பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு

பேற்றுக்குப்பின்  குருதிப்போக்கு என்பது  பேற்றின் போது ஏற்படும் ஒரு சிக்கல் ஆகும். தாயின் இறப்புக்கு இது ஒரு முக்கிய காரணம். உலக முழுவதும் 35% தாய் மரணத்துக்கு இது காரணமாக உள்ளது. இதனால் குடும்பங்களின் வழ்வும் ஆரோக்கியமும்  பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

குழந்தைப் பிறப்புக்குப் பின்  24 மணி நேரத்தில் 500 மி.லி. இரத்த இழப்பு ஏற்படுவதே பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு எனவும், அதே கால அளவில் 1000 மி.லி. குருதிப் போக்கு இருந்தால் அது கடும் பேற்றுக்குப் பின் குருதிப்போக்கு எனவும் உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்படுகிறது. பெண்ணின் குருதி இயக்கத்தை பாதிக்கும் ஒரு சிறு அளவு குருதிப் போக்கும் கூட பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு எனவே வரையறுக்கப்படும்.

பேறுகாலத்தைத் தொடர்ந்து வரும் முதல் 24 மணி நேரத்தில் நோய்க்கும் மரணத்துக்கும் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். இது முதன்மை பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு என கருதப்படுகிறது. பேற்றுக்குப் பின் பிறப்புப் பாதை வழியாக 24 மணி நேரத்தில் இருந்து 12 வாரம் வரை குருதிக் கசிவு இருக்குமானால் அது இரண்டாம் நிலை குருதிப்போக்கு என அழைக்கப்படும்.

பேற்றுக்குப் பின்னான குருதிக் கசிவு நடைமுறையில் அளக்கப்படுவதில்லை. கசியும் குருதியை அளப்பதனால் பெண்ணுக்குக் கிடைக்கும் பராமரிப்பும் பலனும் மேம்படுமா  என்பதிலும் தெளிவு இல்லை. பெண் இரத்த சோகையுடன் இருந்தால் குருதிக் கசிவைக் கட்டுப்படுத்த சிகிச்சைகள் தேவைப்படும்.

போதுமான அளவுக்குக் கருப்பை சுருங்காமை, இனப்பெருக்கப் பாதைக் காயம், கருப்பை கிழிதல், நச்சுக்கொடி திசுத் தேக்கம், அல்லது தாயின் குருதிப்போக்குப் பிரச்சினகள் ஆகியவற்றால்  பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு நிகழலாம். பொதுவாக உலக அளவில்  கருப்பை சுருங்காமையே முக்கியக் காரணம். தாய்மாருக்கு ஏற்படும் நோய்களுக்கும் மரணத்தும் இதுவே காரணமாக உள்ளது.

வளர்ந்துவரும் நாடுகளில் தாய் மரண விகிதம் 2015-ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி 100 000 உயிர்பிறப்புக்கு 239 ஆகும். இதுவே வளர்ந்த நாடுகளில் 100 000-க்கு 12 ஆகும். ஆக, தாய் மரணங்களில் 99% வளரும் நாடுகளில் நிகழ்கின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் சகாராசார் நிலப்பகுதிகளில் நிகழ்கின்றன. தெற்கு ஆசியாவில் இதன் விகிதம் மூன்றில் ஒரு பங்காகும். வளர்ந்த நாடுகளில் 1 சதவிகிதமே ஏற்படுகின்றன. நாடுகளுக்கு இடையிலும் நாடுகளுக்குள்ளும் கூட பெரிதான வேறுபாடுகள் காணப்படுகின்றன. கிராமப்புறங்களில் குறைந்த வருமானக் குழுக்களிடையில் தாய் மரண  விகிதம் அதிகம். நகர்ப்புறத்தில் அதிக வருமானம் உள்ளவர்களிடையே குறைவாகவே தாய் மரணம் நிகழ்கிறது.

ஒவ்வொரு நாளும் கர்ப்பம் மற்றும் பேற்றுச் சிக்கல்களால்  உலக அளவில் ஏறக்குறைய 830 பெண்கள் மரணம் அடைகின்றனர்.  52% தாய் மரணத்துக்கு மூன்று தவிர்க்கப்படக் கூடிய காரணங்கள்: குருதிக் கசிவு, சீழ்ப்பிடிப்பு மற்றும் மிகை இரத்த அழுத்தக் கோளாறுகள். 25 % தாய் மரணம் பேற்றுக்குப் பின் குருதிப்போக்கல் நிகழ்வதாக உலக சுகாதாரப் புள்ளிவிவரம் கூறுகிறது. பேற்றுக்குப்பின் குருதிக்கசிவால் துரித மரணம் ஏற்படுகிறது. சிகிச்சை அளிக்காவிட்டால் ஓர் ஆரோக்கியமான பெண்ணையும் இரண்டு மணி நேரத்துக்குள் இது கொன்றுவிடக் கூடும்.

இயற்கைப் பிறப்பில் 2-4%  பேற்றுக்குப்பின் குருதிப்போக்கும் அறுவை பேற்றில் 6 % குருதிப்போக்கும் நிகழ்கிறது.  50% நேர்வுகளில் கருப்பை வலுவிழ்ப்பே இதற்குக் காரணம். ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் 14 மில்லியன் பெண்கள் பேற்றுக்குப் பின் குருதிப்போக்கால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்திய மாதிரி பதிவுத் திட்டத்தின் 1998 ஆம் ஆண்டு மதிப்பிடலில் 30% மரணங்கள் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கால் நிகழ்ந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 2001-2003 கணக்கிடலில் இது 38% ஆக உயர்ந்துள்ளது. இந்திய மருத்துவக் ஆராய்ச்சிக் கழகம் 2003 –ல் நடத்திய ஆய்வும் தாய் மரணத்துக்கு பின்பேற்று குருதிப்போக்கே முக்கிய காரணம் என கண்டறிந்துள்ளது.

தரமான பிறப்புக்கு முன்னான பராமரிப்பு, பேற்றின் மூன்றாவது கட்டத்தில் திறன் வாய்ந்த சிகிச்சை,  தரமான பேறுகால அவசரநிலைப் பராமரிப்பு (பயிற்சிபெற்ற மருத்துவ பணியாளர்கள் மற்றும் போதுமான கட்டமைப்பு) மற்றும் இச்சேவைகளை அணுகல் ஆகியவை தாய்மாரைக் காக்க இன்றியமையாதவை.

குறிப்புகள்:

www.who.int/maternal_child_adolescent/documents/MPSProgressReport

www.who.int/mediacentre/factsheets/fs348/en/

www.who.int/medicines/areas/priority_medicines/Ch6_

emedicine.medscape.com/article/275038-overview#a5

www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3688110/

planningcommission.nic.in/aboutus/committee/strgrp/stgp_

www.icmr.nic.in/final/Final%20Pilot%20Report.pdf

file.scirp.org/pdf/OJOG_2015092116115550.pdf

www.unmillenniumproject.org/documents/TheLancetChildHealthMaternalHealth.pdf

www.who.int/pmnch/media/events/2015/gs_2016_30.pdf

nrhm.gov.in/images/pdf/programmes/maternal-health/guidelines/

 

பேற்றுக்குப்பின்  குருதிப்போக்கின் பொதுவான, தென்படும் அறிகுறி பெண்ணுறுப்பின் வழியாக ஏற்படும் கடும் குருதிப்போக்கு ஆகும். இது விரைவில் இரத்தக் குறைபாட்டு அதிர்ச்சியின் குறிகளையும் அறிகுறிகளையும் உருவாக்கும்.

 • இரத்த இழப்பு பொதுவாக யோனி வாயில் தென்படும்.  நச்சுக்கொடி விழுந்த பின் இது குறிப்பாகப் புலப்படும். நச்சுக்கொடி கருப்பைக்குள் தங்கி இருந்தால் (அரைகுறையாகப் பிரிந்த நச்சுக்கொடி அல்லது படலம் அல்லது இரண்டும்) கணிசமான அளவு இரத்தம் தேங்கி இருக்கும்.
 • நச்சுக்கொடி விழுந்தாலும் கூட விரிவடைந்த கருப்பைக்குள் இரத்தம் தேங்கக் கூடும். ஆகவே கருப்பையின் அளவு மற்றும் உரம், பேற்றின் போதும் நச்சுக்கொடி விழுந்த பின்னும் கண்காணிக்கப்பட வேண்டும். கருப்பை மையத்தைத் தொட்டுணர்ந்து இது கண்காணிக்கப்படுகிறது.
 • கருப்பை வலுவிழப்பு இரத்தக் கசிவுக்குக் காரணமாக இருந்தால் குருதிப்போக்கு மெதுவாக இருக்கும். இரத்தக் குறைவால் ஏற்படும் அதிர்ச்சியின் அறிகுறிகளும் நீண்ட நேரத்திற்குப் பின் தோன்றும். பின்வயிற்றரையுறை, அகல்தசைநார் அல்லது கீழ் இனப்பெருக்கப் பாதை அல்லது வயிற்றுக்குழி ஆகிய வடிவங்களில் காயத்தால் ஏற்படும் குருதிப்போக்கு மறைக்கப்பட்டிருக்கும்.

குருதி இழப்பால் ஏற்படும் குருதிக்குறை அதிர்ச்சியின் குறிகள்:

 • இரத்த அழுத்தம் விழுதல் (ஆரம்பத்தில் இயல்பாக இருக்கும்)
 • படபடப்பு, இதய மிகைத் துடிப்பு, தலைக்கிறக்கம்
 • பலவீனம், வியர்வை
 • அமைதியிழப்பு, நிறமிழப்பு
 • சிறுநீர்ப்போக்கு குறைதல்

குறிப்பு:

emedicine.medscape.com/article/275038-overview#a10

கருப்பை போதுமான அளவுக்கு சுருங்க இயலாமை, இனப்பெருக்கப் பாதைக் காயம், கருப்பை சிதைவு, நச்சுகொடி திசுக்கள் தேக்கம் அல்லது தாய் குருதிப்போக்குக் கோளாறுகள் ஆகிய பல்வேறு காரணங்களால் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு நிகழும்.

முதன்மைப் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கின் காரணங்கள்

அ) கருப்பை வலுவிழப்பு: பேற்றுக்குப் பின் கருப்பை சுருங்க இயலாமை கருப்பை வலுவிழப்பு  என அழைக்கப்படுகிறது. உலக அளவில் தாய் மரணத்துக்கு இதுவே மிக முக்கியக் காரணமாகத் திகழ்கிறது. கருப்பை சுருங்கி தகுந்த முறையில் பின்வாங்கப்டாமல் இருப்பதால் இரத்தக்குழாய்கள் அழுத்தப்பட்டு இரத்தம் கட்டுப்படுத்தப்பட முடியாமல் நச்சுக்கொடி இடத்தில் இருந்து குருதிப்போக்கு ஏற்படுகிறது.

 • தேங்கிய நச்சுக்கொடி, நச்சுக்கொடி திசுக்களின் மீதி, படலங்கள், குருதி உறைவு போன்ற கோளாறுகளால் கருப்பை வலுவிழப்புக் குருதிப்போக்கு நிகழும். நச்சுக்கொடி கீழாக பிணைந்திருத்தல் அல்லது பேற்றுக்கு முன்னரே நச்சுக்கொடி விடுபடல் ஆகியவற்றால் உண்டாகும் சிதைவால் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு நிகழும்.
 • பன்கரு, பனிக்குடநீர் மிகைப்பு, அளவில் பெரிய குழந்தை, நார்க்கட்டி ஆகியவற்றால் கருப்பை இழுபடலும் பேற்றுக்குப்பின் குருதிப்போக்குக்கான ஆபத்துக் காரணி.
 • நீடித்த மகப்பேறு அல்லது துரித விசைப்பேறு ஆகியவற்றால் உண்டாகும் களைப்பால் கருப்பைச்சுவர் நடுவடுக்கு சுருக்கம் ஏற்படலாம் (குறிப்பாகத் தூண்டப்படும் போது). மருந்துகளைக் கொண்டு சுருக்கப் தடுக்கப்படும்போதும் நிகழலாம் (ஹேலோஜெனேட்டட் மயக்க மருந்துகள், நைட்ரேட்டுகள், ஊக்கமருந்தல்லாத எதிர்-அழற்சி மருந்துகள், மெக்னீஷியம் சல்பேட், பீட்டா-சிம்பதோமிமெட்டிக்ஸ் மற்றும் நிஃபெடிபைன்). இரத்தச் சோகையும் பேற்றுக்குப்பின் குருதிப்போக்குக்கான ஓர் ஆபத்துக் காரணியாகும்.
 • குழந்தை கருப்பைக்குள் இறந்து மூன்று நான்கு மாதம் தங்குதல், கடும் முன்சூல்வலிப்பு மற்றும் பேறுகால வலிப்பாலும் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு நிகழலாம்.

ஆ) பிறப்புறுப்புக் காயம்: இனப்பெருக்கப் பாதைக் காயம் தானாகவோ அல்லது குழந்தையை எடுக்க கருவிகள் பயன்படுத்தலாலோ ஏற்படலாம். பேற்றின் போது குறிகீழ்ப்பகுதி, பெண்ணுறுப்புச் சுவர், கருப்பைக்கழுத்து, கருப்பை ஆகிய இடங்களில் காயம் ஏற்படலாம். பெண்குறி வாய்கீறல், அறுவைப்பேறு ஆகியவற்றாலும் புண் ஏற்படும். இவை பேற்றுக்குப்பின் குருதிப்போக்குக்கு காரணங்கள் ஆகலாம். குழந்தைப் பேற்றுக்கு நீண்ட காலதாமதம் ஆனாலோ அல்லது விசை பயன்படுத்தி குழந்தைபேறு நிகழ்ந்தாலோ காயம் உருவாகக் கூடும். குறிப்பாகக் குழந்தையின் தலை மற்றும் தாயின் இடுப்பு விகிதத்தில் வேறுபாடு அல்லது கருப்பை மருந்துகளால் தூண்டப்பட்டால் (ஆக்சிடாசின் அல்லது புரோஸ்ட்டாகிளாண்டின்கள்) இது நேரலாம்.  இடுக்கி மூலம் பேறுகாலம் நிகழ்ந்தால் பெரும்பாலும் கருப்பைவாய்க் கிழிதல் ஏற்படலாம். கருப்பைக்குள் அல்லது கருப்பைக்கு வெளியே கருவை கையாளும் போது காயம் ஏற்பட வாய்ப்புண்டு.

ஏற்கெனவே அறுவைப் பேற்று வடு உடையவர்களுக்கு கருப்பை கிழிதல் பரவலாக நிகழக்கூடிய ஒன்றே. முழு அல்லது பாதி அளவு கருப்பைச் சுவர் கிழியும் அளவுக்கான சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு எதிர்கால பேற்றிலும் சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இ) திசு: கருப்பை சுருங்கி விரிவதால் நச்சுக்கொடி விடுபட்டு வெளியேற்றப்படுகிறது. நச்சுக்கொடி முழுமையாக விடுபட்டு வெளியேற்றப்படுவதால்  தொடர்ந்து உள்வாங்கப்பட்டு தகுந்த அளவுக்கு இரத்தக்குழாய்கள் அடைபடுகின்றன.

நச்சுக்கொடி முற்றிலுமாக விடுபடாமல்  ஒரு பகுதி மற்றும் படலங்கள் தேங்குவதால் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு ஏற்படுகிறது. காலத்திற்கு மிகவும்  முன்னராக ஏற்படும் பேற்றில் (<24 வாரங்கள்) நச்சுக்கொடி தங்கும் வாய்ப்புகள் அதிகம்).

ஈ) உறைதல் பிரச்சினைகள்: முன்னரே குருதிப்போக்கு உள்ள பெண்களுக்கும் எதிருறைதல் மருந்துகள் உட்கொள்ளுவோருக்கும் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு ஆபத்து அதிகம். குருதிப்போக்கு கோளாறுகள் சம்பந்தப்பட்ட அசாதாரண நிலைகள் பிறவியிலேயே தொடர்வதாகவும்  பின்னர் பெறப்பட்டதாகவும் இருக்கும். குறை தட்டணு, ஏற்கெனவே இருக்கும் நோயான காரணம் தெரியாத குறை தட்டணு தோல் பழுப்புச் சொறி அல்லது முன்சூல்வலிப்பின் ஒரு சிக்கலான ஹெல்ப் நோய்த்தாக்கதின் பெறப்பட்ட இரண்டாம் நிலை (சிவப்பணு சிதைவு, உயரளவு கல்லீரல் நொதிகள், மற்றும் குறை தட்டணு எண்ணிக்கை), திடீர் நச்சுக்கொடி விழல், உட்குழல் உறைவு  பரவல் மற்றும் சீழ்ப்பிடித்தல் ஆகியவை இதில் அடங்கும்.

ஒரு பெண்ணுக்குக் கீழ்க்காண்பவைகள் இருந்தால் அதன் அடிப்படையில் ஒரு குருதிப்போக்குக் கோளாறு இருக்கக் கூடும்: பூப்பில் இருந்தே அசாதாரண மிகைக் குருதிபோக்குடனான மாதவிலக்கு, குருதிப்போக்கின் குடும்ப வரலாறு, அறியப்படாத காயங்கள் இல்லாமலேயே ஒருவருக்கு குருதிவடிதல், பல் அல்லது இரைப்பைக்குடல் பாதையில் புண் இல்லாமலேயே குருதிக் கசிவு 10 நிமிடங்களுக்கு மேலாக மூக்கில் இருந்து இரத்தம் வடிதல்.

பெரும்பாலான பேற்றுக்குப்பின் குருதிப்போக்கிற்கு அறிந்துகொள்ளக்கூடிய ஆபத்துக் காரணிகள் இருப்பதில்லை. இந்நோய்க்குப் பெரும்பாலும் ஒரு காரணமே இருக்கும். ஆனால் பல காரணங்களும் சாத்தியமே.

இரண்டாம்நிலை பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு: பிறப்புக்குப் பின் 24 மணிநேரத்துக்கும் 12 வாரங்களுக்கும் இடையில் பிறப்புப்பாதை வழியாக அசாதரண குருதிப்போக்கு. இதனுடன் தொற்றும் இருக்கும்.

கர்ப்பத்தின் போதும் பிறப்பின் போதும் பெண்கள் பராமரிப்பைப்  பெறுவதையும்  தேடுவதையும்  தடைசெய்யும் காரணிகள்:

 • வறுமை
 • தூரம்
 • தகவலின்மை
 • சேவைக் குறைவு
 • கலாச்சார பழக்கவழக்கம்

தரமான தாய்நலத்தை அணுகுவதற்கு இவைகளே தடைகளாக இருப்பவை. தாய் நலத்தைப் பேண சுகாதார அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் இவற்றை இனம்கண்டு அகற்ற வேண்டும்.

குறிப்புகள்:

www.rcog.org.uk/en/guidelines-research-services/guidelines/gtg52/

www.who.int/mediacentre/factsheets/fs348/en/

emedicine.medscape.com/article/275038-overview#a7

குழந்தைப் பேற்றின் போதும் அதற்குப் பின்னரும் கர்ப்பிணியை கவனமாகக் கண்காணித்தே பொதுவாகப் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு கண்டறியப்படுகிறது. குழந்தை பிறந்த பின் குருதி இழப்பு மற்றும் பிற மருத்துவ ரீதியான அளவீடுகள் கவனமாகக் கண்காணிக்கப்பட வேண்டும். குருதி இழப்பு வீதத்தைக் கணக்கிடும் போது உடல் எடை மற்றும் முதலில் இருந்த இரத்தப் புரத அளவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும் (பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு ஏற்கெனவே இருக்கும் இரத்தச் சோகையால் அதிகரிக்கக் கூடும்).

 • இரத்தத்தின் கன அளவு உடல் எடையைப் பொறுத்தது.  உத்தேசமான இரத்தத்தின் கன அளவு (லிட்டரில்)  கிலோ கிராம் உடல் எடை வகுத்தல் 12-க்கு சம்மாக இருக்கும்.​
 • பார்வையால் இரத்த இழப்பை மதிப்பிடுவது சரியாக இருப்பதில்லை. மருத்துவ ரீதியாக இரத்த இழப்பை மதிப்பிட்டறியவும் போதுமான சான்றாதாரங்கள் இல்லை.​
 • பிறப்புறுப்பு மூலம் நிகழும் பேற்றுக்கு சேகரிப்புச் சீலைகள் அல்லது எடையிடும் ஒற்றுக்கள் பார்வையால் செய்யப்படும் இரத்த இழப்பு மதிப்பீடுகளை விடத் துல்லியமாக இருக்கும்.​
 • மருத்துவ மறுசீரமைப்பில் பங்குகொள்ளுவது ஆரம்பக் கட்ட  நோய்கண்டறிதலையும்  பேற்றுக்குப்பின் குருதிப்போக்கிற்கு சிகிச்சை அளிப்பதையும் ஊக்குவிக்கும்.​
 • எழுதப்பட்ட மற்றும் படத்தோடு கூடிய வழிகாட்டுதல்கள் பேறுகாலப் பிரிவுகளில் பணிபுரிவோர் இரத்த இழப்பை மதிப்பிட உதவி செய்யும்.

பேற்றுக்குப் பின் குருதிப்போக்கை விரைவாகக் கண்டறிவது வெற்றிகரமான மேலாண்மைக்கு முக்கியம். தொடர் குருதிக்குறை அதிர்ச்சி உருவாதற்கு முன் அடிப்படை காரணத்துக்கான நடவடிக்கைகளும் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆய்வுகள்:

 • பிறப்புக்கு முன்னும் பேறுகாலத்தின் போதும் இரத்தச் சோகையைக் கண்டறிய முழு இரத்த எண்ணிக்கை சோதனை செய்யப்பட வேண்டும்.
 • பிறப்புக்கு முன் இரத்த வகை மற்றும் எதிர்பொருள் சோதனை செய்ய வேண்டும்.
 • பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு ஆபத்து அதிகம் உள்ளவர்களுக்கு  குறுக்கு இரத்தப் பொருத்தம் காண வேண்டும். இவற்றில் அடங்குவன: முன்நிகழ்ந்த கடும் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு, கருப்பைக் கழுத்தை நச்சுக்கொடி அடைத்தல், கருப்பைச் சுவருக்குள் நச்சுக்கொடி வளர்தல், முந்திய பல அறுவைப் பேறுகள், அறிந்த இரத்த உறைவுக் கோளாறுகள், கடும் தட்டணுக் குறைபாடு ஆகியவை ஆகும் (தேவைப்படும் இரத்த வகை மற்றும் இரத்தப் பொருட்களுக்கு முன்கூட்டி இரத்த வங்கியில் அறிவித்தல்).
 • உறைவு ஆய்வுகள்
 • பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு ஆபத்து உள்ளவர்களுக்குப் பிறப்புக்கு முன் கேளா ஒலி சோதனை.
 • ஏற்கெனவே அறுவைப் பேறு சிகிச்சை பெற்றவர்கள் கேளா ஒலி சோதனை மூலம் நச்சுக்கொடி அமைநிலையை உறுதிசெய்தல்.

பேறுகாலத்தின் நான்காவது கட்டத்தில் மருத்துவப் பரிசோதனை:

 • கருப்பை உரம் மற்றும் அளவு மதிப்பீடு
 • நச்சுக்கொடி விழுந்தால் சோதித்தல்
 • நச்சுக்கொடி மற்றும் படலங்களை கருப்பையில் சோதனை செய்தல்
 • உறைந்த குருதிக்கட்டியை கையால் சோதித்துக் காணல்
 • யோனி மற்றும் கருப்பை கழுத்தில் காயம் உள்ளதா என சோதித்தல்
 • இரண்டாம் கட்டப் பேற்றுக்குப் பின் குருதிப்போக்கை சோதித்தல்:

o   மேல் கீழ் பிறப்புறுப்பு ஒற்றுக்கள்

o   காய்ச்சல் இருந்தால் இரத்த திசுச் சோதனை

o   முழு இரத்த எண்ணிக்கை சோதனை

o   சி-ரியாக்டிவ் புரோட்டின்

o   கருத்தரித்தல் பொருள் எதுவும் தங்கி இருக்கவில்லை என்பதை உறுதி செய்ய இடுப்பு கேளா ஒலி சோதனை.

குறிப்புகள்:

emedicine.medscape.com/article/275038-overview#a10

www.gfmer.ch/omphi/pph/pdf/pph.pdf

பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு நிகழும் பெண்களில் பலருக்கு அடையாளங் காணக்கூடிய ஆபத்துக் காரணிகள் இருப்பதில்லை. ஆகவே பேறுகாலம் ஒரு வல்லுநரின் கண்காணிப்பின் கீழ் நடைபெறும்போது அனைவருக்கும் மூன்றாவது கட்டத்தில் தீவிரமான மேலாண்மை அளிக்கப்படவேண்டும்.

பேறுகால மூன்றாவது கட்டத்தின் செயல் மேலாண்மையின் மூன்று கூறுகள்

1.       அனைத்துப் பெண்களுக்கும் பேற்றின் மூன்றாவது கட்டத்தில் வழக்கமாக ஆக்சிடாசிக் மருந்துகள் அளிக்க வேண்டும். முன்தடுப்பு ஆக்சிடாசிக் மருந்துகள் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு ஆபத்தை 60% குறைக்கிறது. ஆக்சிடாசின் இல்லாதபோது வாய்வழி மிசோபிராஸ்டல் அளிக்கலாம். வீட்டு பிரசவத்தின் போது ஆஷா சுகாதாரப் பராமரிப்பாளர் இம்மருந்தைக் கொடுக்கலாம்.**

ஆக்சிடாசின் பயன்படுத்திய பின்னும் குருதிப்போக்கு நிற்காவிட்டால் அடுத்த யூட்டிரோ டானிக் எர்காட் டெரிவேட்டிவ்களை (மெதர்ஜின்) அல்லது சப்லிங்யுவல் மைசோபிரிஸ்டால் பயன்படுத்தலாம். (எர்காட் டெரிவேட்டிவ்கள் (மெத்ர்ஜின்) மிகை ரத்த அழுத்தக் கோளாறுகளுக்கு எதிர்வினை காட்டும்).

2.       தொப்பூழ் கொடி இடுக்குதலைத் தாமதப்படுத்துதல் (ஏறக்குறைய பிறப்புக்குப் பின் 1-3 நிமிடங்களில்) அனைத்து பேறுகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. பிறந்தகுழந்தை பராமரிப்பை உடனடியாகத் துவங்க வேண்டும்.

3.       நச்சுக்கொடியை அகற்ற கட்டுப்படுத்தப்பட்ட கொடி இழுப்பு முறை பரிந்துரைக்கப்படுகிறது. வல்லுநர்கள் இருந்தால் கொடி விழுந்த பின் கருப்பை உருவல் சிறந்ததாகும்.

பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு மேலாளுமை:

ஆரம்பக் கட்ட மதிப்பீடும் அடிப்படை சிகிச்சையும் கீழ்க்கண்டவாறு மேற்கொள்ளப்பட வேண்டும்:

1.       உதவியை அழைத்தல்

2.       காற்றுப்பாதை, மூச்சு, குருதியோட்டம் மதிப்பிடல்

3.       கூடுதல் உயிர்வளி அளித்தல்

4.       நரம்பு இனம் காணல்

5.       நரம்புவழி  படிகத் திரவம் அளிக்கத் தொடங்குதல்

6.       இரத்த அழுத்தம், நாடி மற்றும் சுவாசம் கண்காணித்தல்

7.       சிறுநீர் வடித்தல் மற்றும் சிறுநீர் அளவு கணித்தல்

8.       இரத்த மாற்று தேவை மதிப்பிடல்

9.       நரம்புவழி உயிர்வளி செலுத்துதல்

10.   முழு இரத்த எண்ணிக்கை, உறைதல் திரை, இரத்த வகை, குறுக்கு-பொருத்தம் ஆகிய ஆய்வக சோதனைகள் தொடங்குதல்.

குருதிப்போக்கை கண்காணித்து காரணத்தைத் தீர்மானித்தல்.

() கருப்பை வலுவிழப்பு சந்தேகப்பட்டால்:

·         கருப்பை நீவல் (பிறப்புறுப்பு வழியாக குழந்தைப் பேறு நிகழும்போது  கருப்பை வலுவிழப்பு ஏற்படுவதால் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கிற்கு ‘யூட்டிரின் பேக்கிங்’ பரிந்துரைக்கப்படுவதில்லை).

 • இருகர கருப்பை அமுக்கம்
 • மகாதமனி புற அமுக்கம்
 • பலூன் அமுக்கம்

சிகிச்சைக்குப் பலன் கிட்டவில்லை என்றாலோ ஏற்ற வசதி இல்லை என்றாலோ உயர் வசதிகள் கொண்ட மருத்துவமனைக்குக் கர்ப்பணியைக் கொண்டு செல்ல வேண்டும். நரம்புவழியாக மருந்துகளை செலுத்தி பெண்ணை உரிய வெப்பநிலையில் வைத்திருக்கவும்  இரத்த ஓட்டம் அனைத்து முக்கிய உறுப்புகளுக்குச் செல்லவும் கால்கள் உயர்ந்த நிலையில் இருக்கும்படியாக வைக்க வேண்டும். உடன் செல்லும் செவிலியர் பெண்ணின் வயிற்றைத் தொடர்ந்து  தடவுவதோடு தேவைப்பட்டால்  அமுக்கவும் வேண்டும்.

மருந்து அல்லது இயந்திரகதியான நடவடிக்கைகள் வெற்றிபெறவில்லை என்றால் அறுவை சிகிச்சை முறைகளை நாட வேண்டும்:

 • அழுத்தத் தையல்கள்
 • கருப்பைத் தமனிகளை இருபுறம் இடுக்கல்
 • கீழ்ப்புறத் தமனிகளை இருபுறம் இடுக்கல்
 • கருப்பைநீக்கம்

) நச்சுக்கொடி முழுமையாக விழாவிட்டால்

 • ஆக்சிடாசின்
 • தங்கிய பகுதிகளை கையால் அகற்றல்
 • மெதுவாக கியூரெட் மூலம் அகற்றல்
 • குருதிப்போக்குத் தொடர்ந்தால் கருப்பை வலுவிழப்பு சிகிச்சை அளித்தல்

)நச்சுக்கொடி விழாவிட்டால்

 • கட்டுப்படுத்தப்பட்ட கொடி இழுவையுடன் கூடுதல் ஆக்சிடாசின் அளித்தல்

முழு நச்சுக்கொடியும் இன்னும் விழாமல் இருந்தால்

 • முற்தடுப்பு நுண்ணுயிர்க்கொலிகள் அளித்து எந்திர முறையில் நச்சுக்கொடியை அகற்றுதல்.

() கீழ் பிறப்புறுப்புப் பாதைக் காயத்தால் பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு: அதிக அளவில் குருதிப்போக்கு அல்லது கருப்பை சுருக்கத்துடன் அதிர்ச்சி:

 • கீழ் பிறப்புறுப்புக் காயம்
 • குருதிப்போக்கு தொடர்ந்தால் டிரானெக்சாமிக் அமிலம் அளித்தல்

(உ) கருப்பைக் கிழிவு அல்லது வெடிப்பு-அதிகக் குருதிப்போக்கு அல்லது அதிர்ச்சி

 • கருப்பையை சீரமைக்க வயிற்றறுவை. சீரமைக்க முடியாவிட்டால் கருப்பை அகற்றல்.
 • குருதிப்போக்கு தொடர்ந்தால் ட்ரேனெக்சாமிக் அமிலம் அளித்தல்.

() கருப்பை தலைகீழாதல்:

 • உடனடியாகக் கையால் நேர்செய்தல்
 • நீராற்றலால் சீராக்குதல்
 • மனித ஆற்றலால் நேராக்குதல்
 • வயிற்றறுவை
 • சீராக்க முடியாவிட்டால் கருப்பை அகற்றல்

() உறைதல் கோளாறு: மேற்கண்ட கோளாறுகள் இல்லாமல் குருதிப்போக்கு இருந்தால் உறைதல் கோளாறுகளுக்காக இரத்தப் பொருட்களைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

இரண்டாம் நிலை  பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு  என்பது பிறப்புக்குப் பின் பிறப்புறுப்புப் பாதையில் இருந்து 24 மணி நேரம் முதல் 12 வாரங்கள் வரை ஏற்படும் அசாதாரணக் குருதிப்போக்கு. இது பொதுவாக தொற்றோடு தொடர்புடையது. இதற்கு நுண்ணுயிர்க்கொல்லிகள் மற்றும் யூட்டிரோடானிக்ஸ் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.

அதிக அளவு அல்லது தொடர் இரத்தப் போக்கு இருந்தால்  கேளா ஒலி கண்டறிதல் எதுவாக இருந்தாலும் அறுவை சிகிச்சை அளிக்கப்படும்.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/10665/44171/1/9789241598514_eng.pdf

www.gfmer.ch/omphi/pph/pdf/pph.pdf

http://nrhm.gov.in/images/pdf/programmes/maternal-health/guidelines

 

குழந்தைப் பேற்றின் போது பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மில்லினியம் வளர்ச்சி இலக்கை அடையவும் பேற்றின்பின் குருதிப்போக்கை தடுப்பதும் அதற்கு சிகிச்சை அளிப்பதும் முக்கிய நடவடிக்கைகள் ஆகும்.

 • தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலம்  வளமான நிலைத்த சமுதாயங்களை கட்டுவதில் பெண்களும் இளம்வயதினருமே முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.  ஆரோக்கியத்துக்கான தங்கள் உரிமை, நலவாழ்க்கை, கல்வி, சமுதாயத்தில் முழுமையாகவும் சமமாகவும் பங்குபெறல் ஆகியவற்றை இளைஞர்கள் அறிந்து கொள்ள சுகாதாரக் கலவி அவசியம். முக்கியமான பரிசோதனைகள், மருத்துவமனை பேறுகாலம், சிறுகுடும்பத்  திட்டம், ஆண்களிடம் இருந்து ஆதரவான நடவடிக்கை ஆகியவற்றைப் பற்றி தம்பதியினருக்கு அறிவு புகட்ட வேண்டும்.
 • சரியான சமயத்தில் மருத்துவமனையை நாடல் மற்றும் போக்குவரத்து வசதியை இனம் கண்டு வைத்தல் ஆகியவற்றைப் பற்றி ஆஷா/ஏஎன்எம் பணியாளர்கள் குடும்ப அளவில் முடிவெடுப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிக்கு உணர்த்த வேண்டும். பேற்றுக்குப்பின் குருதிப்போக்கின் ஆபத்துக் காரணிகள் பேற்றுக்கு முன் அல்லது பேற்றின் போது காணப்படலாம்.  ஆகவே சிக்கல் ஏற்பட்டால் கையாளுவதற்கான தயாரிப்பும் திட்டங்களும் இருக்க வேண்டும். ஆபத்துக் காரணிகள் எழுவதற்கு ஏற்ப இவற்றை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும்.
 • மருத்துவ மனையில் பிரசவத்தை வைத்துக் கொள்ளுமாறு கர்ப்பிணியையும் அவரது உறவினர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்.  பேற்றுக்குப்பின் குருதிப்போக்கு அபாயம் இருக்குமானால் இரத்த வங்கி வசதி கொண்ட மருத்துவ மனையிலேயே பிரசவத்தை வைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவமனையில் பிரசவத்தை வைத்துக் கொள்ள முடியாத நிலையில் வீட்டுப் பிரசவம் நிகழ்ந்தால் ஓர் துணைமருத்துவப் பணிப்பெண் அல்லது பிரசவத்தில் திறன் பெற்ற ஒருவரால் பிரசவம் பார்க்க வேண்டும். வீட்டுப் பிரசவத்தில் துணைமருத்துவப் பணிபெண் பிரசவம் பார்க்க முடியாத நிலையில் ஆஷாவினர் முன்கூட்டியே மிசோபிராஸ்டாலை 8 வது மாத கர்ப்பத்தின் போதே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பேற்றுக்குப்பின் குருதிப்போக்கைத் தடுக்கப் பிரசவத்துக்குப் பின் சுயமாகவே இதை எடுத்துக்கொள்ளலாம்.**
 • பிரசவ வசதிகளை வலுப்படுத்துவதன் மூலமாகவும், மூன்றாம் கட்ட மேலாண்மையைத் தீவிரப்படுத்துவதன் மூலமும் ஆரம்பக் கட்டப் பரிசோதனைகள் மூலமாகவும் இந்நோயைக் குறைக்கலாம். மருத்துவ மனை பிரசவங்கள் நாட்டில் அதிகரித்து வந்தாலும் பேறுகால அவசர நிலைகளைக் கையாளும் திறனும் உயிர் ஆபத்து சிக்கல்களைக் கையாளும் திறனும் மேம்படுத்தப்பட வேண்டும்.
 • இந்திய அரசின், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இது குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது: பேற்றுக்குப்பின் குருதிப்போக்கைத் தடுத்தல் மற்றும் மேலாளுமை செய்தல் பற்றிய வழிகாட்டும் குறிப்புகள்.* மேலும் பேறுகால அதி சார்பு அலகுகள் (HDU) மற்றும் பேறுகாலத் தீவிரப் பராமரிப்பு அலகுகள் (ICU) என்ற கருத்துருக்களை முன்மொழிந்துள்ளது.** ஒவொரு மாவட்ட மருத்துவ மனையும் ஒரு HDU-வைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் ஒரு ICU-வைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. சமுதாய சுகாதார மையங்களிலும் தொகுதி ஆரம்ப சுகாதார மையங்களிலும்  ஆதாரங்களைப் பொறுத்து மாநிலங்கள் HDU க்களை அமைக்க வேண்டும்.

குறிப்புகள்

www.who.int/pmnch/media/events/2015/gs_2016_30.pdf

www.who.int/maternal_child_adolescent/documents/MPSProgressReport09-FINAL.pdf

www.who.int/maternal_child_adolescent/documents/MPSProgressReport09-FINAL.pdf

www.who.int/whr/2005/chapter4/en/index1.html

nrhm.gov.in/images/pdf/programmes/maternal-health/guidelines/Guidance_Note_on_Prevention_&_Management_of_Postpartum_Haemorrhage.pdf

** nrhm.gov.in/images/pdf/programmes/maternal-health/guidelines/Guidelines_for_Obstetric_HDU_and_ICU.pdf

 

 • PUBLISHED DATE : Aug 31, 2018
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Aug 31, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.