Epilepsy.png

கால்கைவலிப்பு

உலக சுகாதார அமைப்பின் வரையறைப்படி, கால்கை வலிப்பு ஒரு நீடித்து நிலைத்து நிற்கும் நோய்; இது திடீரெனத் தாக்கும்போது, சிறிது நேர ஞாபக இழப்பு அல்லது, தசைகள் துடித்தல் முதற்கொண்டு தீவிரமான நீடித்த வலிப்பு வரை ஏற்படும்.

ஒருவகை மூளை உயிரணுக்களின் தொகுதியில் அதிகப்படியான மின்னழுத்தம் பாயும்போது திடீரென குறைந்த கால அளவிற்கு இவ்வலிப்பு ஏற்படுகிறது. பெரும்பாலான நோயாளிகளுக்கு எதிர் வலிப்பு மருந்துகள் மூலம் வெற்றிகரமாக இந்நோயைத் தீர்க்க முடிகிறது. வலிப்பு அனைத்து வயது மக்களுக்கும் வரும் நீடித்த, பிறருக்குப் பரவாத ஒரு மூளைக் கோளாறு ஆகும். உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி உலகில் ஐந்து கோடி மக்களுக்கு வலிப்புநோய் இருக்கிறது. இந்தியாவில், குறிப்பாகக் குழந்தைகளுக்கு, இது பரவலாக உள்ளது.

குறிப்புகள்: www.who.int
www.who.int
www.epilepsyfoundation.com
www.epilepsyindia.org

அடிக்கடி ஏற்படும் வலிப்புகளே கால்கை வலிப்பு நோயின் முக்கிய அறிகுறி. மூளையின் எப்பகுதி பாதிக்கப் பட்டுள்ளதோ அதற்கேற்ப பல்வகையான வலிப்புகள் ஏற்படுகின்றன. மூளை பாதிக்கப்பட்டுள்ள  அளவைப் பொறுத்து வலிப்பை இரண்டு வகைப் படுத்தலாம்:

பகுதி வலிப்பு— மூளையின் ஒரு சிறு பகுதி மட்டும் பாதிக்கப் பட்டிருந்தால்.

முழு வலிப்பு— மூளையின் முழுப்பகுதியும் பாதிக்கப் பட்டிருந்தால். குழந்தைகளில் இது அதிகம்.

பகுதி வலிப்பின் அறிகுறிகள்:

  • பொருட்களைப் பார்ப்பதிலும், நுகருவதிலும், உணருவதிலும், சுவைப்பதிலும், ஒலியைக் கேட்பதிலும் வித்தியாசம் காணப்படும்
  • நடப்பவை முன்னரே நடந்து விட்டதைப் போன்ற தீவிரமான உணர்வு தோன்றும்
  • கூச்ச உணர்வு அல்லது கையிலும் காலிலும் ஊசிகள் இருப்பதுபோல் தோன்றும்
  • பயம் அல்லது மகிழ்ச்சி போன்ற திடீர் ஆழமான உணர்வு
  • கைகளில், கால்களில், முகத்தில் உள்ள தசைகள் இறுக்கம் அடைதல்
  • உடலின் ஒரு புறத்தில் வெட்டி இழுக்கும் அனுபவம்

முழு வலிப்பில் ஆறு முக்கிய வகைகள்

  1. நினைவிழக்கும் வலிப்பு (Absence seizure): பொதுவாக சிறு பிள்ளைகளையே பாதிக்கும் இதனை ‘சிறுகாக்காய் வலிப்பு’ என்றும் அழைப்பர். இது குழந்தைகளை 20 வினாடிகள் வரைத் தங்களது சுற்றுச் சூழல் பற்றிய உணர்வையே இழக்கச் செய்கிறது. பாதிக்கப்படும் குழந்தை சூனியத்தையே வெறித்து நோக்குவது போல் தோன்றும். இருப்பினும் சில குழந்தைகள் கண்களைப் படபடவெனத் திறந்து மூடுவர் அல்லது தங்கள் உதடுகளைக் கடித்துக் கொள்ளுவர். வலிப்பு பற்றிய நினைவே குழந்தைக்கு இருக்காது. ஒரு நாளைக்குப் பலமுறை நினைவிழத்தல் ஏற்படலாம். இவற்றால் ஆபத்து இல்லை என்றாலும் குழந்தையின் செயல் திறன் முற்றிலும் பாதிக்கப்படும்.
  2. தசை சுருங்கி வெட்டி இழுத்தல் (Myoclonic jerks): இவ்வகையான வலிப்பில், மின்சாரத் தாக்குதலில் ஏற்படுவது போல, கைகளும் கால்களும் உடலின் மேற்பகுதியும் குலுங்கும் அல்லது வெட்டி இழுக்கும். இது பெரும்பாலும் ஒரு வினாடியின் ஒரு பகுதியே நீடிக்கும். கண்விழித்து எழுந்த பின் முதல் சில மணி நேரங்களிலேயே அடிக்கடி நிகழும் இது பிற வகை முழு வலிப்புகளுடன் இணைந்தும் ஏற்படலாம்.
  3. குறுகிய கால தசை வலிப்பு (Clonic seizure): மயோகுளோனிக் வலிப்பைப் போன்றே    இதிலும் வெட்டி இழுக்கும் வலிப்பு ஏற்படும். ஆனால் அறிகுறிகள் நீடித்து நிலைக்கும், பொதுவாக இரண்டு நிமிடம் வரை நோயாளி நினைவையும் இழக்கலாம்.
  4. விறைப்பற்ற வலிப்பு (atonic seizure): இது தசைகள் யாவற்றையும் தளரச் செய்வதால் நோயாளி கீழே விழுந்து விடக்கூடிய வாய்ப்புண்டு. இவ்வலிப்பால் பெரும்பாலும் முகத்தில் காயங்கள் உண்டாகும். 
  5. விறைப்பு வலிப்பு (tonic seizure): விறைப்பற்ற வலிப்பைப் போலல்லாமல் இவ்வகை வலிப்பில் தசைகள் விறைப்பாகி விடுகின்றன. இதனால் சமநிலை இழந்து கீழே விழ நேரிடும். பின்மண்டையில் காயம் படுதல் இவ்வகை வலிப்பில் பரவலாகக் காணக்கூடிய ஒன்று.
  6. விறைப்புடனான குறுகியகால தசை வலிப்பு (Tonic-clonic seizure): இரண்டு நிலை கொண்ட இந்நோய் ‘கிராண்ட் மால்’ என அழைக்கப்படுகிறது.  முதலில் உடல் விறைப்பாகி பின் பக்க வாட்டில் தசைகள் வெட்டி இழுக்கும். நோயாளி சுய நினைவிழந்து போவார். பொதுவாக ஒன்றில் இருந்து மூன்று நிமிடங்கள் வரை நிலைக்கும் இவ்வகை வலிப்பு இன்னும் கூடுதல் நேரமும் நிலைக்கக் கூடும்.

குறிப்புகள் : www.nhs.uk

கால்கை வலிப்பின் சரியான காரணம் இதுவரை கண்டறியப் படவில்லை. எனினும் ஒரு வகையான மூளைச் சிதைவே இதன் பின்னணியில் இருக்கிறது எனலாம். மூளை நரம்பணுக்களின் இடையில் நிலவும் இயல்பான தொடர்புகளில் தடங்கல் ஏற்படும்போது கால்கை வலிப்பு ஏற்படுகிறது (சிக்கலான மின்சுற்றுக் கம்பிகளில் உருவாகும் தடங்கல்கள் போல). நரம்பணுக்கள் சைகைகளைப் பரிமாறிக்கொள்ள  இன்றியமையாதவைகளான  இயற்கை வேதிப்பொருட்களில் அல்லது  நரம்புக்கடத்திகளில் (neurotransmitters) சமநிலை தவறும் போதோ அல்லது நரம்புகளின் இயல்பான உணர்திறனை மாற்றும் அயனி தடவழிகள் (ion channels) எனப்படும் புரதங்கள் உட்பட நரம்பணுக்களின் தோல்படலங்களில் மாற்றங்கள் ஏற்படும்போதோ இத்தடங்கல்கள் ஏற்படும்.

இவைகளுள் சில தடங்கல்கள், சமநிலையிழப்புகள், மாற்றங்கள் வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் நிகழக் கூடும். சில வேளைகளில் இவை மரபுவழிக் காரணிகளோடு தொடர்புடையதாகவும், சில வேளைகளில் ஆரம்பகால பாதிப்புகளோடும், நிகழ்ச்சிகளோடும் தொடர்புடையாதாகவும் இருக்கலாம்.

வலிப்பில் மூன்று முக்கிய வகைகள் உண்டு:

நோய்க்குறி சார்ந்த வலிப்பு (Symptomatic epilepsy) — இத்தகைய வலிப்பின் காரணம் தெரிந்ததாக இருக்கும். எடுத்துக்காட்டு: தலைக் காயம்.

நோய்க்குறியறியா வலிப்பு (Idiopathic epilepsy) ––- ஆய்வுக்குப் பின்னரும் தெளிவான காரணம் அறியப்படாத வலிப்பு.

நோய்முதலறியா வலிப்பு (Cryptogenic epilepsy) –– இடியோபேத்திக் வலிப்பைப் போலவே இவ்வகை வலிப்புக்கும் காரணம் தெரியாவிட்டலும் இது மூளைச்சிதைவால் ஏற்பட்டதே என்பதற்கு வலிமையான சான்றுள்ளது.

குறிப்புகள்www.nhs.uk
www.cdc.gov

வலிப்பு நோயைக் கண்டறிய வேண்டுமானால் பொதுவாக அது தன்னிச்சையாக ஏற்படுவதாக இருக்க வேண்டும். ஆயினும் சிலவகை வலிப்புகள் நிகழ வேண்டுமானால் ஒருசில தூண்டல்கள் தேவைப் படுகின்றன. இவை அனிச்சை வலிப்புகள் எனப்படுகின்றன. எடுத்துக்காட்டாக சில நோயாளிகளுக்கு வாசிக்கும் போது வலிப்பு தூண்டப்படுகிறது. ஒளிதூண்டல் வலிப்பு, பளிச்சிடும் ஒளியைப் பாய்ச்சும்போது மட்டுமே தூண்டப்படுகிறது. தன்னிச்சையாக வலிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு பிற நோய்த்தூண்டிகளாலும் வலிப்பு ஏற்படலாம்.

நோய்கண்டறியும் முறைகள்:

காந்த ஒத்ததிர்வு பிம்ப கதிர்ப்படம் (Magnetic resonance imaging scan (MRI): உங்கள் மூளையில் உள்ள அமைப்புக் கோளாறுகள் அல்லது மூளைக்கட்டிகள் போன்ற கால்கை வலிப்புக்கான சாத்தியக் கூறுகளை MRI கதிர்ப்படம் கண்டறியும்.

மின்மூளை வரைபடம் (Electroencephalograph (EEG):  மண்டையோட்டின் மேல் மின்வாய்களை வைத்து EEG சோதனை மூலம் மூளையின் மின் செயல்பாடுகள் அளக்கப்படுகின்றன. இச் சோதனையின் போது நோயாளிகள் இழுத்து மூச்சு விடும்படியாகவும் கண்களை மூடிக்கொள்ளும்படியாகவும் கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். இந்த நடவடிக்கைகள் வலிப்போடு சம்பந்தப்பட்ட அசாதாரணமான மூளைச் செயல்பாடுகள் உள்ளனவா என்பதை வெளிக்காட்டும். நோயாளிகள் பளிச்சிடும் ஒளியை நோக்கிப் பார்க்கும் படியாகவும் கேட்டுக் கொள்ளப்படுவர். ஆனால் பளிச்சிடும் ஒளி வலிப்பைத் தூண்டும் என்று தோன்றினால் இச்சோதனை உடனடியாக நிறுத்தப்படும்.

உங்கள் நோய்கண்டறிதலில் வேறுபாடுகள் காணப்படும். அதனால் மேலாய்வுக்கு உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நலம்.

குறிப்புகள்www.nhs.uk
www.epilepsyindia.org
www.epilepsyfoundationindia.com

வலிப்பு நோயாளிகளை அடிக்கடி கவனித்து வரும் மருத்துவர், பிரதம கவனிப்பாளர், நரம்பியல் நிபுணர், நரம்பு அறுவை மருத்துவர் ஆகியோரின் பரிந்துரைப்படியே பொதுவாக கால்கை வலிப்பிற்கு மருத்துவம் அளிக்கப் படுகிறது. ஆயினும், முழு வலிப்பிற்கும் அவ்வப்போது வரும் வலிப்பிற்கும் இடையில் உள்ள சரியான வேறுபாட்டை அறிவதே தகுந்த மருத்துவ முறையைத் தீர்மானிக்க முக்கியமானது என்பது வலியுறுத்தப் படுகிறது. வலிப்புநோய் மருத்துவத்தின் ஆதாரப்பொருள் எதிர்வலிப்பு மருந்துகளே. இருப்பினும் பலசமயங்களில் அது ஆரோக்கிய வாழ்க்கைக்கு சில எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை மறுக்க முடியாது.

மருந்தளித்தல்: (Medications) சோடியம் வல்ப்ரோயேட் (sodium valproate), கார்பாமாசேபைன் (carbamazepine), ஃபெனிடாய்ன் (phenytoin), ஃபீனோபார்பிட்டால் (phenobarbital) ஆகியவையே பழைய முன்னணி எதிர்வலிப்பு மருந்துகள். புதிய எதிர்வலிப்பு மருந்துகளில் (AED)  கபாபெண்டின் (gabapentin), லேமோடிரைஜின் (lamotrigine), லெவட்டிராசெட்டம் (levetiracetam), ஆக்ஸ்கார்பாசெப்பைன் (oxcarbazepine), டியாகாபைன் (tiagabine), டாப்பாமேக்ஸ் (topamax) விகாபேட்ரின் (vigabatrin) ஆகியவை உள்ளடங்கும். லெவட்டிராசெட்டம் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படுவதில்லை. எதிர்வலிப்பு மருந்துகளின் பக்கவிளைவுகளில் அடங்குவன:

  • குமட்டல்
  • வயிற்றுவலி
  • தூக்கக்கிறக்கம்
  • தலைசுற்றல்
  • உறுத்தல்
  • மனநிலை மாற்றம்

அறுவை மருத்துவம்: மருந்துகளுக்குக் கட்டுப்படாத வலிப்புகளுக்கு அறுவை மருத்துவமும் செய்யப்படுகிறது.

மின்தூண்டல்: சஞ்சாரி நரம்பைத் (Vagus nerve) தூண்டுதல்: கழுத்தில் உள்ள சஞ்சாரி நரம்போடு கணினி இணைப்பைப்  பெற்ற மின்பொறியமைப்பு பொருத்தப் படுகிறது. முன்னமைவு பெற்ற இடைவெளிகளுடனும் மின்னாற்றலுடனும் இவ்வமைப்பு சஞ்சாரி நரம்பைத் தூண்டுகிறது. சிதைவு சம்பந்தப்பட்ட வலிப்பு நோயாளிகளின் திறன் சோதிக்கப்படுகிறது.

தேசிய சுகாதார இணையதளம் சுகாதாரத்தைப் பற்றி நல்ல முறையில் அறிந்து கொள்ளவே அறிவூட்டும் செய்திகளை மட்டும் அளிக்கிறது. எந்த ஒரு மருத்துவத்திற்கும் நீங்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.

குறிப்புகள்: www.cdc.gov b
www.nhs.uk

  • PUBLISHED DATE : Apr 22, 2015
  • PUBLISHED BY : NHP CC DC
  • CREATED / VALIDATED BY : NHP Admin
  • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.