Endometriosis.png

இடமகல் கருப்பை உட்படலம்

கருப்பைக்கு உள் இருப்பது போன்ற உயிரணுக்கள் கருப்பைக்கு வெளியே இயல்புக்கு மாறாக வளர்வதே இடமகல் கருப்பை உட்படலம் என்று அழைக்கப்படுகிறது. கருப்பைக்குழாய்கள், கருப்பைகள், சிறுநீர்ப்பை, குடல், பிறப்புறுப்புப்பாதை, மலக்குடல் ஆகிய எங்கும் அவை வளரலாம்.

கருப்பைக் குழியில் கருப்பையகப்படல உயிரணுக்கள் வரிசையாக உள்ளன. அவை பெண் இயக்குநீர்களின் ஆதிக்கத்தில் இருக்கின்றன. கருப்பைக்கு வெளியில் இருக்கும் கருப்பையகப்படல உயிரணுக்களைப் போன்ற உயிரணுக்களும் இயக்குநீர் மாற்றங்களால் பாதிக்கப்படுகின்றன. அவையும் கருப்பைக்குள் இருக்கும் உயிரணுக்களைப் போன்றே பதில்வினையாற்றுகின்றன. பெரும்பாலும் மாதவிடாய் சுழற்சியின் பாதிப்பு மோசமடைகிறது. இந்த “இடமகன்ற” திசுக்கள் வலி, மலட்டுத்தன்மை, அதிக மாதவிடாய் ஆகியவற்றை உண்டாக்குகின்றன. வலி பெரும்பாலும் வயிறு, கீழ் முதுகு அல்லது இடுப்புப் பகுதியில் இருக்கும். இது குணப்படுத்த முடியாதது. ஆனால், மருந்துகள், இயக்குநீர் சிகிச்சை, அறுவை போன்று பல வகைகளில் மருத்துவம் அளிக்கலாம்.

குறிப்புகள்: www.nlm.nih.gov
www.womenhealth.gov
www.nhs.uk

தொடர் இடுப்பு வலியே இடமகல் கருப்பை உட்படலத்தின் முக்கிய அறிகுறி:

 • இடுப்பின் இருபுறம், கீழ்முதுகு, மலக்குடல் பகுதிகளிலும், உடலுறவின் போதும் பின்னும் வலி ஏற்படலாம்
 • குடல் வலி
 • மாதவிடாய் காலத்தில் மலம்/சிறுநீர் கழிக்கும் போது வலி
 • மாதாவிடாயின் இடைப்பட்ட காலத்தில் இரத்தப்போக்கு
 • மலட்டுத்தன்மை
 • களைப்பு
 • வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அல்லது குமட்டல், குறிப்பாக மாதவிடாய்க் காலங்களில்

குறிப்பு: www.womenhealth.gov

பின் போக்கு மாதவிடாய்: கருப்பைக்கு வெளியே கருப்பையகப்படல உயிரணுக்கள் வளருவது பற்றிய அறிவியற்கொள்கைகளில் பின்போக்கு மாதவிடாய்க் கொள்கையே (பதிய அல்லது மறுபதியக் கொள்கை) பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி, மாதவிடாய் நிகழும்போது சில சிதைவுகள் கருமுட்டைக்குழாய்கள் வழியாகக் கருப்பையை விட்டு வெளியேறி வயிற்றின் உட்பகுதியில் இணைந்து கொள்ளுகின்றன. அங்கிருந்து கருப்பையகப்படல திசுக்களாக ஊடுறுவுகின்றன.

சூழலியல் காரணிகள்: உடலையும் அதன் நோய்த்தடுப்பு மண்டலத்தையும் பாதிக்கும் சுற்றுப்புறச்சூழலில் உள்ள டையாக்சின் (வேதியற் துணைப்பொருள்) போன்ற நச்சுப்பொருட்கள் இன்னொரு காரணமாகும்.

பிறவிக் காரணிகள்; மரபணுக்கள் மூலம் பிறப்பு அடிப்படையிலும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் உருவாவதாக சில சமயம் நம்பப்படுகிறது. இது காக்காசியப் பெண்களை விட ஆசியப் பெண்களிடம் அதிகம் காணப்படுகிறது. இதனால் மரபணுக்களும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இரத்த ஓட்டம் அல்லது நிணநீர் மண்டலம் மூலமாகவும் இது பரவலாம்: கருப்பை அகப்படல உயிரணுக்கள் இரத்த ஓட்டத்திலும் நிணநீர் மண்டலத்துக்குள்ளும் (தொற்று நோய்க்கு எதிரான உடலின் காப்பு மண்டலத்தின் ஒரு பகுதியான குழாய்கள், சுரப்பிகள் மற்றும் உறுப்புகள்) புகுவதாக நம்பப்படுகிறது. அபூர்வமாக இவ்வுயிரணுக்கள் கண்களிலும் மூளையிலும் காணப்படுவதற்கான காரணத்தை இக்கொள்கை விளக்குகிறது.

குறிப்புகள்www.nhs.uk
 

மருத்துவ வரலாற்றையும், உடல் பரிசோதனையையும் கொண்டு மருத்துவர் இடமகல் கருப்பை அகப்படலக் கோளாறைக் கண்டறிகிறார்.

அகநோக்கல் அறுவை: வயிற்றின் உட்பகுதியை ஒரு புகைப்படக் கருவியால் நோக்கும் அறுவை சிகிச்சை முறையே நோய்கண்டறிதலில் சிறந்த ஒன்றாகும். எனினும் இதில் அறுவைசிகிச்சை முறை கையாளப்படுவதால் பெரும்பாலான பெண்ணோயியல் நடைமுறைகளில் இது வழக்கிழந்து போய்விட்டது.

கேளா ஒலி: கருப்பை உட்படல உயிரணுக்களால் உண்டான கருப்பைக் கட்டிகள் உள்ளனவா என்று இதன் மூலம் அறியப்படுகிறது.

பிறப்புறுப்புப் பாதை கேளா ஒலி சோதனையில் ஒரு கோல் வடிவ வருடி பிறப்புறுப்புப் பாதையில் செலுத்தப்படுகிறது.

இடுப்புப் பகுதியில் கேளா ஒலி சோதனை செய்யும் போது வருடி வயிற்றுக்கு மேலாக நகர்த்தப்படுகிறது.

இரு சோதனைகளிலும் ஒலி அலைகளைப் பயன்படுத்தி பிறப்புறுப்புகளின் பிம்பம் உண்டாக்கப்படுகிறது.

காந்த அதிர்வு பிம்பம் (எம்.ஆர்.ஐ): இதன் மூலம் உடலின் உட்பகுதியின் பிம்பம் உருவாக்கப்படுகிறது.

ஆரோக்கியத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள தேசிய சுகாதார இணைய தளம் குறிப்பான தகவல்களைத் தருகிறது. நோய்கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் மருத்துவரையே அணுக வேண்டும்.

குறிப்புகள்www.womenhealth.gov
www.nhs.uk

இடமகல் கருப்பை உட்படலக் கோளாறின் முக்கிய சிக்கல்கள்:

 • கர்ப்பம் அடைவதில் கடினமும் கர்ப்பமே அடைய முடியாத நிலையும் (மலட்டுத்தன்மை)
 • சில நோயாளிகளுக்கு ஒட்டிட இழைத்திசுக்கள் அல்லது முட்டைப்பைக் கட்டிகளும் உருவாகலாம்.

குறிப்புகள்www.nhs.uk

 

இடமகல் கருப்பை உட்படல கோளாறைக் குணப்படுத்த முடியாது என்றாலும் நோய் பாதிப்பைக் குறைக்க முடியும்:

வலி மருந்துகள்: குறைவான அறிகுறிகள் கொண்ட பெண்களுக்குக் கடைகளில் கிடைக்கும் வலி மருந்துகளையே மருத்துவர் பரிந்துரை செய்வார். இபூபுரூபன் (அட்வில் & மோட்ரின்) அல்லது நெப்ரோக்சன் (அலிவ்) போன்றவை இதில் அடங்கும். இம்மருந்துகளால் பலன் கிடைக்காவிட்டால் மருத்துவர் வலிமையான வலி நிவரணிகளைப் பரிந்துரைப்பார்.

இயக்குநீர் சிகிச்சை: வலி மருந்துகளினால் பலன் இல்லை என்றால் இயக்குநீர் மருந்துகள் பரிந்துரைக்கப்படும். குழந்தைப் பேறு வேண்டாம் என்று விரும்பும் பெண்களே இம்மருந்துகளைப் பயன்படுத்த முடியும். இயக்குநீர்கள் ப்ரோகெஸ்டின்ஸ் டேனாசோல் (Progestins Danazol) போன்று மாத்திரைகளாகவும் ஊசிமருந்துகளாகவும் பல வடிவங்களில் கிடைக்கும்.

அறுவை மருத்துவம்: கடுமையான நோய் உள்ளவர்களுக்கு அறுவை மருத்துவமே சிறந்த தேர்வு. கீழ் வருவனவற்றில் ஒன்றை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்:

அகநோக்கல் அறுவை: இதன் மூலம் இடமகல் கருப்பை உட்படலக் கோளாறு கண்டறியப்பட்டு மருத்துவம் செய்யப்படுகிறது. வளர்ச்சிகளும் வடுதிசுக்களும் அகற்ற அல்லது எரிக்கப்படுகின்றன. இதன் நோக்கம் ஆரோக்கியமான திசுக்களை அழிக்காமல் நோய்க்கு சிகிச்சை அளிப்பதே.

அடிவயிற்று அறுவை: அகநோக்கல் அறுவையை விட இதில் பெரியதாக வெட்டப்படும். இதன் மூலம் மருத்துவரால் இடுப்பு அல்லது வயிற்றில் உள்ள வளர்ச்சிகளை அகற்ற முடியும்.

கருப்பையகற்றல் அறுவை: இதன் மூலம் கருப்பை அகற்றப் படுகிறது. திரும்பவும் வராதிருப்பதை உறுதி செய்ய சில சமயம் முட்டைப்பையும் அகற்றப்படும். பிற உறுப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும்போது இது செய்யப்படுகிறது. இதற்குப் பின் ஒரு பெண் கருத்தரிக்க முடியாது. எனவே இந்த சிகிச்சையை இறுதியாகவே வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு மருத்துவரை அணுகவும்.

குறிப்புகள்: www.womenshealth.gov

 • PUBLISHED DATE : Apr 22, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.