பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி

பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி (SAC) புதர்க் காய்ச்சல் கண்கள் என்றும் அழைக்கப்படும். மகரந்தப்பொடி, விலங்குத் தோல்துண்டு அல்லது முடி மற்றும் ஏதாவது ஒரு சுற்றுச்சூழல் விளைவியங்கள் போன்ற பருவகால ஒவ்வாமைப் பொருட்களால் தூண்டப்படும் அழற்சியால் இந்நோய் ஏற்படுகிறது. இடைவிட்ட (கால அளவில் 4 வாரங்களுக்கும் குறைவு) பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி மற்றும் நிலைத்த (4 வாரங்களுக்கும் மேற்பட்ட கால அளவு) நிரந்தர ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி (PAC) ஆகியவையே கண் ஒவ்வாமை நேர்வுகளில் மிக அதிகமாகக் காணப்படுபவை. பெரும்பாலான பருவகால ஓவ்வாமைக் கண்சவ்வழற்சி வசந்தம் அல்லது இலையுதிர்காலத்தில் ஏற்படுகின்றன. ஏனெனில் இக்காலங்களில் பருவகால ஒவ்வாமையூக்கிகள் (மகரந்தம்) அதிகமாக இருக்கும். மாறாக நிரந்தர ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி  சூற்றுப்புறச்சூழல் ஒவ்வாமையூக்கிகளால் (தூசிப் பேன் மற்றும் விலங்குத் தோல்/மயிர்) ஏற்படுவதால் ஆண்டு முழுவதும் காணப்படும். இவை நீடித்து இருக்கும். நிரந்தர மற்றும் பருவகால ஒவ்வாமை கண்சவ்வழற்சி இளம்வயதினர் மற்றும் நடுத்தர வயதைச் சார்ந்த ஆண் பெண் இருபாலாருக்கும் ஏற்படும்.

பருவகால மற்றும் நிரந்தர ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிகள் பரவலான மிதக்கடும் கண் ஒவ்வாமை வடிவங்கள். இவற்றுடன் பொதுவாகப் பருவகால ஒவ்வாமை நாசியழற்சியும் உண்டாகும். இவை ஒப்பீட்டளவில் இலேசான கோளாறுகளே. ஆனால் அரிதாக நிரந்தரப் பார்வை இழப்பை ஏற்படுத்தக் கூடும். இந்த நோய்களால் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படலாம்.

தாவரங்களில் இருந்து வெளிப்படும் ஒவ்வாமையூக்கிகளின் சுழற்சியைப் பொறுத்து பருவகால பாதிப்பு ஏற்படும். இந்த ஒவ்வாமையூக்கிகள் இடத்துக்கு இடம்  மாறுபடும். ஆனால் மரம், புல் மற்றும் குப்பைக்களை மகரந்தமே பொதுவான ஒவ்வாமையூக்கி.

சில குறிப்பிட்ட சுற்றுச்சூழல்  ஒவ்வாமையூக்கியால் பாதிப்படைவதற்கு மரபுவழி ஒவ்வாமையூக்கியே காரணம். இதில் ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி, பருவகால ஒவ்வாமை நாசியழற்சி (புதர்க்காய்ச்சல்), ஆஸ்துமா மற்றும் தோலழற்சி அடங்கும். ஒவ்வாமை கண்சவ்வழற்சி வகை 1 (உடனடி) மிகைஉணர்திறன் எதிர்வினையாகும். இம்யூனோகுளோபுலின் E (IgE) –யின் வினைக்கு எதிர்வினையாக ஊட்டசெல்களின் குருணைநீக்கம் இடைநின்று இணைவிப்பதால் இது நிகழ்கிறது. வகை IV   மிகைஉணர்திறன் ஏதோ ஒரு வடிவத்தில் இருப்பதை இது உணர்த்துகிறது.

நீடித்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி, மரபு ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி, இளவேனில் ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி, ஆகியவற்றுடனும் ஒரளவுக்கு மாக்காம்பு கண்சவ்வழற்சியுடனும் பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியை ஒருங்குவைத்து எண்ண முடியும். பருவகால மற்றும் நிரந்தர ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிகளில் அழற்சி இலேசாக இருக்கும். வெண்படலப் பாதிப்பு அரிதாகவே காணப்படும். மாறாக மரபு ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி மற்றும் இளவேனில் ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி கடுமையான அழற்சி நோய்கள் ஆகும். இவற்றில் வெண்படலம் பாதிக்கப்படுவதோடு நிரந்தரப் பார்வை இழப்பும் ஏற்படக் கூடும்.

பருவகால மற்றும் நிரந்தர ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிகள் பெரும்பாலும் நாசியழற்சியோடு தொடர்புடையவைகளாக இருக்கலாம். அதே சமயத்தில் மரபு மற்றும் இளவேனில் ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிகள் தோலழற்சி மற்றும் ஆஸ்துமாவுடன் முறையே தொடர்புடையனவாக கானப்படும்.

குறிப்புகள்:

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Alio Jorge L, Pandey Suresh K and Agarwal Amar.Textbook of Ophthalmology Volume 1.First Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd.  2002. New Delhi. P. 843-844.

http://www.ejournalofophthalmology.com/ejo/ejo54.html

http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1755-3768.2011.02272.x/pdf

Bowling Brad, Kanski's Clinical Ophthalmology- A Systematic Approach. Eighth Edition. Elsevier, 2016. P. 144-145.

Holland Edward J, Mannis Mark J, Lee W Barry. Ocular Surface Disease - Cornea, Conjunctiva and Tear Film. Elsevier Saunders. 2013. P. 91-96.

http://emedicine.medscape.com/article/1191467-overview

http://www.medscape.com/viewarticle/831091

http://eyewiki.aao.org/Allergic_conjunctivitis

http://eyewiki.aao.org/Conjunctivitis

http://www.chm.bris.ac.uk/motm/histamine/jm/receptors.htm

Spector S & Raizman M (1994): Conjunctivitis medicamentosa. J Allergy Clin Immunol 94: 134–136.

Barney NP & Graziano FM (2003): Allergic and immunologic diseases of the eye. In: Adkinson NFJ, Yunginger JW, Busse WW, Bochner BS, Holgate ST & Simons FE (eds). Middleton’s allergy: principles & practice, vol. 2. St. Louis, MO: Mosby, 1599– 1617.

 

 

பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் கண் அறிகுறிகளாவன:

 • அரிப்பு
 • கண் சிவப்பு
 • நீரொழுகல்
 • சீழ் கசிவு
 • எரிச்சல்
 • கொட்டுதல் அல்லது துருவல்
 • நீர்க்கசிவு
 • கண்சவ்வு வீக்கம்
 • ஒளிக்கூச்சம்
 • கண் வீக்கம்
 • கண் உலர்தல்

 

ஐஜிஇ (IgE) இடைநின்று இணக்குவிக்கும் ஊட்டசெல் குருணைநீக்கத்தால் கடும் ஒவ்வாமை ஏற்படுகிறது. நீடித்த ஒவ்வாமைகளும் ஊட்டசெல்லின் தொடர் செயலூக்கத்தோடு தொடர்புடையனவே. ஆனால், அமிலச்சாயசெல் மற்றும் T–உதவும்செல் 2 (Th2) நிணசெல் உருவாக்கும் சைட்டோகைன்கள் போன்ற நடுவிணக்கிகள் இதில் மேலாதிக்கம் பெற்றிருக்கும்.

இளவேனில் மற்றும் கோடை காலத்தில் பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் பாதிப்பு கடுமையாக இருக்கும். மரம், களை, புல் மகரந்தம் பரவலான ஒவ்வாமை ஊக்கிகள் ஆகும்.  ஆனால் நிலப்பகுதிக்கு ஏற்பக் குறிப்பான ஊக்கிகள் மாறுபடும். ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி நோயாளிகளுக்கு கடும் ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் அறிகுறிகள் தென்படும். இளவேனில் காலத்தில் காற்றில் பரவும் மர மகரந்தம் மேலாதிக்கம் பெற்றிருக்கும். கோடை காலத்தில் புல் மகரந்தமும், இலையுதிர் காலத்தில் களை மகரந்தமும் மேலாதிக்கம் பெற்ற காற்று வழி பரவும் ஒவ்வாமை ஊக்கிகள். குளிர் காலத்தில் நோயாளிகளுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. காரணம் இந்த ஒவ்வாமை ஊக்கிகள் காற்று வழி பரவுவது குறைந்திருக்கும். மாறாக நிரந்தர ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியில் அறிகுறிகள் ஆண்டு முழுவதும் காணப்படும். விலங்குப் பொருள், மனைப்புழுதி உண்ணிகள் மற்றும் காளான் போன்ற ஒவ்வாமை ஊக்கிகள் அதிகரிப்பதால் இலையுதிர்காலத்தில் அறிகுறிகள் அதிகமாகும். பருவகால வகையை விட நிரந்தர வகை அரிதாகவும் கடுமை குறைந்ததாகவும் இருக்கும்.

மகரந்தக் காலங்களில் கண்ணீர்ப்படல நிலைப்பின்மை மற்றும் கண் சிரமம் போன்ற அறிகுறிகளைப் பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி காட்டும்.

பிறழுடல்கூறு:

பருவகால மற்றும் நிரந்தர ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிகள் ஐஜிஇ-இடைநின்று இணக்குவிக்கும் மிகைஉணர்திறன் எதிர்வினைகள் ஆகும். இதற்குக் காரணம் காற்றில் பரவும் சூழல் ஒவ்வாமை ஊக்கிகள். இதில் ஊட்டசெல் மையப் பங்கை வகிக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஒவ்வாமை ஊக்கியால் பாதிக்கப்படும் போது ஓர் உணர்திறன் மிகுந்த நபருக்கு ஒரு எதிர்வினை நிகழ்கிறது. ஊட்டசெல்கள் தங்கள் குருணைநீக்கத்தைத் தூண்டுவதில் ஐஜிஇ-க்கு வலிமையான நாட்டம் கொண்டுள்ளது. இயல்பாக இருப்பவர்களோடு ஒப்பிடும் போது பருவகால ஒவ்வாமை கண்சவ்வழற்சி நோயாளிகளுக்கு கண்சவ்வு திசுவலையில் ஊட்டசெல்களின் எண்ணிக்கை 60% வரை அதிகரிக்கும்.

ஓர் உணர்திறன்மிகுந்த ஊட்டசெல்லோடு கட்டுண்ட அனைத்துக் குறிப்பான ஐஜிஇ எதிர்பொருட்களோடும் ஓர் ஒவ்வாமையூக்கி எதிர்வினை புரிகிறது. இதனால் ஐஜிஇ மூலக்கூறுகளின் குறுக்கிணைப்பு தூண்டப்படுகிறது. மேலும் ஊட்டச்செல்லுக்குள் கால்சியம் அயனிகள் உட்புகுகின்றன. இது ஊட்டசெல் குருணைநீக்கத்தை உருவாக்குகிறது. இவ்விதம் ஹிஸ்டமைன் போன்ற அழற்சி நடுவிணக்கிகள் வெளியிடப்படுகின்றன. இவைகள் ஒரு உணர்திறன் மிக்க நபரின் ஆரம்பக் கட்ட எதிர்வினைகளோடு தொடர்புடைய குறிகளையும் அறிகுறிகளையும் உருவாக்குகிறது.

ஊட்டசெல் செயலூக்கத்தில் இரு கூறுகள் உள்ளன. முதலாமவது, ஹிஸ்டமினை உள்ளடக்கிய முன்னுருவான நடுவிணக்கிகளை வெளியிடுவது. இரண்டாவது, அராக்கிடோனிக் அமிலத்தை உற்பத்தி செய்வதும் தொடர்ந்து நிகழும் அடுத்தடுத்த வளர்சிதைமாற்றங்களும் ஆகும். இதன் விளைவாக புரோஸ்டாகிளாண்டின்களும் லியூக்கோடிரையன்களும் உற்பத்திசெய்யப்படுகின்றன.

ஹிஸ்டமைன் 1 (H1) -ஏற்பிகளுடன் ஹிஸ்டமைன் கட்டுறுகிறது. இதன் விளைவாக முதன்மை ஒவ்வாமை அறிகுறிகளான அரிப்பு, எரிச்சல் மற்றும் கொட்டும் உணர்வும் நீரொழுகலும் ஏற்படுகின்றன. அதே வேளையில் ஹிஸ்டமைன் 2 (H2) ஏற்பியுடன் கட்டுறும்போது புரோஸ்டாகிளாண்டின்களும் லியூக்கோடிரையன்களும் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம் சளி உற்பத்தி தூண்டப்படுகிறது. குழல்  உட்புகுதிறன் அதிகரிக்கிறது. இந்த ஆரம்ப கட்டம் உடனடியாக நிகழ்வதோடு மருத்துவ ரீதியாக 20-30 நிமிடங்கள் நிலைக்கின்றன.

(http://www.chm.bris.ac.uk/motm/histamine/jm/receptors.htm).

 ஊட்டசெல் குருணைநீக்கம் மேலும் ஒரு வரிசை உட்செல் மற்று புறசெல் நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறது. இது பிந்தியகட்ட எதிர்வினைக்கு வழிகோலுகிறது (புரோஸ்டாகிளாண்டின்களும் லியூக்கோடிரையன்களும் உற்பத்திசெய்யப்படுகின்றன). ஊட்டசெல்கள் மேலும் சைட்டோகைன்கள் மற்றும் கீமோடேக்டிக் காரணிகளையும் வெளியிடுகின்றன. இவை B  நிணசெல்களில் (B  செல்கள்) இருந்து ஐஜிஇ உற்பத்தியாவதைத் தூண்டுகின்றன. T உதவும் நிணசெல் உற்பத்தியை அதிகரிக்கின்றன. ஈசினோபில்களைக் கவர்ந்திழுக்கின்றன. கீமோகைன்களையும் இணைப்பு மூலக்கூறுகளையும் வெளியிட குழல் உட்தோல் வெண்படல மற்றும் கண்சவ்வு செல்களை செயலூக்குகின்றன. கீமோகைன்களும் இணைப்பு மூலக்கூறுகளும் அமிலச்சாயசெல்கள், அடிசெல்கள், நியூட்ரோபில்கள் மற்றும் T உதவும் நிணசெல்கள் அழற்சி இடத்துக்குள் ஊடுறுவ இடைநின்று இணக்குவிக்கின்றன.

குருணைநீக்க அமிலச்சாயசெல்கள் நச்சுப் புரதங்களை வெளியிடுகின்றன. இவற்றிற்கு உயிரணுக்களை நச்சாக்கும் தன்மை உண்டு. இவை ஊட்டசெல் குருணைநீக்கத்தை அதிகரிக்கின்றன. இந்த அமிலச்சாயசெல் உற்பத்திப் பொருட்கள் வெண்படல மேற்திசுவுக்கு நஞ்சாகும். நீடித்து இருந்தால் புண் ஏற்படும். பிந்திய கட்ட பதில்வினையில் பல அழற்சி செல்கள் உட்புகும்.

 

 

பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியைக் கண்டறிதல் பொதுவாக மருத்துவ வரலாற்றையும் ஒரு கண்மருத்துவரால் செய்யப்படும் கவனமானப் பிளவு விளக்கு பரிசோதனையையும் அடிப்படையாகக் கொண்டது.

ஒரு மருத்துவ வரலாற்றில் கீழ்வருவது போன்ற தனிப்பட்ட அல்லது குடும்பத்தின் பிறவி நோய்களைப் பற்றிய முக்கிய அம்சங்கள் அடங்கி இருக்கும்.

 • ஒவ்வாமை நாசியழற்சி
 • மூச்சுப்பெருங்குழல் ஆஸ்துமா
 • பிறவி தோலழற்சி

பருவகால மற்றும் நிரந்தர ஒவ்வாமை அழற்சியின் குறிகளும் அறிகுறிகளும் ஒன்றுபோலவே இருந்தாக வேண்டும். இவை படிப்படியாக உருவாகின்றன. ஆனால் பாதிக்கும் ஓர் ஒவ்வாமை ஊக்கியோடு ஏற்படும் தொடர்பால் திடீரெனவும் தோன்றும். நோயாளிகளுக்கு மிகை உணர்திறன் கொண்ட குறிப்பான ஒவ்வாமை ஊக்கிகள் மற்றும் அவற்றின் நீடித்த பாதிப்பைப் பொறுத்தே வேறுபாடு அமைகிறது.

பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி, வெண்படலம் அல்லது கண்பரப்பு சிதைவு எதையும் செய்யாமல் சுய வரையறைக்குள் அமைகிறது. பொதுவாக இது ஒருபக்கமானது. எனினும் இருபக்க பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும். ஒவ்வாமையை உருவாக்கும் குறிப்பிட்ட ஓர் ஒவ்வாமை ஊக்கி ஒரு கண்ணுக்குள் மட்டும் நுழைந்தால் மாற்றங்கள் ஒருபக்கமானதாகவே இருக்கும். அறிகுறிகளும் குறிகளும் திரும்பத் திரும்ப வரும். பருவகால ஒவ்வாமையூக்கிகளின்  பாதிப்பு ஏற்பட்ட  உடன் விரைவாக நோய் உருவாகும்.

பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி நோயாளிகளுக்கு கடும் ஒவ்வாமை கண்சவ்வழற்சி அறிகுறிகள் ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கு காணப்படும். இக்கால அளவு பொதுவாக ஒரு குறுகிய காலமே. அதாவது மேலாதிக்கம் செலுத்துகின்ற காற்றுவழி பரவும் ஒவ்வாமையூக்கிகள் இருக்கும் வரை எனலாம். குறிப்பாக, பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி நோயாளிகளுக்குக் குளிர் கால மாதங்களில் அறிகுறிகள் இரா. ஏனெனில் காற்றுவழி பரவும் மகரந்தப் பொடி போன்ற சில ஒவ்வாமை ஊக்கிகளின் பரவல் அக்காலத்தில் குறைந்திருக்கும். ஒவ்வாமையூக்கியின் வகை, அதன் அடர்த்தி மற்றும் அதனால் பாதிப்புற்ற கால அளவைப் பொறுத்து அறிகுறிகளின் கடுமை வேறுபடும்.

உலர் கண், கண் பரப்போடு ஒவ்வாமை ஊக்கி கொள்ளும் தொடர்புக்கு உதவி செய்கிறது. ஏனெனில் ஒவ்வாமையூக்கியை அகற்றும் கண்ணீரின் ஆற்றல் இல்லாமல் போகிறது.

பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் குறிப்பிடத்தக்க அறிகுறி அரிப்பாகும். அரிப்போடு, எரிச்சலும், கண்னீரும் இருப்பதாக நோயாளிகள் கூறுவர். கசிவு ஊனீர் போன்றும், நீர் போன்றும் காணப்படும். இழைத்தன்மையின் இயல்போடு இருக்கும்.

ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி என்றால் அரிப்பு இருக்கும். இல்லையெனில் ஐயத்துக்குரியது. தீவிர அரிப்பு இருந்தால் பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி என்பது கண்டிப்பாக இருக்கலாம். ஆனால், உலர்கண், நச்சு கண்சவ்வழற்சி, தொடர்பு தோலழற்சி, இமையழற்சி மற்றும் பிற ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிக் கோளாறுகளையும் ஒருங்கு வைத்து எண்ண வேண்டும். இந்தப் பிற கோளாறுகளில் அரிப்பு குறைவாகவும் எப்போதாவதும் இருக்கும்.

பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் கண்சார் அறிகுறிகளோடு ஒவ்வாமை நாசியழற்சியின் அம்சங்களான தும்மல் மற்றும் மூக்கொழுக்கு போன்றவையும் காணப்படும்.

பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் குறிகள்:

பிளவு விளக்கு குறிகளாவன:

 • இமை வீக்கம்
 • சளிக் கசிவு
 • இலேசான காம்புசெல் எதிர்வினை
 • கண்சவ்வு மிகைப்பு
 • குமிழ் மற்றும் கீழ் இமைத்தகட்டுக் கண்சவ்வுப் பகுதியில் வீக்கம் தெளிவாகத் தெரியும். அதற்கு ஒரு பால் போன்ற அல்லது வெளிர் இளம்சிவப்பு தோற்றத்தை அளிக்கும்.
<>---------உலர்கண் நோய்: கண் பாதிப்பும் அரிப்பும் காணப்படும். ஆனால் விழிச்சவ்வு வீக்கம் இருக்காது; அரிப்பும் மிக இலேசாக இருக்கும். பாதிப்பும் விழிப்புள்ளி வெண்படல நோயும் இமையிடைப் பகுதியில் காணப்படுவது தனித்தன்மை ஆகும்.
 • பரவும் தோலழற்சி
 • நச்சு கண்சவ்வழற்சி
 • இமையழற்சி
 • ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிகளின் பிற வடிவங்கள்
 • மேல் படலச்சந்திப்பு வெண்படலக் கண்சவ்வழற்சி
 • நுண்ணுயிர் கண்படலவழற்சி.
 • வைரல் கண்சவ்வழற்சி: நோய்நீடிப்புக் காலம் மற்றும் முன்காதுசார் நிணக்கணுநோய் ஆகியவற்றின் வரலாற்றைக் கொண்டு ஆரம்பக்கட்ட வைரல் கண்சவ்வழற்சியை ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியில் இருந்து வேறுபடுத்திக் காணலாம்.
 • அறியா அயல் பொருள்: மேல் இமையின் கீழ் இருக்கும் ஓர் அறியா அயல் பொருள் கூட ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். ஓர் அயல்பொருளால் ஏற்பட்ட சிராய்ப்பு வெண்படலத்தில் நீள் சாயமேறலாகக் காணப்படும்.
 • அரிப்பே பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் முக்கிய அம்சம். ஆனால், இது பொதுவாக இலேசானதாகவும் அரிதாகவும் பிற கோளாறுகளில் இருக்கும்.

மருத்துவக் கண்காணிப்பின் கீழ் நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியை ஒரு நீடித்த அழற்சி செயல்முறையாக மாறாமல் தடுப்பதே சிகிச்சையின் ஒரு முக்கிய இலக்கு.

பொதுவான நடவடிக்கைகள்:

ஒவ்வாமையூக்கியின் பாதிப்பைக் குறைப்பது மேலாண்மையில் அடங்கும்.

 • வெளிப்புற செயல்பாடுகளைத் தவிர்க்கவும்: பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி ஒவ்வாமை ஊக்கிகளால் ஏற்படுவது. எனவே அவை குறைவாக இருக்கும் நேரங்களில் புறவேலைகளில் ஈடுபட வேண்டும் பின்மதியம் வரை அல்லது ஒரு கடும் மழைக்குப் பின் வரை வெளிப்புற வேலைகளைத் தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான மற்றும் உலர் தட்பவெப்பத்தில் பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி மோசமாகும். மழை மற்றும் குளிர் வெப்பநிலையில் குறையும்.  நோயாளிகள் வீட்டு சன்னல்களையும் கார் சன்னல்களையும் மூடி ஒவ்வாமை ஊக்கி பாதிப்பைக் குறைக்கலாம்.

மக்கள் அல்லது செல்லப்பிராணிகள் மூலமும் மகரந்தம் வீட்டுக்குள் வரலாம். வெளியில் இருந்து வரும் போது ஆடை மற்றும் முடியைக் கழுவ வேண்டும்.

 • கண்ணாடி அல்லது பாதுகாப்புக் கண்ணாடி அணிதல்: இவை ஒவ்வாமை ஊக்கிகளைத் தடுக்கும்.
 • காற்று சுத்தப்படுத்திகள்: அதிதிறன் துகள்தடுப்பிகள் அல்லது அதிதிறன் துகள்காற்று வடிகட்டிகள் கொண்ட காற்று சுத்தப்படுத்திகள் பலன்தருபவை மற்றும் பாதுகாப்பானவை (99% வரை தூசி உண்ணிகள், விலங்குத் தோல், தூசி, மகரந்தம், அல்லது கரப்பான் எச்சம் போன்ற ஒவ்வாமையூக்கிகளை அகற்றுகின்றன).

துணை நடவடிக்கைகள்:

துணை நடவடிக்கைகளில் அடங்குவன:

 • குளிர் ஒத்தடம்: கண் அழற்சியைக் குறைக்கும்.
 • உப்புக் கரைசல்:  உப்பு நீரால் கண்பரப்பைக் கழுவும்போது ஒவ்வாமையூக்கிகள் அகற்றப்படுகின்றன.
 • செயற்கைக் கண்ணீர்: பதப்படுத்திகள் அற்ற செயற்கைக் கண்ணீர் ஒவ்வாமை ஊக்கிகளையும் நடுவிணக்கிகளையும் கண்பரப்பில் இருந்து  அகற்றுகின்றன. சில வகை கண்ணுக்கு மசகு அளிக்கின்றன. இரவு நேரத்தில் களிம்புகளும் கண்பரப்புக்கு மசகு அளிக்கும். இவை இலேசான பருவகால ஒவ்வாமைக் கண்ணழற்சிக்கே பயன்படும். ஏனெனில் உள்ளடங்கிய ஒவ்வாமை பதில்வினைக்கு நிவாரணம் அளிப்பதில்லை. அழற்சி நடுவிணக்கிகளின் செயல்பாட்டையும் தடுக்காது. செயற்கைக் கண்ணீரை குளிரூட்டியில் வைக்க வேண்டும். ஏனெனில் குளிர்ந்த சொட்டுகள் குழலிறுக்கத்தை உருவாக்கி அறிகுறிகளையும் குறிகளையும் சீர்படுத்துகிறது.
 • கண்கசக்குதலைத் தவிர்த்தல்

மருத்துவ சிகிச்சை

நீடித்த ஒவ்வாமை கண் நோய்களில் நோயாளிகளின் இணக்கம் சரிவர இருப்பதில்லை. இதனால் மருத்துவ சிகிச்சை பலன் அற்றது என்ற கருத்து ஏற்படக் கூடும்.

மருத்துவ சிகிச்சையில் அடங்குவன:

 • மேல்மருந்தாக குழலிறுக்கிகள்: இவை குறுகிய கால நிவாரணம் அளிக்கலாம். விழிச்சவ்வு வீக்கம், இமைவீக்கம் மற்றும் கண்சிவப்பைக் குழலிறுக்கத்தைத் தூண்டி அடைசல் அகற்றல் குறைக்கிறது. கண்ணரிப்பையும் இந்த மேல்மருந்துகள் சீராக்கும். இவையும் ஒவ்வாமை எதிர்வினையை குறைப்பதில்லை. காரணம் எந்த ஒரு அழற்சி நடுவிணக்கிகளையும் இவைகள் எதிர்ப்பதில்லை. இருப்பினும் தொடர்ந்து இவைகளை பயன்படுத்துவதால் சிவப்பும் அழற்சியும் மறுபடியும் தோன்றலாம் (‘conjunctivitis medicamentosa’) (Spector S & Raizman M (1994): Conjunctivitis medicamentosa. J Allergy Clin Immunol 94: 134–136). மேலும் கடும் கண் ஒவ்வாமைக்குப் பலன் எதையும் தருவதில்லை. இந்தப் பக்கவிளைவுகளைத் தவிர்க்க மருந்தையும் கால அளவையும் குறுகியதாக அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டுகள் நேஃபாஸோலின், ஆக்சிமெட்டாஸோலின்.
 • எதிர்ஹிஸ்டமைன் மேல்மருந்து: இது கண்சவ்வில் இருக்கும் ஹிஸ்டமின் ஏற்பிகளைத் தடுத்து கடும் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. எதிர்ஹிஸ்டமைன் கடும் நோய் பாதிப்புக்கு பலன் அளிப்பதோடு நமைச்சலைக் குறைக்கிறது. இவற்றிற்கு மண்டலம் சார் வாய்வழி எதிர்ஹிஸ்டமின் போல பக்கவிளைவுகள் இல்லை. மண்டலம்சார் வாய்வழி எதிர்ஹிஸ்டமிகளை ஹிஸ்டமின் மேல்மருந்துகள் விரைவான நிவாரணம் அளிக்கின்றன. மேல்மருந்தான குழலிறுக்கிகள், ஊக்கமருந்தல்லாத எதிரழற்சி மருந்துகள், தூய ஊட்டசெல் நிலைப்படுத்திகள் மற்றும் கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகளை விட நீண்ட நாட்களுக்கு இவை வினைபுரிகின்றன. இது புரோஸ்டோகிளாண்டின்கள் மற்றும் லியூக்கோடிரையன்கள் போன்ற அழற்சி நடுவிணக்கிகளை பாதிப்பதில்லை. அவை தடையின்றி நிலைக்கும். எடுத்துக்காட்டுகள் பிரிலாமைன் மற்றும் ஃபெனிராமைன்.
 • குழலிறுக்கிகள் மற்றும் எதிர்ஹிஸ்டமின்கள் மேல்மருந்து சேர்க்கை: மேல்மருந்தாகக் குழல் இறுக்கிகள் (சைலோமெட்டாசோலின்) மற்றும் எதிர்ஹிஸ்டமின்கள் (ஆன்டாசோலின்) ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது குறுகிய கால நிவாரணம் கிடைக்கலாம். விழிசவ்வு வீக்கம், இமை வீக்கம் மற்றும் கண்சிவப்பு ஆகியவற்றை குழலிறுக்கத்தைத் தூண்டி அடைசல் நீக்கிகள் குறைக்கின்றன. கடும் நோய்தாக்கத்துக்கும் நமைச்சலுக்கும் எதிர்ஹிஸ்டமின்கள் பலனளிப்பன ஆகும்.
 • மண்டலம்சார் எதிர்ஹிஸ்டமின்கள்: மண்டலம்சார் எதிர்ஹிஸ்டமின்களும் ஒவ்வாமையின் அறிகுறிகளையும் குறிகளையும் அகற்றுகின்றன. கண்கள், தொண்டை மற்றும் மூக்கை ஒரேநேரத்தில் பாதிக்கும் ஒவ்வாமையின் கடும் அறிகுறிகளுக்கு வாய்வழி எதிர்ஹிஸ்டமின்கள் அளிக்க வேண்டி இருக்கும். இத்தகையவற்றில் சில, உதாரணமாக டைஃபீன்ஹைடிரோமைன் போன்றவை குறிப்பிடத்தக்க அளவில் தூக்கக்கிறக்கத்தை அளிப்பதால் இவை தூக்கத்தைத் தூண்ட உதவும்.
 • இரண்டாம் தலைமுறை H1 எதிர்ஹிஸ்டமைன் மேல்மருந்து: பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் குறிகளையும் அறிகுறிகளையும் கட்டுப்படுத்துவதில் தேர்வுசெய்யப்படும் H1 ஏற்பித் தடுப்பு மேல்மருந்துகள், குழலிறுக்கிகளைத் தனித்தோ அல்லது குறிப்பற்ற எதிர்ஹிஸ்டமைன் கண் சொட்டுகளுடன் சேர்த்தோ பயன்படுத்துவதைவிட சிறந்தது ஆகும். இந்த மருந்துகளின் தொகுப்பில் எமடேஸ்டின் மற்றும் லேவோகேபாஸ்டின் அடங்கும். அழற்சிக்கு சாதகமான சைட்டீகின்களின் மேல் பெனிராமைன் போன்ற முதல் தலைமுறை எதிர்ஹிஸ்டமின் மருந்துகளை விட புதிய தலைமுறை எதிர்ஹிஸ்டமைன்களின் அதிகரிக்கப்பட்ட மருத்துவத் திறன், அவற்றின் தடைப்படுத்தும் விளைவுகளாக இருக்கலாம். நடு நரம்பு மண்டல H1 ஏற்பிகள், கோலிநெர்ஜிக் ஏற்பிகள் மற்றும் முறைதவறிய இதயத் துடிப்பை உருவாக்கும் சில H2 ஏற்பிகள்  ஆகியவற்றிற்கு மாறாக,  இரண்டாம் தலைமுறை H1  எதிர்ஹிஸ்டமைன் மேல்மருந்துகள் விளிம்பு H1 ஏற்பிகளுக்கு அதிகத் தேர்திறன் கொண்டவைகளாக உள்ளன. இத் தேர்திறன், தூக்கக்கிறக்கம்/ மயக்கம், உலர்கண் மற்றும் உலர்வாய் போன்ற மருந்து எதிர்வினைகள் ஏற்படுவதைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கிறது.
 • ஊட்டசெல் நிலைப்படுத்தும் மேல்மருந்துகள்: ஊட்டசெல் நிலைப்படுத்தும் மேல்மருந்துகள் கண்சவ்வு ஊட்டசெல்களின் குருணைநீக்கத்தைக் குறைக்கின்றன. இதன் மூலம் ஹிஸ்டமின் வெளிப்பாடும் மற்றும் பிற கண்சவ்வுவீக்கக் காரணிகளும் தடுக்கப்படுகின்றன. இருப்பினும், இந்த மருந்து இருக்கும் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதில்லை. மற்றும் பருவகால ஒவ்வாமை கண்சவ்வழற்சியின் கடுமையான கட்டத்தின் சிகிச்சையில்  இவை எந்தப் பங்கும் வகிப்பதில்லை. ஊட்டசெல் நிலைப்படுத்திகளை முற்காப்பு அடிப்படையிலேயே பயன்படுத்த வேண்டும். இவை நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் (பொதுவாக 5-7 நாட்களுக்கு மேல் பயன்படுத்தினால்தான் சிகிச்சையின் பலன் கிட்டும்). அல்லது எதிர்ஹிஸ்டமின்கள் போன்ற பிற வகையான மருந்துகளோடு சேர்த்துப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுகள்: குரோமோலின் சோடியம், லோடோக்சாமைட், நேடோகுரோமில் மற்றும் பெமிரோலாஸ்ட்.
 • H1 ஏற்பி தடுப்பி மற்றும் ஊட்டசெல் நிலைப்படுத்தி (இருசெயல் மருந்துகள்): இருசெயல் மருந்துகள் பல்வேறு மருந்தியல் விளைவுகளை உருவாக்குகின்றன. ஹிஸ்டமின் ஏற்பி முரண்செயல், ஊட்டசெல்  குருணைநீக்க நிலைப்படுத்தல் மற்றும், தொடர்ந்து, அமிலச்சாய செல்களின் செயலாக்கம் மற்றும் ஊடுறுவலை அழுத்தல் போன்றவை இதில் அடங்கும். எடுத்துக்காட்டுகள், ஓலோப்டடின், அசெலாஸ்டின், எப்பிநேஸ்டின், மற்றும் கீட்டோடிபன். மருந்துகள் பிற பொறிநுட்பம் மூலம் எதிரழற்சி விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. எ-டு. சைட்டோக்கீன்கள் வெளியீட்டை ஓலோப்டடின் பாதிக்கின்றன.
 • ஊக்கமருந்தல்லாத எதிரழற்சி மருந்துகள் (NSAIDs): ஊக்கமருந்தல்லாத எதிரழற்சி மருந்துகள் புரோஸ்டகிளாண்டிகளின் உற்பத்தியைத் தடுக்கின்றன (இவ்வாறு அரிப்பைப் போக்குகின்றன). லியூக்கோடிரையீன்கள் போன்ற நடுவிணக்கிகளைத் தடுப்பதில் இவற்றிற்குப் பங்கில்லை. எடுத்துக்காட்டுகள்: கீட்டோரோலாக்டிரோமீத்தாமைன் மற்றும் டைக்ளோஃபெனாக்.
 • கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் மேல்மருந்துகள்: பருவகால ஒவ்வாமைக் கண்ணழற்சிக்குக் கோர்ட்டிக்கோஸ்டிராய்டு கண்சொட்டுகள் மிகவும் பலன் அளிப்பவையாகும்.  கண்ணழுத்தம் அதிகரித்தல், கண்புரை உருவாதல் போன்ற அதிக அளவிலான எதிர்விளவுகள் அவற்றை மிகவும் தேர்ந்து பயன்படுத்த வைக்கின்றன. கோர்ட்டிக்கோஸ்டிராய்டு பயன்படுத்தும் நோயாளிகளைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். கோர்ட்டிக்கோஸ்டிராய்டின் எதிரழற்சி மற்றும் நோய்த்தடுப்பாற்றல் அழுத்தும் விளைவுகள் பரந்துபட்டதும் குறிப்பாகக் கூறத்தக்கதும் அல்ல. சிகிச்சை பலனளிக்காதக் கடுமையான நேர்வுகளுக்குக் குறுகிய காலத்திற்கே இவைகளைப் பரிந்துரைக்க வேண்டும். இடைவிட்டு மருந்தளிக்கும் முறையைக் கையாளலாம். தொடர்ந்து ஓர் ஊட்டசெல் நிலைப்படுத்தியைக் கொண்டு பரமாரிக்கலாம். லோட்டெப்ரிட்னால் எட்டாபோனேட் மற்றும் ரிமெக்சோலோன் போன்ற மாறுருவாக்க ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தலாம். பாதுகாப்பு அம்சத்தில் லோட்டெப்ரிட்னால் சிறந்தது.
 • நோய்த்தடுப்பு மட்டுப்படுத்திகள்: சைக்ளோஸ்போரின் சொட்டுகள் மற்றும் டேக்ரோலிமஸ் களிம்பு போன்ற நோய்த்தடுப்பு மட்டுப்படுத்திகள் கண் ஒவ்வாமை சிகிச்சைக்குத் தங்கள் சிறப்பான செயல்பாட்டை நிரூபித்துள்ளன. சைக்ளோஸ்பிரின் A ஒரு நோய்த்தடுப்பு அழுத்தி ஆகும். கண்சவ்வில் வகை IV ஒவ்வாமை எதிர்வினையில் தலையிட்டு அமிலச்சாய செல் ஊடுறுவலைத் தடுக்கிறது. டேக்ரோலிமஸ் பொதுவாக T செல்களின் செயல்பாட்டைத் தடுக்கிறது. இவை இரண்டுக்குமே பக்க விளைவு குறைவு. ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் நீண்ட நாள் கோர்ர்ட்டிக்கோஸ்டிராய்ட் பயன்பாட்டை அகற்றப் பயன்படுகின்றன. மிகக் கடுமையான ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் போது (இளவேனில் மற்றும் பிறவி கண்சவ்வழற்சிகள்) நோய்த்தடுப்பு மட்டுப்படுத்தி மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியில் இதன் பயன் குறைவே.
 • குறிப்பிட்ட ஒவ்வாமையூக்கிக்கான நோய்த்தடுப்புசிகிச்சை: ஒவ்வாமையூக்கி நன்கு அறியப்பட்டிருந்தால் நோய்த்தடுப்பை தூண்ட இது பயன்படுத்தப்படுகிறது. தூண்டப்பட்ட அறிகுறிகளைக் குறைப்பதும் நாளடைவில் நோய் திரும்ப வராமல் தடுப்பதும் இதன் நோக்கங்கள். மருத்துவ ரீதியாகத் தொடர்புடைய ஒவ்வாமை ஊக்கிகளுக்கு குறிப்பிட்ட ஐஜிஇ எதிர்பொருள்கள் இருக்கும் நோயாளிகளுக்கு இது செய்யப்படும். இதற்காக தோல் சுரண்டல் மாதிரிகள் சோதனைச் செய்யப்படும். இதில் அடங்கும் நோயாளிகள்:
 1. மருந்தியல் சிகிச்சை அல்லது தவிர்ப்பு நடவடிக்கைகள் மூலம்கட்டுப்படுத்தப்பட்ட அறிகுறிகள் உடையவர்கள்.
 2. தங்கள் நோயைக் கட்டுப்படுத்த அதிக மருந்தளவு, பல மருந்துகள் அல்லது இரண்டும் தேவைப்படுவோர்.
 3. மருந்துகளினால் எதிர்விளைவு பெறுபவர்கள்.
 4. நீண்ட நாள் மருந்தியல் சிகிச்சையைத் தவிர்க்க விரும்புவோர்.

நோய்முன்கணிப்பு:

பருவகால ஒவ்வாமை கண்சவ்வழற்சியின் முன்கணிப்பு சிறப்பாக இருக்கும். ஆனால் குறிப்பிடத்தக்க சிரமமும் வெறுக்கத்தக்க அழகியல் தோற்றமும் காணப்படலாம். ஒவ்வாமை கண்சவ்வழற்சிகள் பொதுவாக அகலும். இருப்பினும், ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிகள் திரும்பவரும். இது அரிதாக சிக்கல்களையும் பார்வை இழப்பையும் ஏற்படுத்தலாம்.

 

 

காரணமான ஒவ்வாமையூக்கியைத் தவிர்ப்பதே தடுப்புக்கு முக்கியமானது. இதற்கு முதன்மையான நடத்தை மாற்றம் தேவைப்படும். குறிப்பான சோதனைகள் மூலம் காரணமான ஒவ்வாமையூக்கி கண்டறியப்பட்டு அதன் மூலம் ஒருவர் அதனைத் தவிர்க்க முடியும்.

மருந்துகள் மற்றும் ஒப்பனைப்பொருள்களின் தொடர்பால் ஏற்படும் எதிர்வினைகள அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் தடுக்கப்படும்.

ஒவ்வாமை யூக்கியின் பாதிப்பைக் குறைக்க:

 • வெளிவேலைகளைத் தவிர்த்தல்: பொதுவாகப் பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி ஒவ்வாமையூக்கிகளால் ஏற்படுகின்றன. பின்மதியம் அல்லது கனமழைக்குப் பின்னரே வெளிவேலைகளில் ஈடுபட வேண்டும். இந்த நேரத்தில் மகரந்த அளவு குறைவாக இருக்கும். பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி  வெதுவெதுப்பான உலர்ந்த தட்பவெப்ப நிலைகளில் மோசமாகும்; மழை அல்லது குளிர் வெப்பநிலைகளில் குறையும். மகரந்தப் பாதிப்பைக் குறைக்க வீடு மற்றும் வாகனக் கதவுகளை மூடி வைக்க வேண்டும்.

மக்கள் மற்றும் செல்லப்பிராணிகள் மூலம் மகரந்தம் வீட்டுக்குள் வரலாம். வெளியில் இருந்து வந்த பின் முடி மற்றும் உடைகளை அலச வேண்டும்.

 • கண்ணாடி அல்லது பாதுகாப்புக் கண்ணாடி அணிதல்: ஒவ்வாமை ஊக்கிகளை இவை தடை செய்யும்.
 • காற்று சுத்தப்படுத்திகளைப் பயன்படுத்துதல்: அதி திறன் துகள் தடுப்பிகள் அல்லது அதி திறன் துகள் காற்று வடிகட்டிகளைப் பயன்படுத்தும் காற்று சுத்தப்படுத்திகள் மிகவும் பலன் அளிப்பனவாகவும் பாதுகாப்பானவைகளாகவும் இருக்கும் [உண்னிக் கழிவுகள் மற்றும் அனைத்து ஒவ்வாமையூக்கிகளையும் (விலங்கு தோல், தூசி, மகரந்தம் அல்லது கரப்பான் எச்சம்) 99% வரை நீக்குகின்றன].

 

 

 

 

 

 

 

 

 • PUBLISHED DATE : Mar 26, 2019
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 26, 2019

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.