நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி

மகரந்தம், விலங்குப்பொருட்கள் (செத்தத் தோல் செல்கள், முடி. இறகு), மற்றும் பிற சுற்றுப்புற ஒவ்வாமை ஊக்கிகளால் கண்சவ்வில் உண்டாகும் அழற்சி நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி எனப்படும். இடைவிட்ட (4 வார அளவுக்கும் குறைந்தது) பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி (SAC)  மற்றும் நிலைத்த (4 வார காலத்துக்கும் மேலாக) ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி (PAC) ஆகியவை பல கண் ஒவ்வாமை நேர்வுகளை உண்டாக்குகின்றன.

PAC பருவகால ஒவ்வாமை ஊக்கிகளால் மட்டுமே ஏற்படுவதல்ல; ஆனால் அவை ஒரு பங்கை ஆற்றுகின்றன. ஆண்டு முழுவதும் காணப்படும் சுற்றுச்சூழல் ஒவ்வாமை ஊக்கிகளால் (தூசிப் பேன், விலங்குப் பொருள், பூஞ்சைகாளான், கரப்பான் எச்சம், காற்றில் உள்ள ஒவ்வாமையூக்கிகள், சிகரெட் புகை) ஏற்பட்டுப் பொதுவாக நீடித்து நிலைக்கும். 79% PAC நோயாளிகளுக்கு பருவ கால நோய் மிகைப்பு காணப்படும். வீட்டுத் தூசிப் பேன், விலங்குப் பொருட்கள், காளான் போன்ற ஒவ்வாமை ஊக்கிகள் மிகுந்து காணாப்படும் இலையுதிர் காலத்தில் நோய் அதிகரிக்கும். நிலைத்து நிற்கும் நோய், பருவகால வடிவத்தை விட அரிதாகவும் இலேசாகவும் இருக்கும். பருவ கால ஒவ்வாமை ஊக்கிகள் (உ-ம்.மகரந்தம்) அதிகமாக இருக்கும் வசந்தம் மற்றும் இலையுதிகாலத்தில் பெரும்பாலான PAC நேர்வுகள் நிகழ்கின்றன. பெரும்பாலான PAC மற்றும் SAC, இருபால் இளைஞர்களையும் நடுத்தர வயதினரையும் பாதிக்கிறது.

PAC யும் SAC யும் கண் ஒவ்வாமையின் இடைப்பட்ட வடிவங்கள் ஆகும். பொதுவாக இதனுடன் பருவகால ஒவ்வாமை நாசியழற்சியும் இணைந்து வரும். PAC யும் SAC யும் பொதுவாகக் கடுமையற்றவை. இருப்பினும், அரிதாகப் பார்வைப் பாதிப்பை ஏற்படுத்தலாம். குறிப்பிடத்தக்க அளவில் நோய்க்கூறுகளுடன் வாழ்க்கைத் தரத்தில் பெரும் பாதிப்புகளை உண்டாக்கலாம்.

மரபுவழி ஒவ்வாமை என்பது குறிப்பிட்ட சுற்றுச்சூழல் ஒவ்வாமை ஊக்கிகள்/விளைவியங்களுக்கு உட்படும்போது ஏற்படும் மரபுவழியாக முன்தீர்மானிக்கப்பட்ட மிகைஉணர் எதிர்வினைகள் ஆகும். ஒவ்வாமை கண்சவ்வழற்சியோடு பருவகால ஒவ்வாமை நாசியழற்சி (தூசிக் காய்ச்சல்), ஆஸ்துமா மற்றும் சொறியும் இதில் அடங்கும். நோயெதிர்ப்புப் புரதம் E -யின் (IgE) வினைக்குப் பதில்வினையாக ஊட்டசெல்கள் (MCs) குருணைநிலை இழந்து நடுநின்று இணக்குவிப்பதால் உண்டாகும் வகை 1 (உடனடி) மிகைஉணர்வு எதிர்வினையே ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி.

பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி (SAC), ஒவ்வாமை வெண்படல அழற்சி (AKC), இளவேனில் வெண்படல அழற்சி (VKC) மற்றும் ஓரளவுக்கு  மாக்காம்புக்கட்டி  கண்சவ்வழற்சி (GPC) ஆகியவற்றை உள்ளடக்கிய நீடித்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி (CAC) யின் கீழ் ஒரு நோயை நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி (PAC) பிரதிநிதித்துவப் படுத்துகிறது. நிலைத்த மற்றும் பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிகளில் கண்சவ்வழற்சி மிகவும் இலேசானதாக இருக்கும். வெண்படல பாதிப்பு ஏற்படவே செய்யாது. மாறாக, ஒவ்வாமை வெண்படல அழற்சியும், இளவேனில் வெண்படல அழற்சியும் கடுமையான அழற்சி நோய்கள். வெண்படலம் பாதிக்கப்பட்டு நிரந்தரப் பார்வை இழப்பும் ஏற்படலாம்.

நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி (PAC)யும் பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி (SAC)யும் பெரும்பாலும் நாசியழற்சியுடனும் ஒவ்வாமை வெண்படல அழற்சி (AKC)யும் இளவேனில் வெண்படல அழற்சி (VKC)யும் சொறி மற்றும் ஆஸ்துமாவுடனும் தொடர்புடையனவாக இருக்கும்.

குறிப்புகள்:

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Alio Jorge L, Pandey Suresh K and Agarwal Amar.Textbook of Ophthalmology Volume 1.First Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd. 2002. New Delhi. P. 843-844.

 http://www.ejournalofophthalmology.com/ejo/ejo54.html

Bowling Brad, Kanski's Clinical Ophthalmology- A Systematic Approach. Eighth Edition. Elsevier, 2016. P. 144-145.

Holland Edward J, Mannis Mark J, Lee W Barry. Ocular Surface Disease - Cornea, Conjunctiva and Tear Film. Elsevier Saunders. 2013. P. 91-96.

http://emedicine.medscape.com/article/1191467-overview

http://www.medscape.com/viewarticle/831091

http://eyewiki.aao.org/Allergic_conjunctivitis

http://www.ncbi.nlm.nih.gov/pubmed/3467503

Nelson Leonard B., Olitsky Scott E., Harley's Pediatric Ophthalmology. Fifth Edition. Lippincott Williams & Wilkins. 2005. P 211.

http://www.chm.bris.ac.uk/motm/histamine/jm/receptors.htm

Spector S & Raizman M (1994): Conjunctivitis medicamentosa. J Allergy Clin Immunol 94: 134–136.

Barney NP & Graziano FM (2003): Allergic and immunologic diseases of the eye. In: Adkinson NFJ, Yunginger JW, Busse WW, 

 

நிலைத்தக் கண்சவ்வழற்சி (PAC) மற்றும் பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிகளின் (SAC) அறிகுறிகள் அடிப்படையில் ஒன்றே. படிப்படியாக உருவாகும். ஆயினும், ஒவ்வாமை ஊக்கியுடன் உண்டாகும் தொடர்பால் உடனடியாகவும் உருவாகும்.

நிலைத்தக் கண்சவ்வழற்சியுடன் (PAC) தொடர்புடைய கண் அறிகுறிகள் வருமாறு:

-    கண் அரிப்பு

-    கண் சிவப்பு

-    நீர் அல்லது கண்ணீர் வடிதல்

-    எரிச்சல்

-    கொட்டுவது அல்லது கீறுவது போன்ற உணர்வு

-    சளிக் கசிவு

-    கண்சவ்வு வீங்குதல்

-    ஒளிக்கூச்சம்

-    இமை வீக்கம்

-    கண் உலர்தல்

நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி, பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியைவிடக் குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. பருவகால அழற்சியை விட இலேசாகவே இருக்கும். நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் அறிகுறிகள் ஆண்டு முழுவதும் காணப்படும். இலையுதிர் காலத்தில், அதுவும் விலங்குப் பொருட்கள், வீட்டுத் தூசி பேன்கள் மற்றும் பூஞ்சை ஒவ்வாமை ஊக்கிகளால் மிகவும் அதிகரிக்கும். மாறாக, பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி கொண்டவர்களுக்கு, மரம், களை, புல் ஆகியவற்றின் மகரந்தத்தால் உண்டாகும் கடும் ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் அறிகுறிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இருக்கும். ஆனாலும் குறிப்பிட்ட ஒவ்வாமை ஊக்கிகள் வேவ்வேறு நிலப்பகுதிக்கு ஏற்ப மாறுபடும். ஒவ்வாமை ஊக்கிகள் குளிர்காலம் அல்லது குளிர் தட்பவெப்ப நிலைகளில் காற்றில் குறைவாக இருப்பதால் இக்காலங்களில் பருவகால ஒவ்வாமை கண்சவ்வழற்சி கொண்டவர்களுக்கு அறிகுறிகள் குறைவாக இருக்கும்.

நோயெதிர்ப்புப் புரதம் E (IgE) நடுநின்று இணக்குவிப்பதால் ஊட்டசெல்கள் (MCs) குருணைநிலை இழந்து கடும் ஒவ்வாமை ஏற்படுகிறது. நீடித்த ஒவ்வாமைகளும் ஊட்டசெல்களின் தொடர் செயலூக்கத்தோடு தொடர்புடையவையே. ஆனால் அமிலச்சாயசெல்கள் (eosinophils) மற்றும் T- ஹெல்ப்பர் 2 (Th2)  நிணசெல்-உருவாக்கிய சைட்டோகைன்கள் போன்ற நடுநின்று இணக்குவிப்பவை மேலோங்கி இருக்கும்.

நோய்க்கூற்று உடலியல்:

நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியும் (PAC), பருவகால ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியும் (SAC) வகை 1 (உடனடி) IgE நடுநின்று இணைவிக்கும் மிகையுணர்திறன் எதிர்வினைகள் ஆகும். இதற்குக் காரணம் காற்றில் பரவி இருக்கும் சுற்றுச்சூழல் ஒவ்வாமை ஊக்கிகள். இதில் ஊட்ட செல் (MC) முக்கியப் பங்கு வகிக்கிறது. உணர்திறன் மிக்க ஒருவர் ஒரு குறிப்பிட்ட விளைவியத்தை எதிர்கொள்ளும்போது ஓர் எதிர்வினை ஏற்படுகிறது. ஊட்ட செல் தனது குருணை இழப்பைத் தூண்டுவதற்கு    IgE-க்கு வலிமையான ஈர்ப்பு இருக்கிறது.

உணர்திறன் மிக்க ஓர் ஊட்ட செல்லுடன் கட்டுண்ட குறிப்பிட்ட IgE எதிர்பொருளுடன் ஓர் ஒவ்வாமை ஊக்கி எதிர்வினை புரிகிறது. இதனால், IgE மூலக்கூறுகளுக்கும் ஊட்ட செல்லுக்குள் உட்புகும் கால்சியம் அயனிகளுக்கும் இடையில் குறுக்கிணைப்பு தூண்டப்படுகிறது. எனவே ஊட்ட செல் குருணை இழப்பு அடைகிறது. இதனால், முன்னுருவான ஹிஸ்ட்டமின் போன்ற அழற்சி இடைபடுபொருட்கள் வெளிவிடப்படுகின்றன. இவை, உணர்திறன் மிகுந்த நபர்களுக்கு ஆரம்பக் கட்ட பதில்வினைகளோடு தொடர்புடைய உடல்குறிகளையும் நோயறிகுறிகளையும் உருவாக்குகின்றன.

ஊட்டசெல் செயலூக்கத்தில் இரு கூறுகள் உள்ளன. முதலில் ஹிஸ்டமின்னை உள்ளடக்கிய முன்னுருவாக்கப்பட்ட இடைபடும்பொருட்கள் வெளியிடப்படுதல். இரண்டாவதாக அரக்கிதோனிக் அமிலக் கூட்டிணைப்பும் அதைத் தொடர்ந்து வரும் வளர்சிதைமாற்ற விழுதொடர்களும், முடிவாகப் புரோஸ்டாகிளாண்டின்கள் மற்றும் லூக்கோடிரையன்கள் உற்பத்தியும் ஆகும்.

ஹிஸ்ட்டமின், ஹிஸ்ட்டமின்-1 (H1) ஏற்பியில் கட்டுறுகிறது. இதனால் அரிப்பு, எரிச்சல், கண்ணீர், மற்றும் கொட்டும் உணர்வு போன்ற முதன்மை ஒவ்வாமை அறிகுறிகள் தோன்றுகின்றன. ஹிஸ்ட்டமின்-2 (H2) ஏற்பியில் கட்டுறும்போது லூக்கோ டிரையீன்களையும் புரோஸ்டோ கிளாண்டின்களையும் வெளிவிடுவதால் சளி உற்பத்தி தூண்டப்படுவதோடு குழல் ஊடுறுவு திறன் அதிகரிக்கிறது. இந்த ஆரம்பக் கட்ட பதில்வினை உடனடியாக நிகழ்ந்து மருத்துவ ரீதியாக 20-30 நிமிடங்கள் நீடிக்கிறது. (http://www.chm.bris.ac.uk/motm/histamine/jm/receptors.htm).

ஊட்டசெல் குருணையிழப்பும் ஒரு தொடர்ந்த செல் மற்றும் புற செல் நிகழ்வுகளைத் தொடக்கி வைக்கிறது. இது பின் – கட்ட பதில்வினைக்கு வழிகோலுகிறது (லூக்கோடிரையீன் மற்றும் புரோஸ்டோகிளாண்டின் உற்பத்தி). ஊட்ட செல்களும் (MCs) சைட்டோகைன்களையும் வேதியற்தூண்டல் பெயர்வுக் காரணிகளையும் வெளிவிடுகின்றன. இவை, B  நிணசெல்களில் (B செல்கள்) இருந்து IgE உற்பத்தியைத் தூண்டுகின்றன; T உதவும் நிணசெல்கள் உற்பத்தியை அதிகரிக்கின்றன; அமில செல்களைக் கவர்கின்றன;  குழல் மேல்தோல் வெண்படலத்தையும் கண்சவ்வு செல்களையும் தூண்டி கீமோகைன்களையும் ஒட்டு மூலக்கூறுகளையும் வெளிவிடச் செய்கின்றன. கீமோகைன்களும் ஒட்டு மூலக்கூறுகளும் இடைபட்டு அமிலச்சாய செல்களையும், அடிச்சாய செல்களையும், சாயச்சார்பற்ற செல்களையும் T உதவும் நிணசெல்களையும் அழற்சியுற்ற இடத்துக்கு செலுத்துகின்றன.

குருணையிழப்பு செய்யும் அமிலச்சாய செல்கள் நச்சுப் புரதங்களை வெளிவிடுகின்றன. இவற்றிற்கு திசுக்களை நச்சாக்கும் திறன் உண்டு. இவை மேலும் ஊட்ட செல்களை குருணையிழப்புச் செய்கின்றன. அமிலச்சாய செல்களின் இப்பொருட்கள் வெண்படல மேல்தோலுக்கு நஞ்சாகும். நீடித்த நாட்களாக இவை இருந்தால் புண்கள் உருவாகும். பின் கட்ட பதில்வினையாக பல்வேறு அழற்சி செல்கள் உட்புகும்.

ஒரு கண்மருத்துவ நிபுணர் மருத்துவ வரலாற்றையும் பிளவு-விளக்குப் பரிசோதனையையும் கொண்டு நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி- யைக் கண்டறிகிறார்.

முக்கிய நோய் வரலாற்று அம்சங்களில் கீழ்வருவன போல தனிநபர் அல்லது ஒவ்வாமை வரலாறு அடங்கி இருக்கும்:

-    ஒவ்வாமை நாசியழற்சி

-    நுரையீரல் ஆஸ்துமா

-    ஒவ்வாமைத் தோலழற்சி

நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி நோயாளிகளுக்கு தும்மலும் மூக்கொழுகலை இயல்பாகக் கொண்ட நிலைத்த நாசியழற்சியும் இருக்கும்.

PAC மற்றும் SAC –யின் உடற்குறிகளும் நோயறிகளும் (இலேசானதும் நீடித்ததும்) ஒன்று போலவே இருக்கும்; படிப்படியாக உருவாகும்; ஆனால் ஒவ்வாமை ஊக்கிகளை எதிர்கொள்ளும் போது திடீரெனவும் ஏற்படும். குறிப்பிட்ட எந்த ஓர் ஒவ்வாமை ஊக்கிக்கு நோயாளி உணர்திறன் மிகுந்தவரோ அதைச் சார்ந்தும் நீடித்த பாதிப்பைப் பொறுத்தும் வேறுபாடுகள் இருக்கும்.

PAC, கண்பரப்பைப் பாதிக்காது தன்னைத் தானே கட்டுப்படுத்தும். இது பொதுவாக இரு கண்ணையும் பாதிக்கும்; ஒருபக்கம் பாதிப்பதும் உண்டு. ஒரு குறிப்பிட்ட ஒவ்வாமை ஊக்கி ஒரு கண்ணைப் பாதித்தால் பாதிப்பு ஒரு பக்கமாகவே இருக்கும். ஒவ்வாமை ஊக்கி பாதித்த உடன் உடல்குறிகளும் நோயறிகுறிகளும் வேகமாகவும் திரும்பத் திரும்பவும் ஏற்படும்.

SAC யை விட PAC குறைந்த அளவிலேயே காணப்படுகிறது. நீடித்த ஒவ்வாமை ஊக்கிகளின் பாதிப்பால் உடல்குறிகளும் நோயறிகுறிகளும் ஆண்டு முழுவதும் காணப்படும். பொதுவான ஒவ்வாமை ஊக்கிகள் வீடுகளில் காணப்படும் பூஞ்சை விதைகள், விலங்கு முடி, தூசிப்பேன் ஆகியவைகள் ஆகும். பருவ கால ஒவ்வாமை ஊக்கிகளும் நோயாளியைப் பாதிக்கலாம். நீடித்த பாதிப்பால் கண்சவ்வு சொதசொதப்பாகவும், சிவந்தும் அரிப்புடனும் காணப்படும். PAC-யில் ஒவ்வாமை ஊக்கிகளின் நீடித்த பாதிப்பால் இமைவிளிம்பு கண்சவ்வுப் பரப்பில் காம்புக்கட்டிப் பொருமல் ஏற்படலாம். கட்டியான வெண் கசிவு துர்நாற்றத்துடனும் வெளியேறலாம்.

பூஞ்சை விதைகள், விலங்கு முடி, தூசிப்பேன் ஆகியவை நோய்க்குக் காரணம். ஒவ்வாமை ஊக்கிகளின் வகை, அடர்த்தி, பாதிப்புக்காலம் ஆகியவற்றைப் பொறுத்து அறிகுறிகளின் கடுமை இருக்கும்.

உலர்கண் ஒவ்வாமை ஊக்கிகள் கண் பரப்பில் தொடர்புகொள்ள வசதியாய் இருக்கும். ஏனெனில் ஒவ்வாமை ஊக்கிகளைக் கண்ணீர் கழுவுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது.

ஒவ்வாமை கண்சவ்வழற்சியின் முக்கிய அறிகுறி அரிப்பே. நோயாளிகள், கடுமையான அரிப்பு, எரிச்சல், கண்ணீர் வடிதல் ஆகியவற்றைக் கூறுவர். கசிவு பொதுவாக ஊனீர் சார்ந்ததும், தெளிவானதும், நீர்போன்றதும் ஆனால் இழைத்தன்மை கொண்டதுமாய் இருக்கும்.

அரிப்பில்லாத ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி சந்தேகத்திற்குரியது. அதிகமான அரிப்பைக் கொண்டு ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியைத் தீர்மானிகலாம். ஆனால், உலர்கண், நச்சுக் கண்சவ்வழற்சி, தொடர்பு தோலழற்சி, இமையழற்சி ஆகிய பிற ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிகளையும் கருதவேண்டும். இக்கோளாறுகளில் அரிப்பு இலேசானதும் அரிதானதும் ஆகும்.

SAC-ன் அறிகுறிகள்:

பிளவு-விளக்கு சோதனை:

-    இமை வீக்கம்

-    சளிக் கசிவு (ஒட்டும்/இழையோடு)

-    இலேசான காம்புக்கட்டி எதிர்வினை

-    கண்சவ்வு பொருமல்

-    குமிழ் மற்றும் கீழ் இமைவிளிம்பு தகட்டு கண்சவ்வில் வீக்கம். பால் அல்லது இளஞ்சிவப்பாய்த் தோன்றும்.

-    குறிப்பாக நோயாளிகள் கண்களைக் கசக்கும் போது கண்சவ்வு ஒருபுறம் வீங்குகிறது. இதனைக் கண் குமிழ் உருவாதல் என்று விவரிப்பர், செல்களும் பாய்மங்களும் தீவிரமாகவும் கடுமையாகவும் ஊடுறுவும்போது கண்சவ்வு வீக்கமடைந்து இத்தகைய கண்சவ்வு பலூன்கள் உண்டாகின்றன.

-    புற வெண்படலத்தில் தட்டு போன்ற பள்ளங்கள் கடும் கண்சவ்வு வீக்கத்தாலும் நிலையற்ற கண்ணீர்ப்படலத்தாலும் ஏற்படும். வீக்கம் குறைந்தவுடன் இது சரியாகும்.

-    அரிதாகப் புள்ளி வெண்படல அழற்சி ஏற்படலாம்.

நோய்கண்டறியும் முறைகள்:

பொதுவாகப் பரிசோதனைகள் தேவைப்படுவதில்லை.

-    அகத்தோல் சோதனை: வகை 1 மிகையுணர்திறன் பதில்வினைக்கு அகத்தோல் சோதனையே தரமான மருத்துவச் சோதனை ஆகும். கீறல், சுரண்டல், அரிதான அகத்தோல் ஊசி போன்ற தோல் சோதனைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி விளைவியங்களால் ஏற்படும் மிகையுணர்திறனைத் தீர்மானிக்கலாம். அதிக உணர்திறனும், வித்தியாசம் குறைவாக இருப்பதாலும், நோயாளிக்கு வசதியாக இருப்பதாலும் அகத்தோல் சோதனையை விடவும் சுரண்டல் சோதனையே தெரிவு செய்யப்படுகிறது. பொதுவாக, ஒரு குறிப்பிட்ட ஒவ்வாமை ஊக்கிக்காக தோல் சோதனை அரிதாகவே தேவைப்படும்.

-    மேலோட்டமான கண்சவ்வுச் சீவல்: மிகவும் தீவிரமான நேர்வுகளில் பொதுவாகக் கண்சவ்வில் காணப்படாத அமிலச்சாய செல்களைக் கண்டறிய இது உதவுகிறது.  கண்சவ்வின் உள்ளடுக்குகளில் அமிலச்சாய செல் பொதுவாகக் காணப்படும். ஆகவே, கண்சவ்வுச் சீவலில் அமிலச்சாய செல் இல்லை என்பதற்காக ஒவ்வாமை கண்சவ்வழற்சி இல்லை என்று கருத முடியாது. ஒரு அமிலச்சாய செல்லோ அல்லது குருணையோ இருந்தாலும் ஒவ்வாமையை அது காட்டுகிறது.

-    ரேடியோ-அலர்ஜோ-சார்பெண்ட் சோதனை (RAST):  இது ஒரு இரத்தப் பரிசோதனை. ஒவ்வாமை ஊக்கிகளை வரையறுக்க உதவுகிறது. பெரும்பாலும் அனைத்து PAC நோயாளிகளின் ஊனீரிலும் கண்ணீரிலும் அதிகரித்த IgE   அளவுகள் காணப்படுகின்றன.

-    கண்சவ்வுத் தூண்டல் சோதனை: கண்சவ்வுப் பையில் ஒவ்வமை ஊக்கியை வைப்பதன் மூலம் PAC யின் அறிகுறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. PAC யைக் கண்டறிய இச்சோதனை தேவைப்படுவதில்லை. தகுந்த கண் சிகிச்சை முறையைக் கண்டறிய இது நம்பந்தகுந்த வழியாகும்.

-    நாசி ஒவ்வாமைச் சோதனை: PAC போன்ற ஒவ்வாமை கண்சவ்வழற்சியுள்ள சில நோயாளிகளுக்கு நாசி ஒவ்வாமையும் இருக்க வாய்ப்புண்டு.

கீழ்வரும் நிலைகளில் இருந்து PAC யை வேறுபடுத்திக் காண வேண்டும்:

-    உலர் கண் நோய்த்தாக்கம்

-    தோல் அழற்சி

-    நச்சுக் கண்சவ்வழற்சி

-    இமையழற்சி

-    ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் பிற வடிவங்கள்

-    மேல் லிம்பிக் வெண்படல அழற்சி

-    நுண்ணுயிரி கண்சவ்வழற்சி

-    வைரல் கண்சவ்வழற்சி

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே நோய்மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

பொதுவான நடவடிக்கைகள்:

ஒவ்வாமை ஊக்கிகளின் பாதிப்பைக் குறைப்பது நோய் மேலாண்மையில் அடங்கும்.

-    வீட்டை சுத்தமாக வைத்தல்: பொதுவாக நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிக்குக் காரணம் பூஞ்சை விதைகள், விலங்கு முடி மற்றும் தூசிப்பேன்கள் ஆகும். இவை வீடுகளில் காணப்படுபவை. விரிப்புகள், குழந்தைகளின் விளையாடும் பாடம் செய்த விலங்குகள், மென் பொம்மைகள், திரைகள் ஆகியவைகளை மாற்ற வேண்டும்; சுத்தம் செய்ய வேண்டும். மெத்தைகளின் மேற்புறமும் பக்கமும் சுத்தம் செய்யப்பட்டு தூசிப் பூச்சிகள் அடையாதவாறு உறையிடப்பட வேண்டும். விரிப்புகள், உறைகள் வெந்நீரில் (54 டிகிரி செல்சியஸ்) துவைக்கப்பட வேண்டும். தலையணைகளும், மெத்தையின் அடிப்பகுதியும் அடிக்கடி தூசி நீக்கப்பட வேண்டும். படுக்கை அறைக்குள் செல்லப் பிராணிகளை அனுமதிக்கக் கூடாது. பூஞ்சை வளர இடம் கொடுக்காமல் குளியலறை சுத்தமாகவும் உலர்ந்தும் இருக்க வேண்டும்.

-    காற்றுத் தூய்மைப்படுத்திகள்: தூசிப் பேன்களை உருவாக விடாமல் தடுப்பதோடு காற்றில் இருக்கும் தூசி அளவைக் குறைப்பது கூடுதல் உத்தியாகும். அதி திறன் துகள் தடுப்பிகளைப் பயன்படுத்தும் காற்று தூய்மைப்படுத்திகள் பலன் தருவதாகவும் பாதுகாப்பானதும் ஆகும் (தூசிப் பேன் கழிவு, விலங்கு மயிர், தூசி, மகரந்தம் அல்லது கரப்பான் பூச்சி எச்சம் போன்ற அனைத்து ஒவ்வாமை ஊக்கிகளையும் 99 % அகற்றும்).

ஆதரவு நடவடிக்கைகள்:

இவற்றில் அடங்குவன:

-    குளிர் ஒத்தடம்: கண் அழற்சியைக் குறைக்கும்.

-    உப்புக் கரைசல்: கண் பரப்பை உப்புக் கரைசலால் கழுவும்போது ஒவ்வாமை ஊக்கிகள் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் கண்பரப்பு ஒவ்வாமை ஊக்கிகளால் பாதிக்கப்படுவது கட்டுப்படுத்தப் படுகிறது. மேலும், சில வகையான செயற்கைக் கண்ணீர்கள் கண் பரப்பு மசகுத் தன்மையோடு இருக்க உதவுகின்றன. களிம்புகள் அல்லது இரவில் பயன்படுத்தப்படும் நேரத்திற்கு ஏற்ப வெளிவிடப்படும் கண்ணீர் மாற்றுகள் தூக்கத்தின் போது கண்பரப்பிற்கு மசகளித்து நீடித்த நிவாரணத்தை அளிக்கின்றன. இவைகள் இலேசான PAC-க்கே பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில் இவை ஒவ்வாமைக்கான அடிப்படை காரணத்துக்குரிய மருத்துவத்தை அளிப்பதில்லை. மட்டுமன்றி அழற்சியை உருவாக்கும் இடைபடும்பொருளின் (மீடியேட்டர்கள்) செயல்பாட்டை மாற்றி அமைப்பதும் இல்லை. குளிர் சொட்டுக்களைப் பயன்படுத்துவதால் குழலிறுக்கமும் நலமாகும் குறிகளும் அறிகுறிகளும் ஏற்படுவதால் செயற்கைக் கண்ணீரை குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.

-    கண்கசக்குதலைத் தவிர்த்தல்:

மருத்துவ சிகிச்சை:

குறுகிய அல்லது நீடித்த ஒவ்வாமைக் கண் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் போது நோயாளி இணக்கம் சரிவர இருப்பதில்லை என்பதால் சிகிச்சையின் பலன் மோசமாக இருக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது என்பதை அறிந்து கொள்ளுவது முக்கியம். மருத்துவ சிகிச்சையில் அடங்குவன:

-    மேற்பூச்சு குழலிறுக்கிகள்: இவை குறைந்த கால நிவாரணத்தை அளிக்கும். குருதியிளக்கிகள் குழலிறுக்கத்தைத் தூண்டி கண்சவ்வுவீக்கம், இமைவீக்கம் மற்றும் சிவப்பைக் குறைக்கின்றன. மேற்பூச்சுக் குழலிறுக்கிகளைப் பயன்படுத்துவதால் அரிப்பு சற்று குறைகிறது. செயற்கைக் கண்ணீரைப் போன்று மேற்பூச்சு குழலிறுக்கியும் ஒவ்வாமை பாதிப்பைக் குறைக்காது. ஏனெனில் ஒவ்வாமை அழற்சியை உண்டாக்குபவைகளை அவை எதிர்ப்பதில்லை. ஆயினும், குழலிறுக்கிகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் கண்சவ்வுச் சிவப்பும் அழற்சியும் திரும்பிவரலாம் (‘conjunctivitis medicamentosa’) (Spector S & Raizman M (1994): Conjunctivitis medicamentosa. J Allergy Clin Immunol 94: 134–136.). கடுமயான கண் ஒவ்வாமைக்கு அவை பலன் அளிப்பதில்லை. இந்தப் பக்க விளைவுகளை மட்டுப்படுத்த, மருந்தளவை அல்லது சிகிச்சையின் கால அளவைக் குறைக்க வேண்டும். உ-ம். நபசோலின் மற்றும் ஆக்சிமெட்டாசோலின்.

-    மேற்பூச்சு ஆன்டிஹிஸ்ட்டமின்: நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி கடும் உடற்குறி மற்றும் நோயறிகுறிகளுக்கு ஆன்டிஹிஸ்ட்டமின் கண் சொட்டு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவை கண்சவ்வு ஹிஸ்ட்டமின் ஏற்பிகளைத் தடுத்து வினைபுரிகின்றன. கடும் நோய்க்கு ஆன்டிஹிஸ்ட்டமின்கள் பலனளிப்பவை; அரிப்பைக் குறைக்கின்றன. கண்களை மட்டும் பாதிக்கும் ஒவ்வாமைக்கு மேற்பூச்சு ஆன்டிஹிஸ்ட்டமின்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. மண்டலம் சார் வாய்வழி ஆன்டிஹிஸ்ட்டமின்களின் பக்கவிளைவுகள் இவற்றில் இல்லை. மேற்பூச்சு ஆன்டிஹிஸ்ட்டமின்கள் மண்டலம்சார் ஆன்டிஹிஸ்ட்டமின்களை விட விரைவாகப் பலன் அளிக்கின்றன. கண் ஒவ்வாமைக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மேற்பூச்சு குழலிறுக்கிகள், ஊக்கமருந்தல்லாத எதிரழற்சி மருந்துகள், வெறும் ஊட்டசெல் நிலைப்படுத்திகள், கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள் ஆகியவற்றை விட நீடித்து செயல்படுவன ஆகும். இந்த மருந்துகள் புரோஸ்ட்டோகிளாண்டின்கள் மற்றும் லூக்கோடிரையீன்கள் போன்ற பிற, அழற்சி விளைவிப்பவைகளை பாதிப்பதில்லை. அவை தடைசெய்யப்படாமல் இருக்கும். உ-ம். பைரிலாமைன், ஃபெனிராமைன்.

-    மேற்பூச்சு குழலிறுக்கியும் எதிர்ஹிஸ்ட்டமைனும் இணைந்தது: ஆன்டோசோலினுடன் (எதிர்ஹிஸ்ட்டமின்) சைலோமெட்டாசோலின் (குழலிறுக்கி) இணைத்துக் கொடுப்பதால் குறுகிய கால நிவாரணம் அளிக்கும். குருதித்தளர்த்திகள் குழலிறுக்கத்தைத் தூண்டி கண்சவ்வுவீக்கம், இமைவீக்கம், சிவப்பு ஆகியவற்றைக் குறைக்கும். கடும் நேர்வுகளுக்கு எதிர்ஹிஸ்ட்டமின் பலன் அளித்து அரிப்பைக் குறைக்கும்.

-    மண்டலம்சார் எதிர்ஹிஸ்ட்டமின்கள்: உடல்குறிகளையும் நோயறிகுறிகளையும் இவை குணமாக்கும். கண், தொண்டை மற்றும் மூக்கை ஒரே நேரத்தில் பாதிக்கும் கடுமையான ஒவ்வாமை அறிகுறிகளுக்கு வாய்வழி எதிர்ஹிஸ்ட்டமின்கள் அளிக்கலாம். டைஃபென்ஹிடிராமைன் போன்றவை தூக்கத்தை உண்டாக்க உதவும்.

-    மேற்பூச்சு இரண்டாம் தலைமுறை H1 எதிர்ஹிஸ்ட்டமின்கள்: குழலிறுக்கிகள் மட்டும் அல்லது குறிப்பற்ற எதிர்-ஹிஸ்ட்டமின் கண் சொட்டுடன் சேர்த்தோ அளிப்பதை விடவும் நிலைத்த ஒவ்வாமை கண்சவ்வழற்சியின் குறிகளையும் நோயறிகுறிகளையும் கட்டுப்படுத்துவதில் மேற்பூச்சு தேர் H1 ஏற்பி தடுப்பிகள் சிறந்தவையாகும். இத்தொகுதியில் எமெடேஸ்டின் மற்றும் லெவோகாபேஸ்டின் போன்ற மருந்துகள் அடக்கம். ஃபெனிராமைன் போன்ற முதல் தலைமுறை எதிர்-ஹிஸ்ட்டமின்களை விட இவற்றிற்கு மருத்துவத் திறன் அதிகம். இதற்குக் காரணம் அழற்சியை உருவாக்கும் சைட்டோகைன்களைத் தடுக்கும் அதிக ஆற்றல் காரணமாகலாம். நடு நரம்புமண்டல H1 ஏற்பிகள், கோலினிய ஏற்பிகள் மற்றும் இதயப் பிறழ்துடிப்பை உருவாக்கும் சில H2 ஏற்பிகளை விட புற H1 ஏற்பிகளுக்கு அதிக தேர்திறன்  கொண்டவையாகும். தூக்கமயக்கம், உலர்கண் மற்றும் உ;லர்வாய் போன்ற மருந்து எதிர்வினைகளை இந்த தேர்திறன் வெகுவாகக் குறைக்கிறது.

-    மேற்பூச்சு ஊட்டசெல் நிலைப்படுத்திகள்: இவை, ஹிஸ்ட்டமின் மற்றும் பிற வேதியல் தூண்டல் பெயர்வுக் காரணிகள் வெளிவிடலைத் தடுத்து கண்சவ்வு ஊட்டசெல்களின் (MCs) குருணையிழப்பைக் குறைக்கின்றன. இருப்பினும் இந்த மருந்துகள் இருக்கும் அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிப்பதில்லை. மேலும், PAC – யின் கடும் கட்டத்தில் இவற்றின் பங்கு ஏதும் இல்லை; ஊட்டசெல் நிலைப்படுத்திகளை முற்காப்பிற்காகப் பயன்படுத்த வேண்டும். இவைகளை நீடித்த காலவரையறைக்குப் பயன்படுத்த வேண்டும் (சிகிச்சை பலனளிக்கத் தொடர்ந்து 5-7 நாட்கள் தேவை).  அல்லது குரோமோலின் சோடியம், லோடோக்சாமைட், நெடோகுரோமில் மற்றும் பெமிரோலாஸ்ட் போன்ற எதிர்-ஹிஸ்ட்டமின்களோடு இணைத்துப் பயன்படுத்த வேண்டும்.

-     H1 ஏற்பி தடுப்பிகள் மற்றும் ஊட்டசெல் நிலைப்படுத்திகள் (இருவினை மருந்துகள்): ஹிஸ்ட்டமின் ஏற்பி எதிர்வினை, ஊட்டசெல் குருணையிழப்பு நிலைப்படுத்தல் மற்றும் தொடர்ந்து அமிலச்சாய செல் செயலாக்கம் மற்றும் ஊடுறுவல் அழுத்தம் போன்ற பலதிறப்பட்ட மருந்தியல் விளைவுகளை இருவினை மருந்துகள் ஏற்படுத்துகின்றன. உ-ம். ஓலோப்டாடின், அசிலாஸ்டின், எப்பினாஸ்டின் மற்றும் கீட்டோடிஃபென். பிற நுட்பங்களின் மூலம் மருந்துகள் எதிரழற்சி விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. உ-ம். சைட்டோகைன் வெளிவிடலை ஓலோப்டாடின் பாதிக்கிறது.

-    ஊக்கமருந்தல்லாத எதிர்-அழற்சி மருந்துகள் (NSAIDs): இவை புரோஸ்ட்டாகிளாண்டின்களின் உற்பத்தியைத் தடுக்கின்றன. லூக்கோடிரையீன்கள் போன்ற இடைப்படுத்திகளைத் தடுப்பதில் இவற்றிற்கு எந்தப் பங்கும் இல்லை. -ம். கீட்டோரோலக்டிரோமீத்தாமைன் மற்றும் டைக்ளோஃபெனாக்.

-    மேற்பூச்சுக் கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள்: நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சிக்கு கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் கண் சொட்டு மருந்துகள் பலன் தருபவை ஆகும். ஆனால், இரண்டாம் கட்டத் தொற்று, அதிகக் கண்ணழுத்தம், கண்புரை உருவாதல் போன்ற எண்ணற்ற தீய பக்க விளைவுகள் காரணமாக இவை தேர்வு செய்யப்பட்டே பயன்படுத்தப்படுகின்றன. கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள் பயன்படுத்தும் நோயாளிகளை உன்னிப்பாகக் கவனித்து வரவேண்டும்.  கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகளின் எதிரழற்சி மற்றும் தடுப்பாற்றல் அழுத்தும் விளைவுகள் பரந்ததும் குறிப்பிட்டு சொல்ல முடியாதவையும் ஆகும். மேற்பூச்சு ஊக்கமருந்துகளை குறுகிய காலத்திற்கும் பிற சிகிச்சைகள் பலனளிக்காத கடும் நேர்வுகளுக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேற்பூச்சு ஊக்க மருந்துகளை இடைவிட்டு அளிக்கலாம் (Pulse dosing). மேலும் ஓர் ஊட்டசெல் நிலைப்படுத்தியால் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். லோட்டேபிரட்னால் எட்டாபோனேட் மற்றும் ரிமெக்சோலோன் போன்ற மாற்றமைவு ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தலாம். லோட்டேபிரட்னால் மிகவும் பாதுகாப்பானது.

-    நோய் எதிர்ப்பு-மாற்றிகள்: சைக்ளோஸ்போரின் சொட்டு மற்றும் டேக்ரோலிமுஸ் களிம்பு போன்ற நோய் எதிர்ப்பு-மாற்றிகள் கண் ஒவ்வாமை சிகிச்சைக்கு திறன் பெற்றவை என்று நிருபிக்கப்பட்டுள்ளன. சைக்ளோஸ்போரின் A ஒரு நோயெதிர்ப்பு அழுத்தி. இது, கண்சவ்வில் உண்டாகும் வகை IV ஒவ்வாமை எதிர்வினையில் குறுக்கிட்டு அமிலச்சாய செல் ஊடுறுவலைத் தடுக்கிறது. டேக்ரோலிமுஸ் முக்கியமாக T செல்களின் செயல்பாட்டைத் தடுத்து வினைபுரிகிறது. இவை இரண்டிலுமே பக்க விளைவுகள் மிகக் குறைவு. இதனால் நீடித்த ஊக்க மருந்து பயன்பாட்டுக்குப் பதிலாக இவை தெரிந்து கொள்ளப்படுகின்றன. நோய் எதிர்ப்பு-மாற்றிகள் கடுமையான ஒவ்வாமை வடிவங்களுக்கு (VKC மற்றும் AKC) பயன்படுத்தப்படும். PAC-க்கு இதன் பயன் குறைவே.

-    குறிப்பிட்ட ஒவ்வாமைக்கான நோயெதிர்ப்பு சிகிச்சை: இது ஒரு பலன் தரும் சிகிச்சை. ஒவ்வாமை ஊக்கி நன்கு தெரிந்ததாக இருக்கும் பட்சத்தில் இந்த சிகிச்சையைப் பயன்படுத்தி நோயெதிர்ப்பு சகிப்பு தூண்டப்படுகிறது.  ஒவ்வாமை ஊக்கியால் தூண்டப்படும் அறிகுறிகளைக் குறைப்பதும், நீண்ட காலவரையறையில் நோய் திரும்ப ஏற்படுவதைத் தடுப்பதும் இந்த சிகிச்சையின் முக்கிய நோக்கங்கள் ஆகும். மருத்துவ ரீதியாக சம்பந்தம் கொண்ட ஒவ்வாமை ஊக்கிகளுக்கு குறிப்பிட்ட IgE  எதிர்பொருட்கள் இருப்பதற்கான சான்றுள்ள நோயாளிகளில் இது குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது. நோயெதிர் சிகிச்சைக்காக குறிப்பிட்ட IgE  எதிர்பொருட்களைக் கண்டறியவும் ஒவ்வாமை ஊக்கியை இனங்காணவும் தோல் சுரண்டல் சோதனை தெரிந்து கொள்ளப்படுகிறது. நோயெதிர் சிகிச்சைக்கு உரிய நபர்களில் அடங்குவோர்:

(1)  மருந்தியல் சிகிச்சைகளினாலும் தவிர்ப்பு நடவடிக்கைகளாலும் நன்றாகக் கட்டுப்படுத்த முடியாத அறிகுறிகள் கொண்டவர்கள்.

(2)  நோயைக் கட்டுப்படுத்த அதிக அளவு மருந்து அல்லது பல மருந்துகள் அல்லது இரண்டும் தேவைப்படுவோர்.

(3)  மருந்தின் பாதகமான விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள்.

(4)  நீடித்த மருந்தியல் சிகிச்சையைத் தவிர்க்க விரும்புபவர்கள்.

நோய்முன்னறிதல்:

குறிப்பிடத்தக்க அசௌகரியமும் விரும்பத் தகாத தோற்ற பாதிப்புகளும் இருப்பதால் நிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியை முன்கண்டறிதல் நல்லது. பொதுவாக ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி உடனடியாக மாறக்கூடியதே. ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி திரும்பத் திரும்ப வரக் கூடியதே என்றாலும் இதனால் சிக்கல்களோ பார்வை இழப்போ அரிதானது ஆகும்.

ஒவ்வாமை ஊக்கியைத் தவிர்த்தலே முதன்மையான நடத்தை முறை மாற்றமாகும். இந்த ஒவ்வாமை ஊக்கியை இனங்காணவும் அதைத் தவிர்ப்பதை உறுதி செய்யவும் குறிப்பிட்ட சோதனை முறைகள் உள்ளன.

மருந்து அல்லது ஒப்பனையியல் தொடர்பு எதிர்வினைகளைத் தவிர்ப்பதாலேயே தடுக்க முடியும். ஒவ்வாமை ஊக்கிகளைத் தவிர்த்தல்:

-    வீட்டை சுத்தமாக வைத்தல்: பூஞ்சை விதைகள், விலங்கு மயிர்கள், தூசிப் பேன்கள் ஆகியவை வீடுகளில் காணப்படும். விரிப்புகள், திரைகள், குழந்தைகளின் பொம்மைகள் ஆகியவற்றை சுத்தம் செய்து அடிக்கடி மாற்ற வேண்டும். விரிப்புகளின் மேற்புறமும், பக்கங்களும் பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட வேண்டும். விரிப்புகள், தலையணை உறைகள் வெந்நீரில் (54 டிகிரி செல்சியஸ்) கழுவப்பட வேண்டும். தலையணை மற்றும் மெத்தையின் அடிப்பகுதிகள் தூசி நீக்கம் செய்யப்பட வேண்டும். செல்லப்பிராணிகளைப் படுக்கை அறைக்குள் அனுமதிக்கக் கூடாது. பூஞ்சைகள் வளர இடம் கொடுக்காத வகையில் குளியலறையைச் சுத்தமாக வைக்க வேண்டும்.

-    காற்று சுத்திகரிப்பன்கள்: அதி-திறன் துகள் பிடிப்பிகளை பயன் படுத்தும் காற்று சுத்திகரிப்பான்கள் பலனளிப்பவையும் பாதுகாப்பானவையும் ஆகும் (தூசிப் பேன்கள், விலங்கு முடி, தூசி, மகரந்தம், கரப்பான் எச்சம் போன்ற அனைத்து ஒவ்வாமை ஊக்கிகளையும் 99% நீக்குகிறது).

தூசிப் பேன்களை உற்பத்தி இடத்திலேயே தடுக்க வேண்டும். காற்றில் தூசியின் அளவைக் குறைப்பது ஒரு போதுமான உத்தியாகும்.  

  • PUBLISHED DATE : Jun 25, 2016
  • PUBLISHED BY : NHP Admin
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Jun 25, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.