தீக்காயங்கள்

தீக்காயங்கள் ஒரு கடுமையான பொது சுகாதாரப் பிரச்சினையாகும். வெப்பம், கதிர்வீச்சு, கதிரியக்கம், மின்சாரம், உராய்வு அல்லது வேதிப்பொருட்கள் ஆகியவற்றால் தோல் அல்லது பிற அங்ககத் திசுக்களுக்கு ஏற்படும் காயமே தீக்காயம் என வரையறுக்கப்படுகிறது.

சூடான திரவம், திடப்பொருள் அல்லது தீயால் தோலின் பல்வேறு செல் அடுக்குகள் சிதைவடைகின்றன. புறவூதாக் கதிர், கதிர்வீச்சு, மின்சாரம் அல்லது வேதிப்பொருட்களால் ஏற்படும் தோல் காயங்களும், புகையை உள்ளிழுப்பதால் ஏற்படும் மூச்சுமண்டல சிதைவுகளும் தீக்காயங்கள் எனக் கருதப்படுகின்றன.

உலகச் சுகாதார நிறுவனப் புள்ளி விவரத்தின் படி உலகம் முழுவதும் தீக்காயத்தால் ஆண்டுதோறும் 265000 மரணங்கள் நிகழுகின்றன. கொதிநீர், மின்னதிர்ச்சி போன்றவற்றால் நிகழும் இறப்புகள் குறித்த புள்ளி விவரங்கள் இதில் அடங்கவில்லை. பெரும்பாலும் மரணங்கள் குறைந்த வருமான நாடுகளில் ஏற்படுகின்றன. குறிப்பாக உ.சு.நி. எல்லைக்குள் அடங்கும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலேயே பாதிப்புகள் அதிகம்.

இந்தியாவில் தீக்காயங்களால் 70 லட்சம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 1.4 லட்சம் இறப்புகளும் 2.4 லட்சம் ஊனங்களும் இதில் அடங்கும். அதிக வருமான நாடுகளில் தீக்காய மரண விகிதம் குறைந்து வருகிறது.

பிற காயங்கள் போல் அல்லாமல் தீக்காய விகிதம் ஆண்-பெண் இரு பாலாருக்கும் ஒன்று போல் உள்ளது. பிற காயங்களில் ஆண்களின் விகிதம் அதிகம். திறந்தவெளி சமையல், பாதுகாப்பற்ற அடுப்புகள், தளர்வான ஆடைகள் ஆகியவையே பெண்களுக்கு ஆபத்து அளிப்பவை. சுய அல்லது நபர்களுக்கு இடையிலான வன்முறையும் தீக்காயங்களுக்குக் காரணமாக உள்ளது.

பெண்களோடு சிறு குழந்தைகளும் தீக்காயங்கள் ஏற்படும் ஆபத்தில் உள்ளவர்கள். தீக்காயம் அடையும் 5 பேரில் நால்வர் பெண்கள் மற்றும் சிறுவர்கள்.

குழந்தைகளுக்கு உண்டாகும் உயிருக்கு ஆபத்தான காயங்களில் தீப்புண் ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. 1-9 வயதுக்குட்பட்ட குழந்தை மரணத்தில் தீப்புண் 11 வது முக்கியக் காரணம் ஆகும். உலக அளவில் தீக்காயங்களால் குழந்தைகளே அதிகமாக மரணம் அடைகின்றன.

நோய்க்குரிய காரணங்களில் தீப்புண் முக்கிய இடத்தை வகிக்கிறது. தப்பிப் பிழைப்பவர்களில் பலர் ஆயுட்கால ஊனங்களாலும், உடல் சிதைவுகளாலும், மன உளைச்சலாலும், அவமானங்களாலும் அல்லல் படுகின்றனர்.

தீக்காயங்கள் தவிர்க்கக் கூடியவையே. அதிக முயற்சியாலும் கவனிப்பாலும் தீக்காய நோய்கள், மரணம் மற்றும் ஊனங்களை வெகுவாகக் குறைக்கலாம்.

தேசிய தீக்காயத் தடுப்பு, மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் திட்டம் (NPPMRBI)  என்பது தீக்காயங்களைத் தடுக்கவும்  பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் மறுவாழ்வு அளிக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளை வலிமைப்படுத்த இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சக சுகாதாரச் சேவைகள் பொது இயக்ககம் மேற்கொள்ளும் ஒரு முன்முயற்சியாகும்.

மேலும் விவரங்களுக்கு-

தீக்காய மேலாண்மைகான நடைமுறை கையேடு, NPPMRBI, MOHFW, GOI

குறிப்புகள்:

www.who.int/violence_injury_prevention

www.who.int/mediacentre/factsheets/fs365/en/

www.who.int/topics/burns/en/

nrhm.gov.in/images/pdf/NPPMBI/Operational_Guidelines

dghs.gov.in/WriteReadData/userfiles/file/Practical_handbook

dghs.gov.in/content/1357_3_NationalProgrammePrevention

 

ஆழத்தைப் பொறுத்துத் தீக்காய அறிகுறிகள் காணப்படும். தீக்காயங்களை மூன்று வகையாகப் பகுக்கலாம்:

முதல்நிலை அல்லது மேலோட்டமான காயங்கள்:  தோலின் மேல் செல்லடுக்கு பாதிக்கப்படுதல். இதனால் சிவப்பும் வலியும் ஏற்படும். கொப்புளம் இருப்பதில்லை. சூரியக் கதிர்வீச்சு, சூடான பொருட்கள், திரவங்கள் அல்லது தீப்பொறி ஆகியவை மூடப்படாதத் தோலின் மேல் படுதலால் இவை ஏற்படுகின்றன. தோல் நிறம், தன்மை அல்லது தடிமனில் எந்தவித நிரந்தரப் பாதிப்பும் இன்றி முதல்நிலைப் புண்கள் ஒரு வாரத்தில் ஆறிவிடும்.

இரண்டாம் நிலை அல்லது பகுதித் தடிப்பு தீப்புண்கள்: ஆழமான தோல் அடுக்குக்குகளைப் பாதிக்கும். அறிகுறிகள் கடுமையாக இருக்கும். பொதுவாகக் கொப்புளங்களும் காணப்படும்.

 • மூன்று வாரங்களில் புண் ஆறும்
 • ஆழமான காயங்கள் ஆற மூன்று வாரங்களுக்கு மேல் ஆகும். மிகைத்தசைவளர்ச்சி வடுக்களும் உருவாகலாம்.

மூன்றாம் நிலை அல்லது முழுத் தடிப்புத் தீப்புண்: அனைத்துத் தோல் அடுக்குகளும் பாதிக்கப்படும். தோல் வெண்மையாகக் காணப்படும்.  ஆரம்பக் கட்டங்களில் வலி இருப்பதில்லை. தோல் அடுக்குகள் வெகுவாக சிதைவடைந்து இருப்பதால் தோல் ஒட்டு சிகிச்சை இன்றி இவை குணமாகா.

உள்ளிழுப்புத் தீப்புண்களின் அறிகுறிகள்-

 • மூடிய இடத்தில் ஏற்பட்டதாக இருக்கும்
 • முகம், கழுத்து, உடலில் ஆழமான தீப்புண்கள்
 • மூக்கு முடி கருகல்
 • கரிகலந்த சளி, வாய்ப்பகுதி மூச்சுக்குழலில் கரித் துகள்கள்
 • குரல் மாற்றம்: கரடுமுரடன ஒலி அல்லது கடுமையான இருமல்

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/10665/43851/1/9789241563574

www.healthline.com/health/burns#Pictures2

www.nhs.uk/conditions/Burns-and-scalds/Pages/Introduction

www.who.int/surgery/publications/Burns_management.pdf

தீப்புண்ணின் காரணங்களை வெப்பம் சார்ந்தது உள்ளிழுப்பு சார்ந்த்து என இரண்டாகப் பிரிக்கலாம்:

வெப்பத் தீப்புண் பின் வருபவற்றால் ஏற்படும்:

 • சூடான திரவம் –சுடு  நீர், எண்ணெய், கொதிக்கும் நீராவி, சூடான உணவு ஆகியவற்றால் ஏற்படுகிறது. குழந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
 • சூடான திடப்பொருள்: குறிப்பாக குழந்தைகளுக்கு தீப்புண்களை உண்டாக்கும். சாம்பல், கரி, தேய்ப்புப்பெட்டி, பற்றவைக்கும் கருவி, சமையல் பாத்திரங்கள், கொள்கலன்கள், மின்குமிழ்கள், வெளியேற்றுக் குழாய்கள் ஆகியவை இவ்வகைத் தீப்புண்களை ஏற்படுத்துபவை.
 • தீப்பிழம்பு: கசியும் வாயுக் குழாய், சிலிண்டர், மண்ணெண்ணெய் அடுப்பு விபத்து, பட்டாசுகள், பந்தல்களில் நெருப்பு பிடித்தல் ஆகியவற்றால் இவ்வகைப் புண்கள் உண்டாகும்.
 • வேதியல் தீப்புண்கள்: இவை வீடுகளில் விபத்தாக நிகழும் (கழிவறை சுத்திகரிப்பான்), அல்லது அமில வீச்சு அல்லது பணியிட விபத்து.
 • மின்சார தீப்புண்:  உறையற்ற மின் கம்பிகளில் சுற்றுத்தடை ஏற்படுவதால் தீப்புண் உண்டாகலாம். வீடுகள், விளையாட்டு மைதானம் அல்லது சாலைகளின் அருகில் செல்லும்  அதி இழுப்புவிசை கொண்ட மின்கம்பிகளால் ஏற்படும்.
 • உள்ளிழுப்புத் தீப்புண்கள்:
 • மிக அதிகமாகச் சூடாக்கப்பட்ட வாயுக்கள். நீராவி, சுடு திரவங்கள் அல்லது முற்றிலும் எரியாத நச்சுப் பொருட்களை சுவாசிப்பதால் இவ்வகைத் தீப்புண்கள் ஏற்படுகின்றன.
 • இவை, மேல் காற்றுப் பாதையில் வெப்பக் காயம், புகைக்கரியினால் காற்றுப்பாதையில் அரிப்பு அல்லது வேதியல் காயங்கள், மூச்சுத்திணறல், மற்றும் கார்பன் மோனாக்சைடு மற்றும் சையனைடு போன்ற பிற வாயுக்களால் நச்சேறல் மற்றும் ஏறத்தாழ 20-30% நேர்வுகளில்  தோல் தீய்தல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.
 • நெருப்பு தொடர்பான புண்களால் ஏற்படும்  மரணத்துக்கு உள்ளிழுப்புத் தீப்புண்களே பொதுவான காரணமாக உள்ளது.

ஆபத்துக் காரணிகள்:

 குறைந்த வருமான நாடுகளில் கிராமப் புற ஏழைகள் மத்தியில் தீப்புண்கள் பரவலாக ஏற்படுகின்றன. கவலை அளிக்கும் சில முக்கியக் காரணிகள் வருமாறு:

 • தரை மட்டத்தில் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தல்: குழந்தைகள் இவற்றில் இடறி கொதிநீர் காயம் ஏற்படும் ஆபத்து உள்ளது.
 • திறந்த வெளி விறகு அடுப்பைப் பயன்படுத்தல்.
 • திறந்த வெளி சமையலின் போது தளர்வான பருத்தி ஆடை அணிதலாலும் பாத்திரங்களைக் கையாள துணிகளைப் பயன்படுத்தும் தவறான முறையாலும்.

பிற ஆபத்துக் காரணிகள்:

 • பணி இடத்தில் நெருப்பால் ஆபத்து
 • வறுமை: நெரிசல் (படுக்கை/சிறுவர் விளையாடும் பகுதி அருகில் கொண்ட சமையலறை உள்ள ஓர் அறை வீடு)
 • புகைத்தல், மதுப்பழக்கம்
 • பாதுகாப்பு அற்ற எரிவாயு/மின்சாரம்
 • வலிப்பு, ஊனம் மற்றும் அறிவுத்திறன் குறைபாடு போன்ற மருத்துவ நிலைகள்.

வீட்டிலும், பணியிடத்திலும் தீப்புண்கள் ஏற்படலாம். சமயலறையில் கொதிநீர், தீப்பிழம்பு அல்லது அடுப்பு வெடிப்பதால் குழந்தைகளும் பெண்களும் காயம் அடைகின்றனர். தீ, கொதிநீர், வேதிப்பொருள், மின்சாரம் ஆகியவற்றால் ஆண்கள் பணியிடங்களில் தீக்காயம் அடைகின்றனர்.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream/10665/43851/1/9789241563574_

www.who.int/mediacentre/factsheets/fs365/en/

apps.who.int/iris/bitstream/10665/97852/1/9789241596299

dghs.gov.in/WriteReadData/userfiles/file/Practical_handbook

emedicine.medscape.com/article/771194-overview

 

முந்திய முழு விவரங்களும் உடல் பரிசோதனையுமே நோய்கண்டறிதலுக்கான முதற் படி.

அ. தீக்காயத்திற்கான காரணத்தையும் நோயாளியின் வயதையும் கேட்டறிய வேண்டும். இதன் மூலம் பின் வருவன போன்று காயத்தின் ஆழ அகலத்தை அறிய அது உதவும்:

 • தீப்பிழம்புக் காயங்கள் பொதுவாக முழு ஆழப்புண்களாக இருக்கும். கொதிநீர்ப் புண்கள் மேலோட்டமானதாக இருக்கலாம். ஆனால் நெய், எண்ணெய் போன்றவற்றால் ஏற்படும் புண்கள் ஆழமாக இருக்கும். வேதியல் மற்றும் மின்சாரத்தால் உண்டாகும் காயங்கள் ஆழமானவை.
 • நோயாளியின் வயது – குழந்தைகளுக்கும் முதியோருக்கும் தோலின் மென்மை காரணமாகக் காயம் ஆழமாக இருக்கும்.

ஆ. பரிசோதனை:  எரிந்த பரப்பு, காயத்தின் ஆழம் மற்றும் பிற காரணங்களைப் பொறுத்து தீப்புண்ணின் கடுமை காணப்படும். எரிந்த பரப்பைப் பொறுத்து நோயும் மரணமும் ஏற்படும். முதியவர்களுக்குச் சிறிய தீப்புண்ணும் மரண ஆபத்தை உருவாக்கக் கூடும்.

முழு உடல் பரப்பும் 100% எனக் கொள்ளப்படுகிறது. எரிந்த பரப்பு சதவிகிதத்தில் (%) கணக்கிடப் படுகிறது. எரிந்த உடல் பரப்பைக் கணக்கிட பல வழிகள் உள்ளன:

 • 9 களின் விதி: பெரியவர்களின் மொத்த எரிந்த உடல்பரப்பைக் (TBSA)  கணக்கிட இது பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது.  உடல் 11 சமமான பகுதிகளாகப் பகுக்கப் படுகிறது. இது ஒட்டுமொத்தமாக 99 விழுக்காடாகும். மீதி 1% கரவிடத்துக்கு (மலவாய்க்கும் அடிவயிற்றிற்கும் இடைப்பட்டப் பகுதி) ஒதுக்கப்படுகிறது. தலைக்கும் ஒவ்வொரு மேல் அவயவங்களுக்கும் 9 %.  ஒவ்வொரு கீழ் அவயவங்கள், உடலின் முன்பகுதி மற்றும் உடலின் பின்பகுதிக்கு 18 %.*
 • பிறந்த குழந்தை மற்றும் சிறுவர்களில் (10 வயதுக்கும் கீழ்) தலை பெரிதாகவும் உடல் சிறியதாகவும் இருக்கும். எனவே 9 களின் விதி பொருந்தாது. இதனால் லண்ட் மற்றும் பிரவ்டர் அட்டவணையைப் பயன்படுத்தலாம்.
 • உள்ளங்கை விதி: மூடிய கை உடல் பரப்பின் 1% ஆகும்.

ஆரம்பத்தில் தீக்காயம் அடைந்தவர்கள் சிக்கல்கள் இன்றி சாதாரணக் காயம் அடைந்தவர்கள் போலவே காணப்படுவார்கள். ஆனால் 5% மேற்பட்ட எந்தக் காயத்தையும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.

கடுமையைப் பொறுத்து தீக்காயங்கள் சிறியவை, மிதமானவை மற்றும் ஆபத்தானவை என வகையறுக்கப்படுகின்றன.

சிறு தீப்புண்கள்:

 • பெரியவர்களில் 15% மற்றும் சிறுவர்களில் 10% -க்கும் குறைவான தீப்புண் (வேதியல், மின்சாரத் தீப்புண்களும் முகம், கை மற்றும் கரவிடப் புண்கள் அல்லாமல்)
 • இவற்றிற்கு வெளிநோயாளி சிகிச்சை அளிக்கலாம்

மிதமான தீப்புண்கள்:

 • பெரியவர்களில் 15-25% மற்றும் சிறுவர்களில் 10-15%-க்கும் குறைவான தீப்புண்கள்.
 • மருத்துவமனை சிகிச்சை தேவைப்படலாம்.

ஆபத்தான தீப்புண்கள்:

 • பெரியவர்களில் 25% மற்றும் சிறுவர்களில் 15% பிறந்த குழந்தைகளில் 5% தீப்புண்கள்.
 • மின்சாரத் தீப்புண்
 • வேதியல் தீப்புண்
 • சுவாசமண்டலப் புண்
 • பிற காயங்களோடு தொடர்புடைய தீப்புண்கள்:

o   எலும்புக் காயம்

o   நெஞ்சுக் காயம்

o   வயிற்றுக் காயம்

o   தலைக்காயம்

குறிப்புகள்:

www.who.int/surgery/publications/Burns_management.pdf

* Practical Handbook of Burns Management, National Programme for Prevention, Management and Rehabilitation of Burn Injuries (NPPMRBI), Ministry of Health and Family Welfare, Government of India; page:15, accessed from- 

dghs.gov.in/WriteReadData/userfiles/file/Practical_handbook

 

தீ விபத்து எப்போதும் எங்கும் மருத்துவ நிபுணர்கள் இல்லாத இடத்திலும் நிகழக் கூடும். பார்த்துக் கொண்டு இருப்பவர்களே முதலுதவியைச் செய்தாக வேண்டும். விபத்து நடந்த இடத்தில் உடனடியாக அளிக்கப்படும் உதவியால் கடுமையான பாதிப்புகளைக் குறைக்கலாம்.

விபத்து நடக்கும் இடத்தில் (முதல் உதவி: குளிர்வி, மூடு, அழை):  அனைத்து வகையான தீக்காயங்களுக்கும் முதல் உதவி செய்வதன் அடிப்படைகள் ஒரே மாதிரியானதுதான். சில குறிப்பிட்ட வகைகளை குறிப்பிட்ட விதமாகக் கையாள வேண்டும்.

வெப்பத் தீப்புண்:

 • தீப்பிடித்த இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரை அகற்ற வேண்டும்.
 • எரிந்த பகுதி மேல் இருக்குமாறு பாதிக்கப்பட்டவரைத் தரையில் படுக்க வைக்க வேண்டும் (பிற பகுதிகளும் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் பாதிக்கப்பட்டவரை உருட்டக் கூடாது என வல்லுநர்கள் உரைக்கின்றனர்). கீழே தரையோடு தரையாகப் படுக்க வைப்பதால் முகம், தலை, முடி ஆகியவையில் பாதிப்பு  ஏற்படாது. மேலும் நெருப்பு உடலைச் சுற்றி பரவாது.
 • தீயை விசிறி விட வாய்ப்பு இருப்பதால் பாதிக்கப்பட்டவரை ஓட விடக் கூடாது.
 • பாதிக்கப்பட்டவர் மயக்கமடைந்தால் அல்லது அவரால் நடக்கமுடியாவிட்டால் தீபற்றிய இடத்தில் இருந்து அவரை இழுத்து அகற்றவும்.
 • நெருப்பு பற்றிய இடத்தில் புகை அதிகமாக இருந்தால் காப்பாற்றுபவர் கீழே தவழ்ந்து செல்ல வேண்டும். இதன் மூலம் நச்சுப் புகை உள்ளிழுப்பைக் குறைக்கலாம் (புகை, வாயு, சூடான காற்று பொதுவாக மேல் எழும்). ஆவி, கரி மற்றும் பிற நச்சுப் பொருட்களை வடிகட்ட ஈரமான கைக்குட்டையின் வழியாக சுவாசிக்கவும்.
 • அதிக அளவில் தண்ணீரைப் பாதிக்கப்பட்டவரின் மேல் ஊற்றி தீயை அணைத்து வெப்பநிலையைக் குறைக்கவும்.

o   தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் பால்,குளிர்பானம் போன்ற எரியாத வேறு திரவத்தைப் பயன்படுத்தலாம் அல்லது

எரிந்த பகுதி மேல் இருக்கும் படியாக பாதிக்கப்பட்டவரை தரையில் கிடத்தவும். கட்டியான பருத்தித் துணியால் (போர்வை/சாக்கு/டரி/கோட்டு அல்லது ஏதாவது கட்டித் துணி) போர்த்தவும் நெருப்பு அணைந்தவுடன் இதை அகற்ற வேண்டும். இல்லையெனில் வெப்பத்தைத் துணி தக்க வைக்கும் (நைலான் அல்லது வேறு எரியும் தன்மையுள்ள  பொருளைப் பயன்படுத்தக் கூடாது).

o   நெருப்பை அணைக்கத் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தலாம்.

o   நெருப்பை அணைக்க மண்/மணலை பாதிக்கப்பட்டவர் மீது பூசவோ எரியவோ கூடாது.

 • எரிந்த துணிகள் அனைத்தும் (பெல்ட்டு, சாக்ஸ், ஷூ உட்பட), நகைகளும் (நெக்லெஸ், கைகடிகாரம், வளையல், பிரேஸ்லெட், மூக்குத்தி, மோதிரம், கொலுசு போன்றவை) அகற்றப்பட வேண்டும்.
 • களிம்பு, கிரீம், லோஷன், பவுடர், கிரீஸ், நெய், ஜெண்டியன் வயலட், காலமைன் லோஷன், பற்பசை, வெண்ணெய், வண்ணமேற்றும் பொருட்கள் போன்ற எதையும் தீப்புண் மேல் இடக்கூடாது.
 • அசுத்தம் ஆகாதவாறு எரிந்த உடல் பகுதிகளை சுத்தமான, உலர்ந்த விரிப்பு/துணியால் பொதியவும். மேல் கீழ் அவயவக் காயத்தை தலையணை /நெகிழி உறையால் மூடவும். காயத்தை மூடுவதால் காற்றோட்டத்தல் ஏற்படும் வலி குறையும். மேலும், பாதுகாப்பாகக் கொண்டுசெல்ல முடியும்.
 • மூடப்பட்ட அறையில் தீக்காயம் ஏற்பட்டால் நோயாளிக்குக் கார்பன் மோனாக்சைடு நச்சு ஏற்படும். தொண்டையை சுத்தம் செய்து, கொண்டு செல்லும் போது உயிர்வளி முகமூடியைப் பயன்படுத்த வேண்டும்.
 • தொடர்பான பிற காயங்களையும் சோதித்தறிந்து (எலும்புமுறிவு அல்லது முதுகுத்தண்டுக் காயம்) அதற்கேற்பப் பராமரிப்பு அளிக்க வேண்டும்.
 • உண்ணவும் குடிக்கவும் எதையும் கொடுத்தால் வாந்தி உண்டாகலாம்.
 • முதல் உதவியின் போது வழக்கமான வலிநிவாரணிகள் எதுவும் கொடுப்பதில்லை. நோயாளியையும் குடும்பத்தினரையும் நல்வார்த்தைகள் கூறி தேற்றுவதே ஆரம்பப் பராமரிப்பின் முக்கிய அம்சம் ஆகும்.
 • பிற நோய் அல்லது அம்சங்களைக் (கர்ப்பம், மதுப்பழக்கம், போதைப்பழக்கம்) போன்றவற்றைக் கேட்டறிய வேண்டும்.
 • உடனடி மருத்துவ உதவியை நாட வேண்டும். காயம்பட்டு முதல் 6 மணி நேரம் முக்கியமானது. கடுமையான தீக்காயம் பட்ட நோயாளியை உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்

வேதியல் தீப்புண்கள்:

 • அதிக அளவில் தண்ணீர் ஊற்றி வெதிப்பொருளின் அடர்த்தியைக் குறைக்கவும்.
 • S.A.F.E அணுகுமுறை பரிந்துரைக்கப்படுகிறது: S – உதவியைக் கூவி அழைக்கவும் (Shout for help), A – நிலவரத்தை விரைவாக மதிப்பிடவும் (Assess the scene quickly), F –வன்நிகழ்வு ஆபத்தில் இருந்து விலகவும் (Free from danger of violence), E –விபத்திழப்பைக் கணிப்பீடு செய்யவும்( Evaluate the casualty).
 • பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவும்.

மின்தீப்புண்:

 • மின் இணைப்பைத் துண்டிக்கவும். உலர் மரக்குச்சி/தடி/மர நாற்காலி போன்ற அரிதிற்கடத்தியைக் கொண்டு பாதிப்படைந்தவரை அகற்றவும்.
 • அதி மின்னழுத்த ஆதாரத்தில் ஒருவர் விபத்துக்கு உட்பட்டிருந்தால், மின்சாரம் மீட்கச் செல்பவரை வளைந்து தாக்கக் கூடுமாதலால் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.
 • காற்றுப்பாதை, சுவாசிக்க வழி மற்றும் காற்றோட்டம் உள்ளதா என கவனிக்கவும். எதிரசைவோ சுவாசமோ இல்லை என்றால் நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று பொருள். உடனடியாக செயற்கை சுவாசம் அளிக்கத் தொடங்கவும்.
 • தொடர்புடைய காயம் உள்ளதா எனப் பார்க்கவும்.
 • உடனடியாக உதவியை அழைக்கவும்.

மின்னல் காயம்:

 • மின்னலால் காயம் அடைந்தவர்களுக்கும் மின் காயம் அடைந்தவர்களைப் போலவே சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நோயாளிகளால் மூச்சு தடைபடுவதை நீண்ட நேரத்திற்குத் தாக்கு பிடிக்க இயலும். சில வேளைகளில் இதயப் பிசைவும் செயற்கை சுவாசமும் கொண்ட சிகிச்சைமுறை நீண்ட காலஅளவுக்குத் தேவைப்படும்.

மேலாண்மை

அ. ஆரம்பகட்ட மேலாண்மையில் மதிப்பிடுதலும்  ABCDE அணுகுமுறை கொண்ட கீழ்க்காணும் அளவுகோல்களைப் பராமரித்தலும் தேவைப்படும்.

 • காற்றுப்பாதை (Airway):  உள்ளிழுப்புத் தீப்புண்களுக்கு (மூடிய அறை விபத்து, முகம், கழுத்து அல்லது உடலில் ஆழமான தோல் தீக்காயம், மூக்கு முடி கருகல், வாய்தொண்டைப் பகுதியில் கரித்துகள்கள்) காற்றுப்பாதை மதிப்பீடும் மேலாண்மையும்.
 • சுவாசம் (Breathing): காற்று உள்ளிழுப்பு மற்றும் துரிதக் காற்றுப்பாதைப் பிரச்சினைகள் குறித்த எச்சரிக்கை.
 • சுற்றோட்டம்(Circulation): அகன்ற துளை நரம்புட்குழல் வழியாக ரிங்ஙர் லாக்டேட் கரைசலைத் துரிதமாகச் செலுத்தி திரவ மாற்றை உறுதிப்படுத்தவும். ஆரம்ப கட்ட செயற்கை சுவசம் அளித்து உயிர்ப்பித்தபின் வாய்வழி நீர்ச்சத்தேற்றும் கரைசலை அளிக்கலாம்.
 • ஊனம் (Disability): நரம்பியல் குறைபாடுகளோ வேறு ஏதாவது பெரிய ஊனங்களோ ஏற்பட்டுள்ளதா என்று நோக்க வேண்டும். உடலின் ஒரு மூடிய உள்வெளிக்குள் அதிக அழுத்தம் உருவாகும் போது உடற்கூற்றுப்பிரிவு நோய்த்தாக்கம் ஏற்படுகிறது. கால்கள், கைகள் மற்றும் வயிறு இந்நோய்த்தாக்கத்தால் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறது. உடற்கூற்றுப்பிரிவில் உருவாகும் அபாயகரமான அழுத்தத்தை குறைப்பதிலேயே இதன் சிகிச்சை அடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் இருக்கும் கட்டு, முட்டு போன்றவற்றை அகற்ற வேண்டும்.
 • பாதிக்கப்பட்டப் பரப்பு (Exposure):  தீய்ந்த பரப்பின் விழுக்காடு. நோயாளியின் உடல் (பின்பகுதி உட்பட) முழுவதும் சோதிக்கப்பட்டு தீய்ந்த பரப்பைத் துல்லியமாக்க் கணக்கிட்டு ஏதாவது தொடர்புடைய காயங்கள் உள்ளனவா என ஆராய வேண்டும்.

ஆ. அனைத்து நேர்வுகளிலும் வில்வாதசன்னி தடுப்பு மருந்து இட வேண்டும்.

இ. காயப் பராமரிப்பு:

 • ஒட்டிக் கொண்டு இருக்கும் செத்த திசுக்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
 • காயத்தில் இருந்து இறந்த திசுக்களை நீக்கிய பின், தீப்புண்ணை ஒன்றில் 0.25% (2.5 கி./லி) குளோர்ஹெக்சாடைன் கரைசல் அல்லது 0.1 % (1கி/லி) செட்ரிமைட் கரைசல் அல்லது மென்மையான நீர் அடிப்படை கிருமிநாசினியால் (எரிசாராய அடிப்படை கரைசலைப் பயன்படுத்தக் கூடாது) சுத்தப்படுத்த வேண்டும்.
 • ஒரு மெல்லிய அடுக்கு நுண்ணுயிர்க்கொல்லி களிம்பைப் (சில்வர் சல்பாடயசின்) பூசவேண்டும்.
 • எரிந்த பகுதியைப் பெட்ரோலியம் சல்லடைத்துணி மற்றும் உலர் சல்லடைத்துணியால் கட்ட வேண்டும். வெளிப்புறத்துக்குக் கசிவுகள் எட்டா வண்ணம் இதன் தடிமன் இருக்க வேண்டும்.

ஈ. காயத்தில் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முழுவுடல் நுண்ணுயிர்க்கொல்லிகள் (Systemic antibiotics) கொடுக்கப்படும்.

உ. போதுமான அளவுக்கு சக்தியையும் புரதங்களையும் அளிக்கும் தகுந்த சத்துணவை நோயாளிக்கு அளிக்க வேண்டும்.

ஊ. தோல் ஓட்டு அல்லது வடுக்கங்களால் உண்டாகும் சுருக்கங்களை அகற்ற அறுவை போன்ற சிறப்புப் பராமரிப்பைப் புண் ஆறிவரும் காலகட்டத்தில் வழங்க வேண்டும்.

முதல் உதவி:

செய்க:

 • ஆடை, நகைகளை அகற்றித் தீபுண்ணில் தண்ணீர் ஊற்றுவதன் மூலம் எரிச்சலை நிறுத்தவும்.
 • மின்சாரத்தால் தீப்புண் ஏற்பட்டால்  விரைவாக  முக்கிய மின் இணைப்பைத் துண்டிக்கவும். உலர் மரக்குச்சி/தடி/மர நாற்காலி போன்ற அரிதிற்கடத்தியைக் கொண்டு பாதிப்படைந்தவரை அகற்றவும்(அதி மின்னழுத்த ஆதாரத்தில் ஒருவர் விபத்துக்கு உட்பட்டிருந்தால், மின்சாரம் மீட்கச் செல்பவரை வளைந்து தாக்கக் கூடுமாதலால் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது).
 • வெறும் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காவிட்டால் போர்வையைத் தீயின் மேல் இட்டு அணைத்து விட்டு உடனடியாகப் போர்வையை எடுத்துவிட வேண்டும்.
 • வேதியல் தீப்புண் ஏற்பட்டால் வேதிப்பொருளின் அடர்த்தியைக் குறைக்க அதிக அளவில் நீரைக் காயத்தின் மேல் ஊற்ற வேண்டும்.
 • குளிர்ந்த நீரை ஊற்றி காயத்தின் வெப்பத்தைக் குறைக்கவும்.
 • நோயாளியை சுத்தமான துணி அல்லது போர்வையால் சுற்றி உடனடியாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவும்.
 • கொண்டு செல்லும் போது முறிவோ பிற காயங்களோ ஏற்பட்டுவிடாமல் கவனமாக இருக்க வேண்டும்.
 • காற்றுப் பாதை, சுவாசம், காற்றோட்டம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

செய்ய வேண்டாம்:

 • உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யாமல் முதலுதவியில் ஈடுபட வேண்டாம் (மின் இணைப்பைத் துண்டிக்கவும், வேதியல் பொருட்களைக் கையாளக் கையுறை பயன்படுத்தவும்).
 • பாதிக்கப்பட்ட திசுக்களை மேலும் பாதிக்குமாதலால் பனிக்கட்டிகளைப் பயன்படுத்த வேண்டாம்.
 • தொடர்ந்து குளிர்நீரை பயன்படுத்தினால் வெப்பநிலை இறங்கக்கூடும்.
 • புண்ணின் மேல் பசை, எண்ணெய், மஞ்சள் அல்லது கரடுமுரடான பருத்தித் துணி அல்லது பிற பொருட்களைப் போடக் கூடாது.
 • மருத்துவப் பணியாளர்களால் நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப் படுவதற்கு முன் கொப்புளங்களை உடைக்கக் கூடாது.

குறிப்புகள்:

clinicalestablishments.nic.in/WriteReadData/

www.who.int/mediacentre/factsheets/fs365/

www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC

தனிநபர்களும், சமுதாயங்களும் தீக்காயங்களைத் தடுக்கக் குறிப்பான பரிந்துரைகள்/முன்னெச்சரிக்கைகள்- முதன்மைத் தடுப்பு:

 • வீட்டுச் சூழலில் நெருப்பைச் சுற்றி தடுப்பு அமைத்து உயரத்தை மட்டுப்படுத்த வேண்டும். தரையில் வைத்துச் சமைக்கக் கூடாது.
 • சமையல் பகுதியில் குழந்தைகளை விளையாட அனுமதிக்கக் கூடாது.
 • எரிவாயு அடுப்பு, பிற அடுப்புகள், நுண்ணலை, வெப்பமூட்டிகள் மற்றும் மின் சாதனங்கள் அருகில் குழந்தைகள் நெருங்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
 • கவிழாமல் இருக்கப் பாத்திரப் பிடிகள் அடுப்பின் பின் அல்லது பக்கத்தில் வருமாறு வைக்க வேண்டும்.
 • குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு சமைக்கக் கூடாது.
 • மின் சாதனங்களை கவனமாகப் பயன் படுத்த வேண்டும். மேலும் பயனில் இல்லாத போது மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
 • அங்கீகாரமற்ற எரிவாயு உருளை மற்றும் மண்ணெண்ணெய் அடுப்பைப் பயன்படுத்த வேண்டாம். பாதுகாப்பான அடுப்பையும் விளக்குகளையும் பயன்படுத்துக.
 • தளர்வான ஆடைகளை அணிந்துகொண்டு சமைக்க வேண்டாம். சேலை மற்றும் பிற ஆடைகளை இறுக்கிக் கட்டவும்.
 • குழந்தைகள் அருகில் இருக்கும்போது சூடான திரவம் கொண்ட பாத்திரங்களைக் கையில் வைத்திருக்க வேண்டாம்.
 • குளிக்கும் முன் நீரின் வெப்பநிலையைச் சோதிக்கவும்.
 • வீட்டின் மாடியின் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் சென்றால் எச்சரிக்கையாக இருக்கவும். வீட்டில் திறந்த மின் கம்பிகள் இருக்கக் கூடாது.
 • விழாக் காலங்களில் பட்டாசுகளுக்கு எச்சரிக்கையாக இருக்கவும்.

விழாக்கால (தீபாவளி) பாதுகாப்பு:

§  குழந்தைகள் உங்கள் மேல்பார்வையிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

§  வெடிக்கும் பட்டாசுகளைக் கையில் பிடிக்கக் கூடாது.

§  எரியும் மத்தாப்புகளைப் பிறர்/தன்னை நோக்கிப் பிடிக்கக் கூடாது.

§  வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.

§  திறந்த வெளியிலேயே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

 • அமில வீச்சு: சட்ட சீரமைப்பு, அமில/வேதிப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தல், சமுதாய மனமாற்றம் ஆகியவையே இதனைத் தடுக்கும் வழிகள். அமிலங்களைக் கவனத்துடன் கையாள வேண்டும்.
 • தீ பாதுகப்புக் கல்வியை ஊக்கப்படுத்தவும். புகை உணரி/புகை எச்சரிக்கை, தீயணைப்புக் கருவி, நெருப்பில் இருந்து தப்பும் அமைப்பு ஆகியவற்றை வீடுகளில் பயன்படுத்த வேண்டும். புகை எச்சரிக்கை தொடக்கக் கட்டத்திலேயே எச்சரிக்கை தருகிறது. எனவே மக்கள் தீ பரவுவதற்குள் தப்பலாம்.
 • வலிப்பு போன்ற நோய்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
 • புயலின்போது:

§  கட்டிடத்திற்குள் செல்லவும் (கதவு, சன்னல், உலோகப் பொருள் (குழாய், சிங்க், ரேடியேட்டர்) மற்றும் இணைப்பில் இருக்கும் மின் சாதனங்களில் இருந்து விலகி இருக்கவும்).

§  வெளியில் மறைவிடம் கிடைக்காவிடால் மரங்களில் இருந்து விலகி நிற்கவும்.

§  மின்னல் நீர்வழிப் பாயும். எனவே புயல் நேரத்தில் நீச்சல், படகில் செல்லுதல், குளித்தல் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

இரண்டாம்நிலை தடுப்புமுறை: தீப்புண் நோயாளிகளை இறப்பில் இருந்தும் ஊனத்தில் இருந்தும் காப்பாற்ற முன் பின் மருத்துவமனை மேலாண்மை முக்கிய பங்கு வகிக்கின்றன.

§  முதல் உதவி: தீக்காய நோயாளிகள் விரைவில் குணமடைய முதல் உதவியின் பங்கு குறித்து தனிநபர் மற்றும் மக்கள் சமுதாயத்தை உணர்வூட்டி அறிவுபுகட்டுதல்.

§  சிறந்த மருத்துவமனை பராமரிப்பு: அதிர்ச்சியையும் சுவாசப் பிரச்சினைகளையும்  தடுக்க சிறந்த ஆரம்பக் கட்ட சிகிச்சை, சிறந்த தொற்றுத் தடுப்பு, அதிக அளவில் தோல் ஒட்டு, மற்றும் போதுமான சத்துணவு ஆகியவை இதில் அடங்கும். இறப்பு, ஊனம் மற்றும் தீப்புண் வலி ஆகியவற்றை இது குறைக்கும்.

மூன்றாம் நிலை தடுப்பு:

§  மறுவாழ்வு: தீக்காயம் அடைந்தவர்கள் ஊனம் மற்றும் உடல் சிதைவு அடைவதால் அவர்களது எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படும். உடல்பயிற்சி மற்றும் உளவியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு ஆகிய நடவடிக்கைகள் மூலம் தீக்காயம் அடைந்து பிழைத்தவர்களுக்கு சிறந்த வாழ்க்கை அமையும்.

தேசிய தீக்காயங்கள் தடுப்பு, மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் திட்டம் (NPPMRBI):

பயிற்சி பெற்ற நிபுணர்களால் சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டால் தீக்காயத்தால் ஏற்படும் மரணத்தையும் ஊனத்தையும் பெரிய அளவில் தடுக்க முடியும். தீக்காயப் பாதிப்பைத்  தடுத்தல் பாதிக்கப்பட்டவரை குணப்படுத்தல் மற்றும் மறுவாழ்வு அளித்தல் ஆகிய சேவைகளுக்காக இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்ககம் 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் தேசிய தீக்காயங்கள் தடுப்பு, மேலாண்மை மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

§  தீக்காய நிகழ்வுகள், நோய், மரணம் மற்றும் ஊனத்தைக் குறைக்கும் நோக்கத்தோடு இத் திட்டம் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவ மனைகள் வழியாக நடைமுறைப்படுத்தப் படுகிறது.

§  விழிப்புணர்வு உருவாக்கல், தீக்காய நோயாளிகளைக் கையாளவும் மறுவாழ்வு அளிக்கவும் தகுந்த கட்டமைப்புகளும் பயிற்சிபெற்ற வல்லுநர்களும் கொண்டு போதுமான சுகாதார வசதிகள் வழங்கல், மற்றும் ஆய்வுப்பின்புலத்தை உருவாக்குதலுமே இத்திட்டத்தின் முன்னுரிமைகள் ஆகும்.

குறிப்புகள்:

dghs.gov.in/WriteReadData/userfiles/file/Practical_handbook

apps.who.int/iris/bitstream/10665/97938/1/9789241501187

dghs.gov.in/content/1357_3_NationalProgrammePreventionManagement.

www.cdc.gov/features/lightning-safety/

 

 • PUBLISHED DATE : Nov 16, 2016
 • PUBLISHED BY : DEEPAK CHANDRA
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Nov 16, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.