Rabies.png

வெறிநாய்க்கடிநோய்

வெறிநாய்க்கடி நோய் ஒரு வைரல் தொற்றாகும். இது மூளையையும் நரம்பு மண்டலத்தையும் தாக்குகிறது. இது விலங்கில் இருந்து விலங்குக்குப் பரவும் நோய். நாயில் இருந்து மனிதனுக்கு பரவுவது போல் பொதுவாகத் தொற்றுள்ள ஒரு விலங்கு கடிக்கும்போது உண்டாகிறது. மனிதர்களுக்குத் தொற்றேறி கடுமையான அறிகுறிகள் தோன்று முன்னர் தடுப்பு மருந்து கொடுக்க வில்லை என்றால் உயிருக்கு ஆபத்தாக முடியும். வெறிநாய்க்கடி நோய் வைரஸ் நடுநரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. முடிவில் மூளை பாதிக்கப்பட்டு மரணம் ஏற்படுகிறது. புற நரம்புகள் வழியாக வைரஸ் மூளையை அடைகிறது. கடிபட்ட இடம், நோய்க்கடுமை, நடு நரம்பு மண்டலத்தை சென்றடைய வைரஸ் செல்லவேண்டிய தூரம் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மனிதர்களில் இந்நோயின் நோயரும்பும் காலம் (கடி/வைரஸ் பாதிப்பு அடைந்ததில் இருந்து அறிகுறிகள் தோன்றும் வரை) பொதுவாக சில நாட்களில் இருந்து சில மாதங்கள் வரை இருக்கும்.

தேசிய வெறிநாய்க்கடிநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்

 • National Guidelines on Rabies Prophylaxis

இந்தக் கட்டுரையின் உள்ளடக்கம் டாக்டர் எம்.கே.சுதர்ஷன், ராஜிவ் காந்தி பொதுசுகாதார நிறுவனம் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு மையம், பெங்களூரு, அவர்களால் 9-3-2015 அன்று மதிப்பாய்வு செய்யப்பட்டது.

 

 


 

தொற்று ஏற்படுவதற்கும், முதன்முதலில் சளிக்காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதற்கும் இடையில் பொதுவாக 2-ல் இருந்து 12 வாரங்கள் பிடிக்கும். வழக்கமான அறிகுறிகளில் அடங்குவன:

 • மனக்கலக்கம்
 • தூக்கமின்மை
 • குழப்பம்
 • அமைதியின்மை
 • காய்ச்சல்
 • தலைவலி
 • குமட்டல் மற்றும் வாந்தி

இவற்றைத் தொடர்ந்து விரைவில்

 • நீர் அருந்த முடியாமை மற்றும்/அல்லது நீரைக் கண்டு பயம்
 • காற்று வீசும்போது பயம்
 • ஒளி பயம்
 • அசாதாரண நடத்தை
 • மாயத்தோற்றத்தைத் தொடர்ந்து சித்தப்பிரமை
 • முரட்டுத்தனமான நடத்தை (சிலர்)
 • இலேசான அல்லது அரைகுறை வாதம்
 • முடிவாக இதய-மூச்சு செயலிழப்பும் மரணமும்

 

வெறிநாய்க்கடி நோய் வைரஸ் லிசாவைரஸ் வகையைச் சார்ந்தது. இது பாலூட்டிகளைத் தாக்கும். தொற்றுள்ள விலங்கின்எச்சிலில் இந்த வைரஸ் இருக்கும்.

 

 

வெறிநோய்க்கடி நோயை அதன் வளர்ச்சி அடைந்த கட்டத்தில் கண்டறியும் சோதனைகளில் அடங்குவன:

 • தோல் திசு ஆய்வு ––– ஒரு தோல் மாதிரி எடுக்கப்பட்டு வெறிநாய்க்கடி வைரஸ் இருக்கிறதா என்று சோதிக்கப்படும்.
 • உமிழ்நீர் சோதனை —— உமிழ் நீர் மாதிரி வைரஸ் உள்ளதா என்று சோதிக்கப்படும்.
 • இடுப்புத் துளையிடல் —— ஓர் ஊசியின் மூலம் மூளைத்தண்டுவட நீர்மம் எடுக்கப்பட்டு வெறிநாய்க்கடி நோய் எதிர்பொருள் உள்ளதா என்று சோதிக்கப்படும் (மூளைத்தண்டுவட நீர்மம் என்பது மூளையையும் தண்டுவடத்தையும் சுற்றி இருக்கும் நீர்மம்)
 • இரத்த சோதனை ––– வெறிநாய்க்கடி நோய் எதிர்பொருள் உள்ளதா என்று இரத்தம் சோதிக்கப்படும்.

 

நோயாளிக்கு ஏதாவது அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைப் பொறுத்தே மருத்துவம் அமைகிறது. அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உயிர்பாதுகாப்பு சேவைகள் அளித்தல் மற்றும் சிறப்பு மருத்துவம் வழங்குதல் ஆகியவையே தற்போது சிகிச்சை முறையில் அடங்குவன.

 

 

அ)பாதிப்புக்கு முன்னான தடுப்பூசிகள்/முற்காப்பு:

அபாயத்தில் இருப்போர்க்கு பாதுகாப்பளிக்கும் தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. வெறிநாய்க்கடி நோய் தடுப்பு மருந்து, மனித இருதொகுதி உயிரணு தடுப்பு மருந்து (Human diploid cell vaccine (HDCV), சுத்திகரிக்கப்பட்ட கோழிக்கரு உயிரணு தடுப்புமருந்து (Purified chick embryo cell vaccine (PCECV) ஆகிய வடிவங்களில் கிடைக்கின்றன. வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பு மருந்து அளிப்பதற்கான அட்டவணை வருமாறு:

 • நாய்க்கடிக்குப் பின் முதல் வேளை மருந்து கொடுக்க வேண்டும்.
 • ஏழு நாட்களுக்குப் பின் இரண்டாம் வேளை மருந்து கொடுக்க வேண்டும்.
 • முதல் வேளைக்குப் பின் 21 அல்லது 28 நாட்கள் கழித்து மூன்றாம் வேளை மருந்து கொடுக்க வேண்டும்.
 • வெறிநாய்க்கடி நோய் அபாயத்தில் இருப்பவர்கள், எதிர்பொருள் அளவைப் பாதுகாக்க, ஒவ்வொரு இரண்டாண்டுக்கு ஒருவேளை செயலூக்கியாகத் தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆ) பாதிப்புக்குப் பின்னான தடுப்புமருந்து (PEP)

உடனடியாக அல்லது விரைவாகத் தடுப்பூசி இட்டுக்கொள்ளுவது இந்நோயை வெற்றிகரமாக தடுக்கும் முறையாகும். இதில் அடங்குவன:

 • காயத்தை தண்ணீர் மற்றும் சோப்பால்  நன்றாகக் கழுவி பொவிடோன் அயோடின் போன்ற  கிருமிநாசினிகளை இட வேண்டும்.
 • உலக சுகாதார நிறுவன வழிகாட்டல்படி, வகை III பாதிப்பிற்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி இட வேண்டும். காயத்தின் உள்ளும் சுற்றியும் வெறிநாய்க்கடி எதிர்பொருள் மருந்துகளைப் பூச வேண்டும்.
 • தசை வழியிலான நவீன வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி ஐந்து ஊசிகளைக் கொண்டது: 0 நாள் (கடிபட்ட நாள் அல்ல; ஊசி இட்ட முதல் நாள்) 3, 7, 14 மற்றும் 28. அல்லது தோல் வழி: 0, 3,7 மற்றும் 28 வது நாள். தேசிய சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட ஊசி மருந்துகளையே தோல்வழி செலுத்த வேண்டும்.

இ) உலகளாவிய பயணிகளுக்குத் தடுப்புமருந்து:

வீட்டு மற்றும் வன விலங்குகள் எதனையும் தொடக் கூடாது. வெறிநாய்க்கடி நோயால் பீடிக்கப்பட்ட நாடுகளில் விலங்குகளுக்கு தடுப்பூசி இடப்படாமல் இருக்கலாம். மேலும் சுற்றித் திரியும் நாய்களும் பிற விலங்குகளும் தொற்று ஏற்படுவதற்கான ஆதாரம் ஆகும். இப்பகுதிகளில் உயிர்காக்கும் வெறிநாய்க்கடி நோய் மருந்துகள் கிடைப்பதும் அவற்றை எளிதில் அணுகுவதும் தீவிர பரிசீலனைக்குட்பட்டவை. ஆகவே, வெறிநாய்க்கடி நோயற்ற நாடுகள், நோயுள்ள நாடுகளுக்குச் செல்லும் தங்கள் குடிமக்களை தடுப்பூசி இட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றன.

குறிப்பு:

 www.who.int/rabies
www.nhs.uk/
www.cdc.gov/rabies

www.unicef.org/rabies
www.immunizationinfo.org/rabies
www.vaccineindia.org

www.apcri.org

 

 

 

 

 

 

 • PUBLISHED DATE : Sep 11, 2018
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Sep 11, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.