மேல் படலச்சந்திப்பு வெண்படலக் கண்சவ்வழற்சி (SLK)

மேல் படலச்சந்திப்பு வெண்படலக் கண்சவ்வழற்சி (Superior limbic  keratoconjunctivitis, SLK), பொதுவாக ஒரு அசாதரணமான நீடித்த நோய். மேல் படலச்சந்திப்பு/வெண்படலம் மற்றும் மேல் குமிழ் மற்றும் இமைத்தகடு சார் கண்சவ்வை இது பாதிக்கிறது. இது நடுத்தர வயதினரின் ஒரு அல்லது இரு கண்களையும் பாதிக்கும்.  ஏறத்தாழ பாதி நோயாளிகள்  அசாதாரண தையிராயிடு செயல்பாடு (மிகை) கொண்டவர்களாக உள்ளனர். தைராயிடு கண் நோய் உள்ளவர்களில் ஏறக்குறைய 3% பேர் SLK நோயால் பாதிப்படைந்தவர்களே. ஆண்களை விடப் பெண்களே பொதுவாக அதிகம் பாதிப்படைகின்றனர்.

மேல் படலச்சந்திப்பு வெண்படலக் கண்சவ்வழற்சி இமைக்கும் போது மேல் இமைக்கும் மேல் குமிழ் கண்சவ்வுக்கும் இடையில் ஏற்படும் உராய்வால் உண்டாகும் காயத்தால் உருவாகிறது. கண்ணீர்ப் படல குறைபாடும் கண்சவ்வுத்  திசுக்களின் தொய்வும் இதற்குக் காரணம். கண்சவ்வின் அசைவு அதிகரிக்கும் போது இமைத்தகடு மற்றும் குமிழ் கண்சவ்வுப் பரப்பில் இயந்திர ரீதியான சிதைவு ஏற்படுகிறது. இதனால் பதில்வினையாக அழற்சி ஏற்படும். கண்சவ்வு வீக்கமும் மிகை சவ்வும் உருவாகும். இதனால் சுய தொடர் சுழற்சி உருவாகிறது. இதனைக் கண்ச்வ்வு மிகை மடிப்போடு ஒப்பிடலாம். கீழ் குமிழ் கண்சவ்வை இது பாதிக்கிறது.

மேல் படலச்சந்திப்பு வெண்படலக் கண்சவ்வழற்சி எந்திர ரீதியாகத் தூண்டப்பட்ட அரும்புத்தசை வெண்படல அழற்சியோடு ஒப்பிடத்தக்கது. இவற்றிற்கு இடையில் இருக்கும் மருத்துவ ரீதியான ஒற்றுமைகள்:

 • விழிவில்லை அணிவோர்
 • மேல் இமைக் காயம்
 • மேல் இமை அறுவை

1954-1963 கால கட்டத்தில் பின்வரும் அறிக்கைகள் வெளிப்பட்டன: பிரேலி மற்றும் அலெக்சாந்தர் (Braley AE, Alexander RC. Superficial punctate keratitis. Arch Ophthalmol, 1953; 50(2):147-154), தைகெசன் மற்றும் கிமுரா (Thygesson P, Kimura SJ: Chronic conjunctivitis. Trans Am Acad Ophthalmol Otolaryngol 1963; 67: 494-517) இழை வெண்படல அழற்சியுடன் தொடர்புடைய ஒரு புதிய நோய் பற்றிய தகவலை அளித்தனர்.

மேல் படலச்சந்திப்பு வெண்படலக் கண்சவ்வழற்சி பிரடெரிக் தியோடரால் 1963-ஆம் ஆண்டு முழுமையாக விளக்கப்பட்டது (Theodore FH. Superior limbic keratoconjunctivitis. Eye Ear Nose Throat Mon 1963; 42: 25-28). அவர் கீழ்க்காணும் தொடர் குறிகளைக் கொண்ட நோயாளிகளில் காணப்படும் நோயைக் குறிப்பிட மேல் படலச்சந்திப்பு வெண்படலக் கண்சவ்வழற்சி என்ற பெயரைப் பயன்படுத்தினார்:

 • மேல் இமைத்தகடு கண்சவ்வழற்சி
 • மேல் குமிழ் கண்சவ்வழற்சி
 • மேல் வெண்படலம், படலச்சந்திப்பு மற்றும் அடுத்திருக்கும் கண்சவ்வில் நுண் புள்ளிச் சாயமேறல்
 • மேல் படலச்சந்திப்பில் அல்லது வெண்படலத்தின் மேல் கால் பகுதியில் இழைகள்

குறிகளை விட அறிகுறிகள் கடுமையாக இருப்பதால் SLK நோய் சரிவர கண்டறியப்படவில்லை எனலாம். சிகிச்சை நீடித்து நிகழ்ந்தாலும் திடீரென இந்நோய் குணமடைகிறது.

குறிப்புகள்:

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Alio JorgeL, Pandey Suresh K and Agarwal Amar.Textbook of Ophthalmology Volume 1.FirstEdition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2002. New Delhi. P. 869-871.

Holland Edward J, Mannis Mark J, Lee W Barry. Ocular Surface Disease - Cornea, Conjunctiva and Tear Film. Elsevier Saunders. 2013. P. 167-169.

Bowling Brad. Kanski's Clinical Ophthalmology - A Systematic Approach. Eighth Edition. Elsevier. 2016. P. 158-160.

Yanoff Myron, Sassani Joseph W. Ocular Pathology. Elsevier Saunders. Seventh Edition.2015. P. 238.

Copeland Jr Robert A, Afshari Natalie A. Copeland and Afshari’s Principles and Practice of CORNEA Vol.1. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2013. P. 509-514.

FosterC Stephen, Azar Dimitri T, Dohlman Claes H. Smolin and Thoft’s The CORNEA-Scientific Foundations & Clinical Practice. Lippincot Williams &Wilkins. Fourth Edition. 2005. P. 663-667.

http://emedicine.medscape.com/article/1194578-overview

http://eyewiki.aao.org/Superior_limbic_keratoconjunctivitis

Basak Samar K, Atlas of Clinical Ophthalmology, 2nd ed. Jaypee Brothers Medical Publishers (P) Ltd, 2013, New Delhi, P.74.

Nema HV, Nema Nitin. Textbook of Ophthalmology. Jaypee- Highlights Medical Publishers (P) Ltd. 2012. P.156.

Khurana A. K. Ophthalmology. New Age International (P) Limited. Third edition. 2003. P.133.

BenEzra David. Blepharitis and Conjunctivitis: Guidelines For Diagnosis And Treatment. Editorial Glosa. International Ocular Inflammation Society. 2006. P. 121-122.

Braley AE, Alexander RC. Superficial punctate keratitis. Arch Ophthalmol, 1953; 50(2):147-154.

Chun YS, Kim JC. Treatment of superior limbic keratoconjunctivitis with a large-diameter contact lens and botulium toxin A. Cornea 2009; 28: 752-758.

Thygesson P, Kimura SJ: Chronic conjunctivitis. Trans Am Acad Ophthalmol Otolaryngol 1963; 67: 494-517.

Theodore FH. Superior limbic keratoconjunctivitis. Eye Ear Nose Throat Mon 1963; 42: 25-28.

Wright P: Superior limbic keratoconjunctivitis. Trans Ophthalmol Soc UK 1972; 92: 555.

 

நடுவில் குறைவதையும் அதிகரிப்பதயும் ஒட்டி SLK –யின் நோயறிகுறிகளின் அம்சங்கள் வேறுபடும்.

 • எரிச்சல்
 • செம்மை
 • உறுத்தல் (மேல் நோக்கிப் பார்க்கும் போது அதிகரிக்கும்)
 • அயல் பொருள் உறுத்தல்
 • வலி
 • அரிப்பு
 • உலர் கண் உணர்வு
 • இலேசான ஒளிக்கூச்சம்
 • அடிக்கடி கண் சிமிட்டல்
 • இமைச்சுருக்கம்
 • சளி கசிவு (அரிதாக)
 • பார்வை குன்றல் (அரிதாக)

அறிகுறிகள் இடைவிட்டு காணப்படும்.

 

மென் தொடுவில்லை பயன்படுத்துவது SLK போன்ற அம்சங்கள் தோன்றுவதோடு தொடர்புடையதாக இருக்கலாம். தியோமெர்சால் போன்ற பதப்படுத்திகளோடும் இதனைத் தொடர்பு படுத்த முடியும். வில்லை அல்லது பதப்படுத்தி பயன்படுத்துவதை நிறுத்தினால் இது சரியாகிவிடும்.

SLK பற்றிய பல் கொள்கைகள் உள்ளன. ஆனாலும் இவை முற்றிலுமாக இந்நாள் வரை உறுதிப்படுத்தப்படவில்லை.

நோயியல் பற்றிய சில சாத்தியமான கொள்கைகள்:

இயந்திர ரீதியான காயம்:

இயந்திர ரீதியான காயமே மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை.

மேல் இமைத்தகடு மற்றும் குமிழ் கண்சவ்வின் அசாதாரணமான குறுக்கீடுகளால் இமைக்கும் போது தொடர்ந்து இயல்புக்கு மாறாக மேல் குமிழ் கண்சவ்வு நகர்கிறது. பிறவி அல்லது வயதின் காரணமாகக் குமிழ் கண்சவ்வு தளர்வடைகிறது. இமை மூடித் திறக்கும் போது இதில் உரசி தொடர்ந்து காயம் உருவாகிறது. கீழ்வருபவற்றால், இமைத்தகடு கண்கோளத்துக்கு அருகில் இறுக்கம் அடைவதால் இந்த அசாதாரண நிலை ஏற்படக் கூடும்:

 • தைராயிடு கண் நோய்: எ-டு. நாளமிலா சுரப்பி விழிக்கோளப் பிதுக்கம் (தைராயிடு விழிக்கோளப்பிதுக்கம் SLK–க்கு வழிகோலுகிறது என்று சிலர் கருதுகின்றனர் மேலும் இது இயந்திர ரீதியிலான நோய் எனவும் கருதுகின்றனர். ஏனெனில் நாளமிலா சுரப்பி விழிக்கோளப் பிதுக்கத்தைக் கட்டுப்படுத்தும் போது SLK மறைகிறது. தைராயிடு கோளாறினால் மேல் இமை மேல் குமிழ் கண்சவ்வுடனும் வெண்படலத்துடனும் இறுக்கமாக அமைகிறது.
 • மேல் இமைத்தகடு கண்சவ்வு வடுவுறல்
 • அழற்சி (மேல் இமை மற்றும் குமிழ் கண்சவ்வின் உராய்வு அதிகமாவதாலும் நீடித்த கண் அழற்சி நோய் SLK போன்ற தோற்றத்தை உருவாக்கலாம். நீடித்த அழற்சி கொண்ட இமை கண்சவ்வுப் பரப்பு பிசுபிசுப்பில் மாற்றத்தைக் கொண்டு வரும். இது குமிழ் கண்சவ்வு மேல்திசுவின் இயல்பான முதிர்ச்சியையும் பதிலீட்டையும் பாதிக்கும்),
 • கண் உலர்தல் (வெண்படலக்கண்சவ்வு உலர் நோயாளிகளுக்கு மேல் இமைக்கும் குமிழ் கண்சவ்வுக்கும் இடையில் உராய்வை அதிகப்படுத்தும்)

தைராயிடு செயலிழப்பு மற்றும் உலர் கண் நோய் SLK–யுடன் அதிக தொடர்புள்ளதாக இருப்பது இந்தக் கொள்கைக்கு வலுவூட்டுகிறது.

உருமாற்றும் வளர்ச்சிக் காரணி-பீட்டா 2 மற்றும் டெனாசின் ஆகியவற்றின் வெளிப்பாடு அதிகம் உள்ளது. இவை இரண்டும் இயந்திர ரீதியான அழுத்தத்தையும் காயத்தையும் சார்ந்தவை.

இயந்திர ரீதியான உராய்வு இயல்புக்கு மாறான சளி சுரப்பை ஊக்குவிக்கிறது. இதனால் இழைகள் உருவாகின்றன.

உயிர்வேதியல் கோளாறுகள்:

SLK-நோயாளிகளில் சில சைடோகெராட்டின்களின் வெளிப்பாட்டில் மாற்றம் காணப்படுகிறது. CK13  என்னும் குறிப்பானின் (கெரோட்டின் மயமாகா வரிவரியான செதிளடர் மேற்திசு குறிப்பான்) வெளிப்பாட்டில் குறைவும், CK10  என்னும் குறிப்பானின் (கெரோட்டின் மயமாக்கத்தின் குறிப்பான்) அதிகரிப்பும் நோய்க்கடுமையோடு தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. கண்சவ்வு மேற்திசு வேறுபடுத்தலில் ஏற்படும் ஒரு கோளாறு இந்நோயில் ஒரு பங்கு வகிக்கிறது என்பதை இது குறிக்கிறது.

வைரல் நோயியல்

சிலர் இந்நோய்க்கு வைரசு காரணமாக இருக்கலாம் என எண்ணுகின்றனர். ஆனால் திசுவாய்வியல் அனைத்தும் எதிர்மறை முடிவையே அளிக்கின்றன.

நுண்ணுயிரி நோயியல்

சில ஆய்வுகளின் போது திசுவாய்வியல் நுண்ணுயிரிகளுக்கு நேர்மறை முடிவை அளித்தன. ஆனால் பெரும்பாலும் அவை கண்ணில் தொற்றை உருவாக்கும் சூழல்நுண்ணுயிரிகளே.

தன்தடுப்பு நோயியல்

தன் தடுப்பு நோயியலும் காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் பின்வருபவற்றால் இதுவும் சந்தேகத்துக்குரியதே.

 • இம்யுனோகுளோபுலின் படிவு இன்மை
 • ஈசினோபிலிஸ் அதிகரிக்காமை
 • ஊக்க மேல்மருந்துகளுக்கு வேறுபட்ட பதில்வினை

SLK -யுடன் உயர் தைராயிடு சுரப்பும் இணைத்துக் கூறப்பட்டது.

குடும்ப வரலாறும் காரணமாக கூறப்பட்டதுண்டு.

 

 

தொடுவில்லை அணிந்த வரலாறு, முன்னர் நடைபெற்ற இமை அறுவை அல்லது காயம் பற்றிய தகவல்கள் நோயாளியிடம் இருந்து பெறப்படுகின்றன.

சிகிச்சை பெறாத நோயாளிகளிலும், இந்நோயின் இயற்கைப் போக்கு என்பது இடைவிட்டு வருவதும் பல ஆண்டுகளாக மேம்பட்டு வந்து இறுதியாக குணமாவதாகவும் உள்ளது. பலருக்கு இது இருகண் பாதிப்பாக இருந்தாலும் சிலருக்கு சீரற்றதாகவும் ஒருகண் பாதிப்பாகவும் காணப்படுகிறது. பெண்களில் இந்நோய் ஆண்களை விட இருமடங்கு கூடுதலாக உள்ளது. வாழ்க்கையின் நான்காவது அல்லது ஐந்தாவது பத்தாண்டுகளில் தோன்றுவது இதன் தனித்தன்மை ஆகும்.

SLK நோயாளிகளுக்குக் குறிப்பற்ற கண் பிரச்சினைகள் ஏற்படும். நோயளிக்கு இழைகள் காணப்பட்டால் அறிகுறிகள் அதிகக் கடுமையாக இருக்கும். காலையில் உறுத்தல் குறைவாகவும் பின்னர் கூடுதலாகவும் இருக்கும். அறிகுறிகள் குறிப்பற்றும், இடைவிட்டும் இருப்பதால் பெரும்பாலும் உலர்கண் அல்லது இமையழற்சி போன்ற கண்பரப்பு நோய்களோடு வைத்து இது பிறழ எண்ணப்படும்.  மேல் கண்சவ்வு பெரும்பாலும் சோதிக்கப்படுவதில்லை என்பதாலும் அல்லது மருத்துவ ரீதியான கண்டுபிடிப்புகள் இல்லாமையாலும் SLK  நோய் குறிப்பாகக் கண்டறியப்படுவதில்லை அல்லது பல ஆண்டுகளுக்குப் பின்னரே கண்டறியப்படும்.

பிரதானமாக மருத்துவ ரீதியான கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டே  நோய் கண்டறியப்பட முடியும் என்பதால் SLK நோய் கண்டறிதல் நோயாளி வரலாறு மற்றும் உடலியல் ஆய்வுக்குப் பின்னரே நிகழ்த்தப்படுகிறது.

மருத்துவ ஆய்வு:

ஒரு கண் மருத்துவ நிபுணரால் பிளவு விளக்கு சோதனை செய்யப்படும்.

கண்சவ்வு/படலச்சந்திப்பு:

SLK  நோயாளியின் இரு மேல் இமைகளையும் உயர்த்தி மேல் கண்சவ்வை ஒரே நேரத்தில் ஆய்வதே சிறந்தது.

 • கண்சவ்வுக் குருதித்தேங்கல்: கண்சவ்வுக் குருதித்தேங்கலை வெறுங்கண் கொண்டே சோதனை செய்ய முடியும். வரன்முறையாக SLK–யில் மேல் குமிழ் கண்சவ்வுக் குருதித் தேங்கல் காணப்படுகிறது. மேல் குமிழ் மற்றும் படலச்சந்திப்பு கண்சவ்வு ஆர வரிகள் வடிவிலான  பகுதி பகுதியான குருதித் தேங்கலைக் காட்டுகின்றன. ரோஸ் பெங்கால் அல்லது லிசமைன் பச்சை போன்ற முக்கிய சாயங்களே அசாதாரண கண்சவ்வை சிறந்த முறையில் புலப்படுத்தும். கண்சவ்வு குருதித்தேங்கல் துல்லியமாக இருக்கும் போது இச்சாயங்கள் குறிப்பாகப் பயன்படும். முக்கிய சாயங்களை மேல் குமிழ் கண்சவ்வில் ஏற்றுவதால்  SLK-யை கண்டறிய முடியும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
 • படலச்சந்திப்பு நுண்காம்பு செல்வீக்கம்  காணப்படலாம்.
 • மேல் படலச்சந்திப்பு வேலி இழப்பு: பொதுவாகக் காணப்படும் படலச்சந்திப்பு வோக்ட் வேலி மேற்பகுதியில் காணப்படாமல் இருக்கும்.
 • மேல் குமிழ் கண்சவ்வு மிகைப்பு: மேல் இமையை மென்மையாகக் கீழ்நோக்கி அழுத்தும்போது கண்சவ்வின் ஒரு மிகை மடிப்பு மேல் படலச்சந்திப்பைக் கடக்கும்.

குமிழ் கண்சவ்வின் தடிப்பும் வீக்கமும் மேல் படலச்சந்திப்பில் இருந்து மேல் நேர்த்தசைச் செருகலை நோக்கிச் செல்லும்.

 • மேல் கண்சவ்வு இழைகள்
 • மேல் இமைத்தகட்டு கண்சவ்வில் நுண்காம்புக்கட்டி விளைவு: மேல் இமைத்தகடு கண்சவ்வில் காம்புக்கட்டிகள் நுண்மையானதாகவும், சிறியதாகவும் எண்ணிக்கையில் அடங்காதனவாகவும் இருக்கும். பொதுவாக ஒரு பரந்த வெல்வெட் போன்ற தோற்றத்தை அளிக்கும்.
 • புள்ளிவடிவ குருதிக்கசிவு காணப்படும்.
 • கெராட்டினாக்கம்: கண்சவ்வு திசுவளர்ச்சி ஆய்வு அல்லது அழுத்த உயிரணுவியல் மூலம் விளக்கலாம்.

உள் இமைத்தகட்டு கண்சவ்வு பொதுவாக இயல்பாகக் காணப்படும்.

வெண்படலம்:

 • புள்ளி மேற்திசு வெண்படல அழற்சி: நான்கில் ஒரு நேர்வில் இருந்து மூன்றில் ஒரு நேர்வு வரையில் மேல் வெண்படலம் பாதிக்கப்படுகிறது. ஒளிர் சோடியம் அல்லது ரோஸ் பெங்கால் சாயமேற்றலில் நுண் வெண்படல சாயமேறல் புள்ளி மேற்திசு வெண்படல அழற்சியைக் காட்டுகிறது. புள்ளி மேற்திசு வெண்படல அழற்சி படலச் சந்திப்பில் இருந்து ஓர் இயல்பான மேற்திசு மண்டலத்தால் வேறுபடுத்தப்படுகிறது.
 • நுண்நார்க்குழல்திசு: நீடித்த நேர்வுகளில் நுண்நார்க்குழல்திசுக்கள் காணப்படும் (மேலோட்டமான நார்க்குழல் ஊடுறுவல்-இயல்பான குழல் வளர்ச்சியைத் தாண்டிய 1-2 மி.மீ நீட்சி).
 • மேல் வெண்படல இழைகள்: மேல் வெண்படலத்தில் இழைகள் காணப்படுவது SLK கண்டறிதலுக்கான எச்சரிக்கைக் குறி ஆகும்.
 • வெண்படல திசுவீக்கம், சில சமயங்களில் காணப்படும்.
 • உலர்கண் நோய்: அரைப் பங்கு நேர்வுகளில் காணப்படும்.

போலி இமைத் தொய்வு

 • அழற்சிப் போலி இமைத் தொய்வு: வளர்ச்சி உற்ற நேர்வுகளில் காணப்படக் கூடும்.

நோய்கண்டறிதலில் முக்கியமானவை:

பின்வரும் முறையில் மேல் குமிழ் கண்சவ்வு சோதிக்கப்படுதல் முக்கியமானது:

 • மேல் இமை உயர்த்தல்: மேல் இமையை உயர்த்தி மேல் குமிழ் கண்சவ்வு சோதிக்கப்படுகிறது. கண் சோதனையில் இமை உயர்த்தல் அறிவு நுட்பமானதாகும். இல்லாவிடில் SLK கண்டறியப்பட மாட்டாது.
 • மேல் குமிழ் கண்சவ்வு குருதித் தேக்கம் மதிப்பிடல்:  மேல் குமிழ் கண்சவ்வு குருதித் தேக்கம் இது நுட்பமானது. மிகைப்பெருக்கம் கொண்ட உயிர் நுண்காட்டி மூலம் ஆய்ந்தாலே இதைக் கண்டறிய முடியும்.

திசுவாய்வியல்:

மேல் குமிழ் கண்சவ்வை திசுவாய்வியல் செய்யும் போது கெரோட்டின்மய மேற்திசுவையும் செல் ஊடுறுவலையும் காண முடியும் (பன்வடிவஉட்கரு வெள்ளணுக்கள், நிணசெல்கள் மற்றும் ஊனீர்செல்கள்). இவற்றுடன் தோல்தடிப்பு, உட்செல்கெரோட்டினாக்கம், சில உட்கருக்களில் செல்லிறந்து ஊதுதல் ஆகியவையும் நிகழக் கூடும். கியம்சாவால் சாயமேற்றப்பட்ட மேல் குமிழ் கண்சவ்வு துருவல்களை சோதிக்கும் போது இந்த அம்சங்களைக் கண்டறியலாம்.

உட்கரு நிறமியின் அசாதாரண விநியோகம் மற்றும் சேர்க்கை, உட்கருவில் இழைகள், உட்கருவைச் சுற்றி இருக்கும் செல் இழைகளின் அடர் திரட்சி, பன் மடல் உட்கரு அல்லது பன் உடகரு அழற்சி செல்கள் ஆகியவற்றை மின் நுண் காட்டியியல் காட்டுகிறது.

இமைசார் கண்சவ்வு இயல்பாக இருக்கும். ஆனால் பன்வடிவ உட்கரு செல்கள் அடிக்கடி காணப்படும்.

SLK-யில் குடுவை செல் அதிகம் காணப்படுவதை ரைட் வலியுறுத்தினார் (Wright P: Superior limbic keratoconjunctivitis. Trans Ophthalmol Soc UK 92: 555, 1972). மேல் இமைசார் கண்சவ்வு குடுவை செல் வீக்கம் காண்ப்படும் அதே வேளையில், தடிப்பும் கெராட்டினாக்கமும் கொண்ட  குமிழ் கண்சவ்வில் ஒரு சில குடுவை செல்களே காணப்படுகின்றன.

கண்டறிதல் முறைமை:

 • மேல் குமிழ் கண்சவ்வு மிகைப்பிற்கான சோதனை: பகுதி மரப்பின் கீழ் ஒரு பஞ்சுமுனை இடுக்கியைப் பயன்படுத்தி கண்சவ்வை மேல் வெண்படலத்தின் மேலாக இழுத்து மேல் குமிழ் கண்சவ்வின் மிகைப்பை விளக்கிக் காட்டலாம். இயல்பான கண்சவ்வில் இதைச் செய்ய இயலாது.
 • செல்லியல் பதிவு: மேல் குமிழ் கண்சவ்வின் பதிவு, கடுமையான செதிளடர் திசு இயல்பு மாற்றத்தையும் குடுவை செல் இன்மையையும் காட்டுகிறது. மேல் இமைத்தகடு கண்சவ்வு அழற்சியுடன் கூடிய  இலேசான செதிளடர் திசுஇயல்பு மாற்றத்தைக் காட்டுகிறது. கீழ் இமைத்தகடு கண்சவ்வு இயல்பாக இருக்கிறது. செல்லியல் பதிவு நோய்கண்டறிதலில் உதவினாலும் இது அரிதாகவே தேவைப்படும்.
 • பொதுக்குவிய நுண்காட்டியியல்: மருத்துவ ரீதியாக SLK  எனும் சந்தேகம் ஏற்பட்டால் கூடுதல் கருவியாகப் பொதுக்குவிய நுண்காட்டி பயன்படுத்தப்படும். ஆராயப்படும் இரு வேறிகள் வருமாறு: மேற்திசு செல் பரப்பு (MIECA) மற்றும் உட்கருசெல் (N/C) விகிதம். நோயாளிகளில் நோயற்றவர்களை விட MIECA அதிகம் இருக்கும். அழற்சி செல் அடர்த்தியும் SLK –வில் அதிகம் இருக்கும்.

பின்வரும் கோளாறுகளில் இருந்து வேறுபடுத்தி நோக்குதல்:

 • விழிவில்லை பயன்படுத்துவோர்: விழிவில்லைப் பதப்படுத்தி தியோமெர்சால் விழிவில்லையால் தூண்டப்படும் SLK போன்ற நோய்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. SLK யை ஒப்பிட்டு நோக்கும் போது விழிவில்லை பயன்படுத்துவோரில் ஒரு சில சதவிகிதம் பேருக்கே கெராட்டினாக்கமும் இழைகளும் காணப்படுகின்றன. மற்றும் பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகளுக்குப் பார்வைக் குறைவும் அதிக சிதறிய அழற்சியும் குமிழ் கண்சவ்வில் காணப்படுகிறது. புள்ளி மேற்திசு வெண்படல அழற்சியும் SLK-யில் இருப்பதை விட அதிகம். தொடுவில்லை பயன்பாட்டை நிறுத்தியவுடன் அதனால ஏற்படும் மாற்றங்கள் மறிந்துவிடுகின்றன. நீடித்த நோய்ப் போக்கும், குறைதல் மீண்டும் வருதல் ஆகியவையும் SLK –வில் காணப்படும்.
 • ஒவ்வாமை கண்சவ்வழற்சி
 • கண் உலர்தல் நோய்
 • வெண்படலக் கண்சவ்வழற்சித் தொற்று
 • கண் நோய்
 • தைராயிடு கண்நோய்
 • விழி வெளிப்படல மேலுறை
 • தட்டிமை நோய்த்தாக்கம்
 • வைரல் கண்சவ்வழற்சி

 

 

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

மருத்துவ சிகிச்சை:

முதலில் மேல்மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

 • செயற்கைக் கண்ணீர்: செயற்கைக் கண்ணீரைக் கொண்டு (பதப்படுத்திகள் அற்றவை என்றால் நலம்) பெரும் அளவு மசகு அளிக்க வேண்டும். இதைத் தனியாகவோ அல்லது கண்ணீர் நாளத் திறப்பை அடைத்துவிட்டோ செய்யலாம். இதனால் இமைத்தகட்டு மற்றும் குமிழ் வெண்சவ்வுக்கு இடையிலான உராய்வு குறைகிறது.
 • அசெட்டைல்சிஸ்டின்: இது இழைகளை முறித்து கண்பரப்புக்கு மசகு அளிக்கிறது.
 • ரெபாமிப்பைட்: சளி உருவாக்கும் மற்றும் சுரப்புத் தூண்டியான இச்சொட்டு மருந்து நல்ல விளைவுகளை அளிக்கிறது.
 • தன்னூனீர்க் கண்ணீர்: செயற்கைக் கண்ணீரை விட இது அதிகப் பலன் அளிக்கும். அகப்புற மேம்பாடு கிடைக்கும். ஆனால் ஒரு நாளில் அடிக்கடி இவற்றை பயன்படுத்த வேண்டும்.
 • கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் மேல் மருந்து: இவை சில நேர்வுகளில் மண்டலம் சார் மேம்பாட்டை அளிக்கக் கூடும். ஆனால் மொத்த விளைவு வேறுபடலாம். இவற்றைக் குறுகிய கால அளவுக்குப் பயன்படுத்தி அளவைக் குறைத்துக்கொண்டு வர வேண்டும். கடுமையான நேர்வுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 • சைக்ளோஸ்போரின் ஏ மேல்மருந்து: இது ஒரு நோய்த்தடுப்புப் பண்படுத்தி. அறிகுறிகளைத் தீர்ப்பதில் சிறந்தது. இதை முதன்மை மற்றும் கூடுதல் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம். குறிப்பாகக் கண் உலர் நோயும் சேர்ந்து இருந்தால் இது பலன்தரும். இருப்பினும் தொடர் பலனுக்கு சிகிச்சையைப் பேணி வரவேண்டும்.
 • ரெட்டினாயிக் அமிலம்: கெராட்டினாக்கத்தைத் தடுக்கிறது.
 • ஊட்டசெல் நிலைப்படுத்தும் மேல்மருந்துகள்: வகை 1 உடனிகழ் அதியுணர் எதிர்வினைகளைத் தடுக்கின்றன. மேலும் நீண்ட கால அழற்சித் தடுப்புக்கும் பயன்படுத்தப்படுகின்றன (எ-டு. அயோடாக்சமைடு டிரோமீத்தாமைன் மற்றும் சோடியம் குரோமோகிளைகேட்)
 • கீட்டோடிபன் பியூமரேட் மேல்மருந்து: இது ஓர் ஊட்டசெல் நிலைப்படுத்தி.  மேலும் இது ஒரு தேர் எச்-1 தடுப்பு எதிர்ஹிஸ்ட்டமைன் ஆகும் (இருசெயல் மருந்து). எந்த ஓர் அழற்சிக் கூறையும் எதிர்கொள்ளும். அறிகுறிகளைக் குறைக்க உதவும். ஆனால் புற அறிகுறிகள் மேம்படுவதில்லை.
 • உயிர்ச்சத்து ஏ மேல்மருந்து: அறிகுறிகளைக் குறைக்க இது உதவும்.
 • மேலிமைத்தகடு டிரைஆம்சினோலோன் ஊசி: மேல் மருந்துகள் பலன் அளிக்காதபோது மருந்துகளை ஊசி மூலம் செலுத்தி அழற்சி சுழல் முறிக்கப்படுகிறது. இம்முறையின் மூலம் அறிகுறிகள் குறைவதுடன் வெண்படல/கண்சவ்வுக் கறையும் குறைகிறது.
 • பெரும்விட்ட தொடுவில்லைகள்: மேல் குமிழ் கண்சவ்வின் காயத்தைக் குறைத்து அறிகுறிகளை மேம்படுத்த பெரும்விட்ட தொடுவில்லைகள் சுன் மற்றும் கிம்மால் பயன்படுத்தப்பட்டன. மேலும் முன்னிமைத்தகட்டு  விழிக்குழி சுற்றுத் தசையில் போட்டுலினம் டாக்சின் ஏ ஊசி இடும்போது மேலும் மேம்பாடு ஏற்படுகிறது. (Chun YS, Kim JC. Treatment of superior limbic keratoconjunctivitis with a large-diameter contact lens and botulium toxin A. Cornea 2009; 28: 752-758).

அறுவை சிகிச்சை:

மேல் குமிழ் கண்சவ்வு மிகைப்பே SLK-யின் முக்கிய அடையாளம். இதை இறுக்க பல முறைகள் கைகொள்ளப்பட்டு வருகின்றன.

மேல் குமிழ் கண்சவ்வு மிகைப்பை இறுக்கும் முறைகள்:

 • வெள்ளி நைட்ரேட்: முதன் முதலில் வெள்ளி நைட்ரேட்டால் செய்யப்பட்ட முயற்சிகள் பலன் அளித்தன. குறிப்பாகத் திட இடுக்கியைப் பயன்படுத்தும் போது கடும் கண் தீப்புண்கள் ஏற்படக்கூடும். இதன் மூலம் அறிகுறிகள் 4-6 வாரங்கள் அகலும். தங்கி நிற்கும் வெள்ளி நைட்ரேட் ஒரு நிமிடத்தில் தண்ணீரால் கழுவி அகற்றப்படும். நோய் திரும்ப வந்தால் இச் சிகிச்சை மீண்டும் செய்யப்படும்.
 • குளிர்சிகிச்சை: ஒரு தடவையோ அல்லது பன் முறையோ திரவ நைட்ரசன் குளிர்சிகிச்சை அளிப்பது பாதுகாப்பான பலன் அளிக்கும் முறையாகும். மேல் மயக்க மருந்தின் கீழ் இரட்டை உறைந்துருகும் உத்தி இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
 • வெப்பத்தீய்ப்பு: இம்முறையால் குடுவை செல் அடர்த்தி மிகுந்து அறிகுறிகள் மறைகின்றன.
 • கண்சவ்வு நிலைப்படுத்தும் தையல்: மேல் முகட்டில் தையல் இடும்போது அறிகுறிகள் முற்றிலும் மறைகின்றன.

மேல் குமிழ் கண்சவ்வு நீக்கல்: மருத்துவ சிகிச்சையோ கண்சவ்வு இறுக்கலோ பயன்படாத போது இம்முறை பயன்படுத்தப்படும். இது வெற்றிகரமான சிகிச்சை ஆகும். உடனடி மற்றும் நிரந்தரப் பலனை அளிக்கும். இதுவே முதல் அறுவை சிகிச்சை மற்றும் பெரும்பாலும் தேர்வு செய்யப்படுவதும் ஆகும்.  இதன் மூலம் அறிகுறிகள் குறைகின்றன. கண்சவ்வின் செதிளடர் வீக்கமும் குறைகிறது. அரிதாக மீண்டும் மிகைப்பு ஏற்படலாம். அது அறுவை அல்லது வெள்ளி நைட்ரேட் சிகிச்சை மூலம் நேர்செய்யப்படும்

தற்காலிக மேல் மற்றும் /அல்லது கீழ் கண்ணீர்நாளத் திறப்பு அடைப்பு: கண்ணீர் குறைபாட்டைக் களைவதோடு செயற்கை கண்ணீரும் இதனுடன் இணைத்துப் போடலாம்.

இணைந்து காணப்படும் தைராயிடு செயலிழப்பைக் சீர்செய்வதன் மூலம் SLK நோய் மேம்படும்.

நோய்முன்கணிப்பு:

பொதுவாக இந்நோய் முன்கணிப்பு சிறப்பாக உள்ளது. அறிகுறிகள் பல ஆண்டுகள் நீடித்தாலும் வயது ஆக ஆக நோய் வீச்சு குறைந்து முடிவில் முற்றிலுமாகக் குணமாகிறது.

 

 • PUBLISHED DATE : Mar 05, 2019
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 05, 2019

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.