மின்னாட்டக் கோளாறு

உலக நோய் வகைப்பாட்டின் 11 வது திருத்தத்தில் (ICD-11) மின்னாட்டக் கோளாறை இணைக்க உலக சுகாதார நிறுவனம்  (WHO) அண்மையில் பரிந்துரைத்தது. நோய்க் கோளாறுகளைக் கண்டறிய மருத்துவர்களாலும், அவற்றை வகைப்படுத்த ஆராய்ச்சியாளர்களாலும் உலக நோய் வகைப்பாடு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

இணையதளம், கணினி, திறன்பேசி மற்றும் பிற மின்பொறிகளின் பயன்பாடு அண்மைப் பத்தாண்டுகளில் மிகவும் அதிகரித்துவிட்டது.  நிகழ்நேரத் தகவல் மாற்று போன்ற சில களங்களில் இவற்றின் பயன்பாடு அதிகரிப்பதால் பயனர்களுக்கு  நன்மைகள் விளைகின்றன. ஆனால்,  விளையாட்டு போன்ற பிற சில களங்களில் மிகைப் பயன்பாடு சுகாதாரப் பிரச்சினைகளை உருவாக்குகிறது. சில நாடுகளில் மின்னாட்டக் கோளாறு ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளது.

பலவீனமடைந்த விளையாட்டின் மேல் உள்ள கட்டுப்பாடு, பிற ஆர்வங்கள் மற்றும் தினசரி நடவடிக்கைகளுக்கு மேலாக மின்னாட்டம்  முன்னிலை  பெறும்  அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் அளித்தல், மற்றும் எதிர்மறையான விளைவுகள் நேர்ந்தாலும் மின்னாட்டத்தைத் தொடர்தல் அல்லது அதிகரித்தல் ஆகிய இயல்புகள் கொண்ட விளையாட்டு நடத்தையின் ஒரு வடிவம் என மின்னாட்டக் கோளாறை (எண்மின் ஆட்டம்  அல்லது காணொளி ஆட்டம்)  உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது.  

குறைந்தபட்சம் 12 மாதங்களாகவாவது தனிநபர், குடும்ப, சமூக, கல்வி, பணி அல்லது பிற முக்கிய கடமைகளை ஆற்றுவதில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குக் கடுமையான பலவீனம் நடத்தையில் காணப்பட்டால் மட்டுமே மின்னாட்டக் கோளாறைக் கண்டறிய முடியும். அறிகுறிகள் கடுமையாக  இருந்து வரையறைகள் எல்லாம் பொருந்தி வந்தால் சிறிது காலகட்டத்திற்கு மின்னாட்டத்தில் ஈடுபடுவர்களையும் கூட சுகாதாரப் பராமரிப்பாளர்கள் பட்டியலில் சேர்க்கக் கூடும்.

உலக நோய் வகைப்பாட்டின் 11 வது திருத்தத்தில் (ICD-11) மின்னாட்டக் கோளாறு சேர்க்கப்பட்டதன் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதாரப் பணியாளர்களும் மருத்துவர்களும் இது போலும் இயல்புடைய சுகாதாரக் கோளாறுகளைக் கண்டறியவும், நாடுகள் சிகிச்சை மற்றும் தடுப்புக்கான பொது சுகாதார உத்திகளை வகுக்கும் போது  இக்கோளாறையும் கருத்தில் கொள்ளவும் வகை செய்கிறது.

குறிப்புகள்:

www.who.int/features/qa/gaming-disorder/en/

www.psychguides.com/guides/video-game-addiction-symptoms-causes-and-effects/

 

எல்லா போதைகளையும் போலவே இதிலும் மின்னாட்டக் கோளாறைக் குறிக்கும் உணர்வியல் மற்றும் உடலியல் அறிகுறிகள் காணப்படும்.

காணொளி ஆட்டப் போதையின் உணர்வியல் அறிகுறிகளில் அடங்குவன:

 • விளையாட முடியாத போது அமைதியிழப்பு மற்றும்/அல்லது எரிச்சல்
 • முந்திய அல்லது எதிர்வரும் மின்னாட்டத்தில் மனம் லயித்தல்.
 • விளையாட்டில் செலவழித்த நேரத்தை நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் மறைத்தல்
 • மின்னாட்டத்தில் அதிக நேரம் செலவழிப்பதற்காகப் பிறரிடம் இருந்து தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளுதல்

உடலியல் அறிகுறிகளில் அடங்குவன:

 • தனிநபர் சுகாதாரக் குறைபாடு
 • மின்னாட்டக்காரர் கட்டைவிரல் (தொடர்பயன்பாட்டால் காயம்)
 • எடை கூடுதல் (உடலுழைப்பு இன்மை மற்றும் பத உணவுகள் மற்றும் பானங்களால்)
 • களைப்பு

குறிப்புகள்:

www.who.int/features/qa/gaming-disorder/en/

www.psychguides.com/guides/video-game-addiction-symptoms-causes-and-effects/

மின்னாட்டக் கோளாறுக்குப் பல காரணங்கள் இருக்கலாம்:

இரு வகையான காணொளி ஆட்டங்கள் உள்ளன.  ஒன்று தர அளவு காணொளி ஆட்டம். ஒருவர் ஆடும் விதமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்துக்கு ஒரு தெளிவான இலக்கு இருக்கும். இந்த இலக்கை அடைவது அல்லது ஒரு உச்சக்கட்ட மதிப்பை வெல்வது அல்லது இருக்கும் தர அளவை எட்டுவது ஆகிய வகையில்தான் இதில் ஈடுபாடு இருக்க முடியும்.

இன்னொரு வகை, வலைத்தளத்தில் ஆடும் பல ஆட்டக்காரர்கள் இணைந்து ஆடுவது. ஒரு வலைத்தள பாத்திரத்தை உருவாக்குவது அல்லது தற்காலிகமாக அப்பாத்திரமாக மாறுவதே இதன் ஈடுபாட்டு அமசம். எதார்த்தத்தில் இருந்து விடுபட அவர்கள் பெரும்பாலும்  வலைத்தள ஆட்டக்காரர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளுகிறார்கள். பள்ளியில் பிரபலமாக இல்லாத ஒரு புத்தி கூர்மையுடைய குழந்தை ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்துபவர்களாகத் திகழலாம். உண்மை வாழ்க்கையை விட நிகர்நிலை வாழ்க்கை கவர்ச்சிகரமாக மாறிவிடுகிறது.

காணொளி ஆட்டக் கோளாறு ஒரு மருத்துவ ரீதியான உந்தல் கோளாறாக இருக்கலாம். சில ஆளுமை கோளாறுகள் அல்லது ஊனங்கள் உள்ளவர்களுக்கு பிறரை விட அதிக ஆபத்து உள்ளது. எதார்த்த வாழ்க்கையின் பிரச்சினைகள் மற்றும் துன்பம்தரும் உணர்வுகளில் இருந்து தப்பிக்க ஆதிக்கம் செலுத்தும் ஆட்டத்தில் ஈடுபடுவோர் ஒரு கற்பனை உலகில் மகிழ்ச்சி அடைய முயல்கின்றனர்.  காணொளி ஆட்டத்தில் ஈடுபடுவோரில் 41% பேர்  எதார்த்தத்தில் இருந்து விடுபட விரும்புவதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

பெரும்பாலான காணொளி விளையாட்டுகள் அடிப்படை உளவியல் தேவைகளை நிறைவு செய்கின்றன. பரிசுகள், சுதந்திரம், பிற ஆட்டக்காரர்களுடன் தொடர்பு ஆகியவற்றிற்காக ஆடுபவர்கள் தொடர்ந்து ஆடுகிறார்கள். இது உடல் செயல்பாடுகளில் இருந்தும், படிப்பு, நண்பர்கள் மற்றும் குடும்பங்களில் இருந்தும் ஆடுபவரை விலக்கி அழைத்துச் செல்லுகிறது.  ஒரு நாள் 4-5 மணி நேரம் ஆடும் குழந்தைகளுக்கு கூடிப்பழகவும், வீட்டுப்பாடம் செய்யவும் அல்லது பிற விளையாட்டுகளில் ஈடுபடவும் சமயம் கிடைப்பதில்லை. இதனால் இயல்பான சமூக வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

மின்னாட்டக் கோளாறுக்கான ஆபத்துக் காரணிகள்:

உயிரியல் காரணிகள்:

 • இணை நோய்க் கோளாறுகள் (மன அழுத்தம், மனக்கலக்கம் போன்ற உளவியல் பிரச்சினைகள்)
 • போதைப் பழக்கத்துக்கான ஆபத்து

ஆளுமை மற்றும் உளவியல் காரணிகள்:

 • சமூகத் திறன் குறைவு மற்றும் அதீத வெட்கம்
 • குறைந்த சுயமதிப்பு மற்றும் முடிவெடுக்க இயலாமை
 • மீள்திறன் குறைவு
 • விரக்தி

சூழல் காரணிகள்

 • குடும்பச் சூழல்: முரண்பாடுகள், தொடர்பு மற்றும் அன்புகாட்டுவதில் குறைபாடு, மேற்பார்வை இன்மை
 • பள்ளிச் சூழலில் குறைந்த சாதனை
 • மோசமான சமூகச் சூழல்

மன அழுத்தக் காரணிகள்:

 • துயரம்
 • கடுமையான வாழ்க்கை மாற்றம்

குறிப்புகள்:

www.nhs.uk/news/neurology/autism-and-adhd-associated-with-video-game-addiction/

www.psychguides.com/guides/video-game-addiction-treatment-program-options/

link.springer.com/article/10.1007/s11469-017-9825-0

காணொளி ஆட்ட போதையுடன் தொடர்புடைய பல்வேறு அறிகுறிகளை கண்காணிப்பதின் மூலம் மின்னாட்டக் கோளாறை மதிப்பிட முடியும். ஒரு நபரின் நடத்தையில்  குறிப்பிடத்தக்க அளவில் நடத்தை மாற்றங்கள் ஏற்படும். இதன் விளைவாக தனிப்பட்ட, குடும்ப , சமூக, கல்வி, பணி அல்லது பிற முக்கிய பகுதிகளில் கடுமையான கோளாறுகள் விளையக் கூடும். இவை குறைந்த பட்சம் 12 மாதங்கள் தொடர்ந்து காணப்படுமாயின் இவற்றை அறிகுறிகள் எனலாம்.

அறிகுறிகள் கடுமையாக இருந்து எல்லா அம்சங்களும் பொருந்தி வந்தால் குறைந்த கால அளவுக்கு ஆட்டத்தில் ஈடுபடுவோருக்கும் மின்னாட்டுக் கோளாறு இருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு வல்லுநர்கள் கருதலாம்.

மின்னாட்ட போதையின் எச்சரிக்கை அறிகுறிகளில் அடங்குவன:

 • மனக்கலக்கம்/மனச்சோர்வு அல்லது வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகள் ஆகிய எதார்த்த வாழ்க்கைப் பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க மின்னாட்டத்தில் ஈடுபடுதல்.
 • காலம் செல்லச் செல்ல ஆட்ட நேரம் நீடித்துச் செல்லுதல்
 • ஆட்டத்துக்காக குளியல், சாப்பாட்டைத் துறத்தல்
 • பணியிலும் பள்ளியிலும் செயலாற்றல் குறைதல்
 • மின்னாட்டாத்தை மறைக்க நண்பர்கள்/குடும்பத்தினரிடம் பொய் சொல்லுதல்
 • ஆட்டத்தை நிறுத்தச் சொல்லும்போது எரிச்சல் அடைதல்

மேலும் மின்னாட்ட போதையால் தனிமைப் படுதல், சமூக தொடர்புகளில் இருந்து விலகல் மற்றும் பிற பொழுதுபோக்குகளை விடுதல் ஆகியவை நிகழும்.

குறிப்பு:

www.psychguides.com/guides/video-game-addiction-symptoms-causes-and-effects/

 

இணைந்து காணப்படும் நோய்கள் மற்றும் பிற ஆபத்துக் காரணிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த மற்றும் விரிவான முறையில் அணுகும் போது இத்தகைய நபர்களின் சிகிச்சை விளைவுகள் மேம்படும்.

உளவியல் சிகிச்சை- மின்னாட்ட கோளாறுக்கு, நபருக்கு நபர் மற்றும் குடும்ப ஆலோசனை பலன் அளிப்பதாகும்.  குடும்பதோடு, பள்ளியோடு, பணியோடு, உணர்வோடு, மனநிலையோடு, வாழ்க்கை இலக்குகளோடு மற்றும் வெற்றியோடு மின்னாட்டம் எவ்வாறு தொடர்புடையது என்பதைத் தெளிவு படுத்த உளவியல் சிகிச்சை பயன் உள்ளதாக இருக்கும்.

அறிவு நடத்தை சிகிச்சை (CBT)- இது சிந்தனையை மாற்ற உதவுகிறது. மின்னாட்டத்துக்கு கட்டாயப்படுத்தும் உந்தலை மாற்றி ஆரோக்கியமான சிந்தனை வடிவத்தைப் பின்பற்ற உதவுகிறது. ஒருவர் தம் சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தையை மேம்படுத்த இது உதவுகிறது.

மருந்துகள்- சில மருந்துகள் மூளை வேதியலை மாற்றி ஆட்ட உந்தலை குறைக்க உதவுகிறது. மனச்சோர்வு அல்லது மனக்கலக்கத்தால் துன்புறும் மின்னாட்ட நோயாளிகளின் இந்தப் பிரச்சினைகளை தீர்க்கும் போது பலன் கிடைக்கிறது.

சில வேளைகளில் மின்னாட்ட போதையில் இருப்பவர்களை இயற்கை சூழல்களில் இருத்தும்போது தற்கால வாழ்க்கையின் சிதறல்களில் இருந்து விடுபட்டு அவர்கள் தங்கள் சொந்த உணர்வுகளில் அமைதியுற வழிபிறக்கிறது.

குறிப்புகள்:

www.webmd.com/mental-health/addiction/features/video-game-addiction-no-fun#1

www.webmd.com/mental-health/addiction/features/video-game-addiction-no-fun#2

link.springer.com/article/10.1007/s11469-017-9825-0

 

மின்னாட்ட்த்தில் ஈடுபடுவோர் தாங்கள் அதில் செலவழிக்கும் நேரம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிற அன்றாடக செயல்களை பாதிக்கும் போதும், உடல் உள ஆரோக்கியத்தையும் சமூக செயல்களையும் மாற்றும் மின்னாட்ட நடத்தைகளைய்ம் குறித்து கவனமாக இருக்க வேண்டும்.

காணொளி ஆட்டங்களில் ஈடுபடுவதை விடுத்து வெளிப்புற விளையாட்டுகள், புத்தகம் படித்தல், வீட்டு வேலை அல்லது நேரத்தை நண்பர்களோடு கழித்தல் ஆகியவற்றில் நேரத்தை செலவழிக்குமாறு மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மின்னாட்டத்தைப் பற்றிய தெளிவை பெற்றிருக்க வேண்டும்:

 • குழந்தை எப்போது எவ்வளவு நேரம் ஆடுகிறது
 • மின்னாட்டத்தால் ஏற்படும் விளைவு
 • நேரத்தைக் கட்டுப்படுத்தும்போது குழந்தையின் எதிர்வினை என்ன

மின்னாட்டம் அல்லது காணொளி ஆட்டத்தில் ஈடுபடும் ஒரு சிறு பகுதியினரையே மின்னாட்டக் கோளாறு பாதிக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஏதாவது பிரச்சினை இருந்தால் வல்லுநர் உதவியை நாடுவதில் தாமதம் காட்ட வேண்டாம்.

குறிப்புகள்:

www.who.int/features/qa/gaming-disorder/en/

www.webmd.com/mental-health/addiction/features/video-game-addiction-no-fun#1

 

 

 • PUBLISHED DATE : Mar 28, 2018
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 28, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.