கர்ப்ப கால இரத்தச்சோகை

தாய் மற்றும் கருவுக்கு ஏற்படும் பல்விதச் சிக்கல்களோடு தொடர்புடைய காரணிகளில் கர்ப்ப கால இரத்தச்சோகையும் ஒன்று. பேற்றின் போதும் பேற்றிற்குப் பின்னும் இரத்தப் போக்கை ஈடுகட்ட முடியாமல் போவதோடு தொற்றுகளுக்கும் இது வழிகோலுகிறது. கருப்பைக்குள் கரு வளர்ச்சிக் குறைபாடு,  குறைப்பிரசவம், பிறப்பெடை குறைவு மற்றும் தாய்சேய் மரண விகிதம் ஆகியவற்றோடும் கர்ப்ப கால இரத்தச் சோகை தொடர்புடையது.

உலக சுகாதார நிறுவன/உலக சுகாதாரப் புள்ளிவிவரப்படி 2016-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கர்ப்பிணிகளில் 40.1% பேர் இரத்தச்சோகையோடு இருந்தனர். இந்நிலை தென் கிழக்கு ஆசியாவில் அதிகம். இங்கு தாய் மரணத்தில் பாதி இரத்தச்சோகையால் நிகழ்கிறது.  இதில் 80% மரணம் இந்தியாவில் நிகழ்கிறது. தற்போது மிகச் சிறிய அளவில் இந்த மரண விகிதம் குறைந்துள்ளது. NFHS-3 (தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு, 2005-2006) –இன் படி இது 58%. NFHS-4 இன் படி (2015-2016) இது 50% ஆக இருக்கிறது.

பெண்களுக்கு இரத்தச்சோகை ஏற்படும் பல காரணங்களுள் மிகவும் பொதுவானது இரும்புச் சத்துக் குறைபாடே. இது முதன்மையாக மாதவிடாயின் போது ஏற்படும் இரத்த இழப்பாலும், இரண்டாவதாக உணவில் இரும்புச் சத்து குறைவாக இருப்பதாலும் உருவாகிறது. கர்ப்ப காலத்தில் வளரும் கருவிற்கு இரும்புச் சத்து தேவை அதிகரிப்பதாலும் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிப்பதாலும் (தாயின் இரத்த அளவு மூன்றாவது மும்மாதத்தில் அதிகரிக்கிறது) இரத்தச் சோகை பொதுவாகக் காணப்படும். இளம் வயதில் மகப்பேறு, மீண்டும் மீண்டும் கர்ப்பம், கர்ப்பங்களுக்கு இடையில் குறுகிய இடைவெளி, பிறப்புக்கு முன்னான பராமரிப்பும் கூடுதல் ஊட்டமும் சரிவர கிடைக்காமை ஆகிய காரணிகளால் நிலைமை இன்னும் மோசமாகும். கர்ப்பத்தின் போது இரத்தப்புரதத்தின் அளவு 10.9 கி/டெ.லிட்டரின் கீழ் இருப்பது நிர்ணயப்புள்ளி என்று மருத்துவ ஆராய்ச்சியின் இந்தியப் பேரவை கருதுகிறது.

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் RMNCH+A   சேவைகளின் கீழ் இரத்தச் சோகையைத் தடுக்க முக்கியத்துவம் அளிக்கிறது. தேசிய சுகாதாரக் கொள்கை 2017-ம் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் நுண்ணூட்ட குறைபாட்டு சிகிச்சை பற்றிய கொள்கைகளை வகுத்துள்ளது. 2013-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ள ‘தேசிய இரும்பு + முன்முயற்சி’, வாழ்க்கை சுழற்சியில் காணப்படும் இரும்புச்சத்துக் குறைபாட்டு இரத்தசோகை சவாலை எதிர்கொள்ளும் விரிவான உத்தியாகும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மேற்பார்வையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேசிய ஊட்டச்சத்து திட்டம், இளம் குழந்தைகள், இளம் பெண்கள், இனப்பெருக்க வயதில் இருக்கும் பெண்கள் (15-48 வயது) ஆகியோருக்கு நடுவில் காணப்படும்  இரத்தச்சோகை அளவை NFHS-4 அளவில் இருந்து 2022-க்குள் மூன்றில் ஒருபங்காகக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/handle/10665/77770/9789241501996

www.fogsi.org/wp-content/uploads/2017/07/gcpr-recommendation-ida.pdf

www.nrhmtn.gov.in/guideline/RGPMA.pdf

www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3257335/

rchiips.org/NFHS/pdf/NFHS4/India.pdf

pdfs.semanticscholar.org/07bb/26a03551d538a24b0ff8544881194a2d8312.pdf

www.nrhmhp.gov.in/sites/default/files/files/Iron

164.100.117.97/WriteReadData/userfiles/BG%20Note%20on%20NNM%20and%20BBBP.pdf

https://data.worldbank.org/indicator/sh.prg.anem

http://www.ijcmph.com/index.php/ijcmph/article/view/657

 

இரத்தச் சோகையின் ஆரம்பக் கட்ட அறிகுறிகள் குறிப்பிட்டுச் சொல்ல இயலாதவாறு இருக்கும். களைப்பு, பலவீனம், தலைக்கிறக்கம், உடல் செயல்பாட்டின் போது மூச்சுத் தடங்கல் போன்றவை ஆரம்பத்தில் காணப்படலாம்.

இமை, நாக்கு, நகம் மற்றும் உள்ளங்கை நிறமிழத்தல், கரண்டி வடிவ நகம் மற்றும் வீக்கம் ஆகியவை அறிகுறிகளில் அடங்கும்.

கர்ப்பிணிகளிடம் கால் அசௌகரியம் மற்றும் மண் போன்றவற்றை தின்னும் உணர்வுகள் ஏற்படும்.

துரித இதயத் துடிப்பு, மிகை இரத்த அழுத்தம் மற்றும் இதய செயல் இழப்பு ஆகியவை தீவிர நேர்வுகளில் காணப்படலாம்.

இரத்தச் சோகையால் குறைப் பிரசவ அபாயம் உண்டு. பிரசவத்துக்குப் பின்னான இரத்தச் சோகையால் களைப்பு அதிகரித்தல், மூச்சுமுட்டுதல், படபடப்பு மற்றும் தொற்று போன்றவை ஏற்பட்டு உயிர் வாழ்க்கைத் தரம் பாதிப்படையும். அதிக மனவழுத்தம், மனச்சோர்வு ஆகியவை உருவாகி குழந்தையைக் கவனிக்காமல் போகும் வாய்ப்புண்டு.

குறிப்புகள்:

www.msdmanuals.com/professional/gynecology-and-obstetrics/

medind.nic.in/jav/t10/i4/javt10i4p253.pdf

www.fogsi.org/wp-content/uploads/2017/07/gcpr-recommendation-ida.pdf

 

 

கர்ப்ப காலத்தில் இரத்தச் சோகைக்குப் பொதுவான காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடும் தொற்றுக்களுமே. உலக அளவில் இரும்புச் சத்து குறைபாடே மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடு. ஃபோலேட், உயிர்ச்சத்து பி12, ஏ குறைபாடு, நீடித்த அழற்சி, ஒட்டுண்ணி தொற்று மற்றும் மரபுவழிக் கோளாறுகள் இரத்தச் சோகையை ஏற்படுத்தும்.

பெண்களுக்கு ஊட்டச்சத்து சம்பந்தமான இரத்தச்சோகைக்கான காரணங்கள்:

 • இரும்புச்சத்துள்ள உணவு உண்ணாமை மற்றும் தாவர உணவில் இருந்து போதுமான இரும்புச் சத்து கிடைக்காமை
 • உணவில் இரும்புச் சத்து மேம்படுத்திகள் இல்லாமை (எலுமிச்சை வகை பழங்கள்)
 • இரும்புச்சத்து தடுப்பிகளை உணவு வேளையில் அதிகமாக உட்கொள்ளுதல் (தேனீர், காப்பி, சுண்ணாம்புச் சத்து நிறைந்த உணவுகள்)
 • மாதவிடாயின் போது இரும்புச் சத்து இழப்பு
 • குழந்தைப்பருவம், இளமைப்பருவத்தில் இருந்தே இரும்புச்சத்து சேமிப்பு உடலில் இல்லாமை. இளமைக்கால இரத்தச்சோகை.
 • பிறப்புக்குப் பின்னான இரத்தக் கசிவால் இரும்புச் சத்து இழப்பு
 • இளம் வயது கர்ப்பம்
 • இரண்டு வருடக் கால அளவுக்குள் தொடர் கர்ப்பம்
 • ஒட்டுண்ணி பளுவால் இரும்புச்சத்து இழப்பு (மலேரியா, குடல் புழுக்கள்)
 • மோசமான சூழல் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பற்ற குடிநீர்

இரும்புச் சத்துக் குறைபாட்டு இரத்தச் சோகை:

ஆண்களை விட பெண்களுக்கு இரும்புச் சத்துக் குறைபாடு மிக அதிகம். இதற்குக் காரணம் மாதவிடாய் காலத்தில் இரும்புச்சத்து இழப்பு அதிகமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் வளரும் கருவுக்கு இரும்புச் சத்தின் தேவை மிக அதிகம். இது கர்ப்ப காலத்தில் பிற நேரங்களை விட இரு மடங்கு அதிகம். முதல் மும்மாதத்தில் இரும்புச் சத்தின் தேவை 0.8 மி.கிராமாகவும் மூன்றாம் மும்மாத காலத்தில் 7.5 மி. கிராமாகவும் இருக்கும்.

போதுமான அளவு இரத்தப் புரதத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு இரும்புச் சத்தின் பற்றாக்குறை ஏற்படுவதே இரும்புச்சத்துக் குறை இரத்தச்சோகை எனப்படும். உணவில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தின் குறைவு, இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளாமை, இரும்பு மேம்படுத்திகள் குறைபாடு மேலும் அதிக அளவில் இரும்புச்சத்து தடுப்பிகள் உள்ளெடுப்பு ஆகியவற்றால் இரும்புச் சத்து குறைபாடு இரத்தச் சோகை ஏற்படுகிறது.

போலேட் குறைபாட்டு இரத்தச்சோகை: போலேட் என்பது ஒரு வகையான B  உயிர்ச்சத்து. இது புதிய செல் உருவாக்கத்துக்கும் ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும் தேவைப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்குக் கூடுதல் போலேட் தேவைப்படும். உணவில் இருந்து  கிடைக்காத போது இரத்தச்சோகை ஏற்படும். போலேட் குறைபாட்டால் நரம்புக் குழாய்க் கோளாறு போன்ற பிறப்பு குறைபாடுகள் ஏற்படக் கூடும். உணவில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் சத்து அகற்றாத தானியங்களை சேர்க்காமல் இருந்தால் இக்குறை உருவாகும்.

உயிர்ச்சத்து B-12  குறைபாடு: கர்ப்ப காலத்தில் இக்குறைபாட்டால் நரம்புக் குழாய்க் கோளாறுகளும் குறைப்பிரசவமும் நிகழலாம். போலேட் குறைபாடும் B-12 குறைபாடும் இணைந்து காணப்படும்.

குடற்புழுக்கள்: நீடித்த குடல் இரத்த இழப்பால் கொக்கிப்புழு போன்ற குடற்புழு பாதிப்பும் இரும்புச் சத்துக் குறைபாட்டு இரத்தச் சோகையோடு சேர்ந்து காணப்படும்.

மலேரியா  சிவப்பணுக்களை உடைத்தும் சிவப்பணு உற்பத்தியைத் தடுத்தும் இரத்தச் சோகையை ஏற்படுத்துகிறது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலேரியாவால் தாய்க்கு இரத்தச் சோகை, இறந்து பிறத்தல், தானாகவே நிகழும் கருச்சிதைவு, குறைந்த பிறப்பெடை மற்றும் சிசு மரணம் ஏற்படக் கூடும்.

அரிவாள் செல் நோய் மற்றும் தலசீமியா போன்ற மரபுவழிக் கோளாறுகளால் இரத்தப் புரதம் சிதைந்து இரத்தச்  சோகை ஏற்படும்.

தொற்றுக்கள்:  புற்று, எச்.ஐ.வி/எய்ட்ஸ், வாத மூட்டழற்சி, குரோஹன் நோய் மற்றும் பிற நீடித்த அழற்சி நோய்களால் சிவப்பணு உற்பத்தி பாதிக்கப்பட்டு நீடித்த இரத்தச் சோகை உருவாகும். சிறுநீரகப் பாதிப்பாலும் இரத்தச் சோகை ஏற்படலாம்.

வளர்ந்து வரும் நாடுகளில் இளம் வயதுக் கர்ப்பம், அதிக எண்ணிக்கையிலான பிறப்பு, பேற்றுக்கு இடையில் குறுகிய இடைவெளி, மோசமான பிறப்புக்கு முன்னான பராமரிப்பு, சரியாக இரும்பு கூடுதல் சத்து உட்கொள்ளாமை ஆகியவையால் கர்ப்ப காலத்தில் இரத்தச் சோகை ஏற்படுகிறது.

குறிப்புகள்:

nhm.gov.in/images/pdf/programmes/wifs/guidelines/

www.fao.org/tempref/docrep/fao/005/y8346m/y8346m06.pdf

 

கர்ப்ப காலத்தில் அறிகுறிகள், மருத்துவக் குறிகள் மற்றும் ஆய்வுகள் மூலம் இரத்தச் சோகை கண்டறியப்படுகிறது.

ஆய்வுகள்:

அ) இரத்தப்புரத மதிப்பீடு (Hb): இரத்தச் சோகையைக் கண்டறிய இரத்தப்புரத மதிப்பீடே மிகவும் நடைமுறைக்கேற்ற முறையாகும். வழக்கமான பிறப்புக்கு முன்னான சோதனையின் போது கண்டிப்பாக குறைந்த பட்சம் நான்கு ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இவை சையான்மெத்-இரத்தப்புரத முறைப்படி பாதி-தானியங்கி மதிப்பீட்டு மானியாலோ அல்லது ஒளி கெலோரிமீட்டராலோ நடத்தப்படும். கர்ப்பகாலத்தின் 14-16 வாரங்கள், 20-24 வாரங்கள், 26-30 வாரங்கள் மற்றும் 30-34 வாரங்களில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இச்சோதனைகள் நடத்தப்படும். இரு சோதனைகளுக்கு இடையில் குறைந்த அளவு நான்கு வார இடைவெளி இருக்க வேண்டும்.

கர்ப்பகாலத்தில் இரத்தச்சோகைக்கான இரத்தப்புரத வெட்டளவுப்புள்ளி (ICMR-1989)

இயல்பு (g/dL)

குறைவு (g/dL)

மிதம் (g/dL)

கடுமை (g/dL)

மிகக்கடுமை (g/dL)

11 or high

10-10.9

 

7-9.9

4-6.9

<4

 

 

ஆ) சராசரி இரத்த அணுக் கன அளவு (MCV), சராசரி இரத்த அணு இரத்தப் புரதம்  (MCH), சராசரி இரத்த அணு இரத்தப் புரத அடர்த்தி (MCHC), இரத்த அணு விநியோக அகலம் (RDW), உட்கருவற்ற இரத்தப் புரத உள்ளடக்கம், வெளிறிய சிவப்பணுக்கள் % மற்றும் புற இரத்தப் படர்வு ஆகியவை இரத்தச்சோகை வகை அறிய பயன்படுத்தப்படுகின்றன. மலேரியா ஒட்டுண்ணியை அறிய புற இரத்தமும் சோதிக்கப்பட வேண்டும்.

இ) நோய்சாரா இரத்தச்சோகை இல்லை என்பதை அறிய, சிறுநீரில் வெண்புரதம், சர்க்கரை மற்றும் படிவுகள் உள்ளனவா எனச் சோதிக்கப்பட வேண்டும். படிவு 4-6 செல்களுக்கு மேல் இருந்தால் சிறுநீரகத் திசு ஆய்வு செய்யப்பட வேண்டும். குருதித்தட்டையன் நோய் இருக்கும் பகுதிகளில் மறை குருதி மற்றும் குருதித்தட்டையன் கண்டறிய சிறுநீர் சோதனை செய்யலாம்.

உ) ஊனீர் இரும்பு சேமிப்புப் புரதம் கர்ப்பிணிகளில் இரும்புக் குறை சோகையைத் துல்லியமாகக் காட்டும். அடர்த்தி 30μg/L- க்குக் குறைவாக இருந்தால் ஆரம்பக் கட்ட இரும்புக் குறைபாட்டைச் சுட்டும்.

ஊ) கரையும் இரும்புப் பிணைப்புப் புரதம் ஏற்பி (sTFR)-: இதன் அளவு  இரும்புக் குறை சோகையில் அதிகரிக்கும்.

எ) ஊனீர் இரும்பு மற்றும் மொத்த இரும்பு பிணைப்புத் திறன் (TIBC): இரும்பு சேமிப்பு மற்றும் இருப்புக்கான சுதந்திரமான குறிப்பான்கள்.

ஏ) எலும்பு மச்சை சோதனை: இரும்பு சிகிச்சை அளித்து 4 வாரம் கழித்தும் எதிர்பலன் இல்லாவிட்டால் அல்லது கருங்காய்ச்சல் கண்டறிந்தால் அல்லது குருதிசெல் குறை சோகை சந்தேகம் இருந்தால் இந்த சோதனை நடத்தப்படும்.

ஐ) மலச்சோதனை: குடற் புழுக்களால் சோகை ஏற்படலாம் என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் புழு முட்டைகள் மற்றும் கூடுகள் இருப்பதைக் கண்டறிய சோதனை நடத்தப்பட வேண்டும்.

குறிப்புகள்

www.msdmanuals.com/professional/gynecology-and-obstetrics/pregnancy

www.fogsi.org/wp-content/uploads/2017/07/gcpr-recommendation-ida.pdf

 

இயல்பான இரும்புச் சத்து மதிப்பு கொண்ட அனைத்துக் கர்ப்பிணிகளுக்கும் கர்ப்ப காலத்தில் இரும்புச் சத்தின் தேவை அதிகரிப்பதால் நோய்த்தடுப்பு வாய்வழி உயிர்ச்சத்து ஏ சிகிச்சை அளிக்கப்படுகிறது.  இரண்டாம் மும்மாதத்தில் ஒரு மாத்திரை அல்பெண்டாசோல் 400 மி.கி. ஒரு வேளை அனைத்து கர்ப்பிணிகளுக்கும் அளிக்கப்படும். கர்ப்ப காலத்தையும் சோகையின் கடுமையையும் கணக்கில் கொண்டு இரத்தச் சோகை உள்ள தாய்மார்களுக்கு மருத்துவ ரீதியிலான இரும்பு கூடுதல் சத்து அளிக்க்ப்படும்.

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பரிந்துரைப்படியான இரும்பு கூடுதல் சத்து-சிகிச்சை:

(i)14-16 வாரங்களில்

முதல் Hb மதிப்பீடு 14-16 வாரங்களில் பிறப்புக்கு முன்னான வருகையின் போது அளிக்கப்பட வேண்டும்:    

 • Hb 11 கிராமுக்கும் அதிகம் இருந்தால், நோய்த்தடுப்பு அளவில்  IFA மாத்திரை அளிக்கப்படுகிறது.
 • Hb 7.1-10.9 கிராம்கள் % இருந்தால், சிகிச்சை அளவு IFA அளிக்கப்படும்.
 • Hb 7 கிராம்கள் %-க்குக் குறைவாக இருந்தால், உடனடியாக CEmONC மையத்துக்கு (விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பிறப்புக்கு முன்னான சேவைகள்) இரத்தம் செலுத்தவும் சிகிச்சைக்காகவும்  பரிந்துரைக்க வேண்டும்.

(நோய்த்தடுப்பு அளவு: இரும்பு மற்றும் போலிக் அமில மாத்திரைகள் (100 மி,கி,இரும்பு மற்றும் 0.5 மி,கி போலிக் அமிலம்) தினம் ஒரு வேளை 100 நாட்களுக்கு.

சிகிச்சை அளவு: இரும்பு மற்றும் போலிக் அமில மாத்திரைகள் தினம் இரு வேளை 100 நாட்களுக்கு.

(ii) 20-24 வாரங்களில்- இரண்டாவது Hb மதிப்பீடு 20 மற்றும் 24 வாரங்களுக்கு இடைப்பட்ட  கர்ப்ப காலத்தில் ஆனைத்து தாய்மார்களுக்கும் செய்ய வேண்டும்.

•  Hb 11 கிராம்களுக்கும் மேல் இருந்தால், நோய்த்தடுப்பு அளவில்  IFA மாத்திரைகள் அளிக்கவும்.

•  Hb 9-10.9 கிராம்கள் % ஆக இருந்தால், சிகிச்சை அளவில்  IFA மாத்திரைகள் அளிக்கவும்.

• இரத்தப்புரத அளவு 7.1 - 8.9 கி/டெ.லி. இடைப்பட்டு இருந்தால். இரும்பு சுக்ரோஸ் நரம்பு வழியாக செலுத்தப்பட வேண்டும்.

 •  Hb 7 கிராம்கள் % -க்குக் குறைவாக இருந்தால், உடனடியாக CEmONC மையத்துக்கு (விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பிறப்புக்கு முன்னான சேவைகள்) இரத்தம் செலுத்தவும் சிகிச்சைக்காகவும்  பரிந்துரைக்க வேண்டும்.

 (iii) 26-30 வாரங்களில்- மூன்றாவது Hb மதிப்பீடு 26-30 மாத கர்ப்ப காலத்துக்கு  இடையில் அனைத்து கர்ப்பிணிகளுக்கும் செய்யப்பட வேண்டும். 20-24 வாரங்களில் பிறப்புக்கு முன் இரும்பு சுக்ரோஸ் ஊசி மூலம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிகளுக்கு Hb மதிப்பீடு ஒரு மாதத்துக்குப் பின் செய்யப்பட வேண்டும்.   

• Hb 11 கிராம்களுக்கும் மேல் இருந்தால், நோய்த்தடுப்பு அளவில்  IFA மாத்திரைகள் உட்கொள்ளுவதை தொடர்ந்து எடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

• Hb 9-10.9 கிராம்கள் % ஆக இருந்தால், Hb% மேலும் மேம்பட சிகிச்சை அளவில்  IFA மாத்திரைகளைத் தொடர ஆலோசனை தர வேண்டும்.

 •  Hb 7.1 -8.9 gms% ஆக இருந்தால்:

 • இரும்பு சுக்ரோஸ் செலுத்தப்பட்ட தாய்மார்களுக்கு இரு 100 மி.கி. இரும்பு சுக்ரோஸ் மேல் அளவை 2-4 நாட்கள் இடைவெளியில் செலுத்தவும்.
 • தற்போதைய கர்ப்ப காலத்தில் இரும்பு சுக்ரோஸ் செலுத்தப்படாதவர்களுக்கு 4 வேளை இரும்பு சுக்ரோஸ் ஊசி இடவும் (100 மி.லி. இயல்பான உப்புக் கரைசலில் 100 மி.கி. இரும்பு சுக்ரோஸ் கலவையை  20-30 நிமிடங்கள் கால அளவில் உட்செலுத்தவும். இது போல் நான்கு நாட்கள் ஒவ்வொரு உட்செலுத்துதலுக்கு முன்னும் 2-4 நாட்கள் இடைவெளியில் இரு வாரங்களுக்குள்).

Hb 7 கிராம்கள் % -க்குக் குறைவாக இருந்தால், உடனடியாக CEmONC மையத்துக்கு (விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பிறப்புக்கு முன்னான சேவைகள்) இரத்தம் செலுத்தவும் சிகிச்சைக்காகவும்  பரிந்துரைக்க வேண்டும்.

(iv) 30-34 வாரங்களில்

இரத்த சோகை மேலாண்மை முன்னர் எப்படி செய்யப்பட்டிருந்தாலும், அனைத்துப் பிறப்புக்கு முன்னான தாய்மார்களுக்கும் 30-34 வாரத்தில் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

 • Hb 11 கிராம்களுக்கும் மேல் இருந்தால், நோய்த்தடுப்பு அளவில்  IFA மாத்திரைகள் உட்கொள்ளுவதை தொடர்ந்து எடுக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

• Hb 9-10.9 கிராம்கள் % ஆக இருந்தால், Hb% மேலும் மேம்பட சிகிச்சை அளவில் IFA மாத்திரைகளைத் தொடர ஆலோசனை தர வேண்டும்

• Hb 30-34 வாரங்களில் சோதிக்கப்பட்டு மேம்படவில்லை என்றால் (இன்னும் 9 gms%), இரத்தம் செலுத்தவும் மேம்பட்ட மேலாண்மைக்காகவும் உயர் வசதி மருத்துவமனைக்குப் பரிந்துரைக்கவும்.

கூடுதல் உயிர்ச்சத்து- உயிர்ச்சத்து B12 மற்றும் கூடுதலாக உயிர்ச்சத்து C இரும்புச்சத்துடன் அளிக்கப்பட வேண்டும்.

உணவு ஆலோசனை-அனைத்து தாய்மார்களுக்கும் இரும்புச் சத்து நிறைந்த உணவு உட்கொள்ளவும், உணவுக்குப் பின் தேனீர், காப்பி போன்றவற்றை எடுக்கக் கூடாது என்றும் ஆலோசனை வழங்கவும்.

குறிப்புகள்-

apps.who.int/iris/bitstream/handle/10665/

www.nrhmtn.gov.in/guideline/RGPMA.pdf

www.nhmmp.gov.in/WebContent/MPTast/MaternalHealth/

 

இரத்தச் சோகை ஒரு பல காரணி நோய். அதைத் தடுக்கப் பல்நோக்கு அணுகு முறை தேவை. பெரும்பாலான பெண்களுக்குக் கர்ப்பம் தரிக்கும் போதே இரும்புச் சத்துக் குறைபாடும் இரத்தச் சோகையும் இருக்கிறது. எனவே இளம் பெண்களுக்கும் இனப்பெருக்க பருவத்தில் இருக்கும் பெண்களுக்கும் ஆரம்பத்திலேயே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிறந்த ஊட்டச் சத்தே இரத்தச் சோகையை தவிர்க்க சிறந்த வழி.

சமுதாய/சுகாதாரப் பராமரிப்பு வசதிகளில் ஊட்டச்சத்து கல்வி திட்டங்களை வலிமைப்படுத்த வேண்டும். இந்திய உணவுகளில் இரும்புச் சத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம். இரும்புச் சத்து நிறைந்த உணவுகளைப் பற்றி குடும்பங்கள் அறிந்திருக்க வேண்டும். உணவில் இரும்புச்சத்து தடுப்பிகள் மற்றும் மேம்படுத்திகள் பற்றிய அறிவைப் புகட்ட வேண்டும். பல்வேறு கலாச்சாரங்களுக்கு ஏற்பவும் நாட்டின் வேளாண்மை மற்றும் சமூகப்பொருளியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும் உணவு முறைகளைப் பற்றியும் அறிவு முக்கியம்.

உணவு வகை, உணவில் கூடுதல் சத்தாக இரும்பு ஆகிய உணவை அடிப்படையாகக் கொண்ட அணுகு முறைகளின் மூலம் தடுப்பு நடவடிக்கை குறித்தக் கல்வியும், சுகாதாரச் சேவைகளின் மேம்பாடு மற்றும் சுத்தம் பேணுதலும் இன்றியமையாதவை.

(i) வகை உணவுகள்:

பல்வகை உணவுகளை உண்ணுவதன் மூலம் இரும்புச் சத்து உட்கொள்ளலை அதிகரிக்க முடியும்:

(அ) பச்சைக் காய்கறிகள், பருப்புகள், முட்டை, கொட்டைகள், பீன்ஸ், கொழுப்பு அதிகம் இல்லாத சிவப்பு இறைச்சி, வாழை போன்ற பழங்கள் இரும்புச் சத்து நிறைந்தவை,

இருப்புச் சத்துள்ள உணவுவகை: கொண்டைக்கடலை, பசளிக்கீரை, முளைக்கீரை, வெங்காயத் தண்டு, கடுகு இலை, வெந்தய இலை, புதினா, பருப்புகள், சோயாபீன்ஸ், எள், உளுத்தம்பயறு, பூசணி, பச்சை வாழை, நீர் முலாம் பழம், இறைச்சி.

ஆ) அஸ்கார்பிக் அமிலம் (உயிர்ச்சத்து சி) இரும்புச் சத்து உறிஞ்சலை மேம்படுத்தும். கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, முட்டைக்கோசு, பச்சைக் கீரைகள், நெல்லிக்காய், குடை மிளகாய், பசலிப்பழம் ஆகியவற்றில் உயிர்ச்சத்து சி அடங்கி உள்ளது.

(இ) வீட்டு முறைகளான முளைக்கவைத்தல், மாவாக்குதல் மற்றும் நொதித்தல் மூலம் உயிர்ச்சத்து சி அதிகரித்து இரும்புச் சத்து உறிஞ்சலை மேம்படுத்தும். இதன் மூலம் டேனின் மற்றும் ஃபைடிக் அமில உள்ளடக்கம் குறையும்.

(ஈ) குறைந்த அளவு இறைச்சி, கோழிக்கறி அல்லது மீன் சேர்த்துக் கொண்டால் உணவு மூலம் கிடைக்கும் இரும்பின் அளவு கூடும்.

(ii) உணவுச் செறிவூட்டல் என்பது உணவுடன் நுண்ணூட்டங்களைச் சேர்த்தல். இதனால் பக்க விளைவின்றி பொது சுகாதாரம் மேம்படும். இரும்புச் சத்து சேர்க்கப்பட்ட உப்பை இந்திய அரசு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் இரும்புக் குறை சோகையைத் தடுக்கலாம்.

(iii)சுகாதாம் மற்றும் குடும்பநல அமைச்ச்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட கூடுதல் ஊட்டம் மற்றும் சிகிச்சை

தேசிய இரும்பு+ முன்முயற்சி: வாழ்க்கை முழுவதும் இரும்புச்சத்துக் குறை சோகையைத் தடுக்க இந்த முன்முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இது வயது வாரியான திட்டம் ஆகும். இதன் மூலம் இரும்பு மற்றும் போலிக் அமிலம் வழங்கப்படுகிறது. இரத்தப் புரத அளவை அதிகரிக்க காலமுறைப்படி பூச்சி மருந்துகளும் அளிக்கப்படுகின்றன. இரத்தச் சோகையை குறைப்பது இதன் நோக்கம். இதில் அடங்கும் வயது வாரியான குழுக்கள்: 6-59 மாதம், 5-10 ஆண்டுகள், இளம் வயதினர் (11-19 ஆண்டுகள்), கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்கள் மற்றும் இனப்பெருக்க வய்தில் உள்ள பெண்கள் (20-49 வயது).

 • இளைஞர் 11-19 வயது: 100 மி.கி. மூல இரும்பு மற்றும் 500 மை.கி, போலிக் அமிலத்துடன் ஆண்டுக்கு இருமுறை பூச்சி மருந்து பள்ளிகளில்,
 • இனப்பெருக்கப் பருவப் பெண்கள் (20-49 வயது: 100 மி.கி. மூல இரும்பு மற்றும் 500 மை.கி. போலிக் அமிலம் ஆஷா மூலம் ஆண்டு முழுவதும்.  ஆண்டுக்கு இரு முறை அல்பெண்டாசோல் (400 மி.கி.) பூச்சி மருந்து: வீடுகளில் கருத்தடை சாதனங்கள் விநியோகிக்கும்போது.
 • கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்: 100 மி.கி. மூல இரும்பு மற்றும் 500 மை.கி. போலிக் அமிலம் 100 நாட்களுக்கு பிறப்புக்கு முன் பரிசோதனையின் போது: துணைமையம் மற்றும் / PHC/CHC/DH களில். தொடர்ந்து பிறப்புக்குப் பின் 100 நாட்களுக்கு இதே அளவுகளில்.

நீண்ட நாள் நிலைக்கும் பூச்சித்தடுப்பு வலைகளும் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும்.

இரண்டாம் மும்மாதத்தில் குடற்புழு நீக்கிகளும் அளிக்கப்படும்.

பிரதம மந்திரி தாய் பாதுகாப்புத் திட்டம்: இரத்தச் சோகை கோளாறைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் 9-ஆம் தேதி இலவசமாக அனைத்துக் கர்ப்பிணிகளுக்கும் நாடு முழுவதும் பாதுகாப்பான விரிவான பிறப்புக்கு முன்னான பராமரிப்பை வழங்குகிறது.

பிற அமைச்சகங்களின் திட்டங்கள்:

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் மூலம் கூடுதல் ஊட்டம் (600 Kcal மற்றும் 18-20 கிராம்கள் புரதம்)அனைத்துக் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது.

இதே அமைச்சகத்தின் இன்னொரு திட்டம்தான் சப்லா. இளம் பெண்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் அல்லது உணவாக கூடுதல் ஊட்டம் அளிக்கப்படுகிறது.  இதன் மூலம் 600 கேலரிகள் அல்லது 18-20 கிராம்கள் புரதம் அளிக்கப்படும். ஓர் ஆண்டுக்கு 300 நாட்கள் நுண் ஊட்டம் உள்ளெடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

தூய பாரதம் திட்டம்: சுத்தத்தை மேம்படுத்தல், பாதுகாப்பான குடிநீர், தனிநபர் சுத்தம், சிறந்த கல்வி மேலும் சோகையைத் தடுக்க வறுமை ஒழிப்பு ஆகியவை இதில் அடங்கும்.

தேசிய ஊட்டச்சத்து திட்டம்: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் மார்ச் 2018-இல் தொடங்கப்பட்டத் திட்டம். இளம் பிள்ளைகள், வாலிபப் பெண்கள், இனப்பெருக்க வயதில் இருக்கும் பெண்கள் (19-49 வயது) ஆகியோருக்கு 2022-க்குள் சோகை அளவை NFHS4  –இல் இருந்து குறைத்தல்.

குறிப்புகள்:

www.fogsi.org/wp-content/uploads/2017/07/gcpr-recommendation-ida.pdf

medind.nic.in/jav/t10/i4/javt10i4p253.pdf,

www.who-seajph.org/article.asp?issn=2224-

nhm.gov.in/images/pdf/programmes/wifs/guidelines/

pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=71725

pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=137953

 

 

 • PUBLISHED DATE : Jan 09, 2019
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Jan 09, 2019

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.