இளைஞர் ஆரோக்கியம்

10 லிருந்து 19 வயது வரை (WHO அளவுகோலின் படி) ஓர் இளைஞரின் உடல் தீவிர மாறுதலை அடைகிறது. பருவ காலத்திற்குள் நுழைவதால் இளைஞர்கள் உடல் மாற்றங்களையும் உணர்வு மாற்றங்களையும் அனுபவிக்கிறார்கள். இதனால் உடல் வடிவ மாறுதலோடு ஆளுமையும் நடத்தையும் தீவிரமாக மாறுகிறது. இதற்கு ஒரு பாதி காரணம் பாலுணர்வு பற்றிய அறிதலே. இது மாதவிடாயினாலும் பிற உடல் மாற்றத்தாலும் ஏற்படுபவை. இன்னொரு பாதி காரணம் இயக்குநீர்கள் அதிகமாகச் சுரப்பதால் மனநிலையில் அவை பாதிப்பை ஏற்படுத்துகின்றன

பருவமடைதலோடு தொடர்புடைய திடீர் வளர்ச்சி

 • சிறுமிகளுக்கு 8-13 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் பாலியல் வளர்ச்சி ஏற்படுகிறது. 10 லிருந்து 14 வயது வரை வளர்ச்சி திடீரென அதிகரிக்கிறது.
 • சிறுவர்களுக்கு 10-13 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் பாலியல் வளர்ச்சி உருவாகி 16 வயதுவரை தொடர்கிறது.

சிறுபெண்களில் ஏற்படும் மாற்றங்கள்

ஒரு சிறுபெண் பருவத்தை நோக்கிச் செல்லும் நிகழ்வுகளை கீழ் வரும் தன்மைகள் விளக்குகின்றன:

 • உயரம் அடையும் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கிறது.
 • கருப்பையும் பெண்ணுறுப்பும் அளவில் அதிகரிக்கிறது.
 • மார்பின் அளவு கூடுகிறது
 • மார்பக வளர்ச்சி தொடங்கி வழக்கமாக 6-12 மாதங்களில் பெண்ணுறுப்பில் முடி தோன்றுகிறது.
 • பருவம் அடைந்து 2 வருட அளவில் உயரம் முழு அளவை அடைகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் தொடங்கியபின் வழக்கமாக 1 அல்லது 2 அங்குலம் அதிகம் வளர்வார்கள். 14 அல்லது 15 வயதில் தங்கள் முழு உயரத்தை எட்டுவார்கள் ( வளர்ச்சி வயதைப் பொறுத்ததல்ல, பருவம் அடைவதைப் பொறுத்ததே).

சிறுவர்கள் அடையும் மாறுதல்கள்

10-16 வயதுக்கு இடைபட்ட காலத்தில் சிறுவர்கள் பருவம் அடைதலின் முதல் உடலளவிலான மாற்றங்கள் வெளிப்படுகின்றன. 12-லிருந்து 15 வயதுக்குள் அவர்கள் வேகமாக வளரத் தலைப்படுகிறார்கள். பெண்களை விட ஆண்களில் இரண்டு வருடம் கழித்தே சராசரியாகத் திடீர்வளர்ச்சி தோன்றுகிறது. பெரும்பாலான சிறுவர்களின் வளர்ச்சி 16 வயதில் நின்று போகிறது. ஆனால் அவர்களின் தசை தொடர்ந்து வளரும்.

சிறுவர்களில் பருவகால வளர்ச்சித் தன்மைகள் கீழ் வருமாறு:

 • ஆணுறுப்பு, விதை அளவு அதிகரிக்கிறது.
 • பிறப்புறுப்பு முடியைத் தொடர்ந்து அக்குள் மற்றும் முகத்தில் முடி வளர்கிறது.
 • குரல் கனமாகிப் பெரும்பாலும் உடைகிறது.
 • குரல் வளை பெரிதாகிறது.
 • விதை, விந்தை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது.

கே: இளைஞர்கள் உண்ண வேண்டிய சத்துணவு எது?

ஆரோக்கியமான உணவு இளைஞர்களின் நல்ல தோற்றத்துக்கும் உடல்நலத்துக்கும் உதவும்:

 • காலை உணவு: காலை உணவை உண்ணாமல் விட்டுவிட்டால் எடை குறையாது. மாறாக முக்கியமான சத்துக்களை இழக்க நேரிடலாம். ஆரோக்கியமான காலை உணவு சமநிலையான உணவின் ஒரு பகுதியாகும். நல்ல ஆரோக்கியத்திற்கு தேவையான சில உயிர்சத்துக்களையும் தாதுக்களையும் அது அளிக்கிறது. முழுதானிய உணவும் பழங்களும் ஒரு புதிய நாளைச் சுவையுடனும் ஆரோக்கியத்துடனும் தொடங்கும் வழியாகும்.
 • ஒவ்வொரு நாளும் பழங்களையும் காய்கறிகளையும் உண்ணுவதற்கு எண்ணவும்: உடலுக்குத் தேவையான ஏறத்தாழ அனைத்து முக்கிய உயிர்சத்துக்களுக்கும் தாதுக்களுக்கும் பழங்களும் காய்கறிகளுமே மூலம் ஆகும். பழச்சாறு, பழக் குவை, காய்கறிகள் ஆகியவை சமநிலை உணவுக்கு உதவும்.
 • சிற்றுண்டி நேரத்தில் சிற்றுண்டிகளுக்குப் பதில் நிறைவுற்ற கொழுப்பும் சர்க்கரையும் அடங்கிய வேறு உணவைத் தேர்ந்தெடுக்கவும்: நிறைவுற்ற கொழுப்பு உணவில் பை (pie) மற்றும் சாசேஜ், பேக்கன், கிரிஸ்ப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அடங்கும். சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவில் கேக், பேஸ்டிரிகள், இனிப்புகள், சாக்லேட்டுகள் அடங்கும். அதிகமான நிறைவுற்ற கொழுப்பும் மிகைக் கொலஸ்ட்ராலை உண்டாக்கும்.
 • தேவையான அளவு நீராகாரம் அருந்தவும்: நீர், இனிப்பு சேர்க்காத பழச்சாறு (நீர் சேர்த்து), பால் போன்ற ஆரோக்கியம் தரும் நீராகாரங்களைத் தினமும் குறைந்த அளவு 6-8 கோப்பைகள் அருந்த முயற்சி செய்ய வேண்டும்.
 • ஆரோக்கியமான உணவை உண்ணுதல்: ரொட்டி, பீன்ஸ், முழுதானிய காலை உணவு, பழங்கள், காய்கறிகள். இத்தகைய உணவுகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பி இருக்கும் உணர்வு ஏற்படும்.
 • எடை இயல்பு நிலைக்குக் குறைவாக இருத்தல்: சமநிலை உணவை உண்ணாவிட்டாலோ உணவைக் குறைத்தாலோ உடலில் முக்கியமான சத்துக்களின் குறைபாடு உருவாகும். இதனால் எடை இழப்பு நேரிடும். இயல்புக்குக் குறைவான எடை குறைவால் உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகும். எனவே எடை குறைவாக இருந்தால் ஆரோக்கியமான முறையில் எடையைக் கூட்டுவது முக்கியமானதாகும்.
 • அதிக உடலெடை: கொழுப்பும் சர்க்கரையும் நிறைந்த உணவில் அதிக கலோரிகள் உள்ளன. அதிகக் கலோரிகளை உண்பது உடல் எடையைக் கூட்டும். பானங்கள் போன்ற அதிகக் கொழுப்பும் சர்க்கரையும் உள்ள உணவுகளைக் குறைவாக உண்ணவும். ஆரோக்கியமான சமநிலை உணவு உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களையும் அளிக்கும்.

குறிப்புகள்: http://www.nhs.uk/Livewell/Goodfood/Pages/healthy-eating-teens.aspx

கே: இளைஞர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் எவை?

மனவழுத்தம்

உச்சகட்டமான மனவருத்தத்தில் இருப்பதே மனவழுத்தம் என வரையறுக்கலாம். இந்நோயாளிகள் தங்கள் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை இன்றி இருப்பார்கள்.

இளைஞர்களுக்கு உண்டாகும் மனவழுத்த அறிகுறிகளில் அடங்குவன சில:

 • கல்வி சாதனைகளில் வீழ்ச்சி
 • நட்புறவில் நடத்தைப் பிரச்சினைகள்
 • குடும்பத்தோடும் பிறரோடும் கூடி ஒழுகாமை
 • உற்சாகமும் உத்வேகமும் இழத்தல். சுய ஊக்குவிப்பில் சிரமம்
 • தேவையற்ற முரட்டுத்தனம், கோபம், வெறி
 • வருத்தம் மற்றும் இயலாமை உணர்வுகளை வெளிப்படுத்தல்
 • விமரிசனங்களைத் தாங்கிக்கொள்ளமுடியாமை
 • பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு இணங்க வாழமுடியாமை
 • சுயகௌரவக் குறைவும் குற்ற உணர்வில் வருந்துதலும்

இளைஞர்களின் மனநிலை ஊசலாட்டம்

இளைஞர்கள் உடல், உணர்வு மற்றும் சமூக மாற்றங்களுக்கு ஊடாகச் செல்ல வேண்டியுள்ளது. நட்பு, படிப்பு, உறவு, முறிவு என அவர்களுக்கு முன் இருப்பவை ஏராளம். ஓர் இளைஞர் மனம்போன போக்கிலும் உற்சாகமற்றும் இருந்தால் கீழ்வருவனவற்றைக் கருத வேண்டும்.

உறக்கத்தின் தன்மை: அமெரிக்க தேசிய உறக்க அமைப்பின் கருத்துப்படி இளைஞர்கள் ஓர் இரவில் 8-9 மணி நேரம் உறங்க வேண்டும். குறைந்த நேரம் உறங்கும் இளைஞர்கள் மனவழுத்தம் அடையும் வாய்ப்புகளும் அவர்களுக்கு தற்கொலை எண்ணம் ஏற்படும் சாத்தியக்கூறுகளும் அதிகமாகும். நல்ல இரவு நேரத் தூக்கம் ஆரோக்கியமான ஓர் இளைஞருக்கு அவசியம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மனநிலையும் மனவழுத்த சாத்தியக்கூறும்: இளமைக் காலமே “வாழ்க்கையின் சிறந்த காலம்” எனப் புகழப்படுகிறது. சில இளைஞர்களுக்கு மனவழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் பசியளவு, உறக்க மாற்றம், ஊக்கக்குறைவு, சிடுசிடுப்பு ஆகிய அறிகுறிகளைக் கவனித்து வர வேண்டும். சில இளைஞர்களுக்கு குறைந்த மாற்றங்களே உண்டாகும். இவர்களுக்கு மனவழுத்தம் வர வாய்ப்பில்லை. ஆனால் ஓர் இளைஞரின் நடத்தையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டால் அதைச் சிரத்தையோடு நோக்க வேண்டும். குழந்தைகளோடு பேசுவதும் அவர்களுக்குத் துணைநிற்பதும் மனவழுத்தம் உண்டாவதைத் தவிர்க்கும்.

முகப்பரு

பொதுவாக தோலையும் முடியையும் எண்ணெய்ப் பசை உள்ளதாக வைத்திருக்கும் செபும் என்ற எண்ணெய் தோல் துளைகளில் உறையும் போது முகப்பரு ஏற்படுகிறது. இயக்கு நீர் மாற்றங்களால் இளமைப் பருவத்தில் தோல் அளவுக்கு அதிகமான செபுமைச் சுரக்கிறது. இதனால் இப்பருவத்தில் முகப்பரு அதிகமாக உண்டாகும். நெற்றி, மூக்கு, நாடி போன்றவற்றை உள்ளடக்கிய முகத்தின் நடுப்பகுதியில் அதிகமான எண்ணெய்ச் சுரப்பிகள் இருப்பதால் முகப்பருக்களும் இப்பகுதியில் அதிகமாக உண்டாகின்றன.

முகப்பருவைத் தடுக்கவும் அகற்றவும் சில வழிகள்:

 • ஒரு மிருதுவான சோப்பால் ஒரு நாளைக்கு இரு முறை இளைஞர்கள் முகத்தைக் கழுவவேண்டும். சுழல் முறையில் முகத்தை மென்மையாக அழுத்த (மசாஜ்) வேண்டும். கழுவிய பின் கடைகளில் கிடைக்கும் பென்சாயில் பெராக்சைடு கொண்ட ஒரு கிரீமைப் பூசலாம். இது எண்ணெய்ப் பசையையும் பாக்டீரியாக்களையும் குறைக்கும்.
 • பருக்களைக் கிள்ளக் கூடாது: பருக்களை உடைத்தால் தொற்றுப்பகுதிகள் மேலும் தோலுக்குள் இறங்கும். இதனால் மேலும் வீக்கமும், சிவந்தநிறமும் சில சமயங்களில் வடுக்களும் உண்டாகும்.
 • கண்களையும் மூக்கையும் சுற்றியுள்ள தோல் துளைகளில் எண்ணெய் அடைத்துக் கொள்ளாமல் இருக்கக் கண்ணாடி அணிபவர்கள் அடிக்கடி அதை சுத்தம் செய்ய வேண்டும்.
 • தூங்கப் போகுமுன் ஒப்பனையைக் கலைத்து விடவும்.
 • முடியைச் சுத்தமாகவும் முகத்தில் விழாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கூடுதல் அழுக்கும் எண்ணெயும் தோல் துளைகளை அடைக்காமல் தடுக்கலாம்.

தோலைச் சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டும். வெயில் பட்ட தோல் பழுப்பு நிறம் பெற்று பருக்களை மறைக்கும் முகமூடியைப் போல் தோன்றலாம். ஆனால் அது தற்காலிகமானதே. அது பருக்களை இன்னும் மோசமாக்கும். பருக்களைப் போக்காது. வெயில் தோலை சிதைவுபடுத்திப் பின் தோல் சுருக்கத்துக்கும் புற்று நோய் அபாயத்துக்கும் இட்டுச்செல்லும்.

பூச்சியகற்றல்

கே: மது, போதை போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படும் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்?

அறிகுறிகள் அடங்குவன சில:

 • கண்கள் சிவப்பாதல்: கடைகளில் வாங்கி அடிக்கடி சொட்டுமருந்துகளைப் பயன்படுத்துவதால் அதிகமாகக் களைப்படைவது போன்ற உடல்நலப் பிரச்சினைகளை இளைஞர்கள் அடிக்கடி கூறுவர்.
 • கல்வியில் ஆர்வம் இனமையைக் காணலாம். இதனால் மதிப்பெண்கள் குறையும்.
 • வேதிப்பொருட்கள் தோய்ந்த கந்தல் அல்லது காகிதம்: போதைப் பொருள் ஆவி உள்ளெடுப்பதற்கு ஆதாரம்.
 • ஆடையில், கைகளில், முகத்தில் உள்ள கறைகள்

கே: மதுவினால் இளைஞர்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகள் எவை?

மதுவை பயன்படுத்துவதால் ஏற்படும் குறுகிய கால பக்க விளைவுகளில் அடங்குவன:

 • ஒருங்கிணைப்பு இன்மை மற்றும் மந்த செயல்பாடு
 • மன ஒருமை குறைவு
 • குமட்டலும் வாந்தியும்
 • உடல் சிவந்து தோன்றுதல்
 • கண் மயங்கலும் பேச்சு குழறலும்
 • கடுமையான மனநிலை: உ-ம்: முரட்டுத்தனம், வெறி, மனவழுத்தம்
 • தலைவலி
 • மன இருள்

தொடர்ந்து நீண்டநாள் மதுவைப் பருகிவருவதால் உடல், உணர்வு, சமூகப் பிரச்சினைகள் உண்டாதல். அவற்றில் அடங்குவன:

 • நீண்ட நாள் மது அருந்தி வருவதால் கல்லீரல் இழைநார், புற்றுநோய்கள் [(குறிப்பாக வாய், தொண்டை, குரல் வளை, இரைப்பை, குடல் (ஆண்கள்) மார்பகம் (பெண்கள்)] உண்டாகின்றன.
 • மாரடைப்பு, இரத்த அழுத்தம் உட்பட பல இதய, இரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன.
 • மதுவை சார்ந்திருத்தல்
 • கர்ப்ப காலத்திலும் பாலூட்டும் சமயத்திலும் மது எடுப்பதால் குழந்தை பாதிக்கப்படுகிறது.
 • தோல் பிரச்சினைகள்
 • பாலியல் பலவீனம், கருவுறுதல் ஆகிய இனப்பெருக்க செயல்பாடுகளில் பிரச்சினைகள்.
 • மன ஒருமைப்பாடு, ஞாபகப் பிரச்சினைகள்
 • மனவழுத்தம்

கே: போதைப் பழக்கம் எவ்வாறு உருவாகிறது ?

 • போதைமருந்து பழக்கம் படிப்படியாக அதிகரிக்கிறது. உதாரணமாக, வாரக்கடைசியில் நண்பர்களோடு புகைத்தல்,  வெறியில் பரவசம் அடைதல், எப்போதாவது நடைபெறும் விருந்துகளில் கொக்கைன் எடுத்தல் போன்றவை போதைப் பொருளை வாரத்தில் இருமுறை உட்கொள்ளவும் பின் நாள்தோறும் எடுக்கவும் வழிகோலும். பின்னர் போதை மருந்தைப் பெறுவதும் பயன்படுத்துவதும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடும்.
 • போதைப்பொருள் ஒரு தேவையை நிறைவுசெய்ய உதவுமானால் இளைஞர்கள் அதனைச் சார்ந்து இருக்கத் தொடங்கி விடுவர். உதாரணமாக, கலக்கமான அல்லது அழுத்தமான சூழ்நிலைகளில் ஓர் இளைஞர் தம்மை அமைதிப்படுத்த போதைப்பொருளை உட்கொள்ளலாம். அது அவருக்கு ஊக்கம் அளித்து, கூச்சமாக உணரும் சமூக சூழல்களில் அவரைத் தன்னம்பிக்கை உடையவராக மாற்றலாம்.
 • அதுபோல, ஓர் இளைஞர் தனது வாழ்க்கையின் ஒரு வெறுமையை நிரப்ப போதைபொருளை எடுத்தால் எப்போதாவது பயன்படுத்தும் நிலை மாறி தவறான போதைபொருள் பயன்படுத்தலும் போதைக்கு அடிமையாகும் நிலையுமாய் மாறி எல்லையைக் கடக்கும் அபாயம் உள்ளது. ஆரோக்கியமான சமநிலையை வாழ்க்கையில் பேணவும், வாழ்க்கையின் நன்மைகளை உணரவும் போதைப் பொருள் பயன்பாட்டை விடுத்து இளைஞர்களுக்கு நேரிய அனுபவங்கள் தேவைப்படுகின்றன.
 • போதைப் பொருள் பழக்கம் ஒரு இளைஞரைப் பற்றும் போது அவர் தமது வேலை அல்லது கல்வியை அடிக்கடி தவறவிடுகிறார் அல்லது நேரம் கழித்து வருகிறார். இதனால் அவரது செயல்திறன் வெகுவாகக் குறைகிறது. தமது சமூக அல்லது குடும்பக் கடமைகளைப் புறக்கணிக்கத் தொடங்குகிறார்.

மதுவையும், போதைப்பொருளையும் பிறவற்றையும் விட இளைஞர்களுக்கு உதவிசெய்யவும்: (Help teen to quit alcohol, drugs or other substances)

 • குழந்தைகளின் நடத்தை மாறுதல் குறித்து ஆரம்பத்திலேயே அவர்களிடம் பேசவும்.
 • விளையாட்டு போன்ற குழு செயல்பாடுகளில் இளைஞர்களைத் தொடர்ந்து ஈடுபடுத்தவும்.
 • வீட்டு விதிகளை இளஞர்கள் பின்பற்ற வேண்டுமென எதிர்பார்க்கவும்.
 • தொடர்ந்து அவர்களோடு பேசுங்கள். இளஞர்கள் நன்றாகச் செய்யும் சிறிய செயல்களையும் கூட புகழவும்.

உங்கள் குழந்தையின் நண்பர்களைத் தெரிந்து வைத்திருங்கள். புகை, மது, போதைப்பொருள் பழக்கம் இல்லாத நண்பர்களே உங்கள் குழந்தைக்கு சிறந்த பாதுகாப்பு.

கே: இளைஞர்களுக்கான பாதுகாப்பு ஆலோசனைகள் எவை?

பாதுகாப்பாக வாகனமோட்டுதல்:

 • வாகனமோட்டும்போது கைப்பேசி பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வாகனத்தை நிறுத்திவிட்டு பேசுவது நல்லது.
 • எப்போதும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டவும். ஓட்டும் விதிகளுக்கும் போக்குவரத்துக் குறியீடுகளுக்கும் கீழ்ப்படியவும்.
 • பாதுகாப்புப் பட்டைகளை அணிவதோடு அனைத்துப் பயணிகளும் அணிவதை உறுதிப்படுத்தவும்.
 • குடித்துவிட்டு அல்லது போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம். குடிப்பவர்கள் அல்லது போதைப்பொருள் பயன்படுத்துபவர்களோடு வாகனத்தில் பயணம் செய்ய வேண்டாம்.
 • சாலையில் ஒரு பணிவுள்ள ஓட்டுநராகத் திகழவும்.
 • கூட இருப்பவர்களையும் நண்பர்களையும் பாதுகாப்பாக வாகனம் ஒட்ட ஊக்கமளிக்கவும்.
 • நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிப் பெற்றோருக்குத் தெரிவிக்கவும்.

சுய பாதுகாப்பு

தாக்குதல்களையும், மிரட்டல்களையும் தவிர்க்க அனைத்து வகையிலும் முயன்று சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். சுய பாதுகாப்பு என்பது உங்கள் கைகளை அல்ல மூளையைப் பயன்படுத்துவதே.
மூளையைப் பயன்படுத்தவும்: மிரட்டப்பட்டவர்கள்  “சுய பாதுகாப்பிற்காக” சண்டையிடத் துணியும்போது சூழ்நிலையை மேலும் மோசமாக்குகிறார்கள். தாக்குபவர் ஏற்கெனவே கோபத்தில் இருப்பதால் மேலும் கோபமடைந்து வன்முறையில் இறங்கக்கூடும். விலகிச் சென்று விடுவதே தாக்க அல்லது மிரட்டப்படும்போது செய்ய வேண்டிய சிறந்த வழி.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளைத் தவிர்க்க பொது அறிவிலும் உள்ளுணர்விலும் நம்பிக்கை வைக்கவும்.

ஆபத்தை விலைகொடுத்து வாங்கவேண்டாம்

சுயபாதுகாப்பிற்கு இன்னொரு வழி உங்கள் பாதுகாப்புக்கானவற்றை செய்வதே. சில குறிப்புகள்:

 • ஒருவர் தான் இருக்கும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும்: திறந்ததாகவும், வெளிச்சம் உள்ளதாகவும், பலரும் வந்துசெல்லும் இடங்களிலேயே நடக்கவும், செல்லவும் வேண்டும். கட்டிடங்கள், வாகனம் நிறுத்துமிடங்கள், பூங்காக்கள் மற்றும் நடக்கும் பிற இடங்களைப் பற்றி அறிந்துவைத்துக் கொள்ள வேண்டும். யாராவது பதுங்கி இருக்கக் கூடிய படிகள், புதர்கள் ஆகிய இடங்களில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
 • குறுக்கு வழிகளையும், தனிமையான இடங்களையும் தவிர்க்கவும்.
 • இரவில் குழுவாகச் செல்லவும்.
 • இளைஞர்கள் தங்கள் வகுப்புகள், விளையாட்டுப் பயிற்சிகள், குழுக்கூட்டங்கள் பற்றிய தினசரி நிரல்களைப் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும்.
 • தன்னம்பிக்கையுடனும் கவனமாகவும் செயல்படவும்.
 • பொது வாகனங்களில் செல்லும்போது ஓட்டுநர்க்கு அருகில் உள்ள இருக்கையில் விழித்தவாறு இருக்கவும். தாக்குபவர்கள் பலவீனமானவர்களையே குறிவைக்கிறார்கள்.
 • கைப்பேசியைக் கொண்டுசெல்லவும்.
 • குற்றச்செயல்கள் குறித்து அக்கம்பக்கத்தினர் அல்லது பள்ளிவழியாகக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தவும்.

கே: இளைஞர்களுக்காக இந்தியாவில் ஏதாவது தேசிய திட்டம் இருக்கிறதா?

இளைஞர்களின் பல்திறப்பட்ட சுகாதாரத் தேவைகளைச் சந்திப்பதற்காக இந்திய அரசிடம் ஒரு விரிவான திட்டம் உள்ளது. அது இளைஞர்களின் ஆரோக்கியத்தைக் குறித்த திட்டங்களுக்கும், முன்னுரிமைகளுக்கும் வழித்தடம் அமைத்துக் கொடுக்கிறது. இளைஞர் இனப்பெருக்க மற்றும் பாலியல் ஆரோக்கிய சேவை (ARSH), இனப்பெருக்கம், மகப்பேறு, பிறந்தகுழந்தை நலம் மற்றும் இளைஞர் ஆரோக்கியத்தில் (RMNCH+A) ஒரு பகுதியாக இணைக்கப்பட்டுள்ளது. தேசிய ARSH திட்டம் இளைஞர்களுக்கு அளிக்க வேண்டிய பாலியல் மற்றும் இனப்பெருக்க சேவை வகைகளைப் பற்றிய ஒரு கட்டமைப்பைத் தருகிறது. தடுப்பு, முன்னெடுத்தல், குணப்படுத்துதல், ஆலோசனை ஆகிய சேவைகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய தொகுப்பை இத்திட்டம் கொண்டுள்ளது. கொள்கைகளையும் திட்டங்களையும் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தியதால் சமீபகாலங்களில் முன்னேற்றம் ஏற்பட்டு வளரிளைஞர் நட்பு மையங்களும் நலத்திட்டங்களும் வலுவடைந்து வருகின்றன.

மருத்துவ மனை சார்ந்த சேவைகளைப் பெறமுடியாத வளரிளம் பெண்களுக்கு கிராம ஆரோக்கியம் மற்றும் சத்துணவு தினம் கடைபிடிக்கப்பட்டு தொடர் சுகாதார பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.  ANM, ASHA  போன்ற அமைப்புகளால் சிறந்த சேவை அளிக்கப்படுவதும், கிராம அளவில் உடன்பழகுவோரை பயிற்சியாளர்களாகத் தெரிந்து பயிற்சி அளிப்பதும் இத்திட்டத்தின் வெற்றியாகும்.

http://nrhm.gov.in/nrhm-components/rmnch-a/adolescent-health/adolescent-reproductive-sexual-health-arsh/background.html

இளைஞர்களுக்கான பவ்வேறு திட்டங்கள்:

பள்ளி சுகாதாரத் திட்டம்
அரசுப்பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 6-18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கும் வளரிளைஞர்களுக்கும் தேவைப்படும் சுகாதார உதவிகளை வழங்க இத்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு இருமுறை நலப்பரிசோதனையும் ஆண்டுக்கு ஒருமுறை நோய், உடற்குறை, பொதுவான குறைபாடுகள் மேலாண்மையும், தேவைப்படும் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட  சுகாதார வசதிகளுடன் இணைப்பும் அடங்கியுள்ளன.  குறிப்பாக பள்ளி வயதுக் குழந்தைகளை மையப்படுத்தும் ஒரே பொதுத்துறை திட்டம் இதுவே. குழந்தைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த சுகாதாரத் தேவைகள், சத்துணவு, உடல்பயிற்சிகள், ஆலோசனைகள், குறிப்பிட்ட நாளில் தடுப்புமருந்தளித்தல், கல்வி ஆகிய அனைத்தும் இதில் மையப்படுத்தப்பட்டுள்ளன. வாராந்தர இரும்புச்சத்தளித்தல் (WIFS),  ஆண்டுக்கொருமுறை பூச்சிமருந்தளித்தல் ஆகியவை பரிந்துரைத்தபடி பள்ளி சுகாதாரத் திட்டத்தில் இணைக்கப்படும்

http://mohfw.nic.in/WriteReadData/l892s/2099676248file5.pdf

வாராந்தர இரும்பு ஃபோலிக் அமிலச் சத்தளித்தல் (WIFS):

வாரந்தோறும் 100 மி.கி. தனிம இரும்பும், 500 யுஜி ஃபோலிக் அமிலமும் அளித்தல் இளைஞர்களிடம் பரவலாக இருக்கும் சோகையைக் குறைக்கிறது. பள்ளி செல்லும் இளம் பிள்ளைகளுக்கு வாரம் ஒருமுறை இரும்பும் ஃபோலிக் அமிலமும் வழங்கும் திட்டத்தை சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தொடக்கியுள்ளது. தலைமுறைகளாகத் தொடர்ந்துவரும் சோகைநோய் சுழல் வட்டத்தை எதிர்க்க, அரசு உதவிபெறும் மற்றும் நகராட்சி பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூலமாக ஏறக்குறைய 13 கோடி கிராமப்புற இளைஞர்களுக்கு கண்காணிப்புக்கு உட்பட்ட வாராந்தர இரும்பு-ஃபோலிக் அமிலச் சத்தளித்தலும் ஆண்டுக்கிருமுறை பூச்சிமருந்து அளித்தலும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

http://www.wbhealth.gov.in/newsletter/ofw_ad.pdf

மாதவிடாய் சுகாதாரத் திட்டம் :

கிராமப்புறங்களில் 10-19 வயதுக்குட்பட்ட இளம்பெண்களுக்கு மத்தியில் மாதவிடாய் சுகாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் திட்டத்தைச் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முன்னோடித் திட்டம் நாட்டின் 20 மாநிலங்களின் 152 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றுள், 105 மாவட்டங்களில் தர உறுதி வழிகாட்டுதல் படி மத்தியில் கொள்முதல் செய்யப்பட்டு சுய உதவிக் குழுக்கள் மூலமாக விநியோகிக்கப்படுகின்றன. சுகாதார அணையாடைப் பொதிகளில் (6 உருப்படி கொண்டது) “விடுதலை தினங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளன.

http://nrhm.gov.in/nrhm-components/rmnch-a/adolescent-health/menstrual-hygiene-scheme-mhs/background.html

வெளித்தொடர்புகள் / குறிப்புகள்

 • PUBLISHED DATE : May 14, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Sep 16, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.