எலும்புமூட்டு வீக்கம்

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் எலும்பு மூட்டு வீக்கமே கீல்வாதத்தின் மிகவும் பொதுவான வடிவம். இது ஒரு நீடித்த, அதிகரிக்கும் தசை எலும்புக் கோளாறு. மூட்டுகளில் குருத்தெலும்பு இழப்பு படிப்படையாக நிகழும். இதனால் எலும்புகள் ஒன்றுகொன்று உராய்ந்து விறைப்பு, வலி மற்றும் அசைவுகளில் சிக்கல் ஏற்படுத்தும். முழங்கால், இடுப்பு, கைகள், கால்கள் மற்றும் தண்டுவடத்தையே இந்நோய் பரவலாகப் பாதிக்கிறது. உடல்பருமன், உடல்பயிற்சி இன்மை, மரபியல் முன்தீர்மானிப்புகள், எலும்பு அடர்த்தி, பணியிடக்காயம், பாலினம்  போன்ற பல மாற்றக் கூடிய மற்றும் மாற்ற முடியாத ஆபத்துக் காரணிகளோடு இந்நோய் தொடர்புடையது ஆகும்.

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை என இரு வகையாக எலும்புமூட்டு வீக்கத்தைப் பகுக்கலாம். முதல்நிலை எலும்புமூட்டு வீக்கம் ஒரு நீடித்த சிதைவு நோய். இது வயது மூப்போடு சம்பந்தப்பட்டது. வயது அதிகரிக்கும் போது மூட்டுகளில் உள்ள நீர்ச்சத்து வற்றி அவற்றின் சிதைவுக்கு வழிவகுக்கிறது.  அடிக்கடி  முழங்கால் இடும் வேலை, நீண்ட நேரம் குந்தி  உட்காருதல், நீரிழிவு, உடல்பருமன் போன்ற சில காரணங்களால் இரண்டாம் நிலை எலும்பு மூட்டு வீக்கம் இளமையில் கூட மூட்டுகளைப்  பாதிக்கிறது.

எலும்பு மூட்டு வீக்கம் பெரும்பாலும் முதியோரைப் பாதிக்கிறது.  இதுவே உலக அளவில் முதியோர் ஊனத்துக்கான முக்கிய காராணம். உலக சுகாதார நிறுவனப்  புள்ளி விவரப்படி உலகில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 9.6% ஆண்களுக்கும் 18.0% பெண்களுக்கும் அறிகுறிகளோடு கூடிய எலும்பு மூட்டு வீக்கம் உள்ளது. இவர்களில் 80% பேருக்கு நகர்ச்சி கடினமும் 25% பேருக்கு தங்கள் அன்றாடக வாழ்க்கையின் முக்கிய அலுவல்களை ஆற்ற முடியாத நிலையும் உள்ளது.

22-39% வரை காணப்படும் இதுவே இந்தியாவில்  இரண்டாவது பெரிய வாதப் பிரச்சினையும் அடிக்கடி ஏற்படும் மூட்டு நோயும் ஆகும்.  ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக உள்ளது. 65 வயதுக்கு மேல் உள்ள 45% பெண்களுக்கு எலும்பு மூட்டு வாத அறிகுறிகளும் 75% பேருக்கு கதிரியியல் ஆய்வுச்   சான்றுகளும் உள்ளன.

மக்கள் தொகையில் அதிக  வயதுள்ளவர்களின்  எண்ணிக்கை பெருகி இருப்பதன்  காரணமாகவும், உடல்பருமன், உழைப்பற்ற வாழ்வு முறை ஆகியவற்றாலும் எலும்பு மூட்டு வாதம் அதிகரித்து வருகிறது. வலியால் ஏற்படும் உடலியல் ஊனமும், செயல்பாட்டு பாதிப்பு இழப்பும், மேலும் பல நோய்கள் உண்டாகும் சாத்தியக் கூற்றை அதிகரிக்கின்றன. இதற்கான சிறந்த மருந்தியல் தீர்வு இல்லாத நிலையில், ஆரோக்கிய உணவு, உடல் பயிற்சி போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களால் நோயைத் தடுப்பதில் கவனம் செலுத்துவதை வலியுறுத்த  வேண்டும்.

குறிப்புகள்:

www.who.int/medicines/areas/priority_medicines/Ch6_12Osteo.pdf

www.who.int/medicines/areas/priority_medicines/BP6_12Osteo.pdf

www.who.int/chp/topics/rheumatic/en/

Pal CP, Singh P, Chaturvedi S, Pruthi KK, Vij A, Epidemiology of knee osteoarthritis in India and related factors. Indian J Orthop 2016:50:518-22 accessed from www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5017174/

வலி, திறனிழப்பு, உடல்பயிற்சி அல்லது செயல்பாட்டுக்குப் பின் மூட்டு விறைப்பு ஆகியவையே எலும்பு மூட்டு வீக்கத்தின் முக்கிய அறிகுறிகள்.  இவைகள் உடல் பயிற்சி அல்லது கடுமையான செயல்பாட்டுக்குப் பின் அதிகரித்து, ஓய்வெடுக்கும் போது தானாகவே குறையும். இந்நோய் வளர்ச்சி அடைந்து ஒரு கட்டத்தில் ஓய்வில் இருக்கும் போதே வலிக்கும் அளவுக்கு முற்றும். சிலருக்கு வலி ஏற்பட்டு தூக்கத்தில் விழிப்பு ஏற்படும்.

மூட்டு அல்லது இடுப்பு வலியால் உடல் செயல்பாடு குறைந்து உடலியக்கம் இல்லாத வாழ்க்கை உருவாகும். இதனால் எடை கூடி, உடல் பருமன் உண்டாகும். நீரிழிவு, இதயநோய்கள், மிகை இரத்த அழுத்தம் இதைத் தொடர்ந்து ஏற்படலாம்.

மூட்டு பாதிப்பு, தசை பலவீனம் மற்றும் சமநிலை குறைபாட்டால்  எலும்பு மூட்டு வீக்க நோயாளிகளுக்கு விழுதலும் எலும்பு முறிவுக்குமான சாத்தியக் கூறு பிறரை விட அதிகம்.

குறிப்புகள்:

www.who.int/medicines/areas/priority_medicines/BP6_12Osteo.pdf

www.arthritis.org/about-arthritis/types/osteoarthritis/symptoms.php

எலும்புமூட்டு வீக்கம் ஏற்பட்டு அதிகரிப்பதற்கான காரணங்கள்:

         i.            வயது- இயல்பான வயது முதிர்ச்சி எலும்பு மூட்டு வீக்கம் அதிகரிக்க காரணம். வயது ஆகும்போது நேர்வுகள் கூடும். ஆனால் 80 வயதில் அதே அளவாகவே இருக்கும்.

       ii.            காயம்- இணைப் பிணைப்புக் காயம், மூட்டுப்பகுதி தசைக்குருத்தெலும்பு மற்றும் மூட்டு முறிவுகள் எலும்பு மூட்டு வீக்கத்துக்கான ஆபத்தை அதிகரிக்கும்.

     iii.            பணி: கடுமையான உடல் உழைப்பு, முழங்கால் ஊன்றி பணி செய்தல், பணியின் போது திரும்பத் திரும்ப மூட்டுகளை பயன்படுத்துதல் போன்றவற்றால் எலும்பு மூட்டு வீக்க ஆபத்து கூடும். வயல்வேலை, கட்டுமானப் பணி மற்றும் உடல் பயிற்சிப் கல்விப் பணி   ஆகியவையும் எலும்பு மூட்டு வீக்கத்திற்கான ஆபத்துக் காரணிகள்.

     iv.            உடல்பயிற்சி- அதிக தாக்கம் அளிக்கும் விளையாட்டுகள் எலும்பு மூட்டு வீக்க ஆபத்தை அளிக்கிறது.

       v.            மரபியல்: மரபாகவும் இந்நோய் பாதிக்கலாம். பெற்றோருக்கு விரைவாக எலும்பு மூட்டு வீக்க பாதிப்பு இருந்தால் குழந்தைகளும் பாதிக்கப்படும் ஆபத்து அதிகம்.

     vi.            உடல்பருமன் - சராசரியாக  36-37 வயதில் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மூட்டு வீக்கம் ஏற்படலாம். இது ஒரு சரி செய்யக்கூடிய ஆபத்துக் காரணி.

   vii.            பாலினம்  மற்றும் மக்கள் இனம்: பெண்களுக்கு ஆண்களை விட பாதிப்பு அதிகம்; குறிப்பாக 50 வயதுக்கு மேல். ஆசியர்களை விட ஐரோப்பியர்கள் கூடுதலாகப் பாதிக்கப்படுகின்றனர்.

 viii.            எலும்பு அடர்த்தி- எலும்புத் தாது அடர்த்தி குறைவு இந்நோய்க்கான இன்னொரு ஆபத்துக் காரணி.

குறிப்புகள்:

www.who.int/medicines/areas/priority_medicines/BP6_12Osteo.pdf

www.niams.nih.gov/Health_Info/Osteoarthritis/osteoarthritis_ff.asp

www.cdc.gov/arthritis/basics/osteoarthritis.htm

பின் காணப்படும் நோய்க்குறிகளையும் அறிகுறிகளையும் கொண்டு பொதுவாக மருத்துவர் மருத்துவ ரீதியாக எலும்பு மூட்டு வீக்கத்தைக் கண்டறிகிறார்:

 • மூட்டு இயங்கும்போது நரநரவென ஒலித்தல்
 • மூட்டு வீக்கம்
 • குறைந்த அசைவு
 • மூட்டு  அழுந்தும் இடங்களில் மென்மை
 • சாதாரண அசைவின் போதும் வலி

பாதிக்கப்பட்ட மூட்டின் எக்ஸ்ரே மூட்டு இடைவெளி குறைந்திருப்பதைக் காட்டும். முற்றிய நேர்வுகளில் எலும்புத் துருத்தல் அல்லது பாதிக்கப்பட்ட மூட்டில் எலும்புகளின் தேய்ந்த ஓரம் காணப்படும்.

எம்.ஆர்.. மூலம் வேறு வகையான காயங்களில் இருந்து எலும்பு மூட்டு வீக்கத்தைப் பிரித்தறியலாம்.

எலும்பு அகநோக்கி  மூலம் நோயைக் கண்டறிந்து அதிகரிப்பை கண்காணிக்கலாம்.

குறிப்புகள்:

www.who.int/medicines/areas/priority_medicines/BP6_12Osteo.pdf

www.niams.nih.gov/Health_Info/Osteoarthritis/osteoarthritis_ff.asp

www.who.int/chp/topics/rheumatic/en/

 

எலும்பு மூட்டு வீக்கத்துக்கான நோய் மேலாண்மை விரிவானதும் தனிநபர் சார்ந்ததும் ஆகும்.  பாதிக்கப்பட்டுள்ள மூட்டு, நோயின் தற்போதைய நிலை, நோய் அதிகரிக்கும் வேகம், இணை நோய்களான இதய நோய்கள், மிகை இரத்த அழுத்தம், வயிற்றுப் புண், சிறுநீரக நோய்கள், நோயாளியின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகிய பலவற்றைக்  கணக்கில் கொள்ள வேண்டும். மேலாண்மைத் திட்டம் முறையாக மீள்பார்வை செய்யப்பட வேண்டும். மருந்தியல் சார்ந்தது, மருந்தியல் சாராதது, அறுவை மருத்துவம் என அது விரிவாக பகுத்துக் கொள்ளப் படும். முதலில் மருந்தியல் சாராத மேலாண்மையைத் தொடங்கி, பின் மருந்தியல் சிகிச்சை அளிக்க வேண்டும். இவை இரண்டும் பலன் அளிக்காத போது அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.

மருந்தியல் சாராத சிகிச்சைகள் பற்றிய பல்வேறு பரிந்துரைகளின் படி, நோய் பற்றிய கல்வி, உடல் பயிற்சி, எடைக் குறைப்பு மற்றும் உடல் உதவிக் கருவிகள் உள்ளடங்கும் ( ஊன்றுகோல், காலணி உட்பொருத்தல்கள் மற்றும் மூட்டு காப்புறைகள்).

கல்வி

நோய் மேலாண்மை, எடை குறைப்பு மற்றும் உடல் பயிற்சி பற்றிய கல்வியை நோயாளிக்கு வழங்குதல் மூட்டு வலியைக் குறைக்க உதவும்.  தனிநபருக்குப் போதித்தல், குழுவுக்கு போதித்தல், சமூக ஆதரவு, நோயை எதிகொள்ள நோயாளிக்குத் திறன் மேம்படுத்தல், துணைவரின் உதவியோடு நோயை எதிர் கொள்ளுதல் ஆகியவையே பலன் அளிக்கும் கல்வி உத்திகள் ஆகும் (எதிர் கொள்ளும் திறன்:  சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தைகளால் வலி கூடவும் குறையவும் செய்யும். எனவே மனதை வேறுபக்கம் திருப்புதல், ஓய்வு, செயல்பாடுகளை மாற்றுதல் போன்ற உத்திகளால் நோயாளிகள் வலியைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் கூடும்)

உடல் பயிற்சி

எலும்பு மூட்டு வீக்கத்திற்கு உடல் பயிற்சியே சிறந்த சிகிச்சை. உடல் பயிற்சியால் தசை வலு, சகிப்புத்தன்மை உருவாகும்; மூட்டு அசைவும் நெகிழ்வுத் தன்மையும் மேம்படும். தசை வலுவடைவதால் எலும்பு மூட்டு வீக்கத்தின் சில சிக்கல்கள் குறைவதால் உடல் பயிற்சி ஆரோக்கியமான உடல் எடை உள்ளவர்களுக்கும் பயன் தருவது ஆகும். எலும்பு மூட்டு வீக்கத்தின் தற்போதைய அறிகுறிகள் அதிகரிக்கா வண்ணம் மருத்துவரின் ஆலோசனைப்படி குறைந்த தாக்கம் கொண்ட செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்:

 • வீட்டுக்கு  அருகில் நடப்பது, மகிழ்வூட்டும் எளிய உடல் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளுவது போன்ற எளிய செயல்பாடுகள் வலியைக் குறைத்து ஆரோக்கிய எடை பேண உதவும்.
 • வலுப்படுத்தும் உடல் பயிற்சி எலும்பு மூட்டு வாதம் பாதித்த மூட்டுகளைச் சுற்றி தசை வளர உதவும்.
 • நீட்டிமடக்கல்: மெதுவாக, மென்மையாக மூட்டுகளை நீட்டி மடக்குதல் மூலம் நெகிழ்வுத் தன்மை அதிகரிக்கும்; விறைப்பும் வலியும் குறையும். யோகா, தாய் சி போன்றவை விறைப்பைக் குறைக்க உதவும்.
 • எல்லை கொண்ட அசைவு உடல் பயிற்சி மூட்டுகளின் நெகிழ்வைக் கூட்டி  விறைப்பைக் குறைக்கும்.
 • காற்றுப் பயிற்சிகள் உடல் நிலைப்பு  வலுவைக் கூட்டி அதிக எடையைக் குறைக்கத் துணை புரியும்.

எடை இழப்பு:

மிகை எடையும் உடல் பருமனும் கொண்ட எலும்பு மூட்டு வாத நோயாளிகள் அதிக எடை இல்லாதவர்களை விட கூடுதல் வலியையும் ஊனத்தையும் கொண்டவர்களாக இருப்பார்கள். இடுப்பு, முழங்கால், பாதம், முதுகு போன்ற பளு தாங்கும் மூட்டுகளில் மிகை எடையின் காரணமாக அதிக அழுத்தம் உண்டாகும்.  எடையைக் குறைப்பதற்கு, குறைந்த எரியாற்றல் கொண்ட உணவை உட்கொள்ளுதல், உடல் செயல் பாடுகளை அதிகரித்தல் போன்ற வாழ்க்கைமுறை நடத்தை எடை மேலாண்மை (BWM)  சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும்.

உடல்காப்புக் கருவிகள்:

ஓர் உடல்பயிற்சியியல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது  பிற மருந்தியலற்ற சிகிச்சை. மூட்டுக் காப்புறை, செயற்கை உடல் காப்புக் கருவிகள் மற்றும் பொருத்தமான காலணி போன்றவை வலியைக் குறைத்து இசைவுக் குறைபாடு உடையவர்களுக்கு இயக்கத்தை மேம்படுத்தும்.

வெப்பமும் குளிரும்

வெப்பம் அல்லது குளிரை (அல்லது இரண்டையும் இணைத்து) எலும்பு மூட்டு வீக்கத்துக்குப் பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான துவலை, வெப்ப ஒத்தடம் அல்லது வெந்நீர்க் குளியல் மூலம் வெப்பம் அளிக்கலாம் (வெப்பம் இரத்த ஓட்ட்த்தைத் தூண்டி வலியையும் விறைப்பையும் குறைக்கும்).  சில வேளைகளில் குளிர் ஒத்தடம் வலியை நீக்கும் அல்லது  வலிக்கும் பகுதியில் அழற்சியைக் குறைத்து  மரக்க வைக்கும்.

நீவுதல்

வலிக்கும் தசையை மென்மையாக நீவுதல் நிவாரணம் அளிக்கும்.

பாரம்பரிய அணுகுமுறைகள் தவிர, கேளா ஒலி துடிப்பு, தோலடி மின் நரம்புத் தூண்டல், மின்- குத்தூசி மருத்துவம் ஆகியவை புது சிகிச்சைகள்.

மருந்தியல் சிகிச்சை

வலி நிவாரணம், செயல் மேம்பாடு, தரமான வாழ்க்கையுடன் மருந்து நச்சைக் கட்டுப்படுத்தலே இதன் உத்தி.

பாரசெட்டமால் (அசெட்டாமினோபென்): இலேசான எலும்பு மூட்டு வாத்த்திற்கு இது பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் மருந்து.

ஊக்கமருந்தற்ற எதிர்-அழற்சி மருந்துகள் (NSAIDs):

வலி நிவாரணத்துக்கு NSAID களைப் பயன்படுத்தலாம் (இருப்பினும் இம்மருந்துகளால் இரைப்பை குடல் பாதிப்பு மற்றும் நச்சு குறிப்பாக முதியோருக்கு ஏற்பட வாய்ப்புண்டு). சைக்ளோஆக்சிஜெனேஸ்-2  (COX’2) என்ற புதிய தடுப்பிகளும் பயன்பாட்டில் உள்ளன ( ரெஃபகாக்சிப் என்ற வகை இதயக்குழல் ஆபத்தை ஏற்படுத்தியதால் 2004-ல் விலக்கிக் கொள்ளப்பட்டது. செலகாக்சிப் மற்றும் எட்டரோகாக்சிப் ஆகியவை பயன்பாட்டில் உள்ளன). மேற்பூச்சு NSAID கள் களிம்பு, ஒட்டு, ஜெல், கரைசல் வடிவங்களில்  எலும்பு மூட்டு வீக்கம் உட்பட தசை எலும்பு பாதிப்புகளுக்கு வலி நிவாரணியாக பயன்படுகின்றன. வாய் வழி மருந்தாக கொடுக்கும் போது ஏற்படும் இரைப்பை குடல் பிரச்சினைகள் மேற்பூச்சு மருந்தாக பயன்படுத்தும் போது இருப்பதில்லை. இருப்பினும் சில பகுதி பாதிப்புகள் இருப்பதோடு வாய்வழி மருந்து போல பலன் அளிப்பதும் இல்லை.

அபின்மருந்துகள், NSAID கள் அல்லது அசட்டாமினோஃபென் பயன்படுத்த முடியாத நிலையில்,  வலிக்காகப் பயன்படுத்தப்படும். ஆயின் இது போதைப் பொருளாக தொடரும் அபாயம் உள்ளது.

உள்மூட்டு கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள்: குறிப்பாக எலும்பு மூட்டு வீக்கம் உள்ளவர்களுக்குக் கோர்ட்டிக்கோஸ்டிராய்டை உள்மூட்டுக்குள் நேரடியாக  செலுத்திச் செய்யப்படும் சிகிச்சை பலன் அளிக்கிறது.

பாகுத்தன்மையூட்டல்: ஹையாலுரோனான் அல்லது ஹைலான் பொருட்கள் அடங்கிய தொடர் ஊசிகள் இதில் அடங்கும் (ஹையாலுரோனான் ஒரு பாலிசாக்ரைடு ஆகும். இது புறசெல் மச்சையின் முக்கிய உட்கூறுகளில் ஒன்றாகும்).

அறுவை சிகிச்சை:

மூட்டு மாற்று அறுவை: அதிக வலியோடு, மூட்டு வெளி மிகவும் குறுகி,  மருந்து பயன் அளிக்காவிட்டால் மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படும். சிதைந்த மூட்டை அகற்றிவிட்டு செயற்கை மூட்டைப் பொருத்துவதே மூட்டு மாற்று சிகிச்சை.

எலும்பறுவை:  பளு தாங்கும் மூட்டுப் பகுதியின் பரப்பளவை  மாற்ற எலும்புகளை வெட்டி மறுவடிவம் ஆக்குவது.

எலும்பு அகநோக்கு சிதைவகற்றல் மற்றும் கழுவல்:  இதில் இரு சிகிச்சைமுறை அடங்கும். சிதைவுற்ற குருத்தெலும்பு அகற்றப்படும். மூட்டைச் சுற்றியுள்ள மிகை சிதலங்கள் சுத்திகரிக்கப்படும்.

குறிப்புகள்:

www.who.int/medicines/areas/priority_medicines/BP6_12Osteo.pdf

www.niams.nih.gov/health_info/joint_replacement/

www.niams.nih.gov/health_info/osteoarthritis/#10

 

குருத்தெலும்புகள் முற்றிலும் பொடிந்து மூட்டுகளில் கட்டற்ற திசுப் பொருட்கள் காணப்படுதல்

 • மூட்டுகளுக்குள் இரத்தக் கசிவு
 • மூட்டுகளில் தொற்று
 • எலும்பு மட்குதல்
 • அழுத்த முறிவு
 • மூட்டுகளைச் சுற்றி இருக்கும் தசைநாண்களும்சவ்வுகளும் சிதைதல்
 • முதுகெலும்பு மூட்டு வீக்கத்தால் நரம்பு நெரிபடல்

குறிப்பு

www.webmd.com/a-to-z-guides/tc/complications-of-osteoarthritis-topic-overview

எலும்பு மூட்டு வீக்கப் பளுவை எதிகொள்ள தடுப்பு முறை ஒரு முக்கிய உத்தி. ஏனெனில் மருந்தியல் சிகிச்சை முழு பலனையும் தருவதில்லை. அறுவை சிகிச்சையோ அதிக செலவு மிக்கது. பரவலாகக் கிடைப்பதும் அரிது.

எலும்பு மூட்டு வீக்கத்துக்கான முக்கிய தடுப்பு முறை:

எடைக்கட்டுப்பாடு: உடல் பருமன் எலும்பு மூட்டு வீக்கத்துக்கு ஓர் ஆபத்துக் காரணி. ஆகவே, உணவுக் கட்டுப்பாடு அல்லது உடல் பயிற்சி மூலம் எடையைக் குறைத்தல் அல்லது கட்டுப்படுத்துதல் எலும்பு மூட்டு வீக்கம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.

உடல் பயிற்சி: ஒருவர் தமது  உடல்நிலைக்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்றவாறு  தொடர் உடல் பயிற்சி செய்து வரும் போது மூட்டைச் சுற்றியுள்ள தசை வலிமை அடைந்து, எலும்பு இழப்பு குறைகிறது. எலும்பு மூட்டு வாதத்தால் பாதிக்கப்பட்ட மூட்டுக்கு மட்டுமன்றி உடல் பயிற்சி, உடல் முழுமைக்காகவும் இருக்க வேண்டும். எலும்பு மூட்டு வாதம் கொண்டவர்கள் மூச்சுப் பயிற்சியோடு தசையை வலிமையாக்கும் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். உடல் பயிற்சித் திட்டங்களை மருத்துவர் ஆலோசனையுடன் வகுக்க வேண்டும்.

பணி இடக் காயத் தடுப்பு: மூட்டை, அடிக்கடி பயன்படுத்தக் கூடாது. தொடர்புடைய காயங்களுக்குத் தகுந்தவாறு சிகிச்சை அளித்து வந்தால் கீல்வாதத்தைக் குறைக்கலாம்.

விளையாட்டில் ஏற்படும் காயத் தடுப்பு: முன் பயிற்சி மற்றும் தகுந்த காப்புக் கருவிகள் அணிந்து காயங்களைத் தவிர்க்கலாம்.

இசைவுக் குறைபாடு: முழங்கால் அல்லது இடுப்பு இசைவின்றி இருந்தால் எலும்பு மாட்டு வாதம் உருவாகும். எலும்புக் காப்பு கருவிகளும் உறைகளும் இந்த நோய் ஆபத்தைக் குறைக்கும்.

தொடர் உடல் பயிற்சி, குந்தி உட்காருதல் மற்றும்  காலுக்குக் குறுக்காகக் கால் வைத்து அமர்தலைத் தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு எடைக் கட்டுப்பாடு ஆகியவையே எலும்பு மூட்டு வாதத்தைத் தவிர்க்கும் சிறந்த வழிகள்.

இரண்டாம்நிலைத் தடுப்பு

ஆரம்ப நோய்கண்டறிதலும் உடல்நலத்தில் நோயின் தாக்கத்தைக் குறைக்க மேற்கொள்ளும் தகுந்த மேலாண்மை நடவடிக்கைகளுமே இரண்டாம் நிலை தடுப்பின் நோக்கம்.

மூன்றாம்நிலைத் தடுப்பு:

நோய் கண்டறியப்பட்ட உடன் அதன் சிக்கல்களைக் குறைப்பதே மூன்றாம் நிலைத் தடுப்பு. எலும்பு மூட்டு வாத வலியையும் ஊனத்தையும் குறைப்பதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதும்  இதில் கையாளப்படும் உத்திகள்.  சுயகட்டுப்பாடு (எடை கட்டுப்பாடு, உடல் செயல்பாடு மற்றும் நோய் பற்றிய கல்வி), வீட்டு உதவி நடைமுறைகள், அறிவார்ந்த நடத்தைப் பயிற்சிகள், மறுவாழ்வு சேவைகள் மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சைகள் ஆகியவை இதில் அடங்கும்.

எலும்பு மூட்டு வாதத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு:

மிகை எரியாற்றலைக் குறைத்தல்: குறைந்த பட்ச அளவு, சர்க்கரை தவிர்த்தல், தாவர அடிப்படை உணவைத் தேர்வுசெய்தல்.

முழுதானிய உணவு: ஓட், பழுப்பரிசி, முழு தானியங்கள்.

அதிகப் பழங்களும் காய்கறிகளும்:  இவற்றில்  எதிர் உயிர்வளியேற்றிகள் (ஆன்டி-ஆக்சிடண்டுகள்)  இருப்பதால் மூட்டு அழற்சியும்  வலியும் குறையும்.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைச் சேர்க்கவும்: மூட்டு வலி குறைந்து காலை விறைப்பும் அகலும். கானாங்கெளுத்தி, ஏரி மீன், நெத்தலி , மத்தி, துனா, சால்மன் போன்ற மீன் வகைகளிலும்,  ஆளி விதை, சியா விதை, மீன் எண்ணெய், முட்டை, பூக்கோசு, கடுகு எண்ணெய், பசலைக் கீரையிலும் ஒமேகா-3 உள்ளது.

ஒலிவ எண்ணெய்: அழற்சியைத் தடுக்க உதவும்.

உயிர்ச்சத்து சி: கோலஜென் மற்றும் இணைப்பு திசுக்கள் வளர உதவும். ஆரஞ்சு, முந்திரி, எலுமிச்சை ஆகியவைகளை உண்ணவும்.

பூண்டு: பூண்டில் காணப்படும் டையலைல் டைசல்பைடு மனித செல்லில் உள்ள குருத்தெலும்பு சிதைக்கும் நொதிகளைக் கட்டுப்படுத்தும்.

குறை கொழுப்புப் பால் பொருட்கள்: குறை கொழுப்புப் பால், தயிர், பாலாடை, பிரக்கோலி, பச்சைத் தேனீர் ஆகியவையும் எலும்பு மூட்டு வாதத்தைத் தடுக்கும்.

மிகை வெப்ப சமையல்: மிகை வெப்பத்தில் சமைக்கப்பட்ட இறைச்சியில் முற்றிய கிளைகேஷன் இறுதிப் பொருட்கள் (AGEs) எனப்படும் சேர்மங்கள் உருவாகும். இவை அழற்சியோடு தொடர்புடையன (கீல்வாதம், இதய நோய் மற்றும் நீரிழிவு). கம்பிகளில் சுட்ட மற்றும் நுண்ணலை அடுப்பு இறைச்சிகளைத் தவிர்க்கவும். பத உணவைக் கட்டுப்படுத்தல் நலம் பயக்கம்.

குறிப்புகள்:

www.who.int/medicines/areas/priority_medicines/BP6_12Osteo.pdf

www.webmd.com/osteoarthritis/guide/osteoarthritis-diet

www.arthritis.org/living-with-arthritis/arthritis-diet/best-foods-for-arthritis/

www.arthritis.org/living-with-arthritis/arthritis-diet/anti-inflammatory/

www.indiatimes.com/health/tips-tricks/omega3-fatty-acids-top-10-sources-of-omega3-fatty-acids

www.cdc.gov/arthritis/basics/physical-activity-overview.html

 

 • PUBLISHED DATE : Aug 10, 2017
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Aug 10, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.