விழிக்குழி குருதிநாள முழைக்கட்டி

ஆட்பருவம் அடைந்தவர்களுக்கு ஏற்படும் முதன்மையான விழிக்குழி கட்டிகளில் மிகவும் பரவலானது விழிக்குழி குருதிநாள முழைக்கட்டியே ஆகும். இந்தக் கோளாற்றில்  குழல்வரைவியலில் புலனாகா சிரைக் குறைபாடு காணப்படும். விழிக்குழி குருதிநாள முழைக்கட்டியின் வகைப்பாடு தவறாகப் பெயரிடப்பட்டுள்ளது. இது பொதுவாக விழிக்குழியின் உட்கூம்பு பிரிவறையில் மையம் கொண்டு இருக்கும். பிம்பத்தில் உட்சிறை சுண்ணப்படிவு காணப்படும்.  உட்திசு மற்றும் போலி நார் உறையும் கொண்ட குழல் இடைவெளிகளோடு கூடிய சிரைக் குறைபாடுகள் விழிக்குழி குருதிநாள முழைக்கட்டியில் காணப்படும்.  குருதிநாள முழைக்கட்டி, அரிதாக மச்சைக்குள் அமைந்திருக்கும். இவ்வாறு அது புறக்கூம்பு பிரிவறையில் இருக்கும்.

குருதிநாள முழைக்கட்டி கண்ணின் பலபாகங்களில் உருவாகும். விழிக்குழி, இமை, விழித்திரை மற்றும் கருவிழிப்படலப் பாதை போன்ற கண் அயல் பகுதிகளிலும் ஏற்படும். குருதிநாளக்கட்டியால் கண்கோளம் பிதுக்கம் அடைகிறது.  சில வேளைகளில் இது குறிப்பிடத்தக்க அளவில் கண்பிதுக்கத்தை ஏற்படுத்துகிறது. இரத்த நாள வீக்கத்தால் இது துலங்கித் தோன்றும். நாளடைவில் இது அளவில் குறைவது இல்லை. அரிதாகவே இதனால் பார்வை பாதிப்பு உண்டாகும். அச்சுப் பிதுக்கத்தால் இருவிழிப்பார்வை பொதுவாகப் பாதிக்கப்படுவதில்லை.

குறிப்புகள்:

Shields Jerry A, Shields Carol L. Eyelid, Conjunctival, and Orbital Tumors- An Atlas and Textbook Second Edition. Lippincott Williams & Wilkins, a Wolters Kluwer business 2008. P 522- 523.

Jäger H Rolf, Gillard Jonathan H. Grainger & Allison’s Diagnostic Radiology- Neuroimaging Sixth Edition. Elsevier Ltd. 2016. P 184- 188.

Denniston Alastair KO, Murray Philip I. Oxford Handbook of Ophthalmology Third Edition. Oxford University Press 2014. P 618.

Bloom HJG, Lemerle J, Neidhardt MK, Voûte PA. Cancer in Children- Clinical Management. Springer- Verlag Berlin Heidelberg 1975. P134- 135.

http://eyewiki.aao.org/Cavernous_hemangioma

https://emedicine.medscape.com/article/1218120-overview

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3557012/

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2747469/

 

நோயறிகுறிகள்

 • மெதுவாக அதிகரிக்கும் விழிப்பிதுக்கம்
 • இரட்டைத் தோற்றம்
 • விழிக்குழி கட்டி காணப்படலாம் (புறக்கூம்பு புண்)
 • பார்வை குறைதல் (அரிது)
 • திமிரம்  (=பார்வை இருள்தல்-அரிது)

விழிக்குழி குருதிநாள முழைக்கட்டி தீங்கற்றது. ஆள்பருவம் அடைந்தவர்களிடம் இது பொதுவாக காணப்படுகிறது. நிலையானதாக இருக்கும்; அல்லது மெதுவாக வளரும் கட்டி இது. முதிர் திசு மிகை வளர்ச்சியான இதில் விரிவடைந்த பெரிய குழலிடைவெளிகள் காணப்படும்.

கட்டி என்று இதனை அழைப்பது பொருத்தமற்றது. ஏனெனில் இது உட்திசு பொதிந்த குழலிடை வெளிகள் கொண்ட குழல்வரைவியிலில்  புலனாகாத சிரை குறை வளர்ச்சியாகும். 

விழிக்குழி குருதிநாள முழைக்கட்டி நிலைத்த அல்லது மெதுவாக  வளரும் தீங்கற்ற கட்டி. வலியற்ற பிதுக்கத்தை உருவாக்கும். காயம் அல்லது கர்ப்பத்தைத் தொடர்ந்து வளர்ச்சி அதிகரிக்கும். இது தசைக் கூம்பில் ஏற்படுவதால் அச்சுப் பிதுக்கம் உண்டாகும். அழற்சி குறிகள் காணப்படுவதில்லை. பார்வை பாதிக்கப்படுவதில்லை. பிதுக்கம் நேர் முன் பகுதியில் இருப்பதால் இருவிழிப்பார்வையில் பிரச்சினை இருப்பதில்லை. குறிப்பிடத் தக்க பிதுக்கம் இருந்தால் அழுகை போன்ற செயல்களின் போது தொடர்புடைய பகுதிகள் விரிவடையக் கூடும்.

இரத்தநாளக் கட்டிகள் பார்வைக்கு நெருடலானவை. நாட்பட இவை அளவில் குறைவதில்லை. அரிதாக இரு கண்ணிலும் உருவாகும். பெரும்பாலும் தனித்த கட்டியாகவே இருக்கும். சில வேளைகளில் பல்திரள் கட்டியாக உருவாகக் கூடும். இதை நீல ரப்பர் கொப்புள மச்ச நோய்த்தாக்கத்தில் காணலாம். அரிதாக பல்திரள்கட்டி ஒரேநேரத்தில் விழிக்குழியையும் மூளையையும் பாதிக்கலாம். பிம்பத்தில் நரம்புட் சுண்ணப்படிவு காணப்படலாம்.

சில வேளைகளில் விழிக்குழி  எலும்பைப் பாதிக்கும் உள்எலும்பு புண்களாகவும் உருவாகும். புறக்கூம்பில் இருப்பதால் இவை அச்சை பாதிப்பதில்லை.

திசுநோயியல்

விழிக்குழி குருதிநாள முழைக்கட்டி உட்திசு பொதிந்த குழலிடை வெளிகள் கொண்ட குழல்வரைவியிலில்  புலனாகாத சிரை குறை வளர்ச்சியாகும். இவைகள் இணைப்புத் திசுவால் பிரிக்கப்பட்டிருக்கும். இத் திசுக்கள் மென்மையான சதைப்பிடிப்பு கொண்டவை. இவற்றின் உள் சுண்ணப் படிவும் காணப்படலாம்.

வெளிப்படையான குருதிக்கசிவு இருப்பதில்லை. இரும்புப்படிவு சாயமேறல் உருவாகலாம்.

ஆய்வுகள்

 • காந்த அதிர்வு பிம்பம் (எம்.ஆர்.): விழிக்குழி குருதிநாள முழைக்கட்டி, வேறுபடும் அதிகரிப்புடன் பெரும்பாலும் குறைந்த T1 சமிக்ஞையையும் உயர் T2 சமிக்ஞையையும் காட்டும். கடோலினியத்திற்கு பின்னான இயக்காற்றல் காந்த அதிர்வு பிம்பம் தசைத் திரளின் ஒரு தனிப்புள்ளி அல்லது சிறு கூற்றில் இருந்து வளரும் பரவல் அதிகரிப்பைக் காட்டுகிறது. இது விழிக்குழி குருதிநாள முழைக்கட்டியின் தனித்தன்மை ஆகும். அறுவை சிகிச்சை அல்லாத சிகிச்சை அணுகுமுறையில் கட்டியைக் கண்காணிக்க இது உதவுகிறது.
 • கணினி அச்சு வரைவியல் (கேட்): இது நன்கு சூழப்பட்ட உட்கூம்புப் புண்ணாகக் காட்டுகிறது. இலேசானதில் இருந்து மிதமான அதிகரிப்பு இருக்கும். குருதியுறைவுப் பகுதிகளும் காணப்படலாம்.
 • கேளா ஒலி வரைவியல்: அதிக அளவில் உள் எதிரொளிப்பு கொண்ட நன்கு உருவான உருண்டை வடிவு உட்கூம்புப் புண்ணைக் கேளா ஒலி வரைவியல் காட்டும்.

வேறுபடுத்திக் கண்டறிதல்

 •  நிணநீர்க்குழல் கட்டி
 • நரம்புநார்க்கட்டி
 • நரம்புறைக்கட்டி
 • தோல்திசுக்கட்டி
 • கருங்கட்டி
 • தனித்தநார்க்கட்டி
 • தந்துகி உட்சுவர்க்கட்டி

அறுவையற்ற சிகிச்சை

சிறிய, அறிகுறியற்ற, விழிக்குழி குருதிநாள முழைக்கட்டி வளர்கிறதா, அளவில் பெரிதாகிறதா என்று தொடர்ந்து கவனித்து வர வேண்டும்.

அறுவை சிகிச்சை

பெரிய, அறிகுறிகள் காட்டும் கட்டிகளுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.  மீண்டும் வளராமல் இருக்கத் துல்லியமான, முழு அறுவை இன்றியமையாதது.

 • கண்சவ்வு அல்லது தோல் வழி அணுகுமுறை: முன்பக்க கட்டிகளை அகற்ற இம்முறையைப் பயன்படுத்தலாம்.
 • பக்கவாட்டு விழிக்குழி அறுவை: ஆழத்தில் இருக்கும் கட்டிகளை அகற்ற இது தேவைப்படும். சில வேளை இது எலும்பறுவையோடு இணைத்தும் செய்யப்படும்.
 • மண்டையோடு வழியான அணுகுமுறை: விழிக்குழி நுனியில் இருக்கும் கட்டிகளுக்கு இம்முறை தேவைப்படும்.

நோய்முன்கணிப்பு

விழிக்குழி குருதிநாள முழைக்கட்டி மேலாண்மை திருப்தி அளிப்பதில்லை. கதிர்வீச்சு மூலம் ஓரளவுக்கே பிதுக்கம் குறைகிறது. கட்டியின் பரவல் அளவின் காரணமாக விழிக்குழி அறுவை மூலம் இந்த குழல்கட்டியை அகற்றுதல் முழு அளவில் வெற்றியைத் தருவதில்லை. அறுவை முறைகள் அல்லது கட்டிக்கு இரத்தம் கொண்டு செல்லும் நாளங்களைக் கட்டுதல் விழிக்குழி அமைப்புக்கு சேதம் விளைவிக்கக் கூடும். உதாரணமாக, கூடுதல் விழி தசைகளுக்கு சேதம் ஏற்படுத்தி விழியண்மைத்தசை வாதத்தை உருவாக்கும்.

 

 

 

 • PUBLISHED DATE : Jun 07, 2018
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Jun 07, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.