வாதக் காய்ச்சலும் வாத இதயநோயும்

வளர்ந்து வரும் நாடுகளில் வாதக் காய்ச்சலும் (RF) வாத இதயநோயும் (RHD) குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெரும் பொது சுகாதாரப் பிரச்சினைகளாக உள்ளன. வளர்ந்த நாடுகளில் இந்நோய்கள் குறைந்து விட்டன. தொகுதி A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் (GAS) நுண்ணுயிரித் தொற்று நோய்த்தடுப்பு எதிர்வினையால்  கடும் வாதக் காய்ச்சல் (ARF) உண்டாகிறது. வாதக் காய்ச்சல் இணைப்புத் திசுக்களைப் பாதிக்கிறது. இதனால் வாத இதய நோய் ஏற்படலாம். இதன் விளைவாக  இதயச் செயலிழப்பு, தமனி நடுக்கம் மற்றும் நகருறைவுப் பக்கவாதம் ஏற்படலாம்.

தாமதமான நோய்த்தடுப்பு எதிர்வினையால் ஏற்படும் தொகுதி  A  ஸ்ட்ரெப்டோகாக்கல் தொண்டையழற்சி சீழற்ற சிக்கலே வாதக் காய்ச்சலும் வாத இதய நோயும் ஆகும். உலகம் முழுவதும் தொகுதி  A  ஸ்ட்ரெப்டோகாக்கல் தொற்று இடம்சார்ந்து காணப்படுகிறது. ஆயினும் குறிப்பாகப், பள்ளிக் குழந்தைகள் நடுவில், முதியோர் இல்லங்களில்,  மற்றும்  படைப்பிரிவினர் போன்ற பிற தனித்துவமான மக்கள் கூட்டத்தில் திடீர் எழுச்சியும் பரவலாக உள்ளது. கடும் வாதக் காய்ச்சல் வறுமை சார்ந்த நோயாகக் கருதப்படுகிறது. வளரும் நாடுகளில் 5-15 வயதுக் குழந்தைகளிடம் பரவலாகத் தோன்றும். தொகுதி A ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தொண்டையழற்சிக்குச் சிகிச்சை அளிக்கப்படாத போது 1-3 வாரங்கள் கழித்து உண்டாகும் இது, திரும்பத் திரும்ப வரக்கூடிய  ஓர் அழற்சி நோய்.

தொடர் இதயச் சிதைவு, ஊனம் அதிகரித்தல், திரும்பத் திரும்ப மருத்துவமனை சிகிச்சை மற்றும் அகால மரணம் ஆகியவை வாதக் காய்ச்சல் மற்றும் வாத இதய நோயின் விளைவுகள் ஆகும்.

உலகம் முழுவதும் 15.6 மில்லியன் வாத இதய நோய் நேர்வுகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் 2005 ஆம் ஆண்டு கணக்கிட்டது. இவற்றில் மிகப் பெரும்பானமை நேர்வுகள் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ளன.  2,82, 000 புதிய வாத இதய நோய் நேர்வுகளும், 4,70,000 புதிய வாதக் காய்ச்சல் நேர்வுகளும் ஏற்பட்டு வாத இதய நோயால் ஆண்டு தோறும் 2,33,000 மக்கள் மரணம் அடைகின்றனர்.

இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையிலான ஆய்வு, வாத இதய நோயின் இருப்பு விகிதம்  மக்கள் தொகையில் 2/1000 என கணக்கிடுகிறது. இருப்பினும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் 5-16 வயதுடைய பள்ளி மாணவர்கள் மத்தியில் நடத்திய கணக்கெடுப்பில் இருப்பு விகிதம் மக்கள் தொகையில் 6/1000 (வரம்பு 1.8-11/1000) என அறியப்பட்டுள்ளது.

வாதக் காய்ச்சல் இந்தியாவில் இடம் சார்ந்த நோயாகக் காணப்படுகிறது. இதய நோய்களுக்கு இது ஒரு முக்கிய காரணம். உருவாகும் இதய நோய்களில் 25-45 % இதனால் ஏற்படுகிறது.

மேம்பட்ட வாழ்க்கை நிலையாலும், சுகாதாரத் தர உயர்வாலும், தகுந்த நலச் சேவைகளாலும், பென்சிலினை அடிப்படையாகக் கொண்ட மருந்துகள் போதுமான அளவுக்கு கிடைத்ததாலும் 20 ஆம் நூற்றாண்டில் கடும் வாதக் காய்ச்சல் பளு மிகவும் குறைந்தது. பல வளரும் நாடுகளில், இந்த நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு இன்மையும், பணம் மற்றும் ஆதாரங்களின் குறைபாடும் இந்நோயைக் கட்டுப்படுத்தத் தடைகளாக உள்ளன.

ஸ்ட்ரெப்ட்டோகாக்கலால் ஏற்படும் தொண்டை வலியை ஆரம்பத்திலேயே தடுக்க சிகிச்சை மேற்கொண்டால் வாதக் காய்ச்சல் உருவாவதைத் தடுக்க முடியும்.  தொடர்ந்து நீண்டகாலத்திற்கு பென்சிலின் சிகிச்சை செய்து வந்தால் வாதக் காய்ச்சல் வாத இதய நோயாக மாறுவதைத் தடுக்கலாம். ஏற்கெனவே இதய அடைப்பிதழ்கள் பழுதுபட்ட நோயாளிகளில் நோய் முன்னேறுவதையும் நிறுத்தலாம். இந்தியாவில் வாதக் காய்ச்சலும் வாத இதய நோயும் புறக்கணிக்கப்பட்ட பொதுப் பிரச்சினைகள். சிகிச்சை அளிக்கப்பட்டால் வாதக் காய்ச்சல் உள்ள 75%  மக்கள் முற்றிலும் குணம் அடைவார்கள். வாத இதய நோய், தடுக்கக் கூடிய இதயக் கோளாறுகளில் ஒன்றாகும்.

குறிப்புகள்:

www.icmr.nic.in/final/

apps.who.int/iris/bitstream

www.apiindia.org/pdf/medicine

www.who.int/cardiovascular_diseases

கடும் வாதக் காய்ச்சலுக்கு முன் தொண்டை வலி உண்டாகும். தொண்டை நோய், பலவகைப்பட்ட  நுண்னுயிரிகளாலும் வைரசுகளாலும் ஏற்படும். அனைத்து வயதினரையும் இது பாதிக்கும். ஆயினும் ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் தொண்டைவலியின் முக்கிய அறிகுறிகளும் நோய்க்குறிகளும் வருமாறு:

 • கூடுதல் காய்ச்சல்
 • மென் கழுத்து நிண முடிச்சுகள்
 • குரல்வளை சிவப்பாதல்
 • குரல்வளை மற்றும் தொண்டையில் இருந்து சீழ் போன்ற கசிவு
 • தொண்டையில் இரத்தக் கசிவு
 • விழுங்கும்போது வலி

சாதாரணச் சளி, கண்சவ்வழற்சி, மூக்கொழுகல், குரல் கரகரப்பு ஆகியவை மட்டுமே இந்நோயைக் குறிக்காது.  தொண்டையின் திசு ஆய்வு நோயை உறுதிப்படுத்த அவசியம் ஆகும். தொகுதி A   ஸ்ட்ரெப்ட்டோகாக்கல் தொண்டையழற்சிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் சில குழந்தைகளில் வாதக் காய்ச்சல் உருவாகலாம்.

வாதக்காய்ச்சலில் குழந்தைக்கு காய்ச்சலுடன் கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்படும்:

மூட்டழற்சி: வாதக் காய்ச்சலின் முதல் தாக்கத்தின் போது, 75% நோயாளிகளுக்கு மூட்டுகளில் வீக்கமும் வலியுமே பொதுவான அறிகுறிகள் ஆகும். முழுங்கால், முழங்கை, மணிக்கட்டு, கரண்டை போன்ற உடலின் இருபக்க பெரும் மூட்டுகள் பொதுவாக பாதிக்கப்படும். இது அனைத்து மூட்டுகளையும் பாதிக்கும் ஒரு தொடர் நிகழ்வாகும். ஒரு சுழற்சியான அழற்சி ஏற்பட்டுத் தானாகவே சரியாகும். தொடும்போது அதிக வலி இருக்கும்.  மூட்டழற்சியின் அறிகுறிகள் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தாது. 4-6 வாரங்களில் குணமடையும்.

இதயவழற்சி:  வாதக் காய்ச்சல் உள்ளவர்களில் 30-60% பேருக்கு இதய அழற்சி ஏற்படுகிறது. மூச்சடைப்பு, தொடர் இருமல், விரைவான நெஞ்சுத் துடிப்பு, நெஞ்சு வலி, எப்போதும் களைப்புணர்வு ஆகியவை அறிகுறிகள்.

தோல் முடிச்சுகள்: வட்டமான, உறுதியான, எளிதாக நகரும் வலியற்ற 0.5 – 2.00 செ.மீ அளவுள்ள முடிச்சுகள் எலும்புள்ள இடங்கள் அல்லது நீட்சி தசைநாண்களில் காணப்படும்.

வாதத் தசைவலிப்பு:  வாதக் காய்ச்சல் கொண்ட நான்கில் ஒரு குழந்தைக்கு அனிச்சையான கட்டுப்படுத்த முடியாத உடல், குறிப்பாக கை கால்,  துள்ளலும் வெட்டி இழுப்பும்,  எழுதுதல் போன்ற நுட்ப வேலை செய்ய இயலாமையும், சமநிலைப் பிரச்சினைகளும், காரணமின்றி அழுதல், சிரித்தல் போன்ற அசாதாரண உணர்வுக் குமுறல்களும் உண்டாகும். இவை சில மாதங்களில் சரியாகும்.

தோல் படை: பத்தில் ஒரு குழந்தைக்கு வாதக் காய்ச்சல் தோல் படை ஏற்படலாம். வலியற்ற அரிப்பற்ற இந்தப் படைகள் சில வாரம் அல்லது மாதத்தில் மறையும்.

மிகைக் காய்ச்சல், வயிற்று வலி, மூக்கில் இரத்தம் ஆகியவை அரிதாகக் காணப்படும் அறிகுறிகள்.

குறிப்புகள்:

www.nhs.uk/Conditions/Rheumatic-fever

www.emedicinehealth.com/rheumatic_fever

தொகுதி A ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் நுண்ணுயிரிகள் இருப்பதால் நோய்த்தடுப்பு மண்டலம் மிகைவினை ஆற்றும்போது வாதக்காய்ச்சல்  உண்டாகிறது. தொற்று ஏற்படும் போது அதை எதிர்த்து நோய்த்தடுப்பு மண்டலம் நுண்ணுயிரியின் மேற்பகுதி புரதத்துக்கு எதிர்பொருள் உருவாக்கி போராடுகிறது. தொகுதி A ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ் நுண்ணுயிரிகளின் சில வகைகளின் புரதம் மனிதப் புரதம் போல் காணப்படுவதால் நோய்த்தடுப்பு மண்டலம் இதயம், மூட்டு, தோல் போன்ற ஒரே புரதம் காணப்படும் மனித செல்களைத் தாக்கியும் போராடுகிறது.

வாதக் காய்ச்சலும் வாத இதய நோயும் நோயியல் படி ஸ்ரெப்ட்டோகாக்கஸ் பயோஜின்ஸ் தொண்டைவலியோடு தொடர்புடையது. ஸ்ரெப்ட்டோகாக்கஸ் நுண்ணுயிரிகள் ஒரு பெரும் தொகுதி. இவை கிராம் நேர்மறையானவை; நகராதவை; வித்து உருவாக்காத கோள நுண்னுயிரிகள்;  0.5-1.2 µm அளவுள்ளவை.

ஸ்ரெப்ட்டோகாக்கஸ் பயோஜின்ஸ் மனிதர்களில் பலவித நோய்களை உருவக்குகின்றன. வாதக் காய்ச்சலும் வாத இதய நோயும் உருவாவதற்கு இது ஒரு பரவலான காரணம் ஆகும். சிரங்கு எனப்படும் பரவலான தொற்றும் ஸ்ரெப்ட்டோகாக்கஸ் பயோஜின்சால் ஏற்படுவதே. இது கடும் சிறுநீரக நரம்புத்திரள் அழற்சியுடன் (AGN) தொடர்புடையது. அரிய  நேர்வுகளில், ஸ்ரெப்ட்டோகாக்கஸ் பயோஜின்ஸ், ஊடுறுவும் நோய்களான செல்லழற்சி, நுண்ணுயிர்க்குருதி, திசுப்படலச்சிதைவழற்சி மற்றும் நச்சதிர்ச்சி நோய்க்குறி  (TSS)போன்றவற்றை ஏற்படுத்தும்.

தொகுதி A  ஸ்டெரெப்ட்டோகாக்கஸ்  தொண்டையழற்சியைத் தொடர்ந்து கடும் வாதக் காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் ஆபத்து இடம்சார் நிலைகளில் 0.3 சதவிகிதமும், திடீர் எழுச்சி நிலையில் 3 சதவிகிதமாகவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மிதவெப்ப தட்பவெப்பச் சூழல்களில் குளிர் மற்றும் வசந்த காலங்களில் 20% பள்ளிப் பருவ குழந்தைகள் தொகுதி A  ஸ்டெரெப்ட்டோகாக்கஸ்  நுண்ணுயிரிகளைச் சுமப்பவர்கள் ஆகும். பரவலாக நோய் காணப்படும் வயதுக் குழு, பால் வேறுபாடு இன்றி, 5-15 ஆண்டுகள்.

வீட்டு வசதி மோசமாக இருக்கும் நிலையில் வாதக் காய்ச்சல்  கூட்ட நெரிசல் காரணமாகவே பரவுகிறது (அதிக தொகுதி A  ஸ்டெரெப்ட்டோகாக்கஸ்  தொற்றால்).  வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடையும் போது அது வெகுவாகக் குறைகிறது.

குறிப்பு:

www.emedicinehealth.com/rheumatic_fever

கடும் வாதக் காய்ச்சலைக் கண்டறிய தற்போது ஒரே பரிசோதனை எதுவும் இல்லை.  மருத்துவ ரீதியன மதிப்பீடுகள் மற்றும் நோயோடு தொடர்புடைய பல்வேறு அறிகுறிகளையும் நோய்க்குறிகளையும் இனங்காணுதல் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நோய்கண்டறிதல் நடைபெறுகிறது.  கடும் வாதக் காய்ச்சலின் அறிகுறிகளும் நோய்க்குறிகளும் இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன: பெரியவை மற்றும் சிறியவை.

கடும் வாதக் காய்ச்சலுடன் பின் வருவன போன்ற பெரும் அறிகுறிகளும் நோய்க்குறிகளும் தொடர்புடையவைகள் ஆகும்: இதய வீக்கம், மூட்டு வலி, உடலிலும் முகத்திலும் அசாதாரண அசைவுகள், வலியற்ற தோல் நிறம், தோலுக்கடியில் சிறு கட்டிகள்.

பெரும் மற்றும் சிறு அறிகுறிகளும் நோய்க்குறிகளும் நோய் கண்டறிதலுக்கு உதவி புரிகின்றன. காய்ச்சல், பொதுவான மூட்டு வலி, இரத்தப் பரிசோதனை மூலம் அறிவன (ESR அதிகரிப்பு) மற்றும் மின்னிதயமானியில் காணப்படும் மாற்றம் (அதிகரித்த P-Rஇடைவெளி).

ஜோன்ஸ் அடிப்படை மூலம் வாதக்காய்ச்சலைக் கண்டறிதல்: வாதக் காய்ச்சலைக் கண்டறிய ஒரு தொகுதி மருத்துவ ரீதியான வழிகாட்டுதல்களாக ஜோன்ஸ் அடிப்படை 1944-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. திருத்தப்பட்ட ஜோன்ஸ் அடிப்படையின் படி, ஸ்ட்ரெப்ட்டோக்காக்கல் தொற்றுடன் (ஸ்ட்ரெப்ட்டோக்காக்கல் ஊனீர் எதிர்பொருள் சோதனைகள்) இரண்டு பெரும் அடிப்படைகள் அல்லது ஒரு பெரும் அடிப்படையும் இரண்டு சிறு அடிப்படைகள் இருந்தால் வாதக்காய்ச்சலைக் கண்டறியலாம்.

கேளா ஒலி மூலம் வாதக் காய்ச்சல் இதய நோயைத் துல்லியமாகக் கண்டறியலாம். இதய கேளா ஒலி எதிரொலி இதயவரைவியல் எனப்படும்.

குறிப்புகள்:

www.icmr.nic.in/final

emedicine.medscape.com/article

 

தொற்றுக்கு சிகிச்சை அளித்து நோயறிகுறிகளைப் போக்குவதே கடும் வாதக் காய்ச்சலுக்கான நோய்மேலாண்மை. இதில் அடங்குவன:

 • ஸ்ரெப்ட்டோக்காகல் தொற்றுக்கு நுண்ணுயிர்க் கொல்லிகள்
 • மூட்டழற்சியையும் காய்ச்சலையும் குறைக்க மருந்து
 • ஓய்வு
 • ஆரோக்கியமான உணவு

கடும் வாதக் காய்ச்சல் நோய் கண்டறியப்பட்ட உடன், நோய்த்தடுப்பு மருந்துடன் நுண்ணுயிர்க் கொல்லிகள், நோய் மீண்டும் தாக்காதபடியும் இதய நோய் உருவாகாத படியும் அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு 3-4 வார இடைவெளிகளில் தொடர்ந்து தசையுள் செயல்நீடிப்பு பென்சிலின் ஊசி இடப்படும்.

தொடர் பென்சாதைன் பென்சைல்பென்சிலின் திரும்பத்திரும்ப அளிக்கப்படாத நோயாளிகளுக்கு தினமும் வாய்வழி பீனாக்சிமீதைல் பென்சிலின் பயன்படுத்தலாம். பென்சிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வாய்வழி சல்போனாமைட் இரண்டாம் நிலை தடுப்பு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது. இது இரண்டும் எடுக்க முடியாத வர்களுக்கு எரித்ரோமைசின் பயன்படுத்தலாம்.  ஒவ்வொரு நோயாளிக்கும் இரண்டாம் நிலை தடுப்பு மருந்து மருத்துவரால் நிர்ணயிக்கப்படுகிறது.

குறிப்புகள்:

emedicine.medscape.com

apps.who.int/medicinedocs

நீடித்த வாத இதய நோய்: வாதக் காய்ச்சலின் முக்கிய சிக்கல் வாத இதய நோய் ஆகும். வாதக் காய்ச்சலால் பாதிக்கப் பட்ட மூவரில் ஒருவருக்கு வாத இதய் நோய் உருவாவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அடைப்பிதழ் புண்களான ஈரிதழ் பின்னொழுக்கு, ஈரிதழ் குறுக்கம், பெருநாடி பின்னொழுக்கு, பெருநாடி குறுக்கம் ஆகியவை நீடித்த இதய செயலிழப்புகளாக உருவாகின்றன. வாதக் காய்ச்சல் ஏற்பட்டு பல ஆண்டுகளாக அறிகுறிகள் உருவாகி வருகின்றன. இலேசான வாத இதய நோய்களுக்கு மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்படும். ஆனால் கடும் நேர்வுகளில் அடைப்பிதழ் மாற்றம் பரிந்துரைக்கப்படக் கூடும்.

தமனி குறுநடுக்கம்: சில நேர்வுகளில் வாத இதய நோய் தமனி குறுநடுக்கத்துக்கு இட்டுச் செல்லும். இதனால் இதயத் துடிப்பு அதிகரித்து பக்கவாத ஆபத்து கூடும். இதயத் துடிப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தவும் பக்கவாதத்தைத்  தடுக்கவும் மருந்துகள் அளிக்கப்படும்.

இதயச் செயலிழப்பு: கடும் வாத இதய நோய் நேர்வுகளில் இதயம் சிதைவுற்று அதனால் போதுமான இரத்தத்தை உடலுக்குள் செலுத்த முடியாமல் போகலாம்.

கர்ப்பமும் வாத இதய நோயும்: கர்ப்பத்தொடு தொடர்புடைய பரவலான இதய நோய் வாத இதய நோயே. 1% கர்ப்பிணிகளிடம் இது காணப்படுகிறது. இதனால் தாய்க்கும் சேய்க்கும் நோய் மற்றும் மரண ஆபத்து உருவாகிறது. வளர்ந்து வரும் நாடுகளில் தாய் மரணத்துக்கு வாத இதய நோயும் ஒரு முக்கியக் காரணம் எனக் கருதப் படுகிறது. வாத இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகளுக்கு இதயக் குழல் மண்டலத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் அவர்களின் உடல்நலத்தில் ஓர் எதிர்மறையான தாக்குதலை ஏற்படுத்துகிறது.

குறிப்புகள்:

www.emedicinehealth.com

www.medicinenet.com

பெற்றோர், ஆசிரியர்கள், மற்றும் சுகாதாரப் பராமரிப்பாளர்களுக்கு ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ்  பயோஜென்சால் ஏற்படும் தொற்றின் நோய்த் தோற்றுவாய், பரவல், மருத்துவ ரீதியான நோயியல்,  சிகிச்சை மற்றும் சிக்கல்களைப் பற்றிய அறிவு ஆகியவற்றைப் புகட்டுவதன் மூலமே  இந்நோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்.

முன், ஆரம்ப,  இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தடுப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய கல்வியை பெற்றோருக்குப் புகட்ட வேண்டும்.

முன் தடுப்பு: சமூகத்தின் ஏழைமக்கள் வாழும் அடுக்கின் சமூகப் பொருளியல் நிலையை உயர்த்தும் ஓர் ஒருங்கிணைந்த முயற்சி இன்றியமையாதது ஆகும். குறிப்பாகத் தகுந்த வீட்டு வசதியை ஏற்படுத்தி நெரிசலையும் ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் நீக்க வேண்டும்.  தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தைப் பற்றி மட்டும் அன்றி தொகுதி  A ஸ்ரெப்ட்டோகாக்கல் தொற்றைப் பற்றிய காரணங்களையும் குறித்த சுகாதாரக் கல்வி திட்டங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

ஆரம்பக் கட்டத் தடுப்பு: வாதக் காய்ச்சலின் முதல் தாக்குதலைத் தடுக்கக் கடும் ஸ்ட்ரெப்ட்டோகாக்கல் தொண்டையழற்சிக்கு சிகிச்சை அளிப்பதே ஆரம்பக் கட்ட தடுப்பு ஆகும். நோய்கண்டறியப்பட்ட உடன் நுண்ணுயிர்க் கொல்லிகளை அளிப்பதன் மூலம் ஆரம்பக் கடும் வாதக் காய்ச்சல் பாதிப்பைத் தடுக்கலாம்.  வாதக் காய்ச்சல் மற்றும் வாத இதய நோய்களுக்கான மிகவும் பொருத்தமான நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகள் பென்சாதைன் பென்சிலின் G அல்லது  பத்து நாட்களுக்கு வாய்வழி பென்சிலின் சிகிச்சை ஆகும். பென்சிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு எரித்ரோமைசின் ஏற்றுக்கொள்ளக்கூடிய மாற்று சிகிச்சை.

தொண்டை வலிக்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு கல்வி புகட்டுவதன் மூலம் வாதக் காய்ச்சலுக்கு ஆரம்ப தடுப்பை உறுதி செய்யும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.  ஆரம்பத்திலேயே ஸ்ட்ரெப்ட்டோகாக்கல் தொண்டையழற்சியை கண்டறிவதற்கும் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளுவதற்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.  ஆய்வக வசதிக் குறைப்பாட்டல் வளரும் நாடுகளில் தொகுதி A ஸ்ட்ரெப்ட்டோக்காக்கசைக் கண்டறிவது கூடாததாக இருக்கிறது. தொகுதி A ஸ்ட்ரெப்ட்டோக்காக்கல் தொண்டை வலியை வைரல் தொண்டை வலியில் இருந்து வேறுபடுத்திக் காணுவது மருத்துவ ரீதியாகக் கடினமானது.

பல தடுப்பு மருந்துகள் ஆராய்ச்சி நிலையில் இருந்தாலும் ஒரு பலனளிக்கும் தடுப்பு மருந்தை ஸ்ட்ரெப்ட்டோகாக்கல் நோய்க்கு இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

இரண்டாம் கட்டத் தடுப்பு: வாத இதய நோய் இல்லாவிட்டாலும் ஆரம்பக் கட்ட வாதக் கய்ச்சலால் பாதிக்கப்பட்ட அனைவர்க்கும்  மேல் சுவாச மண்டலத்தைத் தொகுதி A   ஸ்ட்ரெப்ட்டோகாக்கஸ்  தாக்காதபடி தடுக்கத் தொடர்ந்து  நுண்ணுயிர்க் கொல்லிகளை அளிப்பது  கட்டாயம் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இரண்டாம் கட்டத் தடுப்பு, நோய் தொடர்ச்சியையும், நோயையும் மரணத்தையும் குறைத்துள்ளதாக அறியப்படுகிறது.

இரண்டாம் கட்டத் தடுப்பாக, ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு ஒருமுறை, செயல் நீடித்த பென்சிலின் [பென்சாத்தைன் பென்சைல்பென்சிலின் (benzathine benzylpenicillin)] ஊசியைத் தொடர்ந்து செலுத்துமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. இவ்வாறு அளிக்கப்படாதவர்களுக்கு தினமும் வாய்வழி பீனாக்சிமீதைல்பென்சிலைன் (phenoxymethylpenicillin) அளிக்கலாம். பென்சிலின் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சல்போனாமைட் பரிந்துரைக்கப் படுகிறது. இரண்டுமே ஒத்துக் கொள்ளதவர்களுக்கு எரித்ரோமைசினைப் பயன்படுத்தலாம்.

இரண்டாம் கட்டத் தடுப்புக்கான காலவரையறை: அண்மைப் பாதிப்புக்கும் இப்போதைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி, நோயாளியின் வயது, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஆபத்து  ஆகிய வாத நோய் திரும்பவும் ஏற்படக்கூடிய பல காரணிகளைப் பொறுத்து இரண்டாம் கட்டத் தடுப்பு அமைகிறது. தனிநபருக்கு ஏற்ப காலவரையறை தேவைப்படும். சில பொதுவான கொள்கைகள் வருமாறு:

 • முந்திய பாதிப்பில் இதய அழற்சி இல்லை என்றால் கடைசிப் பாதிப்பில் இருந்து குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தடுப்பு சிகிச்சை அளிக்க வேண்டும். குறைந்த பட்சம் 18 வயது வரை; ஆபத்து காரணிகளைப் பொறுத்து அதற்கு மேலும் தேவைப்படும்.
 • முதல் பாதிப்பில் இதயம் பாதிக்கப்பட்டால் குறைந்த பட்சம் 25 வயது வரையும் சூழல் மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து அதற்கு மேலும் அளிக்க வேண்டும்.
 • நீடித்த அடைப்பிதழ் சார் வாத இதய நோய் இருந்தால் இரண்டாம் கட்ட தடுப்பு நீடித்த காலங்களுக்கு, சில சமயம் வாழ்க்கை முழுதும், பரிந்துரைக்கப்படும்.
 • கர்ப்ப காலத்திலும் நுண்ணுயிர்க் கொல்லி தடுப்பு சிகிச்சையை பென்சிலின் அல்லது எரித்ரோமைசின் கொண்டு தொடர வேண்டும் (சல்போனாமைட் கருவுக்கு ஆபத்து உருவாக்கலாம்).

மூன்றாம் கட்டத் தடுப்பு: மூன்றாவது கட்டத்தில், ஊனம் அல்லது அகால மரணத்தைத் தடுக்க, அறுவை அல்லது இதய செயலிழப்பைக் கையாளவும்  அடைப்பிதழ் சீரமைப்பிற்காகவும் பலூன் ஈரிதழ் அடைப்பு செப்பனிடல் சிகிச்சை அல்லது ஈரிதழ் பிணைப்பு நீக்கல் அறுவை அல்லது அடைப்பிதழ் மாற்று சிகிச்சை அளிக்கப்படும். வளரும் நாடுகளில், செயற்கை அடைப்பிதழ்களின் அதிக விலை, அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இன்மை அல்லது குறைபாட்டால் , வாத இதய நோயாளிகளுக்கு அடைப்பிதழ் அறுவை வழங்குவது தடைபடுகிறது.

ஜெய் விக்யான் செயல்முறைத் திட்டம்: இந்தியாவில் வாதநோயையும் வாத இதய நோயையும் சமுதாய அளவில் கட்டுப்படுத்த ஜெய் விக்யான் செயல் முறைத் திட்டம், புது தில்லி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் 2000-2010-ல் நடை முறைப்படுத்தப்பட்டது.  2015-ல் வெளியிடப்பட்ட இந்தத் திட்டத்தின் அறிக்கை, நோய்த் தடுப்பிலும் கட்டுப்பாட்டிலும் பங்குபெறும்  வல்லுநர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழிகாட்டி ஆகும்*.

குறிப்புகள்:

 apps.who.int/medicinedocs/en/d/Js2252e/3.2.1.html

apps.who.int/medicinedocs/en/d/Js2252e/3.2.2.html

*www.icmr.nic.in/final

 

 • PUBLISHED DATE : Sep 25, 2017
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Sep 25, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.