குழந்தையைத் தவறாக நடத்துதல்

18 வயதுக்கு உட்பட்ட குழந்தையைப் பெற்றோர், கவனிப்போர் அல்லது காப்பாளர் பொறுப்பை வகிக்கும் இன்னொருவர் (எ-டு. மதகுரு, பயிற்சியாளர், ஆசிரியர்) தவறான முறையில் நடத்துதலே குழந்தை துர்ப்பிரயோகம் என அழைக்கப்படும். ஒரு குழந்தையின் ஆரோக்கியம், உயிர்வாழ்க்கை, வளர்ச்சி அல்லது கண்ணியம் ஆகியவற்றைப் பாதிக்கும் வகையில்  ஒரு பொறுப்பு, நம்பிக்கை அல்லது அதிகார உறவின் சூழலில் செய்யப்படும் அனைத்து வகையான உடல் மற்றும்/அல்லது உள துர்நடத்தை, பாலியல் துர்ப்பிரயோகம், ஒதுக்கம், அக்கறையின்மை மற்றும் வணிக அல்லது பிற சுரண்டல் யாவும் குழந்தையைத் தவறாக நடத்துதல் என வரையறுக்கப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. குழந்தையைத் தவறாக நடத்துதல் பின் வருமாறு வேறுபடுத்திக் காணப்படும்:

உடலியல் துர்ப்பிரயோகம்: தாக்குதல், அடித்தல், உலுக்குதல், கடித்தல், வடுவுண்டாக்குதல், சூடுவைத்தல், உதைத்தல், நஞ்சூட்டுதல் மற்றும் மூச்சைத்திணறடித்தல் ஆகியவற்றின் மூலம் குழந்தைக்கு வேண்டும் என்றே உடலியல் காயத்தை உண்டாக்குதல்.

பாலியல் துர்ப்பிரயோகம்: ஒரு குழந்தையைப் பால்வினையில் ஈடுபடுத்துதல்.  இதில், தடவுதல், வன்புணர்ச்சி, மற்றும் பிற பால்வினைகளுக்குக் குழந்தையை உட்படுத்துதல்.

உணர்வு மற்றும் உளவியல் துர்ப்பிரயோகம்: ஒரு குழந்தையின் சுய மேன்மைக்கு அல்லது உணர்வு நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நடத்தை. உ-ம். பட்டப்பெயர் கூறுதல், அவமானப்படுத்தல், புறக்கணித்தல், அன்புகாட்டாமல் இருத்தல் மற்றும் மிரட்டல்.

புறக்கணிப்பு: குழந்தையின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் இருப்பது. உறைவிடம், உணவு, ஆடை, கல்வி, மருத்துவம் ஆகியவை இத்தேவைகளில் அடங்கும்.

குழந்தைகளைத் தவறான முறையில் நடத்துதல் ஓர் உலகப் பிரச்சினை. இது நீண்ட கால விளைவுகளைக் கொண்ட தீவிரப் பிரச்சினை. 20% பெண்களும் 5-10 % ஆண்களும் குழந்தையாக இருக்கும் போது பாலியல் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டதாக உலக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அனைத்துக் குழந்தைகளிலும் 25-50 % உடலியல் துர்ப்பிரயோகம் அடைந்துள்ளனர்.  மேலும் பல குழந்தைகள் உணர்வியலாகவும் புறக்கணிப்பாலும் தவறாக நடத்தப் படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 15 வயதுக்கு உட்பட்ட 41000 குழந்தைகள் கொல்லப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது (உ.சு.நி).

அதி மக்கள் தொகை அடர்த்தி, வறுமை, கல்வியறிவின்மை, சாதி அமைப்பு, நிலம் இன்மை, பொருளாதார வாய்ப்புக் குறைவு, நகர்ப்புற நகர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம், அரசியல் நிலைத்தன்மை இன்மை, சட்டங்களை நிறைவேற்றுவதில் பலவீனம் ஆகியவற்றால் குழந்தை உழைப்பு மற்றும் குழந்தைகளின் பாலியல் துர்ப்பிரயோகம் அதிகமாக உள்ளது.

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 18 வயதுக்கும் குறைந்த சிறார்களின் எண்ணிக்கை 47 கோடி ஆகும். இது இந்திய மக்கள் தொகையில் 41 விழுக்காடு. பல நாடுகளைப் போன்றே இந்தியாவிலும் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்தும் நிலை அதிக அளவில் காணப்படுகிறது. அதன் முழுப் பரிமாணத்தையும் சிக்கல்களையும் புரிந்து கொள்ளுவது அவசியம். இந்திய அரசின் பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாட்டு அமைச்சகம் குழந்தைகள் துர்ப்பிரயோகம்: இந்தியா 2005* என்ற ஆய்வை நடத்தியது. இதில் உடலியல் துர்ப்பிரயோகம் 69%, பாலியல் துர்ப்பிரயோகம் 53% மற்றும் உணர்வியல் துர்ப்பிரயோகம் 48% என கண்டறியப்பட்டுள்ளது.

(*குழந்தை துர்ப்பிரயோகம்: உடலியல் துர்ப்பிரயோகம், பாலியல் துர்ப்பிரயோகம் மற்றும் உணர்வியல் துர்ப்பிரயோகம் மற்றும் ஐந்து வெவ்வேறு சான்றாதாரக் குழுக்களில் பெண்குழந்தை புறக்கணிப்பு – குடும்பச்சூழலில் குழந்தை, பள்ளியில் குழந்தை, தெருக்குழந்தைகள் மற்றும் நிறுவனங்களில் குழந்தைகள்).

குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளின் அளவும் தாக்கமும் இப்போது தெளிவாகத் தெரிய வருவதால், குழந்தைகளுக்குச் சிறந்த முறையிலான தடுப்பும் பாதுகாப்பும் பெறுவது எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத அவர்களின் உரிமையாகும்.

குறிப்புகள்:

www.who.int/mediacentre/factsheets/fs150/en/

www.cdc.gov/violenceprevention/pdf/understanding

apps.who.int/iris/bitstream/10665/43499/1/9241594365

www.who.int/violence_injury_prevention/violence/child/en/

*www.childlineindia.org.in/pdf/MWCD-Child-Abuse-Report.

துர்ப்பிரயோகத்தின் வகையைப் பொறுத்து குறிப்பிட்ட அறிகுறிகள் காணப்படும். அவை வேறுபடும். அறிகுறிகள் உடல்சார்ந்த்தாகவும் உளம் சார்ந்ததாகவும் அல்லது இரண்டுமாகவும் இருக்கலாம்.

உடலியல் குறிகள்:

 • முகம், தொண்டை, மேல் புயம், தொடை அல்லது கீழ்முதுகில் அசாதாரண வகை அல்லது வடிவத்துடன் இனம்புரியாத கீறல்கள்.
 • இனம்புரியாத தீக்காயங்கள், சிகரெட் தீக்காயம், குறிப்பாக உள்ளங்கை, உள்ளங்கால், வயிறு, தொடையில் தீப்புண்; மூழ்கடித்த வெந்நீர்க் காயம், தொடையிலும் பிறப்புறுப்பிலும் “பணியார” வடிவ காயம்.
 • சிகிச்சை தாமதாமான பழுத்த புண், வீட்டு சாமான்கள் வடிவத்திலான தீப்புண்கள்.
 • பாலியல் துர்ப்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பிள்ளைகள்:
 • சிலரிடம் இருந்து விலகி நிற்றல்
 • வயதுக்குப் பொருந்தாத பாலியல் நடத்தை
 • உடலியல் குறிகள்

வயதுக்கு மேற்பட்ட நடத்தை உள்ள குழந்தைகளும், உடல் மற்றும் கல்வி  ஊனங்கள் இல்லாத போதும்  ஒத்த வயதுடைய குழந்தைகளை விட மெதுவாக செயல்படும் குழந்தைகளும் கவனத்துக்கு உரியவர்கள்.

உடலியல் குறிகளுடன் சில பொதுவான அறிகுறிகளும் காணப்படலாம்:

ஒதுங்கி இருத்தல், அசாதாரண நடத்தை, மன உளைச்சல், மனச்சோர்வு,  உறக்கப் பிரச்சினை, உண்ணும் கோளாறுகள், படுக்கையில் சிறுநீர்,  ஆடையை அழுக்காக்குதல், ஆபத்தான செயலில் ஈடுபடுதல், பள்ளிக்குச் செல்லாமை, உண்ணும் பழக்கத்தில் மாற்றம், ஆட்டிப்படைக்கும் நடத்தை, பயங்கரக் கனவுகள், மருந்து மற்றும் மதுப்பழக்கம்.

குறிப்புகள்:

www.nspcc.org.uk/preventing-abuse/signs-symptoms

www.webmd.com/parenting/tc/child-maltreatment

துர்ப்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பைச் சில காரணிகள் அதிகரிக்கும். இந்தக் காரணிகள் இருப்பதால் மட்டுமே துர்ப்பிரயோகம் நடக்கும் என்பதில்லை.

பழிவாங்கப்படுவதற்கான ஆபத்துக் காரணிகள்:

·         4 வயதுக்குக் குறைந்த குழந்தைகளும் இளம் பிள்ளைகளும்

·         விரும்பப்படாத அல்லது பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத குழந்தைகள்.

·         பராமரிப்பவருக்கு அதிகப் பளுவை அளிக்கும் தனித் தேவைகள் (எ-டு: ஊனம், மனக்கோளாறு, நீடித்த நோய்கள்).

தவறாக நடந்துகொள்ள வைக்கும் ஆபத்துக் காரணிகள்:

தனிப்பட்ட ஆபத்துக் காரணிகள்: பெற்றோர் அல்லது பராமறிப்பாளர்

 • குழந்தைகளைத் தவறாக நடத்த பல பெற்றோர் அல்லது கவனிப்பாளரின் இயல்புகள்  ஆபத்துக்காரணிகளாக அமையும். அவற்றில் அடங்குவன:
 • குழந்தையாக இருக்கும்போது அவர்களும் தவறாக நடத்தப்பட்டு இருக்கலாம்.
 • மது அல்லது போதைப்பொருள் தவறாகப் பயன்படுத்தல், குறிப்பாக கர்ப்பத்தின்போது.
 • மனச்சோர்வு அல்லது காயத்துக்குப் பின்னான கோளாறுகள் போன்ற உடல் நோய்கள்.
 • குற்ற செயல்களில் ஈடுபடுதல்.
 • குழந்தைகளின் தேவைகள், குழந்தை வளர்ச்சி, வளர்ப்புத் திறன்களில் பெற்றோருக்குப் புரிதல் இல்லாமை.
 • ·பெற்றோரின் இளம் வயது, குறைந்த கல்வி, தனி தந்தை/தாய், அதிகக் குழந்தைகள், குறைந்த வருமானம்.
 • ·வீட்டில் இரத்த உறவற்ற, தற்காலிக பராமரிப்பாளர் இருத்தல் (எ-டு: தாயின் ஆண் இணையர்).

குடும்பச் சூழல்: குடும்பத்துக்குள் அல்லது நெருங்கிய இணையர், நண்பர் மற்றும் சரிவயதுடையோருக்கு இடையில் உறவுநிலை சரி இல்லாமல் இருத்தல் குழந்தைகளைத் தவறான முறையில் நடத்த வழிவகுக்கலாம். இவற்றில் அடங்குவன:

 • குடும்ப உறுப்பினர் ஒருவரின் உடல் வளர்ச்சி அல்லது மன நலப் பிரச்சினைகள்.
 • உறுப்பினர்களுக்கு இடையில் வன்முறையால் குடும்பம் உடைதல்.
 • சமுதாயத்தில் தனிமையுறல் அல்லது ஆதரவு இன்மை
 • கூட்டுக் குடும்ப அமைப்பில் குழந்தை வளர்ப்பில் ஆதரவு இன்மை.

சமுதாய மற்றும் சமூகக் காரணிகள்: இவற்றில் அடங்குவன

 • பால் மற்றும் சமூக சமத்துவம் இன்மை
 • குடும்பம் அல்லது நிறுவனங்களை ஆதரிக்க போதுமான வீடு அல்லது சேவைக்குறைபாடு.
 • அதிக அளவில் வேலையின்மை அல்லது வறுமை.
 • எளிதாக மது அல்லது போதைப்பொருள் கிடைத்தல்.
 • சமுதாய வன்முறை மற்றும் அயலாருக்கிடையில் பலவீனமான சமூகத் தொடர்புகள்.
 • வன்முறை, கடும் தண்டனை, கடும்பால் வேறுபாடு அல்லது பெற்றோர்-குழந்தை உறவில் குழந்தையின் அந்தஸ்தைக் குறைத்தல் போன்ற சமூக மற்றும் கலாச்சார விதிகள்.

குறிப்புகள்:

 www.who.int/mediacentre/factsheets/fs150/en

www.cdc.gov/violenceprevention/childmaltreatment

குழந்தை துர்ப்பிரயோகம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் காயம் ஏற்படக் காரணமான நிகழ்வின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும். குழந்தையின் ஆடை முற்றிலுமாகக் களையப்பட்டு உடல் முழுவதும் குறிப்பாக ஆசனவாய்-பிறப்புறுப்புப் பகுதி பரிசோதனைச் செய்யப்பட வேண்டும். வளர்ச்சி அளவீடுகளுக்கு ஏற்ப  அளக்கப்பட வேண்டும். கீழ்க்காணுபவை காணப்பட்டால் குழந்தை தவறாக நடத்தப்பட்டது என சந்தேகிக்கலாம்:

 • காயம் விபத்தால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என்றால், குறிப்பாக குழந்தையின் வயதைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது.
 • காயம் பட்டதை யாரும் பார்க்கவில்லை என்று பெற்றோர் அல்லது பராமரிப்பாளர் கூறினால்.
 • ஏற்கெனவே ஒரே போல் காயமோ புறக்கணிப்போ நிகழ்ந்திருந்தால்.
 • மருத்துவ ஆலோசனையை ஏற்கப் பெற்றோரோ பராமரிப்பாளரோ தயாராக இல்லை என்றால்.
 • பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்  சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை என்றால் அல்லது விளக்கம் மாறுபட்டுக் கொண்டிருந்தால்.
 • மருத்துவர் பாலியல் துர்ப்பிரயோக அறிகுறிகளைக் கண்டால்.
 • பின் வரும் சோதனைகள் காயத்தின் வகையைக் காட்டும்:
 • இரத்தப் போக்குக் கோளாறு அல்லது உறுப்புச் சிதைவைக் கண்டறிய இரத்தப் பரிசோதனை.
 • கண் பரிசோதனை.
 • தோல், முடி, திரவ மாதிரிகளில் சிறப்புப் பரிசோதனை.
 • தலை உட்பட அனைத்து எலும்பு எக்ஸ்-கதிர் சோதனை.
 • அல்ட்ராசோனாகிராபி
 • எம்.ஆர்.ஐ அல்லது சி.டி.ஸ்கேன்

குறிப்புகள்:

www.webmd.com/parenting/tc/child-maltreatment

www.aafp.org/afp/2007/0115/p221.html

குழந்தை துர்ப்பிரயோகம் நிகழ்ந்துள்ளது என சந்தேகப்பட்டால் உடனடியாக சம்பந்தப் பட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

ஆரம்ப கட்டத்திலேயே குழந்தை துர்ப்பிரயோகத்தைக் கண்டறிந்து தலையிட்டால் தொடர் வன்முறையைத் தடுத்து நீண்ட கால ஆரோக்கியம் மற்றும் சமூக விளைவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

உள்நோயாளியாக அல்லது வெளிநோயாளியாக சிகிச்சை மற்றும் மருத்துவர், சமூகப் பணியாளர் மற்றும் குழந்தைப் பாதுகாப்பு சேவை மூலம் தொடர் கண்காணிப்பு ஆகியவை மருத்துவ சிகிச்சையில் அடங்கும்.

குறிப்புகள்:

www.childlineindia.org.in/pdf/MWCD-Child-Abuse-Report

www.aafp.org/afp/2007/0115/p221.html

குழந்தை துர்ப்பிரயோகத்தின் விளைவுகள்:

குழந்தை துர்ப்பிரயோகம் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் துன்பம் தருவதோடு நீண்ட கால விளைவுகளையும் உருவாக்கும். பெரியவர்களைப் போலவே தவறான முறையில் நடத்தப்படும் குழந்தைகளுக்கும் பின் வரும் உடல் மற்றும் மன ஆரோக்கியப் பிரச்சினைகள் ஏற்படலாம்:

 • வன்முறை பாதிப்பு
 • மனச்சோர்வு
 • புகைத்தல்
 • உடல்பருமன்
 • அதிக ஆபத்தான பால்வினை நடத்தைகள்
 • எதிர்பாராத கர்ப்பம்
 • மது போதை தவறான பயன்பாடு

இந்த நடத்தைகளும், மன நல பாதிப்பும் இதய நோய், புற்று, தற்கொலை, பால்வினை நோய்கள் போன்ற பின் விளைவுகளையும் தனிப்பட்ட மற்றும் சமூகத் தாக்கங்களையும் ஏற்படுத்தும்.

குறிப்பு:

www.who.int/mediacentre/factsheets/fs150/en/:

குழந்தை துர்ப்பிரயோகமும் புறக்கணிப்பும் நாட்டின் மிகவும் தீவிரமான அக்கறைக்கு உரியவை. குழந்தை துர்ப்பிரயோகம் நிகழும் முன் அதைத் தடுப்பதே முடிவான நோக்கமாகும். குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் பாதுகாப்பான, நிலையான, வளரும் உறவுகளையும்  (SSNRs) சூழல்களையும் உருவாக்கும் உத்திகளே தவறான நடத்தல்கள் மற்றும் தீங்களிக்கும் குழந்தைப் பருவ அனுபவங்களை தவிர்க்கும் முக்கிய காரணிகள் ஆகும். இருப்பினும், குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சமுதாயம்,பள்ளிகள் மற்றும் நிறுவனங்களே பொறுப்பு. குழந்தைத் துர்ப்பிரயோகத்தைத் தடுக்கும் உத்திகளில் பல கூறுகள் கொண்ட நடவடிக்கைகள் அடங்கும்.

குழந்தைகளுக்கான பாதுகாப்புக் காரணிகள்:

·         தவாறான முறையில் நடத்தப்படுவதைக் குறித்த உணர்வை குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். குடும்பமும் பள்ளியும் பாலியல் துர்ப்பிரயோகத்தைக் குறித்தப் பின்வருபவற்றைப் போதிக்க வேண்டும்.

o   உடல் உடைமை

o   நல்ல முறையிலும் தவறான முறையிலும் தொடும் வேறுபாடு

o   துர்ப்பிரயோகத்துக்கான சூழலை எவ்வாறு அறிவது

o   இல்லை என்று எவ்வாறு கூறுவது

o   உள்ளுக்குள் வைத்துக் கொள்ளாமல் துர்ப்பிரயோகத்தைப் பெரியவரிடம் எவ்வாறு கூறுவது.

·         ஒவ்வொரு இந்திய குழந்தைகளுக்கும் சம்பந்தப்பட்டப் பெரியவர்களுக்கும் உதவி தொலைபேசி எண் சைல்ட்லைன் அழைப்பு-1098 பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல்.

·         பாதுகாப்பானவலைத்தளம்: வலைத்தளமும், சமூக வலைதளங்களும் கல்வி, தொடர்பு, ஒன்றுசேர்தல் பற்றிய அளப்பரிய வாய்ப்புகளைக் குழந்தைகளுக்கு  அளிக்கின்றன. ஆயினும் அவை வன்முறைக்கும் துர்ப்பிரயோகத்துக்கும் இடமளித்து பாதுகாப்புக்கு எதிரான சவால்களையும் கொண்டு வருகின்றன. ஐக்கிய நாடுகள் அமைப்பின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் #பாதுகாப்பான வலைத்தள பிரசாரத்தின் மூலம் சிறுவர்களுக்குப் பாதுகாப்பாக வலைத்தளத்தைப் பயன்படுத்த உதவுகிறது.

 • இணைப்புக் கல்வி, இரவுக் கூடாரம் மற்றும் தொழிற்பயிற்சிகள் மூலம் தெருக்குழந்தைகளுக்கு சேவைகளை வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களைத் தெருவில் இருந்து அகற்றுவதால் ஆபத்தைக் குறைக்கலாம்.

குடும்பப் பாதுகாப்புக் காரணிகள்:

 • சிறந்த தொடர்புத்திறன், தகுந்த ஒழுக்கம், குழந்தைகளின் உடல் உணர்வுத் தேவைகளை சந்தித்தல் ஆகிய நல்ல பெற்றோர் திறமைகளை போதித்து பெற்றோர்-குழந்தை உறவைப் பேணுதல்.
 • நிலைத்தக் குடும்ப உறவுகள்
 • பெற்றோர் வேலைவாய்ப்பு
 • போதுமான வீட்டுவசதி
 • சுகாதாரப் பராமரிப்பையும் சமூகச் சேவைகளையும் பெறுதல்- செவிலியர்கள் வீடுகளுக்குச் சென்று பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு ஆதரவு, கல்வி மற்றும் தகவலை வழங்குதல்.

சமுதாயப் பாதுகாப்புக் காரணிகள்:

 • சமுதாயம் பெற்றோர்களை ஆதரித்து, துர்பிரயோகத்தைத் தடுக்கவும், பாலியல் சமத்துவத்தைப் பேணவும், குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அவர்களது பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
 •  பெற்றோர், கிராம மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், சமூக சேவையாளர்கள் மற்றும் பொறுப்பான பொதுமக்கள் அடங்கிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
 • இத்துறையில் ஏற்கெனவே பணியாற்றுவோரின் திறமை மற்றும் திறனை மேம்படுத்த வேண்டும்.
 • பள்ளிகளில் உடல் ஒறுப்பு தண்டனைகளைத் தடுத்தல், குழந்தை பாலியல் துர்ப்பிரயோகத்தைத் தடுத்தல் போன்ற குழந்தைகளைத் தவறாக நடத்தும் திட்டங்களை அமுல்படுத்தல்.

குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு தேசிய ஆணையம் (NCPCR): 0-18 வயதுள்ள அனைத்துக் குழந்தைகளின் உரிமையையும் அடிப்படையாகக் கொண்ட தேசிய  கொளகைகள் மற்றும் திட்டங்களுக்குள் அடங்கும் கண்ணோட்டத்தைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தின்  (MWCD) நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உருவாக்க இந்திய அரசு சிந்திக்கின்றது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் (ICPS) – இது மைய அரசால் தொடங்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகத்தின் திட்டம் ஆகும். மேம்பட்ட விதிமுறைகளுடன் தற்போது நடைமுறையில் இருக்கும் பல்வேறு குழந்தைகள் பாதுகாப்பு திட்டங்களை ஒரே அமைப்பின் கொண்டு வருவதே இதன் நோக்கம். குழந்தைகளின் உரிமைகளையும் அவர்களின் சிறப்பான நன்மைகளையும்  பாதுகாத்தல் என்ற மையக் கொள்கைகளை இது அடிப்படையாகக் கொண்டது.

குறிப்புகள்:

www.childlineindia.org.in/pdf/MWCD-Child-Abuse-Report.

www.who.int/mediacentre/factsheets/fs150/en/

www.cdc.gov/violenceprevention/pdf/understanding

www.unicef.in/staysafeonline/

 • PUBLISHED DATE : Mar 01, 2017
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 01, 2017

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.