முன்சூல்வலிப்பு

முன்சூல்வலிப்பு என்பது ஒரு பிரசவக்கால மிகை இரத்த அழுத்தக் கோளாறு ஆகும்.  இது தாய் மற்றும் பிறப்பு சார்ந்த மரணத்துக்கும் (இறந்து பிறத்தல், முதல் வாரத்தில் பிறந்த குழந்தை இறத்தல்) நோய்க்கும் முக்கியக் காரணம் ஆகும்.

உலக அளவில் 10% கர்ப்பிணிகளுக்கு மிகை இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.  முன்சூல்வலிப்பு 3-5% மகப்பேற்றைப் பாதிக்கிறது. முன்சூல்வலிப்புடன், பேறுகால வலிப்பு, கர்ப்பகால இரத்த மிகை அழுத்தம், நீடித்த மிகை இரத்த அழுத்தம் ஆகிய கர்ப்பக் கோளாறுகளும் இணைந்து ஏற்படலாம்.

இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் தாய் மரணத்தில் பத்தில் ஒன்று கர்ப்பக்கால மிகை இரத்த அழுத்தக் கோளாறுகளுடன் தொடர்புடையதாக உள்ளது.

இந்தியாவில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் முன்சூல்வலிப்பு 8-10% என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் குறிப்பிட்ட அந்த மக்கள் தொகையில்  கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் மிகை இரத்த அழுத்தக் கோளாறு 7.8 % என்றும் இதில் முன்சூல்வலிப்பு 5.4% என்றும் கண்டறியப்பட்டுள்ளது*.

முன்சூல் வலிப்பு கர்ப்பத்தோடு தொடர்புடைய மிகை இரத்த அழுத்தக் கோளாறு. இதில் பன் மண்டலத் தொடர்பு உள்ளது.  இது குருதி அகக்குழல்  கோளாறாலும் குழல்பிடிப்பாலும் உருவாகிறது. கர்ப்பத்தின் 20 வாரங்களில் தோன்றி பேற்றுக்குப் பின் 4-6 வாரங்கள் வரை நீடிக்கும்.

அமெரிக்க  மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் மருத்துவர் பேரவை (ACOG) 2013-ல் அளித்த வழிகாட்டுதலின் படி முன்சூல்வலி கண்டறியப்பட இரத்த மிகை அழுத்தத்துடன் சிறுநீரில் புரத அளவு அதிகம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  இவற்றின் அறிகுறி இல்லாமலும் சிறுநீரகம் மற்றும் கல்லிரலில் மாற்றம் நிகழும் என்பதற்குச் சான்றுகள் உள்ளன.  சிறுநீரில் உள்ள புரதத்தின் அளவு நோய் எவ்வளவு கடுமையாக அதிகரிக்கும் என்பதை முன்கணிப்பதில்லை.

கர்ப்ப காலத்திலும் மகப்பேற்றுக்குப் பின்னும், நிலைத்த்த், தொடர் மிகை இரத்த அழுத்தத்துடன் சிறுநீர்ல் அதிக அளவில் புரதம்  இருத்தல் அல்லது புதிய தட்டணு  அதிகரித்தல், சிறுநீர் அல்லது கல்லீரல் மாற்றங்கள், நுரையீரலில் நீர்மம் அல்லது வலிப்பு மற்றும்/அல்லது பார்வைக் கோளாறுகள் போன்ற மூளை பாதிப்பு அறிகுறிகள் ஆகியவற்றைக் கொண்டு தற்போது முன்சூல்வலிப்பு கண்டறியப்படுகிறது.

HEELP நோய்த்தாக்கமும் பேறுகால வலிப்பும் முன்சூல்வலிப்பின்  கடும் சிக்கல்கள் ஆகும். இத்தகைய சிக்கல்கள் கொண்ட கர்ப்பிணிகளுக்கு  தகுந்த நேரத்தில் உரிய பராமரிப்பு அளிப்பதன் மூலம் முன்சூல்வலிப்பினால் ஏற்படும் இறப்பைத் தடுக்கலாம்.

குறிப்புகள்:

apps.who.int

www.preeclampsia.org

www.acog.org

www.preeclampsia.org

www.ijpsr.info

கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டத்தில்  இருந்தே நோயுடலியல் மாற்றங்கள் (உ-ம். நச்சுக்கொடி போதுமான அளவுக்கு உருவாகாமை) இருந்தாலும் இரண்டாம் கட்டத்திலேயே  மிகைச்சிறுநீர்ப் புரதம் தெளிவாகக் காணப்படும்.

முன்சூல்வலிப்பின் அறிகுறிகள்:

 • மிகை இரத்த அழுத்தம்:  (அ)  இதயச் சுருக்க இரத்த அழுத்தம் (SBP) 140 mm Hg –க்கு மேல் அல்லது இணையாக  இருத்தல் அல்லது இதய விரிவு இரத்த அழுத்தம் (DBP)  90 mm Hg-க்கு மேல் அல்லது இணையாக இருத்தல் அல்லது முதலில் இரத்த அழுத்தம் இயல்பாக இருந்த நோயாளிக்கு குறைந்தபட்சம் 4 மணி நேர இடைவெளியில் இரு முறை அதிகமாக இருத்தல். அல்லது

(ஆ) இதயச் சுருக்க அழுத்தம் 160 mm Hg-க்கு அதிகமாக அல்லது இணையாக இருத்தல்  அல்லது இதய விரிவு அழுத்தம் 110 mm Hg –க்கு அதிகமாக அல்லது இணையாக இருத்தல் (இந்நேர்வில், சமயத்தில் மிகை இரத்த அழுத்த சிகிச்சை அளிப்பதற்காக சில நிமிடங்களில் மிகை அழுத்தத்தை உறுதி செய்யலாம்).

 • சிறுநீர்ப்புரதம்: ஒரு 24 மணி நேர சிறுநீர் மாதிரியில் புரத அளவு 0.3 கிராமுக்கும் அதிகமாக இருத்தல், ஒரு புரத (mg/dL)/கிரியேட்டினைன் (mg/dL)  விகிதம் 0.3 அல்லது அதிகம் அல்லது முன்சூல்வலிப்பைக் கண்டறிய சிறுநீர் முக்குச்குச்சி புரதம் 1+  (ஓர் அளவியல் அளவீடு இல்லாத பட்சத்தில்) தேவைப்படும்.
 • வீக்கம்: கை மற்றும் முக வீக்கம், குறிப்பாக கண்களைச் சுற்றி (கால் வீக்கம் கர்ப்ப காலத்தில் பொதுவாகவே காணப்படுவதால் அது முன்சூல்வலிப்பின் அறிகுறி அல்ல).
 • திடீர் எடை கூடுதல்: ஒரே வாரத்தில் 5 பவுண்டுகள் (2.27 கிலோ) கூடுதல்.
 • தலைவலி: சாதாரண தலைவலி மருந்துகளால் நீக்க இயலாத மந்த அல்லது கடும் தெறிக்கும் தலைவலி.
 • குமட்டல் அல்லது வாந்தி: குறிப்பாக, கர்ப்ப கால நடுப்பகுதியில் திடீரென ஏற்படுவது (ஆரம்பக் கர்ப்பத்தில் ஏற்படும் காலைநோய் அல்ல).
 • வயிற்றுவலி: இரைப்பைக்கு மேல் அல்லது மேல் வலது கால்பகுதியில், பொதுவாக விலாவுக்குக் கீழ்.
 • பார்வை மாற்றங்கள்: புள்ளிகள் அல்லது மின்னொளி காணல், பார்வை மங்கல், பகுதி அல்லது முழு பார்வை இழப்பு.
 • மூச்சுவிடுதலில் சிரமம், இரைத்தல், மூச்சுத் திணறல்
 • மிகை அனிச்சை செயல்பாடு

கடும் மிகை இரத்த அழுத்தம், மிகையனிச்சை செயல், தலைவலி (சாதாரண மருந்துகளால் கட்டுப்படாமல் அதிகரித்தல்), பார்வை மங்கல், குறைசிறுநீர் (24 மணி நேரத்தில் 400 ml மட்டுமே), மேல் வயிற்று வலி (இரைப்பை மேல் அல்லது வலது மேல் கால் பகுதியில் வலி), நுரையீரல் வீக்கம் (மூச்சு விடுதலில் சிரமம்) ஆகியவை கடும் முன்சூல்வலிப்பின் அறிகுறிகள் ஆகும்.

குறிப்புகள்:

emedicine.medscape.com

www.preeclampsia.org

www.nichd.nih.gov

www.preeclampsia.org

japi.org

www.acog.org

 

முன்சூல்வலிப்பின் நோய்த்தோற்றவியல் அரைகுறையாகவே புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. கர்ப்ப காலத் தொடக்கத்தில் நச்சுக்கொடி உருவாகும் போது ஏற்படும் இடையூறுகளும் அதைத் தொடர்ந்து உருவாகும் பொதுவான அழற்சியும் அதிகரிக்கும் அடித்திசு சிதைவும் இதனோடு தொடர்புடையதாக இருக்கக் கூடும்.

ஆபத்துக் காரணிகள்:

 • இளம்வயதில் அல்லது 35 வயதுக்குப் பின்னர் முதல் முறையாகக் கருவுறுதல்.
 • உடல்பருமன்.
 • மிகை இரத்த அழுத்தம் அல்லது முன்னர் ஏற்பட்ட கருவுறலில் முன்சூல்வலிப்பு.

(முதல் பிரசவத்தில் முன்சூல் வலிப்பால் சிக்கல் ஏற்பட்ட கர்ப்பகால வயதும் தாயின் உடல் நிறை அதிகரிப்பும் முன்சூல் வலிப்பு ஆபத்தைக் கூட்டும்).

 • முன்சூல் வலிப்புநோய்க் குடும்ப வரலாறு: முன்சூல்வலிப்புள்ள பெண்களின் 20-40% மகள்களுக்கும் 11-37% சகோதரிகளுக்கும் இக்கோளாறு ஏற்படலாம்.
 • கர்ப்பத்துக்கு முன் மிகை இரத்த அழுத்தம் அல்லது சிறுநீரக நோய்கள்.
 • நீரிழிவு, சிறுநீரக மண்டலத் தொற்று, ஒற்றைத் தலைவலி, வாத மூட்டழற்சி, மண்டலம் சார் செம்முருடு, உலர்நகத் தடிப்பு, பல்லீறு நோய்கள், பலகட்டி சூற்பை நோய்த்தாக்கம், கர்ப்பகால நீரிழிவு, அரிவாள் செல் நோய் போன்ற கோளாறுகள் கொண்ட பெண்களில் முன்சூல்வலிப்பு பரவலாகக் காணப்படும்.
 • முட்டைக் கொடை, விந்தணுக் கொடை, செயற்கைப் புறமுறை கருத்தரிப்பு ஆகியவற்றில் முன்சூல்வலிப்பு பொதுவாகக் காணப்படும்.
 • மிகை அல்லது பெரும் நச்சுக்கொடி (பல கரு, முத்துக்கர்ப்பம், பனிக்குடநீர் மிகைப்பு, கருப்பை நீர்க்கோவை போன்றவை).

குறிப்புகள்:

www.nichd.nih.gov

 apps.who.int

 www.ajog.org

முன்சூல்வலிப்பைக்  கண்டறிவதற்கான அடிப்படைகள் (ACOG)

இரத்த அழுத்தம்:

 • கர்ப்பத்துக்கு முன் இயல்பாக இருக்கும் ஒரு பெண்ணின் இரத்த அழுத்தம்,  கர்ப்பம் ஏற்பட்டு  20 வாரத்துக்குப் பின் இதயச்சுருக்க இரத்த அழுத்தம் 140 mmHg அல்லது அதிகமாக அல்லது இதயவிரிவு இரத்த அழுத்தம்  90 mmHg அல்லது அதிகமாக  4 மணி நேர இடைவெளி விட்டு அளக்கும் போது இருத்தல்.
 • இதயச் சுருக்க அழுத்தம் 160 mm Hg அல்லது  அதிகமாக இருத்தல்  அல்லது இதய விரிவு அழுத்தம் 110 mm Hg அல்லது அதிகமாக இருத்தல். மிகை இரத்த அழுத்த சிகிச்சை அளிப்பதற்காக சில நிமிடங்களில் மிகை அழுத்தத்தை உறுதி செய்யலாம்.

மேலும்

சிறுநீர்ப்புரதம்:

 • ஒரு 24 மணி நேர சிறுநீர் சேகரிப்புக்கு 300 மி.கிராமைவிடக் கூடுதலாக அல்லது சமமாக இருத்தல் (அல்லது கால அளவுள்ள சேகரிப்பில் இருந்து இந்த அளவை மதிப்பிடல்) அல்லது
 • புரத/கிரியேட்டினைன் விகிதன் 0.3 விடக் கூடுதல் அல்லது சமம்.
 • தோய்த்தல் குச்சி மதிப்பு +1 (பிற அளவிடும் முறைகள் இல்லாத போது)

அல்லது சிறுநீர்ப்புரதம் இல்லாத போது, கீழ் வருவனவற்றுடன் புதிதாக மிகை இரத்த அழுத்தம் உருவாகுதல்:

குருதித்தட்டுக் குறை- தட்டணு (பிளேட்லெட்) எண்ணிக்கை 100,000/மைக்ரோலிட்டருக்கும் குறைவாக இருத்தல்.

சிறுநீரகக் குறைதிறன் -  ஊனீர் கிரியேட்டினைன் அடர்த்தி 1.1mg/dL – ஐ விட கூடுதலாக இருத்தல் அல்லது பிற சிறுநீரக நோய்கள் இல்லாதபோது ஊனீர் கிரியேட்டினைன் அடர்த்தி இரட்டிப்பாதல்.

கல்லீரல் செயல்பாடு பாதிப்பு: கல்லீரல் மாறுஅமினேசுகளின் அடர்த்தி இயல்பாக இருப்பதைவிட இரட்டிப்பாக இரத்தத்தில் கூடுதல்.

நுரையீரல் வீக்கம்

பெருமூளை அல்லது பார்வை அறிகுறிகள்

புதிய ACOG வழிகாட்டுதல் 2013-ன் படி முன்சூல்வலிப்பைக் கண்டறிய சிறுநீர்ப்புரத மிகைப்பைக் கண்டறியத் தேவை இல்லை. கர்ப்பகாலத்தில் அல்லது பேற்றுக்குப் பின் மிகை இரத்த அழுத்தத்தோடு  சிறுநீரில் மிகைப்புரதம் அல்லது புதிதாக இரத்தத் தட்டணு குறைதல், சிறுநீரகம் அல்லது கல்லீரலில் பிரச்சினை, நுரையீரலில் நீர்மிகைத்தல் அல்லது வலிப்பு மற்றும் அல்லது பார்வைக் கோளாறு போன்ற மூளை அறிகுறிகள் ஆகியவற்றால் தற்போது முன்சூல் வலிப்பு கண்டறியப்படுகிறது.

சோதனைகள்: முன்சூல்வலிப்பு அதிகரிப்பை மதிப்பிட பரிந்துரைக்கப்படும் சோதனைகள்:

இரத்த சோதனைகள்: கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்திறன் சோதனைகள், சிவப்பணு, தட்டணு எண்ணிக்கை மற்றும் உறைதல் சோதனை.

சிறுநீரக மதிப்பாய்வு: நோக்கற்ற ஒரு சிறுநீர் மாதிரித்  தோய்ப்புக் குச்சி சோதனையில் 1+ புரதம் (வேறு அளவீட்டு மதிப்பீடுகள் இல்லாதபோது). இருப்பினும் ஒரு சிறுநீர் மாதிரி அல்லது 24 மணி நேரத்தில் சேகரிக்கப்பட்ட  பல சிறு நீர் மாதிரிகளையும் சாத்தியமாகும் போதெல்லாம்  பயன்படுத்தி  புரதம் மற்றும் கிரியேட்டினைன் அளவை மதிப்பிடலாம்.

மீயொலிவரைவு: கரு நிலை மற்றும் கரு வளர்ச்சியை மதிப்பிட மீயொலிவரைவு பயன்படுத்தப்படுகிறது. பிறப்புக்கு முந்திய வளர்ச்சி குன்றல் மற்றும் குறைவளர்ச்சியை கண்டறிய வயிற்றுக்குறுக்கு மீயொலிவரைவு, தொப்புள்கொடி தமனி டாப்லர் மீயொலிவரைவு மூலம் பரிசோதனை செய்யலாம்.

அழுத்தமற்ற சோதனை அல்லது உயிருடலியல் விவரம்: சிசு கருப்பைக்குள் நகரும்போது குழந்தையின் இதய விகித மாற்றங்கள் எவ்வாறு இருக்கின்றன என்று சோதனை செய்யும் ஓர் எளிய சோதனையே அழுத்தமற்ற சோதனை. உயிருடலியல் விவர சோதனை என்பது பிறப்புக்கு முன்னான மதிப்பீடு எண்ணிக்கை கொண்ட ஒரு கேளா ஒலி சோதனையாகும். இது ஒரு கரு கேளா ஒலி சோதனையையும் ஓர் அழுத்த சோதனையையும் இணைத்து குழந்தையின் சுவாசம், தசைத்திறன், அசைவு மற்றும் கருவைச் சுற்றியுள்ள பனிக்குடக் கன அளவு ஆகியவற்றைப் பற்றிய கூடுதல் விவரங்களை அளிக்கிறது.

குறிப்புகள்:

www.webmd.com

emedicine.medscape.com

www.acog.org

 

கடுமையான அம்சங்கள் இல்லாத முன்சூல்வலிப்புடைய கர்ப்பிணிகளுக்கு நோய் மேலாண்மையின் இலக்குகள்: முதலில், பெண் மற்றும் கருவின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளுதல். இரண்டாவதாக, தீவிர அல்லது நீடித்தப் பிறந்த குழந்தைப் பராமரிப்பு தேவைப் படாத அளவுக்கு வளர்ச்சி அடைந்த குழந்தை பிறத்தல். தாய் மற்றும் கரு மதிப்பீடு, கர்ப்பகாலம், பேற்றுவலி, படலக் கிழிவு, யோனிக் குருதிப்போக்கு, பெண்ணின் மனவிருப்பம் ஆகியவற்றின் விளைவைப் பொறுத்து இது அமையும்.

பிறப்புக்கு முன்னான மேலாண்மை:

முன்சூல்வலிப்புக் கண்டறியப்பட்டவுடன், முழுக் குருதி எண்ணிக்கை, தட்டணு எண்ணிக்கை, ஊனீர் கிரியேட்டினைன், கல்லீரல் நொதிகள், சிறுநீர் புரதம், கேளாஒலியியல் மூலம் கரு மதிப்பிடல் (கரு எடை, பனிக்குடத் திரவ அட்டவணை), அழுத்தமற்ற சோதனை, உயிருடலியல் விவரம் ஆகியவற்றின் மூலம் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

மேலாண்மை, வீட்டில் அல்லது மருத்துவமனையில் வைத்து செய்யப்படலாம். தொடர் மதிப்பீடு தேவை.

தொடர் மதிப்பீட்டில் அடங்குவன:

கரு மதிப்பீடு:

தினசரி உதைப்பு எண்ணிக்கை, மூன்று வாரங்களுக்கு ஒரு முறை கரு வளர்ச்சியை மதிப்பிட கேளா ஒலி சோதனை, வாரம் ஒருமுறை பனிக்குடநீர் கன அளவு மதிப்பிடல், வாரம் இருமுறை அழுத்தமற்ற சோதனை, உயிருடலியல் சோதனை. சோதனைகளின் எண்ணிக்கையை மருத்துவ கண்டறிதலுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

தாய் மதிப்பீடு:

இரத்த அழுத்த மதிப்பீடு: கூடுதல் இரத்த அழுத்தக் கணிப்புகளை வீட்டில் அல்லது மருத்துவமனையில் செய்து கொள்ளலாம்.

வாரத்துக்கு ஒரு முறை இரத்த எண்ணிக்கை, கல்லீரல் நொதி, ஊனீர் கிரியேட்டினைன் அளவுகள் ஆகிய ஆய்வுகளை ஆய்வகத்தில் செய்து கொள்ள வேண்டும்.

நோயாளிகள் முறையான உணவுகளை உப்புக் கட்டுப்பாடின்றி உண்ணலாம்.

கடுமையான அறிகுறிகளை மருத்துவமனைக்கு அடுத்துவரும்போது அறிவிக்க வேண்டும் (கடும் தலைவலி, பார்வைக் கோளாறு, இரைப்பை மேற்பகுதி வலி, மூச்சடைப்பு).

கடுமையான முன்சூல்வலிப்பு அல்லது கடும் இரத்த அழுத்தம் (திருப்பி எடுக்கப்படும் அளவீட்டில் சுருக்கழுத்தம் 160 mm Hg அல்லது அதிகம், விரிவழுத்தம் 110 mm Hg அல்லது அதிகம்) அல்லது கரு வளர்ச்சிக் குன்றலுக்கான சான்று, கல்லீரல் நொதிகள் அதிகரித்தல்,  அல்லது தட்டணு எண்னிக்கை குறைதல் ஆகியவற்றை சுட்டிக் காட்டும் புதிய அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.

மிகை இரத்த அழுத்த சிகிச்சை: கடுமையற்ற மிகை இரத்த அழுத்த மருந்துகள் கருவளர்ச்சி மற்றும் தாய்நலத்தில் ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றிய சான்றுகள் போதுமானவைகளாக இல்லை.

படுக்கை ஓய்வு: தனிப்பட்ட பெண்களைப் பொறுத்து வீட்டு அல்லது மருத்துவ மனை ஓய்வு அளிக்கப்படும்.  நீடித்த படுக்கை ஓய்வால் குருதிஉறைவு ஆபத்து ஏற்படக் கூடும்.

பேறுகால நேரம்: கடும் அம்சங்கள் அற்ற முன்சூல் வலிப்பு கொண்ட பெண்களுக்கு 34-37 வார கர்ப்ப காலத்தில் தீவிர கண்காணிப்பு இருக்கவேண்டும்.

பேற்றுக்கான அறிகுறிகள்:

 • 37 அல்லது அதிக வாரங்கள் கர்ப்ப காலம்
 • கருப்பையில் இருந்து நச்சுக்கொடி விடுபடுதல் ஐயம்
 • 34 வாரம் அல்லது மேற்பட்ட கர்ப்பக் காலத்துடன் பின் காணப்படும் ஏதாவது ஒன்று:

§  தவிர்க்க முடியாத குழந்தை பிறப்பு அல்லது படலச் சிதைவு

§  கேளா ஒலி மூலம் மதிப்பிடப்பட்ட கரு எடை ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாக இருத்தல்.

§  பனிக்குடநீர் குறைவாக இருப்பது.

§  உயிருடலியல் விவரம் 6/10 அல்லது குறைவு (உச்சவரம்பு 10/10)

முன்சூல்வலிப்புள்ள ஒரு பெண்ணுக்கு குழந்தைப் பேற்றைச் சிறுநீர்ப்புரத அளவு அல்லது அல்லது அதன் அளவு மாற்றத்தை மட்டுமே கொண்டு தீர்மானிக்கக் கூடாது. அனைத்து சோதனை முடிவுகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்

நோய் கடுமையாக மாறினால் மெக்னீசியம் சல்பேட் சிகிச்சை தொடங்க வேண்டும்,

கடுமையான முன்சூல்வலிப்பு மேலாண்மை:

கர்ப்ப காலத்தில் கடும் இரத்த மிகை அழுத்தம் இருந்தால் அதற்கான மருந்து அளிக்க வேண்டும்.

கடும் முன்சூல் வலிப்பு இருந்தால் நரம்பு வழி மெக்னீசியம் சல்பேட் செலுத்த வேண்டும்.

கர்ப்பகால முடிவில் கடும் முன்சூல்வலிப்பு இருந்தால் முன்கூட்டிய பேறு பரிந்துரைக்கப்படுகிறது.

கடும் முன்சூல்வலிப்புள்ள கர்ப்பிணிகளின் கர்ப்பகாலம் 34 வாரங்களுக்குக் குறைவாக இருந்து, தாய் மற்றும் கரு நிலை திடமாக இருந்தால் தகுந்த வசதிகளுடன் கர்ப்பகாலத்தைத் தொடர்ந்து பேண வேண்டும். அறிகுறி ஏற்படுமானால் பேற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கடும் முன்சூல்வலிப்புடைய அல்லது 34 வார கர்ப்பகாலம் கொண்ட கர்ப்பிணிகளில் தாய் மற்றும் கரு நிலை திடமாக இல்லாத போது கர்ப்பகாலத்தைக் கருத்தில் கொள்ளாமல் தாயின் நிலையைத் திடப்படுத்தி முன் பேற்றை பரிந்துரைக்க வேண்டும்.

கடும் முன்சூல்வலிப்புள்ள கர்ப்பிணிகளுக்கு 23-24 வார கர்ப்பகாலத்தில் தாய் நிலையை திடப்படுத்தி பேற்றைக் கருத வேண்டும். எதிர்நோக்கி மேலாண்மை செய்தல் பரிந்துரைக்கப்படவில்லை.

பிறப்புக்கு முன்னான கோர்ட்டிக்கோஸ்டிராய்டு அளித்தல்: எதிர்நோக்கும் மேலாண்மை பெறும் கடும் முன்சூல்வலிப்புடைய கர்ப்பிணிகளுக்கு அல்லது கருவின் நுரையீரல் வளர்ச்சிக்கு குறைவான கர்ப்பகாலம் இருத்தல்.

பேறுகால முறை:  கரு வயது, கரு நிலை, கருப்பை வாய் நிலை மற்றும் தாய்-கரு நிலை ஆகியவற்றைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும்.

குறிப்புகள்:

www.acog.org

apps.who.int

 

முன்சூல்வலிப்பு கொண்ட கர்ப்பிணிகளுக்கு கர்ப்பக் காலம், பேறு, பேற்றுக்குப் பின் ஆகிய கால கட்டங்களில் அதிக ஆபத்து உள்ளது. கருவுக்கும் அதிக அளவில் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

முன்சூல் வலிப்புடைய கர்ப்பிணிகளுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள்:

 • பேறுகால வலிப்பு: முன்சூல்வலிப்பில் வலிப்பு ஏற்படுமானால் அது பேறுகால வலிப்பு எனப்படும்.  தாய்க்கும் சேய்க்கும் கடுமையான விளைவுகள் உருவாகலாம். கர்ப்பகால அளவைக் கருதாமல் மகப்பேறு நிகழ்ந்தாக வேண்டும்.
 • HELLP நோய்த்தாக்கம்: இது ஒரு கடுமையான நிலை, சிவப்பணு சிதைவு (H), கல்லீரல் நொதி அதிகரித்தல் (EL) மற்றும் தட்டணுக் குறைபாடு (LP)  இதில் அடங்கும். கடுமையான முன்சூல்வலிப்புடைய கர்ப்பிணிகளில் 10-20 % பேருக்கு இது நிகழக்கூடும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் குழந்தைப் பேற்றை நிகழ்த்துவதே ஒரே சிகிச்சை.
 • நச்சுக்கொடி விடுபடல்: முன்சூல் வலிப்பால் பேற்றுக்கு முன்னரே கருப்பையின் உட்சுவரில் இருந்து நச்சுக்கொடி விடுபடும் ஆபத்து ஏற்படுகிறது.  நிலை கடுமையாக இருந்தால் குருதிபோக்கு அதிக அளவில் ஏற்பட்டு நஞ்சுக்கொடி சிதைந்து, தாய்-சேய்க்கு உயிர் ஆபத்து உருவாகும்.
 • பக்கவாதம்: குருதி மிகை அழுத்தத்தால் மூளைக்கு இரத்த ஓட்டம் தடைபடும். இது மூளைச்சிதைவு அல்லது பக்கவாதம் எனப்படும்.
 • நுரையீரல் வீக்கம்: நுரையீரலில் நீர்த் தேக்கம்.
 • சிறுநீரகம் செயலிழப்பு
 • கல்லீரல் செயலிழப்பு
 • பரவலான உட்குழல் உறைவு: இரத்த உறைதல் அமைவில் கோளாறு.
 • தாய் மரணம்: முன்சூல் வலிப்பால் நிகழக்கூடும்.

முன்சூல் வலிப்பால் சிக்கலாக்கப்பட்டக் கர்ப்பத்தால், பிறப்புக்குப் பின்னரும் பெண்களுக்கு நீடித்த இரத்த மிகைஅழுத்தம், நீரிழிவு, காரணம் அறியா இதய நோய், மூளைக்குழல் நோய், சிறுநீரக நோய், இரத்த உறைகட்டி, குறைதைராயிடு மற்றும் நினைவாற்றல் பாதிப்பும் கூட உருவாகலாம்.

கருவுக்கு ஏற்படும் சிக்கல்: இவை குறுகியகால மற்றும் நீடித்த விளைவுகளை உண்டாக்கும்.

 • கருப்பைக்குள் வளர்ச்சி குன்றல்: முன்சூல்வலிப்பால் கருவின் வளர்ச்சி கருப்பைக்குள் குன்றும். இதனால் பிறக்கும் குழந்தைக்கு பல அளவிலான நோய்களும் மரணமும் ஏற்படலாம். இத்தகைய குழந்தைகள் பொதுவாக அளவு சிறியனவாக இருக்கலாம்.
 • குறைப்பிரசவம்: முன்சூல் வலிப்பால் குறைப்பிரசவம் ஏற்படும். இதனால் சிசுவுக்கு பல சிக்கல்கள் உருவாகும். சுவாசக் கோளாறு இதில் ஒன்று.
 • இறந்து பிறத்தல்: முன்சூல்வலிப்பு இறந்து குழந்தை பிறத்தலுக்கு ஒரு முக்கிய காரணம்.        
 • நீடித்த விளைவுகள்: உட்கருப்பை வளர்ச்சி குன்றலால், மிகை இரத்த அழுத்தம், இதயத் தமனி நோய், வளர்ந்த பின் நீரிழிவு போன்ற பல கோளாறுகள் ஏற்படக் கூடும்.

குறிப்புகள்:

www.obgyn.net

www.ncbi.nlm.nih.gov

www.nhs.uk

 

முன்சூல் வலிப்புக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. ஆகவே பலன் அளிக்கும் தடுப்பு முறை இக்கட்டத்தில் சாத்தியம் இல்லை. ஆயினும், சில முக்கியமான ஆபத்துக் காரணிகள் உள்ளன (உடல்பருமன் போல). இந்தக் காரணிகளை சீர் செய்தால் இதன் வருகை எண்ணிக்கை குறைக்கப்படும்.

கடுமையான நேர்வுகளில் தாய் மரணம் ஏற்படலாம். ஏனெனில் மத்திய நிலையில் இருந்து கடும் நிலைக்கு இது வேகமாக, எதிர்பாராத விதமாகக் கடக்கும். ஆகவே இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தடுப்பு வலியுறுத்தப் படுகிறது.  இதில் ஆரம்பக் கட்ட நோய் கண்டறிதல் மற்றும் தகுந்த நோய் மேலாண்மை அடங்கும். நோய் கண்டறிதலிலும் நோய் மேலாண்மையிலும், நோயாளிக்கும் நோய்க்கு சிகிச்சை அளிப்பவருக்கும் நோய் பற்றிய அறிவை புகட்டுதல் அவசியம் ஆகும்.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் ACOG வழங்கியுள்ள சில பரிந்துரைகள்:

 • சுண்ணாம்புச் சத்து உட்கொள்ளுதல் குறைவாக இருக்கும் இடங்களில், கர்ப்பக் காலத்தில் சுண்ணாம்பு, கூடுதல் சத்தாக ( 1.5-2.0 கி அடிப்படை கால்சியம்/நாள்) அனைத்துப் பெண்களுக்கும் முன்சூல் வலிப்புத் தடுப்புக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளது. குறிப்பாக முன்சூல்வலிப்பு உருவாகும் ஆபத்துள்ள இடங்களில்.
 • அதிக ஆபத்துள்ள இடங்களில் முன்சூல் வலிப்பைத் தடுக்கக் குறைந்த அளவு அசெட்டைல்சாலிசிலிக் அமிலம் (ஆஸ்பரின் 75 மி.கி.) அனைத்துப் பெண்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. (ஆபத்துக் காரணிகள்: முந்திய முன்சூல்வலிப்பு, நீரிழிவு, நீடித்த மிகை இரத்த அழுத்தம், சிறுநீரக நோய், தன் தடுப்பு நோய்கள் மற்றும் பன்கர்ப்பம்).
 • பிற வலிப்படக்கிகளை விட கடும் முன்சூல் வலிப்புத் தடுப்புக்கு மக்னீசியம் சல்பேட் பரிந்துரைக்கப்படுகிறது.
 • முன்சூல் வலிப்பு மற்றும் அதன் சிக்கல்களைத் தடுக்க குறிப்பாக தயாசைடுகள் போன்ற சிறுநீரிறக்கிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை.

பேற்றுக்குப்பின்

 • பேற்றுக்குப் பின் 1 நாளுக்கும் மேல் மிகை இரத்த அழுத்தம்  நிலைத்திருந்தால் மிகை இரத்த அழுத்தம் உள்ள பெண்களில் ஊக்கமருந்தற்ற எதிர்-அழற்சி மருந்துகளுக்குப் பதில் (இது இரத்த அழுத்தத்தைக் கூட்டும்) பிற வலிநிவாரணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
 • பேற்றுக்குப் பின் 24 மணி நேரம் வலிப்பைத் தடுக்க பேற்றுக்குப் பின்னான மக்னீசியம் சல்பேட்டை பயன்படுத்துவது தொடரும்.
 • பேற்றுக்குப் பின்னான அதிக மிகை இரத்த அழுத்தத்திற்கு எதிர் இரத்த அழுத்த மருந்து சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.

குறைப் பிரசவத்தோடு தொடர்புடைய முன்சூல்வலிப்பு, பிற்காலத்தில் இதயக் குழாய் நோய் ஆபத்துக்கு கடும் ஆபத்துக் காரணியாக கருதப்பட வேண்டும். ஆகவே இத்தகையப் பெண்களுக்கு பின் வரும் ஆலோசனை வழங்கப்படுகிறது:

 • சரியான உடல் எடை பேணுதல்
 • மூச்சுப் பயிற்சிகளில் முறையாக ஈடுபடுதல்
 • நார்ச்சத்து, காய், பழம் நிறைந்தக் கொழுப்புக் குறைந்த உணவு
 • புகையிலை தவிர்த்தல்

குறிப்புகள்

www.acog.org

apps.who.int


 

 

 • PUBLISHED DATE : Apr 16, 2018
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Apr 16, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.