மாக்காம்புக் கண்சவ்வழற்சி (ஜிபிசி)

மா (பொறி தூண்டல்) காம்புக் கண்சவ்வழற்சி (ஜிபிசி), பொறி வினையால் தூண்டப்பட்டக் கடுமையான கண்சவ்வழற்சி வடிவமாகும். இமைத்தகட்டுக் கண்சவ்வு பலவகையான பொறிவினைகளால் தூண்டப்படும்போது ஏற்படும் இரண்டாம் கட்ட அழற்சியாக இது இருக்கலாம். பெரும்பாலும் இது கண்வில்லைகளோடு தொடர்புடையதால் கண் வில்லையால் தூண்டப்பட்டக் காம்புக் கண்சவ்வழற்சி என்றும் அழைக்கப்படும் (CLPC).

மேல் இமைத்தகட்டுக் கண்சவ்வில் காணப்படும் அழற்சி நிலையே ஜிபிசி. முதன்முதலில் இது ஸ்பிரிங்க் என்பவரால் 1974-ல் அறிவிக்கப்பட்டது (Spring TF, Reaction to hydrophilic lenses, Med J Aust 1974; 1:449-50). ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியில் காணப்படுவது போல ஒரு நுண்காம்புக்கட்டிகள் உருவாகும் எதிர்வினை மென்விழிவில்லை அணிபவர்களுக்கு ஏற்படுகிறது. ஆலன்சுமித்தும் அவரது சக ஆய்வாளர்களும் இந்த நோய்த்தாக்கத்தைப் பற்றி மேலும் விவரித்தனர். இதனுடைய மூலம் நோய்த்தடுப்பாற்றலோடு தொடர்புடையாதாக இருக்கலாம் என்று கூறினர். விழிவில்லைகள் மேல் படியும் புரதப்படிவு விளைவியமாக வினைபுரியலாம் (Allansmith MR, Korb DR, Greiner JV, et. al. Giant papillary conjunctivitis in contact lens wearers. Am J Ophthalmol 1977; 83:697-708).

ஜிபிசி  ஒரு பரவா அழற்சிக் கோளாறு ஆகும். மேல் இமைத் தகட்டுப் பரப்பில் காணப்படும் அரக்கக் காம்புக்கட்டிகளை (1.00 மி.மீ அல்லது அதைவிடக் கூடுதல் விட்டம்) அடிப்படையாகக் கொண்டு முதன்முதலில் பெயரிடப்பட்டது. இருப்பினும் 0.3 மி.மீ. அல்லது அதை விடப் பெரிய காம்புக்கட்டிகளும் தற்போது இயல்பற்றது எனக் கருதப்பட்டு இந்நிலையின் ஓர் அம்சம் என எண்ணப்படுகிறது.

ஜிபிசி பெரும்பாலும் மென் (ஐடிரோ ஜெல்) கண் வில்லைகளோடு தொடர்பு படுத்தப் பட்டாலும், அது எந்த வகையான கண் வில்லையாலும் ஏற்படும். விழிவில்லையின் வகை, பொருள், அணியும் நிரல், சுத்தம்செய்யும் முறை, அணியும் கால அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோய்க்கடுமை அமையும். விறைப்பு வாயு-ஊடுறுவும் (RGP) வில்லைகளை விட மென் வில்லைகளை அணிபவர்களுக்கு கடுமையான பாதிப்பு உண்டாகும். நீடித்த பயன்பாட்டின் போது சிலிக்கோன் ஐடிரோ-ஜெல் வில்லைகளும் இது போன்ற பாதிப்பையே ஏற்படுத்துவதாகத் தோன்றுகிறது. தினமும் அணிவோரை விட தொடர்ந்து அணிபவர்களுக்கு அதிக நேர்வுகள் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது.

நான்கு வாரங்களுக்கு மேலான கால அளவுக்கு ஒரு முறை தங்கள் விழிவில்லைகளை மாற்றுபவர்களை விட அதற்குக் குறைவான கால அளவுக்கு ஒரு முறை மாற்றுபவர்களுக்கு ஜிபிசி நேர்வு குறைகிறது. இருபாலாருக்கும் இது ஏற்படும். விழிவில்லை அணியும் குழந்தைகளுக்கு ஜிபிசி கடுமையாக இருக்கும்.

கீழ் வருபவை உள்ள நோயாளிகளுக்கும் இந்நிலை காணப்படுகிறது:

-    விழிக்கட்டி

-    செயற்கைக் கண்

-    கண் சிகிச்சைக்குப் பின் வெளித்தெரியும் தையல்/முடிச்சுகள் (ஓரிழை நைலான் தையல் போன்றவை).

-    பிதுங்கிய வெளிப்படல மாட்டிகள் (பக்கிள்)

-    கண்ணழுத்த அறுவைக் கொப்புளம்

-    வெண்படலப் பரப்பு ஒழுங்கீனம்

-    வெண்படலப் படிவு வெளிப்படல்

-    திசு ஒட்டு

-    சம உயர வெண்படல வடுக்கள்

உலர்விழி பொதுவாக இதனோடு தொடர்புடையது, குறிப்பாக விழிவில்லை அணிபவர்களுக்கு.

இதனோடு தொடர்புடைய ஒரு நிகழ்வு சளி அகற்றல் நோய்த்தாக்கம் ஆகும். பல்வேறு அடிப்படை முன்பகுதிக் கோளாறுகளினால் கண் நோயாளிகள் திரும்பத் திரும்ப கண் சளியை அகற்றி ஒரு நீடித்த காம்புக்கட்டி மறுவினையை உருவாக்குகின்றனர் அல்லது அதிகப்படுத்துகின்றனர். ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி (ஏகேசி) அல்லது இளவேனில் கண்சவ்வழற்சியிலும் (வீகேசி) மாக்காம்புக்கட்டிகளைக் காண முடியும்.

ஒவ்வாமையால் அவதிப்படுபவர்களுக்கு ஜிபிசி-யின் கடுமையான அறிகுறிகள் காணப்படுவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. பிற ஒவ்வாமை வடிவங்களான நாசியழற்சி, புதர்க்காய்ச்சல் மற்றும் சூழலொவ்வாமை ஆகியவற்றிற்கும் ஜிபிசிக்கும் இடையில் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. விழிவில்லை அணிபவர்கள் மத்தியில் ஜிபிசி அதிகமாக இருப்பதால், விழிவில்லை அணிபவர்கள் இந்நோய்க்கு ஆளாகும் ஆபத்துள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.

குறிப்புகள்:

Saxena S, Clinical Ophthalmology: Medical and Surgical Approach. Second edition, Jaypee - Highlights. 2011, New Delhi. P 29.

Basak Samar K, Atlas of Clinical Ophthalmology, 2nd ed. Jaypee Brothers Medical Publishers (P) Ltd, 2013, New Delhi, P. 56.

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Alio Jorge L, Pandey Suresh K and Agarwal Amar. Textbook of Ophthalmology Volume 1. First Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd.. 2002. New Delhi. P. 847-850.

Nema HV, Nema Nitin. Textbook of Ophthalmology. Jaypee- Highlights Medical Publishers (P) Ltd. 2012. P. 136.

www.ejournalofophthalmology.com/ejo/ejo72.html

http://www.ejournalofophthalmology.com/ejo/ejo54.html

http://emedicine.medscape.com/article/1191641-overview

http://emedicine.medscape.com/article/1191467-overview

http://reference.medscape.com/medline/abstract/22821643

http://reference.medscape.com/medline/abstract/18216583

http://eyewiki.org/Allergic_conjunctivitis

Holland Edward J, Mannis Mark J, Lee W Barry. Ocular Surface Disease - Cornea, Conjunctiva and Tear Film. Elsevier Saunders. 2013. P. 111-115.

Kanski Jack J, Bowling Brad. Clinical Ophthalmology- A Systematic Approach. Seventh Edition. Elsevier Saunders. 2011

Bowling Brad, Kanski's Clinical Ophthalmology-  A Systematic Approach. Eighth Edition. Elsevier, 2016. P. 151-152.

Spring TF, Reaction to hydrophilic lenses, Med J Aust 1974; 1:449-50.

Allansmith MR, Korb DR, Greiner JV, et al. Giant papillary conjunctivitis in contact lens wearers. Am J Ophthalmol 1977; 83:697-708.

விழிவில்லை அணியும் பலர் தங்களுக்குக் காணப்படும் அறிகுறிகளை கண்வில்லையால் ஏற்படும் இயல்பான அசௌகரியம் என்றே கருதுகின்றனர். வில்லையை அகற்றிய பின்னும் அறிகுறிகள் மோசமாகலாம். ஆரம்பக் கட்டத்தில் மருத்துவக் கண்டறிதலோடு ஒப்பிடும்போது இந்த அறிகுறிகள் விகிதத்துக்கு மாறாக இருக்கும்.

ஜிபிசி நோயாளிகளுக்கு கண்ணில் பல்வேறு அறிகுறிகள் இருக்கும். அவையாவன:

-    சிவப்பு

-    எரிச்சல்

-    அரிப்பு

-    உறுத்தல்

-    அயல்பொருள் உணர்வு

-    அதிக சளி உற்பத்தி, குறிப்பாகக் காலையில் கண்விழிக்கும்போது (உட் கண் மூலையில்).

-    விழிவில்லை அணிவதில் சிரமம்.

-    அதிக வில்லை நகர்ச்சி.

-    பார்வை மங்கல்.

-    மேல் இமை தொங்குதல்.

-    கண்ணீரில் இரத்தம் (மிக அரிது)

மாக்காம்புக் கண்சவ்வழற்சிக்குக் காரணமான விளைவியம் இன்னும் இனங்காணப்படவில்லை.

ஒரு விளைவியத் தூண்டல் அல்லது விழிவில்லையின் பரப்பு அல்லது ஓரம் அல்லது படிவால் மேல் இமைச் சவ்வில் ஏற்படும் பொறிவினை உறுத்தலும் தொடர்ந்து திசுவியல் மாற்றங்களும் (ஊட்ட செல் குருணைக்கட்டி மற்றும் இரண்டாம் கட்ட அழற்சி) ஆரம்ப நிகழ்வாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதுவே வெண்படல அழற்சிக்கும் மேலும் திசுமாற்றம் உருவாவதற்கும் கண்ணீரில் அழற்சி குறிப்பான்கள் அதிகரிப்பதற்கும் வழிகோலுகிறது.

விழிவில்லைகளின் மேல் காணப்படும் சிதைவுகள் ஒரு காரணம் மட்டுமல்லாமல் அழற்சியின் விளைவாகவும் இருக்கலாம். இது அழற்சிக்கும், அதனால் அதிக வில்லைப் படிவுக்கும், அது மேலும் அழற்சி ஏற்படவும் வழிவகுக்கிறது.

சரியாக சுத்தம் செய்யாமை, தடிப்பு அல்லது கடினமான வில்லை விளிம்பு, வெப்பக் கிருமிநீக்கம், நீடித்த அணியும் கால அளவு ஆகியவை மாகாம்புக் கண்சவ்வழற்சி ஏற்பட சாதகமானச் சூழலை உருவாக்குகிறது.

முதல் தலைமுறை சிலிக்கோன் ஐடிரோ ஜெல் விழிவில்லைகள் ஜிபிசி உருவாக சாதகமாக உள்ளன. இதற்குக் காரணம் அவற்றின் இயந்திர விறைப்பு அல்லது லிப்பிட் படிவுக்கான அதிக நாட்டமாகும். சிலிக்கோன் ஐடிரோ ஜெல் வில்லைகள் அவை இருக்கும் பகுதியில் அதிக ஜிபிசியைத் தூண்டுகிறது. அதே சமயம் மென் (ஐடிரோ ஜெல்) வில்லைகள் மெல் இமைச் சவ்வில் அதிக அளவில் பொதுவான ஜிபிசி எதிர்வினைகளைத் தூண்டுகிறது.

விளைவியக் காரணிகள்:

ஜிபிசி நோயாளிக்கு, கண்சவ்வு புறத்திசுவிலும் வெண்படல இழையவலையிலும் அழற்சி செல்களான சாயச்சார்பற்ற செல்கள், வடிநீர் செல்கள், ஊட்ட செல்கள், ஊனீர் செல்கள், அமிலச்சாய செல்கள், அடிச்சாய செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்தக் கண்டுபிடிப்புகளோடு, ஜிபிசி நோயாளிகளின் கண்ணீர்ப்படலத்தில் சைட்டோகைன்கள் மற்றும் கெமோகைன்களின் அதிகரிப்பு இந்நோய் உருவாவதற்கு ஒரு ஒவ்வாமை பொறியமைப்பு காரணமாக இருக்கலாம் என்று கருத்தைத் தூண்டுகிறது. சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து உற்பத்தி ஆகும் கண்ணீர் இம்யுனோகுளோபுலினும் (உ-ம். IgE, IgG, மற்றும் கடுமையான நேர்வுகளில் IgM கூட) ஜிபிசி நோயாளிகளின் கண்ணீரில் அதிகரிப்பதைக் காணமுடிகிறது. அறிகுறிகளின் கடுமையைப் பொறுத்து அதிகரிப்பும் அமைகிறது. வில்லை அணிவதை நிறுத்திய பின்னும் அறிகுறிகள் மறைந்த பின்னும் இந்த இம்யுனோகுளோபுலின் அளவு இயல்பான நிலைக்குத் திரும்புகிறது.

வில்லைப் பரப்பில் உருவாகும் புரதப் படிவே அழற்சியையும் அதனோடு தொடர்புடைய ஜிபிசி காம்புக்கட்டியையும் உண்டாக்கும் தொற்றுமிகைப் பகுதிக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நொதிகளைப் பயன்படுத்தி எவ்வளவு தூரத்திற்கு தகுந்த முறையில் சுத்தம் செய்தாலும் வில்லையில் படிவுகள் தொக்கி நிற்கின்றன. புதிய படிவுகள் உருவாகும்போது இவை மேலும் அதிகரிக்கின்றன. வில்லையின் வகையும் பொருளும் கூட புரதப் படிவு சேருவதைப் பாதிக்கிறது.

ஜிபிசி நோயாளிகளுக்கும் பிறருக்கும் இந்தப் படிவின் தன்மை ஒன்று போலவே காணப்படும். இருப்பினும் ஜிபிசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் படிவு கூடுதலாக இருக்கும். இவர்கள் அணியும் வில்லையில் G, A மற்றும் M (IgG, IgA and IgM) இம்யுனோகுளோபுலினும் காணப்படும்.

இயந்திரக் கருதுகோள்:

சையனோஅக்ரிலேட் பசைகள், வெளித்தெரியும் தையல் மற்றும் வெளிப்படல மாட்டிகள், விழித்தோலழற்சி மற்றும் செயற்கை விழிக்கோளம் போன்ற சடப்பொருட்களின் தொடர்பு ஜிபிசிக்கு இருப்பது இயந்திரக் கருதுகோளை ஆதரிக்கிறது. வில்லைகளால் ஏற்படும் உறுத்தல் கண்சவ்வு புறத்திசு செல்களைச் சிதைத்து வேதியற்தூண்டல் பெயர்வுக் காரணிகளை (உ-ம். அடிச்சாய செல் வேதியற்தூண்டல் பெயர்வுக் காரணி) வெளிப்படச் செய்கிறது. நேரடிக் காயமும் அதனால் ஏற்படும் அழற்சி தொடர்வினைகளூம் வில்லைகளுக்குக் கட்டுண்ட விளைவியங்களுக்கு ஒரு மிகையுணர்திறன் பதில்வினையைத் தூண்டக் கூடும்.

நோய்வரலாற்றையும் கவனமான மருத்துவக் கண்காணிப்பையும் கொண்டு பொதுவாக ஜிபிசி கண்டறியப்படுகிறது.

உருவ மற்றும் திசுவியல் ஒற்றுமைகள் ஜிபிசி-க்கும் விகேசி-க்கும் உள்ளன. ஆனால் ஜிபிசி இதில் இருந்தும் பிற நோயெதிர்ப்பியல் அடிப்படையிலான கண்சவ்வு அழற்சிகளில் இருந்தும் தொடர்புடைய மருத்துவ வரலாற்றில் வேறுபடுகிறது (உ-ம். விழிவில்லை அணிதல், அறுவை சிகிச்சை).

அறிகுறிகளை, பொதுவான விழிவில்லை அணிவதால் உண்டாகும் அசௌகரியங்கள் எனப் பலர் கருதக்கூடும் என்பதால் அவற்றைத் தெளிவாக அலசி ஆராய ஒரு கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நோய்வரலாறு தேவைப்படும்.

வில்லை பயன்படுத்துவோரில் யாருக்கு ஜிபிசி ஏற்படும் என்பதைக் கண்டறிய மண்டலம் சார் ஒவ்வாமை பற்றிய வரலாறும் உதவி செய்யும்.

ஒரு கண்மருத்துவரல் பிளவு-விளக்கு (உயிர்-நுண்நோக்கி) செய்யப்படும் ஆய்வும் நோய்கண்டறிதலுக்குத் தேவை.

ஓர் இயல்பான இமைத்தகட்டுக் கண்சவ்வை உயிர்-நுண்நோக்கியால் ஆய்வு செய்யும் போது, நுண்ணிய, பிரிந்துசெல்லும் குழல்கள் தொடர்ச்சியாக இமை விளிம்புக்குச் செங்குத்தாக செல்வதையும், மிருதுவான, ஈரமான இளஞ்சிவப்பு பரப்பையும் காணலாம். இதுவே  ‘ஸாற்றின்’ தோற்றம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக பரப்பில் காம்புக்கட்டிகள் இருப்பதில்லை.  அல்லது ஒளிர்ச்சாயம் இட்டு கோபால்ட்-நீல வடிகட்டல் அமைப்பால் ஆய்வு  செய்யும் போது ஒழுங்கான காம்புக்கட்டிகள் தோற்றத்தைக் கண்டறியலாம். காம்புக்கட்டிகள் இருந்தால் அவை 0.3 மி.மீ. அளவுக்கும் கீழ் இருக்கும்.  ஆரம்பக் கட்டத்தில் இலேசான மிகைக் குருதியோடு கூடிய இமைத்தகட்டுச் சவ்வு தடித்தல் போன்ற அழற்சியின் குறிப்பற்ற அடையாளங்களைப் பார்க்கலாம். மேலும், குமிழ் கண்சவ்வு ஊடுறுவல், மேல் வெண்படல மேற்படலம் மற்றும் வெண்படல ஒளிஊடுருவாமை ஆகியவையும் ஆய்வில் காணப்படும். நோய் வளர்ச்சி அடையும் போது, ஒழுங்கற்ற காம்புக்கட்டி மற்றங்கள் உருவாகி, இறுதியாக மாக்காம்புக்கட்டிகளும் தோன்றும். 0.3 மி.மீ. மேலான காம்ப்புக்கட்டி மறுவினை என இது வரையறுக்கப்படும்.

மேல் இமைத்தட்டுப் பரப்பை ஆலன்சுமித் மூன்று பகுதிகளாகப் பகுத்தார். இமைத்தகட்டின் அருகில் மேற்புற ஓரமாக உள்ளது பகுதி 1 ஆகும். பகுதி 3 இமை விளிம்புக்கு அடுத்து தொலைவாக அமைந்துள்ளது. இவற்றிற்கு இடையில் உள்ளது பகுதி 2 ஆகும். மென் வில்லை தொடர்புள்ள ஜிபிசி-யில் காம்புக்கட்டிகள் முதலில் பகுதி 1-ல் ஆரம்பித்துப் பின் பகுதி 2-க்கும் 3-க்கும் பரவும். ஆனால் இந்த முறை விறைப்பு வாயு ஊடுறுவல் வில்லை தொடர்புள்ள ஜிபிசி-யில் தலைகீழாக மாறும். இதில் காம்புக்கட்டிகள்  பகுதி 3-ல், இமை விளிம்பை அடுத்து அல்லது இமையின் தூரத்திலுள்ள அரைப்பாதியில் காணப்படும். இந்தக் காம்புக்கட்டிகள் பொதுவாக எண்ணிக்கையில் குறைவாகவும் தட்டையாகவும் இருக்கும். கூடுதல் விட்டம் கொண்ட மென் வில்லைகளுக்கும் குறுகிய விட்டம் கொண்ட ஆர்ஜிபி வில்லைகளுக்கும் இடையில் இருக்கும் இட வேறுபாடே பெரும்பாலும் ஜிபிசிக்கான இயந்திர மற்றும் நோயெதிர்ப்பாற்றல் தூண்டலோடு தொடர்புடையதாக இருக்கலாம். நோய் அதிகரிக்கும் போது கண்சவ்வு வரிசை முறையில் பாதிக்கப்படுகிறது. ஆரம்பக் கட்டத்தில், கண்சவ்வில் மிகை இரத்தச் செறிவு இருக்கும். கண்சவ்வும் குழல் வடிவமைப்பிலும் ஒரு பகுதி இழப்பு இருக்கும். காம்புக்கட்டியின் அளவு ஏறக்குறைய 0.3 மி.மீ. காணப்படும். நோய் முன்னேறிச் செல்லும்போது  இமைப்பரப்பில் நெருக்கம் ஏற்பட்டு குழல் வடிவைப்பு இழப்பும் ஏற்படும். கடுமையான நேர்வுகளில் இமைத்தகடு தடிப்பாகி குழல் வடிவமைப்பு முற்றிலுமாக மறையும். இக்கட்டம் சார்-கண்சவ்வு வடுவுறலோடு தொடர்புடையதாக இருக்கலாம்.

மருத்துவக் கண்டுபிடிப்புகளை நோயாளியின் அறிகுறிகளோடு ஒப்பிட்டு நோக்க காம்புக்கட்டியின் அளவு மற்றும் இருக்கும் இடத்தை இயல்பாய்வு செய்வது பயன் தருவதாக இருக்கும். மேல் இமைத்தகட்டை மூன்று மண்டலங்களாகவும், இடை மற்றும் பக்கம் என இரு பகுதிகளாகவும் பகுத்துப் பார்ப்பதனால், கண்டறியப்பட்ட செய்திகள் இயல்பான வேறுபாட்டைக் குறிக்கின்றனவா அல்லது நோயைக் குறிக்கின்றனவா என தீர்மானிக்க ஒரு மருத்துவருக்குப் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக, மேல் இமைத்தகட்டு கண்சவ்வை மதிப்பிடும் போது சந்திப்பு அல்லது மாறும் மண்டலத்தில் இருக்கும் பெரும் அளவிலான காம்புக்கட்டி நோய்க்கூறாகக் கருதப்படுவதில்லை.

வில்லையின் வகையோடும் செய்பொருளோடும் காம்புக்கட்டி தோன்றும் இடத்துக்கும் தோற்றத்துக்கும் தொடர்பு இருப்பதால் உயிர் நுண்நோக்கிக் கண்டுபிடிப்புகளும் பயனுடையவைகளாக இருக்கும். மென் வில்லைகள் அணிவோருக்குப் பொதுவான காம்புக்கட்டி பதில்வினைகள் காணப்படும். விறைப்பு வாயு ஊடுறுவல் வில்லைகள் அல்லது சிலிக்கோன் ஐடிரோ-ஜெல் வில்லைகள் அணிவோருக்கு இடம்சார்ந்த வகையில் காம்புக்கட்டி வெளிப்பாடுகள் இருக்கும். மென் வில்லை அணிவோருக்கு மேல் இமைத்தகட்டு விளிம்பில் காம்புக்கட்டி தொடங்கிப் பரவும். மாறாக, விறைப்பு வில்லை மற்றும் சிலிக்கோன் ஐடிரோ ஜெல் வில்லை அணிவோருக்கு இமை விளிம்பில் காம்புக்கட்டி உருவாகி பகுதி சார்ந்தே காணப்படும்.  

மேலும், பிற தொடர்புள்ள அறிகுறிகள் ஜிபிசி- யைக் கண்டறிய உதவக் கூடும். இந்த அறிகுறிகள் பொதுவாக நான்கு கட்டங்களாக வகைப்படுத்தப்படும்:

கட்டம் 1 அல்லது மருத்துவத்துக்கு முன்னான நோய்: கண் விழிக்கும் போது குறைந்தபட்சம் சளிக் கசிவு காணப்படும். வில்லையை அகற்றிய பின் நோயாளிக்கு எப்போதாவது அரிப்பு இருக்கும். வில்லையில் இலேசான புரதப்படிவு காணப்படும். இமைத்தகட்டு கண்சவ்வு இயல்பாக இருக்கும். அல்லது இயல்பான குழல் அமைப்புகளுடன் இலேசான குருதிமிகைப்பு இருக்கலாம்.

கட்டம் 2 அல்லது இலேசான நோய்: அரிப்புடன் அதிகச் சளி உற்பத்தி, வில்லை உறுத்தல் அதிகரிப்பு, வில்லையில் படிவு தெளிவாகப் புலனாதல் ஆகியவை காணப்படும். கண்பார்வை மங்கக் கூடும். இலேசானதில் இருந்து மிதமானது வரை இமைத்தகட்டு கண்சவ்வு ஊடுறுவலும் இயல்பான குழல் அமைப்பு சீர்குலைவும் இருக்கும் (அதாவது, குறிப்பாக மேலோட்டமான இரத்தக்குழல்கள் மறைய ஆழமான குழல்கள் இன்னும் புலனாகும்). ஆய்வில் காம்புக்கட்டிகளின் அளவுகளில் வேறுபாடு காணப்படும். சில 0.3 மி.மீ அளவும் அல்லது கூடுதலாகவும் இக்கட்டத்தில் இருக்கும். ஒளிர் சாயம் புகட்டிய பின் கோபால்ட் – நீல வடிகட்டல் சோதனையில் சிறந்த முறையில் கண்டறிய முடியும்.

கட்டம் 3, அல்லது மிதமான நோய்: அரிப்பு, சளி உற்பத்தியுடன் வில்லையில் படிவும் அதிகரிக்கும். வில்லை உறுத்தல் கூடும். வில்லையை சுத்தமாக வைப்பதில் சிரமம் ஏற்படும். அதிக வில்லை உறுத்தலும், நகர்ச்சியும், சிமிட்டலும் இருப்பதால் பார்வைத் திறன் மாறிமாறி அமையும். வில்லையை அணியும் நேரமும் குறையும். இமைத்தகட்டுக் கண்சவ்வில் குறிப்பிடத் தக்க அளவில் தடிப்பும் ஊடுறுவலும் காணப்படும். காம்புக்கட்டி அளவிலும் எண்ணிக்கையிலும் அதிகரிப்பதோடு அடித்தளத் திசு மற்றங்களால் (உ-ம். சார்-கண் சவ்வு நார்த்திசு மற்றும் தடித்தல்) மேலெழும்பியும் இருக்கும்.

கட்டம் 4 அல்லது கடும்நோய்: வில்லையை வைத்த உடனேயே மிகவும் அசௌகரியமும் பார்வை மங்கலும் ஏற்படுவதால் நோயாளிகளால் தங்கள் வில்லைகளை அணியவே இயலாது. வில்லை நகர்ச்சி கூடுவதால் நடுவில் நிலைநிறுத்த முடியாது. காலையில் கண்கள் ஒட்டிக் கொள்ளும் அளவுக்கு சளி அதிகமாக சுரக்கும். இயல்பான குழல் அமைப்பு மறையும். காம்புக்கட்டிகள் 1 மி.மீட்டரும் கூடுதலாகவும் பெரிதாகும். சார்-கண்சவ்வு வடுவுறலும் காம்புக்கட்டியின் முகட்டில் ஒளிர் கறையும் காணப்படலாம்.

நோயின் தன்மைகளை வகுத்தெடுக்க இக்கட்டம் உதவினாலும் நோயாளிகளுக்கு நோயாளிகள் இவை வேறுபடும் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. சில நோயாளிகளுக்குப் பிரச்சினகள் மிகவும் குறைவாக இருக்கும்; ஆனால் இமைத்தகட்டுக் கண்சவ்வில் குறிப்பிடத்தக்க அளவில் அழற்சி மாற்றங்கள் காணப்படும். மாறாகக் கடுமையான அறிகுறிகள் உள்ளவர்களுக்கு இலேசான அல்லது ஆரம்ப மாற்றங்களே இமைத்தகட்டில் இருக்கும். பொதுவாக ஜிபிசி இருபக்கமும் காணப்பட்டாலும் மருத்துவ ரீதியான கண்டுபிடிப்புகள் சமச்சீரற்று இருக்கும். சில நேர்வுகளில், கண்களுக்கு இடையிலான வேறுபாட்டை எளிதாக விளக்கலாம் (உ-ம். வில்லை சரியாகப் பொருந்தாதது); ஆனால் பிற நேர்வுகளில் குறிப்பிட்ட காரணங்களைத் தீர்மானிக்க முடியாது.

ஜிபிசி-யின் அறிகுறிகள்:

-    சளிக்கசிவு அதிகரித்தல்: புறப்பரப்பும் புறத்திசுத் தடிப்பும் அதிகரிப்பதால் குடுவைசெல்களில் எண்ணிக்கை அதிகரித்து சளிக்கசிவு மிகைப்பு உண்டாகிறது. குடுவைசெல் அல்லாத புறத்திசு செல்களும் அதிக அளவில் சளியைச் சுரக்கிறது.

-    அதிக அளவில் வில்லைப்  புரதப் படிவும் காணப்படும்.

-    மேல் இமை பிடிபடுவதால் மிகை வில்லை நகர்ச்சியும் இருக்கும்.

-    மேல் இமைத்தகட்டுக் குருதி மிகைப்பும் காம்புக்கட்டிகளும்; > 1.0 மி.மீ. விட்டம் கொண்ட காம்புக்கட்டிகள் மாக்காம்புக்கட்டிகள் என வரையறுக்கப்படுகின்றன. ஆனால், பொறிதூண்டல் காம்புக்கட்டிக் கண்சவ்வழற்சியின் மருத்துவ அம்சங்கள் படி நுண்/நடுத்தர காம்புக்கட்டிகள் குறிப்பாக ஆரம்ப அல்லது இலேசான நோயில் காணப்படுகின்றன.

-    பெரிய காம்புக்கட்டிகளில் குவி முகட்டுப் புண்ணும் வெண் வடுவும் உருவாகலாம்.

-    அழற்சியின் இரண்டாம் கட்டமாக அரிக்கும் சுருக்கம் மற்றும் திசுத் தளர்ச்சியின் விளைவாக இமையிறக்கம் உண்டாகலாம்.

மேலிமைத்தகட்டுக் கண்சவ்வில் காம்புக்கட்டு உருவாவதே இந்நோயின் நோயியல் குறி ஆகும். அறிகுறிகளுடன் 0.3 மி.மீட்டருக்கு மேல் அளவுள்ள காம்புக்கட்டிகளின் இருப்பின் மூலம் ஜிபிசி-யைக் கண்டறியலாம்.

திசுவியல்.நோய்த்தடுப்பு திசுவேதியல் ஆய்வுகள்:

புறத்திசுவிலும் இயல்பான கண்சவ்வுத் திசுக்களிலும் நடுநிலைச் சாயசெல்லும் வடிநீர்செல்லும் இருக்கும். ஊட்ட செல்லும் ஊனீர் செல்களும் வெண்படல இழையவலையில் மட்டுமே காணப்படும். ஜிபிசி-நோயாளிகளில் இந்த செல்களின் எண்ணிக்கை அதிகமாகும். பொதுவாக அவை புறத்திசுவிலும் வெண்படல இழையவலையிலும் இருக்கும். அடிசெல் மற்றும் அமிலசெல்கள் போன்ற அழற்சி செல்களோடு கலந்து காணப்படும். ஜி.பி.சி நோயாளிகளின் கண்ணீர்ப்படலத்தில் சைட்டோகைன்களும் கேமோகைனகளும் அதிகரிப்பதால் இந்த நோய்க்கு ஒவ்வாமை ஒரு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. குறிப்பிட்டப் பகுதியில் உற்பத்தியாகும் கண்ணீர் இம்யுனோகுளோபுலின்களும் கூட (உ.ம்.  IgE, IgG, கடுமையான நேர்வுகளில் IgM-மும் கூட) ஜிபிசி நோயாளிகளில் அதிகரிக்கின்றன.

வில்லையின் பரப்பில் படியும் புரதப் படிவே அழற்சிக்கும் ஜிபிசி-யோடு தொடர்புடைய காம்புக்கட்டிக்கும் காரணம் எனக் கூறப்படுகிறது. புரதப் படிவின் அளவையும் வேகத்தையும் வில்லை வகையும் செய்பொருளும் கட்டுப்படுத்துகின்றன.

இந்தப் படிவின் தன்மை ஜிபிசி நோயாளிகளுக்கும் பிறருக்கும் ஒன்று போலவே இருக்கிறது. ஜிபிசி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொதுவாக வில்லைப்படிவு அதிகமாக இருக்கும். ஜிபிசி தொடர்புடைய வில்லைகளில் படியும் புரதத்தில் இம்யுனோகுளோபுலின் G, A மற்றும் M (IgG, IgA and IgM) ஆகியவையும் காணப்படும்.

கீழ்வரும் நிலைகளில் இருந்து ஜிபிசி-யை வேறுபடுத்திக் காணவேண்டும்:

-    ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி

-    வைரல் கண்சவ்வழற்சி

-    பாக்டீரியா கண்சவ்வழற்சி

-    கிளமைதியா பிறப்பு-சிறுநீரகத் தொற்றுக்கள்

-    பிறவி இமையிறக்கம்

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்:

கண்சவ்வு காம்புக்கட்டியின் பிற காரணங்களை விலக்கிவிட வேண்டும். மேலும் வில்லைச் சுத்தப்படுத்தும் திரவங்கள் மற்றும் உலர் விழிகள் போன்ற பிற காரணங்களால் ஏற்படும் வில்லை உறுத்தலையும் விலக்கி விடலாம்.

இருக்கும் எந்த ஒரு இயந்திரத் தூண்டுதலையும் மற்றும் வில்லைப்படிவையும் குறைப்பது அல்லது ஒழிப்பதே ஜிபிசி சிகிச்சையின் நோக்கமாகும். மேலும் வில்லைப் பரப்பில் உள்ள விளைவியப் புரதத்துக்கு ஏற்படும் நோய்த்தடுப்பு பதில்வினையை ஒழுங்குபடுத்துவதும் இலக்காகும். நோய்க்கடுமையைப் பொறுத்து பல அல்லது முழு உத்திகளையும் பயன்படுத்தி வில்லைப் படிவு அல்லது இயந்திரத் தூண்டலைக் குறைக்கவேண்டும்.

ஜிபிசி நோயாளிகளுக்கான சிகிச்சையின் இறுதி நோக்கம் அவர்களை வில்லை அணிவதற்கு அனுமதிப்பதே.

பயனுக்குப்பின் களையும் வில்லைகளைப் பயன்படுத்துவோருக்கு ஜிபிசி உருவாவதில்லை.

தூண்டலை அகற்றுதல்:

வில்லையின் மேல் படிந்துள்ள விளைவியப் புரதங்களின் பாதிப்பைத் தவிர்க்க நடவடிக்கைகள்:

1.   வில்லை அணிவதைப் பல வாரங்களுக்குத் தவிர்த்து தற்போது பயன்படுத்திவரும் வில்லைகளை மாற்ற வேண்டும். இலேசான – மிதமான நோய்க்கு இதுவே போதுமானதாகும். கடுமையான நோய்க்கு வில்லை மீண்டும் அணிய நீண்ட இடைவெளி தேவை.

2.   வில்லை அணியும் நேரத்தைக் குறைத்தல்.

3.   வில்லையின் வடிவமைப்பை மாற்றுதல்.

4.   வில்லையின் செய்பொருளை மாற்றுதல்,

5.   வில்லையை மாற்றும் இடைவெளியைக் குறைத்தல்.

-    செயற்கைக் கண்ணின் நிலை மற்றும் பொருத்தத்தை மதிப்பிடல்.

-    செயற்கைக் கண்ணை இன்னொன்றால் மாற்றுதல் (உயிர்பூச்சு கொண்டது).

-    வெளித்தெரியும் தையல் அல்லது வெளிப்படல மாட்டி போன்ற அடிப்படை காரணங்களைச் சரிசெய்தல்.

-    பகுதி வெட்டல், ஊடுறுவலற்ற வடித்தல் அறுவை மூலம் திருத்தம் அல்லது வடிகொப்புளத்திற்காக கண்ணழுத்த வடிகால் அமைப்பு உட்பொருத்தல்.

-    வில்லை அணிதலை நிறுத்தி கண்கண்ணாடி அணிதல் அல்லது கடுமையான அல்லது ஒளிமுறிவு நோய்க்கு ஒளிமுறிவு அறுவையும் தேவைப்படலாம்.

வில்லை அல்லது செயற்கைக்கண் சிறந்த முறையில் சுத்தம் செய்யப்படுவதை உறுதிசெய்தல்:

-    வில்லை சுத்தம் செய்யும் கரைசலை மாற்றுதல், குறிப்பாகப் பதப்படுத்திகள் (தயோமெர்சால், குளோர்ஹெக்சிடைன் போன்றவை) கொண்ட சுத்தம் செய்யும், அலசும், சேமித்து வைக்கும் கரைசலைத் தவிர்த்தல்.

-    புதிதாக மாற்றா வில்லையை அணிந்த பின் பிரச்சினை நீடித்தால் வில்லையை முதலில் மாதம் ஒருமுறையும் பின் தினமும் மாற்றவும்.

-    விறைப்பான வில்லைகளால் குறைவான பிரச்சினை ஏற்படுகிறது; இதற்கு எளிதாகவும் சிறந்த முறையிலும் சுத்தம் செய்ய முடிவதே காரணமாக இருக்கலாம்.

-    தொடர்ந்து (குறைந்த பட்சம் வாரம் ஒருமுறை) வில்லைப் புரதம் நீக்கும் மாத்திரைகளைப் பயன்படுத்தலாம் (நொதி சுத்திகரித்தல்)

-    செயற்கைக் கண்: சோப்பால் சுத்தம் செய்து மெருகேற்றப்பட வேண்டும்.

பொதுவான நடவடிக்கைகள்

-    குளிர் ஒத்தடம்: அறிகுறிகளை மேம்படுத்த உதவும்.

மருத்துவ சிகிச்சை:

நோய்த்தடுப்பு எதிர்வினைகளைக் கட்டுப்படுத்த ஊட்டசெல் நிலைப்படுத்திகள் மற்றும் மேற்பூச்சு கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள் தேவைப்படும்.

மருந்து சிகிச்சையில் அடங்குவன:

-    மேற்பூச்சு செயற்கைக் கண்ணீர்: மசகு அளிக்கவும், இயற்கை ஒவ்வாமை ஊக்கிகளையும் வில்லைச் சிதைவுகளையும் கழுவவும் இவை உதவுகின்றன.

-    இணைந்த மேற்பூச்சு குழல்சுருக்கிகள் மற்றும் எதிர்ஹிஸ்ட்டமின்கள்: ஆன்டாசோலினுடன் (எதிர்ஹிஸ்ட்டமின்) சைலோமெட்டாசோலின் (குழல்சுருக்கிகள்) அளிக்கும்போது சில நேர்வுகளுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

-    மேற்பூச்சு ஊட்டசெல் நிலைப்படுத்திகள்: மென் வில்லைகள் அணிவோருக்கு ஊட்டசெல் நிலைப்படுத்திகள் சேமிக்கப்படாததாக இருக்க வேண்டும். அல்லது வில்லை கண்ணில் இல்லாதபோது புகட்ட வேண்டும். வில்லை பொருத்துவதற்கும் புகட்டலுக்கும் இடையில் குறைந்தபட்சம்  அரைமணி நேர இடைவெளி இருக்க வேண்டும். பெரும்பாலானவைகளைத் தேவைப்பட்டால் தொடர்ந்து பயன்படுத்தலாம்.  குரோமோலின் சோடியம், லோடாக்சாமைட், நெடொகுரோமில், பெர்மிரோலாஸ்ட் போன்றவை உதாரணங்கள். ஜிபிசி-யின் ஆரம்பக் கட்டத்தில் குரோமோலின் சோடியம் (குறிப்பாக, கவனமான வில்லை சுத்தத்தோடு இணைந்து), அயல்பொருள் உணர்வு, உலர்தன்மை, நெருக்கம், சளி உற்பத்தி, காம்புக்கட்டி அளவு ஆகியவற்றிற்கு நிவாரணம் அளிக்கிறது.

-    தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்பூச்சு இரண்டாம் தலைமுறை H1 தடுக்கும் எதிர்ஹிஸ்ட்டமின்கள்: அறிகுறிகளைக் கட்டுப்படுத்த, குழல்சுருக்கிகளைத் தனியாக அல்லது குறிப்பற்ற எதிர்-ஹிஸ்ட்டமின் கண் சொட்டுடன் பயன்படுத்துவதை விட தேர்ந்தெடுத்த மேற்பூச்சு H1 ஏற்பி தடுப்பிகள் சிறந்தவை ஆகும். இத்தொகுதியில் எமடாஸ்ட்டின், லெவோகாபேஸ்டின் போன்ற மருந்துகள் அடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்பூச்சு இரண்டாம் தலைமுறை H1 தடுக்கும் எதிர்ஹிஸ்ட்டமின்கள் மிகவும் பொருத்தமானவை. அவை, தூக்கக்கிறக்கம்/தூக்கமயக்கம், உலர்விழி, உலர்வாய் ஆகிய மருந்து எதிவிளைவுகளை குறிப்பிடத்தக்க வகையில் குறைக்கும்.

-    தேர்ந்தெடுக்கப்படும் H1 தடுக்கும் எதிர்-ஹிஸ்ட்டமின்கள் மற்றும் மேற்பூச்சு ஊட்டசெல் நிலைப்படுத்திகள் (இரட்டை வினை மருந்துகள்): அசெலாஸ்டின், எபினாஸ்டின், பெபோடேஸ்டின், ஓலோபட்டாடின், கீட்டோடிபன் ஆகிய மருந்துகளுக்கு ஊட்டசெல் நிலைப்படுத்தும் தன்மையும் எதிர்-ஹிஸ்ட்டமின் தன்மைகளும் உண்டு. இவை விரைவாக செயல்படத் தொடங்கும். மேற்பூச்சு எதிர்ஹிஸ்ட்டமினும் ஊட்டசெல் நிலைப்படுத்தியும் இணைந்து சிகிச்சைக்கு பலன் அளிக்கின்றன. அறிந்த கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் ஆபத்துக்கு நோயாளியை உட்படுத்தாமல், எதிர்ஹிஸ்ட்டமின்/ ஊட்டசெல் நிலைப்படுத்திகளை இணைத்துப் பயன்படுத்துவதே போதுமானதாகும்.

-    ஊக்கமருந்தல்லாத எதிர் அழற்சி மருந்துகள் (NSAIDs): கீட்டோரோலேக் மற்றும் டைக்ளோஃபெனாக் போன்றவை அறிகுறிகளைத் தீர்க்கும். இவற்றில் ஒன்றை ஓர் ஊட்டசெல் நிலைபடுத்தியுடன் சேர்த்துக் கொடுக்கும்போது சில நோயாளிகளுக்கு அது பலன் அளிக்கும்.

-    மேற்பூச்சு கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள்: ஃபுளூரோமெதோலோன் அல்லது லோட்டப்ரட்னால் போன்ற மேற்பூச்சு கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகளைப் பயன்படுத்தலாம். சிகிச்சை பலனளிக்காத நேர்வுகளில் கடுமையான கட்டத்தில், குறிப்பாக சிறந்த முறையில் தூண்டலை நீக்குவது கடுமையாக இருக்கும்போது (உ-ம். வடிகொப்புளம் தொடர்பான நோய்கள்), மேற்பூச்சு ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தலாம்.

எதிர்ஹிஸ்ட்டமின்/ஊட்டசெல் நிலைப்படுத்திகளுடன் (இரட்டை வினை மருந்துகள்) ஒரே நேரத்தில் இணைத்து பயன்படுத்தப்படும் குறுகிய கால குறைந்த வலுவுள்ள மேற்பூச்சு கோர்ட்டிகோஸ்டிராய்ட், ஒற்றை மருந்தைத் தனித்தனியாகப் பயன்படுத்துவதை விட அதிக அளவில் பயன்தரும்.

தொடர்புடைய சிக்கல்கள் (கண்புரை, கண்ணழுத்தம் அல்லது கூடுதல் தொற்று) ஏற்படும் வாய்ப்புள்ளதால் நீடித்த மேற்பூச்சு மருந்துகளின் பங்கு இல்லை.

-    நோய்தடுப்பாற்றல் ஒழுங்குபடுத்தும் மருந்துகள்: டேக்ரோலிமுஸ் களிம்பு போன்ற நோய்தடுப்பாற்றல் ஒழுங்குபடுத்தும் மருந்துகள் வினைத்திறனில் ஃபுளூரோமெதலோனுக்கு இணையானது. ஜிபிசி-சிகிச்சையில் இதற்கு பக்க விளைவுகளும் இல்லை (http://reference.medscape.com/medline/abstract/22821643)

கடுமையான ஜிபிசி நேர்வுகளுக்கு மரபான சிகிச்சைகளுக்கு மாறாக மேற்பூச்சு டேக்ரோலிமுஸ் களிம்பைப் பயன்படுத்துவது பலனளிக்கும் மாற்று முறை சிகிச்சை ஆகும். (http://reference.medscape.com/medline/abstract/18216583)

ஜிபிசிக்கு, பொதுவாக, ஊட்டசெல் நிலைப்படுத்திகள் மற்றும் லோட்டப்ரெட்னால் கொண்டு மேற்பூச்சு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்தப் படுகிறது. வில்லை வடிவமைப்பில் அல்லது பாலிமரில் மாற்றங்களைச் செய்த பின்னும் அறிகுறிகள் தொடர்ந்து காணப்படும் மிதமானதில் இருந்து கடுமையானது வரையுள்ள ஜிபிசி நோயாளிகளுக்கு ஊட்டசெல் நிலைப்படுத்திகளைப் பயன்படுத்தலாம். லோட்டப்ரெட்னால் போன்ற ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தும் போது காம்புக்கட்டி, அரிப்பு மற்றும் வில்லை சகியாமை ஆகியவை குறைகின்றன. ஆயினும் நீடித்த ஊக்க மருந்து சிகிச்சை இத்தகைய நேர்வுகளில் பரிந்துரைக்கப்படுவதில்லை.

ஜிபிசி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பொருத்தமான இரு சேர்க்கைகள் காணப்படுகின்றன:

கட்டம் 1-க்கு: இத்தகைய நபர்களுக்கு நோய் ஏற்படுவது முன் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அறிகுறிகள் தென்படுவதில்லை. இதனால் தொடர் கண்காணிப்பு (உ-ம். 4-6 தொடர் கவனிப்பு) அதிகரிக்கப்பட வேண்டும்.

கட்டம் 2-3: சிகிச்சை: 2-4 வாரங்களுக்கு வில்லைகளை அகற்றுவதில் இருந்து சிகிச்சை தொடங்குகிறது. கண்சவ்வை சோதித்து வில்லைகளை அடிக்கடி மாற்றி பொருத்திப்பார்க்க வேண்டும். தினமும் மாற்றும் வில்லைகளில் இருந்து இரண்டு வாரத்துக்கு ஒருமுறை மாற்றும் வில்லைகளும் கிடைக்கின்றன. 1-2 வாரங்களுக்கு ஒரு முறை மாற்றுபவர்கள் சுத்திகரிப்பு முறையைக் கடை பிடிக்க வேண்டும். ஹைடிரஜன் பெராக்சைடை அடிப்படையாகக் கொண்ட (இது கண்சவ்விற்குப் பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை) சுத்திகரிப்பானை பயன்படுத்தலாம். வில்லை வடிவத்தையும் பாலிமரையும் மாற்றிய பின்னும் அறிகுறிகள் திரும்பவும் ஏற்பட்டால் 2-4 வாரங்களுக்கு வில்லையைப் பயன்படுத்தக் கூடாது. தினசரி மாற்றும் வில்லைகளையும் (அல்லது ஆர்ஜிபி வில்லைகள்) ஒரு ஊட்டசெல் நிலைப்படுத்தியையும் பயன்படுத்தலாம். ஓர் ஆண்டுக்கு 3-4 முறைகள் இத்தகைய நோயாளிகளைப் பரிசோதிக்க வேண்டும்.

கடுமையான அல்லது கட்டம் 4 நோய்: 4 வாரங்களுக்கு வில்லை அணிதலைத் தவிர்க்க வேண்டி இருக்கும். இதனுடன் தினமும் மாற்றும் வில்லை அல்லது ஆர்ஜிபி வில்லைக்கு மாற வேண்டும். வெண்விழி மற்றும் காம்புக்கட்டி முகட்டுக் கறைபடுதல் கண்டுபிடிப்புகளின் தீர்வை சோதிக்க வேண்டும். கடும் ஜிபிசி சிகிச்சையின் போது காம்புக்கட்டியின் தோற்றமும் அளவும் மாறுவதற்கு வாய்ப்பில்லை. தொடர்புடைய அழற்சிக் குறிகள் தீர்ந்துவிட்டால் நோயாளிக்கு ஒரு புதிய வில்லையைப் பொருத்துவது அதிக வெற்றி விகிதத்தை அளிக்கும். தினமும் அணியும் வில்லையைப் பொருத்தி அதனை 4 வரங்களுக்கு ஒருமுறை மாற்றியும் வந்தால் ஜிபிசி உண்டாகும் விகிதம் குறைகிறது.

பலன் இன்றி அறிகுறிகள் தொடர்ந்தால் வில்லை பயன்பாட்டை விட்டுவிடக் கருத வேண்டும்.

அறுவை சிகிச்சை:

கதிர்சிதைவு அறுவை சிகிச்சை: மரபான முறைகளை மறுப்பவர்களுக்கு லேசர் கண் அறுவை (LASIK) பற்றி சிந்திக்கலாம். இதனால் வில்லைகளைத் தவிர்க்கலாம்.

மருத்துவத்தின் பலன் கீழ்வருபவைகளால் உறுதி செய்யப்படும்:

-    வில்லை சகிப்பைத் திரும்பிப் பெறுதல்

-    கண்ணீரில் சளி குறைதல்

-    விழி அரிப்பு அழுத்தப்படல்

-    இமைத் தகட்டு கண்சவ்வில் குருதிமிகைப்பு குறைதல்

-    மாக்காம்புக்கட்டி அழற்சி குறைதல்

மருத்துவக் குறிகளை விட அறிகுறிகள் குறைவதே மருத்துவப் பலனை மதிப்பிட மிகவும் முக்கியம்.

நோய்முன்கணிப்பு:

மாக்காம்பு கண்சவ்வழற்சியை முன்கணிப்பது நல்லது. தகுந்த நோய்மேலாண்மை மூலம் 80% நோயாளிகள் வில்லை அணிவதால் ஏற்படும் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவர்.

தற்காலிக மற்றும் நிரந்தர வில்லை சகிப்பின்மைக்கு மாக்காம்பு கண்சவ்வழற்சியே பொதுவான காரணம்.

ஜிபிசி குணமானவுடன் சில நோயாளிகளுக்கு இமை இயல்பான நிலையை அடையும். ஒரு சிலருக்கு மாக்காம்புக் கட்டி வெண் வடுக்கள் நீண்ட காலத்திற்கும் சில நேரங்களில் நிரந்தரமாகவும் இருக்கும்.

நோயின் நீடித்தத் தனமை மற்றும் அதன் மருத்துவ அறிகுறிகள் பற்றியும் நோயாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் (உ-ம். கண் அரிப்பு, சளிக் கசிவு மற்றும் வில்லை சகிப்பின்மை). அறிகுறிகள் மீண்டும் வந்தால் ஒரு வாரத்திற்குள் மருத்துவரை அணுக ஆலோசனை அளிக்க வேண்டும். வில்லையைத் தகுந்த முறையில் சுத்தம் செய்யவும் தொடர் கவனிப்பு பற்றியும் நோயாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாக்காம்புக் கண்சவ்வழற்சியால் இமையிறக்கம் உண்டாகலாம்.

 

ஐடிரோ ஜெல் வில்லைகளை பயன்படுத்துவோர் மத்தியில் பரவலாகக் காணப்படும் ஜிபிசி-யைக் குறைக்கக் கடைபிடிக்க வேண்டிய தடுப்பு முறைகள்:

-    வில்லைகளை அடிக்கடி மாற்றுதல்.

-    அணியும் நேரத்தைக் குறைத்தல்.

-    ஐடிரஜன் பெராக்சைடு கிருமிநீக்கம்

-    அடிக்கடி நிபுணர் மேற்பார்வை

கடுமையான சுத்திகரிக்கும் நடவடிக்கை (குறிப்பாக நொதி மாத்திரைகளால்):

விறைப்பு வில்லைகளை அதிகமாக நொதியால் சுத்திகரிப்பது நோய்தடுப்புக்கு உதவலாம்.

  • PUBLISHED DATE : Apr 12, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Apr 12, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.