போலிவிழிவில்லை

போலிவிழிவில்லை என்பது உட்கண் வில்லை (IOL) பொருத்தப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. கண்புரை அறுவையின் போது விழிவில்லை அகற்றப்பட்டு உட்கண்வில்லை பொருத்தப்படும். அல்லது விழிவில்லையின்மையை நேர்செய்ய இரண்டாம் கட்ட முறையாக இது பொருத்தப்படும். விழிமுன்னறை அல்லது  விழிப்பின்னறையில் உட்கண் வில்லை பொருத்தப்படும்.

வெண்படலத் திறன், விழிவில்லைத் திறன், மற்றும் கண்கோளத்தின் அச்சு நீளம் ஆகிய மாறிகளைக் கொண்டு  முக்கியமாகக்  கண்ணின் விலகல் திறன் நிர்ணயிக்கப்படுகிறது. விலகல் சீர்மை விழியில், இம்மூன்று திறன்களும் இணைந்து கண்ணின் இயல்பான விலகலை உருவாக்குகின்றன.

கண்ணில் விலகல் பிழை எதுவும் இல்லாமல் தொலைவுப் பார்வைக்கு எந்தவிதத் திருத்தமும் தேவை இல்லாத நிலையே விலகல் சீர்மை எனப்படும். விலகல் சீர்மை கொண்ட விழியில் ஒளி அச்சுக்குக்கு இணையான ஒளிக் கதிர்கள் விழித்திரையில் விழும். விலகல் சீர்மையில் தொலைவுப் புள்ளி (இணக்கமற்ற நிலையில் விழித்திரைக்கான இணைவுப் புள்ளி) ஒளியியல் முடிவிலி ஆகும். இது 6 மீட்டர்கள். ஒளிக்கதிர்களை வெண்படலமும் விழிவில்லையும் பொருத்துமான அளவில் குவிக்காத போது விலகல் பிழை நேர்கிறது. விலகல் பிழையின் அளவீடு டயோப்டர் (டி) ஆகும். மீட்டரில் குவிய தூரத்தின் தலைகீழ் என்று இது வரையறுக்கப்படுகிறது.

கண்ணின் ஒளி உணர் படலங்களில் ஒளிக்கதிர் மோசமாகக் குவிக்கப்படும் நிலையை விலகல் பிழை என்ற சொல் குறிக்கிறது. இதனால் மங்கல் பார்வை ஏற்படுகிறது. இது ஒரு பொதுவான கண் பிரச்சினையே. இதில் கிட்டப்பார்வை, எட்டப்பார்வை, சிதறல்பார்வை மற்றும் வெள்ளெழுத்து அடங்கும். கண்ணாடி அல்லது விழிவில்லை உதவி இன்றி பார்க்கும் ஒருவர் விலகல் சீர்மை உடையவர் ஆகும்.

விலகல் பிழை வயதைப் பொறுத்து காணப்படும். பெரும்பாலான குழந்தைகளுக்குப் பிறப்பை ஒட்டி எட்டப்பார்வை மேலோங்கி இருக்கும். பள்ளிப்பருவத்தில் கிட்டப்பார்வை உள்ளோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

உட்கண்வில்லை அக்ரிலிக் அல்லது பெர்ஸ்பெக்சால் அதாவது பாலிமீத்தைல் மெத்தாக்ரிலேட்டால் (PMMA) செய்யப்படுகிறது. இந்த வில்லைகள் 4-6 மி.மீ. விட்டம் கொண்டவை. மேலும் இவை இருபுறக்குவியம் அல்லது சம-குவியம் கொண்டவை. முதன்மை மாற்று சிகிச்சைக்காக வில்லைத் திறனைக் கணக்கிட கேளா ஒலியியல் மூலம் அச்சு நீளம் அளத்தல், வெண்படல அளவியல் மற்றும் தர அட்டவணைகள் தேவைப்படுகின்றன. குழந்தைகளுக்கு வலிமையான வில்லை தேவைப்படும். வில்லைக் கண்ணிகள் நெகிழ்திறன் கொண்ட மீத்தைல்-மெத்தாக்ரிலேட்டால்  செய்யப்படுகிறது. மடிக்கக் கூடிய உட்கண்வில்லைகள் சிலிகோன் அல்லது அக்ரிலிக்கின் பல்வேறு பாலிமர்களால் செய்யப்படுகின்றன. கண்புரை அறுவையைத் தொடர்ந்து  ஒரு சிறு வெட்டின் வழியாக வில்லைப்பசையாக்கம் மூலம் நுழைக்கத்தக்கவைகளும் உள்ளன.

கண்ணாடியில் 12.5 D தேவைப்படும் ஒரு நோயாளிக்குக் கண்ணின் பின் அறையில் 21 D உட்கண்வில்லை தேவைப்படும். அசல் கண்வில்லையோடு ஒப்பிடும் போது பின் அறையில் உள்ள உட்கண்வில்லையின் சராசரி உருப்பெருக்கம் 1.5% ஆகும். முன் அறை உட்கண் வில்லையின் சராசரி திறன் 18 D மற்றும் உருப்பெருக்கம் 2%. கண்ணை மாற்றி மாற்றி மூடி சில நோயாளிகள் இந்த மாறுபாட்டை கண்டறியக் கூடும். ஒரு கண்ணில் இயற்கை வில்லையும் மறு கண்ணில் உட்கண் வில்லையும் கொண்ட அனைவரும் ஏறக்குறைய  இருகண் பார்வையை அடைய முடியும். கண் புரை அறுவையின் போது அல்லது பின்னர் உட்கண் வில்லையைப் பொருத்தலாம். உட்கண்வில்லையின் சாதகாங்கள்:

 • நோயாளிக்குக் குறைந்த பட்ச பராமரிப்பே போதும்
 • இருகண் பார்வை விரைவில் திரும்பும்
 • கண்கள் பார்க்கும் பிம்ப அளவின் வேறுபாடு குறைவு
 • இயல்பான விளிம்புப் பார்வை

குறிப்புகள்:

Sihota Ramanjit, Tandon Radhika. Parsons’ Diseases of the Eye Twenty Second Edition. Elsevier 2015. P 76- 78.

Khurana AK. Theory and Practice of Optics and Refraction Second Edition. Reed Elsevier India Private Limited 2008. P 66- 70.

Mukherjee PK. Clinical Examination in Ophthalmology Second Edition. Elsevier Relx India Pvt. Ltd. 2016. P 176- 181.

Yanoff Myron, Duker Jay S. Ophthalmology Third Edition. Mosby Elsevier 2009. P 415- 422.

Chang David F, Dell Steven J, Hill Warren E, Lindstrom Richard L, Waltz Kevin L. Mastering Refractive IOLs- The Art and Science. Slack Incorporated 2008. P 264- 266.

Brightbill Frederick S, McDonnell Peter J, McGhee Charles NJ, Farjo Ayad A, Serdarevic Olivia. Corneal Surgery- Theory, Technique and Tissue Fourth Edition. Mosby Elsevier 2009. P 397- 405.

Friedman Neil J, Kaiser Peter K. Essentials of Ophthalmology First Edition. Saunders Elsevier 2007. P 229.

Kaiser Peter K, Friedman Neil J, Pineda Roberto. The Massachusetts Eye and Ear Infirmary Illustrated Manual of Ophthalmology Fourth Edition. Elsevier Saunders 2014. P 309- 310.

Rosenfield Mark, Logan Nicola, Edwards Keith. Optometry- Science, Techniques and Clinical Management Second edition. Butterworth Heinemann Elsevier 2009. P 361- 362.

http://lomalindahealth.org/media/health-care/pdfs/ophthalmology/aphak.pdf

http://www.medscape.com/viewarticle/870276?nlid=110047_450&src=WNL_mdplsfeat_161014_mscpedit_opth&uac=245425CZ&spon=36&impID=1215419&faf=1

Fedorov SN, Kolinko AL, Kolinko AL. Estimation of optical power of the intraocular lens. Vestn Oftalmol. 1967; 80: 27- 31.

Holladay JT, Prager TC, Chandler TY, et al. A three-part system for refining intraocular lens power calculations. J Cataract Refract Surg. 1988; 13: 17- 24.

Retzlaff JA, Sanders DR, Kraff MC. Development of the SRK/T intraocular lens implant power calculation formula. J Cataract Refract Surg. 1990; 16: 333- 340.

Hoffer KJ. The Hoffer Q formula: a comparison of theoretic and regression formulas. J Cataract Refract Surg. 1993; 19: 700- 712.

 

 

போலிவிழிவில்லை நோயாளிகளுக்குப் பொதுவாக அறிகுறிகள் இருப்பதில்லை.

 • ஒரு குவிய உட்கண்வில்லை மாற்று நோயாளிகளுக்கு இணக்க இழப்பு காணப்படுவதோடு சீரமைப்பு இல்லாமல் ஒரு தொலைவுக்கு மட்டுமே பார்க்க முடியும்.
 • சில வெளிச்ச நிலைகளில் உட்கண்வில்லைக்குள் உள் பிரதிபலிப்பு ஏற்படுவதால் பெரும்பாலான வில்லைகள் நேர்மறை (பிரகாசம்) அல்லது எதிர்மறை (இருள்) பார்வை நிகழ்வை உருவாக்கும்.
 • விளிம்புக் கண் ஒளிக் கூச்சம்
 • விலகல் பிழை
 • உட்கண் வில்லை மையம் நழுவினால் அல்லது சரிந்தால் இரட்டை பிம்பம் அல்லது பன்பிம்பம் அல்லது மங்கல் பார்வை காணப்படும்.

 

 

கண்ணில் உட்கண் வில்லை பொருத்தப்படுவதால் ஏற்படும் நிலையே போலிவிழிவில்லை ஆகும்.

உட்கண்வில்லை:

 • வடிவமைப்பு: தற்போது கிடைக்கும் உட்கண் வில்லைகள் எல்லாம் இருகுவிய, சம-குவிய அல்லது குழுமட்ட வில்லைகள் ஆகும். பொருத்தப்படுபவைகளில் பெரும்பாலானவை இருகுவிய வில்லைகள். சரிதல், மையம்விலகல் மற்றும் கோளப்பிறழ்ச்சியின் பாதிப்பை குறைப்பதோடு, ஒரு இருகுவிய வில்லையின் ஒரு குவி பின் பரப்பு, பின் உறையின் ஒளிபுகாமையை உருவாக்கும் வில்லை மேற் செல்களின் நகர்ச்சியைக் குறைக்கும். நேர்மறைக் குழுமட்ட வில்லைகள் அரிதாகவே பயன்படுத்தப்படும். ஏனெனில் இது சரிந்தால் அல்லது மையம்வழுகினால் ஏற்படும் பார்வைச்சிதறலும் திறன் மாற்றமும் அதிக அளவில் இருக்கும். ஒரு  10˚- 15˚ சரிவு கண்ணாடி மூலம் சீரமைப்புக்கு முடியாத அளவில் முறையான மற்றும் முறையற்ற பார்வைச் சிதறலை உருவாக்கும்.
 • விளிம்பு வடிவமைப்பு: பிரதிபலிப்புகள், வெட்டொளிகள் மற்றும் மினுமினுக்கும் விளிம்பொளிகள் ஆகியவை விளிம்பு வடிவமைப்போடு தொடர்புடையன. பிரதிபலிப்பு பிம்பங்களைத் தவிர்ப்பதற்காகப் பெரும்பாலான வில்லைகள் மழுக்கிய விளிம்புகளைக் கொண்டிருக்கும்.
 • ஒளியியல் பரவல்: கண்ணின் இயற்கை வில்லை அகற்றப்பட்ட பின்னர் 300-400 nm அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்கள் விழித்திரையை எட்டுகின்றன. கண்ணுக்கு ஏற்படும் நீல ஒளி ஆபத்தைக் குறைக்க புற ஊதாக் கதிர்கள் பெரும்பாலும் அனைத்து உட்கண்வில்லைகளிலும் வடித்தகற்றப் படுகின்றன.
 • செய்பொருள்: உட்கண்வில்லைகள் பெரும்பாலும் பி எம் எம் ஏ, சிலிக்கோன் அல்லது அக்ரிலிக்கால் செய்யப்படுகின்றன. சிலிக்கோன் மற்றும் அக்ரிலிக் வில்லைகள் மடிக்கத் தக்கன. எனவே சிறு வெட்டின் வழியாக அவற்றைப் பொருத்த முடியும் (2.2 to 3.5 mm நீளம்). விலகல் விகிதம் அதிகமாக இருந்தால் வில்லையின் வளைவு தட்டையாக இருக்கும். தட்டையான வளைவால் அக்ரிலிக்கே இவை அனைத்திலும் மெல்லியது.
 • சிறப்பு வில்லைகள்: மூன்று வகையான உட்கண் வில்லைகள் உள்ளன: பன்குவிய வில்லை, பூத்தள வில்லை மற்றும் அல்கோள வில்லை.
 • பன்குவிய உட்கண்வில்லை: ஒருகுவிய வில்லையோடு ஒப்பிடும் போது 30% குறைவுற்ற பிம்பத்தை உருவாக்குகிறது.
 • பூத்தள உட்கண்வில்லை: இவை கண்ணாடிகளைப் போன்ற கோள உருளை ஆடிகள். வெண்படல பார்வைச் சிதறலை முற்றிலுமாக நேர் செய்வதற்குப் பார்வைச் சிதறலை விட 1.4 மடங்குப் பரிமாணம் கொண்டதாக உட்கண்வில்லையின் உருளை இருக்க வேண்டும்.
 • அல்கோள வில்லை: இளம் நோயாளிகளின் கண்களில் கோளப் பிறழ்ச்சியைக் குறைக்கவும் அல்கோளத் தன்மையை சீரமைக்கவும் ஏற்ற வகையில் இவை வடிவமைக்கப்படுகின்றன.

உட்கண்வில்லைத் திறனை அளவிடுதல்:

கண்புரை அறுவைக்கு முன், தேவைப்படும் விலகலை அளிக்கக் கூடிய உட்கண்வில்லைத் திறன் ஒரு கணித சூத்திரத்தைப் பயன்படுத்தி வெண்படல வளைவையும் அச்சுநீளத்தையும் அளப்பதன் மூலம் தீர்மானிக்கப்படுகிறது.

பொதுவாக வெண்படல வளைவு வெண்படலமானியால் அளக்கப்படும். வெண்படலமானியின்  சிறு மாறுபாடு உட்கண்வில்லை திறனில் 0.5 டி அளிக்கிறது. உட்கண்வில்லை திறன் கணக்கீட்டில் அச்சு நீள மாறுபாடே முரண்பாட்டுக்கான முக்கிய மூலாதாரம் ஆகும்.

வெண்படலம் முறையில்லாமல் இருக்கும் போது (வெண்படல நோய் அல்லது முன்னர் செய்த சிகிச்சைகளினால்) வெண்படல பரப்பு வரைவியலைப் பயன்படுத்தி உட்கண்வில்லையின் தேவைப்படும் திறனை சிறந்த முறையில் கணிக்க  முடியும் (வெண்படலமானிப் படம் அல்லது வெண்படலவரைவியல் காட்சிப்படம்). இது வெண்படல அளவியைப் பயன்படுத்தி வெண்படல வளைவை அளப்பதை விடச் சிறந்தது.  வெண்படல பரப்பு வரைவு உட்கண் வில்லையின் திறனைக் கணக்கிட மேலும் பல தரவை உருவாக்கித் தருகிறது. பரப்பு வரைவியலைப் பயன்படுத்தி ஏற்கெனவே இருக்கும் சிதறல் பார்வையின் பரிணாமம், இடம் மற்றும் முறைமையை மதிப்பிட முடியும். ஆழ் அச்சின் விளிம்புப் பகுதியில் ஒரு வெட்டை ஏற்படுத்துவதன் மூலம் நடுப்பகுதியில் தட்டை விளைவை உருவாக்கிச் சிதறல் பார்வையைக் குறைக்க முடியும். விழிவெளிப்படலம் அல்லது படலச்சந்திப்பில் விளிம்பின் மிக அருகில் செய்யப்படும் அறுவையால் வெண்படல அமைப்பு மாறுதல் குறைவாக இருக்கும்.

அச்சு நீளம் தேவைப்படும் உட்கண்வில்லை கணக்கீடுகள்:

கொள்கைச் சூத்திரங்கள்: உட்கண் வில்லை திறன் கணக்கீட்டுக்கான இந்தச் சூத்திரங்களை 1967-இல் ஃபியோடெரோவும் (Fyoderov) பிறரும் விளக்கினர். இதுவரை இவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை. பல ஆய்வாளர்கள் இந்தச் சூத்திரங்களை வெவ்வேறு வடிவங்களில் அளித்துள்ளனர். இந்தச் சூத்திரங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆறு மாறிகளாவன:

 • நிகர வெண்படலத் திறன்
 • அச்சு நீளம்
 • உட்கண் வில்லைத் திறன்
 • பலன்மிகு வில்லை நிலை
 • விரும்பும் ஒளிவிலகல்
 • உச்சித் தொலைவு

பல கூடுதல் கண் அளவீடுகள் எடுக்கப்பட்டன. ஆனால் ஏழு முன்னியக்க மாறிகள் (அச்சு நீளம், வெண்படலத் திறன், இணை வெண்படல விட்டம், முன் அறை ஆழம், வில்லைத் தடிமன், முன்னியக்க விலகல் மற்றும் வயது) மட்டுமே பலன்மிகு வில்லை நிலைக் கணிப்பை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டன.  மூன்றாம் தலை முறை சூத்திரங்கள் [ஹோலடே 1 (Holladay 1) , ஹாஃபர் Q (Hoffer Q) மற்றும் SRK/T மற்றும் புதிய ஹாலடே 2] பழைய சூத்திரங்களை விட இன்னும் துல்லியமாக உள்ளன. பழைய சூத்திரங்களான SRK1, SRK2, மற்றும் பிங்க்ஹார்ஸ்ட் 1 (Binkhorst 1) மைய வெண்படலத் திறன் தவறாக அளக்கப்பட்டால் எதிர்பார்க்கும் பலன்களை தருவதில்லை.

அதி இயல்பான வெண்படலம் மற்றும் வெண்படலவிலகல் அறுவை முன்னர் செய்யப்படாத கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வைக்கு விலகல் வில்லை மாற்று (RLE) 

இணக்க இழப்பு இருப்பதனாலும், நோயாளிகள் ஒப்பிடும்போது இளமையாக இருப்பதாலும், கண்ணாடியைச் சார்ந்து இருப்பதைக் குறைக்க ஒரு சிறு அளவு கிட்டப்பார்வை (கழித்தல் 0.50 டி) தேவைப்படலாம்.

அச்சு நீளம் நிலையாக இருந்து அளவீடுகள் துல்லியமாக இருந்தால் மூன்றாம் தலைமுறைக் கோட்பாட்டு சூத்திரங்கள் கிட்டப்பார்வைக்கு சிறந்த கணிப்பை அளிக்கும்.

எட்டப்பார்வைக்கு ஹோலடே 2 சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்துவதால் இந்த நேர்வுகளில் கணிப்பீட்டுப் பிழை 1 டி அளவுக்கும் குறையும். இந்த நேர்வுகளில் அச்சு நீளம் மற்றும் வெண்படலத்திறன்களின் துல்லியமான அளவீடுகள் முக்கியமானவை.

அச்சு நீளத்தைத் தீர்மானிக்கும் முறைகள்: அச்சு நீளம் ஒளியியல் மற்றும் கேளா ஒலி முறைகள் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. கண்புரை அடர்த்தியின் மீது கேளா ஒலி முறை குறைவாகச் சார்ந்துள்ளது.

முன்னர் வெண்படல விலகல் அறுவை செய்யப்பட்ட நோயாளிகள்:

ஏற்கெனவே வெண்படல விலகல் அறுவை (ஆர வெண்படல அறுவை, ஒளிவிலகல் வெண்படல அறுவை அல்லது லேசர் துணையுடனான இருக்குமிட வெண்படலமறுவடிவ அறுவை) செய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நிலையாக அதிகரித்து வருகிறது. இந்த நோயாளிக் குழுக்களின் நிலை மிகவும் சவாலானதாகும். முறையற்ற சிதறல் பார்வை கொண்ட வெண்படலங்களுக்குத் திறன் அளவீடு செய்யப் பயன்படுத்தப்படும் கருவிகள் சரியான முடிவைத் தருவதில்லை. ஆகவே, கணக்கீட்டு முறையும் கடினத் தொடு வில்லை சோதனை முறையுமே  மிகவும் துல்லியமானவை. இவற்றைத் தொடர்பவை வெண்படல பரப்பளவியல், தானியங்கி வெண்படல மானி மற்றும் கைமுறை வெண்படல அளவீடு ஆகிய முறைகள் ஆகும்.

 • கணகீட்டு முறை: இதற்கு மூன்று அளவீடுகள் தேவை: நிகர வெண்படலத் திறன், வெண்படல ஒளிவிலகல் முறைக்கு முன்னான விலகல் நிலை மற்றும் வெண்படல ஒளிவிலகல் முறைக்குப் பின்னான நிலைப்படுத்தப்பட்ட விலகல். இந்த முறை மிகவும் துல்லியமானது. ஏனெனில் நிகர வெண்படலத் திறன் மதிப்புகளும் விலகலும் பொதுவாக ± 0.25 D அளவுக்குத் துல்லியமாக இருக்கின்றன.
 • கடினத் தொடு வில்லை சோதனை முறை: இந்த முறைக்கு, அடி வளைவு அறியப்பட்ட ஒரு தட்டையான கடினத் தொடு வில்லையும்,  ± 0.50 D வரை விலகலைத் தடுக்காத கண்புரை கொண்ட ஒரு நோயாளியும் தேவை. இயல்பான விலகல் மூலம் கோளவிணை விலகல் கணக்கிடப்படுகிறது. பின் கடினத் தொடு வில்லை மூலம் விலகல் திரும்பவும் கணக்கிடப்படுகிறது. தொடுவில்லையால் கோளவிணை விலகல் மாறவில்லை என்றால், அந்த நோயாளியின் வெண்படல திறன் மதிப்பு அவ்விடத்தில் இருக்கும் தட்டையான தொடுவில்லைக்கு இணையாகவே இருக்கும்.
 • வெண்படல பரப்பு வரைவியல்: வெண்படல பரப்பு வரைவியல் வெண்படலத்தின் முழு பரப்பிலும் 5000 புள்ளிகளுக்கும் மேலாக அளவீடு செய்கிறது. மைய 3 மி.மீ. வெண்படலத்தில் 1000 புள்ளிகளுக்கும் மேல் அளவீடு செய்கிறது. இதன் மூலம் வெண்படலத்தின் முன் பரப்பை மிகத் துல்லியமாக தீர்மானிக்க முடிகிறது. ஆயினும் இது வெண்படலத்தின்  பின் பரப்பைப் பற்றி எந்த தகவலையும் அளிப்பதில்லை. பெரும்பாலான உட்கண் வில்லை கணக்கீடுகள் விலகலின் ஒரு நிகர அட்டவணையையும் (1.3333) வெண்படலத்தின் முன் ஆரத்தையும் பயன்படுத்தி வெண்படலத்தின் நிகரத் திறனைக் கணக்கிடுகிறது.  மத்திய மற்றும் விளிம்பு வெண்படல வடிவத்தின் ஒரு ஒட்டுமொத்த தொகுப்பை இடவமைப்பியல் வழங்குகிறது. வெண்படல விலகல் அறுவையைத் தொடர்ந்து (ஆர வெண்படல அறுவை, ஒளிவிலகல் வெண்படல அறுவை அல்லது லேசர் உதவியுடனான மூலவிட வெண்படல அமைப்பியல் அறுவை) வெண்படல இடவமைப்பு வரைவியல் 3 மி.மீ அல்லது குறைவான ஒளியியல் மண்டலத்துடன் துல்லியமான வெண்படலத் திறனை அளிப்பதில்லை. பெரிய ஒளியியல் மண்டலத்துடன் கூடிய ஆர வெண்படல அறுவையில், இடவமைப்பு வரைவியல் இன்னும் கூடுதல் நம்பகத்தன்மையுடன் இருக்கும். கணக்கீட்டு முறை மற்றும் கடின தொடுவில்லை முறை ஆகியவை எப்போதும் நம்பகத்தன்மை மிக்கவை.
 • இயந்திர வெண்படல அளவியல்: 3 மி.மீ. ஒளியியல் மண்டலம் கொண்ட வெண்படலங்கள் ஆர வெண்படல அறுவைக்கு மிகவும் சிறியவை. இதற்கு  இயந்திர வெண்படல அளவுமானிகள் பொதுவாக கர வெண்படல அளவுமானிகளை விட மிகவும் துல்லியமானவை. ஒளிவிலகல் வெண்படல அறுவை அல்லது லேசர் உதவியுடனான இருப்பிட வெண்படல வடிவமைப்பைத் தொடர்ந்து இயந்திர வெண்படல அறுவை அளவீடு வெண்படலத்தில் முன் ஆரத்துக்கு சிறந்த மதிப்பீட்டை அளிக்கிறது. வெண்படல பரப்பளவியல் போன்றே அளவீடுகள் இன்னும் துல்லியமாக இருப்பதில்லை.
 • கர வெண்படல அளவியல்: வெண்படல விலகல் அறுவைக்குப் பின் நடு வெண்படலத் திறனில் மிகக் குறைந்த துல்லிய அளவைக் கர வெண்படல அளவுமானி தருகிறது. காரணம் அவற்றால் அளக்கப்படும் பரப்பு 3.2 மி.மீ விட்டத்தை விடவும் அதிகம். ஆகவே, இப்பகுதியில் அளவீடு செய்வது ஆர வெண்படல அறுவை செய்யப்பட்ட வெண்படலங்களுக்கு மிக நம்பகத்தன்மை அற்றது. ஏனெனில் இவற்றின் ஒளியியல் மண்டலம் 4 மி.மீட்டருக்கு இணையாக அல்லது குறைவாக இருக்கும். ஒளிவிலகல் வெண்படல் அறுவை அல்லது லேசர் உதவியுடனான இருப்பிட வெண்படல வடிவமைப்புக்கும் கர வெண்படல் அளவியல் பிரச்சினைக்குரியதே. பரப்பியல் அல்லது இயந்திர வெண்படல அளவியலுக்கும் இதே நிலைதான். எனவே இது துல்லியமற்றது.

நிகர வெண்படலத் திறன் மதிப்புகள் மற்றும் முன்னறுவை விலகலைப் பயன்படுத்தி உட்கண்வில்லை கணக்கீடுகள்

உட்கண் வில்லை பொருத்தலோடு கூடிய ஒரு வழக்கமான கண்புரை அறுவையில், உட்பொருத்தும் வில்லையின் திறனைக் கணக்கிட முன்னறுவை விலகல் அதிகமாகப் பயனுடையதாக இருக்காது. ஏனெனில் கண்வில்லை அகற்றப்பட்டிருப்பதால் ஒளியியல் திறனும் அகற்றப்பட்டு பின் மீளமர்த்தப்படும். கண்ணில் திறன் குறைக்கப்படாத நேர்வுகளில் (விழிவில்லை இன்மையில் இரண்டாம்கட்ட உட்பொருத்துதல், போலி விழிவில்லையில் முதுகுச்சுமை உட்கண்வில்லை அல்லது கிட்டப்பார்வைக் கண்ணின் முன்னறையில் ஒரு கழித்தல் உட்கண் வில்லை) தேவைப்படும் அறுவைக்குப் பின்னான விலகலுக்குத் தேவையான உட்கண் வில்லைத் திறன் வெண்படலத் திறன் மற்றும் முன்னறுவை விலகலில் இருந்து கணக்கிடலாம். அச்சு நீளத்தை அளக்கத் தேவை இல்லை.

உட்கண் வில்லைத் திறனைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுள்ள சூத்திரம் பின்வரும் மாறிகளைப் பயன்படுத்துகிறது.

 • எதிர்பார்க்கப்படும் வில்லை நிலை மில்லி மீட்டர்களில் (வெண்படல முகட்டில் இருந்து உடகண் வில்லையின் முக்கிய தளம் வரை)
 • உட்கண் வில்லையின் திறன் டயோப்டர்களில்
 • நிகர உட்கண் வில்லைத்திறன் டயோப்டர்களில்
 • முன்னறுவை விலகல் டயோப்டர்களில்
 • தேவையான பின்னறுவை விலகல் டயோப்டர்களில்
 • மில்லிமீட்டர் விலகலில் முகட்டுத் தொலைவு

போலி விழிவில்லையில் இரண்டாம் கட்டப் பின்முதுகு உட்கண் வில்லை:

நோயாளி ஒருவருக்கு முதன்மை உட்கண் வில்லை மாற்று செய்த பின் குறிப்பிடத் தக்க அளவில் விலகல் பிழை எஞ்சி இருந்தால் தேவையான விலகலுக்காக ஓர் இரண்டாவது வில்லையைப் பின்முதுகு உத்தியின் மூலம் முதலில் பதிக்கப்பட்ட வில்லையை அகற்றாமலேயே பொருத்தலாம். இதற்கு முதல் மாற்றின் திறன் அளவோ அச்சு நீளமோ தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்த உத்தி கூட்டல் மற்றும் கழித்தல் வில்லைகளிலும் பயன்படுத்தப்படலாம்.

கிட்டப்பார்வை கண்களின் முன்னறையில் முதன்மைக் கழித்தல் உட்கண் வில்லை:

 ஒரு முன்னறை உட்கண் கழித்தல் வில்லைக்கான கணக்கீடு ஒரு வில்லையற்ற கண் முன்னறை வில்லைக்கான கணக்கீடு போன்றதே. ஒரே வேறுபாடு வில்லைத் திறன் கழித்தலில் இருப்பதே. முன்னர், ஆர வெண்படல அறுவை அல்லது ஒளிவிலகல் வெண்படல அறுவை ஆகியவற்றால் சரிசெய்ய முடியாத மிகை எட்டப்பார்வைக்காக இவை செய்யப்பட்டன. லேசர் உதவியுடனான இருப்பிட வெண்படல சீரமைப்பு முறைகள் கிட்டப்பார்வைக்காகக் கழித்தல் 20 டி வரை இப்போது வெற்றிகரமாக செய்யப்படுகின்றன. இந்தத் திறனையும் மிஞ்சும் கிட்டப்பார்வைக்கு மேற்கண்ட வில்லைகள் பொருத்தப்படும்.

போலி விழிவில்லையில் ஒளியியல் விலகல் நிலை:

 இது பொருத்தப்படும் உட்கண் வில்லையின் திறனைப் பொறுத்தது. அறுவைக்குப் பின் நோயாளிகளுக்குப் பின் வருபவை காணப்படலாம்:

 • இயல்பான விலகல்: கண்ணின் விலகல் நிலையோடு உட்கண் வில்லையின் திறன் பொருந்தும் போது இயல்பு விலகல் ஏற்படும். இதுவே சிறந்த நிலை. அண்மைப் பார்வை அல்லது வாசிப்பதற்கே நோயாளிகளுக்குச் சீரமைப்பு தேவைப்படும்.
 • தொடர் கிட்டப்பார்வை: பொருத்தப்பட்ட  உட்கண் வில்லை விலகலை மிகைத் திருத்தம் செய்யும்போது இது நிகழ்கிறது. கிட்டப் பார்வையின் விகிதத்தைப் பொறுத்து இத்தகைய நோயாளிகளுக்கு தூரப்பார்வைக்குக் கண்ணாடி தேவைப்படும். அருகில் பார்க்க அல்லது வாசிக்கக் கண்ணாடி தேவைப்படுவதில்லை.
 • தொடர் எட்டப்பார்வை: பொருத்தப்பட்ட உட்கண் வில்லையின் திறன்  கண்ணின் விலகல் திறனை விட குறைவாக இருந்தால் இது ஏற்படும். இத்தகைய நோயாளிகளுக்கு தொலைவில் பார்க்க குவிவில்லையும் அருகில் பார்க்க அல்லது வாசிக்க கூடுதல் கூட்டல் சீரமைப்பும் தேவைப்படும்.
 • சிதறல்பார்வை: அறுவையின் விளைவான சிதறல் பார்வையும் போலி விழி வில்லையில் பல்வேறு விகிதங்களில் காணப்படும்.

 

 

நோய்கண்டறிதல் பின்வருபவற்றைப் பொறுத்து அமையும்:

வரலாறு: முன்னர் கண்புரை அறுவை செய்யப்பட்டதா என்றும் மேலும் தொடர்புடைய சிக்கல்கள் உள்ளனவா என்பதையும் இது ஆவணப்படுத்தும்.

கண் பரிசோதனை: கீழ்வருவனவற்றிற்காக கண்கள் பரிசோதிக்கப்படும்:

 • பார்வைக் கூர்மை மதிப்பீடு
 • உட்கண் அழுத்தம் அளத்தல்
 • வீக்கம் அறிய வெண்படலப் பரிசோதனை
 • முன்னறை கோண மதிப்பீடு
 • செல்கள்,ஒளிவீச்சு அல்லது கண்திரவம் ஆராய முன்னறை சோதனை
 • கருவிழி அறுவை அழற்சி அறிய கருவிழி ஆய்வு
 • உட்கண் வில்லையின் நிலைப்பு மற்றும் நிலை
 • பின் உறை முழுமை மற்றும் தெளிவு
 • கட்டி போன்ற விழிப்புள்ளி வீக்கம் அறிய கண் உள்நோக்குமானி சோதனை

அறிகுறிகள்:

 • படலச்சந்திப்பின் அருகில் வெண்படலம் அல்லது விழிவெளிப்படலத்தில் புலனாகும் அறுவைப் புண்
 • முன்னறை இயல்பான ஆழம் கொண்டது அல்லது இயல்பை விட சிறிதளவே ஆழம்
 • கருவிழி அதிர்வு பொதுவாக இருக்காது
 • நான்கு பர்கிஞ்சே பிம்பங்கள் உண்டு. உட்கண் வில்லையில் இருந்து எழும் மூன்றாவது மற்றும் நான்காவது பர்கிஞ்சே பிம்பங்கள் அதிக பிரகாசமாக இருக்கும்.
 • பாவை கருப்பாக இருக்கும்.  பாவைப் பகுதியில் ஒளியைப் பாய்ச்சும் போது பிரகாசமான எதிரொளிப்புகள் இருக்கும்.
 • முன்னறை, கருவிழி சமதளம், உறைப்பை அல்லது பிசிர்பள்ளத்தில் தையலுடன் அல்லது இல்லாமல், கருவிழி அல்லது வெளிப்படலத்தொடு இணைத்து உட்கண்வில்லை காணப்படும்.
 • விளிம்பு கருவிழி அறுவை (இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்)
 • கண் உள்நோக்கு மானி மூலம் விழிக்கோள அடிப்பகுதியை ஆராய்ந்தால் பார்வைத் தட்டு இயல்பான அளவிலேயே காணப்படும்
 • பொருத்தப்பட்ட உட்கண்வில்லையின் திறனுக்கு ஏற்பப் பார்வைக் கூர்மையும் விலகல் நிலையும் வேறுபடும்.
 • உட்கண் வில்லை மையம் விலகல், உட்கண் வில்லை கருவிழியை ஆக்கிரமித்தல், உட்கண் அழுத்தம் அதிகரித்தல், முன்னறையில் குருதி தேங்குதல், கருவிழி அழற்சி, வெண்படல வீக்கம், முன்னறையில் கண்திரவம், அல்லது கட்டி விழிப்புள்ளி வீக்கம் ஆகியவை கண்டறிதலில் காணப்படலாம்.

 

 

போலிவிழிவில்லைக்கு பொதுவாக மேலாண்மை தேவை இல்லை.

போலிவிழிவில்லை நோயாளிகளுக்குத் தொலைப் பார்வைக்கான எஞ்சிய விலகல் திறனை நேர்செய்ய வேண்டி இருக்கும். ஆனால் வாசிப்பு கண்ணாடிகளே போதுமானவை.

சிக்கல்கள் தோன்றும் போது அவ்வப்போது மேலாண்மை செய்யப்படும்.

தொலை மற்றும் அண்மைப் பார்வைக்கான கண் கண்னாடித் தேவையை பல நோயாளிகளுக்கு இல்லாமல் செய்ய முடியும். போலிவிழி வில்லை அல்லது விழிவில்லையின்மை ஆகிய இரண்டின் இணக்க ஆற்றல் செயல்படும் தூரத்தை இணப்பதில் முடிகிறது. மேலும் அண்மைப் பார்வை என்பது போலி இணக்கம் அல்லது தெளிவான இணக்கம் என விளக்கப்படுகிறது.

இணக்க வீச்சை மேம்படுத்த வடிவமைக்கப்படும் உட்கண் வில்லைகள் இருவகைப்படும்:

 • இணங்கும் வில்லைகள்: பிசிர்ப்பொருள் சுருக்கம் மற்றும் விரிவுக்கு ஏற்ப முன் – பின் பார்வை அச்சில் இயக்க நகர்வு அடையும் விதத்தில் வடிவமைக்கப்படுகிறது;
 • பன்குவிய நிலை வில்லைகள்: தொலை மற்றும் அண்மைப் பார்வைக்குப் பன்குவியப் புள்ளிகளை உருவாக்கும் வண்ணம் இவை வடிவமைக்கப்படுகின்றன.

நோய்முன்னறிதல்

நோய்முன்னறிதல், பொதுவாகச் சிறப்பாக இருக்கும்.

குறிப்பாக மிகைக் கிட்டப்பார்வையிலும் பின் உறை முழுமையாக இல்லாமல் இருந்தாலும் விழித்திரை விடுபடல் ஆபத்து அதிகம் இருக்கக் கூடும்.

 

 

பின்வரும் சிக்கல்கள் உருவாகலாம்:

 • உட்கண் வில்லை மையம் விலகல்
 • உட்கண் வில்லை கருவிழியை ஆக்கிரமித்தல்
 • உட்கண் அழுத்தம் அதிகரித்தல்
 • முன்னறையில் குருதி தேங்குதல்
 • கருவிழி அழற்சி
 • வெண்படல வீக்கம்
 • முன்னறையில் கண்திரவம்
 • கட்டி விழிப்புள்ளி வீக்கம்

 

 • PUBLISHED DATE : Dec 27, 2018
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Dec 27, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.