Alzheimers-Disease.png

அல்சைமர் நோய்

அல்சைமர் நோய் முதுமை மறதியின் மிகப் பரவாலான வடிவமாகும் (நல்ல நிலையில் இருக்கும் ஒருவருக்கு, பொதுவாக முதியோரிடம் காணப்படுவதை விட அறிவுத் திறம் கடுமையான அளவில் குறைதல்). முதியோரிடம் இது பரவலாகக் காணப்படுகிறது. அல்சைமர் நோய் மாற்ற முடியாத ஒரு மூளை நோயாகும். இது மெதுவாக நினைவாற்றலையும் சிந்திக்கும் திறனையும் அழித்துவிடுகிறது. இதன் விளைவாக அன்றாடக வாழ்க்கையின் சிறுசிறு நடவடிக்கைகளையும் செய்யத் திறனற்றுப் போய்விடுகின்றனர். அறிவியலாளர்கள் இது குறித்து நாளும் அதிகமாக அறிந்து வருகின்றனர் என்றாலும் இதுவரை அல்சைமர் நோயின் காரணங்கள் அறியப்படவில்லை. ஆகவே இது ஒரு காரணம் அறியப்படாத நோயாகவே இருக்கிறது.

குறிப்புகள்: www.cdc.gov

www.nia.nih.gov
www.nhs.uk

முன்-முதுமை மறதி: எப்போதாவது ஒன்றை மறந்துபோதல்.

ஆரம்ப முதுமை மறதி: குறுகிய கால நினைவிழப்பு.

நடுப்பட்ட முதுமைமறதி: அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை மறந்துபோதல். மேலும் குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் இனங்காண்பதில் சிக்கல்.

பின் முதுமை மறதி: நடப்பதிலும், பேசுவதிலும், தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வதிலும் திறன் இழப்பு. உண்ணுதல், கழுவுதல், கழிவறைக்குச் செல்லுதல் ஆகிய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட பிறரைச் சார்ந்து நிற்கும் நிலை. செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்குப் பதில் அவர்கள் திரும்பத் திரும்பக் கத்தவும், முனகவும், அலறவும் கூடும்.

குறிப்பு:
www.nia.nih.gov

அறிவியலாளர்களால் இதுவரை அல்சைமர் நோயின் சரியான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் காலஞ்செல்லச் செல்ல இது மூளையில் நடைபெறும் சிக்கலான செயல்பாடுகளால் உண்டாகிறது என்பது தெளிவாகிறது. கூடுதலாகச் சில காரணங்களும் உள்ளன:

மரபியல்: தாமதமாகத் தொடங்கும் அலசைமர் நோய்க்கு அப்போலிப்போபுரதம் E [apo lipoprotein E (APOE)]  மரபணு காரணமாகலாம். இந்த மரபணுவுக்குப் பல வடிவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றான APOE ε4 இந்நோய் அபாயத்தை அதிகரிக்கிறது. எனினும், APOE ε4 மரபணுவைக் கொண்டுசெல்லும் எல்லோருக்குமே இந்நோய் வரும் என்பது அவசியமில்லை. இந்த மரபணுவைக் கொண்டவர்களுக்கும் நோய் ஏற்படலாம். தாமதாகத் தொடங்கும் அல்சைமர் நோயை வேறு மரபணுக்களும் தூண்டலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். உலகம் முழுவதும் உள்ள அறிவியல் அறிஞர்கள் இம்மரபணுக்களைத் தேடி வருகின்றனர். தாமதமாகத் தொடங்கும் அல்சைமர் நோய் அபாயத்துக்குக் காரணமான APOE ε4 மரபணு தவிர வேறு பல பொதுவான மரபணுக்களையும் அவர்கள் இனம் கண்டுள்ளனர்.

சுற்றுச்சூழல்/வாழ்க்கைமுறைக் காரணிகள்: இதய நோய், மாரடைப்பு, மிகை இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல் பருமன் போன்ற நோய்களும் அல்சைமர் நோயுடன் தொடர்புடையன என்று காட்டப்படுகின்றன.

குறிப்பு: www.nia.nih.gov

ஆரம்பகட்டத்திலேயே துல்லியமாக அறிவது பல காரணங்களால் முக்கியமானது. நோயறிகுறிகள் அல்சைமர் நோய்க்கு உரியதுதானா அல்லது மாரடைப்பு, கட்டி, பார்க்கின்சன் நோய், தூக்க இடையூறுகள், மருந்துகளின் பக்கவிளைவுகள் அல்லது மருத்துவத்தால் மாற்றக்கூடிய பிற நிலைமைகளா என்பதை இதனால் கூறமுடியும்.

குடும்பங்கள் தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடவும், வாழ்வியல் ஏற்பட்டுகளைச் செய்து கொள்ளவும், ஆதரவுகளைத் திரட்டிக் கொள்ளவும் இது உதவி செய்யும். மேலும், நோயாளிகள் மருத்துவ சோதனைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்ப கட்ட நோய் கண்டுணர்தல் வாய்ப்புகளைத் தரும். அல்சைமர் நோயை உறுதிப்படுத்த இறப்புக்குப் பின்தான் முடியுமென்றாலும் மருத்தவர்கள் கீழ்வருவனவற்றைக் கொண்டு நோயைக் கண்டறிகிறார்கள்:

 • முந்திய மருத்துவ வரலாறும் இன்றைய ஆரோக்கிய நிலைமையும்
 • நோயாளியின் நடத்தையிலும் ஆளுமையிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்
 • நினைவாற்றல், பிரச்சினை தீர்த்தல், மொழி ஆகியவற்றை உள்ளடக்கிய அறிவாற்றல் சோதனை நடத்துதல்
 • பிற காரணங்கள் இல்லை என உறுதி செய்ய வழக்கமான இரத்தம் மற்றும் சிறுநீர் மருத்துவ சோதனைகள் போன்றவற்றைச் செய்தல்
 • CT/MRI ஊடுகதிர் சோதனைகள் உட்பட மூளை ஊடுகதிர்ச் சோதனைகள்

குறிப்புகள்www.nia.nih.gov

www.lifestyleoptions.com

அல்சைமர் நோயைக் குணப்படுத்த முடியாது. நோய்க்குறிகளுக்கேற்ற நிவாரணத்தை அளிக்க முடியும். தற்போதைய சிகிச்சை முறையை மருந்தியல், சமூகவுளவியல், கவனிப்பு சார்ந்தவைகள் என வகைப்படுத்தலாம்.

மருந்து:

கோலிநெஸ்ட்டரேஸ் ஒடுக்கிகள் (Cholinesterase Inhibitors): அசிட்டைல்கோலின் (Acetylcholine) என்ற வேதிப்பொருள் நரம்பு சமிக்ஞைகளுக்கு செயல்திறமூட்டி மூளை உயிரணுக்களுக்கு இடையில் நிலவும் செய்தி பரிமற்ற அமைப்பிற்கு துணைபுரிகிறது. அல்சைமர் நோய்க்கு அளிக்கப்படும் பல்வேறு மருந்துகளாவன:

 • டோனேபெசில் (Donepezil)
 • ரிவாஸ்டிக்மைன் (Rivastigmine G)
 • கேலன்டாமைன் (Galantamine)

லேசானதில் இருந்து மிதமான அல்சைமர் நோய் வரைக்கும் இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன (கடுமையான அல்சைமர் நோய்க்கு டோனேபெசில் அளிக்கலாம்).

சமூகவுளவியல்:

மருத்துவ சிகிச்சையுடன் சமூக உளவியல் அணுகுமுறையும் பயன்படுத்தப்படுகிறது. இதை நடத்தை, உணர்ச்சி, அறிவு அல்லது தூண்டல் சார்ந்த அணுகுமுறைகளின் கீழ் பகுக்கலாம்.

பேணி கவனித்தல்: அல்சைமர் நோய் குணப்படுத்த முடியாது என்பதால் நோய்வாய்ப் பட்டவர்கள் படிப்படியாக தங்கள் தேவைகளையே நிறைவுசெய்ய முடியாதவர்கள் ஆகிவிடுகின்றனர். எனவே பேணிகவனித்தல் என்பதும் சிகிச்சையாகிவிடுகிறது. நோயின் வளர்ச்சிப்போக்கை அனுசரித்து கவனமாகப் பேணி கவனிக்க வேண்டும்.

குறிப்புwww.nia.nih.gov

எந்த ஒரு தடுப்பு முறையும் பயனுள்ளது எனக் கூற எந்தவித சான்றுகளும் இல்லை. ஆயினும் சில முறைகளைப் பின்பற்றினால் முதுமை மறதி வருவதைப் பின்தள்ள முடியும். மன அளவில் ஆரோக்கியமாக இருக்கப் பின்வருவனவற்றைப் பின்பற்றலாம்:

 • வாசித்தல்
 • மகிழ்வூட்ட எழுதுதல்
 • இசைக்கருவிகளை வாசித்தல்
 • முதியோர் கல்வி திட்டங்களில் பங்கெடுத்தல்
 • பகுப்பாய்வுத் திறன்கொண்ட விளையாட்டுகள்
 • நீந்துதல்
 • பந்துவீசுதல் போன்ற குழு விளையாட்டுகள்
 • நடைப்பயிற்சி
 • பிற பொழுதுபோக்கு செயல்பாடுகள்

குறிப்புwww.nhs.uk

 • PUBLISHED DATE : May 18, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 03, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.