ஊனம்

ஊனம் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினை. ஊனமற்றோரோடு ஒப்பிடுகையில் ஊனமுற்றோர் ஆரோக்கியக் கேட்டினாலும், மறுவாழ்க்கை போன்ற சுகாதார சேவைகளைப் பெறுவதிலும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பல பிரச்சினைகளை சந்திக்க நேருகிறது. அன்றாடகச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் எந்த ஒரு தொடர் நிலையும் ஊனமே. குறைபாடுகள், செயல்பாட்டில் வரம்புகள் மற்றும் பங்குகொள்வதில் வரம்புகள் ஆகியவற்றைக் குறிக்கும் ஒற்றைச்சொல் என ‘உலக செயல்பாடு ஊனம் மற்றும் சுகாதார வகைப்பாடு’  (ICF) ஊனத்தை வரையறுக்கிறது. உடல் செயல்பாடு அல்லது அமைப்பில் ஒரு பிரச்சினையையே குறைபாடு என்னும் சொல் குறிக்கிறது. ஒரு பணி அல்லது செயலைச் செய்வதில் ஒருவர் எதிர்கொள்ளும் கடினமே செயல்பாட்டு வரம்புகள் ஆகும்.  வாழ்க்கை சூழல்களில் பங்கு பெறுவதில் ஒருவருக்கு தடையாக இருக்கும் பிரச்சினையே  பங்கு கொள்வதில் வரம்பு என்பது குறிக்கிறது.

ஊனம் என்பது ஒரு ஆரோக்கியப் பிரச்சினை மட்டும் அல்ல. அது ஒரு ஆரோக்கியப் பிரச்சினை உள்ள ஒருவருக்கும் சூழலுக்கும் இடைநிற்கும் இடர்ப்பாடே (எடுத்துக்காட்டாக, எதிமறையான மனப்பாங்கு, போக்குவரத்து மற்றும் கட்டிடங்களில் ஏற்படும் சிரமம், மற்றும் குறைந்த அளவிலான சமூக உதவி). ஊனம் கொண்டவர்களின் சிரமங்களைத் தீர்க்க சூழல் மற்றும் சமூகத் தடைகளை அகற்றத் தலையீடுகள் தேவை.

உலகில் 15% மக்கள், அதாவது 100 கோடி மக்களுக்கு ஏதோ ஒரு வகையான ஊனம் உள்ளது. இதில், 11-19 கோடிப் பேர் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவிலான ஊனம் உள்ளது. 9.3 கோடிப் பேர் 15 வயதுக்கும் குறைந்தவர்கள். இவர்களுக்கு மிதமானதில் இருந்து கடுமையான ஊனம் காணப்படுகிறது.

2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 2.2 சதவிகிதம் பேருக்கு ஏதாவது ஒரு வகையிலான ஊனம் உள்ளது. நகர்ப்புறங்களோடு ஒப்பிடும் போது (2.17%) கிராமப் புறங்களிலேயே ஊனம் அதிகமாக உள்ளது (2.24%). பெண்களை விட (2%) ஆண்களிலேயே ஊனத்தின் விகிதம் அதிகம் (2.4%). ஊனமுற்றவர்களில் பல வகையான ஊனங்களில் விகிதம் வருமாறு: (i) பார்வை 18.8 %  (ii) கேட்கும்திறன் (iii) பேச்சு 18.9 % (iv) இயக்கம் 20.3% (v)  மன பாதிப்பு 7.6 % (vi)  மன நோய் 2.7 %  (vii) கூட்டு ஊனம் 7.9 % (viii) பிற 18.4 %.

வயதானோரின் எண்ணிக்கை கூடுவதாலும், உலக அளவில் நீடித்த நோய்களான நீரிழிவு, இதய நோய்கள், புற்று, மனநிலைக் கோளாறுகள் மற்றும் விபத்துக்கள், விழுதல், வன்முறைகளால் காயங்கள் ஆகியவற்றால் அதிகரித்து வருவதாலும் ஊனங்களின் எண்ணிக்கையும் கூடவே செய்யும்.

ஊனமுற்றோருக்கும் பிறருக்கும் சுகாதாரத் தேவைகள் ஒன்று போலவே இருந்தாலும், ஊனமுற்றோரின் சந்திக்கப்படாத சுகாதரத் தேவைகள் அதிகம். பல விதங்களில் ஊன்முற்றோருக்கு அவர்களுக்குத் தேவையான சுகாதார மற்றும் மறுவாழ்வு சேவைகளை அடைய முடிவதில்லை என்பதை சான்றுகள் காட்டுகின்றன. உ.சு.நிறுவனத்தின் கணிப்புகள் வருமாறு:

·         20 கோடி மக்கள் தங்களுக்குத்  தேவையான கண்ணாடிகளையும் குறைப்பார்வைக்கான கருவிகளையும் அடைய முடியாத நிலையில் இருக்கின்றனர்.

 • 7 கோடி மக்களுக்கு சக்கர நாற்காலி தேவை. 5-15 % பேரே அடைந்துள்ளனர்.
 • 36 கோடி மக்களுக்குக் கேட்கும் குறை உள்ளது. 10 % பேருக்கே கருவிகள் கிடைத்துள்ளன.
 • ஊனமுற்றோரில் பாதிப் பேருக்கு சுகாதாரச் சேவைகள் சென்றடையவில்லை.

பொதுவாக ஊனம் இல்லதவர்களோடு ஒப்பிடும் போது ஊனமுற்றோருக்கு, குறைந்த ஆரோக்கியமும், கல்வியும், பொருளாதார வசதிகளும் அதிக அளவில் வறுமையும் காணப்படுகிறது. அன்றாடக வாழ்வில் அவர்களுக்கு ஏற்படும் தடைகளும் சுகாதாரச் சேவைகள் சென்றடையாமையும் இதற்குக் காரணம்.

ஊனம் என்பது இப்போது மனித உரிமைப் பிரச்சினையோடு தொடர்புடையது என புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஊனமுற்றோர் தங்களது ஊனங்களால் குறைவு படவில்லை; ஆனால் சமூகமே அவர்களை ஊனப்படுத்துகிறது.  அரசு, அரசுசாரா நிறுவனங்கள், நிபுணர்கள், ஊனமுற்றோர் மற்றும் அவர்தம் குடும்பங்கள் எல்லாம் ஒன்றிணைந்தால் தடைகளை எல்லாம் தகர்க்கலாம்.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/10665/199544/1/9789241509619_

www.who.int/topics/disabilities/en/

www.mospi.gov.in/publication/disability-india-statistical-profile-2011

www.who.int/disabilities/facts/Infographic_

www.who.int/mediacentre/factsheets/fs352/en/

www.who.int/features/factfiles/disability/en/

www.who.int/disabilities/world_report/2011/en/

ஊனத்தின் வகையைப் பொறுத்து ஓர் ஊனமுற்றோரின் பொது அறிகுறிகள் வருமாறு:

i.பார்க்க இயலாதவர்: ஒரு பார்வை ஊனம் கொண்டவருக்கு ஒளியைப் பார்க்க இயலாது (இரு கண்ணும் இணைந்து) அல்லது ஒளியைப் பார்க்க முடிந்தாலும் 3 மீட்டர் தொலைவில் இருந்து (10 அடிகள்) நல்ல பகல் வெளிச்சத்தில் இரு கண் கொண்டும் கை விரல்களை எண்ண முடியாது (கண்ணாடி/தொடுவில்லை பயன்படுத்துகிறவர் என்றால் அவற்றின் உதவியோடும்).

கண் பார்வை ஊனம் கொண்டவர்களை இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம்:

பார்வையிழப்பு: ஒளியைப் பார்க்க முடியாதவரும், ஒளியைப் பார்க்க முடிந்தாலும் 1 மீட்டர் தொலைவில் இருந்து கண்ணாடி கொண்டும் விரல்களை எண்ண இயலாதவருமாகிய ஒருவர் பார்வை இழந்தவர் என்று கருதப்படுவார்.

குறைந்த பார்வை: ஒளியைப் பார்க்க முடிந்தாலும் 3 மீட்டர் தொலைவு வரை கண்ணாடி கொண்டும் விரல்களை எண்ண இயலாதவருமாகிய ஒருவர் பார்வை இழந்தவர் என்று கருதப்படுவார்.

ii.பேச இயலாதவர்: இயல்பான ஒருவரைப் போல் பேச முடியாதவர்.

iii.கேட்க இயலாதவர்:கேட்கும் கருவி பயன்படுத்தாத போது அன்றாடக உரையாடலைக் கேட்க முடியாதவர். கேட்கும்திறன் கீழ்க்காணும் வகையில் ஒருவருக்குக் குறைந்திருக்கலாம்:

 • கேட்கவே முடியாதவரும், இடி, பட்டாசு போன்ற பெரும் சத்தங்களை மட்டுமே கேட்க கூடியவராக இருந்தால் அவருக்கு ஆழமான கேட்கும்திறன் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கருதப்படும்.
 • காது அருகில் சத்தமாகப் பேசினால் மட்டுமே கேட்கக் கூடிய ஒருவருக்கு கடுமையான காது ஊனம் உள்ளது.
 • திரும்பத் திரும்ப கூறுமாறு ஒருவர் கேட்டாலும், பேசுபவரின் முகத்தைப் பார்த்தாலே சொல்லுவது புலனாகும் நிலையில் ஒருவர் இருந்தாலும் அவருக்கு மிதமான காது ஊனம் உள்ளது.
 • கேட்பதற்கு ஒருவருக்கு சிரமமாக இருந்தாலும் உரையாடும் போது குறுக்கிடாமல் இருக்கும் ஒருவருக்கு சிறிய அளவு காது பாதிப்பு உள்ளது.

(ஒரு காதில் மட்டுமே கேட்கும் பிரச்சினை இருப்பவர் காது ஊனம் உடையவர் என்று கருதப்படுவதில்லை).

iv. இயக்கத்தில் ஊனம்:

(அ) முழு அல்லது பகுதி கால் அல்லது கை அல்லது இரண்டும் (உறுப்பகற்றல், வாதம், பெருமூளை வாதம், மூட்டு உருக்குலைவு அல்லது செயலிழப்பு ஆகியவற்றால்) இழப்பு, அல்லது செயலிழப்பால் தம்மை அல்லது பொருளை நகர்த்தி அன்றாடகச் செயல்பாட்டை செய்ய முடியாத நிலை மற்றும்

(ஆ) கூன், முதுகெலும்பு உருக்குலைவு போன்ற உடல் ஊனம் உடையவர்களும் (அவயவங்கள் தவிர) இயல்பான இயக்கம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இயக்க ஊனமுற்றவராகவே கருதப்படுவர். எனவே, குள்ளர்கள் மற்றும் கழுத்து விறைப்பு கொண்டவர்கள் இயல்பாக இயங்கினாலும் ஊனமுற்றவர் என்றே கருத்தப்படுவர்.

v.மன ஊனம்: மன ஊனம் கொண்டவர்கள் வழக்கமான அறிவுறுத்தல்களைப் புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள். தங்களுக்கு ஒத்த வயதுடையவர்களைப் போல வழக்கமான தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டார்கள். தங்களுக்குத் தாங்களே பேசிக் கொள்ளுதல், சிரித்தல், அழுதல், வன்முறையில் ஈடுபடுதல், காரணமின்றி சந்தேகப்படுதல் அல்லது பயப்படுதல் ஆகியவற்றைக் காணலாம். மன ஊனம் கொண்டவர்களை இரு வகையாகப் பிரிக்கலாம். மன பாதிப்படைந்தவர்கள் மற்றும் மன நோய் கொண்டவர்கள். பிறப்பில் இருந்தே ஆனால் 18 வயதுக்குள்ளாக இத்தகைய நடத்தையை வெளிக்காட்டுபவர்கள் மற்றும் பேச்சு, உட்காருதல், நிற்றல், நடத்தல் போன்ற நடவடிக்கைகளை வெகு தாமதமாக செய்பவர்கள் மன பாதிப்படைந்தவர்கள் ஆகும். பிற மனக் கோளாறுடையவர்கள் மன நோயாளிகள் ஆவர்.

vi. குணமடைந்தத் தொழுநோயாளிகள்: இவர்களுக்கு அதிக அளவில் உடல் குறைகள் இருக்கும். மேலும் வயது மூப்பின் காரணமாக பயன் தரும் வேலைகளில் ஈடுபட இயலாது.

குறிப்புகள்:

www.mospi.gov.in/sites/default/files/reports_and_publication/statistical_publication/social_statistics

http://www.who.int/mediacentre/factsheets/fs352/en/

ஊனத்துக்கான ஆபத்துக் காரணிகள்

தொற்று நோய்கள்: யானைக்கால் நோய், காச நோய், எச்.ஐ.வி./எய்ட்ஸ் மற்றும் பிற பால்வினை நோய்கள் போன்ற தொற்று நோய்களும் நரம்பியல் நோய்களான மூளைக்காய்ச்சல், மூளையழற்சி மற்றும் குழந்தைப்பருவ தொகுதி நோய்களான தட்டம்மை, அம்மைக்கட்டு மற்றும் போலியோ போன்றவையும் ஊனத்துக்கு வழிவகுக்கும்.

பரவா நோய்கள்:

 • நீரிழிவு, இதயநோய்கள், மூட்டழற்சி மற்றும் புற்று நோய் போன்ற நீடித்த நோய்கள் நீண்டகால ஊனங்களை உண்டாக்குகின்றன. உலகெங்கும் இந்நோய்கள் அதிகரித்து வருவதால் ஊனமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
 •  வாழ்க்கை முறை மற்றும் தனிநபர் நடத்தைகளின் விளைவான உடல்பருமன், உடல்செயல்பாடு இன்மை, புகையிலை பயன்பாடு, மது, போதை ஆகியவை பரவா நோய்களுக்கும் அதனால் ஊனத்துக்கும் வழிவகுக்கின்றன.
 • காற்று மாசு, பணிசார் நோய்கள், நீர்விநியோகக் குறைபாடு, சுகாதாரக் குறைவு, தனிநபர் மற்றும் வீட்டு சுகாதாரக் குறைவு, ஊட்டச்சத்தின்மை ஆகியவையும் ஊனத்துக்குக் காரணங்கள்.

காயங்கள்: சாலை விபத்து, பணிசார் காயம், வன்முறை, முரண்பாடுகள், விழுதல் மற்றும் வெடிவிபத்துகளும் ஊனத்துக்கு காரணிகள்.

மன ஆரோக்கியப் பிரச்சினைகள்: மன பாதிப்பு மற்றும் மன நோய் மன ஊனத்துக்குக் காரணங்கள். குழந்தைப் பருவ  நோய் அல்லது தலைக்காயத்தாலும் அல்லது பிறவிக் குறைபாடுகளாலும் 50% மன பாதிப்புகள் ஏற்படுகின்றன.  பிறப்பு அல்லது ஆரம்பக் குழந்தை பருவத்திலேயே பெரும்பாலும் மனக் கோளாறுகள் காணப்படுகின்றன. மன பாதிப்பு ஒரு வயது மூப்பு தொடர்பானதும் கூட.

கல்வி அறிவுக் குறைவு, வருமானம் குறைவு, வேலையற்றோர் ஆகியோருக்கு ஊனங்கள் உண்டாகும் ஆபத்து உண்டு.

வயது முதிர்ந்த பருவத்திலும் ஊனமுறும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

குறிப்பு:

www.who.int/disabilities/world_report/2011/report.pdf

குறிப்பிட்ட ஊனங்கள் ஒரு சுகாதார மையத்தில் ஒரு நிபுணரின் உதவியோடு கண்டறியப்படுகிறது. ஓர் அரசு மருத்துவர் ஊன சான்றிதழ் வழங்கலாம்.

இருக்கும் திட்டங்களின் கீழ் சலுகைகளைப் பெற 40% ஊனம் அடைந்த ஒருவருக்கு அடையாள அட்டையும் மருத்துவர் சான்றிதழும் தேவை.

குறிப்புகள்:

www.iocl.com/download/guidelines_disability_certificate_format

disabilityaffairs.gov.in/content/page/guidelines.php

பிறரை விட ஊனம் உற்றோர் அதிக அளவில் சுகாதாரப் பாதிப்பு அடைகின்றனர் என்று அதிக அளவில் கிடைத்து வரும் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. தரமான மற்றும் மலிவான சுகாதாரச் சேவைகள் கிடைக்கும்படி செய்தால் ஊனமுற்றோரின் ஆரோக்கியம் மேம்பாடு அடையும். ஆரம்ப சுகாதார சேவைகள் ஒரு நிபுணரின் ஆதரவோடு ஊனமுற்றோருக்கு சுகாதாரச் சேவைகளை வழங்கலாம். சுகாதார சேவைகள் பின்வரும் சுகாதார நிலைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்:

ஆரம்ப நிலைகள்: இயக்கம், நரம்பியல், மன மற்றும் தொடர்புக் குறைபாடுகள் ஆரம்ப கட்ட சுகாதாரக் குறைபாடுகளில் இருந்தே தொடங்குகின்றன.

இரண்டாம்கட்ட நிலை:  இரண்டாம் கட்டமும் ஆரம்ப கட்டத்தோடு இணைந்த்தே. இவற்றை கண்டுணர்ந்து தடுக்க முடியும் எடுத்துக்காட்டாக ஊனம் அடைந்தவருக்கு மனசோர்வு ஒரு இரண்டாம் கட்ட நிலையாகும். அது போல எலும்புப் புரை நோய் முதுகெலும்புக் காயம் அல்லது பெருமூளை வாத நோய் கொண்டவர்களுக்குப் பரவலாகக் காணப்படுகிறது.

இணை நோய் நிலைகள்: இது ஊனத்துக்குக் காரணமான ஒரு முதன்மை நோயுடன் இணைந்து (அதற்கு தொடர்பற்று) காணப்படும். வளர்ச்சி ஊனங்கள் கொண்ட பெரியவர்களுக்கு ஊனமற்றோரோடு ஒப்பிடும் போது நீடித்த நோய்களான உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் மற்றும் நீரிழிவு (உடல் செயல்பாடு குறைவதால்) இருப்பதை ஓர் ஆய்வு கண்டு கூறுகிறது.

வயது தொடர்பானவை: ஊனம் உடைய சில குழுவினருக்கு வயது முதிர்தல் வழக்கத்துக்கு மாறாக விரைவாக ஆரம்பிக்கிறது. மேலும் அவர்களுக்கு வயதோடு தொடர்புடைய பிரச்சினைகளும் பரவலாக ஏற்படுகின்றன (உ-ம். எலும்புப் புரை, வலிமையும் சமநிலையும் இழத்தல்)

ஆபத்தான நடத்தைபொது மக்களோடு ஒப்பிடும் போது ஊனம் கொண்டோர்  புகைத்தல், மது,  குறைவாக உண்ணுதல், உடல்செயல்பாட்டில் ஈடுபடாமை ஆகிய ஆபத்தான நடவடிக்கையில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

வன்முறை: ஊனம் அற்றவரை விட ஊனமுற்றோர் வன்முறையில் ஈடுபடும் ஆபத்து அதிகம்.

தற்செயலான காயம்: ஊனம் கொண்டோர், சாலை விபத்துக்கள், தீக்காயங்கள், விழுதல், மற்றும் துணைபுரியும் சாதனங்களால் ஏற்படும் விபத்துக்கள் ஆகியவற்றால் காயமுறும் அதிக ஆபத்தில் உள்ளனர்.

துணைபுரியும் தொழில்நுட்பம் மற்றும் துணைபுரியும் கருவிகள்: இயக்க ஊனம் உடையவர்களுக்கான ஊன்றுகோல்கள், செயற்கை உறுப்புகள், சக்கர நாற்காலிகள், மூன்றுசக்கர வண்டிகள் போன்றவைகளும், பார்வை ஊனம் உடையவர்களுக்குக் காது கருவிகள் மற்றும் வால்நரம்பு உட்பொருத்துதல், பார்வைக் கோளாறு உடையவர்களுக்கு பார்வைக் கருவிகள், பேசும் புத்தகம் மற்றும் திரை உருப்பெருக்கத்துக்கான மென்பொருள் ஆகியவற்றைச் சூழல் மற்றும் பயனர்களின் சூழலுக்கு ஏற்ப பரிந்துரைக்கலாம்.

மறுவாழ்வு: ஊனமுற்றோருகான முக்கியமான மேலாண்மை அம்சம் இது. மருத்துவ, சமூக, கல்வி மற்றும் தொழில் சார்  நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்டவரை முடிந்த அளவுக்கு செயல் திறன் உள்ளவராக மாற்ற இவற்றை இணைத்தும் இவற்றின் ஒத்துழைப்போடும் முயற்சிகள் மேற்கொள்லப்படும்.

சமுதாய அடிப்படையிலான மறுவாழ்வு (CBR) : ஊனம் உடையவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வை மேம்படுத்தவும் அவர்கள் தங்கள் அடிப்படை தேவைகளை அடையவும் அவர்கள் சமூக நடவடிக்கைகளில் பங்குபெறவும் இணைத்துக்கொள்ளப்படவும் இது உ.சு. நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. ஊனம் கொண்ட மக்கள், அவர்களின் குடும்பங்கள், சமுதாயங்கள், தொடர்புடைய அரசு, அரசுசாரா நிறுவனங்கள், சுகாதாரம், கல்வி, தொழில். சமூகம், மற்றும் பிற சேவைகள் ஆகிய அனைத்தின் ஒத்துழைப்புடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குறிப்புகள்:

www.who.int/disabilities/world_report/2011/report.pdf

www.who.int/mediacentre/factsheets/fs352/en/

www.mospi.gov.in/sites/default/files/reports_and_publication/statistical_publication/social_statistics

ஊனம் நிகழ்வதைக் குறைக்கும் நடவடிக்கைகளும் (முதல் நிலைத் தடுப்பு), அது செயல்பாட்டைத் தடுக்கும் அளவுக்கு வளராமல் தடுப்பதும் (இரண்டாம் நிலைத் தடுப்பு) செயல் குறைபாடு ஊனமாக வளராமல் தடுப்பதும் (மூன்றாம் நிலைத் தடுப்பு) ஆகியவை இதில் அடங்கும்.

ஆரம்பக் கட்டத் தடுப்பு: ஒரு தனிநபருக்கு அல்லது ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு ஏற்படும் சுகாதார பிரச்சினையைத் தடுக்கும் அல்லது அகற்றும் நடவடிக்கை ஆரம்ப கட்டத் தடுப்பு எனப்படும். பொதுவான சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் நடவடிக்கைகள் இதில் அடங்கும். போலியோ தடுப்பு மருந்து, ஐயோடின் உப்பு போன்ற குறிப்பிட்ட தடுப்பு நடவடிக்கைகளும் அடங்கும். உண்ணும் முறை, உடல் செயல் பாடு இல்லாமை, புகைத்தல் போன்ற தீங்குதரும் வாழ்க்கை முறையை விட்டு விலகல் போன்ற தடுப்பு முறைகளால் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், புற்று ஆகிய நீடித்த நோய்களைத் தடுத்தலும் இதில் அடங்கும்.

இரண்டாம் கட்டத் தடுப்பு:  தனிநபர் அல்லது ஒரு மக்கள் தொகையில் ஒரு சுகாதாரப் பிரச்சினையை ஆரம்பக் கட்ட்த்திலேயே கண்டறிதல், அதைக் குணப்படுத்த உதவுதல் அல்லது அதைக் குறைத்தல் அல்லது தடுத்தல் அல்லது அதன் நீண்ட கால விளைவைத் தடுத்தல் அல்லது குறைத்தல் (உ-ம். மார்புப் புற்றைக் கண்டறிய பெண்களுக்கு அதற்கான முறைகளை அறிவுறுத்தல்). இதை சாத்தியமாக்க சுகாதாரப் பராமரிப்பின் அனைத்து மட்டத்திலும் நோய்கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஒரே அளவில் கிடைக்க வேண்டும்.

மூன்றாம் கட்டத் தடுப்பு: ஏற்கெனவே நிலைபெற்ற ஒரு நோயின் தாக்கத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் மூலம் செயல்பாட்டை மீட்டு நோய் சார் சிக்கல்களைக் குறைத்தல். நீடித்த செயல்பாட்டு குறைபாடு உருவாகி இருந்தால் ஊனத்தைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும். இதில் மருத்துவ உளவியல் சமூகப் பேணலும் கல்வி மற்றும் தொழில் பயிற்சியும் அடங்கும். ஊனம் உடையவர்களின் நிலையையும், சுகாதாரத்தையும் குறைபாட்டையும் மேம்படுத்தும் வண்ணம் சூழலை மாற்ற வேண்டும். கட்டிடம், போக்குவரத்து ஆகியவை எளிதில் அணுகும் படியாக அமைய வேண்டும். ஊனமுற்றவருக்கு வேலை வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும்.

சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் (MoSJE), இந்திய அரசு,  ஊனமுற்றோருக்கு உதவி செய்ய பல சட்டங்களையும் விதிமுறைகளையும்* வகுத்துள்ளது. எந்த ஒரு சலுகையைப் பெறவும் ஊனத்தின் விகிதம் 40 % என்பது குறைந்த அளவு தகுதியாகும்.

சட்டங்கள்:

 •  ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் 2016
 •  மனவிறுக்கம், பெருமூளை வாதம், மனநிலைக் கோளாறு மற்றும் பல்வித ஊனம் கொண்டோர் நலனுக்கான தேசிய அறக்கட்டளைச் சட்டம் 1999.
 • இந்திய மறுவாழ்வுப் பேரவை சட்டம் 1992
 • விதிமுறைகள்:
 • ஊனமுற்றோர் (சம வாய்ப்பு, உரிமைப் பாதுகாப்பு மற்றும் முழுபங்கேற்பு) விதிகள் 1996 & ஊனமுற்றோருக்கான திருத்திய விதிகள்.
 • இந்திய மறுவாழ்வுப் பேரவை விதிமுறைகள் 1997
 • இந்திய மறுவாழ்வுப் பேரவை விதிமுறைகள் 1998
 • தேசிய அறக்கட்டளை விதிகள் 2000
 • தேசிய அறக்கட்டளை விதிகள் 2001
 • ஊனமுற்றோருக்கான தேசியக் கொள்கைகள் 2006

தேசிய நிறுவனங்கள்: ஏழு தேசிய நிறுவனங்களை உருவாக்கியதன் மூலம் குறிப்பிட்ட ஆய்வுகளும் மருத்துவத் தலையீடுகளும் நாட்டில் மேம்பாடு அடைந்துள்ளன. இந்த அனைத்து தேசிய நிறுவன்ங்களும் ஊனமுற்றோருக்குக் கல்வி, மறுவாழ்வு மற்றும் உரிமையளித்தல் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள பரந்த அதிகாரங்களைப் பெற்றுள்ளன.

அணுகல் இந்தியா பிரச்சாரம்: இடமளிக்கும் ஒரு சமூகத்தில் ஊனமுற்றோர் அனைத்து வாழ்க்கை அம்சங்களிலும் முழுமையாகப் பங்கேற்று சுதந்திரமாக வாழவும் சம வாய்ப்புகளைப் பெறவும் உதவி செயவதற்கான உலகந் தழுவிய அணுகலைப் பெற இது தேசம் தழுவிய முக்கியப் பிரச்சாரம் ஆகும்.

சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், இந்திய அரசு: பார்வையிழப்பு, இளம்பிள்ளை வாதம், தொழுநோய், காசநோய், மன சுகாதாரம் (ஊனம் உருவாக்கும்) போன்ற பலவேறு நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பல சுகாதாரத் திட்டங்களை உருவாக்கி உள்ளது. மருத்துவக் கல்லூரிகளில் நோய்த்தடுப்பு மருந்தளித்தல், மருத்துவம் மற்றும் மறுவாழ்வுக்கான மையங்களை அமைத்துள்ளது. ஆஷா அமைப்பை விழிப்புணர்வு உருவாக்குவதற்காக ஈடுபடுத்துகிறது.

 “ஊனமுற்றோர் யாவருக்கும் சிறந்த ஆரோக்கியம்

குறிப்புகள்:

www.who.int/disabilities/world_report/2011/report.pdf

*www.disabilityaffairs.gov.in/content/page/rules--and-regulations.php

www.disabilityaffairs.gov.in/content/page/acts.php

www.disabilityaffairs.gov.in/content/accessible_india.php

www.disabilityaffairs.gov.in/upload/uploadfiles/files/PWD_Act.pdf

www.disabilityaffairs.gov.in/upload/uploadfiles/files/First%20Country

www.rehabcouncil.nic.in/writereaddata/LI-3-2000.pdf

www.aicb.org.in/images/advocacy/advocacyResources/National

    

 

 

 

 

 

 • PUBLISHED DATE : Mar 16, 2017
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 16, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.