மூளைக்கட்டி

மூளையில் உண்டாகும் அசாதரணமான அல்லது கட்டுப்பாடற்ற உயிரணுக்களின் வளர்ச்சியே மூளைக்கட்டி ஆகும். ஆரோக்கியமான ஒரு மனித உடலில் இயல்பான உயிரணுக்கள் மூப்படைகின்றன அல்லது இறந்துபடுகின்றன. அவற்றின் இடத்தில் புதிய உயிரணுக்கள் உருவாகின்றன.  சில வேளைகளில் இச்செயல் முறை தவறுகிறது. உடலுக்குத் தேவை இல்லாத போதும் சில புதிய உயிரணுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பழைய உயிரணுக்கள் இயல்புக்கு மாறாக இறந்து மடிவதில்லை. இத்தகைய கூடுதல் உயிரணுக்கள்  சிலவேளைகளில் ஒரு திசுத்திரட்சியாக உருக்கொள்ளுகின்றன. இதுவே வளர்ச்சி அல்லது கட்டி என அழைக்கப்படுகிறது. இவற்றில் இரு வகை உண்டு: தீங்கற்ற கட்டி மற்றும் புற்று.

மூளைக்கட்டி ஓர் ஆபத்தான நோய். பலவகைகளில் இதற்கு மருத்துவம் அளிக்கப்பட்டாலும் பல நோயாளிகள் 9-12 மாதங்களில் இறந்து போகின்றனர். 3 சதவிகிதத்துக்கு உட்பட்டவரே 3 ஆண்டுகளுக்கும் மேல் வாழுகின்றனர்.

புற்று மேலும் இரு வகைப்படும். மூளையிலேயே ஆரம்பிக்கும் முதன்மை மூளைக்கட்டி மற்றும் மூளை இடம்மாறல் கட்டி எனப்படும் உடலின் வேறு எங்கோ ஆரம்பித்து உடல் முழுவதும் பரவும் இரண்டாம் நிலைப் புற்று.

முதன்மை மூளைக்கட்டியும் பலவகைப்படும். உயிரணுக்களின் வகை அல்லது மூளையில் கட்டி காணப்படும் அல்லது ஆரம்பிக்கும் இடம் ஆகியவற்றைக் கொண்டு அவைகள் பேரிடப்படுகின்றன.  உதாரணமாக மூளைக்கட்டி மூளையாதாரத் திசுவில் ஆரம்பித்தால் நரம்புப்புற்று என அழைக்கப்படும். இது போல புற்று ஏற்படும் மூளையின் பகுதியைக் கொண்டு பல வகையான புற்றுக்கள் உண்டு.

மூளைக்கட்டியைப் பற்றிய சில உண்மைகள்

 

 • மூளைக்கட்டி எந்த வயதிலும் ஏற்படலாம்.
 • மூளைக்கட்டி ஏற்படுவதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை
 • மரபுக் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கதிர்வீச்சு அபாயம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
 • அறிகுறிகள் மூளைக்கட்டியின் அளவு, வகை, இடத்தைப் பொருத்தது.
 • பெரியவர்களுக்குப் பரவலாக ஏற்படும் மூளைப் புற்றுக்கள், நரம்புநார்த்திசுக்கட்டி, தண்டுமூளைப்புற்று மற்றும் நரம்புதிசுக்கட்டி
 • சிறுவர்களுக்கு ஏற்படும் முதன்மை மூளைப் புற்றுக்கள்  மூல உயிரணுப்புற்று,  நரம்புத்திசுப் புற்றுவகை  I அல்லது II, பலவகை அணுக்கட்டிகள், மூளை மூல அணு நரம்புத்திசுக்கட்டி ஆகியவை.
 • மூளைக்கட்டிகள், மருத்துவ வரலாறு, உடல் பரிசோதனை, பலவகை சிறப்பு சோதனைகளால் கண்டறியப்படுகின்றன.
 • அறுவை, கதிர்வீச்சு, வேதியற்சிகிச்சை அல்லது இவைகளை இணைத்து மூளைக்கட்டிக்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

 

குறிப்புகள்:
www.braintumourresearch.org(link is external)  
en.wikipedia.org(link is external)  
www.medicinenet.com(link is external) 
www.apocpcontrol.com

மூளைப் புற்றின் பொதுவான அறிகுறிகள் வருமாறு:

 • தலைவலி (பொதுவாகக் காலையில் கடுமையாக இருக்கும்)
 • குமட்டலும் வாந்தியும்
 • பேச்சு, பார்வை, கேட்டலில்  மாற்றம்
 • சமநிலை பேணல் அல்லது நடையில் பிரச்சினை
 • மனநிலை, ஆளுமை, மனவொருமைப்பட்டில் மாற்றம்
 • நினைவாற்றல் பிரச்சினை
 • தசை குலுக்கம், வலி (வலிப்பு)
 • கை அல்லது காலில் சுரணையின்மை
 • அசாதாரணக் களைப்பு

கட்டியின் அறிகுறி இருக்கும் இடத்தோடு சம்பந்தம் உடையது. 

நமது மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒரு குறிப்பிட்ட வேலையைக் கட்டுப்படுத்துகிறது. கட்டி மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பாதிக்கலாம். ஆகவே இயல்பான செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.  இருக்கும் இடத்தை வைத்து ஏற்படும் சில அறிகுறிகள் கீழ் வருமாறு:

மூளைத்தண்டு: 

 • நடக்கும்போது ஒத்திசைவு இன்மை
 • இரட்டைப் பார்வை
 • விழுங்குவதிலும் பேசுவதிலும் சிரமம்
 • முக பலவீனம் – ஒரு பக்க சிரிப்பு
 • கண்ணிமை பலவீனம் – கண்ணை மூடுவதில் சிரமம்

சிறுமூளை: 

 • சிமிட்டல், கண்களின் அனிச்சை செயல்
 • வாந்தி, கழுத்து விறைப்பு
 • நடையிலும் பேச்சிலும் ஒத்திசைவு இன்மை

நெற்றிப்பொட்டு மடல்:

 • பேச்சு சிரமமும் நினைவாற்றல் பிரச்சினையும்
 • அசாதாரண உணர்வுகள்-அச்சம், கண்ணிருள்தல், விசித்திர மணம்

பின்தலை மடல்

ஒரு பக்கக் கண்பார்வையைப் படிப்படியாக இழத்தல்.

தலைச்சுவர் மடல்:  

 • வாசித்தல், எழுதுதல், அல்லது எளிய கணக்கீட்டில் பிரச்சினை
 • வழி கண்டு செல்லுவதில் சிரமம்
 • உடலின் ஒரு புறத்தில் உணர்வின்மை
 • சொற்களைப் புரிந்து கொள்ளுவதிலும் பேசுவதிலும் சிரமம்

மூளைமுன்மடல்

 • உடலின் ஒரு புறம் தள்ளாட்டமும் பலவீனமும்
 • ஆளுமை மாற்றம்
 • வாசனைத் திறனிழப்பு

மூளைக்கட்டி ஏற்பட  எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை. சிலவகைக் கட்டிகளுக்கு சில மரபணுக்களின் பிறழ்ச்சியே காரணம் என்று கருதப்படுகிறது.  மூளைக்கட்டி உட்பட பல வகையான புற்றுக்களுக்குக் கைப்பேசி போன்ற பொறிகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் பங்கு பற்றி பெரிய அளவில் பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. எனினும் இது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இத்துறையில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பிற புற்று நோய்களைப் போன்றே மூளைப் புற்றும் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவும் தொற்று நோயல்ல.

நோய்வரலாறு, அறிகுறிகள், உடல் மற்றும் நரம்பியல் பரிசோதனைகளின் அடிப்படையிலும், எம்.ஆர்.ஐ, சி.டி.ஸ்கேன், ஆஞ்சியோகிராம் அல்லது ஸ்பைனல் டேப் ஆகிய பொறிநுட்பங்களின் துணை கொண்டும் நோய் கண்டறியப்படுகிறது.

 • நரம்பியல் பரிசோதனை:  பார்வை, கேள்திறன், கவனம், தசைவலிமை, ஒத்திசைவு, அனிச்சை செயல் சோதனைகள் இதில் அடங்கும். கண்ணையும் மூளையையும் இணைக்கும் நரம்பு கட்டியால் அழுத்தப்படுவதால் உண்டாகும் கண்வீக்கம் உள்ளதா என்று ஆய்வு செய்யப்படும்.
 • இரத்தக்குழல் வரைபடம் : இது ஒரு பிம்ப தொழிற்நுட்பம். ஒருவகைச் சாயம் இரத்த ஓட்டத்தில் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. கட்டி இருந்தால், பிம்பத்தில் கட்டி அல்லது கட்டிக்கு இரத்தம் கொண்டுசெல்லும் குழல்கள் காணப்படும்.
 • கீழ்முதுகுத் துளையிடல்: கீழ்முதுகுத் துளையிடல் என்ற பொறிநுட்பத்தின் மூலம் மூளைத்தண்டுவட நீர்மம் சேகரிக்கப்பட்டு நோய்கண்டறியப் படுகிறது. ஒரு நீண்ட மெல்லிய ஊசி இதற்காகப் பயன்படுத்தப்படும். இதற்கு 30 நிமிடங்கள் ஆகும்.
 • காந்த அதிர்வு பிம்பமும் கணினி ஊடுகதிர் வரைவியும் (MRI and CT scan) மூளைக்கட்டியைக் கண்டறிவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

கட்டியின் வகை, நிலை, இடம் ஆகியவற்றையும் நோயாளியின் பொதுவான ஆரோக்கிய நிலையையும் பொருத்து மூளைக்கட்டிக்கான மருத்துவம் அமைகிறது.

மூளைக்கட்டிக்கான சில சிகிச்சை முறைகள் வருமாறு:

 • அறுவை: தீங்கு விளைவிக்காத மற்றும் தீங்குதரும் முதனிலை மூளைக்கட்டிகளுக்கு முதற்கட்ட சிகிச்சை அறுவை மருத்துவமே. கட்டியின் பெரும்பான்மைப் பகுதி அகற்றப்பட்டு  நரம்புகள் தொடர்ந்து செயல்பட வழிவகுக்கப்படுகிறது.
 • கதிரியக்கசிகிச்சை:  புற்றுத் திசுக்கள் பெருகாமல் இருக்க அதி ஆற்றல் கதிர்க் கற்றைகள் அவற்றின் மேல் குவிக்கப்படுகின்றன.
 • வேதியற்சிகிச்சை:  புற்று எதிர்ப்பு மருந்துகள் மூலம் புற்றணுக்கள் அழிக்கப்படுகின்றன அல்லது பெருகாமல் தடுக்கப்படுகின்றன.
 • ஊக்கமருந்துகள்: மூளைக்கட்டியைச் சுற்றிலும் ஏற்படும் அழற்சியை குறைப்பதற்கும் தடுப்பதற்கும் பொதுவாக ஊக்க மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன.
 • எதிர்-வலிப்பு மருந்து : வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு இது பரிந்துரைக்கப் படுகிறது.
 • மூளைக்குழிவு தடமாற்றி: தலையில் வைக்கப்படும் தடமாற்றியின் மூலம் மூளைக்குள் இருக்கும் மிகைத் திரவம் வெளியேற்றப்பட்டு அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
 • பராமரிப்பை ஊக்கப்படுத்துதல் : மூளைக்கட்டியால் துன்பப்படும் நோயாளிகளுக்கு உடல் பயிற்சி சிகிச்சை,  ஆன்மீக ஆதரவு, ஆலோசனை போன்ற ஆதரவளிக்கும்  பராமரிப்பை ஊக்கப்படுத்தவும்.

 • PUBLISHED DATE : Nov 20, 2015
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Nov 20, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.