மறைமாறுகண்

முதன்மை நிலையில் அல்லது அவையவற்றின் அசைவில் இருக்கும் கண்கள் சரிப்படுத்தும் இணைவு அனிச்சை வினைகளின் உதவியோடு அழுத்தத்தின் கீழேயே பொருந்தல் புள்ளியில் நிலைபெறும் நிலையே மறைமாறுகண் என வரையறுக்கப்படுகிறது. இணைவின் தாக்குறவு அகற்றப்படும்போது ஒரு கண்ணின் பார்வை அச்சு விலகுகிறது.

அனைத்து நோக்கு நிலையிலும் அனைத்துப் பொருந்தல் தொலைவுகளிலும் இரு கண்களின் ஒழுங்கமைவும் முழுமையாக இருப்பதால் பார்வை அச்சுகள் தொலைவுக்கு ஏற்ப இணையாகவும் அண்மைப் புள்ளிக்குத் தகுந்த குவிதலுடனும் இருக்கும் தன்மையே கண்ணியல்புநிலை எனப்படும். இத்தகையக் கண் இயல்புநிலை அரிது. சிறிய அளவிலாவது மறைமாறுகண் நிலை பொதுவாக இருக்கும்.

ஜார்ஜ் டி ஸ்டீவென்ஸ் (1886) ஹெட்ரோஃபோரியா (மறைமாறுகண்) என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். கண் தசைகளின் ஓர் இயல்பற்ற அனுசரிப்பு அல்லது பார்வைக் கோடுகளை இணையாக அல்லாமல் வேறு திசைக்கு இழுப்பது என்று இதனை வரையறுக்கிறார்.  இது மாறுகண்ணுக்கும் பொருந்தும்.  மறைமாறுகண்ணில் இருவிழிப்பார்வை வழக்கப்படி பேணப்படும்.  ஆனால் கண் தசைகளுக்கு இருக்கும் முழுமையான சமநிலையை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.  இவ்வாறு இணைவுப் பொறியமைவு விலகலை மறைமுகமாக வைக்கிறது. மறுகண்னில் இரட்டைத் தோற்றம் காணப்படும்.  இதை மேற்கொள்ள ஒரு பிம்பம் நீண்ட நேரம் அழுத்தப்படுகிறது. ஆகவே இருவிழிப்பார்வையைப் பேணுவதில் உள்ள திறன் அல்லது தோல்வியைப் பொறுத்தே மறைமாறுகண்ணுக்கும் மாறுகண்ணுக்கும் இடையில் வேறுபாடு அமைந்து இருக்கும்.

ஹெட்ரோஃபோரியா (மறைமாறுகண்) என்ற சொல், பின்வரும் கிரேக்கச் சொற்களில் இருந்து உருவானது: ஹெட்ரோஸ் என்றால் மற்ற, வேறுபட்ட என்றும் ஃபோரியா என்றால் கொண்டுவருதல், ஒப்பிடுதல் என்றும் பொருள்.

கண் ஒழுங்கமைவுக் கோளாறுகள் இருவகைப்படும்:

 • மறை விலகல்
 • வெளிப்பட்ட விலகல்

மறைமாறுகண்ணில்  பார்வை அச்சின் ஒரு ஒப்பீட்டு அளவிலான விலகல் உள்ளது. இதை இரு இணைவுப் பொறிநுட்பம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த பொறிநுட்பம் தடைபடும்போது இயல்புநிலை மாறுகண்ணாக உடைந்து விலகல் வெளிப்படையாகத் தெரிகிறது.

குறிப்புகள்

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Aliό Jorge L, Pandey Suresh K, Agarwal Amar. Textbook of Ophthalmology Vol 1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd 2002. P 452- 456.

Agarwal Amar. Handbook of Ophthalmology. Slack Incorporated 2006. P 145- 149.

Bowling Brad, Kanski's Clinical Ophthalmology- A Systematic Approach. Eighth Edition. Elsevier 2016. P 748- 749.

Rosenfield Mark, Logan Nicola, Edwards Keith. Optometry- Science, Techniques and Clinical Management Second Edition. Butterworth Heinemann Elsevier 2009. P 244- 249.

Keirl Andrew, Christie Caroline. Clinical Optics and Refraction: A Guide for Optometrists, Contact Lens Opticians and dispensing Opticians. Elsevier Health Sciences 2007. P 312- 318.

Eperjesi Frank, Bartlett Hannah, Dunne Mark. Ophthalmic Clinical Procedures: A Multimedia Guide. Butterworth Heinemann Elsevier 2007. P 51- 54.

Somlai Judit, Kovács Tibor. Neuro-Ophthalmology. Springer International Publishing Switzerland 2016. P 198- 205.

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3557116

http://www.cybersight.org/bins/content_page.asp?cid=1-2193-2348

http://www.richmondproducts.com/shop/index.php?route=product/product&product_id=1262

http://www.slideshare.net/hmirzaeee/heterophoria2

Stevens GT. A system of terms relating to the conditions of the ocular muscles known as ‘insufficiencies’. N Y Med J 1886; 44: 624.

 

அறிகுறிகளைக் கொண்டு மறைமாறுகண்ணை ஈடுசெய்யப்பட்டது மற்றும் ஈடுசெய்யப்படாதது என இருவகையாகப் பிரிக்கலாம்:

I.ஈடுசெய்யப்பட்ட மறைமாறுகண்: இதில் அறிகுறிகள் எதுவும் காணப்படுவதில்லை. தசை சமநிலை இன்மையை மேற்கொள்ள இருப்பு நரம்புத் தசை ஆற்றலை ஈடுகட்டுதல் சார்ந்துள்ளது.

II. ஈடுசெய்யப்படாத மறைமாறுகண்: விலகலைக் கட்டுப்படுத்தப் போதுமான அளவுக்கு இணைவு வீச்சு இல்லாதபோது அறிகுறிகள் ஏற்படுகின்றன. ஏற்கெனவே அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் நோயாளிகளுக்கு பலவீனப்படுத்தும் நோய்கள் அறிகுறிகளை உருவாக்கும். கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்படலாம்:

 • தசைக் களைப்பு: இருப்பு நரம்புத் தசை ஆற்றலை தொடர்ந்து பயன்படுத்துவதால் இது விளைகிறது. பொதுவான அறிகுறிகள் வருமாறு:
 • லைவலி
 • கண்ணிறுக்கம்
 • ஒளிக்கூச்சம்
 • அண்மையில் இருந்து தொலைவுக்கும், மாற்றியும் குவிதலை மாற்ற சிரமம்.
 • இருவிழி ஒற்றைப் பார்வையை (BSV) பேண இயலாததால் ஏற்படும் அறிகுறிகள். இவை வருமாறு:
 • பார்வை மங்கல்
 • வாசிக்கும்போது சொற்கள் திரளுதல்
 • இருவிழிப்பார்வையில் சிரமம்
 • இடைவிட்ட இரட்டைப்பார்வை
 • இரட்டைப்பார்வை இல்லாமல் இடைவிட்டு மாறுகண்
 • இடநிலை உணர்வு குறைபாட்டால் ஏற்படும் அறிகுறிகள்: இவற்றால் ஏற்படுபவை
 • தொலைவையும் இடநிலையையும் கணிப்பதில் சிரமம் (குறிப்பாக நகரும் பொருட்களில்)

 

மறைமாறுகண்ணின் காரணங்களைக் கீழ்வருமாறு வகைப்படுத்தலாம்:

 • நிலையான காரணங்கள் அல்லது உடற்கூற்றியல் காரணிகள்:

-         கண்கோள சீரின்மை: கண் கோளங்களின் அளவு, இருப்புநிலை மற்றும் வடிவம் காரணமாக இருக்கலாம்.

-         பாவைகளுக்கு இடைப்பட்ட தூரக்  (IPD) கோளாறுகள்: பாவைகளுக்கு இடைப்பட்ட தூரம் அகலமாக இருந்தால் அது அகமாறுகண்ணோடும் சிறிதாக இருந்தால் புறமாறுகண்ணோடும் தொடர்புடையதாக இருக்கும்.

-         கண்கோள அளவு மற்றும் வடிவம்

-         மிகை-கண் தசைகளின் அசாதாரண வலிமை அல்லது வடிவமைப்பு.

-         பின்கோள திசுக்கள், கோள தசைநார்ப்பட்டை மற்றும் இணைப்புத் தசைநாரின்  கன அளவு.

-         கண்ணுக்கு வலுவூட்டும் நரம்புகளின் மைய விநியோகத்தில் கோளாறுகள்.

-         கண்ணின் பார்வை அச்சு வேறுபாடு.

·         இயக்க காரணங்கள் (உடலியல் காரணிகள்). இவற்றில் அடங்குவன

-         வயது: இளம் வயதினரில்  புற மாறுகண்ணோடு ஒப்பிடும் போது அக மாறுகண்ணே பரவலாகக் காணப்படுகிறது.  புற மாறுகண் வயதானவர்களிடையே காணப்படும்.

-         குவிதல்: இருபக்கப் பிறவி கிட்டப்பார்வையில் காணப்படுவது போல குவிதலை அதிகமாக பயன்படுத்தும் போது அக மாறுகண் உருவாகும். குவிதல் பயன்பாட்டைக் குறைக்கும் போது வெள்ளெழுத்தில் காணப்படுவது போல் புற மாறுகண் ஏற்படும்.

-         தகவமைவு:  எட்டப்பார்வையில் காணப்படுவது போல தகவமைவு அதிகரிக்கும் போது அகமாறுகண் அமையும். மிகுந்த அளவில் அண்மைப் பணி செய்வோருக்கும் இந்நிலை ஏற்படும். எளிய கிட்டப்பார்வையில் காண்பது போல் அதிகரிக்கும் தகவமைவு புற மாறுகண்ணோடு தொடர்புடையதாகும்.

-         பிரிதல் காரணிகள்: தொடர்ந்து ஒரே கண்ணை பயன்படுத்தினால் புற மாறுகண் உருவாகலாம். கடிகார நிபுணர்கள் போன்ற ஒரே கண்ணை பயன்படுத்துவோருக்கு இந்நிலை உருவாவதைக் காணலாம்.

 • நரம்புமூலக் காரணங்கள்: கீழ் இயக்க நரம்பு நோயால் திசைமாறும் மாறுகண்ணும் மேல் இயக்க நரம்பு நோயால் மறைமாறுகண்ணும் உருவாகின்றன.

ஈடுகட்டப்படாத மறைமாறுகண்ணுக்கான ஆபத்துக் காரணிகள்:

 • பொதுவான பலவீனமும் வலு குறைதலும்.
 • மன அழுத்தம்.
 • இணைவு இருப்பு போதுமானதாக இல்லாமை.
 • வயது முதிர்தல்
 • நுட்ப வேலைகள்

அசாதாரண விழித்திரை பொருத்தம் மற்றும் பிம்ப அழுத்தம்  போன்ற உணர்திறன் தழுவல்கள் குவிய இரட்டைப்பார்வையைத் தவிர்க்க உருவாகலாம். இடைவிட்ட மறைமாறுகண் என்பது மறைமாறுகண் மாறுகண்ணாக உடைவதாகும். இந்நிலையில் நோயாளிக்கு சிலசமயம் மறைமாறுகண்ணும் சில சமயம் மாறுகண்ணும் காணப்படும்.

மறைமாறுகண்ணைக் கண்டறிய பல முறைகள் உள்ளன. மாறுகண்ணோடு ஒப்பிடும் போது மறைமாறுகண் குறைந்த அளவிலானது என்று எண்ணுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. மறைமாறுகண் 25˚  பெரிதாகவும் இருக்கும்; மாறுகண்  5˚ சிறிதாகவும் இருக்கும். இணைவு வீச்சு விகிதத்தைப் பொறுத்து விலகலின் இயல்பு இருக்கும்.

விவரமான நோய் வரலாறும், தசை செயலிழப்பின் கீழ் விலகல் பிழையைத் தீர்மானித்தலும் பரிசோதனையில் அடங்கும். பார்வையின் அனைத்து நிலையிலும் கண் அசைவுகள் சோதிக்கப்பட வேண்டும். மறைமாறுகண் மதிப்பிடலில் செய்யப்படும் முக்கிய சோதனைகள் வருமாறு:

 • மறைப்பு-மறையாமை சோதனை: அருகாமை மற்றும் தூரம் ஆகிய இரண்டிற்கும் இச்சோதனை செய்யப்பட வேண்டும். ஒரு கண்ணால் ஒரு தூரப் பொருளைப் பார்க்கும் நோயாளியின் இன்னொரு கண் மறைக்கப்படும். பின் அந்தக் கண் மறைப்பு நீக்கப்படும். கண் பொருந்துவதற்கு செய்யும்  எந்த ஒரு அசைவும் குறிக்கப்படும். மறு கண்ணிலும் இச்சோதனை மேற்கொள்ளப்படும். விலகல் திசை, விலகல் விகிதம் மற்றும் மீட்சியின் வேகம் குறிக்கப்படும். மறைப்பில் வலது கண் விலகினால், ஒரு மறு பொருத்தல் அசைவு மறைப்பை நீக்கும் போது கண்டறியப்படும்.வலது கண்னின் ஒடுக்கம் புறமாறுகண்ணையும், விலகல் அகமாறுகண்ணையும் குறிக்கும். மேல் அல்லது கீழ் அசைவு செங்குத்துத் தசை இனக்கத்தைக் காட்டுகிறது. மறைப்பு நீக்கப்பட்ட பின்னர், மீளலின் வேகமும் மென்மையும் இயக்க இணைவின் வலிமையைக் குறிக்கிறது.
 • மாறிமாறி மறைக்கும் சோதனை: இணைவுக்கு இடையூறு ஏற்படும்போது மாறிமாறி மறைக்கும் சோதனை பிரிதலைத் தூண்டி மொத்த விலகலை வெளிப்படுத்துகிறது. மறைப்பு மறையாமை சோதனைக்குப் பின் இச்சோதனை நடத்தப் படுகிறது. ஒரு கண்ணில் இருந்து மறு கண்ணுக்கு மறைப்பி வேகமாகப் பலதடவை  மாற்றப் படுகிறது. மறைப்பு நீக்கப்பட்ட பின், கண் பிரிவுக்கு முந்திய நிலைக்கு மீளும் போது மீட்சியின் வேகம் மற்றும் மென்மை  குறிக்கப்படுகிறது. சோதனைக்கு முன்னும் பின்னும் நன்கு ஈடுகட்டப்பட்ட மறைமாறுகண் நோயாளிக்கு நேர் கண் காணப்படும். ஆனால், கட்டுப்பாடு மோசமான நிலையில் உள்ள நோயாளிக்கு விலகலை வெளிப்படுத்த ஈடுகட்டாமல்  போகலாம்.
 • மதாக்ஸ் கோல் சோதனை: மதாக்ஸ் கோலில் ஒரு வரிசை உருளையான சிவப்பு கண்ணாடி கோல்கள் இணைந்து இருக்கும். இது ஒரு வெண் ஒளிப் புள்ளியின் தோற்றத்தை ஒரு சிவப்பு கீற்றாக மாற்றும். கோலின் ஒளியியல் தன்மை ஒளிக் கீற்றை கோல்களின் நீண்ட அச்சின் ஊடாக 900 கோணத்தில் அமைக்கிறது. மதாக்ஸ் கோல் நோயாளியின் கண் முன் வைக்கப்படும்.  நோயாளி இரு கண்ணைக் கொண்டும் ஓர் ஒளிப் புள்ளியைப் பார்ப்பார். மதாக்ஸ் கோலால் உருவாக்கப்பட்ட கீற்று, மறு கண்ணால் பார்க்கும் பொருந்தல் ஒளியின் வழியாக கடந்து செல்லுகிறதா என நோயாளியிடம் கேட்கப்படும். கோல் இணையாக வைக்கப்படும் போது ஓர் செங்குத்து கீற்று உருவாகும். அது மாறுகண் அல்லது மறை மாறுகண் பற்றிய ஒரு கருத்தை அளிக்கும்.  ஆனால் செங்குத்தாக வைக்கப்படும் கோல் இணை கீற்றை உருவாக்கும். இது மிகை அல்லது குறை விழித்தசை இணக்கத்தைத் துல்லியமாக விவரிக்கும். கீற்று பொருந்தல் புள்ளி வழியாக செல்வதற்காக ஒரு கண்ணின் முன்னால் ஒரு பட்டகத்தை வைக்கலாம்.  இது பிழை விகிதத்தைக் கணிக்கிறது. ஒரு மீட்டர் அல்லது ஐந்து மீட்டர்கள் தொலைவில் மதாக்ஸ் தொடு தராசை வைக்கும்போது மறைமாறுகண் விகிதத்தை  நேரடியாக அதன் மூலம் அளக்க முடியும்.
 • மதாக்ஸ் சிறகு சோதனை: அண்மைப் பொருந்தலில் மறைமாறுகண் விகிதத்தை அளக்க இம்முறை பயன்படுத்தப் படுகிறது. வலதுகண் ஒரு வெண் செங்குத்து அம்புக்குறியையும் சிவப்பு செங்குத்து அம்புக்குறியையும் மட்டுமே பார்க்கும் வண்ணம் இக்கருவி அமைக்கப்பட்டுள்ளது .  அதே நேரத்தில் இடது கண் இணை மற்றும் செங்குத்து எண்களை மட்டுமே நோக்கும். மதாக்ஸ் சிறகின் முன் பாகத்தை நோயாளி மூக்கில் தாங்குவார்.  பின் பிளவின் வழியாக கண்ணாடிக்குள் நோக்குவார். வலது கண் வெண் அளவுகோலையும் இடது கண் அம்பையும் நோக்கும். அளவுகோலில் உள்ள எண்கள் வழியாக வெண் அம்பு செல்லும்.  இது இணை மறைமாறுகண்ணின் அளவை அளிக்கும்.  இதுபோலவே  செங்குத்து அளவுகோலில் செங்குத்து விழித்தசை இணக்கம் அளக்கப்படுகிறது.  சிவப்பு அம்பின் தண்டை இணை அளவுகோலுக்கு இணையாக வைக்கும் போது மாறுகண் காணப்படும்.
 • மாறுகண்மானி: மறைமாறுகண் விகிதத்தை அளக்க பயன்படுத்தப்படுகிறது.
 • அண்மைக் குவிதல் புள்ளி: கண்கள் தமது இருவிழிக் குவிதலைப் பேண இயலக்கூடிய  அண்மைப் புள்ளியே அண்மைக் குவிதல் புள்ளியாகும். இதனை ராயல் விமானப்படை (RAF) அளவுகோலால் அளக்க முடியும். நோயாளியின் கன்னம் அதைத் தாங்கி இருக்கும்.  ஒரு இலக்கு மெதுவாக அளவு கோலின் வழியாக நோயாளியின் கண்ணை நோக்கி ஒரு கண் பொருந்தலை இழந்து பக்கவாட்டில் நகர்வது வரை நகர்த்தப்படும். நோயாளி இரட்டைப்பார்வையைக் கூறும் புள்ளியே அண்மை குவிதல் புள்ளி ஆகும். அதிக முயற்சி இல்லாமல் அண்மை குவிதல் புள்ளி இயல்பாக 10 சென்டிமீட்டருக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
 • அண்மைத் தகவமைவுப் புள்ளி: கண்கள் தெளிவான குவிதலைப் பேணக்கூடிய  அண்மைப் புள்ளியே அண்மைத் தகவமைவுப் புள்ளி எனப்படும்.  இதனையும் ராயல் விமானப்படை அளவுகோலால் அளக்க முடியும். நோயாளி ஒரு அச்சிட்ட கோட்டில் கண்ணைப் பொருத்துகிறார். பின் நோயாளியை நோக்கி மெதுவாக அது மங்கலாகும் வரை நகர்த்தப்படும். முதலில் மங்கலான புள்ளி அண்மை தகவமைப்பு புள்ளியாகும். இது வயதாக ஆக குறைந்து வரும். பார்வை சீரமைப்பு இல்லாமல் வாசிப்பதற்கு  முடியாத நிலையில்  வெள்ளெழுத்து தோன்றுகிறது.
 • இணைவு இருப்புகளின் அளவீடு: இணைவு வீச்சுகள் மாறுகண் அசைவுகளின் திறனை அளக்கின்றன. இவற்றை படிகங்கள் அல்லது மாறுகண் மானியால் சோதிக்கலாம்.  ஒரு கண் முன் வலிமையான முப்படிகம் வைக்கப்படும். இருகுவியப் பொருந்தலைப் பேணுவதற்காக கண் ஒன்றில் ஒடுங்கும் அல்லது விலகும் (படிகத்தின் அடி, உட்புறம் அல்லது வெளிப்புறம் நோக்கி இருப்பதைப் பொறுத்து). இணைவு வீச்சை விட அதிகத் திறன் கொண்ட முப்படிகத்தை அடையும் போது இரட்டைப் பார்வை ஏற்படுகிறது அல்லது ஒரு கண் எதிர்திசை நோக்கி விலகுகிறது. இது கண்மாறு திறனைக் குறிக்கும்.
 • இருவிழிப் பார்வையை மதிப்பிடல்.

மறைமாறுகண்ணின் மருத்துவ வகைகள்: இவை வருமாறு

 • புறமாறுகண்: இதில் கண்கள் வெளிப்புறம் நோக்கி விலகும். இதனை இணைவு வீச்சு கட்டுப்படுத்தும்.  அகமாறுகண் போல் அல்லாமல் இது ஒரு மந்தமான செயல்.   படிக டயோப்டர்களுக்குக் கீழ் உள்ள புறவிலகல் குறிப்பிடத் தக்கது அல்ல. இதில் மூன்று வகை உண்டு:

-         விலகல் மிகை வகை

-         அடிப்படை வகை

-         பலவீனமான குவிதல் வகை

 • அகமாறுகண்: இதில் கண்கள் உட்புறமாக விலகும். இதனை இணைவுத் தூண்டல்கள் கட்டுக்குள் வைக்கும். இது ஒன்றில் எட்டப்பார்வை விலகல் பிழையால் ஏற்படலாம். அல்லது அதி தகவமைவு குவிதல்/தகவமைவு (AC/A) விகிதம் அல்லது அதிகரித்த அண்மைப் பணியால் நிகழலாம். மூன்று வகை அகமாறுகண் உள்ளன:

-         மிகைக் குவிதல் வகை

-         அடிப்படை வகை

-         பலவீன விலகல் வகை

 • மேல்மாறுகண்: கண்கள் செங்குத்தாக மேல் நோக்கி விலகும். இணைவு வீச்சால் இவை கட்டுப்படுத்தப்படும்.
 • கீழ்மாறுகண்: கண்கள் செங்குத்தாக கீழ் நோக்கி விலகும். இணைவு வீச்சால் இவை கட்டுப்படுத்தப்படும்.
 • சுழல்மாறுகண்: கண்கள் தங்கள் வகிட்டு அச்சில் சுழலும். இணைவு வீச்சால் இவை கட்டுப்படுத்தப்படும். இவை-

- உட்சுழல் மாறுகண்: வெண்படலத்தின் மேல் துருவம் உட்சுழற்சி அடையும்.

- புறச்சுழல் மாறுகண்: வெண்படலத்தின் மேல் துருவம் புறச்சுழற்சி அடையும்.

 • அசமநிலை மாறுகண்: இணை நோக்கு திசைக்கு ஏற்ப தசை சமநிலைவிகிதம் வேறுபடும் மாறுகண் வகை.

வகையீட்டு கண்டறிதல்:

மாறுகண்ணில் இருந்து மறைமாறுகண்ணை வேறுபடுத்திக் காண வேண்டும்.

நோய் மேலாண்மை மருத்துவக் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட வேண்டும்.

ஈடுகட்டப்படாத மறைமாறுகண்ணுக்கு மேலாண்மை அவசியம். அறிகுறிகள் அற்ற குறைந்த விகிதத்திலான மறைமாறுகண்ணுக்கு விலகல் பிழை இருந்தால் அதற்கான திருத்தம் தவிர்த்து பிற சிகிச்சைகள் தேவை இல்லை.

மருத்துவ சிகிச்சை

I.ஒளியியல்:

 • அகமாறுகண்:

-         விலகலில் எட்டப்பார்வை குறிப்பிடத்தக்க அளவில் காணப்பட்டால் (+1.25 டயோப்டர்கள் அல்லது மேல்) விலகல் பிழை சீரமைப்பு அளிக்கப்படும்.

-         அதிக AC/A விகிதமும்  அறிகுறிகளோடு கூடிய அகமாறுகண்ணும் இருந்து எட்டப்பார்வை இல்லாத  நோயாளிகளுக்கு  இருகுவிய கண்ணாடிகளைப் பயன்படுத்தலாம்.

-         தகவமைவு அற்ற புற மாறுகண் நோயாளிகளுக்குப் பார்வை சுகத்துக்காக அடி-வெளிப் படிகங்கள் அளிக்கப்படும். இணைவு விலகல் பொறி அமைவின் ஒட்டுமொத்தச் செயலின்மையைத் தவிர்க்க விலகல் கோணத்தில்  அரை அல்லது மூன்றில் ஒரு பங்கே சரிசெய்யப்படுகிறது.  உள்ளுறை விலகலுக்குக் காரணமான அடிமட்ட காரணத்தை இது சரிசெய்வதில்லை.  மாறுகண் சிகிச்சை பலன் அளிக்காத அறிகுறிகளோடு கூடிய  முதிய நோயாளிகளுக்கு இது பயன்படுத்தப் படுகிறது. இளம் நோயாளிகளுக்கு அறுவைக்கு முன்னரும் இதைப் பயன்படுத்தலாம்.

 • புறமாறுகண்:

-         கண்சோர்வு அற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை எதுவும் தேவை இல்லை.

-         ஒத்தப்பார்வையின்மை, சீரற்ற உருவத் தோற்றம், விழிவில்லையின்மை,  தவறான திறன் கொண்ட  உட்கண்வில்லை (IOL)  [போலிவிழிவில்லை] , சிதறல்பார்வை  போன்ற குறிப்பிடத்தக்க விலகல் பிழைகளுக்கு சிகிச்சை அளித்து கூர்மையான விழித்திரை பிம்பங்கள் உருவாகச் செய்ய வேண்டும்.  இவை இணைவுக்கான தூண்டல்களை அதிகரிக்கும்.  குழந்தைகளில் 2 டயோப்டர்களுக்குக் குறைவாக இருக்கும் எட்டப்பார்வைக்கு சீரமைப்பு தேவை இல்லை.  ஆனால் கண்சோர்வைத் தவிர்க்க  பிற முதிய நோயாளிகளுக்கு இது சரிசெய்யப்பட வேண்டும். வெள்ளெழுத்து நோயாளிகளுக்கு பலவீனமான இருகுவிய ஆடிகளை அளிக்கும் போது அண்மைப் பார்வைக்கு சுகம் அளிக்கிறது. அண்மைப் பார்வைக்காகப் பாதி அளவுப் புற விலகலுக்கு உள்ளடி படிகத்தால் சிகிச்சை அளிக்கலாம். கிட்டப்பார்வை முற்றிலுமாக சரிசெய்யப்படும்.

-         அதிக  AC/A விகிதம் கொண்ட நோயாளிகளுக்குக் கழித்தல் திறன் வில்லைகள் புறவிலகலைக் குறைக்கும்.

-          குவியல் குறைபாடுள்ள புறவிலகல் கொண்ட இளங்குழந்தைகளுக்கு இருகுவிய ஆடிகளின் கீழ்ப்பகுதியில் கழித்தல் திறன் ஆடிகளை தற்காலிக நடவடிக்கையாக பயன்படுத்தலாம். மிகை விலகல் புற விலகலுக்கு கழித்தல் திறன் வில்லைகளை இருகுவிய கண்னாடியின் மேல் பகுதிக்கு முயற்சி செய்யலாம்.

-          புறவிலகலை அறுவை மூலம் சரிசெய்த பின் மேல் சீரமைப்புக்கு படிகங்களைப் பயன்படுத்தலாம். இருகுவிய தூண்டலை உருவாக்க அறுவைக்கு முன்னும் சில சமயம் இது பயன்படுத்தப்படும்.

 • மேல்மாறுகண்:

-         கண்ணாடியில் படிகத்தைப் பொருத்தி தேர்ந்தெடுத்த நேர்வுகளுக்கு சோதனை செய்யலாம். படிகத்தின் மேற்பகுதி மேல்மாறுகண்ணை நோக்கி இருக்கவேண்டும்.  இதன் மூலம் அரை அல்லது மூன்றில் ஒரு பகுதி மேல்மாறுகண்ணே  சீர்செய்யப்படும்.

II. மாறுகண்சிகிச்சை: இதுவே சிகிச்சையின் முக்கிய பகுதி. மிதமான புற அல்லது அக மாறு கண் கொண்டவர்களுக்கு இருவிழிப்பார்வை அதிக அளவுக்கு இருக்கும்மாறுகண் சிகிச்சை பயிற்சிகளை விருப்பம் போல் மேற்கொள்ளலாம். குவிதல் குறைபாடு உள்ளவர்களுக்கு கண்தசைமானியில்  குவிதல் பயிற்சி அளிக்கப்படும். இதுபோல புறவிலகல் குறைபாடு கொண்டவர்களுக்கு விலகல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

III. கண்பாவை சுருக்கிகள்:

அதிக அளவில் AC/A விகிதம் இருப்பதால் கண்பாவைசுருக்கும் மருந்துகள் அண்மை அகமாறுகண்னுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது புற தகவமைவை ஊக்குவிக்கும்ஆகவே இயல்பை விட குறைவான நரம்பூக்கமே தேவைப்படும். இதன் விளைவாக இயல்பை விடக் குறைவான அளவுக்கே தகவமைவு குவிதல் ஏற்படுகிறது.

அறுவை சிகிச்சை:

இடைவிட்ட புறமாறுகண் கொண்ட நோயாளிகளுக்கு கீழ்வருமாறு மோசமாகும் நோய்க்குறிகள் காணப்படும்போது அறுவை சிகிச்சை தேவைப்படும்:

 • விழித்திருக்கும் நேரங்களில் 50% புறமாறுகண் நீடித்தால்
 • கண்சோர்வு அல்லது இரட்டைப்பார்வை அறிகுறிகள் இருந்தால்
 • அசாதாரணமான விழித்திரை ஒப்புமை அல்லது அழுத்தம் நோயாளிக்கு உருவானால்.
 • இசைபகு கூர்மை குறைதல்
 • இரண்டாம் நிலை குவிதல் குறைபாடு உருவாதல்
 • விலகல் அதிகரிப்பு

பலவீனமான தசையை வலுப்படுத்தலும் வலுவான தசையை வலுவிழக்கச் செய்தலுமே அறுவை சிகிச்சையின் நோக்கம்.  குறைந்த  அளவே இணைவுத் திறன் இருப்பதால் முதிர் வயது  நோயாளிகளுக்கு கவனமாக சிகிச்சை அளிக்க வேண்டும்.  இணைவுத் திறன்சிறப்பாக இருப்பதால் அறுவை மூலம் சீரமைப்பு செய்ய வேண்டிய இளம் நோயாளிகளுக்கு இணைவு குவியல் மூலம் எளிதாக சிகிச்சை அளிக்கலாம்.

செய்யப்படும் அறுவை சிகிச்சை முறைகள்:

 • இரு நடு கண்தசை பின்னிறக்கம்:  மிகை குவியல் இருந்தால் இது செய்யப்படும்.
 • இருபக்க அறுவை:  விலகல் குறைபாடு இருந்தால் இது செய்யப்படும்.

 • PUBLISHED DATE : Apr 10, 2017
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Apr 10, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.