படலப் புண் (குறிப்பாக வெளிப்பகுதியில்) ஆகியவை ஏற்பட்டு வெண்படலத் துளைகளும் உட்கண் அழற்சியும் உண்டாகும்.

கோனோகாக்கல் கண்சவ்வழற்சி மண்டலம் சார் வெளிப்பாடுகளான வாய்ப்புண், நாசியழற்சி, கீல்வாதம், ஆசனவாய்க் - குதத் தொற்று, மூளைக்காய்ச்சல் அல்லது குருதிநச்சு ஆகியவற்றோடு தொடர்புடையதாக இருக்கலாம்.

கிளமைதியல் மற்றும் கோனோகாக்கல் அல்லாத இதரக் கண்சவ்வழற்சிகள்:

கிளமைதியல் மற்றும் கோனோகாக்கல் அல்லாதக் கண்சவ்வழற்சிகள், இமை வீக்கம், கண் சிவப்பு, கண்சவ்வு வீக்கம் ஆகியவற்றுடன் சளிச்சீழ் கசிவு போன்றவற்றை ஏற்படுத்தும். இவை பலவிதமாகவும் பிற காரணங்களில் இருந்து வேறுபடுத்திக் காணக் கூடாதவைகளாகவும் இருக்கும்.

சூடோமோனாஸ் கண்சவ்வழற்சி அரிது என்றாலும் தீய விளைவுகளை ஏற்படுத்துவதாகும்.  விரைவாக முன்னேறி வெண்படலப் புண்களையும் துளைகளையும் உண்டாக்கும். சூடோமோனாஸ் வெண்படல அழற்சிக்குச் சிகிச்சை அளிக்காவிட்டால் விழிக்கோளத்துக்குள் தொற்று ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாக முடியும்.

சிற்றக்கிக் கண்சவ்வழற்சி:

ஒருபக்க அல்லது இருபக்க இமை வீக்கம், மிதமான கண்சவ்வுச் சளித்தேக்கம், விழிவட்டத் தோலில் கொப்புளம், சீழற்ற ஊனீர்கலந்த செங்கசிவு ஆகியவை சிற்றக்கி கண்சவ்வழற்சியின் தன்மைகள் ஆகும். கண்சவ்வுப் படலம் உருவாவதிலும் இது தொடர்புடையதாக இருக்கலாம்.

வெண்படல் புறசெல் பாதிக்கப்படும்போது நுண் ஒருங்கு முனைப்புகள் அல்லது நிலம்சார் புண்கள் ஆகிய வடிவங்களில் அக்கி வெண்படல அழற்சியின் குறிப்பிட்ட குறிகள் காணப்படும்.

குழந்தைகளிடம் நோய்த்தடுப்பு ஆற்றல் சரிவர இல்லாத போது மூளை அழற்சி போன்ற பொதுவான கடும் மண்டலம்சார் சிற்றக்கித் தொற்று உருவாகும்.

ஆய்வக நோய்கண்டறிதல்:

பிறந்த குழந்தை கண்சவ்வழற்சிக்கான ஆய்வகச் சோதனையில் அடங்குவன:

-    கிராம் சாயம் அல்லது கீம்சா சாயத்துக்கான கண்சவ்வு மாதிரி

-    பாலிமரேஸ் தொடர் வினை மதிப்பீட்டுக்குக் கண்சவ்வு மாதிரி

-    சாக்கலேட் கடற்பாசிக்கூழ் மற்றும்/அல்லது தாயர்-மார்ட்டின் ஊடகத்தில் திசு வளர்ச்சி.

-    இரத்தக் கடல்பாசிக் கூழில் திசு வளர்ச்சி.

-    வெண்படல் புறசெல் பாதிக்கப்பட்டு இருந்தால் அதன் திசு வளர்ச்சி

ஐயுறும் தொற்று நோய்க்கான குறிப்பிட்ட ஆய்வுச் சோதனையில் அடங்குவன:

கிளமைதியல் கண்சவ்வழற்சி:

-    கிராம் சாயம் அல்லது கீம்சா சாயத்துக்கான கண்சவ்வு மாதிரி. நோய்க்கிருமி கட்டுண்ட உட்செல் நுண்உயிரியாக இருப்பதால் கிளமைதியல் கண்சவ்வழற்சியை (கிளமைதியா டிராக்கொமேட்டிசால் உருவானது) கண்டறிய கண் கசிவு போதுமானதாக இல்லாததால் சீவல் மாதிரி எடுக்கப்படுகிறது.

-    பாலிமரேஸ் தொடர் வினைக்காக கண்சவ்வு சீவல் மாதிரி.

கோனோகாக்கல் கண்சவ்வழற்சி:

-    சாக்கலேட் கடற்பாசிக்கூழ் அல்லது தாயர்-மார்ட்டின் ஊடகத்தில் நெய்சீரியா கொனேரியா பாக்டீரியாவைக் கண்டறிய திசு வளர்ச்சி.

-    பாலிமரேஸ் தொடர் வினைக்காக கண்சவ்வு சீவல் மாதிரி

கிளமைதியல் மற்றும் கோனோகாக்கல் அல்லாத இதரக் கண்சவ்வழற்சிகள்:

-    இரத்தக் கடல்பாசிக் கூழில் திசு வளர்ச்சி

சிற்றக்கி கண்சவ்வழற்சி:

-    சிற்றக்கி வைரசுக்கு திசுவளர்ச்சி சோதனை

-    நேரடி ஒளிர் எதிர்பொருள் சோதனை

-    பாலிமரேஸ் தொடர் வினை

அறிகுறிகள் மோசம் அடைந்தாலோ அல்லது திரும்பத் திரும்ப சிகிச்சை தேவைப்பட்டாலோ திரும்பத் திரும்ப திசுவளர்ச்சி சோதனைகள் தேவைப்படும்.

பாலிமரேஸ் தொடர் வினை போல, படியெடுத்தல் செயலூக்கப் பெருக்க சோதனையும் ஒரு அணுக்கரு அமிலப் பெருக்க சோதனையே. கிளமைதியல் மற்றும் கொனேரியல் நுண்ணுயிரிகளைக் கண்டறிய திசுவளர்ச்சியை விடவும் இவை இரண்டும் உணர்திறன் மிகுந்தவையாகும்.

பிறந்த குழந்தை கண்சவ்வழற்சியின் பல்வேறு வடிவங்களுக்கான திசுவியல் கண்டுபிடிப்புகள்:

-    வேதியல் கண்சவ்வழற்சி: கிராம் சாயம் சாயச்சார்பற்ற செல்களையும் அவ்வப்போது நிணசெல்களையும் காட்டுகிறது.

-    கிளமைதியல் கண்சவ்வழற்சி:

கிராம் சாயம்: கிராம் சாயம் சாயச்சார்பற்ற செல்களையும் நிணசெல்களையும் ஊனீர் செல்களையும் காட்டுகிறது.

கீம்சா சாயம்: புறசெல்களில் சாயச்சார்பற்ற செல்களின் சைட்டோபிளாஸ்மா உள் இணைப்புகளைக் காட்டுகிறது.

-    கோனோகாக்கல் கண்சவ்வழற்சி: சாயச்சார்பற்ற செல்களையும் கிராம்-எதிர் உட்செல் இணைக்காக்கி நுண்ணுயிரியையும் காட்டுகிறது.

-    கிளமைதியல் மற்றும் கோனோகாக்கல் அல்லாத இதரக் கண்சவ்வழற்சிகள்: கிராம் சாயத்தில் சாயச்சார்பற்ற செல்களும் தொற்று பாக்டீரியாக்களும் காணப்படுகின்றன.

-    சிற்றக்கி கண்சவ்வழற்சி:

கிராம் சாயம்: நிணசெல், ஊனீர் செல் மற்றும் பல உட்கரு அரக்க செல்களும் காணப்படுகின்றன.

பாப்பனிகோலோ சாயம்: புற செல்லில் அமிலச்சாய செல்களின் உட்கரு இணைப்புகள் குறைந்த உணர்திறனோடு காணப்படுகின்றன.

பிறந்த குழந்தை கண்சவ்வழற்சியை கீழ்க்காணுபவற்றில் இருந்து வேறுபடுத்திக் காண வேண்டும்:

-    நாசிக்கண்ணீர் நாளத்தின் பிறவி அடைப்பு

-    கண்ணீர்ப்பை அழற்சி

-    பாக்டீரியா வெண்படல அழற்சி

-    காளான் வெண்படல அழற்சி

-    முன்னிடைச்சுவர் செல்லழற்சி

-    விழிக்கோள செல்லழற்சி

-    பிறவிக் கண்ணழுத்தம்

நோய்மேலாண்மை மருத்துவக் கண்காணிப்பின் கீழ் நடைபெற வேண்டும்.

பிறப்புக்கு முன், அறிகுறிகள் இருந்தால், கிளமைதியல், கோனோகாக்கல், அக்கி மற்றும் பிற நுண்ணுயிரிகள் யோனிப் பிறப்பின் போது கருவுக்குப் பரவுவதைத் தடுக்கக் கருப்பைவாய்த் திசுவளர்ச்சி சோதனை செய்துகொள்ள வேண்டும். தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும், அல்லது அறுவை மூலம் குழந்தையை எடுக்க வேண்டும்.

திசுவளர்ச்சி சோதனைக்கு முன்னான ஆரம்ப நோய்மேலாண்மை மருத்துவ ரீதியான பரிசோதனை, கிராம் சாயம், கீம்சா சாயம் மற்றும் பாப்பினோகோலா ஒற்று ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.

கோனோகாக்கல் கண்சவ்வழற்சி நல்ல நிலையில் இருக்கும் வெண்படல புறசெல்லைப் பாதித்து விரைவாக முன்னேறி புண்களை ஏற்படுத்தக் கூடுமாதனால் உடனடி சிகிச்சை இன்றியமையாதது ஆகும். கடும் கண்சவ்வழற்சி கொண்ட பிறந்த குழந்தைகளுக்கு முதலில் கோனோகாக்கல் கண்சவ்வழற்சி சிகிச்சை அளித்துப் பின் திசுஆய்வு அறிக்கைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.

ஆய்வுக்கு முந்திய சிகிச்சையில் மேற்பூச்சு எரித்திரோமைசினும் மண்டலம் சார் செபலோஸ்போரினும் அடங்கும்.

மண்டலம்சார் வெளிப்பாடுகளும், நிமோனியா, மூளைக்காய்ச்சல், குருதிநச்சு ஆபத்துள்ள கண்சவ்வழற்சியுடைய பிறந்த குழந்தைகளுக்குத் தீவிரமான சிகிச்சை அளிக்க வேண்டும்.

கிளமைதியா மற்றும் கோனோகாக்கல் போன்ற பால்வினையால் பரவும் நோய்கள் கொண்ட பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் பிற எச்.ஐ.வி. மற்றும் மேகநோய் போன்ற பால்வினை நோய்கள் உள்ளனவா என்று சோதிக்க வேண்டும்.

கண்மறைப்பு (பேட்சிங்) செய்யக் கூடாது.

வேதியல் கண்சவ்வழற்சி:

சிகிச்சை எதுவும் பொதுவாகத் தேவை இருப்பதில்லை.

இலேசான அம்சங்கள் இருந்தால் செயற்கைக் கண்ணீரால் மசகு அளித்தால் போதுமானது.

கிளமைதியல் கண்சவ்வழற்சி:

மேற்பூச்சு சிகிச்சை மட்டும் போதுமானதல்ல.

மேற்புச்சு மற்றும் மண்டலம்சார் எரித்திரோமைசின் பரிந்துரைக்கப்படுகிறது.

மேல்தொண்டையில் இருக்கும் நுண்ணுயிரிகளை மேற்பூச்சு சிகிச்சை மட்டுமே ஒழிக்காது. இதனால் உயிருக்கு ஆபத்தான நுரையீரல் அழற்சி ஏற்படலாம். எனவே, கிளமைதியல் கண்சவ்வழற்சிக்கு மண்டலம்சார் சிகிச்சை அவசியமானது. மண்டலம்சார் எரித்திரோமைசினின் செயல்திறன் 80% ஆனதால் இன்னொரு முறையும் அளிக்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்கு வெளிநோயாளிகளாக சிகிச்சை அளிக்கலாம். ஆனால் கடும் நேர்வுகளுக்கு உள்நோயாளியாக மருத்துவம் தேவைப்படும்.

கோனோகாக்கல் கண்சவ்வழற்சி:

-    கண்ணில் அதிகச் சளிச்சீழ் அல்லது சளிக்கசிவுகளை அகற்ற சாதாரண உப்புநீரால் மேற்புற அலசல்

-    மண்டலம்சார் பென்சிலின் அல்லது செப்ட்ரியாக்சோன் தேவைப்படும்.

-    எரித்திரோமைசின் மேற்பூச்சாக.

மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும்.

கோனோகாக்கல் கண்சவ்வழற்சி உடைய அனைத்துப் பிறந்த  குழந்தைகளுக்கும் கிளமைதியாவுக்கான சிகிச்சையும் அளிக்கப்படும். பெற்றோருக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

கிளமைதியல் மற்றும் கோனோகாக்கல் அல்லாத இதரக் கண்சவ்வழற்சிகள்:

-    கிராம் எதிர்மறை நுண்ணுயிரிகளுக்கு ஜெண்டாமைசின், டோப்ராமைசின் அல்லது சிப்ரோஃபிளாக்சாசின் போன்ற நுண்னுயிர்க் கொல்லிகளையும் கிராம் நேர்மறை நுண்ணுயிரிகளுக்கு பாக்சிட்ராசினும் பயன்படுத்தலாம்.

சிற்றக்கி கண்சவ்வழற்சி:

-    மண்டலம்சார் தொற்று ஆபத்தைக் குறைக்க மண்டலம்சார் அசைக்ளோவீர்.

-    மேற்பூச்சு எதிர்-வைரல் மருந்துகளான டிரைஃபுளூரிடின் கண்சொட்டு, கேன்சிகுளோவிர் ஜெல் அல்லது விதராபின் கண் களிம்பு ஆகியவற்றைப் பரிந்துரைக்கலாம்.

-    குறிப்பிட்ட அளவுக்கு புறசெல் குறைபாடுகள் இருந்தால் இரண்டாம் கட்ட பாக்டீரியா தொற்றைத் தடுக்க மேற்பூச்சு நுண்ணுயிர்க்கொல்லிகள் தேவைப்படும்.

நோய்முன்கணிப்பு:

ஆரம்ப நோய்கண்டறிதல் மற்றும் தகுந்த மருத்துவ சிகிச்சையை அளித்தால் பிறந்த குழந்தை கண்சவ்வழற்சி முன்கணிப்பு பொதுவாக நன்மையானதே.

பெரும்பாலும் இந்நோய் தகுந்த சிகிச்சைக்குப் பலன் தருகிறது.

மருத்துவமனை சிகிச்சையும் தீவிர கண்காணிப்பும் தேவைப்படும் நேர்வுகளில் நோய்த்தன்மையும் மரணவிகிதமும் அதிகரிக்கிறது.

பிறந்த குழந்தை கண்சவ்வழற்சியால் ஏற்படும் கண்சிக்கல்களில் அடங்குவன:

-    போலிப்படலம் உருவாதல்

-    இமைக் கண்சவ்வு தடித்தல்

-    மரைபடலம் உருவாதல்

-    வெண்படல வீக்கம்

-    வெண்படல ஒளிபுகாமை

-    வெண்படலப் புண்

-    வெண்படலத் துளை

-    கண்பாவைப்பிதுக்கம்

-    விழிக்குழி அழற்சி

-    பார்வையிழப்பு

பிறந்த குழந்தை கண்சவ்வழற்சியால் ஏற்படும் மண்டலம்சார் சிக்கல்கள்:

கிளமைதியல் கண்சவ்வழற்சி:

-    நுரையீரல் அழற்சி

-    காதழற்சி

-    தொண்டை மற்றும் குத நுண்ணுயிரிக் குடியிருப்புகள்

கோனோகாக்கல் கண்சவ்வழற்சி

-    மூளைக்காய்ச்சல்

-    குருதிநச்சு

-    மூட்டழற்சி

-    ஆசனவாய்க் - குதத் தொற்று

சிற்றக்கிக் கண்சவ்வழற்சி

-    மூளையழற்சி

பிறந்த குழந்தை கண்சவ்வழற்சியைத் தடுக்கப் பல்வேறு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன:

மேற்பூச்சுத் தடுப்புமருந்துகள்:

-    வெள்ளி நைட்ரேட்டு சொட்டுகள்: குறிப்பிட்ட அளவில் பென்சிலினேஸ்-உற்பத்திசெய்யும் நெய்சீரியா கொனேரியே நிகழ்வினைகள் காணப்படுமானால் இதைப் பயன்படுத்தலாம்.

வெள்ளி நைட்ரேட்டு கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக எரித்திரோமைசின் போன்ற மேற்பூச்சு மருந்துகள் பல நாடுகளில் பயன்படுத்தப்படுவதால் வேதியல் கண்சவ்வழற்சி நேர்வுகள் குறைந்துள்ளன.

-    பொவிடோன் - அயோடின் கரைசல்

-    டெட்ராசைக்ளின் கண் களிம்பு

-    எரித்திரோமைசின் கண் களிம்பு

கோனோகாக்கலுக்கு எதிராகவும், கிளமைதியல் மற்றும் கோனோக்காக்கல் அல்லாத நுண்ணுயிரிகளுக்கு எதிராகவும் பலனளிப்பதாலும், வேதியல் கண்சவ்வழற்சியை மிகக் குறைந்த அளவிலேயே உண்டாக்குவதாலும் பிறந்த குழந்தை கண்சவ்வழற்சிக்கு எரித்திரோமைசின் களிம்பே சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.

மண்டலம்சார் தடுப்பு:

கருப்பாதையிலோ அல்லது பிறப்பிலோ தொற்று ஏற்படும் சாத்தியம் உள்ள குழந்தைகளுக்குத் தகுந்த நோய்த்தடுப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

-    மண்டலம்சார் செஃப்ட்ரியாக்சோன்: கோனோகாக்கல் தொற்று இருக்கும் என ஐயுறும் அல்லது சிகிச்சை பெறாத தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு மண்டலம்சார் செஃப்ட்ரியாக்சோன் அளிக்கப்படுகிறது.

  • PUBLISHED DATE : Apr 29, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Apr 29, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.